Advertisement

அத்தியாயம் 5

 

மதியம் அந்த வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே அடைந்ததிலிருந்து கண்களில் வழிந்த கண்ணீர் நிற்கவே இல்லை தாமரைக்கு .இளவேந்தன் இப்படி ஒரு காரியத்தை செய்வான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி முடிந்தது அவனால் என்று கேட்டுக் கொண்டவளுக்கு மீண்டும் அழுகை வர அழுதுகொண்டே இருந்தாள் அவள்.

 

முதலில் தன் காதலை நினைத்து, அது நிறைவேற வேந்தன் செய்யும் அவன் தகுதிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத இந்த கடத்தலை நினைத்து, தன் தாய் தந்தையை நினைத்து, தன்னை காணாமல் தன் அன்னை என்ன பாடுபடுகிறாரோ என்று நினைத்து, தன் அண்ணன் என்ன செய்வானோ. தன்னை கடத்தியது வேந்தன் தான் என்று தெரிந்தால் அவனின் எதிர்வினை என்னவாக இருக்குமோ என்று நினைத்து அவள் கவலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

 

யார் யாரையோ பற்றி கவலைப்பட்டவள் ஒரு நொடி கூட, தன் நிலையை எண்ணியோ, தன் பெயர் கெட்டுவிடும் என்றோ கவலை கொள்ளவே இல்லை.அதுதான் அவள் இளவேந்தன் மீது கொண்ட நம்பிக்கை.நிச்சயம் அவன் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்துவிட மாட்டான் என்பதை உணர்ந்திருந்தாள் அவள்.

 

நாளை ஒருவேளை பஞ்சாயத்து கூடினால் கூட,அவன் பழியை தன்மீதே போட்டுக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்று தோன்றவே பஞ்சாயத்தில் என்ன தண்டனை கிடைக்குமோ. கடவுளே என்னிடம் கேட்டால் நான் என்ன கூறுவேன். இவனுக்கு எதிராக ஏதும் கூறினால் பஞ்சாயத்தில் கடுமையான தண்டனை கிடைக்கும் அவனுக்கு. இதே அவனுக்கு சாதகமாக தான் ஏதாவது கூறிவிட்டால் அதற்குப்பிறகு என் குடும்பத்தை எப்படி எதிர்கொள்வேன் என்று அவள் கலங்கி கொண்டிருந்தாள்.

அதே நேரம் இங்கு தனஞ்செயனால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதியழகியும் அழுது கொண்டு தான் இருந்தாள்.ஆனால் அவள் நிலை தாமரையை விட மோசமாக இருந்தது. கடத்தியவனை முதலில் அவளுக்கு அடையாளம் தெரியாமல் போக மயக்கம் தெளிந்து யோசித்தபோது தான் அவன் தாமரையின் அண்ணன் என்பதே அவளுக்கு நினைவுக்கு வந்தது.அதுவும் நெடுநேர முயற்சிக்கு பிறகு.

 

கண்களை திறந்தவளுக்கு தான் ஏதோ ஒரு அறையில் தன் துப்பட்டாவினால் கைகள் கட்டப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பது வரை புரிய, தன்னை கடத்தியவனின் முகத்தை அவள் நினைவு கூற,அப்போதும் தனஞ்செயனின் முகம் முன்னால் வந்ததே தவிர அவன் யார் என்று சற்று யோசித்த பிறகே நினைவு வந்தது அவளுக்கு.

 

கடவுளே இவர் ஏன் என்னை தூக்கணும். நான் என்ன பண்ணேன் இவருக்கு என்று நினைத்தவள் அழுது கொண்டிருக்க, எதற்காக தான் இப்படி கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதை கூட உணராமல் அவள் இருக்க அந்த நேரம் அவள் இருந்த அறைக்கதவு திறக்கப்பட்டது. பயந்து போய் அவள் கதவையே பார்க்க உள்ளே வந்தது தனஞ்செயன் தான்.

 

கையில் ஒரு கவரோடு உள்ளே வந்தவன் மதியழகியின் அருகில் வரவும் அவள் படுத்த வாக்கில் கிடத்தப்பட்டிருந்தவள் அப்படியே பயத்தில் பின்புறமாக நகர, அவளை முறைத்தவன் அவள் அருகில் மண்டியிட்டு அமரவும் கண்களை இறுக மூடிக் கொண்டாள் அவள்.

 

அவனோ எதையும் கண்டு கொள்ளாமல் அவளை கையை பிடித்து எழுப்பி அமரவைக்க, துப்பட்டா மறைக்காத அவளின் முன்னழகு நெகிழ்ந்திருந்த உடையின் வாயிலாக அவன் கண்களுக்கு விருந்தாக இதுவரை பெண்களை ஏறிட்டும் பார்க்காத தனாவின் கண்கள் அவளின் மேலிருந்து நகரவே இல்லை.

 

அவன் எழுப்பி உட்கார வைக்கவும், மெதுவாக கண்ணை திறந்த மதியழகியின் கண்ணில்பட்டது இந்த காட்சிதான். அவன் பார்வை மேய்ந்த இடத்தை அவள் பார்க்க வெட்கிப்போனாள். முன்பின் தெரியாத ஒரு ஆண்மகனின் முன்னால் தான் இந்த நிலையில் இருப்பதை அறவே வெறுத்தவள் கால்களை குறுக்கி நெஞ்சோடு அணைத்து தன்னை அடைகாத்துக் கொள்ள

 

அவளின் இந்த செயலில் தான் சுயநிலை அடைந்தவன் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன் நான். என்று தன்னையே கடிந்து கொண்டு அவளின் கைக்கட்டை அவிழ்த்துவிட்டான். அவன் கைகளை பிடித்திருப்பது ஏதோ போல் இருக்க அவன் கைகளை விலக்கிய அடுத்த நிமிடம் தன் கைகளை எடுத்துக் கொண்டவள் தன் துப்பட்டாவை அவனிடம் இருந்து பிடுங்கி ஒழுங்காக தன்னை மறைத்து கொண்டாள்.

 

என்ன முயன்றும் அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்க, அவள் கண்ணீரை கண்டவனுக்கு ஏதோ செய்தது. அவளை நோக்கி ” இதுல சாப்பாடு இருக்கு. சாப்பிட்டுட்டு ஒழுங்கா இருக்க வழியை பாரு. இன்னிக்கு ஒருநாள் தான் நாளைக்கு உன்னை உன் வீட்ல கொண்டு போய் விட்டுடுவேன் ” என்று கூறிவிட்டு அவன் வெளியே சென்றுவிட்டான்.

 

அவன் சொன்னதை கேட்டவளோ “கடவுளே என்ன சொல்கிறான் இவன். இன்னிக்கு ஒருநாள் மட்டுமா. நான் இங்க இருக்கேன்னு வெளிய தெரிஞ்சா என்ன பேசுவாங்க. இவனுக்கு என்ன வேணும்.” என்று யோசித்தவளுக்கு மனம் தன் அன்னையை தேட ” அம்மா ” என்று இல்லாத அம்மாவை நினைத்து அழ தொடங்கினாள் அவள்.

 

என்ன அழுதபோதும் அவன் வைத்த உணவை தொட மனமில்லாமல் போக, திரும்பிக் கூட பார்க்கவில்லை அதை. அப்படியே கண்ணீரோடு அமர்ந்திருந்தாள். அந்த நேரம் உள்ளே வந்தவன் இவள் சாப்பிடாததை பார்த்து “அவ்ளோ திமிரா உனக்கு ” என்று நினைத்தவன் ” பட்டினியா கெட. என் தங்கச்சி எப்படி இருக்கான்னே தெரியல  இருந்தும் உனக்கு பிரியாணி வாங்கிட்டு வந்தேன்ல. என்னை சொல்லணும்.” என்று மனதிற்குள் பேசிக் கொண்டு வெளியே சென்று அமர்ந்துவிட்டான். அவன் வாங்கி வந்த உணவு கேட்பாரற்று கிடந்தது அங்கே.

இவர்கள் நிலை இப்படி இருக்க அங்கு மாணிக்கமோ பெண்ணை காணாமல் தேடி அலைந்தவர் இதற்குமேல் தன்னால் முடியாது என்று தோன்ற நேராக சிவஆதித்யனை தேடிச் சென்றிருந்தார். வேதமாணிக்கத்தின் வீட்டிற்கு வந்தவர் சக்தி கொடுத்த நீரை கூட அருந்தாமல் குலுங்கி அழ வேதமாணிக்கம் என்ன என்று கேட்டவர் ” தாமரையை காணவில்லை ” என்றதில் பதறிப் போய் சிவஆதித்யனுக்கு அழைத்திருந்தார்.

 

தாத்தாவின் அழைப்பை ஏற்றவன் என்னவென்று விவரம் கேட்க அவனுக்கு பதில் சொல்லாதவர் உடனே வீட்டிற்கு வருமாறு கூறி அழைப்பை துண்டித்திருந்தார். அவன் அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்திருக்க மாணிக்கம் அங்கே அமர்ந்திருப்பதை பார்த்து அவரின் அருகில் அமர்ந்தவன் ”  “என்னைய்யா ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க. என்ன ஆச்சு ” என்றதுதான் தாமதம், அவன் கையை பிடித்துக் கொண்டவர் குலுங்கி அழுது கொண்டிருந்தார்.

 

ஒருவழியாக அவரை சமாளித்து அவன் விஷயத்தை வாங்கி முடிக்க, தாமரை எங்கே சென்றிருப்பாள் என்று யோசித்தவன் தன் மனைவியின் முகத்தை பார்க்க அங்கு எதுவோ சரி இல்லை என்று தோன்றவும் ” நீங்க இருங்க. ஒரு ரெண்டு நிமிஷம் வந்திடுறேன்.” என்றவன் சக்திக்கு கண்ணை காட்டிவிட்டு மேலே போக அவன் பின்னால் மாடி ஏறினாள் அவள்.

 

ஆதித்யன் அவர்கள் அறையின் கட்டிலில் அமர்ந்திருக்க உள்ளே வந்த சக்தியின் முகத்தை பார்த்தவன் ” தாமரை எங்க சக்தி ” என்று கேட்க

“சத்தியமா எனக்கு தெரியாதுங்க.”

” உனக்கு என்னவோ தெரியும்ன்னு எனக்கு தோணுது. நீயே சொல்லிடு எனக்கு நேரமில்லை ” எனவும்

அவனின் அந்த நிதானத்தில் பயந்தவள் இளாவின் காதலையும் அவன் நேற்று திருநெல்வேலி வந்ததையும் அவனிடம் கூறிவிட தலையசைத்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் கீழே இறங்கிவிட

அதே நேரம் பதட்டத்துடன் உள்ளே வந்தனர் மதிமாறனும், சுந்தரபாண்டியனும்.வந்தவர்கள் கல்லூரி முடிந்து இவ்வளவு நேரமும் மதியழகி வீட்டுக்கு வரவில்லை என்று கூறி அவளை மீட்டு கொடுக்குமாறு ஆதித்யனிடம் முறையிட அவனுக்கு எதுவோ புரிவதை போல.

மதிமாறனிடம் ” இளாவுக்கு போன் போடு. தங்கச்சிய காணும்ன்னு சொல்லி வர சொல்லு.” என்று ஆதித்யன் கூற

” அவன் போன் சுவிட்ச் ஆப்டா ” என்று மதி கூறவும், மாணிக்கத்திடமும், சுந்தரபாண்டியனிடமும் திரும்பியவன் ” ரெண்டு பெரும் வீட்டுக்கு போங்க. இன்னும் ரெண்டு மணிநேரத்துல உங்க பொண்ணுங்க வீட்டுக்கு வந்திருவாங்க” என்று கூற

 

சுந்தரபாண்டியன் அதிர்ந்து போய் மாணிக்கத்தை பார்க்க மாணிக்கமும் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இருவருக்குமே ஒன்றும் புரியாத நிலை.ஆதித்யன் அதற்குமேல் அவர்களுக்கு நேரம் கொடுக்காதவன் இருவரையும் ஓட்டுநர் உதவியுடன் வீட்டிற்கு அனுப்பி இருந்தான்.

 

அவர்கள் கார் கிளம்பியதும் மதியிடம் திரும்பியவன் ” இளா பிரென்ட் அந்த அன்புக்கு போன் போடு ” எனவும் அவன் டயல் செய்ய அவன் கையிலிருந்து போனை வாங்கி கொண்டவன், எதிர்புறம் போன் எடுத்தவுடன் ” போனை இளா கிட்ட கொடுடா.” என்றதும் அவன் தெரியாது என்று சாதிக்க

 

” சரி நீ வீட்ல தான இருக்க. அங்கேயே இரு ஒரு அஞ்சு நிமிஷம். நான் வரேன். உன் தங்கச்சிய தூக்கிட்டு அப்புறம் பேசுறேன் ” எனவும் “கடவுளே ” என்று தலையில் கைவைத்தான் அன்பு. ஊர்பஞ்சாயத்தை எதிர்பார்த்தவனுக்கு ஆதித்யன் இந்த விஷயத்தில் வந்ததே அதிர்ச்சி என்றால் அவன் தங்கையை வேறு தூக்குவதாக அவன் சொல்லவும் போனை எடுத்துக் கொண்டு ஓடியவன் இளாவிடம் சென்று தான் நின்றான். யாரென்று கேட்டுக்கொண்டே போனை வாங்கிய இளா “ஹலோ ” எனவும்

” இன்னும் பத்து நிமிஷத்துல நீ என்முன்னாடி இருக்கணும் இளா. இல்லை நானா வந்தேன், நீ தாங்க மாட்ட ” என்று உரைக்க

” நீ இதுல தலையிடாத ஆதி.இது என் வாழ்க்கை பிரச்சனை. என்னால வரமுடியாது. நீ என்ன வேணாலும் பண்ணிக்க ” என்று கூற

” என்ன வேணாலுமா. உன் அப்பனையும்,அண்ணனையும் சட்டையில்லாம இழுத்துட்டு போய் ஸ்டேஷன் ல வைக்கிறேன்டா நாயே. நீ உன் வாழ்க்கையை வாழ்ந்துட்டு வா ” என்றவன் போனை அணைத்துவிட்டான். மதி “என்ன ஆதி என்ன பண்ணான் இந்த பையன் ” என்று பதறவும் அவனுக்கு பதில் சொல்லாமல் சக்தியிடம் திரும்பியவன் “தாமரையோட அண்ணனுக்கு போன் போடு ” என்றான்.

அவள் முழுக்கவும் ” போடுடி. கண்ணை உருட்டிட்டு ” என்று அதட்டவும் அவள் டயல் செய்ய அவளிடம் இருந்தும் போனை வாங்கி கொண்டவன் ” உன் அப்பா வீட்டுக்கு வந்து இருந்தாரு தனா. நெஞ்சுவலின்னு நெஞ்சை பிடிச்சிக்கிட்டு சாஞ்சிட்டாரு.உன் வீட்டுக்கு கூட சொல்லல இன்னும். சக்தி பார்த்துட்டு இருக்கா.நீ கொஞ்சம் உடனே கிளம்பிவா ” என்றதும் என்ன ஏதென்று யோசிக்காமல் தானாக அவன் வலையில் விழுந்தான் தனா.அதுசரி அவனுக்கென்ன கடத்தல் தொழிலா. முதல்முறையாக முயற்சிக்க அதிலும் ஆதித்யன் வந்து நிற்பான் என்று யார் கண்டது.

ஆதித்யன் போனை வைத்த அடுத்த பத்து நிமிடங்களில் தனஞ்செயன் வந்து நிற்க, அவனை அழைத்து அமரவைத்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். தனா என்ன எது என்று கேட்டபோதும் எதுவும் பேசாமல் ஆதித்யன் அமைதியாக இருக்க, அவன் வந்து அமர்ந்த அடுத்த சில நிமிடங்களில் இளவேந்தன் வந்து சேர்ந்தான்.

” உனக்கு உன் அப்பன் மேல பாசம் கம்மி போலவே. தனா கிட்ட பார்த்த அந்த பயம் பதட்டம் எதுவுமே உங்கிட்ட இல்லையே ” என்று அவன் நக்கல் பண்ணவும் வேந்தன் கொதித்தவன் ” என்னை எதுக்கு ஆதி இங்க வரச்சொன்ன ” என்று தனாவை முறைத்துக் கொண்டே கேட்க

” ஹான். மாப்பியாக போறல்ல. அதான் விருந்து வைப்போமேன்னு. நாயே கேள்வியா கேக்குற.” என்றவன் உக்கிரமாக எழுந்துகொள்ள வேந்தன் லேசாக பதட்டம் அடைந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நிற்க

 

“இளா நான் பொறுமையாவே கேக்குறேன். தாமரை எங்க” என்று கேட்க

” எனக்கு தெரியாது ” என்று அவன் சாதிக்கவும், மதி அவனை முறைத்தவன் “டேய். மதியை சாயங்காலத்துல இருந்து காணும்டா. என்னடா பண்ணி தொலைச்ச ” என்று கத்த

 

வேந்தன் திகைத்தவன் தனாவை திரும்பி முறைக்க அவனும் தயாராக தான் நின்றிருந்தான். ஆனால் இருவரையும் யார் விட்டது. நடுவில் தான் ஆதித்யன் அய்யனாராக நின்றிருந்தானே.

 

இருவரையும் முறைத்தவன் ” இன்னும் பத்து நிமிஷம் உங்களுக்கு டைம். அதுக்குள்ள தாமரையும், மதியும் இங்க இருக்கணும். இல்ல மதி தங்கச்சிய காணும்ன்னு இவன் மேல ஒரு கம்பளைண்ட் கொடு. மாணிக்கம் பெரியப்பாகிட்டயும் ஒரு கம்பளைண்ட் வாங்கிட்டு இந்த ரெண்டு சண்டியரையும் உரிச்சிடறேன் ” என்றவன் போனை அவர்கள் முன்னால் வைத்துவிட்டு அமைதியாக சென்று டைனிங் டேபிளில் அமர்ந்துவிட்டான்.

 

தனா முதலில் ஆதித்யனை திரும்பி பார்த்தவன் ” ஆதி. இவன் தங்கச்சிய கடத்தணும்ன்னு எனக்கு எண்ணம் இல்ல. எனக்கு என் தங்கச்சி எந்த சேதாரமும் இல்லாம வீடு வந்தா போதும். அதுக்குதான் இவன் தங்கச்சிய தூக்குனேன். இப்போ அவளை நான் விட்டாலும் என் தங்கச்சிக்கு நீதான் பொறுப்பு ” என்று கூற,ஆதித்யன் தலையசைக்கவும் போனை எடுத்து குமாரை அழைத்தவன் மதியை அழைத்துவர சொன்னான்.

 

அவன் போனை வைத்ததும் ” நீ போட்றா. ” என்று மதி தம்பியை மிரட்ட அவன் யோசிக்கவே ” மவனே. எதுவும் யோசிக்காத. ஏழு வருஷம் தீட்டிடுவேன் இந்த ஊர்ல எவனும் என்னை கேக்ககூடமாட்டான் பார்த்துக்கோ ” என்று ஆதித்யன் இளாவை மிரட்ட சக்தி “இளா தாமரை பாவம். நீ வரச்சொல்லு ” என்று அவனிடம் கூற ” ஹேய் வாய மூடிட்டு நில்லு. உன் நண்பன் எப்படி போடாம போறான்னு நான் பார்க்கிறேன் ” என்று அவளையும் மிரட்டி நிற்கவைத்தான்.

 

ஆதித்யன் விடமாட்டான் என்று புரிந்த இளா போனை எடுத்து அன்புவுக்கு அழைத்து தாமரையை கூட்டி வர சொல்ல அடுத்த பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களும் ஆதித்யனின் முன் இருந்தனர். தாமரை வந்தவுடன் தன் அண்ணனை கண்டவள் அவன் நெஞ்சில் சாய்ந்து அழ, மதி பயத்துடன் மதிமாறனின் கரங்களில் ஒண்டிக் கொண்டாள். இருவருக்குமே நடந்தது எதுவும் புரியாத நிலை.

 

Advertisement