Advertisement

அத்தியாயம்  35

நந்தினியின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, விஜயராகவனோடான வாழ்விற்கு ஓரளவிற்கு பழகி இருந்தாள் அவள். அங்கேயே ஒரு கல்லூரியில் படிப்பையும் தொடர, அவளை கல்லூரியில் தினம் கொண்டு விடுவது விஜய் தான். விஜய்யின் தந்தையும் அவளிடம்  பாசமாகவே இருக்க, பெரிதாக எந்த சிக்கலும் இல்லாமல் இயல்பாக சென்றது அவள் வாழ்க்கை.

கல்லூரியிலும் சிலர் நட்பாகி இருக்க, அவளின் பழைய நினைவுகள் முன்ஜென்ம நினைவுகளாகவே கடந்து சென்றிருந்தது. சில சமயங்களில் மனம் அழுத்தும்போது விஜயிடம் ஆறுதல் தேடிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் உறவு இயல்பாகவே இருந்தது.

இப்போதும் அவள் கல்லூரி முடிந்து விஜய்யின் வருகைக்காக அவள் கல்லூரி வளாகத்தில் காத்திருக்க, அவளை வெகுநேரம் காக்க வைத்தவன் ஒரு வழியாக வந்து சேர்ந்தான். அவளை பார்த்ததும் அவன் மலர்ந்த புன்னகையை சிந்த, அவனை முறைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள் அவள்.

அப்போதும் சிரிப்போடே அவன் வண்டியை செலுத்த, சிறிது நேரம் பொறுத்தவள் கையிலிருந்த புத்தகத்தால் அவன் தோளில் நன்றாக இரண்டு அடி வைக்க, அவனுக்கு உரைக்கவே இல்லை. அடியை வாங்கி கொண்டவன் மீண்டும் சிரிக்க, அவன் காதை திருகியவள் அவன் தோளில் கடிக்க பார்க்க, காரை ஓரமாக நிறுத்திவிட்டவன் அவள் கையிலிருந்த தன் காதை விடுவித்துக் கொண்டு அவளை தன் கைகளில் அடக்கி கொள்ள, திமிர முயன்றாலும் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை அவளால்.

அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன் “கடிக்கவா செய்ற…” என்று அவள் உதட்டை அழுத்தமாக சுண்டி இழுக்க, “ஆஹ்… வலிக்குது விடுடா…” என்று கத்தியவள் ஒரு மரியாதைக்கு கூட வாங்க என்றோ போங்க என்றோ சொல்லியது கிடையாது. இன்றுவரை அவன் அவளுக்கு டா டா டால்டா தான்.

அவனுக்கும் அவள் அப்படி அழைப்பது பிடித்திருக்க, பெரிதாக அவன் கண்டுகொள்வது இல்லை. இப்போதும் அவள் அழைப்பை கண்டுகொள்ளாமல் அவள் உதட்டு பள்ளங்களில் கவனம் வைத்தவன் அவளை நெருங்க, உதடுகளை அழுந்த மடித்துக் கொண்டாள் அவள்.

அவன் முறைக்கவும் “நடுரோட்ல இருக்கோம். போலீசுக்கு ஞாபகம் இருக்கா” என்று கேட்க

“ஹேய்.. இது ஹைவேஸ்டி. இங்க உன்னையும் என்னையும் பார்க்க எவனும் இல்ல.” என்று கெஞ்சலாக கூற, “மொதல்ல வண்டியை எடுங்க நீங்க. வீட்டுக்கு போய் நம்ம பஞ்சாயத்தை வச்சிப்போம்.கிளம்புங்க” என்று அவள் முடிவாக கூறவும்

“நான் ஏன் பஞ்சாயத்தை வச்சுக்கணும். உன்னையே வச்சிக்குவேன்ல பெப்பி. என்று அவன் அறிவாக கேட்க

“கட்டிக்கிட்டு வந்தவளை வச்சிக்குறேன் ன்னு சொல்ற ஒரே அறிவாளி நீங்களா தான் இருக்கும். இதுல பெருமை வேற அய்யாவுக்கு”

“ஹேய் பெப்பி. உனக்கு தெரியாதா. இந்த விஜய் கட்டிக்கிட்டாலும், வச்சிக்கிட்டாலும் என் பொண்டாட்டியை மட்டும்தான்.” என்று வாயடிக்க, உள்ளுக்குள் குளிர்ந்து போனாலும் “போதும், போதும் வண்டியை எடுங்க..” என்று சலிப்பாக சொல்வதுபோல் காட்டிக் கொண்டாள் அவள்.

ஆனாலும் அவளை கண்டு கொண்டவன் புன்னகையுடன் வண்டியை எடுத்தான். அந்த ஹைவேஸில் அவன் காரை பறக்கவிட அவன் தோளில் அழகாக சாய்ந்து கொண்டாள் நந்தினி.

இவர்கள் நிலை இப்படி இருக்க, இங்கு அழகிய நல்லூரிலோ தனஞ்செயனின் வயலில் நடவு வேலைகள் நடந்து கொண்டிருக்க, அங்கு நின்றிருந்தான் அவன். மாலை சூரியன் மேற்கில் இறங்க தொடங்கி இருக்க, அன்றைய வேலைகள் முடியும் தருவாயில் இருந்தது.

அவனும் இத்தனை நேரம் ஆட்களோடு நின்றிருந்தவன் இப்போதுதான் மேலேறி இருந்தான். அருகில் இருந்த அவர்களின் மற்றொரு வயலுக்கு சென்றவன் அங்கு நடந்து கொண்டிருந்த வேலைகளை பார்வையிட்டு முடித்து அங்கேயே நின்றிருக்க, அங்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தாள் அவன் மனைவி.

அவள் வண்டி சத்தம் கேட்டு அவன் திரும்பி பார்க்க, அவனையே பார்த்துக் கொண்டு வந்தவள் அவன் திரும்பி பார்க்கவும் பெரிதாக புன்னகைக்க, அந்த முகம் அத்தனை அழகாக மலர்ந்து போனது. அவள் சிரிப்பை கண்டவனுக்கு அவளை அள்ளிக் கொள்ள மனம் உந்தினாலும் இருக்குமிடம் உணர்ந்து தன்னை அடக்கி “அழகி..” என்று மனதுக்குள் கொஞ்சிக் கொண்டான் அவளை.

அவன் அருகில் வண்டியை நிறுத்தி அவள் இறங்க, அவளுடன் நடந்தவன் அவர்கள் தோட்டத்தில் அவளை அமர்த்திவிட்டு மீண்டும் சென்று வயலில் நின்றுக் கொண்டான். அவள் பையிலிருந்த பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு கையில் ஒரு நோட்டையும் எடுத்துக் கொண்டு தயாரானவள் ஆட்கள் வேலை முடித்து வரவும் அவரவர்க்கு கூலியை கொடுத்துவிட்டு தன்னிடம் இருந்த அந்த நோட்டில் குறித்துக் கொண்டாள்.

இவள் இருப்பதால் அவர்கள் தோட்டத்தையும்,வயலையும் மீண்டும் ஒருமுறை பார்வையிட்டு முடித்துவிட்டு தாமதமாகவே வந்தான் தனா. அவன் வருவதற்குள் அனைவரும் கூலியை வாங்கி கொண்டு கிளம்பி இருக்க, அவள் அடுத்திருந்த அவர்களின் தோப்புவீட்டில் இருந்தாள்.

அவள் எடுத்து வந்திருந்த நோட்டும், அவளின் பையும் அங்கிருந்த நாற்காலியில் இருக்க, அவள் கிட்சனில் நின்றிருந்தாள். இப்போதெல்லாம் இவர்கள் ஜாகை அடிக்கடி இங்கேதான் என்பதால், அந்த வீட்டை சிறிது பழுது பார்த்திருந்தார் மாணிக்கம்.

எடுத்து கட்டவே அவர் ஆசைப்பட்டிருக்க, மகன் ஒப்புக்கொள்ளாததால் சில மராமத்து வேலைகளுடன் மிளிர்ந்தது அவர்களின் வீடு. வீட்டில் சமையல் பொருட்களையும் விசாலம் வாங்கி வைத்திருக்க, எந்நேரமும் இவர்கள் வந்து தங்கி செல்ல தயாராக தான் இருக்கும் அந்த வீடு.

இப்போதும் வீட்டிலிருந்த பொருட்களை கொண்டு கருப்புகாஃபி தயாரித்தவள் அதை டம்ளர்களில் மாற்றிக் கொண்டிருக்க, அந்த நேரம் தான் பின்னால் வந்து நின்றான் தனஞ்செயன். அவன் எதிர்பார்த்த தனிமை இப்போதுதான் அவனுக்கு கிடைத்திருக்க, அவளை முழுவதுமாக தீண்டியது அவன் பார்வை.

மயில்கழுத்து வண்ண காட்டன் சேலை..கையில், காதில் வீட்டில் எப்போதும் அணிந்து கொள்ளும் சில நகைகள், நெற்றியில் வட்டபோட்டுக்கு மேலாக லேசான விபூதி குங்கும தீற்றல். முன் உச்சியில் மட்டும் அழுத்தமான குங்கும தடம். அவ்வளவே தான் அவள் ஒப்பனை. ஆனால் அதிலேயே அவனை கிறங்கடித்தாள் அவன் மனைவி.

இப்போது கல்லூரி செல்ல தொடங்கி இருந்தாள் அவள். மூன்றாமாண்டு முடியும் தருவாயில் இருக்க, அவளுக்கு வண்டி ஓட்டக் கற்று கொடுத்திருந்தான். முதலில் வண்டியில் ஏறவே பயந்தவளை ஒரே வாரத்தில் கொஞ்சி, மிரட்டி, சிறிது சீண்டி தன் வழிக்கு கொண்டு வந்திருந்தவன் அடுத்த வாரத்தில் அவள் தனியாக செல்லும் அளவுக்கு அவளை தயார் படுத்தி விட்டான். இப்போதெல்லாம் கல்லூரிக்கும் தனியாக சென்று வர பழகி இருந்தாள் அவள்.

இன்று கல்லூரி முடித்து திரும்பிக் கொண்டிருந்தவளை அழைத்தவன் பணத்தை எடுத்துக் கொண்டு வர சொல்லி இருந்தான். அதுவும் இப்போதெல்லாம் வழக்கமாகி இருந்தது. அவன் சொன்னபடியே வீட்டிற்கு சென்று குளித்து உடைமாற்றியவள் பணத்துடன் தோட்டத்திற்கு வர, அவள் சேலை கட்டி வந்தது தான் தவறாகிப் போனது.

அவள் இடையை அழுத்தமாக அவன் பற்ற, அவன் விரல்கள் அவள் இடையை தாண்டி அவள் அடிவயிற்றில் கோலமிட, கையிலிருந்த திரவத்தை விட அதிகமாக கொதித்து போனாள் அவள். அவன் தீண்டல் அவளை படுத்தி வைக்க அவன் கைமேல் தன் கையை வைத்தவள் அவன் கையை அசையவிடாமல் பிடித்துக் கொள்ள இரு நொடிகளில் கையை விலக்கி கொண்டவன், அவளை தன புறம் திருப்ப சமையல் மேடையில் சாய்ந்து நின்றாள்.

அவளை கைகளால் வளைத்தவன் தன்னுடன் அவளை அழுத்தமாக அழுத்திக் கொள்ள, “இப்போ என்ன செய்வ” என்று கேட்பது போல் இருந்தது அவன் பார்வை. அவன் பார்வையில் சிவந்துபோனவளாக பார்வையை தாழ்த்திக் கொண்டவள் அவனை பார்க்கவே இல்லை. இனி என்ன செய்தாலும் அவள் நிமிர மாட்டாள் என்று அவனுக்கும் நன்றாகவே தெரியும். அவளின் இந்த வெட்கம் எப்போதும் இம்சிக்கும் அவனை.

இப்படி அவளை நிற்க வைத்து பார்க்கவே அவளை அடிக்கடி சீண்டுவான் அவன். இப்போதும் தன்னை பார்க்க மறுத்தவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களில் முத்தமிட, கண்கள் மூடியே கொண்டது. புன்னகையுடன் தன் முத்தங்களை அவன் தொடர்ந்து கொண்டிருக்க, காத்திருந்த கருப்புகாஃபி வெறுப்பாகி தன் உயிரை விட்டு நீராக மாறி இருந்தது.

வெகுநேரம் கழித்தே அவளை விடுவித்து விலகியவன் வெளியே பார்க்க, இருள் சூழ்ந்திருந்தது. வெளியில் வந்தவன் அங்கிருந்த விளக்கை எரியவிட்டு, தன் அன்னைக்கு அழைத்து இங்கேயே தங்கிவிடுவதாக விவரம் சொல்ல, தனக்குள் சிரித்துக் கொண்டவர் இரவு உணவை வேலையாளிடம் கொடுத்து விடுவதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.

அவள் மீண்டும் காஃபியை தயாரித்து இருந்தவள் எடுத்து வந்து அவனிடம் கொடுக்க வாங்கி கொண்டவன் அவளையும் அருகில் அமர்த்திக் கொண்டான்.

இருவரும் குடித்து முடிக்கவும் அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன், அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்த அணில்களையும், சிட்டுக்குருவியையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவன் தலையை சுகமாக கோதிவிட ஆரம்பித்தாள் அவன் மனைவி.

அந்த சுகமும், காலையிலிருந்து உழைத்த களைப்பும் அவனுக்கு உறக்கத்தை கொடுக்க ஆழ்ந்த உறக்கம்தான் தனாவுக்கு. அவன் தூங்கிவிட்டதை உணர்ந்தவள் புன்னகையுடன் அவன் முகத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். பின்னே அவன் விழித்திருக்கும்போது அவனை எங்கே பார்க்க விடுகிறான் அவன். அவன் செயல்களில் எப்போதும் தலை அவன் கழுத்துக்கு மேல் உயர்வதே இல்லை அவளுக்கு.

எனவே அவன் உறங்கும் நேரங்கள் அவளுக்கானது. இது தனாவுக்கும் தெரியும், சில சமயங்களில் அவளை சீண்டுபவன் பல நேரங்களில் நிஜமாகவே உறங்கி இருப்பான்.

இதுவும் அப்படி ஒரு தருணமாக அமைந்துவிட அவன் தலையில் அலைந்து கொண்டிருந்தது அவள் விரல்கள். மனம் முழுவதும் தனஞ்செயன் தான் அந்நேரம் அழகிக்கு.

இவன் வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்போம் நாம். என்று யோசனை ஓட, அலையை போல தன்னை சுருட்டி வாரிக் கொண்டவன் முழுவதுமாக அவனுக்குள் இழுத்துக் கொண்டான் என்றே தோன்றியது அவளுக்கு. அவளுக்கு தெரியும் அவளின் இந்த வாழ்வு தனாவால் மட்டுமே.

அவன் இல்லையென்றால் தான் நிமிர்ந்திருக்கவே மாட்டோம் என்று அவள் மனமே அவளுக்கு சாட்சிகூற அவனிடம் எப்போதும் மையல்தான் மங்கைக்கு. அவன் இல்லாத ஒரு வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு தனா மயமாகி போயிருந்தாள் அவள்.

தனாவும் இவளுக்கு சற்றும் குறையாமல் அவளிடம் அன்பை செலுத்துபவன் தான். இந்த இரண்டு மாதங்களில் தன் அழகியின் குணத்தை அவன் முழுமையாக உணர்ந்துவிட்டிருக்க, அந்த பூஞ்சை மனதுக்காரியை வலுவாக்கவே அவளுக்கு பல வேலைகளை இழுத்து விடுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தான்.

முதலில் பேசவே பயந்தவள், இப்போது கூலி கொடுக்கும் நேரங்களில் தோட்டத்து ஆட்களிடம், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்கு தக்கவாறு பதில் கொடுக்க தொடங்கி இருந்தாள். கல்லூரிக்கும் தனியாக சென்று வர தொடங்கி இருக்க, அவனது வரவு செலவு கணக்குகளையும் அவளிடமே கொடுத்திருந்தான். முதலில் திணறியவள் இப்போது ஓரளவிற்கு பழகி இருந்தாள் அனைத்திற்கும்.

தன் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தவள் வயிற்றில் ஏதோ உரசும் உணர்வில் மடியை பார்க்க, அவள் வயிற்றில் முகத்தை புதைத்திருந்தவன் அவள் சேலையை விலக்கி விட்டிருந்தான். அவன் மீசை ரோமங்கள் கூச்சத்தை கொடுக்க, முன்னும் பின்னுமாக அவன் உதடுகளும் உரசவே அவன் விழித்து விட்டதை உணர்ந்து கொண்டவள் அவனை விலக்கிவிட்டு எழுந்து ஓடியே விட்டாள்.

சத்தமாக சிரித்துக் கொண்டவன் அவளை பின்தொடர்ந்து தான் விட்ட வேலையை தொடர, அங்கு காற்றுக்கும் கூட வேலையில்லாமல் போனது.

Advertisement