Advertisement

உப்புக் காற்று – இறுதி அத்தியாயம் 3

மகனுக்கு ஒன்பது மாதங்கள் ஆன போது, அருள் மனைவி மகனை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றான். எங்கே என எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாதவனுக்கு மட்டும் தெரியும்.


ரோஜா பாதி வழியில் நன்றாக உறங்கி விட… முகத்தில் வந்து மோதிய காற்று, ரொம்பவும் பழக்கப்பட்டதாக இருக்க… கண்ணைத் திறந்தால்… கார் கடற்கரையில் நின்றிருக்க.. அருள் மகனை வைத்துக் கொண்டு வெளியில் நின்றான்.


அக்கறைபேட்டைக்குத் தான் வந்திருந்தனர். ரோஜா காரை விட்டு இறங்கியவள், அருளிடம் சென்று அவன் தோளில் அடித்தாள்.


“இங்க தான் வரோம்ன்னு நீங்க சொல்லவே இல்லை.” அருள் சிரித்தானே தவிரப் பதில் எதுவும் சொல்லவில்லை.


“ஹப்பா எவ்வளவு நாள் ஆச்சு எங்க ஊரைப் பார்த்து.” என்றவள், மூச்சை நன்றாக இழுத்து, அந்த உப்புக் காற்றைத் தன்னக்குள் நிரப்பியவள், கண்களுக்குள் அந்த இடத்தை நிரப்பினாள்.


“இன்னைக்கே ஒன்னும் அவசரம் இல்லை. இன்னும் நாலு நாள் இங்க தான். நீ நிதானமா எல்லாத்தையும் பண்ணலாம்.” என்றான் அருள் கிண்டலாக.


அன்றுதான் அவன் பெற்றோர் மறைந்த தினம் என்பதால், அங்கிருந்தே வேளாங்கண்ணி சென்று வந்தனர். மதியம் ஜோசப் வீட்டில் இவர்களுக்கு விருந்து. ஸ்டெல்லாவுக்கும் பையன் பிறந்து இருக்க… தோழிகள் இருவரும் பல கதைகள் பேசினர்.


அருள் அவர்கள் கார்மெண்ட்ஸில் இருந்து நிறையச் சட்டைகள் கொண்டு வந்திருந்தான். அதை எல்லாம் நண்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுத்தான்.


அரசாங்கம் கொடுத்த இடம் என்பதால்.. அருளின் வீடு, ரோஜாவின் வீடு எல்லாம் இப்போது இல்லை. அதை வேறு யாருக்கோ கொடுத்து விட்டனர். அதில் இவர்களுக்கு வருத்தம் இல்லை. வீடு இல்லதாதவர்களுக்குத் தானே அந்த வீடு சென்றது.


இரவு பக்கத்தில் இருந்த ரெசார்டில் சென்று தங்கிக் கொண்டனர். மறுநாள் கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு, ஜோசெப்பின் வீட்டில் ஸ்டெல்லாவும் ரோஜாவும் சேர்ந்து சமைத்தனர். மதியத்திற்கு மேல் காரில் ஊர் சுற்றினார். அடுத்த நாள் அதிகாலையே விசைபடகில் கடலுக்குச் சென்றனர்.


“அது தானே நீங்க எப்படிக் கடலுக்குப் போகாம இருக்கீங்கன்னு பார்த்தேன்.”


“பவித்ராவுக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னே போட்டுடுவா… சும்மா ஆசைக்குக் கொஞ்ச நேரம்.” என்றவன், மகனை தூக்கிக் கொண்டு படகில் ஏறினான்.


தண்ணீர் என்றாலே குழந்தைகளுக்குக் குஷி தானே…அவர்கள் மகனும் சந்தோஷ கூச்சல் எழுப்ப…


“டேய் ! அப்பா ஒரு காலத்தில இந்தக் கடலுக்குள்ள தான் டா பாதி நாள் இருந்தேன்.” என்றான். மகனும் புரிந்தது போலச் சிரித்தான்.


கரைக்குத் திரும்பியதும் மகனோடு அலையில் ஒரு குளியல் போட்ட பிறகே அருளுக்கு ஆசை அடங்கியது.


ரோஜாவுக்கு அங்கு இருந்த நேரமெல்லாம் அப்பாவின் நினைவு தான். அவர் இருந்த போது இப்படி இருந்தோம், அப்படி இருந்தோம் என்றே ஓடியது. சில நாட்களாக மனதிற்குள் இருந்த ஏக்கம் தீர்ந்தது.


“நாம ஊருக்கு போகலாம்,” என்றாள் அவளாகவே.


“ஏன் அதுக்குள்ள?”


“இங்க வரணும்ன்னு இருந்தது, வந்திட்டோம் இப்ப போகலாம். பவித்ரா அண்ணிகிட்ட வேற சொல்லலை… அவங்க தெரிஞ்சா வருத்தபடப் போறாங்க.”


“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டா… ஆனா நாம ஊர் திரும்புற வரை கொஞ்சம் டென்ஷனா இருப்பா… ரெண்டு நாள் முன்னாடி எல்லாம் அப்பா அம்மா நினைவுல சாப்பிடவே இல்லையாம். இன்னைக்குதான் பரவாயில்லைன்னு மாப்பிள்ளை சொன்னார்.”


“அதுதான் நானும் சொல்றேன். நாம கிளம்பலாம். நாமும் அவங்களுக்குக் கஷ்ட்டம் கொடுக்க வேண்டாம்.”


அருள் தன் மகனிடம் “கிளம்பலாமா…” என்றவன், “அடுத்த வருஷம் உங்க அத்தையோட இங்க வருவோம்.” என்றான்.


“அவங்க இங்க வர மாட்டங்க. போன தடவை வந்ததே உங்களுக்காகத்தான்.”


“நான் போறேன்னு சொன்னா கண்டிப்பா வருவா.” என்றான் அருள் தங்கையைப் பற்றித் தெரிந்தவனாக.


நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு அங்கிருந்து விடைபெற்றனர்.

 

ஐந்து வருடங்கள் போனதே தெரியவில்லை.


அதே கடற்கரையில் அருளின் ஆறு வயது மகன் விஷாலும்,  பவித்ராவின் நான்கு வயது மகள் தீக்ஷிதாவும்  நீரில் ஆட… உடன் அருளும் மாதவனும் இருக்க… ரோஜாவும் பவித்ராவும் கரையில் உட்கார்ந்து இருந்தனர்.


“நாங்க எல்லாம் போறோம். நீ வரலைன இரு.” என அருளும் மாதவனும் சொல்லிவிட.. இவர்களை அனுப்பிவிட்டு அவளால் அங்கே நிம்மதியாக இருக்க முடியுமா… “நானும் வந்து தொலைக்கிறேன்.” என வந்துவிட்டாள்.

போன வருடம் தான் வெளிநாட்டில் இருந்து திரும்பி இருந்தனர். அவள் பிரசவ நேரத்தில் புவனா சென்று ஆறு மாதங்கள் வரை உடன் இருந்தார். நடுவில் அவர்கள் மகளுக்கு ஒரு வயதிருக்கும் போது வந்தது. அப்போது அண்ணன் மடியில் உட்கார வைத்து மகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்தினாள்.

ரோஜா சொல்லிவிட்டால், “அவங்களுக்கு நாம நல்லா செய்யணும்.” என்று.


அருளுக்கு எப்போதுமே மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என மனம் இருக்கும். ஆனால் இதற்கு முன் பணம் இருந்தது இல்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. திருமணம் ஆனதில் இருந்து, வீட்டு செலவுக்குப் போக, அவன் பங்கு பணம் அப்படியே இருக்க… தங்கை மகளுக்குக் கம்மல், செயின், வளையல், கொலுசு என எல்லாமே அவன் தங்கத்தில் கொஞ்சம் பெரிதாகவே வாங்கி இருந்தான். அதோடு வெள்ளி பாத்திரங்கள். மற்றும் மூவருக்குமே உடைகள் என நன்றாகவே செய்தான்.


சின்ன வயதில் அருள் போட்டிருந்ததை அப்படியே அவன் மகனுக்குக் கலை கொடுத்திருந்தார். அது போலப் பவித்ராவுக்கும் செய்து விடலாம் என நினைத்தால்… இவன் வேறு நிறைய வாங்கி இருக்க… என்ன செய்வது என அவர் யோசிக்க… அதை உங்க சார்பா கொடுத்திடுங்க பாட்டி என்றுவிட்டான்.


எதுக்கு இவ்வளவு கொடுக்கணும் எனக் கலை நினைக்க, “அவ இல்லைனா நான் இன்னைக்கு இங்க இல்லை பாட்டி. இதெல்லாம் அவளால தான். நம்ம வீட்டு பொண்ணு தானே கொடுங்க. நான் இன்னும் நிறையச் சம்பாதிப்பேன்.” என்றான் நம்பிக்கையாக.


“உன் மருமகளுக்குக் காது தான் டா குத்துறோம். நீ எதோ கல்யாணத்துக்கு போலச் சீர் செஞ்சிருக்க…” என்றாலும், புவனாவுக்குப் பெருமிதமே…


பவித்ரா அந்த விழா முடிந்து அமெரிக்கா சென்றவள், அப்படி இப்படியென வர மேலும் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.


“போதும் வாங்க.” எனப் பவித்ரா குரல் கொடுக்க… ஒருமணி நேரம் நன்றாகக் கடலில் ஆடிவிட்டு, அப்போதும் மனமே இல்லாமல் தான் எல்லோரும் வந்தனர்.


“வர மாட்டேன்னு சொன்ன…” தங்கையைக் கேலி செய்தபடி அருள் வர…


“ம்ம்.. போன தடவை மாதிரி இல்லாம… போனா மொத்தமா போகலாம்  இல்லை.” என்றாள் பவி. அருள் அவளை முறைத்தான்.


வாழ்க்கையையே புரட்டி போட்ட இடம். இங்கே அவள் தன் பெற்றோரை இழந்து இருக்கிறாள். அது அவ்வளவு சுலபமாக அவளுக்கு மறக்காது.


முதலில் பெற்றோரின் நினைவில் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தாள். இப்போது கொஞ்சம் பரவாயில்லை.

அங்கிருந்த அவர்களின் வீட்டிற்குத் திரும்பினர். ஆம் அது அவர்களின் சொந்த வீடு. அருள் அங்கே ஒரு வீடு வாங்கி இருக்கிறான். வருடத்திற்கு ஒருமுறை இவர்கள் வந்து தங்க வசதியாக.


இருந்த இரண்டு அறைகளில் பவித்ராவின் குடும்பம் ஒரு அறையிலும், இவர்கள் ஒரு அறையிலும் இருந்தனர்.


“ரோஜா, உனக்கு நியாபகம் இருக்கா.. நம்ம பையன் இங்க இருக்கும்போது தான் உருவானான்.” அருள் சொல்ல ரோஜா அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


“என்ன டி எதுவும் சொல்ல மாட்டேங்கிற?”


“நீங்க எதோ சொல்ல வர்றீங்க. முதல்ல அதைச் சொல்லுங்க.”


“நம்ம பெண்ணும் இங்கயே உருவாகனும்ன்னு எனக்கு ஆசை.”

“அதுக்குத்தான் விவரமா உங்க பையனை… அத்தைகிட்ட போன்னு அனுப்பி விட்டுடீங்களே. அப்புறம் ஏன் என்னைக் கேட்கிறீங்க?”


எல்லாமே கவனிச்சிட்டு தான் இருக்காளா இவ என நினைத்தவன், மனைவியை ஆசையுடன் தழுவிக்கொண்டான்.


மறுநாள் காலை வீட்டிலேயே சமைத்து உண்டு விட்டு, கடற்கரைக்குச் சென்றனர். அங்கே ஒரு புது விசைப்படகு திறப்பு விழாவுக்காகக் காத்திருந்தது. அதைப் பார்த்ததும் பவித்ரா அருளை முறைத்தாள்.


“அடங்கவே மாட்டியா டா நீ.”


“சொந்தப் படகு வாங்கிறது, என்னோட லட்சியம் டி.”


“நீதான் அங்க இருக்கியே இதை என்ன பண்ணுவ?”


“வாடகைக்கு விடப் போறேன்.” என்றான் அருள்.


“இது தான் பவி எங்க இடம். என் பையன் செட்டில் ஆகிற வரைதான் அங்க இருப்பேன். அப்புறம் நானும் என்னோட பொண்டாட்டியும் இங்க வந்திடுவோம். அதுக்குதான் வீடெல்லாம் வாங்கி வச்சிருக்கேன்.”


இன்னும் ரொம்ப வருடங்கள் இருக்கிறது என்ற தைரியத்தில் பவித்ரா சரி என்றாள்.


ரோஜா பவித்ரா இருவரும் சேர்ந்தே ரிப்பன் வெட்ட… அருள் தான் படகை இயக்கினான். உடன் ஜோசெப்பும் ஸ்டெல்லாவும் இருந்தனர்.


“அப்பா, இங்கயே நல்லா இருக்குப்பா… நாம இங்கயே இருக்கலாம்.” விஷால்  சொல்ல..


“எப்படி டா? இப்படிப் போட் ஓடிட்டா?”


“ஆமாம்.”


“உன் அத்தைகிட்ட போய்ச் சொல்லு.” அருள் சொல்ல.. ரோஜா மகனைத் தடுத்தாள்.


“உங்களுக்கு அவங்களை டென்ஷன் பண்ணாம இருக்க முடியாதா…” என்றவள் மகனிடம், “இதெல்லாம் ஒரு நாளுக்குத் தான் நல்லா இருக்கும்,” என்றாள் நிதர்சனத்தை உணர்ந்து.


எத்தனையோ முறை அருள் ஜோசப்பை சென்னைக்கு வந்துவிடும்படி அழைத்து விட்டான். “எனக்கு இதுதான் டா தெரியும், என்னால வேற எங்கையும் வர முடியாது.” என ஜோசப் சொல்லிவிட… இப்போது படகை வாங்கி நண்பனிடமே ஒப்படைத்தான்.


மேலும் இரண்டு நாட்கள் இருந்து, நன்றாக ஆடிவிட்டு, நிறைவான மனநிலையுடன் ஊர் திரும்பினர். அங்கே அவர்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியது.


அருள் அவன் வண்டியில் முன்பே பாக்டரி சென்றிருக்க… மகனை தனது காரில் ஏற்றிக்கொண்டு ரோஜாவே காரை இயக்கினாள். அது அருள் அவளுக்காக வாங்கிக் கொடுத்தது.


மகனை அவன் பள்ளியில் இறக்கி விட்டு, தங்கள் அலுவலகம் சென்றவள், அங்கிருந்த கணினியில் கணக்குகளைப் பார்வையிட ஆரம்பித்தாள்.


பி.எஸ்.சி கணிதம் முடித்து, எம்.பி.யே வும் முடித்து இருக்கிறாள். இந்த ஒரு வருடமாக அலுவலகத்தைப் பார்த்துக் கொள்வது அவள்தான். அருள் பாக்டரியில் இருப்பான்.


முன்பும் வெளிநாடு ஆர்டர் எல்லாம் உண்டுதான். ஆனால் இப்போது பெரிய அளவில் நிறைய நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அருள் அலைந்து திரிந்து பார்ப்பதால் தான் முடிந்தது. கம்பெனி நன்றாகச் செல்ல.. செல்வம் எதிலும் தலையிடுவது இல்லை. வருமானம் தான் இரட்டிப்பாகி இருக்கிறதே… அதனால் மனைவியையும் தலையிட விட மாட்டார்.


இவள் இப்படி விசுவரூபமாக வளர்ந்து நிற்பாள் என்றெல்லாம் தேவி நினைக்கவில்லை. இப்போது எல்லோரும் ரோஜாவை பார்க்கும் பார்வையே வேறு…உறவினர்களுக்கு எல்லாம் முக்கியமானவள் ஆகிப் போனாள்.


அருளிடம் எதாவது சொன்னால்… ரோஜாகிட்ட சொல்லிடீங்களா என்றுதான் முதலில் கேட்பான். முதலில் ஒரு கணவன் மனைவியை மதிக்க வேண்டும். அப்போது மற்றவகளும் தானே மதிப்பார்கள்.


அருள் ரோஜாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. அவன் படிக்காதவன் தான். ஆனால் அவன் தன் மனைவியைப் பட்டம் வாங்க வைத்து அழகு பார்த்தான். அந்த மனம் எல்லோருக்கும் இருக்காது.


ரோஜா எதையும் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டாள். உறவு நிலைக்க விட்டுக் கொடுக்க வேண்டிய இடங்களில், விட்டுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டாள். விட்டுக் கொடுத்ததால் அவள் ஒன்னும் கெட்டுப் போகவில்லை. இப்போது எதையும் இழந்ததாகவும் அவள் நினைக்கவில்லை.


அவள் மட்டுமே விட்டுக் கொடுக்கவில்லை… தன் அண்ணனுக்காகப் பவித்ரா விட்டுக் கொடுத்தாள். தன் அண்ணன் பிள்ளைகளுக்காகப் புவனா விட்டுக் கொடுத்தார். கலையும் சாரதியும் கூடத்தான்.


விட்டுக் கொடுப்பது என்பது எப்போதும் பணத்தையோ சொத்தையோ மட்டும் குறிக்காது. அருள் வேற்று மதப் பெண்ணைத் திருமணம் செய்தது, எத்தனை குடும்பங்களில் ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால் கலையும் சாரதியும் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கவில்லை. புவனாவுக்கு அருள் ரேஷ்மாவை மறுத்த வருத்தம் இருந்தாலும், அதைக் காரணம் காட்டி அவனை விலக்கவில்லை.

 ஏன் செல்வம் கம்பெனியை பிரித்துகொள்கிறேன் எனச் சொல்லி இருந்தால்… அருள் தனியாகக் கம்பெனி ஆரம்பித்து உடனே இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.


இதெல்லாம் அருளுக்கும் ரோஜாவுக்கும் புரிந்தது. அதனால் தேவி செய்யும் விஷயங்கள் அவர்களுக்குப் பெரிதாகவே தோன்றாது. இப்படி யாராவது இருந்தால் தான், அவர்கள் கண்ணுக்கு முன் முன்னேறி காட்ட வேண்டும் எனத் தோன்றும்.


தேவி அவள் படிப்பதை கேலியாகப் பேசியதுதான், ரோஜாவை இரண்டு பட்டங்கள் வாங்க வைத்தது. மனைவியைக் குறைவாக நடத்தினர் என்பதே… அருளுக்கு முன்னேற வேண்டும் என வெறியை ஏற்படுத்தியது.


நாம் நன்றாக வாழ்ந்து காட்டுவதே, இந்த மாதிரி ஆட்களுக்கு போதும், வயிறு எரிந்து தானாகவே பொசுங்கி போவார்கள்.

அருளும் ரோஜாவும் இப்போது அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  

இருபத்திரண்டு வருடங்கள் கழித்து….


அதே அக்கரைப்பேட்டை மீனவ கிராமம்… இப்போது பெரிய நகரமாக மாறி இருக்க…. கடற்கரையை விட்டு சற்றுத் தூரத்திலேயே வரிசையாக மாளிகை போல வீடுகள். அதில் முதல் வீடே அருள் உடையது தான்.


இருபது வருடங்களுக்கு முன்பு சின்ன வீடாக வாங்கியது. பக்கத்தில் இருந்த காலி இடத்தையும் வாங்கிப் போட்டு, இப்போது பெரிதாகக் கட்டி இருந்தனர்.


தூரத்தில் ஒரே மாதிரி நான்கு பெரிய விசைப்படகுகள் தெரிந்தது. அது நான்குமே அவர்களுடையதுதான். ஒன்று இப்போது நான்காகப் பெருகி இருந்தது. மீன் பிடி தொழில் இப்போது முன்பு போல இல்லை. மீனவர்களுக்கு இப்போது மாதாந்திர சம்பளம் உண்டு. அதனால் அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்து இருந்தது.


அருள் ரோஜாவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் விஷால் தனது சித்தப்பா ராஜீவுடன் சேர்ந்து தங்கள் தொழிலை பார்க்க… இளையவன் தேவ் வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறான்.


விஷால் தனது அத்தை மகள் தீக்ஷாவையே விரும்பி மனது கொண்டான். பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு. இவர்கள் இருவரும் இங்கே வந்து விட்டனர்.

தீக்ஷா அவள் பெற்றோருக்கு ஒரே பெண். அதனால் அவள்தான் மாதவனுடன் சேர்ந்து அவர்கள் தொழிலை பார்க்கிறாள்.


வாழ்க்கையின் தரம் மாறி இருக்கிறதே தவிர… மனதளவில் இருவரும் அதே பழைய அருள் ரோஜா தான். வீட்டில் இருந்தே தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம், சென்னையில் இருக்கும் தொழிலை அருள் பார்த்துக்கொள்ள, ரோஜாவும் அவனுக்கு உதவுவாள். ஆனால் முன்பு போல முழு மூச்சாக ஓடிக்கொண்டிருக்காமல், நிதானமாக வேலைப் பார்த்தனர்.

நடுநடுவே பழசை மறக்காமல் கடலுக்கும் செல்வார்கள். அவர்களே மீன் பிடித்துக் கொண்டு வருவது, எப்போதும் பிடித்தமான விஷயம். சென்னையில் இருந்து உறவுகள் வரும் போது, இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

உலகமெல்லாம் சுற்றினாலும், நம் வீடு போல வருமா.. அவர்களுக்கும் வீடு வந்த நிம்மதி.

மேல் மாடியில் நிலவு வெளிச்சத்தில், ரோஜா அருளின் தோளில் சாய்ந்து இருக்க… உப்புக் காற்றுச் சுகமாக வீசியது.

Advertisement