Advertisement

Hai Friends,

what to say…… to say a single word like thanks will be very less 

 i know that but i dont have any other word than that

THANKS THANKS THANKS 

thankyou for the wonderful support what you have given me for veezhvaenendru ninaiththaayo 

but one small request 

dont have an extra ordinary expectation and go into this story 

this may be special or may not be special even i am not aware 

because story will have turns according to my thought process the one which i dont have a control 

have a read and eagerly waiting to know from you all

கணபதியே அருள்வாய்

              கனவே ! கை சேருமா ?

அத்தியாயம் ஒன்று:

சென்னையில் அந்த உயர்தர ஹோட்டலின் பாரில் ஆங்காங்கே ஒற்றையாய் ஆட்கள் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்க….. சிலர் நண்பர்களோடு அமர்ந்திருக்க….

தன் ஐந்து நண்பர்களுக்கு டிரிங்க்ஸ் பார்ட்டியினை கொடுத்துக் கொண்டிருக்கும் விக்ரம் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.

இந்த மாதிரி ஒரு பார்ட்டி இனி கொடுக்க முடியுமா? இல்லை இந்த மாதிரி ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள முடியுமா?.. என்பது சந்தேகமே…

ஏனென்றால் அவன் பார்ட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் காரணம் அப்படி….

அவனே எதிர்பாராத வெற்றி…. முப்பது வயதான புத்திசாலியான இளைஞன்…. அந்த வெற்றி அவனுக்கு நியாயமாய் கிடைத்த ஒன்று தான் என்றாலும் இது எல்லோருக்கும் இந்த வயதில் கிடைத்து விடுவது அல்ல…..

அவன் அவனுடைய வெற்றின் உற்சாகத்தில் அமர்ந்திருக்க…… சிறிது நேரம் அதை பற்றிய பேசிய நண்பர்கள்… பின்பு வேறு பேச ஆரம்பித்தனர்…..

விக்ரம் ராவாகவே நிறைய உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்…. “போதும் ப்ரோ!”, என்று அவனின் நண்பன் தாமஸ் சொல்ல….

“விடுடா! இனிமே சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ! கெத்து மெயின்டையின் பண்ணனும், no way for these activites”, என்று சொல்லி உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான்.

“அப்போ நீ குடிக்கறதை விட்டுடப் போற”,

“நான் எப்போ அப்படி சொன்னேன்! இந்த மாதிரி ஃபிரண்ட்ஸ் கூட பார்ல உட்கார்ந்து குடிக்கறது முடியாத விஷயம்”, என்றான்.

“டேய் போதுண்டா!”, என்று மீண்டும் நண்பர்கள் வற்புறுத்த…..

“பேர்லயே ரம் வெச்சிருக்கேன்! அதை சாப்பிடாதன்னா எப்படி? எத்தனை பெக் போனாலும் நான் ஸ்டெடிடா”, என்று நக்கலடித்துக்கொண்டே உள்ளே தள்ளினான்.

சொன்னாலும் கேட்க மாட்டான் என்று புரிந்த நண்பர்கள்…..

“மிக்ஸ் பண்ணியாவது குடிடா!”, என்றனர்…

“அதெல்லாம் எனக்கு குடிச்ச மாதிரி இருக்காது…. என்ன குடிச்சாலும் விக்ரம் ஸ்டெடிடா”, என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

“என்ன பெரிய ஸ்டெடி! நீ குடிச்சா என்ன பேசறேன்னு தெரியாது!”,

“என்ன தெரியாம பேசிட்டேன்…. சொல்லு பார்ப்போம்”,

“ம்! போன தடவை நம்ம பார்ட்டி பண்ணினப்போ என்னோட கேர்ள் ஃபிரண்ட் ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தேன்……. நீ என்ன பேசினியோ அது எஸ்கேப் ஆகிடுச்சு! அதுக்கப்புறம் என் போன் கூட எடுக்க மாட்டேங்குது! எவ்வளவு கஷ்டப்பட்டு அதை பிக் அப் பண்ணினேன் தெரியுமா!”, என்றான் நிறைய வருத்தத்தோடு ஒரு நண்பன்.

அவனை முறைத்தான் விக்ரம்….. “ஏண்டா டேய்! முப்பது வயசுல கேர்ள் ஃபிரண்ட்ஸ் வெச்சது தப்பு… அதை விட பொண்டாட்டி வீட்ல இருக்கும் போது வெச்சது இன்னும் தப்பு… இதுல என்னை சொல்றியா நீ.. ஏண்டா சொல்ல மாட்ட…….. உன் பொண்டாட்டிக்கு  எல்லாம் தெரியாம தானே நடக்குது….. ஒரு நாள் சொல்றேன் பாரு”, என்று சொல்லவும்……

பதறினான் நண்பன், “தெரியாம சொல்லிட்டேன்! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்”, என்று சமாதான உடன் படிக்கைக்கு வந்தவன்….

“ஆமா என்ன சொன்ன? என் போனை கூட எடுக்க மாட்டேங்கறா…”,

“ம்! அவசியம் தெரியனுமா!”,

“ம்!”, என்றான் பாவம் போல…

“எங்கடா பார்ட்டிக்கு போனோம்….”,

“நம்ம புது நைட் க்ளப்க்கு”,

“அங்க ஒரு பொண்ணும் பையனும் டான்ஸ் பண்ணினாங்களா…..”, என்று கதை போல சொல்ல ஆரம்பித்தான்…. “அந்த டான்ஸ் பண்ணின பொண்ணு கடைசியா டிரஸ் எல்லாம் கழட்டிடே வந்துச்சா….. இவ வந்து என்கிட்டே கேட்கறா அந்த பையன் ஏன் கழட்டலைன்னு……”,

“ஒஹ்!”, என்று ஆர்ப்பரித்து நண்பர்கள் சிரிக்க……

“என்னடா சொன்ன?”, என்று கேள்வி கேட்ட நண்பனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது… அசட்டு சிரிப்பு சிரிக்க….

“எல்லோருக்கும் இருக்கறது தான் இருக்கும்….. நீ இதுவரைக்கும் பார்த்ததில்லையான்னு கேட்டேன்!”, என்று விக்ரம் சொல்லவும் இன்னும் அதிகமாக சிரித்தனர் நண்பர்கள்.

“it was just a joke…… i was jovial to you…… how can you speak like this to me ஆச்சா போச்சான்னு குதிச்சா… why don’t you try this with somebody else ன்னேன் போயிட்டா”,

“நீ பேசினது தப்பு தானே!”, என்று தாமஸ் சொல்ல…

“தோ பாரு! நானா போய் பேசினேன்! அவ கேட்டா? எனக்கு என்ன தோணிச்சோ சொன்னேன்!”, என்று அலட்சியமாக தோளைக் குளிக்கினான்.

“சும்மாவே அவன் கிட்ட யாராவது மாட்டினா கடிச்சு குதறுவான்! இதுல அதுவா வந்து வில்லங்கமா வேற பேசி மாட்டியிருக்கு”, என்று நண்பன் ஒரு சிரிக்க……

இன்னொரு நண்பன், “டேய்! அவளுக்கு உன்னை அப்படி பார்க்கனுமோ என்னவோ…. அதான் ரெடியா இருக்கற என்னை விட்டுட்டு உன்கிட்ட கேட்டிருக்கா”, என்று நக்கலாக கேட்க…

“இப்போ நீ அடிவாங்காம போக மாட்ட!”, என்றான் விக்ரம்.

“இனிமே இப்படி பேசறதை, கை வைக்கறதை எல்லாம் விட்டுடு.. எப்படியும் உன்னை பத்தி விஜிலென்ஸ் ரிப்போர்ட் போயிருக்கும், எந்த பிரச்சனையும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் ஆர்டர் வந்துருக்கும்! அடக்கி வாசிடா!”, என்றனர்.

“எல்லாம் நான் பார்த்துக்கறேன்! இப்போ எவன் என்னை பத்திரமா என்னோட ரூம் கொண்டு போய் விடறது!”, என்று கேட்க…….

“நான் விடறேண்டா”, என்று எழுந்தான் தாமஸ்…..

அவன் பைக்கை எடுக்க பின்னால் அமர்ந்தான் விக்ரம்……

“டேய்! விழுந்துட மாட்டியே!”, என்று பல முறை கேட்டு அவனின் பத்திரத்தை உறுதி செய்ய….

“விழற மாதிரி இருந்தா சொல்றேன்! நீ நிறுத்திடுவியாம்! இப்போ போடா!”, என்றான் கோபமாக……

வண்டியை ஒட்டிக்கொண்டே, “இந்த குடியும், கோபமும், கோபம் வந்தா பேசற வார்த்தைகளும் இல்லைனா உன்னை மாதிரி ஒரு நல்லவனை பார்க்கவேமுடியாது! இது ரெண்டையும் விடேண்டா”, என்று நண்பன் என்ற முறையில் தாமஸ் அக்கறையாக சொல்ல…..

“இப்படி நல்லவனா இருந்து என்ன பண்ண போறேன்? நான், நானா இருந்தா போதும்…. எவனுக்கும் நல்லவன் ஆகணும்ன்ற அவசியமில்லை…… என் வாழ்க்கையை என் இஷ்டப்படி எனக்காக வாழறேன்! இதுல அடுத்தவன் கிட்ட நல்லவன்னு பேர் எடுத்து என்ன பண்ண போறேன்!”, என்று பேச…..

“இப்படி விதண்டாவதாம் பேசாத….. இனிமே நீ இருக்க போற போஸ்ட்க்கு அழகில்லை….. பார்த்து நடந்துக்கோ”, என்றான்.

“டேய்! இன்னொரு தடவை அட்வைஸ் பண்ணின! வண்டில இருந்து உன்னை தள்ளி விட்டுடுவேன் இல்லை நான் குதிச்சிடுவேன்”, என்று கத்தினான்.

அதன் பிறகு தாமஸ் வாயை மூடிக் கொண்டான், வாயை திறக்கவேயில்லை……

அவன் ரூம் வந்ததும் தாமஸ் டூ வீலரை நிறுத்தும் போதே…. “தாமஸ்! விழப் போறேன்   பிடி!”, என்றான் விக்ரம் குளறலாக….

“ஐயோ! இம்சைடா இவனோட!”, என்று தாமஸ் வண்டியை நிறுத்தும் முன்பே சரிந்து விடாமல் தாமசை பற்ற…….

வண்டியை கீழே விட்டு…… எப்படியோ திரும்பி, விக்ரமை பிடித்தவன், “இவ்வளவு நேரம் ஸ்டெடி ஸ்டெடின்னு சொல்லிட்டு இப்ப ஏண்டா இப்படி பண்ற”, என்று சலித்துக் கொண்டே ஒரு வழியாக அவனின் ரூம் கதவை திறந்து அவனை படுக்கையில் விட்டான் தாமஸ்.

அவன் எழுந்து கதவை தாழ் போடும் நிலையில் இல்லை என்று தெரிந்தவுடனே, அவனை அப்படியே விட்டுப் போக மனமில்லாமல், தன் மனைவிக்கு ஒரு மெசஜ் அனுப்பிவிட்டு அவனும் அங்கேயே கீழே ஒரு போர்வையை விரித்து உறங்கினான்.

காலையில் தாமஸ் எழும் போது விக்ரம் எழுந்து குளித்து முடித்து நெற்றியில் திருநீற்றுடன் ஃபிரெஷாகா அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். நேரத்தை பார்த்தால் மணி ஏழு என்றது.. இவன் தான் இரவு அந்த கலாட்டா செய்தவன் என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்…… விட்டால் “ஏம்பா நல்ல பையனை தப்பா பேசற!”, என்று சொல்பவரை தான் குறை சொல்வார்கள்.

ஆனால் அதற்கு அவசியமே இராது…. “நான் அப்படித்தான்!”, என்று தைரியமாக அவனே சொல்லுவான். எதையும் மறைக்க மாட்டான், நான் இப்படித்தான் என்ற பிடிவாதம் மிக அதிகம் உள்ளவன்…….

பல வருட பழக்கம் அவனிற்கும் தாமசிற்கும்…….. இருவரும் ஒரே படிப்பு தான், ஆனால் நண்பர்கள் ஆனதென்னவோ மூன்றாவது வருடத்தில் தான்…. அப்படி சட்டென்று விக்ரம் யாரிடமும் நட்பு பாராட்டி விட மாட்டான்.

இன்னமும் தாமஸால் கூட விக்ரம் என்ன செய்வான் என்பதை கணிக்க முடியாது…..

பேப்பரில் இருந்து தலையை எடுத்த விக்ரம், “டீ சொல்லட்டுமாடா”, என்றான்.

“நீ சாப்பிட்டியா?”,

“எனக்கு டீ குடிக்கலைன்னா காலைல ஒன்னுமே ஓடாது! வாக்கிங் போனப்போவே குடிச்சிட்டேன்!”,

“ஆமாம்! காலைல டீ பெருமை! மாலைல சரக்கு பெருமை!”, என்று நொடித்த தாமஸ்…

“எப்படிடா? நீ அடிச்சதுல பாதி சரக்கு கூட நான் அடிக்கலை! உன்னை ராத்திரி பத்திரமா கொண்டு வந்து சேர்த்த எனக்கு இன்னும் மப்பு தெளியலை! நீ இப்படி தெளிவா இருக்க….”, என்றவன்…..

“நான் வீட்டுக்கு போறேன்! அங்கேயே போய் டீ குடிச்சிக்கறேன்! சாயந்தரமா வீட்டுக்கு வந்து ஒரு அட்டென்டன்சை போட்டு, நைட் நான் உன் ரூம்ல தான் இருந்தேன்னு ஒரு கன்ஃபார்மேஷன் குடுத்துடுடா”, என்று சொல்லி தாமஸ் கிளம்ப…..

“நைட் நான் கிளம்பறேன்!”, என்றான் விக்ரம்…..

“மறந்துட்டேன்! எல்லா திங்க்சும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடு! அங்கேயே போட்டுடு! அப்புறம் நீ அங்க போய் செட்டில் ஆனதுக்கப்புறம் நான் பார்சல் சர்விஸ் போடறேன்”, என்றான் நண்பனாக.

“ஆமாம்! என்ன இருக்கு என்கிட்டே? நீ பார்சல் சர்விஸ் போடற அளவுக்கு… அந்த கட்டில், மெத்தை, ரெண்டு சேர், ஒரு வுட்டன் அலமாரி மட்டும் தான்…..  அதை நான் எனக்கு டீ கொண்டு வர்ற பையன்கிட்ட எடுத்துக்க சொல்லிட்டேன்….. டூ வீலர் இங்க இருக்கட்டும்! நீ யூஸ் பண்ணு! தேவைன்னா சொல்றேன்! அனுப்பிவிடு!”, என்றான்.

“அங்கயே சாப்பிட்டிடு, அப்புறம் நானே கொண்டு போய் ட்ரெயின் ஏத்திவிடறேன்! வீட்டுக்கு வந்துடு”, என்று சொல்லி விக்ரமின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினான் தாமஸ்…….

நின்று இரண்டு வார்த்தை பேசினால் கூட, “வரவில்லை! நான் போய் கொள்கிறேன்!”, என்று பேச்சை சட்டென்று விக்ரம் முடித்து விடுவான் என்று தெரியும். அதன் பொருட்டே தாமஸ் இந்த ஓட்டம்…..

மாலை தாமஸின் வீட்டிற்கு போய் அவன் குடும்பத்தினரோடு ஒரு மணிநேரம் செலவழித்து அங்கேயே உணவு உண்டு….. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து தாமஸ் ரயில் ஏற்றிவிட…… விக்ரம் அதிகாலை கோயம்புத்தூர் வந்து இறங்கினான்.

இரவு முழுவதும் ஓரளவிற்கு தன்னை தயார் படுத்தினான்….. புதிய பதவி…. அவன் வயதிற்கு உயர்ந்த பதவி…… அதில் சிறப்பாக செயல் பட வேண்டும்…. சிறு அவப் பெயரும் வருவதற்கு இடம் கொடுக்க கூடாது…. இப்படி பணியைப் பற்றிய நினைவுகளிலேயே இருந்தான்.

பணியில் சேர்ந்த பிறகும் அந்த நினைவே….. அவனால் முடிந்தவரை சிறப்பாக செயலாற்ற முனைந்தான்… ஏனென்றால் அவன் சரி என்று நினைக்கும் எண்ணங்கள் செயலாக்கம் பெரும் போது…… பலருடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும்…

தன்னால் எதுவும் தவறாக போய் விடக் கூடாது, பிறழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.

ஆனால் இது எல்லாம் அவன் பணியில் மட்டுமே சொந்த வாழ்கையில் அவன் எப்படி என்று அவன் யோசிக்க முயற்சிக்கவேயில்லை.

கோயம்பத்தூர் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது……

அன்றும் அப்படித்தான் பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான்…. கோயம்பதூர் மாநகராட்சியின் சாலைகளை பார்வையிட்டுக் கொண்டு வந்தான்… நான்கு வருடங்களுக்கு முன்பு அவன் இங்கே வந்த போது இருந்ததற்கும் இப்போதைக்கும் நன்கு வித்தியாசம் தெரிந்தது.

அது பள்ளி கல்லூரி விடும் நேரமென்பதால் சற்று ட்ராபிக் அதிகமாக இருக்க… அவனுடைய காரோட்டி அவசரப்படாமல் மெதுவாக தான் காரை ஓட்டினார்.

பார்வையை ஓட்டிக்கொண்டே வந்தான் பேருந்து நிறுத்தத்தில்… அரசுப் பள்ளி அருகில் பேருந்து சரியான இடத்தில் நிற்காமல் தள்ளி நின்றது.

இவன் கார் பின்னால் நின்றதால் இவனுக்கு நடப்பவை நன்றாக தெரிந்தது……. அரசுப் பேருந்து நிறுத்தத்தை விட்டு தள்ளி நிற்கவும்… சிறுவர்கள் ஓடி பேருந்தில் ஏறினர்… சற்று நேரம் ஒரு தள்ளு முள்ளு நிகழ்ந்தது……

ஒருவாறு பாதி சிறுவர்கள் ஏறவும் பேருந்து நகர ஆரம்பித்துவிட……. மீதி சிறுவர்கள் சலிப்புடன் திரும்ப வந்து நின்றனர். இதற்க்கு அதிக கூட்டம் கூட இல்லை பேருந்தில்.

அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மேல் கோபமாக வந்தது. அந்த பஸ் நம்பரை நோட் செய்தான்.

பின்பும் ட்ராபிக்கின் காரணமாக கார் ஊர்ந்து தான் சென்றது….. பார்வையை ஓட்டிக்கொண்டே வந்தான் விக்ரம்…….

ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையை கடக்கும் போது அதற்கு வெளியில் நின்றிருந்தவர்களை பார்த்தவன் அவர்களை கிரகிக்கும் முன் கார் அவர்களை கடந்திருக்க……

“ஓரமா ஸ்லோ பண்ணுங்க!”, என்று டிரைவரிடம் சொல்லி திரும்பி பார்த்தான்….

கொஞ்சம் கூட்டமாக இருந்தது… இரு கார்கள் மோதிக் கொண்டது போல வாக்குவாதம் நடப்பது போல தூர இருந்து தெரிந்தது.

முன்புறம் டிரைவருடன் ஒரு ஆயுதம் ஏந்திய போலிஸ் இருந்தாலும்… அவரை அனுப்பாமல்…  “என்னன்னு விவரமா பார்த்துட்டு வாங்க!”, என்று டிரைவரிடம் சொல்லி அனுப்பினான்.

அவர் போய் பார்த்துவிட்டு வந்தவர்….. “சார்! ஒரு கார் கேட்க்கு வெளில வந்திருக்கு ஒன்னு உள்ள நுழைஞ்சிருக்கு, செக்யூரிட்டி ஏதோ கவனிக்காம விட்டுடான் போல ரெண்டும் மோதிகிச்சு… ரொம்ப இல்லை, ஆனா ரெண்டு காருக்குமே கொஞ்சம் டேமேஜ்…..”,

“அதுல வார்த்தை முத்தி சண்டை போட்டுக்கறாங்க….. இதுக்கு ஒரு கார்ல மூணுப் பேரும் லேடீஸ் போல… அந்த டிரைவர் வாயாடறான், இருந்தாலும் இவங்க திகைச்சு போய் நிக்கறாங்க! எதிர்ல இருக்குறவன் ரொம்ப பேசறான்!”, என்று அவர் சொல்லவும்…..

போவோமா? வேண்டாமா? என்று மனதிற்குள் சிறு பட்டிமன்றம் சில நொடிகளிலேயே நடத்தி முடித்து அந்த சில நொடிகளில் அந்த இடத்தையும் அடைந்திருந்தான், அந்த ஆயுதம் ஏந்திய போலிஸ்காரரை காரிலேயே இருக்கும் படி பணித்து…

அப்போதும் அவன் சென்ற பிறகு சில அடி இடைவெளி விட்டு யாரோ போல போலிசும் டிரைவரும் நின்று கொண்டனர்.

அங்கே தடுமாறியபடி இரு பெண்கள் மற்றும் ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டிருந்தனர்… இவனை கவனிக்கவில்லை. அவர்களின் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன், எதிரில் இருந்தவனிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.

“தப்பு உங்க மேல தான் சார்! நான் செக்யூரிட்டிகிட்ட சொல்லி சிக்னல் போட்டுக்கிட்டு தான் வந்தான்… நீங்க தான் செக்யூரிட்டி கை காட்டினதை பார்க்காம வந்துடீங்க”, என்று சொல்ல…..

“என்னடா திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ற…. என்னோடது எவ்வளவு காஸ்ட்லி கார் தெரியுமா? டேமேஜ்க்கு பணம் எடுத்து வைக்காம அசைய விட மாட்டேன்!”, என்றான் எதிரில் இருந்தவன்…….

பார்த்தாலே அவன் செல்வ செழிப்பு நன்றாக தெரிந்தது….. அதன் திமிர் அவன் பேச்சில் தெரிந்தது.

“அதான் இன்சுரன்ஸ் இருக்குமே சார்!”, என்றான் அந்த டிரைவர்.

“அதெல்லாம் நீ பேசாத!”, என்று எதிரில் இருந்தவன் குதித்தான்.

“சார்! எதுனாலும் நான் இருக்கேன்……. கார் கூட இங்க இருக்கட்டும்! இவங்களை வேற வண்டி வெச்சி வீட்டுக்கு அனுப்பிட்டு எங்க ஐயாவை வர சொல்றேன்!”, என்றான் அந்த டிரைவர் பணிவாகவே.

“உன்னையும் இந்த ஓட்டை காரையும் வெச்சிட்டு நான் என்ன பண்றது….. நீங்க ரெண்டு பேரும் இந்த டேமேஜ்க்கு ஈக்வல் ஆக மாட்டீங்க…. பணம் வெச்சா தான் அந்த லேடீசை விடுவேன்”, என்றான் எதிரில் இருந்தவன்….

அதிலும் ஒருத்தி கர்ப்பிணி! உடல் நிலையை பரிசோதிக்க தான் அவர்கள் வந்திருக்க வேண்டும் என்று கணித்தான்.

முன்பிருந்த விக்ரமாய் இருந்தால் எதிரில் இருந்தவனின் காரை இன்னும் கொஞ்சம் சேதப்படுத்திய பிறகு தான் பேச்சையே ஆரம்பித்திருப்பான்….. இப்போது பதவி, அதன் மரியாதை தடுக்க…   நடுநிலையாய் பேச ஆரம்பித்தான்…

“எதுவா இருந்தாலும் டிரைவர் தான் ஓனரை வர சொல்றேன்னு சொல்றாங்களே! இந்த லேடீஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிடலாமே!”, என்றான்.

அவனின் உடை கொடுத்த தோரணை எதிரில் இருந்தவனுக்கு அவனை ஒரு வக்கீலாய் அடையாளம் காட்ட……

“உங்க வேலையை பாருங்க! உங்களை யாரும் இங்க பஞ்சாயத்து பண்ண கூப்பிடலை!”, என்றான் எதிரில் இருந்தவன் அலட்சியமாக குரலை உயர்த்தி.

அவன் பேசவும் தான் அவனின் புறம் பார்வையை திருப்பினர் அந்த பெண்கள்….. பார்த்த மூவருக்குமே பயங்கர திகைப்பு…. அது அவர்களின் முகத்திலும் நன்கு பிரதிபலித்தது…

மூவருமே சமைந்து நின்றுவிட்டனர்.

“நான் பஞ்சாயத்து பண்ணாம வேற யார் பஞ்சாயத்து பண்ணுவா?”, என்று அவன் கையைக் கட்டி இன்னும் தோரணையாக நிற்க….

“வக்கீல்ன்னா பெரிய ஆளா? நான் ஒரு போன் போட்டா போதும் சிட்டி கமிஷனர் இங்க நிற்பார்”, என்று அவன் ஹோதா காட்ட…..

கையைக் கட்டி நின்றவன், இன்னும் ஸ்திரமாய் கால்களை தரையில் ஊன்றி, வாயை  மட்டுமே அசைத்து, “கூப்பிடு!”, என்றான்.

நின்ற தோரணை எதிரில் இருந்தவனுக்கு இவன் பெரிய ஆளாய் இருப்பானோ என்ற சந்தேகத்தை கொடுத்தாலும்… “இந்த வக்கீலுங்க எல்லாம் இந்த பில்ட் அப் தான் கொடுப்பாங்க”, என்று மனதில் நினைத்தவனாய்…

“என்ன நீ வக்கீல்ன்னு நான் பிரச்சனை பண்ணாம நகர்ந்துடுவேன்னு நினைச்சியா?”, என்று அவன் யாருக்கோ தொலைபேசியில் அழைத்தான்.

அந்த பெண்களுக்குமே விக்ரமின் தோரணை ஆச்சர்யத்தை கொடுத்தது…. கர்ப்பிணி பெண் அவனை விழிஎடுக்காமல் பார்க்க… இன்னொரு பெண் அவனை பார்ப்பதும் பார்வையை தழைப்பதுமாய் இருந்தாள். அந்த முதிய பெண்மணி அவன் தானா என்று உறுதிப் படுத்துவது போல பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் தலையை அசைத்து அந்த மூவருள் இருந்த அவனை பார்ப்பதா வேண்டாமா என்பது போல பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை அருகழைத்தான்.

அவள் மிரட்சியோடு பார்க்க… “வா!”, என்றான். அவனே சற்று உயரமானவன் தான் வந்த பெண் அவனுக்கு சற்றே உயரம் குறைவு… அந்த உயரத்திற்கு ஏற்ற உடல் வாகு…. குண்டு என்று சொல்லும்படி இல்லாவிட்டாலும்… பெண்களுக்குள் ஒரு வாட்ட சாட்டமான தோற்றத்துடன் இருந்தாள்.

அவள் தயங்கி தயங்கி அருகே வரவும், தாழ்ந்த குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு…… “ஏண்டி, எரும மாடு மாதிரி வளர்ந்திருக்க, எதிர்ல இருக்குறவன் அந்த கத்துக் கத்தறான்… வாயை மூடிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க…..”,

“அவ தான் கர்ப்பமா இருக்கா பேச முடியாது, கூடாது…. கூட உங்கம்மா அவங்க வயசானவங்க பேச மாட்டாங்க! உனக்கு என்ன?………”,

அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, “இன்னும் தின்னுட்டு தின்னுட்டு தூங்கறதை நீ விடலியா…. உங்களை ஏதோ பணயப் பொருள் மாதிரி இருக்க வெக்கறான்….. யாருடா நீன்னு தைரியமா அவனை கேட்க வேணாம்”,

விக்ரமின் பேச்சை கேட்டு கண்ணுக்குள் துளிர்த்த நீர் வெளியே வராமல் இருக்க அந்தப் பெண் பிரம்மபிரயர்தனம் செய்தாள்.

“அவன் எவனா வேணா இருக்கட்டும்!”, என்று எதிரில் இருப்பவனை காட்டியவன், “என்ன பண்ணிடுவான் அவன் உன்னை? அவன் ஏதாவது பண்ணினா உங்க அண்ணனுங்க அவனை சும்மா விட்டுடுவாங்களா! அந்த தைரியம் கூடவா உனக்கு இல்லை….”,

“எங்க உங்கண்ணன்? அவரு  பொண்டாட்டிய ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டார்! எப்படி தனியா செக் அப்க்கு அனுப்பினார்!”,

அவள் மெளனமாக நிற்க…. “கேட்கறேன்ல சொல்லுடி….”, என்று அதட்டவும்..

“அவங்களுக்குள்ள சண்டை! பேசறதில்லை! நானும் அம்மாவும் தான் வர்றோம்!”, என்றாள் என்றாள் மெல்லிய குரலில்.

“எதுக்கு சண்டை?”,

“தெரியலை!”, என்று சொல்லும்போதே  என்ன முயன்றும் ஒரு நீர்த்துளி கன்னத்தில் உருண்டு விட…..

“உனக்கு ஒன்னுமே தெரியாதுடி…. யார் என்ன சொன்னாலும் மண்டையை மண்டையை ஆட்டு ”, என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன், “ஏய்! அழுது கிழுது சீன போட்டுடாத…… உன் முகத்தையே பார்க்கக் கூடாதுன்னு இருந்தேன்… என் கண்ல பட்டு தொலைச்சிட்ட….. போ! போய் தொலை!”, என்றான்.

அந்த பெண்மணிகளின் டிரைவரிடம், “இவங்களை போய் உள்ள உட்கார சொல்லு… நான் கூப்பிடும் போது வந்தா போதும்”, என்றான் விக்ரம்.

அந்த டிரைவர் அவர்களிடம் சொல்லவே வேண்டியிருக்கவில்லை…… விக்ரம் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களாகவே ஹாஸ்பிடல் உள்ளே செல்ல திரும்பினர்.

அவர்கள் உள்ளே போகவும் போலிஸ் ஜீப் ஒன்று வரவும் சரியாக இருந்தது. போலிஸ் ஜீப் வரவும் அந்த ஆயுதம் ஏந்திய போலிசும் விக்ரமின் டிரைவரும் வந்தனர்.

ஜீப்பில் இருந்த சர்கில் இன்ஸ்பெக்டர், இவனை பார்த்தும் விரைந்து அருகில் வந்து விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான்.

“சர்! இங்க!”, என்று பிறகு பவ்யமாய் கேட்க…..

“இங்க நிக்கறவர் நான் பஞ்சாயத்து பண்ணக் கூடாதுன்னு சொல்றார்!”, என்று எதிரில் இருந்தவனை காட்ட…..

“என்னங்க? யாரு என்னன்னு பார்த்து பேச மாட்டீங்களா!”, என்று எதிரில் இருந்தவனிடம் கடுமையாய் சொன்ன அந்த இன்ஸ்பெக்டர்……. “சார்! நம்ம கோயம்பத்தூர் கோர்ட்ல டிஸ்ட்ரிக் ஜட்ஜ்!”, என்றான்.

நீதித்துறையையோ நீதிபதியையோ அவமதிப்பது கடுமையான குற்றம். எதிரில் இருந்தவனுக்கு அந்த அறிவு இருக்க உடனே பணிந்தான், “சாரி சர்”, என்று.

“உங்க டேமேஜ் பெருசுன்னா அவங்க வீட்டு மேல் மெம்பர்ஸ் கிட்ட பேசுங்க…. பொண்ணுங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது!”, என்று கடுமையாக எச்சரித்தான் விக்ரம்.

“ரெண்டு வண்டி மேலயும் கேஸ் எழுதிடுங்க!”, என்று அந்த இன்ஸ்பெக்டரிடம் சொன்னான்…

“நீங்க கிளம்புங்க சார்! நான் பார்த்துக்கறேன்!”, என்று அந்த இன்ஸ்பெக்டர் சொல்ல…..

“இல்லை! உள்ள இருக்குறவங்க நமக்கு தூரத்து சொந்தம்! அவங்களை அனுப்பிட்டு போறேன்!”, என்றான் சற்றும் கூச்சப்படாமல்.

இதில் என்ன கூச்சமா? பின்பு மனைவியை தூரத்து சொந்தம் என்று சற்றும் லஜ்ஜையில்லாமல் சொல்கிறானே!

அவனின் டிரைவரை விட்டு கால் டாக்ஸியை வர செய்து….  அவர்கள் மூவரையும் எங்கு செல்ல வேண்டும் என்று சொல்லி ஏறச் சொல்ல……

“நல்லா இருக்கீங்களா தம்பி!”, என்றார் அன்னகிளியின் அம்மா. ஆம்! அன்னக்கிளி தான் அவனின் மனைவியின் பெயர்….. அவனுக்கு அந்த பெயரை வாயால் சொல்லக் கூடப் பிடிக்காது.

“ம்”, என்பது போல தலையசைக்க…..

“பெரியவங்க கேட்டா வாய் தொறந்து பதில் சொல்ல மாட்டியா”, என்று அவனின் அக்காவான அந்த கர்ப்பிணி பெண் சீற…..

அவளின் புறம் விக்ரம் பார்வையை கூட திருப்பவில்லை….

“ஏறுங்க! நேரமாமாகுது!”, என்று பொதுவாக சொன்னான்.

“கிளம்பலாம் பாப்பா!”, என்று அன்னகிளியை பார்த்து சொன்ன அவனின் மாமியார்…. “நீ முதல்ல ஏறு லதா”, என்று மருமகளிடம் சொன்னார்.

லதா ஏறி, அவன் மாமியார் ஏறி, அவன் மனைவி ஏறும்போது அவளுக்கு மட்டும் கேட்குமாறு தெளிவாக உரைத்தான்….. “பாப்பாவாம் பாப்பா! பீப்பா சைஸ்ல இருக்கா!”, என்று……

அவளின் முகத்தில் கோபம் தெரிகிறதா என்று ஆராய வேறு செய்தான்….. அவள் முகத்தில் கோபம் தெரிந்துவிடுமா என்ன?

 

 

 

Advertisement