Advertisement

அத்தியாயம் 14

மதியழகி தனஞ்செயனை பார்த்து பேசிவிட்டு வந்து மூன்று நாட்கள் கழிந்து இருந்தது. இதுவரை அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இவள் அலைபேசி எண்ணும் இப்போது அவனிடம் இருக்க, அப்போதும் அவன் அவளை அழைக்கவே இல்லை. முதல் நாள் அவன் விட்டு சென்றபோதே அவன் அத்தனை கோபத்தில் இருக்க நிச்சயம் திருமணத்தை நிறுத்திவிட போகிறான் என்றே தோன்றிவிட்டது அவளுக்கு.

வீட்டிற்கு சென்றதும் தெரிந்துவிடும் இந்நேரம் அவன் வீட்டில் பேசி நிறுத்த சொல்லி இருப்பான் என்று அவள் கலங்கி கொண்டே இருக்க, ஆனால் அன்று மட்டுமல்ல இதோ இன்றுவரை திருமணத்தை நிறுத்துவது பற்றி எந்த பேச்சுமே எழவில்லை. அவன் திருமணத்தை நிறுத்தாதது மகிழ்ச்சியாக இருந்தாலும், அவன் இன்றுவரை தன்னிடம் பேசவில்லை அன்றும் கோபமாகவே தன்னை கடந்து போனான் என்பது நினைவுக்கு வர அவளால் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்திருக்க திருமணத்திற்கும் இன்னும் முழுதாக ஒருமாதம் கூட இல்லை.இதோ இன்று பத்திரிக்கைகள் அடிக்க கொடுப்பதாக இருக்க காலையிலேயே தாயும், தந்தையும் கிளம்பி இருந்தனர். இருவர் குடும்பத்திற்கும் ஒரே  குலதெய்வமாகி போக, பெற்றவர்கள் முன்னால் கிளம்பி இருந்தனர். மதி, செவ்வியை மதிமாறன் வந்து அழைத்து செல்வதாக இருக்க அவனுக்காக காத்திருந்தனர் பெண்கள்.

இப்போது வரை மதிமாறன் வீட்டில் யாருடனும் இயல்பாக பேசுவதில்லை. ஆனால் பேசவே இல்லை என்று சொல்லமுடியாத வகையில் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை தந்தையுடன் சேர்ந்து கவனித்து வந்தான். தம்பியிடம் கூட அவன் பேசாமல் இல்லை. ஆனால் முன்போல் இயல்பான பேச்சுக்கள் இல்லாமல் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் வந்தது அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகளில்.

ஓயாது பேசுபவன் இல்லை என்றாலும் கலகலப்பான பேர்வழிதான் மதிமாறன். ஆனால் இப்போது இப்படி மாறிப்போக அந்த வீடே அவனை பற்றி யோசித்துக் கொண்டிருந்தது.ஆனால் அவனோ யாரையுமே பெரிதாக கண்டுகொள்ளாமல் தான் இருந்தான். இந்த வீட்டில் அவனுக்கு என்ன மரியாதையோ அதுதானே அவன் மனைவிக்கும் கிடைக்க வேண்டும். அவளை இவர்கள் இப்படி நடத்துவது இவனை அவமதிப்பது போல் ஆகாதா.

அதுவும் சிறுபெண் அவளின் தங்கையாகவே இருந்தாலும் நடுவீட்டில் நின்று அவளை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்க இவர்கள் அனைவரும் வேடிக்கைதானே பார்த்தனர். நாளை எனக்கேதும் நடந்தாலும் இப்படிதான் இருப்பார்களா என்று நினைத்தவன் தாய் மீதும் கோபத்தில்தான் இருந்தான். அவன் அத்தனை பேசும்போதும் அவனை அவர் பெரிதாக கண்டிக்கவில்லை என்பதே அவன் கோபமாக இருக்க அதை வீட்டில் உள்ள அத்தனை பேரின் மீதும் காட்டிக் கொண்டிருந்தான் அவன். இந்த பட்டியலில் அவனின் மனைவியும் இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

அன்று அவளை அடித்ததில் இருந்து அவளிடமும் அவன் சரியாக பேசுவதே இல்லை. பிள்ளையை கொஞ்சுபவன் சற்றுநேரத்தில் அப்படியே உறங்கி இருப்பான். பகலில் அவன் பெரிதாக வீட்டில் இருப்பதில்லை என்பதால் அப்போது யாரையும் பார்க்கும் வாய்ப்பில்லாமல் போனது அவனுக்கு.

இப்போதும் பொறுப்பான அண்ணனாக காலையில் தான் அழைத்து செல்வதாக கூறி பெற்றோரை அழைத்து சென்றுவிட்டவன் சரியாக பூஜை நேரத்திற்கு இப்போது பெண்களையும் அழைக்க வருவதாக சொல்லி இருந்தான்.

செவ்வியை அவன் பேசாதது மிகவும் பதித்து இருக்க, எதிலும் பெரிதாக கவனம் இல்லாமல் இருந்தாள் அவள். அவள் கவனம் முழுவதும் கணவனிடம் இருக்க எங்கே மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவது. இப்போதும் பிள்ளையை மதி வைத்திருக்க, டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவள் ஏதோ யோசனையில்தான் இருந்தாள்.

அந்த நேரம்தான் வீட்டிற்குள் நுழைந்தான் இளவேந்தன். அவனையும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று மதியழகியை விட்டு அழைக்க சொல்லி இருந்தார் ரங்கநாயகி. இப்போது அதற்காக தான் மில்லில் இருந்து வந்திருந்தான் வேந்தன். வீட்டில் யாரும் இல்லாததால் ஹால் சோபாவில் அமர்ந்தவன் மதி மற்றும் குழந்தையுடன் தானும் அமர்ந்துகொண்டான்.

அப்போதுதான் செவ்வி அங்கு டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதை கண்டான் அவன். அவள் முகமும் ஏதோ யோசனையில் இருக்கவும், ஏன் இப்படி இருக்காங்க ? என்று யோசித்தவன் மதியிடம் கேட்க அவளும் தெரியாது என தலையசைத்தவள் “அன்னைக்கு அண்ணன் அடிச்சதில் இருந்தே இப்படி தான் இருக்காங்க. யார்கிட்டேயும் சரியா பேசவே இல்லை. அண்ணன் கிட்டேயும் சரியா பேசுறது இல்லைபோல. பாவம்ணா அண்ணி. அண்ணனும் வீட்ல சரியா யார்கிட்டேயும் பேசுறது இல்லை ” என்றாள் கண்கள் கலங்க

வேந்தன் இப்போது இன்னும் நொந்துபோனான். இன்னும் எத்தனை இழுத்து வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டவன் தாமரையிடம் இதுகுறித்து பேசவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

மதிமாறன் அப்போது உள்ளே நுழைந்தவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்ப, வேந்தன் அவன் வண்டியில் வருவான் என்று நினைத்து அவன் பெண்களை காரில் ஏறச்சொல்லி தானும் அருகில் செல்ல வேந்தன் வேகமாக சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டான். மதி அவனை ஒருநொடி பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. பக்கத்து இருக்கையில் அமைதியாகவே சென்று அமர்ந்தான்.

பெரிதாக எந்த பேச்சும் இல்லாமல் அந்த பயணம் தொடர, கோவிலை அடைந்தனர் நால்வரும். அங்கு தாமரையின் குடும்பம் ஏற்கனவே வந்து காத்திருக்க, இவர்கள் கோவிலை அடைந்ததும் அனைவரும் சன்னதியை நோக்கி நடந்தனர். ஊரை காக்கும் அய்யனார் அங்கே அழகிய கூத்தர் என்ற பெயரில் அருள்பாலிக்க அவர் பாதத்தில் திருமண பத்திரிக்கையை வைத்து வழிபட்டவர்கள் மாப்பிள்ளை பெண்ணை அருகருகே நிறுத்தி அய்யனாரிடம் திருமணத்திற்கான உத்தரவையும் வாங்கி கொண்டு மணமக்கள் பெயரில் அர்ச்சனையை முடித்துக் கொண்டு வந்து வெளியே அமர்ந்தனர்.

கோவில் ஊரைவிட்டு சற்று தள்ளி தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்க, சுற்றிலும் கோவிலுக்கு சொந்தமான தோப்பும், வயல்களும் மட்டுமே நாலாபக்கமும். இவர்கள் கடவுளை வணங்கிவிட்டு வெளியில் வரவும் ஏற்கனவே அங்கு அன்னதானத்திற்கு கொடுத்திருக்க ஆண்கள் அங்கு சென்று நின்றனர். அன்னதானத்தை பார்வையிட.

பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தாமரை பார்த்த பத்து நிமிடங்களில் செவ்வி சரியாக இல்லை என்பதை கண்டுகொண்டவள் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தவள் இப்போது தனியாக வந்து அமரவும் அவளை பிடித்துக் கொண்டாள். மதி குழந்தையை கையில் வைத்திருக்க இவள் ஏதோ காரணம் சொல்லி செவ்வியை இழுத்து வந்தவள் அவளிடம் என்ன விஷயம் என்று துருவ ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் எத்தனை முறை கேட்டும் செவ்வி ஒன்றுமில்லை என்று சாதிக்க, தாமரை அவளை முறைத்தவள்

“நீ சொல்ற லட்சணத்துலயே தெரியுது. ஏதோ இருக்குன்னு. மரியாதையா நீயே சொல்றியா, இல்லை ஆதி அண்ணாக்கு போன் போடவா.” என்று மிரட்ட

“ஹேய் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. நீ எல்லார்கிட்டயும் சொல்லி வைக்காத.அதுவும் அண்ணன்கிட்ட வேற வினையே வேண்டாம் ” என்று பதட்டமாக கூற

” அப்போ நீ சொல்லு. என்ன விஷயம் “

“ஐயோ ஒண்ணுமே இல்ல தாமரை. நீ என்ன எதிர்பார்க்கிற என்கிட்டே, ஒண்ணுமே இல்லாத விஷயத்தை நான் என்னன்னு சொல்வேன் உன்கிட்ட “

” சரி ஒண்ணுமே இல்லைல,இதையே சக்தி ஆதி அண்ணாகிட்ட சொல்லு.நான் இப்போவே போன் போடறேன் ” எனவும்

“ஹேய் “என்று அவள் மொபைலை பிடுங்கி கொண்டவள் “சும்மா இருடி நீ வேற ” என்று சளித்துக் கொண்டவள்

” எனக்கும் அவருக்கும் கொஞ்சம் பிரச்சனை. அவர் என்கிட்ட கோவமா இருக்காரு, சரியா பேசுறது இல்ல.அதுதான் காரணம் போதுமா ” என்று கேட்க

இல்லை” என்று தலையாட்டியவள் “இன்னும் ஏதோ இருக்கு. மதி மாமா உன்கிட்ட கோவப்படறதெல்லாம் நடக்காத விஷயம்.அதுவும் பேசாம இருக்காருன்னா கண்டிப்பா உன்மேல ஏதோ தப்புன்னு தான் அர்த்தம். என்ன பண்ண நீ. என்ன நடந்தது ” என்று கேட்கவும்

” நீ டாக்டர் தான. ஏன் வக்கீலு கணக்கா கேள்வியா அடுக்குற. புருஷன் பொண்டாட்டி சண்டையை நான் என்னன்னு உன்கிட்ட சொல்வேன்.சும்மா நொச்சாத தாமரை. என்னால எதுவும் சொல்ல முடியாது.வா கல்யாண பொண்ணா லட்சணமா இருக்க பாரு,வந்திட்டா என்னை விசாரிக்க ” என்று அவளை அடக்கியவள் அவளை அழைத்துக் கொண்டு நகர்ந்துவிட

இவர்களை சாப்பிட அழைக்க வந்த வேந்தன் இவர்கள் பேசுவதை எதேச்சையாக கவனித்தவன் அப்படியே நின்றுவிட இவர்கள் இருவரும் பேசுவதை மொத்தமாக கேட்டிருந்தான் அவன். தான் செய்த மடத்தனத்தால் இவர்கள் இருவருக்குமிடையே சண்டையா ? என்று வருத்தப்பட்டவன் எப்படி இதை சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

வேந்தன் சென்று வெகுநேரமாகியும் திரும்பாமல் இருக்க மதியும்,தனாவும் அவனை தேடி வந்தவர்கள் பார்த்தது தனியே நின்று கொண்டிருந்த வேந்தனை தான். என்ன செய்து கொண்டிருக்கிறான் இவன் ? என்று நினைத்தவன் தானே சென்று அனைவரையும் சாப்பிட அழைத்து வந்தான்.

மதியழகியை விசாலம் தன்னுடன் அமர்த்திக் கொள்ள தாமரை அவரை செல்லமாக முறைக்க ” என்னடி உன் மாமியா அங்க இருக்கா பாரு.போ போ ” என்று விரட்ட

ரங்கநாயகி “அதென்ன என் மருமகளை விரட்டுற. நீ வாடா அத்தைகிட்ட அவ கிடக்கிறா ” என்று தாமரையை தன்னிடம் அழைத்துக் கொண்டார் ரங்கநாயகி. “மருமககிட்ட பாசம் பொங்குது பிள்ளை சாப்பிட்டானான்னு கூட கவனிக்கல பாரேன்” என்று வேந்தன் நொந்துகொள்ள

” ஆமா. கல்யாணத்தை நிறுத்தினாலும் கவலைப்பட மாட்டளாம். ஆனா என் அம்மாகிட்ட மட்டும் கொஞ்சிட்டு இருப்பா ” என்று கடுப்பாக மதியை யாரும் அறியாமல் முறைத்து கொண்டிருந்தான் தனா.

செவ்வி இவர்களுடன் வந்தவள் எல்லாரும் அமர்ந்துவிட பிள்ளையை வைத்துக் கொண்டு அவளும் கடைசியாக அமர்ந்தவள் இலையில் வைத்ததை பிள்ளைக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

ஏனோ இந்த இரண்டு நாட்களும் ரங்கநாயகியும் அவளிடம் சரியாக பேசாததைப்போல அவளுக்கு தோன்ற அப்படி இல்லை என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டாள். ஆனால் என்ன முயன்றும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.

இப்போதும் பிள்ளைக்கு மட்டுமே ஊட்டிக் கொண்டிருந்தவள் இதுவரை தான் ஒருவாய் கூட உண்டிருக்கவில்லை. அவள் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. ஆனால் அவள் இருந்த மனநிலையில் உணவின் ஞாபகம் அவளுக்கு வரவே இல்லை பாவம். அவளும் என்ன செய்வாள்.

இப்போதும் மதி தூரத்தில் நின்று இவளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.இவள் சாப்பிடுவாள் என்று அவனுக்கு தோன்றாததால் மனைவியின் அருகில் வந்து அமர்ந்தவன் தனக்கு ஒரு இலையை எடுத்து போட்டுக் கொண்டு பிள்ளையை தான் வாங்கி கொண்டான்.

அவனின் இந்த திடீர் செயலில் அவள் அதிர்ந்து பார்க்க “சாப்பாடு என் முகத்துலையா இருக்கு.இலையை பார்த்து சாப்பிடு” என்று அதட்டிவிட்டு பிள்ளைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டே தான் உண்ண ஆரம்பித்தான்.

தன் இலையில் இருந்த உணவை அப்படியே அவளிடம் தள்ளி வைத்தவன் அவள் சாப்பிடுகிறாளா என்று பார்க்க, அவளோ முழித்துக் கொண்டிருந்தாள். “மரியாதையா சாப்பிட்டு எழுந்துக்கோ. இல்லை மறுபடியும் வைக்க சொல்லுவேன்” என்று வேறு மிரட்ட

ஏனோ அத்தனை பேரும் தங்களையே பார்ப்பதை போல் ஒரு எண்ணம் செவ்விக்கு. ஆனால் அது உண்மையும் கூட . தாமரை ” இவரு இவகிட்ட பேசாம இருக்காராம். கதை சொல்றா ” என்று நக்கலாக அவளை பார்க்க

வேந்தன் ” ராசியாகிட்டாங்களா ரெண்டுபேரும் ” என்று பார்த்துக்கொண்டிருக்க

ரங்கநாயகியோ ” எப்படியோ ரெண்டும் பேசிக்கிட்டா சரி.” என்ற நிலைக்கே வந்திருந்தார்.

தனா தான் “இங்க பொண்ணு மாப்பிளை நாங்களா இவங்களான்னு தெரியலையே.” என்று கடுப்பில் இருந்தான். மதிமாறன் யாரையும் கண்டுகொள்ளாமல் பிள்ளைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.

செவ்வி அவன் இலையில் வைத்ததில் பாதியை முயன்று உள்ளே தள்ளி இருக்க, என்ன முயன்றும் அவளால் அதற்குமேல் உண்ண முடியவில்லை. அவனிடம் சொல்லவும் பயமாக இருந்தது. ஏற்கனவே கோபத்தில் இருக்கிறானே என்று அவள் முழித்துக் கொண்டிருக்க அனைவரும் உண்டு முடித்து எழுந்திருந்தனர்.

கஷ்டப்பட்டு அவள் மேலும் ஒருவாய் உணவை வாயில் வைத்திருக்க ஏதோ வயிற்றை புரட்டுவதுபோல் ஒரு உணர்வு. குமட்டிக் கொண்டு வர வாயை பொத்தி கொண்டு எழுந்தவள் பின்னால் கைகழுவும் இடத்திற்கு ஓடினாள். மதிமாறன் என்னவோ என்று குழந்தையை கீழே இறக்கிவிட்டு விட்டு அவனும் ஓட, குழந்தை அழ ஆரம்பித்தான்.

அனைவரும் என்னவோ என்று பதறிக் கொண்டு அவள் அருகில் செல்ல அவளோ வயிற்றில் உள்ள மொத்தத்தையும் வெளியேற்றியவள் அப்படியே அவள் கணவனின் மீதே சாய்ந்துவிட்டாள். மதிமாறன் அவளை அணைத்தவாறே பிடித்துக் கொள்ள தாமரை அவள் கைகளையும் முகத்தையும் கழுவி விட்டாள் அப்படியே நின்ற நிலையிலேயே.

அங்கிருந்த மண்டபத்தில் அவளை கிடத்த தாமரை அவளை சோதித்தவளுக்கு திருப்தியாக இருந்தது. “இவ மாமாவோட சண்டையாம்” என்று நக்கலாக நினைத்தவள் மதியை பார்க்க, ரங்கநாயகி

“மருமகளே ! என் வீட்டுக்கு வர முன்னாடியே வரம் கொடுத்திடு. நான் எதிர்பார்த்தது தானா.” என்று ஆவலாக கேட்க

“டாக்டர்க்கு என்ன பீஸ் கொடுப்பிங்க அத்தை. நல்ல செய்தி சொன்னா ” என்று அவரிடம் பேரம் பேச, அங்கிருந்தவர்களுக்கு ஓரளவுக்கு விஷயம் புரிந்தது. மதிதான் எதையும் கவனிக்காமல் செவ்வியையே பார்த்துக் கொண்டிருக்க தாமரை சொல்லவந்தது அவனுக்கு புரியவே இல்லை.

அப்போதும் ” என்ன ஆச்சு தாமரை இவளுக்கு. ரெண்டு மூணு நாளாகவே சரி இல்ல இவ. இப்போ இப்படி ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போய்டுவோமா ” என்று அவளை பேசவிடாமல் அவன் பேச

“மாமா. ஹாஸ்பிடல்க்கு போகணும் தான். ஆனா நாளைக்கு போகலாம்.அவசரமில்லை. இப்போ உங்க பொண்டாட்டியை எழுப்பி என்ன விவரம்ன்னு கேளுங்க சொல்லுவா அவளே ” என்றவள் அங்கிருந்து எழுந்து கொள்ள

வேந்தன் வேகமாக தன் அண்ணனை அணைத்துக் கொண்டான். மதிக்கு இப்போதுதான் புரிந்தது. ஆனால் தான் நடந்து கொண்டது வேதனை கொடுக்க, செவ்வியையே பார்த்திருந்தான் அவன். தாமரை  புரிந்துகொண்டவள் “அவளுக்கு ஒண்ணுமில்ல மாமா. நீங்க அள்ளி திணிச்சிங்கல. உண்ட மயக்கம் அவ்ளோதான். எழுந்திடுவா ” என்று உரைத்துவிட்டு சென்றவள் நேராக கூத்தர் சன்னதிக்கு சென்று நின்றுவிட்டாள். தன் பிள்ளையை நல்லபடியாக இந்த மண்ணுக்கு கொண்டுவந்து தருமாறு வேண்டிக்கொள்ள.

“ தோழி சுமந்தால் என்ன ? அவள் வயிற்றில் பிறந்தாலும் என் செவ்வியின் பிள்ளை என் பிள்ளைதான் ” என்று நினைத்தவள் அந்த உருவமில்லாத உயிரின் மேல் அந்த நொடியே உயிரை வைத்துவிட்டாள்.

Advertisement