Advertisement

அத்தியாயம் – 18
“ஹலோ டைமாச்சு! கொஞ்சம் சீக்கிரமா வரீங்களா? உங்களோட இதே தொல்லையா போச்சு…” காலையின் பரப்பரப்பு உடம்பு முழுவதும் பரவிக்கிடக்க, பாத்ரூம் கதவை தட்டியபடி தமிழ், உள்ளேயிருந்த கணவனை திட்டிக் கொண்டிருந்தாள். இது அவர்களின் அன்றாட வழக்கம் தான்! இன்னமும் இந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை இருவருக்கும்.
அவளை சில நிமிடங்கள் அலைகழித்து மெதுவாக கதவை திறந்த செழியன், சாவதானமாக மனைவியை கள்ள பார்வை பார்த்துக் கொண்டிருக்க தமிழோ அதற்கும் பாராபட்சம் இன்றி கழுவி ஊற்றினாள். “லேட்டா வந்துட்டு அப்படியே நிக்கறீங்க? தள்ளுங்க… எனக்கு லேட்டாகுது.”
தமிழின் கைகளை பற்ற முயன்ற செழியனின் முயற்சிகள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டன! இதில் உள்ளே இருந்து உத்தரவு வேறு பறந்தது. “சீக்கிரமா ரெடியாகிட்டு ரெண்டு பேருக்கும் லன்ச் பேக் பண்ணுங்க.”
“சரிங்க மகாராணி…”
வெளியே உதட்டை சுழித்தபடி பதில் அளிக்கும் தன்னவனின் முகத்தை எண்ணி தமிழின் உதடுகள் தாமாக மலர்ந்தது. அந்த சிரிப்புடனே குளித்து சீக்கிரமாக வங்கிக்கு கிளம்பியவள், இருவருக்குமாக தோசை வார்த்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு செழியனை அழைத்தாள்.
“இன்னிக்கு சீக்கிரமாக கிளம்ப பெர்மிஷன் வாங்கிட்டல?”
செழியன் சாப்பிட்டபடி தமிழை பார்த்து கேட்க, “ஹா ரெண்டு நாள் முன்னாடியே மேனேஜர் கிட்ட சொல்லிட்டேன். மூணு மணிக்கு நீங்க பேங்குக்கு வந்துடுங்க.” என்று பதிலளித்தாள்.
இதை கேட்டு சிறிது திடுக்கிட்டு பின் சலித்த குரலில் தன் மனைவியிடம் கூறினான், “இருந்தாலும் என்னை ரொம்ப தான் டிரைவரா யூஸ் பண்ற…”
“ஏன் பண்ணக் கூடாதா?” என்ற கேள்வியுடன் கை கழுவ எழுந்தாள் தமிழழகி. இன்று ஊருக்கு கிளம்பிகிறார்கள். தனிஷ்காவின் மொட்டை அடித்து, காது குத்தும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது அதற்கு தான் ஊருக்கு செல்ல இருக்கிறார்கள்.
பைக்கில் செல்லும் போது ஒரு சிக்னலில் வண்டி நிற்க, பக்கத்து வண்டியில் இருந்தவன் கூலர்ஸ் அணிந்து பந்தாவாக இருக்க, செழியன் ஒன்றும் கூறாமல் பின் திரும்பி மனைவியை பார்த்தான். “என்ன தான் பார்த்தாலும் கூலர்ஸ் கிடையாது உங்களுக்கு. வண்டியை எடுங்க.”
“சத்திய சொதனைடா செழியா…”
இதை கூறியதிற்கும் பின்னிருந்து தமிழ் ஒரு அடியை முதுகில் வைத்தாள். அவளை வங்கியில் விட்டு கிளம்பியவன், பின் இரண்டரைக்கு தன் வங்கியில் இருந்து கிளம்பும் முன் தான் அவளுக்கு அழைத்தான். “நான் இங்கயிருந்து கிளம்பறேன்.”
“ஹ்ம்ம் ஓகே” வீட்டிற்கு செல்லும் வரை கடினப்பட்டு தன் கண்களை தூக்கம் தழுவுவதை தவிர்த்தாள் தமிழ். வீடு வந்ததும், ஒரு முறை பேக்கில் எல்லாவற்றையும் சரி பார்த்ததும், அவர்களின் கார் பயணம் தொடங்கியது.
மாலை நான்கு மணி அடிப்பதற்குள் கிளம்பினர். செழியன் பேசிக் கொண்டே வர தமிழ் ‘ஹ்ம்ம்’ கொட்டிக் கொண்டே வந்து ஒரு நிலை மேல், தூங்கி வழிந்தாள் சீட்டில். அவளை தட்டி எழுப்பினாலும் மீண்டும் உறங்குவாள் என்பதை உணர்ந்தவன் சிரிப்புடன் வண்டியை திருச்சி நோக்கி செலுத்தினான்.
ஒரு மணி நேரம் கழித்து எழுந்தவள், “நல்லா தூங்கிட்டேன்” என சோபையான குரலில் கூற, “ஆமா அப்போ தான அண்ணி கிட்ட நைட் பதினொரு மணி வரைக்கும் மொக்க போட முடியும்.” என எகத்தாளமாக கூறி, தன் அடி என்னும் பரிசை தப்பாமல் வாங்கினான்.
தன் மொபைலில் இருந்து ப்ளூட்டூத் வழியாக பாட்டை காரின் ஆடியோ செட்டில் ஒலிக்க விட்டாள் தமிழ். “ஹே நீ வெறும் அபினவ் பாட்டா தான் போடுவ… இது செல்லாது, நிப்பாட்டுமா…”
“ஓவரா பண்ணிங்கனா பழைய கிஷோர் குமார் சாங்க்ஸ் போடுவேன். நீங்க தூங்கிடுவீங்க… ஓகே வா?”
“அடியே வேணாம். இதே இருக்கட்டும்.”
அவசரத்துடன் செழியன் கூறியதை கண்டு சிரித்து, தன் அலைப்பேசியில் முகநூலை திறந்து பார்வையை அதில் ஓட்டினாள் தமிழழகி. அதில் ஒரே ஒரு வீடியோவை பற்றிய செய்தியே வந்துக் கொண்டிருக்க, என்ன வீடியோ என பார்த்தால் அபினவ்வும், ரக்ஷனும் இருந்தனர் அதில்.
உள்ளுக்குள் எதுவோ ஒன்று பெரிதாக நடந்திருக்கின்றது என்று புரிய, செழியனை காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி, தன் ஹெட்செட்டை அலைப்பேசியில் மாட்டினாள் தமிழ். “எதுக்கு நிறுத்தச் சொன்ன?” என்று வினவிய கணவனின் காதுகளில் ஹெட்செட்டில் ஒன்றை மாட்டியவள், மற்றொன்றை தன் காதுகளில் மாட்டி அந்த வீடியோவை ஓட விட்டாள்.
வீடியோ ஒரு தனியறையில் எடுக்கப்பட்டிருந்தது பார்த்தவுடன் தெரிந்தது. எடுத்தவுடன் அபினவ்வும், ரக்ஷனும் எல்லோருக்கும் வணக்கங்களை கூறினர். பின் ரக்ஷன் பேச ஆரம்பித்தான். “எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கும். எப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வீடியோல இருக்கோம்னு. கொஞ்ச நாளா மனசுல ஓடிட்டே இருந்தது தான். அபினவ்வும் வந்து பேசவும், இப்போ இந்த வீடியோ போடலாம்னு டிசைட் பண்ணோம்.
ஒரு சில வருஷமா எங்களோட ஃபேன்ஸ் சில பேர், ஃபேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் சண்டை போட்டுட்டும், ரொம்ப மோசமா திட்டிட்டும் இருக்கீங்க. நாங்களும் இது என்னிக்காவது ஒரு நாள் முடியும்னு நினைச்சா இது போயிட்டே தான் இருக்கு.”
இந்த இடத்தில் ரக்ஷன் நிறுத்த அபினவ் தொடர்ந்தான். “நீங்க எல்லாரும் எங்க மேல இருக்க லவ்வுலயும், கிரேஸ்லயும் தான் இப்படி பண்றீங்க, புரியுது. பட், இந்த சண்டை ஒரு லிமிட்ட தான்டி போகுது. வடிவேலு சார் ஸ்டைல்ல சொல்லனும்னா ரொம்ப சின்ன புள்ளதனமா இருக்கு.
நீங்க எல்லாமே காலேஜ் படிச்சிட்டோ, ஆபிஸ் போயிட்டோ தான் இருப்பீங்க. உங்களுக்குன்னு முடிக்க நிறைய, நிறைய வேலை இருக்கும். அதை விட்டுட்டு எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு டைம் வேஸ்ட் பண்ணனும் சொல்லுங்க? அதுக்கும் மேல, நானும் சரி, ரக்ஷனும் ஒருத்தர் மேல ஒருத்தர் நிறைய ரெஸ்பெக்ட் வைச்சிருக்கோம்.
நீங்க திட்டி தீர்த்த நிறைய ரக்ஷன் படம் எனக்கு அவ்வளோ பிடிக்கும். நாங்களே ஒத்துமையா இருக்கும் போது, நீங்க ஏன் சண்டை போடனும்?”
ஆழ்ந்த வருத்தம் அபினவ் முகத்தில் தெரிந்தது. அபினவ்வின் தோளில் கைப் போட்டு, பின் மீண்டும் ரக்ஷன் தொடர்ந்தான். “நாங்க ரெண்டும் பேரும் ஒண்ணா தான் இருக்கோம். சோ, ப்ளீஸ் நீங்களும் இந்த சண்டையை எல்லாம் நிறுத்துங்க. அதுமட்டுமில்லாம, நாங்களும் மனுஷங்க தான். எங்க ரெண்டு பேரையும் கடவுளா பார்க்குறது, பால் அபிஷேகம் பண்றதையும் இத்தோட விட்டுடுங்க, ப்ளீஸ்.
எங்களோட ஹம்பிள் ரெக்வெஸ்ட்! உங்களோட ஃபேமிலியை முதல்ல பாருங்க. அவங்க தான் உங்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல வருவாங்க. நாங்க இல்லை…. அப்படியே இத்தோட இந்த சண்டை போடுறதுக்குன்னே வைச்சுருக்க பேஸ்புக் பேஜ், ஐடி எல்லாத்தையும் டிஆக்டிவேட் பண்ணிருங்க. அவ்வளோ தானபா வேற ஏதாவது இருக்கா?”
ரக்ஷன் முடித்து அபினவ்வை பார்க்க, அபினவ்வும் தலையசைத்தான். “அவ்வளோ தான். நாங்க சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம். எங்க மேல நீங்க உண்மையிலேயே மதிப்பும், அன்பும் வைச்சிருந்தீங்கனா ப்ளீஸ், நாங்க சொன்னதை செய்ங்க. அது போதும். பை!”
“பை…” ரக்ஷனும் அபினவ்வும் ஒன்றாக விடை கொடுக்க, வீடியோ அத்துடன் முடிந்தது.
செழியனுக்கும் தமிழுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை…. “ஹே சூப்பர்ல? இனிமேலாச்சும் இந்த சண்டை எல்லாம் நிக்குதான்னு பார்ப்போம்.”
“கண்டிப்பா இவங்க சொன்னதை எல்லாரும் கேப்பாங்கன்னு தான் நினைக்கிறேன். பார்க்கலாம்.”
இவர்கள் தங்களின் உறவை புதிப்பித்துக் கொண்டது முதல் அவர்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்ளும் விஷயங்களில் இதுவும் ஒன்று. எப்போது இந்த மாற்றம் நிகழுமோ என்று இருந்தவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இந்த காணோளியை கண்டு.
அதே சந்தோஷத்தோடு ஊருக்கு சென்றவர்கள் விழா ஏற்பாடுகளில் முழுதாக மூழ்கி விட்டனர். தங்களின் குல தெய்வ கோவிலில் தனிஷ்காவிற்கு மொட்டை அடித்து, பின் திருச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் காது குத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தன் முடி இல்லாத தலையை கைகளால் தடவி தடவி பார்த்து வியந்த தனிஷ்காவை கடினப்பட்டு அவளின் தாய் மாமனின் மடியில் உட்கார வைத்து, காது குத்துவதற்குள் தமிழ் தான் ஒரு வழியாகி போனாள்.
நதியா குழந்தை அழுவதை காண முடியாமல், மாறனை பற்றிக் கொண்டு நிற்க, தமிழ் தான் தனிஷ்காவை காது குத்தும் போது பிடித்து வைத்தது! காது குத்திய பின்பும் அழுகை நின்றபாடாக காணோம்!
அவளை தூக்கி சுற்றிக் கொண்டு தமிழழகி வளைய வர, நதியா அவளை தொடர்ந்தாள்.
“தமிழ் இன்னிக்கு ஒரு நாள் ஃபோன் குடுக்கலாம். அதை பார்த்துட்டு இருப்பா… இல்லனா அவளை சமாளிக்கறது கஷ்டம்.”
“ஐய்யோ வேணவே வேணாம் அக்கா. அப்புறம் அதையே கேப்பா எப்போவும். இந்த செல்போனால தான் நிறைய குழந்தைக்கு இப்போ பேச்சு வர மாட்டேங்குது சீக்கிரமா. நம்ம பாப்பாக்கு குடுக்க வேணாம். நான் பார்த்துக்கறேன் நீங்க போய் வந்தவங்கள பாருங்க.”
தமிழ் சொன்னதும் சரியென புரிய, மீண்டும் விழா நடைப்பெற்ற ஹாலிற்கு சென்றாள் நதியா. தனிஷ்காவை சமாதானப்படுத்திக் கொண்டே விழா நடைபெறும் இடத்தில் இருந்து தூரமாக வந்த தமிழ், ஒரு வழியாக பேசி தாளாட்டு பாடி தனிஷ்காவை உறங்கச் செய்தாள்.
அழுதுக் கொண்டே தேம்பலுடன் உறங்கிப் போனாள் குழந்தை. இவர்கள் எங்கே என தேடிக் கொண்டே வந்த செழியன், மனைவியை கண்டதும் அவளிடம் வந்து, “ஹே அகி இங்க பாரு. நினைச்ச மாதிரியே அந்த பேஜ் எல்லாத்தையும் மூடிட்டாங்க.”
முகநூல் பக்கத்தை பற்றி காட்டிய கணவனை கண்களாலேயே முறைத்தாள் தமிழ். “ஃபங்க்ஷன் நடக்கறப்போ இது ரொம்ப முக்கியம் பாருங்க. அப்புறமா இதை எல்லாம் பார்த்துக்கலாம். முதல்ல எல்லாரும் சாப்பிட்டாச்சான்னு பாருங்க போங்க.”
“நீ இதை பார்த்தா ஹேப்பியா இருப்பனேன்னு பார்த்தா, அநியாயம் பண்ற நீ!”
“மெதுவா, பாப்பா தூங்கறா…”
தணிந்த குரலில் செழியனை கண்டித்து டைனிங் ஹால் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள் தமிழ். அவளிடம் உறங்கும் தனிஷ்காவை ரசித்தபடி அவளை பின் தொடர்ந்தான் செழியன்.
அப்போது பார்த்து டைனிங் ஹாலில் இருந்து வயதான மூதாட்டி இவர்களை நோக்கி வந்து, “குழந்தை தூங்கறாளா? நீங்க எப்போ இப்படி குழந்தையும் குட்டியுமா இருக்க போறீங்க?” என்று கேட்க செழியன் அவருக்கு பதிலளித்தான்.
“பாட்டி இவளால என்னையே  இன்னும் சமாளிக்க முடியலையாம். நீங்க வேற…”
“டேய் குழந்தையை சமாளிக்க, வளர்த்துவிட பெரியவங்க இருக்கோம். ரொம்ப தான் போ…” முகவாயில் தோள்பட்டையை இடித்துக் கொண்டு அம்மூதாட்டி செல்ல, செழியனை கோபமாக திட்டி தீர்த்தாள் தமிழ்.
“என்னை ஏதாவது மாட்டி விடலனா தூக்கம் வராதா உங்களுக்கு? வீட்டுக்கு வாங்க அடி மொத்தறேன்.”
“ஹே நம்ம கல்யாணத்துலந்து அந்த பாட்டி இதே தான்டி கேட்டுட்டு இருக்கு, என்னை ஏன் முறைக்குற?”
அவன் கூறியதை காதிலேயே வாங்காமல் டைனிங் ஹாலில் நுழைந்த தமிழை, பின் தொடர்ந்து சமாதானப்படுத்த தொடங்கினான் செழியன். அவன் பார்க்காத தமிழின் கோபமா? அவன் கேட்காத பாவ மன்னிப்பா?
இறுதி வரை இந்த ஊடலும் கூடலும் இருவருக்குள்ளும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் நாமும் இவர்களிடமிருந்து விடை பெறுவோம்.
                                             ——முற்றும்—

Advertisement