Advertisement

ஒரு சுதந்திர தினத்தன்று அம்பிகை கொடுத்த புதுச் சேலை ஒன்றை உடுத்து முடிக்க நேரமாகி விட்டதால் காலையில் பள்ளிக்கு கிளம்ப நேரமாக, அவசரமாய் பஸ் ஸ்டாப்க்கு நடந்து கொண்டிருந்தவளின் அருகே அபிமன்யு பைக்கைக் கொண்டு வந்து நிறுத்த அதிர்ந்து திரும்பினாள் நியதி.

“வெள்ளக்கோழி…! வண்டில ஏறு, ஸ்கூல்ல விடறேன்…”

“ஒண்ணும் வேண்டாம், எனக்கு காலிருக்கு… நான் நடந்தே பஸ் ஸ்டாப் போயிக்கறேன்…” உதடுகள் பிகு செய்தாலும் மனது டைம் ஆகி விட்டதே என்று நினைக்கவும் செய்தது.

“ப்ச்… இப்ப நீயா வந்து உக்காரப் போறியா, இல்ல அப்படியே உன்னைத் தூக்கி வண்டி முன்னாடி உக்கார வச்சு  கூட்டிட்டுப் போகவா…?” அவனது கேள்வியில் மிரண்டவள், அவன் செய்தாலும் செய்வான் என யோசித்து தயக்கமாய் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

பின்னில் இருக்கும் கம்பியைப் பிடித்து அமர்ந்தவளிடம், “வெள்ளக்கோழி…! கூச்சப்படாம என் தோள்ல கை வச்சுக்க மா, நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்…” என,

“ஹூக்கும், கருவாப் பயலுக்கு கொழுப்பைப் பாரு…” என மனதுள் திட்டினாலும் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

வேண்டுமென்றே சாலையில் இருந்த குழி ஒன்றில் அவன் வண்டியை ஏற்றி, இறக்க பதறி அவன் தோளைப் பற்றிக் கொண்டவளை அபிமன்யு கண்ணாடி வழியே பார்த்து சிரிக்க, கடுப்புடன் கையை எடுத்த நியதி முறைத்தாள்.

“பார்த்து மா… முறைக்கிற முறைல அந்த முழியாங்கண்ணு வெளிய வந்துடப் போகுது…” அவன் என்னவோ சொல்லட்டுமென்று அவள் பதில் சொல்லாமல் எங்கோ பார்த்திருக்க மீண்டும் கேட்டான்.

“ஆமா, இன்னைக்கென்ன அம்மணி சேலை எல்லாம் கட்டிட்டு சும்மா நச்சுன்னு இருக்க…?”

“ஏன்…? நான்லாம் சேலை கட்டக் கூடாதா…?”

“அய்யய்யோ…! கட்டலாம் தாயே… தாராளமா கட்டலாம், நீ கட்டினதால தான் இந்த சேலைக்கே ஒரு புது அழகு வந்திருக்கு… ஆனா என்ன, பார்க்கிற எனக்கு தான் இப்பவே உன்னை அப்படியே அள்ளி கோவிலுக்குக் கொண்டு போயி தாலி கட்டணும் போலருக்கு…” அவன் சொன்னது காற்றில் பாதி கரைய முழுமையாய் புரியாமல்,

“என்ன சொன்ன…?” என்றாள் நியதி.

“ஒண்ணும் இல்ல, நீ அழகாருக்கேன்னு சொன்னேன்…”

“ஹூக்கும், அதான் நீ என்னை முறைச்சுப் பார்க்கற பார்வைலயே தெரியுதே…” மனதுள் நினைத்தாலும் வெளியே வார்த்தையை விடாமல் இருந்தாள்.

அவளை பள்ளியில் இறக்கி விட்டவன் அவள் உள்ளே சென்று திரும்பும் வரை கேட்டருகே நின்று பார்க்க, அவன் சொன்னதை யோசித்தபடி நடந்தவள் எதிரே வந்த டீச்சர் ஒருவர், “அடடே நியதி, சேலைல அசத்தறியே…” எனவும், “அந்தக் கருப்பன் சொன்ன மாதிரி சேலைல நான் அழகா இருக்கேனோ…?” என நினைக்க இதழில் பூத்த முறுவலுடன் திரும்பிப் பார்க்க அவனுக்கு குற்றால அருவி ஒன்றாய் தலையில் கொட்டியது போல் ஜில்லென்று இருந்தது.

அம்பிகை பக்குவமாய் நியதியிடம் அபிமன்யுவின் விருப்பத்தை சொல்ல கோபமாய் முடியாதென்று குதித்தாள்.

“என்னமா நீங்க…? அந்த முரட்டுப்பய கேட்டான்னு என்கிட்ட கேக்கறீங்க, எனக்கு தான் அவனைக் கண்டாலே ஆகாதுல…”

“நியதி…! அறியாத பருவத்துல அவன் ஏதோ செய்தான்னு இப்பவும் அவனை வெறுக்கறது சரியில்லடா, அவன் செய்த குற்றத்தை மட்டும் பார்க்காம எத்தனையோ நல்லது செய்யறானே, அதையும் யோசிச்சுப் பாரு… அவன் கொஞ்சம் கரடு முரடான பையனாத் தோணினாலும் ரொம்ப பாசக்காரன், மத்தவங்க துன்பம் பொறுக்காத நேசக்காரன்… சாவித்திரியும் உன்னை மருமகளாக்கிக்க ஆசைப்படுறா, நீ சம்மதிச்சா ஒரு நல்ல வாழ்க்கை அமையும்னு நம்பறேன்…”

“நீங்க ஆயிரம் சொல்லுங்கம்மா… அவன் ஒரு முரடன், முசுடன், திமிரு பிடிச்சவன்… எனக்கும் அவனுக்கும் இப்பவே செட்டாகல, அப்புறம் கல்யாணம் பண்ணி ஒண்ணா ஒரு வீட்டுல வாழறதைப் பத்தி நினைச்சுப் பார்க்கக் கூட முடியல…” நியதியும் பிடிவாதமாய் இருந்தாள்.

“நியதி…! நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைக்கும்போது  இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு பண்ணக் கூடாது… உனக்கு கொஞ்ச நாள் டைம் தரேன், பொறுமையா யோசிச்சு சொல்லு…” என்றார் அம்பிகை. அப்போதுதான் அவள் தனது விருப்பத்தை மறுத்ததை அறிந்த அபிமன்யு அந்த மழை நாளில் அவளிடம் பிரச்சனை செய்தது.

பிறகு அவனைக் காணும் போதெல்லாம் இவள் சண்டைக் கோழி போல் சிலிர்த்து திரும்பிக் கொள்ள, அம்பிகையின் பேச்சுக்குக் கட்டுப்பட்ட அபிமன்யுவும் பொறுமையாய் அவள் மனம் மாறக் காத்திருந்தான்.

தினமும் வெளியே செல்லும்போதும், திரும்ப வரும் போதும் ஒர்க் ஷாப்பில் அமர்ந்து அவள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பவனை சில நாட்களாய் காணவில்லை.

ஒர்க் ஷாப்பைக் கடக்கையில் இயல்பாய் அவனைத் தேடி பார்வை செல்ல முதல் நாள் காணாததைப் பெரிதாய் எடுக்காதவள் அடுத்து வந்த நாட்களும் அவனைக் காணாத போது தான் ஒரு மாதிரி தவிப்பாய் உணர்ந்தாள். வேறு சில ஆண்கள் காரைக் குடைந்து கொண்டு பணியில் இருந்தாலும் அவர்களிடம் கேட்க தயக்கமாய் இருந்தது. அம்பிகையிடம் அத்தனை வீராப்பாய் அபிமன்யு மீது கோபத்தில் பேசிவிட்டு அவரிடம் கேட்கவும் கூச்சம்.

“என்னாச்சு கருப்பனுக்கு…? மூணு நாளா ஒர்க் ஷாப்புல ஆளைக் காணோம், வெளியூர் எங்காச்சும் போயிட்டானா…?” யோசித்தவள் அன்று மாலை பள்ளியிலிருந்து வரும்போது சாவித்திரியைக் காண செல்வது போல் விஷயத்தை அறிந்து கொள்ள அபியின் வீட்டுக்கு சென்றாள்.

அவனுக்கு என்ன ஆனால் என்ன, நம் மனது ஏன் அவனைத் தேடுகிறது என யோசித்திருந்தால் அவளுக்கு அப்போதே அவன் மீதுள்ள விருப்பம் புரிந்திருக்கும்… பாவம், அவன் மீதுள்ள வெறுப்பில் இந்தத் தேடலும், தவிப்பும் தான் காதலின் அடுத்த நிலை என அப்போது யோசிக்கவில்லை. ஆஸ்ரமத்தைத் தாண்டி நான்கைந்து வீடுகளுக்குப் பிறகு இருந்த அபியின் வீட்டு கேட்டைத் திறந்தவள் படியேறி சென்று காலிங் பெல்லை அமர்த்த, உள்ளே கேட்ட காலடி ஓசை நெருங்கி வந்து கதவைத் திறந்தது.

கதவுக்குப் பின்னே சோர்ந்து, டிரிம் செய்யாத தாடியுடன் நின்றவனைக் கண்டவள் திகைத்தாள். சோர்ந்திருந்த கண்கள் அவளைக் கண்டதும் பிரகாசமாய் விரிந்தன.

“ஹேய் வெள்ளக்கோழி…! வா, உள்ள வா…!” நகர்ந்து வழி விட சற்று தயக்கத்துடனே உள்ளே நுழைந்தாள்.

“அத்தையைப் பார்க்க வந்தேன், உள்ள இருக்காங்களா…?”

“இல்ல, அம்மா கோவிலுக்குப் போயிருக்காங்க…”

“ஓ… எ..என்னாச்சு…?”

“புரியல…”

“உங்களுக்கு என்னாச்சு…? ஒரு மாதிரி இருக்கீங்க…”

“ப்ச்… சரியான தூக்கமில்லை, அதான்…”

“நீங்க நல்லா கும்பகர்ணன் போல தூங்கற ஆளாச்சே, இப்ப ஏன் தூக்கம் வரலை…?”

“ப்ச்… தூக்கமெல்லாம் நல்லாதான் வருது… கண்ணை மூடினா கலர் கலரா கனவும் கூடவே வருது… கனவுல என் வெள்ளக்கோழி கூட டூயட் பாடறேன், தூங்கிட்டா அதெல்லாம் மிஸ் ஆகிடுமே…” அவன் சொல்ல முறைத்தாள்.

“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது…” என்றவள் எழுந்து கொள்ள,

“ஏன் நான் என்ன ஆன்சர் ஷீட்டா திருத்துறதுக்கு…? அட, ஏன் எழுந்துட்ட…?” என்றான் பதட்டத்துடன்.

“அத்தையை அப்புறம் பார்த்துக்கறேன், நான் கிளம்பறேன்…”

“ப்ச்… என்ன அவசரம் வெள்ளக்கோழி, அம்மா இப்ப வந்திருவாங்க… பார்த்திட்டே போ…”

“இ..இல்ல, பரவால்ல… நான் கிளம்பறேன்…” என்றவள் காலை எடுத்து வைக்க அவள் குறுக்கே கை நீட்டி தடுத்தவன்,

“ஏய் வெள்ளக்கோழி…! உண்மைய சொல்லு, நீ என்னைப் பார்க்க தானே வந்த…” என்றான் கண்ணில் காதலுடன்.

“ஹூக்கும், நீங்க என்ன தாஜ் மகாலா, குதுப்மினாரா…? உங்களைப் பார்க்க வர, நான் அத்தையைப் பார்க்க தான் வந்தேன்… சரி, ஒரு மாதிரி இருக்கீங்களேன்னு நலம் விசாரிச்சா எகத்தாளமா பதில் சொல்லறீங்க, அப்புறம் உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு…” என்றாள் வெடுக்கென்று.

அவளைக் குறுகுறுவென்று பார்த்த அபிமன்யு, “எனக்கு மூணு நாளா பீவர், கோல்டு… இன்னைக்கு பீவர் இல்ல, லைட்டா தலைவலி இருந்துச்சு, இப்ப அதுவும் போயிருச்சு…”

“ஓ… நல்லா ரெஸ்ட் எடுங்க, சரியாகிடும்… நான் வரேன்…” என்றவள் அதற்கு மேல் நிற்காமல் கிளம்பினாள். அவள் தன்னைக் காண வந்த சந்தோஷத்தில் மனம் நிறைய, அவள் செல்வதையே பார்த்து நின்றான் அபிமன்யு.

அவனைக் காணாத போது ஒருவிதத் தவிப்பென்றால், அவனது அருகாமை வேறு விதமான தவிப்பைத் தந்தது. அதன் காரணம் புரியாமல் யோசனையுடன் ஆஸ்ரமத்துக்குள் நுழைந்தாள் நியதி. எட்டி நின்றால் தேடுவதும், ஒட்டி வந்தால் விலகி ஓடலும் காதலின் விதி தானே…

தனிமையில் இனிமை

தரும் காதலே முள்ளாய்

குத்தவும் செய்கிறதே…

சற்று எட்டி நின்றால்

கண்கள் தேடுவதும்

மெல்ல நெருங்கினால்

படபடத்து விலகுவதும்

காதலின் எழுதப்படா விதி…

Advertisement