Advertisement

தென்றல்  – 27
             உதய் பிரபாகரனின் வீட்டு வாசலில் சென்ற வண்டியை நிறுத்தியவன் முகம் சரியில்லாமல் இருக்க அதை கவனித்தாலும் அஷ்மி ஒன்றுமே கேட்கவில்லை. கீழே இறங்கி வீட்டை நோக்கி நடக்க அவளின் பின்னே வேகமாய் சென்றவன் அஷ்மியின் கை பிடித்து நிறுத்தினான்.
“அஷ்மி ஒரு நிமிஷம்…” என்றதும் அவனை பார்வையில் என்னவென்றாள்.
“உனக்கு சொல்லனும்னு இல்லை. இருந்தாலும் சொல்றேன். கோவத்துல நந்தினியை…” என்று சொல்லவும் தன் கையை உருவிக்கொண்டவள்,
“ட்ராப் பண்ண தானே வந்தீங்க? வந்த வேலையை மட்டும் பார்த்தா போதும். பொண்டாட்டி நான் இருக்கும் போது என்னை வச்சுட்டே அவளை எதுவும் சொல்லக்கூடாதுன்னு ஆடர் போட எவ்வளோ துணிச்சல் உங்களுக்கு?…” என்று நெற்றிக்கண்ணை திறந்தேவிட்டாள்.
“சும்மா இருந்தவளை சுரண்டிவிட்டோமோ?” என்று பிரசாத் திருதிருக்க,
“என்ன?…” என்றாள் இன்னமும் காரம் குறையாத குரலில்.
“என் வாயாலையே நான் கெடறேன்…” அவன் சொல்லியவிதம் அஷ்மியின் இதழ்களுக்குள் மெல்லிய கீற்றாய் புன்னகையை தோற்றுவித்தது. அதை காண்பித்து கொள்ளாமல்,
“தேவையில்லாம முறைச்சிட்டா நானும் பேசத்தான் செய்வேன். இன்னொரு தடவை அவளுக்காக என்கிட்டே பரிந்துரைக்கு வந்தீங்க நடக்கறதே வேற…” என்ற எச்சரிக்கையுடன் உள்ளே செல்ல பாக்கியம் வேகமாய் வந்துவிட்டார்.
“வாசல்ல வண்டி சத்தம் கேட்கவுமே நெனச்சேன். வாம்மா…” என்று அஷ்மியை உள்ளே ஒரு படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே கெளரி வயிற்றை பிடித்துக்கொண்டு துடித்துக்கொண்டிருந்தாள்.
“எப்போ இருந்து இந்த வலி?…” என அஷ்மி கேட்டுக்கொண்டே மற்றவர்களை பார்வையால் வெளியேற சொல்ல அவளுடன் பாக்கியமும் நந்தினியும் மட்டுமே இருந்தனர்.
“இப்ப கொஞ்ச நேரம் முன்ன இருந்து தான். மதியம் கூட சரியா சாப்பிடலை. டீ குடிச்சுட்டு பேசிட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துல வாமிட் பண்ணிட்டா. டயர்டா இருக்குன்னு படுக்கறதா சொல்லி ரூம்க்கு வந்தவ கொஞ்ச நேரத்துலையே அழ ஆரம்பிச்சுட்டா…” 
நந்தினி சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டவள் கௌரியின் கண், நாக்கு, வாய் என ஒவ்வொன்றாய் பார்த்தாள்.
“அடிக்கடி இப்படித்தான் வலின்னு சொல்லுவாங்களா?…” 
“இல்லை அடிக்கடி இல்லை. எப்போவாவது தான் சொல்லியிருக்கா. அஜீரணமா இருக்கும்னு அவளே சொல்லிப்பா…” என்றதுமே நந்தினியை முறைத்தவள்,
“அவங்களா சொன்னா நீங்க என்னன்னு ஒருதடவை டாக்டர்ட்ட செக் பண்ண வேண்டியதுதானே?…” என்று பட்டென பேச நந்தினிக்கும் பாக்கியத்திற்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. 
அறையின் வாசலில் நின்றிருந்த பிரசாத் அஷ்மியை கலவரத்துடன் பார்த்தான் என்றால் உதயா கவலையுடன் பார்த்தான்.
“அஷ்மி…” என பிரசாத் அழைக்க அவனை முறைத்தவள் கௌரியிடம் திரும்பி,
“எப்போ இருந்தும்மா உனக்கு இந்த வலி? அடிக்கடி வருமா?…” 
“ஹ்ம்ம், ஆமா. ஆனா கொஞ்ச நேரத்துல சரியாகிடும்…” திணறி திணறி சொல்ல கேட்டுகொள்ளுங்கள் என்னும் விதமாய் பாக்கியத்தை பார்த்தாள் அஷ்மிதா. 
“இல்லை இவ எங்ககிட்ட சொன்னதில்லை…” நந்தினி விளக்க முற்பட,
“இவங்க ஹஸ்பண்ட் எங்க?…”
“ஒரு க்ளோஸ் ரிலேஷன் மேரேஜ். அவாய்ட் பண்ண முடியாது. கௌரிக்கு இது மாதாந்திரம். அதான் அவளால ட்ராவல் பண்ண முடியாதுன்னு காலையில தான் கொண்டுவந்து விட்டுட்டு போனாங்க. நாளைக்கு தான் வருவாங்க. கெளரி அப்பாட்ட சொல்லலை பதறிடுவார்ன்னு…”
நந்தினி சொல்லவும் அவளையே பார்த்த அஷ்மிக்கு அவள் சொல்லியதையும் தாண்டிய ஒரு ஆராய்ச்சி பார்வை. இவள் எந்த விதத்தில் தன்னவனை கவர்ந்திருப்பாள் என்று.
“இப்போ என்னாச்சு கௌரிக்கு?….” என்ற அவளின் கேள்வியில் தெளிந்தவள்,
“அல்சர். சரியா சாப்பிடாம முறையா நேரத்துக்கு சாப்பாடு எடுத்துக்காம குடல் புண்ணாகியிருக்கு. அது வாய் நாக்குன்னு எல்லாம் ஸ்ப்ரெட் ஆகியிருக்கு. டீயோட காரமா ஏதும் சாப்பிட்டாங்களோ?…” 
“ஹ்ம்ம் ஆமா மிளகாய் பஜ்ஜி கேட்டான்னு செஞ்சுகுடுத்தேன்…” பாக்கியம் கண்ணீருடன் சொல்ல,
“அதான் வலி அதிகமாகியிருக்கு…” என்றவள் மீண்டும் அறை வாசலை பார்க்க,
“வாடா பிரபா நாம போய் உட்காருவோம். அவங்க பேசிட்டு வரட்டும்…” என்று மனைவியின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக உதயாவை இழுத்துக்கொண்டு செல்ல அஷ்மிக்கு மீண்டும் புன்னகை வர பார்த்தது.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை” என நினைத்துக்கொண்டவள்,
“அழாதீங்க ஆன்ட்டி…” என ஆறுதலாய் சொல்ல,
“ரொம்ப துடிச்சுட்டாம்மா. அதான் தாங்கமுடியலை…” என்ற பொழுதே கண்ணீர் கன்னத்தில் இறங்கிவிட்டது.
“சரி பண்ணிடலாம். கொஞ்சம் உணவு முறையை மாத்தினாலே சீக்கிரமே சரியாகிடும்…” 
“இப்போ என்ன செய்யனும்?…”
“புண்ணோட தாக்கம் அதிகமா இருக்கும்னு நினைக்கேன். நான் மெடிசின் எழுதி தரேன். அதை ரெகுலரா குடுங்க. இப்போதைக்கு கை வைத்தியமா தேங்காயை அரைச்சு பால் எடுத்துட்டு வந்து குடுங்க. நான் குடுக்கற மருந்தை குடுத்தாலும் கை  வைத்தியங்களையும் செஞ்சுட்டே இருங்க….” என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே நந்தினி வேகமாய் சென்று விட்டாள் பால் எடுத்துக்கொண்டு வருவதற்கு.
“மேரேஜ் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு கெளரி?. பேபி ப்ளானிங் தள்ளி போட்ருக்கீங்களா?…” என கேட்டதும் மெதுவாய் எழுந்து அமர்ந்தவளின் முகத்தில் வேதனை நிறைந்திருந்தது.
“தள்ளி போடலை. இன்னும் தங்கலை…” சின்ன குரலில் கூற புன்னகைத்தாள் அஷ்மி.
“அதுக்கு ஏன் உன் வாய்ஸ் இவ்வளோ உள்ள போய் வருது? நல்லா சத்தமாவே சொல்லலாமே?…” என கேட்க,
“விஷ்ணு வீட்ல கூட இப்போ டாக்டரை பாருன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. விஷ்ணு தான் என்ன அவசரம்னு சொல்லி இருக்கார்…” பாக்கியம் சொல்ல நந்தினியும் வந்துவிட்டாள். அவள் பாலை கௌரியிடம் கொடுக்க வாங்கியவளின்  முகம் அஷ்டகோணலாக மாறியது.
“என்னால முடியாது…” என சொல்ல,
“குழந்தை சீக்கிரம் பிறக்கனும்னா அதுக்கான பலம் உன்னோட உடம்புக்கு தேவை தானே?…”
“அதுக்கு இதுக்கும்?…”
“சம்பந்தம் இருக்கு கெளரி. முதல்ல நேரத்துக்கு சாப்பாடு. அதுவும் சத்தான ஆகாரம். நாம சாப்பிடறது தான் நம்ம உடலுக்கான வலிமையை கொடுக்கும். அணுக்களுக்கான தன்மையும் இதில் அடங்கி இருக்கு. உனக்கு விளக்கமா இன்னொரு நாள் சொல்றேன். இப்போ இதை குடிச்சுட்டு ஹாலுக்கு வா. அங்க எல்லோரும் உனக்காக கவலையா இருக்காங்க…”
அதட்டலுடன் அஷ்மி சொல்ல கெளரி கொஞ்சம் கொஞ்சமாய் குடித்தாள். பாதிக்கு மேல் முடியவில்லை என்று சொல்ல சரி போதும் என்று சொல்லி அனைவருமே வரவேற்பறை வந்துவிட்டனர்.
நந்தினியின் குழந்தை பிரசாத்தின் தலைமுடியை பிடித்து காண்பித்து தன் தலையில் முடி இல்லை என்பதை உதடு பிதுக்கி சொல்லியது. ஒரு ரோஜாப்பூவை தலையில் வைத்து காண்பித்து கண்ணை கசக்க குழந்தையின் பாவனையில் அனைவருக்குமே சிரிப்பு வந்தது.
“உட்காரும்மா…” என்று பாக்கியம் சொல்லிவிட்டு அவர்களுக்கு குடிக்க எடுத்துவர சென்றார்.
“என்ன கெளரி விஷ்ணுவை பார்க்கனும்னா அவனுக்கு போன் பண்ணி வர சொல்லு. அதை விட்டுட்டு அழுது ஆர்ப்பாட்டம் பன்ற?…” என கிண்டலாய் பிரசாத் சொல்ல,
“அவளே இப்ப தான் எழுந்து வந்திருக்கா. புரியாம சீண்ட கூடாது. உங்களுக்கு தெரியுமா எதுக்கு அழறான்னு?…” நந்தினி வாயை விட,
“அரைக்காப்படி உன்னோட டேப்ரிக்கார்டரை பர்ஸ்ட் ஆப் பண்ணனும். அங்க பேசுனா நீ ஏன் வெடிக்கிற?…” என்று பேசி சத்தமாய் சிரித்தவனின் பார்வையில் எதிரே அமர்ந்திருந்த மனைவி கண்ணில் விழுந்தாள்.
சுவிட்ச் போட்டதை போல அவனின் சிரிப்பு சட்டென நின்றுவிட அதை பார்த்த பிரபாவிற்கு சிரிப்பு வந்தது.
“என்னடா அஷ்மியை பார்த்ததும் சிரிப்பு நின்னுடுச்சு…”
“உன் பொண்டாட்டி சூலமும் கையுமா வந்து நின்னா உனக்கு எப்படிருக்கும்? அது மாதிரி தான். அவ கையில சூலம் வேண்டாம். பார்வையே போதும். கண்ணு ரெண்டும் ஈட்டி மாதிரி. எப்போ வேணும்னாலும் குத்தும். எப்போ வேணும்னாலும் கொஞ்சும். உன் வேலையை நீ பாரு…” என்று அவனிடம் வெடுவெடுத்தவன்,
“இப்போ வலி பரவாயில்லையா அஷ்மி…” என கேட்டுவிட்டு தன் தலையில் தட்டிக்கொண்டு,
“கெளரி கெளரி. அதான் சொல்ல வந்தேன்…” என்று உளற,
“ஒரு பேரை சரியா சொல்ல தெரியலை. வாய் மட்டும் கேளுங்க. வண்டவாளம் மாதிரி நீளும்…” இதற்கும் நந்தினி பதில் குடுக்க,
“பேரை சரியா சொல்ல தெரியலைனாலும் தப்பை திருத்தி திரும்ப சரியா சொல்லிட்டாங்களே? அது போதுமே. பேச்சுன்றது அவங்கவங்க உரிமை. அதற்கான நீள அகலத்தை நிர்ணயிக்கிறது சூழ்நிலைகளை பொருத்து தான் நந்தினி…” அஷ்மியும் முகம் மாறாமல் சொல்லிவிட பிரசாத், உதயா இருவருக்கும் பதட்டமாகிவிட்டது.
“விடேன் நந்து. அவங்களுக்கு என்ன வேணும்னு பாரு…” உதயா சொல்லிவிட்டான். ஆனால் பிரசாத்தால் சொல்லமுடியவில்லை. பார்வையால் கெஞ்ச அதை அவள் சட்டை செய்யவே இல்லை. 
“நான் என்ன தப்பாவா பேசிட்டேன். அவங்க சொன்னதும் எனக்கு பிடிச்சது. நீங்க ஏன் பதட்டமா சொல்றீங்க? அவங்க அதை எல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாங்க…” என உதயாவின் வாயை அடைத்தவள் அஷ்மியின் புறம் திரும்பினாள்.
“டேய் எனக்கு நெஞ்சு வலிக்கும் போலடா…” என உதயா சொல்ல,
“அவ ஏற்கனவே ஃபுல் பார்ம்ல இருக்காடா பிரபா…” கவலையாய் பிரசாத் சொன்னான்.
“எஸ், இனி தவறா நினைக்க என்ன இருக்கு?….” என்ற அஷ்மியின் பேச்சில் இருந்த சூட்சமம் அங்கே மற்றவர்களுக்கு புரியவில்லை.
“சூழ்நிலை பொருத்து தான் பேச்சுன்னாலும் அந்த சூழ்நிலையை உருவாக்கிறது யார்ன்னு இருக்கே?…”
“ஆமாம் அந்த சூழ்நிலையை நீங்க தான் உருவாக்கி இருக்கீங்க…” அஷ்மியும் சொல்ல ஆடிப்போய்விட்டனர் பிரசாத் உதயா. ஒரு நொடி மூச்சே நின்றுவிட்டது. அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள்,
“நீங்க தானே பேச்சை ஆரம்பிச்சு அவர் உங்களை திரும்ப கேலி செய்யும் படி சூழ்நிலையை உருவாக்கினது. அவர் கௌரிட்ட தானே பேசினார். நீங்களா தான் வம்பு பேசினீங்க. அதுக்கு அவர் பதில் பேசினார். அவ்வளோ தான்…” அஷ்மி சொல்ல நந்தினி பேசும் முன்பே பாக்கியம் வந்துவிட்டார்.
“நந்தினி இதை போய் அத்தைட்ட குடுத்துடும்மா…” என ஒரு டம்ளர் நிறைய பால் ஆற்றி கொடுக்க,
“எங்க பாட் காணோம்?…” என ஞாபகம் வந்தவளாக அஷ்மி கேட்க,
“பாரதம் படிக்கிறாங்க. அதான் வெளில வரலை. படிச்சு முடியுற வரை அங்க தான் இருப்பாங்க…” என்று பாக்கியம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணமூர்த்தி வந்துவிட்டார்.
பிரசாத், அஷ்மி இருவரையும் பார்த்து பொதுவாய் வரவேற்றவர் கௌரியிடம் சென்று அமர்ந்தார்.
“இப்போ எப்படிடாம்மா இருக்கு?…” என்றதற்கு அவள் தலையசைத்ததும் அஷ்மியை பார்த்து விஷயத்தை கேட்க அவளும் பேச பொதுவான பேச்சுக்கள் தான் அங்கே.
கிருஷ்ணமூர்த்திக்கு அஷ்மிதா நாச்சியை சொல்லாமல் அழைத்துச்சென்றது பிடிக்கவில்லை. அதற்கு உதயாவிடம் நன்றாக பேசி நாச்சியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். அஷ்மியை பேசியது நாச்சிக்கு பிடிக்கவில்லை.
தான் தான் வற்புறுத்தியதாக சொல்லி, போவது தெரிந்தால் விட்டிருப்பாயா என்றும் கேட்டு ஒரு ஆட்டம் ஆடிவிட்டார் நாச்சி. அவர் சொல்லியது சரி என்றாலும் லேசான  வருத்தமும் கூட அஷ்மிதா மேல்.
“பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாவது குடுத்தியா பாக்கியம்?…”
“சாப்பிட்டோம் அங்கிள். நாங்க கிளம்பறோம். அத்தை வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க…” என அஷ்மி சொல்ல,
“இரும்மா நைட் இங்க சாப்பிட்டு போகலாம்…” கிருஷ்ணமூர்த்தி சொல்ல,
“ஆமாம் அஷ்மி. நீ இருந்தா கொஞ்சம் நல்லா சாப்பிடுவா. இல்லைனா கோழி கொறிக்கிற மாதிரி கொரிச்சுட்டு போய்டுவா…” பாக்கியமும் சொல்ல,
“ஏன் சரியா சாப்பிட மாட்டியா நீ?…” அஷ்மி நேராக கௌரியிடம் கேட்க,
“அவ நல்லா தான்மா சாப்பிட்டுட்டு இருந்தா. இவ அம்மா வேணி தான் இவ பெரியமனுஷி ஆனதும் பொம்பளப்புள்ளைங்க இவ்வளவு சாப்பிட கூடாது. வெய்ட் போட்டுடும். கொழுப்பு கூடிடும்னு எப்ப பார்த்தாலும் இவளை சொல்லிட்டே இருப்பா. ஆம்பளைங்கள மாதிரி பொம்பளப்புள்ளைக்கு பெருந்தீனி ஆகாதுன்னு சொல்லிகாட்டிட்டே இருப்பா. நாங்க என்ன சொல்லியும் வேணி கேட்க மாட்டா…” பாக்கியம் குறைபட,
“விடும்மா, முடிஞ்சதை பேசி என்னாக போகுது?…” என்று மனைவியை அதட்டிய கிருஷ்ணமூர்த்தி,
“நீ இருந்து சொல்லும்மா…” என்று அஷ்மியிடம் சொல்ல,
“போச்சு கருப்பு கோட்டை மாட்டி மனுவை கையில குடுத்துட்டாங்க. இனி ஆளை விடுன்னு வாய்தா வாங்கற அளவுக்கு அடிச்சு ஆடபோறா ஆணென்ன பெண்ணென்னனு…” என முனக்க,
“என்னடா சொல்ற?…” உதயா அவனின் காதை கடித்தான்.
“பார்க்கத்தான போற வேடிக்கையை. அங்க நோக்கு. என்னை விடு…” என்று அஷ்மி பேச பார்க்க ஆரம்பித்தான். 

Advertisement