Advertisement

            உறவே  உன்னில்  உறைந்தேன்..                                                                   
                                       அத்தியாயம்.. 1
       அந்த அதிகாலைப் பொழுதினில் வர்ண்ணக் கோலமிட்டு  பூஜையறையில் விளக்கேற்றி  இன்று எந்தப் பிரச்சனையும் அவனால் வந்துவிடக்  கூடாதென்று  பதட்டத்தோடு கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள் ஆனந்தி.    என்ன  முயன்றும்    மனம் அவனைச் சுற்றியேதான்  எண்ணங்கள்  வலம்  வந்திருந்தது.  அவள் மனதை கலைக்கும்  விதத்தில்  இருந்தது  தங்கையின் கூக்குரல்.
     ‘அக்கா…” என்ற   கோபமான அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லாமல் போகவே எழுந்து வந்து கிச்சனில்  பார்த்தாள்.  அங்கும் ஆனந்தி இல்லாமல் போகவும்..   பூஜையறை சென்று பார்த்தாள்.  அங்கு  கண்ணீரோடு நின்று கொண்டிருந்த ஆனந்தியைப் பார்த்ததும்.. கோபமாக அவளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
    இந்த  இரண்டு  மாதங்களாக  அழுத   முகமாகத்தான்   அதிகம்  காணப்பட்டாள்.  அது  அபர்ணாவிற்க்கு  சுத்தமாக  பிடிக்கவில்லை.  அபர்ணா  வீட்டில்  இருந்தாளென்றால்  அவள்  அக்காவோடுதான்   ஒட்டிக்கொண்டிருப்பாள்.
      கண்திறந்த ஆனந்தியைப் பார்த்து..  ‘இப்ப  நீ அழுததும்..  உன் கஷ்டமெல்லாம் போய்டுச்சா?” என்றாள்  நீலகணடன்  மற்றும்  சந்தரமதியின்  இளைய புதல்வியுமான அபர்ணா.
    ‘ஆரம்பிச்சிட்டியா…?” என்றாள் ஆனந்தி.
     ‘நான் ஆரம்பிக்கிறது இருக்கட்டும்  நீ  முதல்ல சொல்லு..  இப்போ  கொஞ்சநாளா  நீ  செய்திட்டிருக்கிறது  உனக்கே நல்லா இருக்குதா..?” என்றாள்  முறைப்பாக.
     ‘நான் என்ன பண்ணிட்டன்னு   இப்ப நீ  என்னை படுத்தற..? சாமி கும்பிடுறது ஒரு தப்பா..?” என்றாள்  ஆனந்தி.
     ஆனந்தியை  மேலிருந்து  கீழ் வரை  பார்த்தவள்..  ‘ம்ம்.. சாமி கும்பிடறது தப்பில்லை..  ஆனா இப்படி கண்டது நினைச்சி கும்பிடுறதுதான் தப்பு…” என அதட்டி..  ‘சின்ன  வயசில  இருந்து  உன்னை  இப்படிப்  பார்த்ததே  இல்ல போக்கா..“ என்று  வருந்தினாள்.
    ‘நான் ஒன்னும் கண்டது  நினைக்கலை..  உண்மையை நினைச்சு தான் கும்பிட்டேன்..“
    ‘ஆமாமா பெரிய்..ய  மாணிக் பா..ட்ஷா…  உண்மையை நினைச்சி கும்பிட்டாளாம்.. அப்டியே  போட்டேனா  நாலு..” என  மிரட்டி..
    ‘உனக்கு  என்ன ஆச்சு  ஆனந்தி..   ஏன்  இப்படி  நீயே  உன்னை  கஷ்டப்படுத்திக்கற..?  சொன்னாதான    தெரியும்..‚” என்றாள்  மன்றாடலாக.
    ‘அதெல்லாம்  ஒன்னுமில்லை..”  என்றாள்.
    ‘உன்னை எல்லாம் திருத்தவே முடியாது.  சரி  என்ன டிபன் செய்யலாம்?”
     ‘அம்மா தாயே..  ஏதோ தெரியாம அழுதிட்டேன்.. அதுக்கு  எனக்கு   இப்படி ஒரு தண்டனையா..? எல்லாம்   செஞ்சி ஹாட்   பாக்சுல  ரெடியா இருக்கு..  வா  சாப்பிடலாம்.” என்றாள்  இலகுவாக.
     ‘என்ன…ரெடி பண்ணிட்டியா..? இந்த நேரத்திலா..? நீ  தூங்கவே   இல்லையா…?” என்றாள்  ஆச்சரியமாக.
     ‘ஒரு சின்ன கோலம் போட்டு  டிபன்  செய்யறதுக்கு..   நைட்டெல்லாம் தூங்காம இருக்கனும்னு  அவசியமே இல்லை..  கொஞ்சம் சீக்கிரம் எழுந்தா போதும்.” என  தன்  அட்வைசை ஆரம்பிக்க..
     ‘சரி.. நீ  ஆரம்பிக்காத.. எனக்கு ஆஃபீஸ்க்கு நேரமாச்சி..  வா சாப்பிடலாம்.” என்றாள்.
      ஆனந்திக்கு தங்கை என்றால் உயிர். ஆனந்தி ஒரு அரசு கலைக்கல்லூயில் கணித ஆசிரியையாக பணிபுரிபவள்.  மேக்ஸ்  எம்.எட்  படித்திருக்கிறாள்.  சுரியான  புத்தகப் பைத்தியம்.  நல்ல பொறுமைசாலி..  மிகவும்  செல்லமாக வளாந்தவள்.
      ஆனந்தியின் அம்மா  சந்திரா..  படித்திருந்தாளும் குழந்தைகளின் வளர்ப்புக்காக வேலைக்கு செல்வதில்லை.  அது அவளது   கணவனின்  அன்பான  வேண்டுகோளும்   கூட.   மாளிகை  போன்ற  வீடு  என்று  சொல்லமுடியாது   என்றாலும்..    அனைவருக்கும்   தனித்தனி  அறைகளோடு..  அனைத்து  வசதிகளோடும் மிக  அழகாக  இருந்தது  அவர்களின்   இல்லம்.   சொந்தவீடு என்பது தவிர..   ஏழு வீடு  இரண்டு கடை என இருப்பதால் கனிசமான ஒரு வருமானம் இருந்தது.    இவை  அனைத்தும்  நீலகண்டனின்   கடுமையான  உழைப்பால்  மட்டுமே  உருவானது. 
     முப்பது  வருடங்களுக்கு  முன்..
     நீலகண்டனின்  அப்பா..  அவரின்  சிறுவயதிலேயே  இறந்திட..  நீலகண்டன்  தன்  அம்மாவோடும்..   அப்பாவின்  அம்மாவான  கருப்பாயி  பாட்டியோடும்தான்   வளர்ந்தது.     நீலகண்டனின்  அம்மா  செவிலியருக்கான  படிப்பை  முடித்திருக்க.. தன்  கணவர்  இறந்த  பிறகு..   ஒரு  தனியார்  மருத்துவமணையில்  செவிலியராக  பணிக்கு  சேர்ந்தார்.   நீலகண்டன்  பனிரெண்டாம்  வகுப்பில்  இருக்கும்போது   அவரின்  அம்மாவிற்கு  உடல்  நிலை  சரியில்லாமல்  போகவும்..  மகனின்  கவனம்  சிதையும்  என்பதால்  தன் தாயிடமும்  மகனிடம்  தனக்கு  வந்த  நோயை   மறைத்தார்  சரஸ்வதி.
      நீலகண்டன்  பொறியியல்  நான்காம்  வருடத்தில்  இருக்கும்போது..  அவரின்  தாயின்  உடல்நிலை  மிகவும்  மோசமான  நிலையை  அடைய..   மருத்துவசெலவு  செய்தாலும்  தனது  வாழ்நாளின்  இறுதி நாட்களை  சற்று  நீட்டிக்க   முடியுமே  அன்றி..   நோய்  குணமாகாது  என  ஒரு  செவிலியராக  நன்றாக  தெரிய..   தேவையில்லாமல்  லட்சக்கணக்கில்  செலவுசெய்து..  தன்  இறப்பிற்க்கு  பிறகு  தன்  மகனை  கடன்  தொல்லையில்  தள்ளிவிட கூடாதென்றெண்ணி..   இறுதியாக  தன்   அன்னையிடம்  மட்டும்  தன்  உடல் நிலையை  சொல்லி.. 
      தமக்கு  வெளியில்  எதுவும்  கடன்  இல்லை..  என  இன்னும் சில  விபரங்களை  சொல்லி..  அன்று  முழுதும்   தன்  மகனோடு  இன்பமாக  நேரத்தை  செலவிட்டு..    அன்றிரவு  தற்கொலை  செய்துகொண்டார்.
      தன்மகள்  தற்கொலைதான்  செய்துகொண்டார்  எனக்கூட  அறியாத  கருப்பாயி..   தன்  பேரனிடம்  உன்  அம்மாக்கு  புற்றுநோயாம்  கண்ணு..  எனக்கு  நேத்துதான்  சொன்னா..  ஆஸ்பத்திரிக்கு  போலாம்னு  சொன்னேன்..   அதுக்கெல்லாம்  ரொம்ப  செலவாகும்மா..  வெளில  கடன்  கேட்டுருக்கேன்..  பணம்  கிடைச்சதும்  டாக்டர்கிட்ட  போலாம்னு  சொன்னா..
    ‘ ஏன்பாட்டி  என்கிட்ட  சொல்லல..?” என  நீலகண்டன்  கண்ணீர் வடிக்க..
      ‘நீலுகிட்ட  சொல்லாதமா..  அவன்  படிப்பை  விட்ருவான்..  அவனுக்கு  தெரியாமையே  நாம  இதை  சரிசெய்திடலாம்னு  சொன்னாளே..  அதுக்குள்ள  இப்படி  ஆய்டுச்சே..“ என   கதறிஅழ..  மீளாத்துயரில்  ஆழ்ந்த  நீலகண்டனுக்கு.
      மிஞ்சியிருப்பது  தனது  பாட்டிமட்டுமே..  அவர்களும்  தன்  அன்னையின் மறைவின்  துயரத்தில்  அழுதே  கரைவதைப்  பார்த்தவருக்கு..  தன்  துயரைத்தை  கூட  வெளியில்  காட்டமுடியாது  சூழல்  உருவானது.
      அத்தனை  பெரிய  வீடு  இருந்தும்..  இனி  தான்  வேலைக்கு  போனால்தான்  தனது  பாட்டியையாவது  தனக்கென  தக்கவைத்துக்கொள்ள  முடியும்  என்ற  நிலைவர..  காலையில்  பேப்பர்  போடுவதும்..  மாலையில்  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்டில்  வேலை..  பகலில்  தனது  படிப்பு..  என  தன்னை  பொறுப்பான  இளைஞனாக  மாற்றிக்கொண்டார்  நீலகண்டன்.
         நீலகண்டன்  தனது   பூர்வீக   இடத்தைவிட்டு  வந்து..  கிட்டதட்ட  முப்பது  வருடங்களுக்கு  பக்கம் ஆகிவிட்டது.  அவரின்  பூர்வீக வீட்டையும்   பராமரிப்பிற்க்காக   ஒரு   தனியார்   அலுவலகத்திற்க்கு..  வாடகைக்கு  விட்டிருந்தார்.  
     சந்திராவுடன்  தனது  வாழ்க்கையை  இணைக்கும்போது..  அவரின்  அண்ணன்  தன்னை  கேவலமாக  பேசிய  பேச்சுக்கள்..  நெஞ்சினில்   பச்சைகுத்தியதுபோல்  அழியாமல்  இருந்தாலும்.. இன்றுவரை என்றும்  அதனை  சந்திராவிடம்  காட்டிக்கொண்டதில்லை  நீலகண்டன்.
     நீலகண்டன்   இஞ்சினியரிங் முடித்தது   தனியார் கம்பெனியில்  வேலையில் பணிபுரிபவர்..  தன் திறமையாலும் நாணயத்தாலும் படிப்படியாக  முன்னேறி  எம்.டி. யாக உயர்ந்தவர்.   அழகான  மனைவி..  தேவதைகளாய்  இரு  பெண்பிள்ளைகள்.. என அழகாகத்தான்  சென்றுகொண்டிருந்தது   இவர்களின்  வாழ்க்கை..    தற்போது  ஒரு நான்கு மாதமாகத்தான்  தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாததால்..  தனது முகத்தின் மலர்ச்சியை   மொத்தமாக   தொலைத்திருந்தார்.
     ‘அப்பா…. சாப்பிட வாங்க..” என்றாள் ஆனந்தி. 
     ‘இல்லமா… நான் இன்னைக்கு ஆபிஸ்க்கு போகலை..  நீங்க மூனு பேரும் சாப்பிடுங்க.   நான் அப்புறம் சாப்பிடுறேன்.”  என்றார்.
    ‘ஏம்ப்பா..?  உடம்பேது  சரியில்லையா..?”  என்றாள் ஆனந்தி. 
    ‘நான்  நல்லாத்தான்  இருக்கேன்..  ஈவினிங் வந்து பேசலாம்டா.  ஒன்னும் பயம் வேண்டாம்  சரியா..?  இப்ப உனக்கு  காலேஜ்க்கு  டைம் ஆச்சு..  ஒரு  லெக்சரரே  லேட்டா  போனா அப்புறம்  ஸ்டூடண்ஸ்   பயப்பட மாட்டாங்க..  அதனால  தான் சொல்றேன்..  கிளம்பு..”
     ‘அப்புறம் என் சின்ன செல்லக்குட்டிக்கும் ஆபிஸ்க்கு டைம் ஆச்சு..  அதனால  இன்னைக்கு அம்மாக்கு நான் சாப்பிட கொடுக்கிறேன்..   நீங்க போய்  சாப்பிடுங்க..  நான் அப்புறமா  ரிலாக்ஸா அம்மாகூட பேசிகிட்டே சாப்ட்டுக்கிறேன்…” என்றார்.
     ‘வேற  ஒன்னும்  இல்லதானப்பா..?”  என்றாள் சந்தேகமாக.
      ‘ஒன்னும்  இல்லடாம்மா..  எனக்கு  உங்க  அம்மாகூட  இருக்கனும்  போல  இருக்கு அதுக்காகதான்..  நீங்க  கிளம்புங்க..  நாம  ஈவ்னிங்  பார்க்கலாம்..”
      ‘ஓகே ப்பா ….. பாய் மா..  பாய்ப் பா…” என்றாள் .
      ஆனந்தி.. அபர்ணா இருவருமே அவர்கள் அம்மா போல நல்ல அழகிய தோற்றமுடையவர்கள். ஆனந்தி   நல்ல சிவப்பு நிறம்..  வில் போன்ற புருவம்..  அழகிய நீண்ட பெரிய கண்கள்..  செதுக்கிய நாசி..  செப்பு இதழ்கள்.. தோகைப்  போல  இடையை தாண்டிய  கூந்தல்..  என   பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் அழகு.  ஆனால்.. தன் தங்கையை தவிர வேறு யாரிடமும் சிரித்து பேசமாட்டாள். வெளியாட்களிடம்   சிறு உதட்டு சுளிப்பு மட்டுமே அவளது பெரிய புன்னகை.  அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே.  
      ஆனந்தி  சிறு  வயதிலிருந்தே..  தன்  அம்மாவிடம்..  என்   பிரண்ட்ஸ்  எல்லாருக்கும்..   மாமா… அத்தை…  பாட்டி… தாத்தா..  அப்டின்னு  இன்னும்  யார்யாரோ  இருக்காங்கன்னு..  சொல்லுவாங்கம்மா..  அப்புறம்  ஹாலிடேஸ்ல…  அவங்க  சொந்தாகாரங்க   வீட்டுக்கு  போவாங்களாம்.   நமக்குதான்  யாருமே  இல்லை  என்பாள்  ஏமாற்றமாக.  சிறு  பெண்ணாக  இருந்தபோது  மட்டும்தான்   இந்த  வருத்தம்  என்பது  இல்லை..    இன்று  வரை..  அவளுக்கு  அந்த  ஏக்கம்  இருந்துகொண்டேதான்  இருந்தது.  
     அபர்ணா தனது அம்மா போல சாயலும்.. அப்பா போல குணமும்  உடையவள். அக்கா போல நல்ல  சிவந்த நிறம்  என்று  சொல்லிவிட  முடியாது..  ஆனால் அவளும் நல்ல  வெண்மை நிறமுடையவள்.   இயற்க்கையாக   நீண்டிருந்த அடர்ந்த  கூந்தலை… தன்  பணிக்கேற்ப்ப இடைவரை மட்டுமே வளர அனுமதிப்பவள்.  அபர்ணா  இந்த  வருடத்தில்தான்  தனது  எம்.காம்  படிப்பை  முடித்துவிட்டு..  ஒரு  தனியார்  கம்பெனியில்   வேலைக்கு    சேர்ந்து   இரண்டு   மாதங்களே ஆகியிருந்தது.  வயது இருபத்தி இரண்டு..  அக்காவை விட இரண்டு வயது இளையவள்.
       இரண்டு  டிகிரி  வாங்கியிருந்தாலும்..   ஒரு  வளர்ந்த  குழந்தைதான்  அபர்ணா.  சில நேரங்களில் அதீத  விபரத்தோடு  பேசுவாள்..    பல  நேரங்களில்  பத்துவயது  சிறுமியாய்  மாறிவிடுவாள்.   ஆனந்தியிடம்  எதையும்  மறைக்கமாட்டாள்.    அபர்ணாவின்  விபரமெல்லாம்   ஆனந்தியால்  சொல்லி.. சொல்லி   வரவழைக்கப்பட்டது.  சிறுவயதிலிருந்தே தனக்கு  தேவையான  எதுவாகினும்   ஆனந்தியிடம்தான்  போய் நிற்ப்பாள்.

Advertisement