Advertisement

                           சிவபைரவி – 7

சிவாவிற்கு நேரம் போனது தெரியவில்லை…

கிட்டத்தட்ட இரவு மூன்று மணி இருக்கும். அலைபேசியில் பேட்டரி தீரவும் தான் அவனுக்கு இத்தனை நேரம் ஆகிறது என்பதே தெரிந்தது.

கண்கள் எறிவது கூட அப்போதுதான் உணர முடிவதாய் இருக்க,

‘இவ்வளோ நேரமா…’ என்று தலையில் தானே கை வைத்துக்கொண்டான்.

கிட்டத்தட்ட பைரவி பதிவேற்றி இருந்த பாதிக்கும் மேற்பட்ட வீடியோக்களை பார்த்துவிட்டான். மனதுக்கு பிடித்த பாடல்களை திரும்ப திரும்ப வேறு பார்த்துவைத்தான். அலைபேசியை வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தவனுக்கு கண்கள் பயங்கரமாய் எரிய, எழுந்து சென்று முகம் கழுவி வந்தவனுக்கு மீண்டும் பசி வேறு எடுத்தது.

அன்றைய இரவு சரியாய் உண்ணவும் இல்லை.

ஏனோ உண்ணப் பிடிக்கவில்லை.

இதற்கும் முட்டை தோசை செல்வியக்கா அருமையாய் தான் சுட்டுக்கொடுத்தார். பெயருக்கு கொறித்துவிட்டு எழுந்துவிட்டான். நிச்சயம் இந்த நேரம் வீட்டிலும் எதுவும் இருக்காது என்று தெரியும். சமையற்கட்டிற்கு சென்று தண்ணீர் குடிக்க, பின்னோடு ரஞ்சிதமும் எழுந்து வந்துவிட்டார்.

“என்னடா இந்நேரத்துக்கு உருட்டிட்டு இருக்க?” என்றபடி.

“ஒண்ணுமில்ல… தூக்கம் வரல.. அதான்…” என்றவன் நகர்ந்து போக,

“ஏன் தூக்கமில்ல என்னாச்சு?” என்றார் வேகமாய்.

எப்போதும் சிவா இப்படி சொன்னதில்லை. அதனால் வந்த வேகம்.

“தெரிஞ்சா சொல்லமாட்டேனா?” என்றவன் “ஆமா நீ எதுக்கு இப்போ வந்த?” என,

“இல்ல லைட் எறியவும் என்னன்னு பார்க்கவந்தேன்…” என்று ரஞ்சிதம் சொல்ல,

“சரிம்மா…” என்றவன் மீண்டும் அவனது அறைக்கு சென்றுவிட்டான்.

அறை என்றால் தனிப்பட்ட அறை எல்லாம் இல்லை. ஹாலில் ஒரு பகுதியை தட்டி வைத்து மறைத்திருப்பர். அந்த பகுதிதான் சிவாவிற்கு. இருந்த இரண்டு அறைகளை ஒன்று அப்பா அம்மாவும், இன்னொன்று ஷாலினியும் பயன்படுத்த சிவா இங்கேதான்.

பொதுவாய் வீட்டினில் அவனது புழக்கம் அதிகம் இருக்காது என்பதால் இது பெரிய விசயமாய் தெரியவில்லை.

ஆனால் ரஞ்சிதம் மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார். அது இந்த வீடை விற்றுவிட்டு இன்னொரு நல்ல வீடு வாங்கவேண்டும் அல்லது கட்ட வேண்டும்  என்பது.

நேரம் பார்த்து மகனிடம் பேசவேண்டும் என்று இருக்க, என்னவோ இப்போதே பேசலாம் என்று எண்ணியவர் “ஏன் சிவா.. நம்ம இந்த வீட வித்துட்டு வேற நல்ல வீடா வாங்கிக்கலாமா?” என,

“என்ன திடீர்னு?” என்றான் நெற்றியை சுறுக்கி.

“இல்லடா எப்படியும் அப்பாக்கு ஒரு ரூம் வேணும்.. நாளைக்கு உனக்கு, ஷாலினிக்கு எல்லாம் கல்யாணம் ஆகணும். அவ வந்து போனா ஒரு ரூமு வேணும். உனக்கும் தனியா வேணும். குடும்பம் பெருசாக பெருசாக இடமும் பெருசாகனும் இல்லியா?” என,

“ம்ம் யோசிப்போம்…” என்றான் சிவா.

“சரி யோசிச்சு நல்ல முடிவா எடு…” என்றவர் “போ.. போய் படு…” என்றுவிட்டு போக, இனி எங்கே சிவாவிற்கு தூக்கம் வரும்.

கல்யாணம், புது வீடு என்று அவனின் அம்மா அவனை திசைதிருப்பிச் சென்றுவிட, மனதை பைரவியிடமிருந்து இந்த யோசனைகளின் பக்கம் திருப்பினான் சிவா. கையில் நல்லதொரு வருமானம் இருக்கிறதுதான். சேமிப்பு, கொடுக்கும் பணத்தை அம்மா சேமிக்கிறார்கள் என்றும் அவனுக்குத் தெரியும். அதற்குமேலே வரும் வருமானத்தில் அவனும் வங்கியில் அவ்வப்போது போட்டு வைத்திருக்கிறான்.

ஆனால் இதெல்லாம் வைத்து வீடு வாங்க முடியுமா இல்லை  கட்டுவிடத்தான்  முடியுமா என்ன?!

இந்த வீட்டினை விற்றால் மிஞ்சிப்போனால் ஒரு எழு அல்லது எட்டு லட்சம் தான் கிடைக்கும். அந்த பணத்திற்கு இடம் கிடைப்பதே பெரிது. அதுபோக ஷாலினி திருமணம் என்று  இப்படியே சிந்தனைகள் ஓட, விடிந்தும் கூட விட்டது.

வழக்கத்திற்கு மாறாக சிவா சீக்கிரமே மெக்கானிக் செட் வந்திட, மணி இன்னும் வந்திருக்கவில்லை. சிண்டு வாசலை கூட்டிக்கொண்டு இருந்தான்.

“ண்ணா… இன்னா சீக்கிரமே..” என,

“ஏன்டா வரக்கூடாதா?” என்றவன் சட்டையை கலட்டியபடி உள்ளே போக,

“வர்லாம் வர்லாம் வா…” என்று சிண்டு பாட்டாகவே பாட, சிவா மெதுவாய் சிரித்துக்கொண்டான்.

என்னவோ இப்போதெல்லாம் பாடல்கள் மிகவும் பிடிப்பது போலிருந்தது.

அவனாகவே ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்தபடி, வேலையை ஆரம்பிக்க சிண்டு தான் அதியசத்தைக் கண்டதுபோல் பார்த்தான்.

“டேய் என்ன?” என்று சிவா கேட்க,

“பாட்டெல்லாம் கூட பாட வருமா?” என்று சிண்டு கிண்டலாய் சிரிக்க,

“அடிங்க…” என்று கையில் இருந்த பொருளை தூக்கி வீச, சரியாய் செல்வியும் அங்கே வந்துவிட்டார்.

“இதுக்கு பாரு ஒரே ஜாலி…” என்று சிண்டு அவரையும் வம்பிழுக்க,

“என்னடா என்னை எதுக்கு வம்பிழுக்கிற நீ?” என்றவர் சிவாவின் முகம் பார்த்து “இன்னா சிவா.. உடம்பி சரியில்லியா என்ன? முகமெல்லாம் வாட்டமா இருக்கு?” என்று கேட்க,

“இல்லியே…” என்றான்.

“பின்ன… தூங்கலியா?”

“ஆமா  என்னவோ தூக்கமில்ல..” என்றவன் “நீ இன்னாத்துக்கு இதெல்லாம் கேக்குற?” என,

“முகமே சரியில்லையேன்னு கேட்டா…” என்று இழுத்தவர், அவரின் கடையை எடுத்து வைத்து, வியாபாரத்தைத் தொடங்க, சிவா அமைதியாகவே தான் இருந்தான்.

அவன் அமைதியாய் இருந்தாலும் அவனது உள்ளம் அமைதியாய் இல்லை. பல பல யோசனைகள் ஓடிக்கொண்டே இருக்க, அவனின் கரங்களோ அதன்பாட்டில் வேலை செய்துகொண்டு இருந்தது.

வேலை மும்முரத்தில் அவன் காலை நேர உணவைக் கூட மறக்க, செல்வி வம்படியாய் வந்து இடியாப்பம் கொடுத்துவிட்டு சென்றார்.

திடீரென்று சிவாவிற்கு அவனின் அம்மா நியாபகம் வந்துவிட்டது. ஒருநாள் கூட உண்டாயா என்று அழைத்துக் கேட்டது இல்லை. கடைக்கு செய்து கொண்டுவரவா என்றோ இல்லை கொடுத்துவிடவா என்றெல்லாம் கேட்டதே இல்லை. இரவு வீடு போனால் மதியம் செய்ததே இருக்கும். சில நேரம் சூடு செய்து வைப்பார். இல்லையோ அதுவுமில்லை.

அப்பாவைக் கவனித்துக்கொள்வதே அவருக்கு சரியாய் போய்விட, ஷாலினியும் அப்படியொன்றும் வீட்டு வேலை செய்வதுபோல் காணோம். அதனால் சிவா எதுவும் கேட்கவும் மாட்டான். இன்றேனோ திடீரென செல்வி வந்து வம்படியாய் இடியாப்பம் கொடுத்துச் செல்ல, அம்மா ஏன் இப்படி நம்மைக் கவனிப்பது இல்லை என்று யோசனை. ஒரு சிறு வலியும் கூட.

ஒரு ஏக்கப்பெருமூச்சு விட்டபடி கைகளை கழுவி வந்தவன் உண்ணத் தொடங்க,  அவனது சிந்தனைகளும் இடியாப்ப சிக்கல் போல் தான் இருந்தது. ஷாலினி திருமணம் எப்படியும் அடுத்த வருடம் செய்துவிடவேண்டும். வீடு வேறு கட்டவேண்டும். அதன்பின் அவனது திருமணம் என்ற சிந்தனை வர, திடீரென மூளைக்குள்ளே ஒரு மின்னல் பளிச்சென்று வந்து சென்றது.

அப்பா அம்மா இருக்கும் எனக்கே, திருமணம் அது இதென்று நானே யோசிக்கவேண்டியதாய் இருக்கிறது. பைரவிக்கோ யாருமே இல்லையே, அவளுக்கு யார் திருமணம் செய்து வைப்பார்கள்? யார் இதனைப் பற்றி எல்லாம் யோசிப்பார்கள் என்று சிவா யோசனை செய்ய, கை அப்படியே நின்றுவிட்டது/.

‘ம்ம்ச் பாவம்.. அவ வீட்ல போய் ரகளை பண்ணிட்டேனே…’ என்று தனக்கு தானே குட்டிக்கொண்டான்.

சிண்டு வந்து “ண்ணா இடியாப்பக்கம் நல்லா இல்லியா?” என,

அதன்பிறகே அவன் கை அப்படியே இருப்பது கண்டு “இல்லடா யோசிச்சிட்டே சாப்பிட்டேன்..” என்றவன் வேகமாய் உண்டு முடிக்க, செல்வியோ வேகமாய் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்.

“என்னக்கா அதுக்குள்ளே முடிக்கிற?” என்று சிவா கேட்க,

“அது பைரவி பாப்பா வருதாம். இப்போதான் போன் பண்ணுச்சு. திடீர்னு கிளம்பிட்டோம், வந்துடுவோம்னு சொல்லிச்சு. போய் வீடெல்லாம் சுத்தம் செய்யணும். ஏதாவது சமைச்சு வைக்கணும்…” என்று சொல்லியபடி அவர் வேலையை செய்ய,

‘கேரளா ஷூட்டிங்…’ என்று முனுமுனுத்தவனுள் மீண்டும் அதே கேள்வி, அவளுக்கு யார் திருமணம் செய்து வைப்பார்கள்?! என்று.

இப்படி ஏதேதோ அவனுக்குள்ளே ஓட, நேரம் போனதே தெரியவில்லை. மணி வந்தும் கூட பேசியபடி இருவரும் வேலை செய்துகொண்டு இருக்க, “நீ ஏன்டா மாப்ள வேற இடம் வாங்கணும். நம்ம செட்டுக்கு பின்னாடி மூணு சென்ட் உன்னோடது தானே… அந்த காயலான் கடைக்காரன் பழைய சாமானா தான் போட்டு வச்சிருக்கான். காலி பண்ணித் தர சொல்லு.. அதுலயே வீடு கட்டிடலாம். இப்போ இருக்குற வீடெல்லாம் விக்க வேணாம்…” என,

“இன்னும் ரெண்டு வருசத்துக்கு ஒத்திக்கு தான் கொடுத்திருக்கோம்டா. இப்போ திடீர்னு காலிபண்ண சொன்னா அவங்க என்ன செய்வாங்க?” என்றான் யோசனையாய்.

“அதெல்லாம் நமக்கெதுக்கு… உனக்கு இடம் வேணும்.. கைல வச்சுட்டு வெளிய தேட முடியுமா?! பல லட்சம் மிச்சமாகும்.. யோசி..” என்றான் நண்பனாய்.

மேற்கொண்டு இதுபற்றி இருவரும் பேசிக்கொண்டு இருக்க, புதிதாய் ஒரு நபர் “தம்பி ஒரு ஹெல்பு…” என்று அங்கே வந்து நின்றார்.

“யார் நீங்க?” என்று மணி கேட்க,

“கால் டாக்சி டிரைவர்… கார் ரிப்பேர் ஆகிடுச்சு.. கொஞ்சம் வந்து பாக்க முடியுமா?” என்று பவ்யமாகவே அவர் கேட்க, மணியோ சிவா முகம் பார்க்க,

“கார் எங்க இருக்கு?” என்றான் சிவா.

அவரும் எங்கிருக்கிறது என்று சொல்ல, அவர் சொன்ன இடம் பைரவியின் வீடு.

“அதெல்லாம் அங்க வர முடியாது..” என்று மணி வேகமாய் சொல்ல,

“இல்ல அந்த மேடம் சொல்லிவிட்டாங்க…” என்று அவர் சொல்லும் முன்னே

“வர்றேன்… நீங்க முன்ன போங்க…” என்று சிவா சொல்ல, மணியோ ‘ஆ!’ என்று அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.

“சொந்த விஷயம் வேற, தொழில் வேற…” என்று சிவா சொல்லியபடி நடக்க, “நானும் வரட்டுமா?” என்றான் சிண்டு வேகமாய்.

“நீ இன்னாத்துக்கு?!” என்று மணி கேட்க,

“ம்ம் கார் தள்ளுறதுக்கு…” என்றவன் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வேகமாய் சிவாவின் பின்னே ஓட, சிவாவிற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு.

ஏதோ ஒரு ஈர்ப்பு விசை அவனை இழுப்பது போலவே இருந்தது.  அவனது நடையின் வேகம் அதிகமாய் தான் இருந்தது.

இவர்களின் பின்னே மணியும் கூட செல்ல, அங்கேயோ வாசலிலேயே செல்வி நின்றிருந்தார். சிவா வருவானோ மாட்டானோ என்ற குழப்பம் இருந்ததுபோல. சிவாவைக் கண்டதும் அவர் முகத்தில் பட்டென்று ஒரு புன்னகை வந்திட “எங்கடா நீ வரமாட்டியோன்னு நினைச்சேன்…” என,

“இதெல்லாம் உன் வேலைதானா?!” என்றபடி சிவா காரில் என்ன பிரச்சனை என்று பார்க்க, சிறியதொரு விஷயம் தான்.

ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிட்டு “ஸ்டார்ட் பண்ணி பாருங்க…” என, காரோட்டியும் காரினை ஓட்டிப் பார்க்க, எல்லாம் சரியாகத்தான் இருந்தது.

என்னதான் சிவா வந்த வேலையைப் பார்த்தாலும் மனது என்னவோ ‘எங்கே அவள்?!’ என்று தேடிக்கொண்டு தான் இருக்க, சரியாய் கார் கிளம்பும் நேரம் பைரவி உள்ளிருந்து வெளியே வந்தாள்.

சிவாவைப் பார்த்து ஒரு புன்னகை.. மணி சிண்டுவைப் பார்த்து பெரியதொரு சிரிப்பு. இதைக் கண்டவனுக்கு கொஞ்சம் கடுப்பாய் கூட இருக்க, “என்ன ப்ராப்ளம் கார்ல…?” என்று கேட்டாள் சிவாவிடமே.

அவனும் என்னவென்று சொல்ல “ஓ..!” என்றவள், டிரைவரிடம் பணம் கொடுக்க, அவரோ “சார் உங்க சார்ஜ் எவ்வளோ…?” என்று சிவாவிடம் கேட்க,

“நான் கொடுத்துக்கிறேன்…” என்று பைரவியும்,

“அதெல்லாம் வேணாம்…” என்று சிவாவும் ஒருசேர சொல்ல, மற்றவர்கள் இருவரையும் வேடிக்கைத் தான் பார்த்தனர்.

“தேங்க்ஸ் மேம்… தேங்க்ஸ் சார்…” என்று சொல்லி, காரை எடுத்துக்கொண்டு அவர் கிளம்பிட, சிவாவும் அடுத்து நடக்கத் தொடங்க “ஒரு நிமிஷம் நில்லுங்க…” என்ற பைரவி,

“செல்விம்மா எல்லாருக்கும் ஜூஸ் போடுங்க…” என்றவள்

“இவ்வளோ தூரம் வந்துட்டு இப்படியே போனா நல்லாருக்குமா என்ன?” என்றாள் சிவாவிடம்.

‘இதென்னடா புதுசா?!’ என்று சிவா பார்க்க, சிண்டுவிற்கும் மணிக்கும் பெருத்த ஆச்சர்யம்.

அவர்களும் கூட ‘இதென்னடா புது ரீலு…’ என்று பார்க்க, சிவாவோ “இருக்கட்டும்…” என்ற ஒற்றை சொல்லோடு கிளம்பப் பார்த்தாலும், அவனுக்கு உள்ளே அத்தனை உற்சாகமாய் இருந்தது.

‘பரவால்லயே…’ என்று நினைக்க,

“அட… லாஸ்ட் டைம் நீங்க வந்தப்போ என்னென்னவோ நடந்துடுச்சு.. இப்போ வாங்க.. எல்லாமே சரியாகிடும்…” என்றவள் சிண்டு மணியைப் பார்த்து “வாங்க வாங்க.. உங்க ரெண்டு பேருக்கும் நான் கிப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்…” என, அதற்குமேல் அவர்கள் வெளியே நிற்பார்களா என்ன?!

சிவாவிற்கு என்னவோ தயக்கமாய் இருந்தது..

“வா சிவா…” என்று செல்வியும் வந்து அழைக்க, தயங்கி தயங்கித்தான் உள்ளே சென்றான்.

சென்றவன் நிச்சயமாய் அங்கே ஜானை எதிர்பார்க்கவில்லை போல.

மறந்திருந்த கோபமெல்லாம் அவனைக் கண்டதும், மீண்டும் துளிர்விட, ஜானும் சிவாவைக் கண்டதும் முறுக்கிக்கொண்டு எழ, பைரவி இதனை எதிர்பார்த்து இருந்தாள் போல.  

“ஜான் நீ உட்கார்…” என்றவளின் குரலில் தொனித்த அதிகாரம், ‘நீ பேசாமல் அமர்ந்துத் தான் ஆகிட வேண்டும்…’ என்று சொல்லாமல் சொல்ல,

“நீங்க உக்காருங்க…” என்று சிவாவிடமும் அதே தொனியில் தான் சொன்னாள்.

சந்தோஷியும் அங்கேதான் இருந்தாள்.

அவளை சிவாவிற்கு “என்னோட பிரண்ட்..” என்று அறிமுகம் செய்ய, ஜானுக்கு எரிச்சலாய் வந்தது.

சந்தோஷியோ “ஹாய்…” என்று புன்னகை செய்ய, சிவாவும் மெல்லியதாய் சிரித்து வைக்க, சந்தோஷிக்கு என்ன தோன்றியதோ “நாங்க மொத்தம் அஞ்சு பேரு.. ஜான், தினேஷ், நான், பையு அப்புறம் அகிலா…” என,

“ஓ..!” என்றான் சிவா.

“பைரவி உங்களைப்பத்தி சொல்லிருக்கா…” என்று சந்தோஷி சொல்லும்போதே செல்வி ஜூஸ் கொண்டு வந்திட, பைரவி தான் அதனை எல்லாருக்கும் எடுத்துக்கொடுக்க, சிண்டுவிற்கு எல்லாம் அதிர்ச்சியோ அதிர்ச்சி..

“ண்ணா இப்படில்லாம் யார் வூட்லயும் போயி சோபால உக்காந்துன்னு ஜூஸ் குடிச்சதில்ல தெரியுமா…” என்று மணியிடம் சொல்லும்போதே அவனுக்கு குரல் நடுங்கியது போலிருந்தது.

மணியோ “எனக்கும் அப்படித் தான்டா…” என,

“இந்தக்கா நல்லக்கா ண்ணா…” என்றான் சிண்டு.

சிவாவோ கையில் இருக்கும் ஜூஸை குடிப்பதா வேண்டாமா என்று ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல் இருக்க, அதற்குள் பைரவி சிண்டுவிற்கும், மணிக்கும் வாங்கி வந்த பொருட்களை எடுத்து வந்து கொடுக்க, இருவருக்கும் முகம் அப்படியொரு பிரகாசமாய் இருந்தது.

செல்விக்கும், அவரின் மகளுக்கும் கூட வாங்கி வந்திருக்க, அதனையும் எடுத்துக் கொடுக்க, சிவாவோ ‘இப்போ நமக்கு எதுவும் கொடுத்தா எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு வாங்குறது…’ என்று அடுத்த யோசனைக்கு போக,

அவளோ “உங்களுக்கு என்ன வாங்குறதுன்னே தெரியலை….” என்று சொல்லி உதடு பிதுக்கினாள் பைரவி.

‘நல்லது…’ என்று மனது நினைத்தாலும், ஒருவித ஏமாற்றமும் கூட சிவாவிற்கு ஏற்பட, ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை ஆட்டிக்கொண்டான்.

“சரி நாங்க கிளம்புறோம்…” என்று சிவா எழும்போதே, ஜான் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவன் “பையு தினேஷ் வர்றானாம்…” என, பைரவியின் முகம் அப்படியே மாறிவிட்டது.

“என்ன திடீர்னு…?” என,

“நீ இங்க வந்ததுல இருந்து அவன் இங்க வரவே இல்லை தானே.. நானும் ஷந்துவும் இங்க இருக்கோம்னு சொல்லவும் அவனும் வர்றானாம்…” என்று ஜான் சொல்ல,

“ஓ..!” என்றவள்

“தினேஷ் எ.. எங்க பிரண்ட் தான். போலீஸா இருக்கான்…” என்று சிவாவிடம் சொல்ல, தினேஷ் பேரைக் கேட்டதும் சட்டென்று பைரவி முகத்தில் தெரிந்த கலவரம் என்னவோ சிவாவின் கண்களுக்கு அப்படியே அப்பட்டமாய் தெரிய, காரணமே இல்லாமல் அந்த தினேஷை சிவாவிற்கு பிடிக்காமல் போனது.                                                    

    

 

  

      

            

 

                       

   

Advertisement