Advertisement

Dear Friends,

Thanks heaps to each and everyone of you, due to lack of time in this busy weekend couldnt list the names, but will do so very soon. Now, I am extending my heartfelt thanks to each one of you. Thanks..thanks..thanks.

Vikram decides to take Annakili home.

Both try to understand each other’s circumstances.

Vikram makes up his mind to control his temper and to avoid any harsh conversations with her.

How far he can be nice towards him? When he has this quality of getting irritated with whatever related to Annakili, is this really possible?

Annakili understands the frustration he has, his feeling that he is being cornered to do nothing but accepting things. She makes up her mind not to disturb him more and do those things that would help him to be more relaxed.

But, unfortunately, whatever Annakili does, says has gone against herself when it is him. So, will her intention be a friendly companion to him will work out?

Meanwhile, what will be the reactions of Annakili’s parents? Will Vikram lay down any conditions to live with Annakili?

Whatever, he has now no option but to take her along with him to his home.

அத்தியாயம் ஐந்து :

அன்னகிளிக்கு செத்துவிட தோன்றியது சில நிமிடங்களே…… அதன் பிறகு தலையை தாங்கி குனிந்து அமர்ந்திருந்த விக்ரமை தான் பார்த்தாள்.

மனம் அவன் புறம் இருந்து நினைக்க ஆரம்பித்தது… “அவர் தான் யோசித்து சொல்கிறேன் என்று தானே என்னிடம் சொன்னார். அதற்குள் இந்த அண்ணி ஏன் இப்படி செய்துவிட்டார்கள்”, என்று அண்ணியின் மேல் கோபமாக வந்தது. 

விக்ரமை தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்….. விக்ரமிடம் ஏதாவது பேசி அவனின் கவலையை போக்கவோ பகிர்ந்து கொள்ளவோ தான் ஆசையாக இருந்தது.  ஆனால் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

மெளனமாக பார்க்க தான் முடிந்தது…. நேரம் தான் போய் கொண்டு இருந்தது…. ஒரு நர்ஸ் உள்ளே வந்து அன்னகிளியை பார்த்து போனாள்….. அதற்கு கூட விக்ரம் தலை நிமிரவில்லை.

விக்ரம் அப்படி உட்கார்ந்து இருப்பது அன்னகிளியை இன்னும் வருத்தப்படுத்தியது…. இப்படி அவன் அமைதியாக ஒரு இயலாமையோடு அமர்த்து இருப்பதற்கு, அவன் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளட்டும் என்று தான் தோன்றியது.

கிட்டத் தட்ட ஒன்றரை மணிநேரம் அப்படியே ஒரு அசைவுமில்லாமல்  அமர்ந்திருந்தான். பல முறை அவனை அழைக்க…. பேச…. என்று அன்னகிளி முயன்றாலும் அவளின் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.

ஒன்றரை மணிநேரம் ஒரு சிறு அசைவுமில்லாமல் விக்ரம் அமர்ந்திருந்த நேரம் முழுமையும் அன்னகிளி அவனை பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.

நடந்தவை நடப்பவை என்று எல்லாம் அவளுக்கு மறந்து….. ஒரு வேளை நடக்கபோவது அவளுக்கு விக்ரமுடன் ஒரு வாழ்க்கை என்றிருந்தால் விக்ரம் அவளை எப்படி வைத்துக்கொள்வானோ தெரியாது, ஆனால் அவள் விக்ரமை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதார நினைத்தாள்.   

முயன்று தைரியமாக, “ஏனுங்க”, என்று அவளின் இதழ்கள் பிரிந்து ஒலியெழுப்பிய நேரம், அது அவனின் காதுகளை சென்றடையும் முன்னர்….  அதை கேட்கவிடாமல் கதவை சற்று பலமாக திறக்கும் ஓசை கேட்டது.

அந்த சத்தத்திற்கு விக்ரமின் தலை தானாக நிமிர்ந்து கதவை பார்க்க….. அன்னகிளியும் பார்த்தாள்.

அங்கே அன்னகிளியின் அம்மாவும் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர்…… “இப்போது என்ன?”, என்பது போல சலிப்பாக விக்ரம் அவர்களை பார்க்க…….

விக்ரமின்  பார்வையை உணர்ந்தவராக முத்துசாமியும் பேச ஆரம்பித்தார்.

“அதுங்க தம்பி….. மருமக ஏதோ கோபமா பேசிடுச்சு போல……. எப்பவுமே மருமக பேச்சுக்கு பதில் பேச மாட்டா இந்த கூறு கெட்டவ…. மருமக சொல்லவும் உடனே கிளம்பி வந்துட்டா….”,

“மருமகளை மக மாதிரி பார்த்துக்கறா…. மகளை பொசுக்குன்னு விட்டுட்டு வந்துட்டா…. இவ இங்க இருக்கட்டும்…… பாப்பா கால் நல்லா ஆகட்டும்…. அவ நடக்க ஆரம்பிக்கட்டும், அப்புறம் நான் நிச்சயமா கூட்டிட்டுப் போயிடறேன்”,

“நீங்க பார்த்துக்க மாட்டீங்கன்னு இப்படி செய்யறேன்னு மட்டும் தயவு செஞ்சு நினைச்சிடாதீங்க……  காலை இப்போ ஊன முடியாது….. பாப்பாக்கு எத்தனையோ தேவைகள் இருக்கும்….. ஒரு பெண் துணை அவசியம்…. என் பொண்ணோட அம்மா உயிரோட இருக்கும் போது யாரோ ஒரு நர்சம்மா செய்யனும்ங்கறது என்னங்க தம்பி….”,

“பாப்பாக்கு தேவையிருக்கற வரை மரகதம் இருக்கட்டும்”, என்றார்.

அவரின் பேச்சு ஒரு ஜட்ஜ் பதவியில் இருக்கும் விக்ரமிற்கா புரியாது…. “உங்கக்காவை எல்லாம் பார்த்துக்கறா என் மனைவி….. என் பொண்ணை ஏன் பார்க்க கூடாது”, என்ற மறைமுக பேச்சு…..

ஆனால் அவர் சொல்வது முற்றிலும் உண்மை…. அம்மா இல்லாத குறை லதாவிற்கு மனதில் இருக்குமா இல்லையா அவளுக்கே வெளிச்சம்…. ஆனால் அம்மாவின் தேவையை உணராத வகையில் மரகதம் அவளை தாங்குவார்….

லதாவிற்கு குழந்தை பிறந்த போது ஒரு சிறு குறையும் சொல்ல முடியாதபடி பார்த்துக் கொண்டார்.

லதாவிற்கு எப்போதுமே பிடிவாதம் அதிகம்… வீட்டில் யாரும் அவளை மறுத்து பேச மாட்டர்…. கந்தசாமி கூட முடிந்தவரை விட்டுக் கொடுத்து போய்விடுவான்…..

இதெல்லாம் விக்ரம் அறிந்ததே…. இப்போது அவனால் என்ன சொல்ல முடியும்….

அமைதியாக தான் இருந்தான்….. அதையே சம்மதமாக எடுத்த முத்துசாமி…. “அப்போ நான் கிளம்பறேனுங்க தம்பி”, என்று உடனே விடை பெற்று விட்டார்.   

சற்று நிம்மதியாக இருந்தது விக்ரமிற்கு… அவன் கோர்ட்டிற்கு செல்ல வேண்டும்.. அன்னகிளியை மட்டும் தனியாக எப்படி ஹாஸ்பிடலில் விட்டு செல்வது என்ற கவலையில் இருந்தான்.

அவனின் ஒரு வார்த்தையில் வேலை செய்ய நிறைய பேர் இப்போது வருவர்….. அவனின் பதவி அப்படி…… ஆனால் அதை விக்ரம் விரும்ப மாட்டான்….. அவன் உதவி என்று ஒருவரிடம் நின்றால்…… திரும்ப அவனும் செய்ய வேண்டிய நிலைமைகள் வரும்….. அது அவனால் முடியாது.    

எப்படியோ அன்னகிளி சரியாகும் வரை அவளின் அம்மா பார்த்துக் கொள்வார் என்று நிம்மதியாக இருந்தது.

இரவு உணவிற்காக என்ன வாங்கி வர சொல்வது என்று கேட்டுக் கொண்டே விக்ரம் வெளியே போகப் போக…

“நான் வீட்ல இருந்து கொண்டு வந்துட்டேன் தம்பி”, என்றார் மரகதம்…

“சரி”, என்றபடி விக்ரம் கதவில் கையை வைக்க….. அவன் வெளியே போய்விடுவான் என்ற உந்துதல் சற்று சத்தமாகவே அன்னகிளியை பேச வைத்தது.

“நீங்க சாப்பிட்டிட்டு போங்க!”, என்று…….

அன்னகிளிக்குள் எப்போதிருந்து இவ்வளவு சத்தம் என்பது போல விக்ரம் பார்க்கும் முன்னரே……

“அம்மா! அவருக்கு வைங்கம்மா!”, என்றாள்….. அவன் மறுத்து பேச இடமே கொடுக்கவில்லை…..   

அவன் யோசிக்கும் போதே…. ஒரு தட்டில் மூன்று இட்லியை வைத்து சாம்பாரை ஊற்றி, “சாப்பிடுங்க தம்பி!”, என்று விக்ரமின் கையில் திணித்த மரகதம்…. அவன் கை கழுவி வந்து அமர்ந்து உண்ண ஆரம்பிக்கவும்……..

அவன் முன்னால் எல்லாவற்றையும் அவனே எடுத்து கொள்ளும்படி வைத்தவர்… “நான் இப்போ வந்துடறேன்!”, என்று வெளியில் வந்து அமர்ந்து கொண்டார்.  

விக்ரமிற்கும் நல்ல பசி…. அது அவன் சாப்பிடும் வேகத்திலேயே அன்னகிளிக்கு தெரிய…. அவன் மூன்று இட்லிகளோடு எழுந்துகொள்ளப் போக…. “இருங்க! இருங்க….. இன்னும் வெச்சிக்கொங்க”, என்றாள் குரலில் சிறு கட்டாயத்துடன்….

அன்னகிளியின் குரலில் உரிமை வெளிப்படுகிறதோ என்பது போல விக்ரமிற்கு தோன்ற அவளை பார்த்தான்….. அவளோ அவன் முகத்தை பார்க்க தயங்கி கனகாரியமாக விக்ரம் தட்டில் இட்லியை வைக்கிறானா இல்லையா என்பது போல அவன் தட்டையும் இட்லி பாத்திரத்தையும் பார்த்தாள்.

“எப்படி இப்படி தட்டையும் பாத்திரத்தையும் மாறி மாறி பார்த்தா….. டெலிபதி மாதிரி வியுபதின்னு ஏதாவது டெவலப் ஆகி பாத்திரத்துல இருந்து இட்லி ஜம்ப் ஆகி என் ப்ளேட்ல விழுந்துடுமா”, என்றான்  நக்கலாக

அன்னகிளியின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை பூக்க…..

அதை கண்டும் காணாதவன் போல பிகு பண்ணாமல் அவனே எடுத்து வைத்துக் கொண்டு வேண்டிய மட்டும் உண்டு அவர்களுக்கும் இருக்கிறதா என்று பார்த்தே சென்றான்.

கிட்ட தட்ட பத்து நாட்கள் ஹாஸ்பிடல் வாசம்…. ஒரு வாரத்திலேயே அன்னகிளி வாக்கரின் உதவியுடன் நடக்க ஆரம்பித்து இருந்தாள்…. ஆனாலும் சில நாட்கள் இருக்கட்டும் என்று சொல்லி அவளாக தனியாக சமாளித்துக் கொள்வாள் என்று விக்ரமிற்கு நம்பிக்கை வந்த பிறகே அவளை வீட்டிற்கு கூடிச் செல்ல முடிவெடுத்தான்.   

இந்த பத்து நாட்களாக அவளின் அப்பா, அண்ணன்கள், அண்ணி என்று யாராவது வந்தார்களா என்று தெரியாது… அவன் வரும் சமயம் அவன் கண்ணில் யாரும் படவில்லை.

மூன்று வேலையும் உணவு வீட்டில் இருந்து தான் வந்தது… அவன் வரும் சமயம் உணவு நேரமிருந்தால் அவன் உண்ணாமல் அன்னகிளியும் மரகதமும் விடமாட்டார்கள்.   

என்ன ஒன்றே ஒன்று அன்னகிளி இந்த நாட்களில் விக்ரமிடம் திட்டு வாங்கவே இல்லை. அதன் ரகசியம் ஒன்றுமில்லை…… அவன் தான் பேசவேயில்லையே.

எல்லாவற்றையும் மரகதத்திடம் தான் சொல்வான் கேட்பான். இப்போது அன்னகிளி தயக்கத்தை எல்லாம் சற்று தூர வைத்து விக்ரம் வரும்போது அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள்.

பதிலுக்கு அவனிடம் ஒரு பிரதிபலிப்பும் இருக்காது….. இருந்தாலும் அந்த புன்னகையை அன்னகிளி அவள் முகத்தில் இருந்து மறைய விடவில்லை.       

“நாளைக்கு காலையில அவளை வீட்ல கொண்டு வந்து விட்டுங்க அத்தை, இனிமே நான் பார்த்துக்கறேன்”, என்றான்.

“ம், சரிங்க தம்பி”, என்றார்.  பெண்ணை மட்டும் தனியாகவா கொண்டு போய் விடுவது சீர்வரிசைகள்……  உடனே முத்துசாமிக்கு தகவல் பறக்க…. அவர் அதையும் விட வேகமாக பறந்து வந்தார்.

எப்படியோ விக்ரம் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு கிளம்புமுன் அவனை பிடித்து விட்டார். “நாளைக்கு பாப்பாவை வீட்டுக்கு கொண்டு  வந்து விடச் சொன்னிங்களாம்  தம்பி”, என்றவர்.

“அதுங்க சீர்வரிசை எல்லாம்”, என்று அன்னகிளியின் அப்பாவாக ஆரம்பிக்க……

“ஒரே நிமிஷம் நான் அவ கிட்ட கொஞ்ச பேசிட்டு சொல்றேன்”, என்றான்.      

அன்னகிளியின் அப்பாவும் அம்மாவும் ரூமிற்கு வெளியே செல்ல….. நேராக அன்னகிளியின் அருகில் சென்று அவளின் படுக்கையில் அவளருகில் அமர்ந்தான்.

இதுவரை அவன் அப்படி அருகில் அமர்ந்தது இல்லை…. ஆனால் அவன் முகம் சற்று கடினமாக இருக்கவும்… “என்ன திட்டு விழப்போகிறதோ இல்லை அடித்து விடுவானோ”, என்பது போல ஒரு மருண்ட பார்வையால் அன்னகிளி அவனை பார்த்தாள்.

கண்மூடி ஒரு நிமிடம் அமர்ந்து தன்னை நிலைப்படுத்தினான் விக்ரம்…. அந்த ஒரு நிமிடத்தில், “என்ன வரப்போகிறதோ, தன்னை திரும்பவும் அப்பா அம்மாவுடன் அனுப்பும் முடிவை எடுத்து விட்டானோ”, என்று பயந்து விட்டாள்.

விக்ரம் கண்களை திறந்த போது அதே பயத்தோடு ஒரு பதட்டத்தோடு அவளின் ஒரு கையை மற்றொரு கையால் அழுத்தி பிடித்தபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணிவியா”, என்றான்.

“ம்!”, என்று அன்னகிளி தலையாட்டி விட்டாலும், அவளின் முகத்தில் அப்படி ஒரு பதட்டம்…..

“என்னை உன் குடும்பத்துக்கிட்ட இருந்து காப்பாத்தி விடு!”, என்றான்.

அப்போதும் அன்னகிளி புரியாமல் பார்க்கவும்…. “எப்பவும் என்னை டார்ச்சர் பண்றாங்க…. அவங்க இஷ்டத்துக்கு நான் ஆடணும்னு நினைக்கிறாங்க…… எப்பவும் என்னை கார்னர் பண்ணி எதையாவது சொல்லி என்னை ஒத்துக்க வைக்கறாங்க……”,

“எனக்கு அவங்க கிட்ட எல்லாம் தோத்துப் போகிற மாதிரி அசிங்கமா இருக்கு…. உங்கப்பா என்னை எங்கக்காவை வெச்சு கார்னர் பண்றார்….. உங்கம்மாவை கொண்டு வந்து விடும் போது என்ன சொன்னார்…… உங்கக்காவை எல்லாம் என் மனைவி பார்க்கும் போது என் பொண்ணை பார்க்க மாட்டளான்னு….”,

“எங்கக்கான்றதுனாலையா பார்த்தாங்க…. இல்லையே…… அவங்க மருமக என்றதுனால தானே பார்த்தாங்க….. இதை நான் சொன்னா சுயநலவாதிம்பாங்க…….”,

“இப்போ எனக்கு சீர் வரிசை வேண்டாம்னா…. உங்கக்கா எங்க வீட்ல அவ்வளவு வசதி வாய்ப்போட இருக்கும் போது என் பொண்ணு கஷ்டப்படணுமாம்பாங்க…. இல்லை என் பொண்ணுக்கு பார்த்து பார்த்து சேர்த்து வெச்சேன்…. எங்களுக்கு கௌரவ குறைச்சல்….. இப்படி ஏதாவது ஒன்னை சொல்லி என்னை ஒத்துக்க வைப்பாங்க…..”,

“எனக்கு அவங்களோட எந்த பொருளும் வேண்டாம் என்னால அதை உபயோகப்படுத்த முடியாது….. இப்போ சில வசதி குறைவுகள் இருக்கலாம், ஆனா நான் நல்ல வேலைல இருக்கேன், நல்ல பதவில இருக்கேன்…. இப்போ உடனே இல்லைன்னாலும்  உன்னை என்னால் எந்த கஷ்டமும் இல்லாம சௌகர்யமா வெச்சிக்க முடியும்…”,

“அதனால எதுவும் வேண்டாம் சொல்லிடு…….”,

“ஏனுங்க சீர் வேண்டாங்க”, என்று ஒரு மாதிரி தைரியமாக கேட்டுவிட்டாள்….. “எல்லார் வீட்லயும் கல்யாணம் ஆகற பொண்ணுங்களுக்கு குடுக்கறதுதானுங்களே…..”, என்றாள் தன்மையாகவே….

“அப்போ நான் இவ்வளவு சொல்லியும் உனக்கு உங்கப்பா குடுக்கறது வேணும்னு நீ நினைக்கிற”, என்று கடினமாக கேட்டபடியே கோபமாக எழப் போக….

அவன் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்…. “இல்லீங்க! அப்படியில்லீங்க! எங்கப்பா காரணம் கேட்டா எனக்கு ஏதாவது சொல்ல தோணனும் தானுங்களே, அதுக்கு தானுங்க….”,.

“எனக்கு பிடிக்காத விஷயம் இந்த மாதிரி காரணம் சொல்றது…. என்னால அது முடியாது…….. உனக்காக இந்த ஒரு தடவை இதுக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ…….”,

“நான் கல்யாணம் பண்ணும்போது என் மனைவியா வர்ற பொண்ணுகிட்ட வரதட்சணை வாங்க கூடாது……. ஏன் இந்த மாதிரி சீர்வரிசைகள் கூட வாங்க கூடாதுன்னு முடிவெடுத்திருந்தேன்… இதை சொன்னா இப்போல்லாம் பைய்தியக்காரன் மாதிரி பார்ப்பாங்க”,   

“இன்னொன்னு உன் உறவுக்காரங்க….. நம்ம கல்யாணம் நடந்தப்போ பேசின வார்த்தைகள்……. ப்ச்! எனக்கு மறக்கவோ, சரி சரின்னு போகவோ முடியாது…… உங்கண்ணன் அவன் என்னை சொல்றான் நான் பேசறேன்னு……. ஆனா என்னை நிறைய தப்பு தப்பா பேச வெச்ச பெருமை அவனை தான் சேரும்”,

“நான் உன்கிட்ட சொல்றதெல்லாம் ஒன்னு தான்…… எனக்கு வேண்டியது அமைதியான சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கை….. ஏன்னா தினமும் நான் கோர்ட் போய் இந்த மாதிரியான விஷயங்களை தான் பார்க்க போறேன்….. என் வாழ்க்கை கண்டிப்பா அமைதியா இருக்கணும்……”,

“ஆனா அதே சமயம் அந்த மாதிரி உனக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்க முடியுமான்னு எனக்கு தெரியாது… நான் கோபம் வந்தா கண்டபடி பேசுவேன்… மறுபடியும் வந்து உன்னை கொஞ்சி, கெஞ்சி சமாதனப்படுத்துவேன் இப்படி எல்லாம் என் கிட்ட எதிர் பார்க்க முடியாது…..”,

“இதெல்லாம் உனக்கு சம்மதம்னா என் வீட்டுக்கு வா…. முடியாதுன்னா இப்படியே கிளம்பி உங்கப்பா வீட்டுக்கு போயிடு….. எங்கக்காவை அவங்க புருஷன் பார்த்தா பார்கிறார் இல்லாட்டி விடறார்…. அது அவங்க குடும்பம்……”,

“இந்த மிரட்டல் எல்லாம் நம்ம கிட்ட ஆகாது…. அடுத்தவங்களுக்காக என்னால ஒரு வாழ்க்கை வாழ முடியாது, என் வாழ்க்கை என் இஷ்டப்படி தான் இருக்கும்……”,

“இப்போ அவரோட போவோம், கொஞ்சம் கொஞ்சமா நம்ம இஷ்டத்துக்கு அவரை மாத்திடலாம்னு ஒரு எண்ணத்தோட தயவு செஞ்சு என்னோட வாழ வராத……”,

“நான் நல்லவனோ, கெட்டவனோ, நான் மாற விரும்பலை புரிஞ்சதா”, என்றான்…..

“ம்”, என்று தலையாடியவள்….. ஏதோ கேட்க விரும்புவது போல தோன்ற…..

“என்ன கேட்கனும் கேளு…..”,

“எங்கண்ணன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்னை நீங்க திரும்ப அனுப்பிச்சிடுவீங்களா?”, என்றாள்.

இதுவரை அவள் பிடித்திருந்த கையை வேகமாக உருவியவன்….

“ஏண்டி ஏய், எரும மாடு, உனக்கு அறிவு இருக்குதா இல்லையா! நான் இவ்வளவு நேரம் பேசினதை நீ கவனிச்சியா இல்லையா….”, என்றான் ஆத்திரமாக….

அவள் விக்ரமின் கோபத்தை இன்னும் பயந்து போய் பார்க்கவும்…. “இதுல எங்கடி நான் உன்னை திரும்ப அனுப்பறேன்னு சொன்னேன்……”,

“அப்படின்னு சொல்லித்தானே உங்களை நான் பார்க்க வந்தனுங்க…. தெரியாம கேட்டுட்டனுங்க…”,

“என்னடி தெரியாம கேட்கற….. அன்னைக்கு என்னனா விவாகரத்து பத்தி அவ்வளவு அசால்டா பேசற…… என்ன வாழ்க்கை, கல்யாணம், விவாகரத்து எல்லாம் அவ்வளவு ஈசியா போச்சா உனக்கு…..”,

“இவ்வளவு பேசற நீ ஏன் நாலு வருஷமா வரலைன்னு கேள்வி கேட்க கூடாது…….. ஏன்னா நான் யார்கிட்டயும் காரணம் சொல்ல மாட்டேன்”,

“என்னோட ஒரு தடவை வந்துட்டன்னா அவ்வளவு தான், அதுக்கப்புறம் நீயா நினைச்சா கூட நான் போக விடமாட்டேன் யோசிச்சுக்கோ….”,

“உனக்கு யோசிக்கற அளவுக்கு மூளை இருக்கா என்ன….. கல்யாணம் ஆகிடுச்சுன்னா அவனவன் மனைவி தான் அவனுக்கு முதலிடம்……. நீ உங்கம்மா வீட்ல போய் உட்கார்ந்துகிட்டு என்ன பண்ணுவ……”,

“ஒன்னு நீ தனியாகிடுவ…….. இல்லை உங்கண்ணனுங்க உன்னை பார்த்துக்கிட்டா அவங்களை தனியாள்ளாக்கிடுவ……. நாலையும் யோசிக்க மாட்டியா…..”,     

தனக்காக யோசிக்கிறான், அன்னகிளிக்குள் சந்தோசம் பொங்கியது…. முகத்தில் புன்னகை வராமல் முயன்று பார்த்துக்கொண்டாள்.

“நாளைக்கு காலையில வரைக்கும் டைம் இருக்கு…..  நீ மட்டும் வரதானா வா! இல்லைனா கிளம்பிட்டே இரு….”,

“எனக்கு பிடிச்சு நடந்துச்சோ, பிடிக்காம நடந்துச்சோ, எனக்கு வாழ்க்கையில கல்யாணம் ஒரு தடவை தான்…… அது உன்னோட வாழ்ந்தாலும் சரி வாழலைனாலும் சரி”, என்றான்.

மனதில் பொங்கிய சந்தோசம் எல்லாம் அப்படியே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது…. அவனுடைய, “கல்யாணம் ஒரு தடவை தான்”, என்ற வார்த்தை வலியை கொடுக்க கண்களில் நீர் பொங்கியது…..

“ஏய், கண்ல தண்ணி விடாதடி…… உங்கப்பா பார்த்தாரு…… என் பொண்ணு உன்னோட வாழவே வேண்டாம்னு உன்னை கையோட கூட்டிட்டு போயிடுவாரு”, என்றான்.   

அவசரமாக கண்களை அவள் துடைக்க…… 

“எவ்வளவு பொறுமையா சொல்றேன் புரிஞ்சு நடந்துக்கோ…. ஏதாவது சீர் வரிசை அது இதுன்னு வந்தது உன்னை தொலைச்சிடுவேன்… முதல்ல என் கோபத்தை கிளப்பாம இருக்க கத்துக்கோ”, என்று சொல்லி வெளியே சென்றுவிட்டான்.

வெளியே அவனுக்காக காத்து நின்ற முத்துசாமியிடமும், மரகதத்திடமும், “அவ சொல்லுவா”, என்று சென்று விட்டான்.

“ஏன் மரகதம்? இந்த தம்பி என்ன நம்ம பாப்பா பேர் கூட சொல்ல மாட்டேங்கராறு, அவ இவன்னு தான் சொல்ராறு…. பாப்பாவை அவகிட்ட வாடி போடின்னு என்னவோ பேசட்டும், அது புருஷன் பொஞ்சாதிகுள்ள. ஆனா அடுத்தவங்க கிட்ட பேசும்போது மரியாதையா பேச வேண்டாமா…..”,

“எப்படி நாம பாப்பாவை அனுப்பறது….”,

“நீங்க ஏதாவது அவசரப்பட்டு ஆரம்பிக்காதீங்க…. அந்த தம்பி எப்படியோ என் பொண்ணு எந்த பிரச்சனையும் வராம பொழைச்சிகுவா….. இன்னமும் அதை இதைன்னு பேசி மறுபடியும் அந்த தம்பியை போகற மாதிரி வெச்சிடாதீங்க….”,

“அவரு என்ன சொல்றாரோ அப்படியே செய்ங்க…… நீங்க எந்த பிரச்சனையையும் கிளப்பாதீங்க………”, என்று சொல்லியபடி முத்துசாமியை உள்ளே கூட்டி வந்தார்.

“என்ன பாப்பா சொன்னார்!”, என்று அப்பா கேட்கவும்…

“எதுவும் வேண்டாம் நீ மட்டும் வந்தா போதும்னு சொல்றாருங்கப்பா!”,

“ஏன் என் பொண்ணுக்கு சீர்வரிசை செய்ய கூட நான் வக்கில்லாதவனா என்ன?”, என்று எடுத்த வார்த்தைக்கு முத்துசாமி கோபப்பட….

“அப்பா கோபப்படாதீங்க….”,

“நான் ஒரு நாள் அவர் வீட்ல போய் தங்கினேன் பாப்பா! அங்க எந்த சாமானமும் இல்லை…….. அட வசதி வாய்ப்பை விடு…. சமைச்சு சாப்பிடவாவது சாமான் வேண்டாமா……”,

“இவ்வளவு நாளா தனியா இருந்திருக்கார்……. அங்க வீட்ல ஒன்னுமே இல்லை பாப்பா… ஏம்மா நீ எனக்கு ஒரே பொண்ணு! உன்னை எப்படிம்மா அப்படியே அனுப்ப முடியும்! ஊர்ல நாலு பேர் என்னை என்ன சொல்வான்….. என் கௌரவம் என்ன ஆகறது… “,   

“அப்பா ஒரு விஷேஷதுக்கு தலையில இருந்து கால் வரை நான் நகை நட்டுன்னு பூட்டிகிட்டு வர்றது எனக்கும் உங்களுக்கும் கௌரவமுங்களா….. இல்லை அவரோட நான் வர்றது கௌரவமுங்களா….”,

“ரெண்டுல ஏதோ ஒன்னு தான் நடக்கும்…. எதுன்னு நீங்களே முடிவு பண்ணுங்க…”, 

இப்படி சொல்லும் போது முத்துசாமி என்ன சொல்வார்….

“அப்பா இனிமே நீங்க இந்த விஷயமா எதுவும் அவர் கிட்ட பேச கூடாது….. எதுன்னாலும் என்கிட்டே சொல்லுங்க நான் கேட்டு சொல்றேன்…. அண்ணியை மத்தியமா வெச்சு அவர்கிட்ட பேசாதீங்க…..”, 

“நீங்க அவரை கோபப்படுத்தினா அதெல்லாம் என்கிட்டே தான் காட்டுவாருங்கப்பா. அவர் எப்படியோ அப்படியே விட்ருங்கப்பா…. யாரும் குறை சொல்ல முடியாத நல்ல நிலைமையில தானே இருக்காரு, வேற என்னங்கப்பா உங்களுக்கு வேணும்…”,

“அண்ணனுங்க ஒத்துக்க மாட்டாங்க பாப்பா!”,

“நீங்க கொண்டு போய் விடும்போது தானே இவ்வளவு பிரச்சனை! நீங்க யாரும் வரவேணாம், நானே போய்க்கறேன்னுங்க…”,  

அதன் பிறகு முத்துசாமியோ மரகதமோ எதுவும் பேசவில்லை…

தகவல் தெரிந்த இரு அண்ணன்மார்களும் குதிக்க…… முத்துசாமி அவர்களை அடக்கினார். 

காலையில் அன்னகிளியை விக்ரமின் வீட்டில் கொண்டு  போய் விட்ட சமயம்….. விக்ரம் கோர்ட்டுக்கு கிளம்பும் நேரம் ஆகிவிட… அவன் கிளம்பிவிட்டான்.

வீட்டில் ஒன்றுமில்லை….. நான்கு சேர்கள்….. அரசு வழங்கிய ஒரு டீ வீ……. சமையலைறையை பார்க்க அங்கே ஒரு கேன் வாட்டர் மட்டுமே…… டீ வாங்கி வர ஒரு பிளாஸ்க்….. பின்பு அறைகளை சுற்றி பார்க்க…… ஒரு அறையில் மெத்தை மட்டுமே இருந்தது, இங்கே வந்து புதிதாக வாங்கியிருப்பான் போல அதை…… அதுவும் கீழே தான் போடப்பட்டிருந்தது.

ஒரு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜின் வீடா இது… யாராவது வீட்டிற்கு வந்து இவனின் வீட்டை பார்த்தால் இவன் என்ன கிறுக்கனா என்று நினைக்க மாட்டார்கள் என்று தான் தோன்றியது.

என்ன கருமம் பிடித்த பிடிவாதமோ, கொள்கைகளோ என்று எரிச்சலாக வந்தது அன்னகிளியின் பெற்றோருக்கு….  

“எப்படிங்க பாப்பா இங்க இருப்பீங்க….”, என்று கவலையாக மரகதம் கேட்க….  

“அம்மா விட்டுட்டீங்க தானே கிளம்புங்க! இதை பார்த்து பார்த்து கவலை தான் படுவீங்க… நான் பார்த்துக்கறேன்……!”,

“தனியா எப்படி இருப்ப பாப்பா….. இன்னும் இந்த வாக்கரை பிடிச்சு தானே நடக்கற… அவரு யாரும் ஆளை கூட ஏற்பாடு பண்ணாம கூட போயிட்டாரு….”,

“அம்மா எனக்கு யாரும் கூட வேண்டாம்…. யாரோடயும் என்னால பேச்சுக் குடுக்க முடியாது, வெளில தான் செக்யூரிட்டி இருக்காங்க இல்லை…… நீங்க கிளம்புங்க”, என்று பிடிவாதமாக அன்னகிளி அன்னையையும் தந்தையையும் அனுப்பி வைத்தாள்.

அனுப்பும் முன்னர், “இங்க வீட்ல என்ன இருக்கு, இல்லை, யார்கிட்டயும் சொல்ல கூடாது, சின்ன அண்ணனை இங்க வர விட்டுடாதீங்க”, என்று சொல்லி அனுப்பவும் மறக்கவில்லை.

கதவை சாத்தி, கால்களில் அதிகமாக வெயிட் கொடுக்காமல், வால்கரின் உதவியுடன் நடந்து அங்கிருந்த சேரில் அமர்ந்த போது உடம்பு தானாகவே தளர்ந்தது.

வீட்டின் வெறுமையும், விக்ரமோடான வாழ்க்கையும் அன்னகிளியை வெகுவாக அச்சுறுத்தியது.  

Advertisement