Advertisement

 
இப்போது சோபாவிற்கு அடுத்திருந்த ஒற்றையிருக்கை முட்டி நிற்க அதையும் காலால் மெதுவாய் நகர்த்தப் போக அது பின்னால் சாயப் பார்த்தது.
 
இடக்கையால்அதைபிடித்து மெதுவாய் நகர்த்தினான். ஏற்கனவே டெலிபோன்இன்டெக்ஸ்சில் இருந்து ராமின் வீட்டு எண்ணை பார்த்து வைத்திருந்தான்.
 
ராமின் அப்பாவின் பெயரில் இருந்த அந்த எண் சரியானது தானா என்று கூட அவனுக்கு தெரியாது. ஆனாலும் முயற்சித்து பார்க்காமல் விட அவன் விரும்பவில்லை.
 
ஆயிரம் பிரார்த்தனைகளை கடவுளுக்காய் வைத்து அந்த எண்ணை முயற்சி செய்தான். முதல் அழைப்பு அடித்து முற்றிலும் ஓய்ந்தது.
 
இந்த அதிகாலை வேளையில் போன் செய்வது அபத்தமாக தோன்றினாலும் அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.
 
மீண்டும் முயற்சி செய்தான். போன் வேறு கொரகொரவென்ற சப்தம் செய்தது. இம்முறைஅழைப்பை யாரோ ஒரு பெண்மணி ஏற்க அவரிடம் ராமிடம் பேச வேண்டும் என்றான்.
 
அந்நேரம்அருகில் காலடிச்சத்தம் கேட்டது அவனுக்கு. ‘கடவுளே இவங்க வர்றதுக்கு முன்னாடி ராம்கிட்ட பேசி முடிச்சிடணும்’ என்ற வேண்டுதல் அவனுக்கு.
 
நல்லவேளையாக ராம் வந்து போனை எடுத்திருந்தான். “ராம்… பவள்… பவளப்பிரியன் பேசறேன்… பிரியன்…”
 
மற்றவனோ“எவரு நுவு?? நாக்கு தெல்லேது…” என்று சொல்ல “ராம் இட்ஸ் மீ பிரியன்… யூவர் கிளாஸ்மேட் பிரியன் ராகேஷ் பிரண்ட்” என்று சொல்லி அவனை புரிய வைக்க ராம் கண்டுக்கொண்டிருந்தான்.
 
அவனிடம் வதனாவை காப்பாற்றுமாறு அவன் கேட்டுக்கொண்டிருக்க அதற்குள் அறைக்குள் நுழைந்தவர்கள் முதலில் அந்த போனை சுக்குநூறாக்கினர்.
 
பிரியனின் ஒரு கரம் கட்டவிழுந்து கிடப்பது பார்த்ததும் அவர்களின் தலைவனாய் இருப்பவனின் கண்களில் கோபம் ஏறியது.
 
தன் காலால் ஓங்கி பிரியனின் முகத்திலேயே மிதிக்க அவன் நிலைகுலைந்து அப்படியே பின்னாலேயே சாய்ந்தான்.
 
பின் நகர்ந்தவன் வெளியில் சென்று யாருக்கோ போன் செய்தான். அம்முனை என்ன சொன்னதுவோ திரும்பிவந்தவனின் கையில் மருந்து ஏற்றிய ஊசி இருந்தது.அது என்ன மருந்து என்பதை அவன் பிரியனின் உடலில் செலுத்திய சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவனால் உணரவே முடிந்தது. அவனை முழு மயக்க நிலைக்கு தள்ளியது அது.
 
அதன் பின் அவன் கண் விழித்த போது பரபரப்பாய் இருவர் அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அவனை நோக்கி வந்தனர்.
 
“முழிச்சிட்டான்…” என்றான் ஒருவன்.
 
“நல்லது தான், அதுக்காக தானே காத்திட்டு இருந்தோம். டிரஸ் மாத்தி விடு…”
 
“சரி…” என்ற மற்றவன் பிரியனுக்கு வேறு உடை அணிவித்தான்.
 
‘ஏன்?? என்னால டிரஸ் பண்ணிக்க முடியாதா?? என்னாச்சு எனக்கு, சுத்தமா மரத்து போன மாதிரி இருக்கே…’ என்ற ஓடியது அவனுக்குள்.
 
அவனை ஒரு வீல் சேரில் அமர வைத்தார்கள். ‘எனக்கு நடக்க முடியாதா?? அவர்களிடமே கேட்போம்’ என்று அவன் வாயை திறந்தான். பேச்சு குழறலாக வந்தது.
 
“உனக்கு இப்போ பதில் சொல்ற மூட்ல எல்லாம் நான் இல்லை… நேரமாச்சு…” என்றுவிட்டு அவனை வண்டியில் அமர வைத்தார்கள். வீல் சேரும் ஏற்றப்பட்டது.
பின்சில மணி நேர பயணம் செல்ல அவர்கள் செல்ல வேண்டிய இடம் அது தான் என்பது போல் வண்டி ஓரிடத்தில் நின்றது.
 
அவர்கள் கொண்டு வந்த பைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டது. வீல் சேரை இறக்கியதும் பிரியனை அதில் அமர வைத்தார்கள். அந்த இடம் அவனுக்கு பரிட்சயமான இடமாக தோன்றியது.
 
ஆனால் எதுவென்று சட்டென்று நினைவிற்கு வரவில்லை.அவர்களுடன் இப்போது ஒரு மருத்துவர் குழு வேறு இருந்தது. இவர்கள் எதற்காய் என்று அவன் சிந்தனை ஓடியது.
 
எதையும் அவனால் வாய் திறந்து கேட்க முடியவில்லை. அவன்கை காலே அவனால் அசைக்க முடியாமல் இருந்தது.
 
அவனை அங்கு நின்றிருந்த சொகுசு கப்பல் ஒன்றில் ஏற்றினார்கள். உள்ளே சென்ற வரை தான் அவனுக்கு தெரியும், அதன் பின் அவனுக்கு ஜூஸ் போன்று எதுவோ கொடுக்க மீண்டும் மயக்கமே.
 
அவன் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது. அதைக் கூட உணராமல் அவன் எந்நேரமும் உறக்கத்திலோ அல்லது மயக்க நிலையிலோ தான் இருந்தான்.
 
விழிப்பு நிலை முற்றிலும் தள்ளாட்டமே அவனுக்கு.அவ்வப்போது அவன் ஊசி ஊசி போடு என்று கத்தினான். ஆம் அவனை போதை மருத்துக்கு உட்படுத்தியிருந்தனர்.
 
“ப்ளீஸ் எனக்கு ஊசி போடு எனக்கு பைத்தியம் பிடிக்குது. நான் என் வதுவை மறக்கக்கூடாது போடு இந்த ஊசி போடு…” என்று இன்னும் உத்வேகமாய் கத்தினான் அவன்.
 
அவன்அந்தமான் தீவின் ஒரு மூலையில்சிறை வைக்கப்பட்டிருந்தான். அவன் வதனாவை முழுதும் மறந்து போக வேண்டும் என்று எண்ணித்தான் அவனுக்கு போதை மருந்தையே ஏற்றினார்கள்.
 
ஆனால் அவனோ அது தான் அவளை இன்னும் நினைக்க வைக்கும் என்று கூற ஊசி போட சென்றவன் அப்படியே நின்றான்.
 
யாருக்கோ அவன் பேச எதிர்முனை என்ன சொன்னதோ இவன் தலையாட்டினான். பின் வழக்கத்தை விட கூடுதலாக அவனுக்கு மருந்தை ஏற்றினான்.
 
பிரியன் தன்னையே யார் என்றும் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டான். அவனை வைத்திருந்த இடத்தில் ஒருவன் தமிழன் அவன் தான் பிரியன் சரியான பின்னே இதெல்லாம் அவனிடம் சொன்னது.
 
கிட்டத்தட்டஇரண்டு வருடங்கள் ஓடிப்போயிருந்தது அவன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப. முதல் ஆறு மாதங்கள் வரை அவனை அப்படியே தான் வைத்திருந்தனர்.
அவன் வதனாவை பற்றிய பேச்சை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திய பின்பு தான் அவனுக்கு போதை ஊசி போடுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தனர்.
 
பிரியனால் ஒரேடியாக அது இல்லாமலும் இருக்க முடியவில்லை. அவ்வப்போது“என்னை இப்படி வைச்சுட்டு இருக்கறதுக்கு பேசாம கொன்னுடுங்கடா…” என்றும் சில முறை கத்தத்தான் செய்திருக்கிறான்.
 
ஏனோ அவர்கள் அவனை கொல்ல மட்டும் நினைத்திருக்கவில்லை. பின்னாளில் அதுவே அவர்களுக்கு வினையாய் வந்து நிற்கும் என்றறிந்திருந்தால் அதையே செய்திருப்பார்களோ என்னவோ??
 
அவனுக்கு ஊசி போடுவதை குறைத்திருந்தாலும் ஒரேடியாய் நிறுத்தியிருக்கவில்லை. மேலும் ஒரு மாதம் கடந்திருக்க அவர்களுக்கு யாரிடமிருந்தோ அழைப்பு அதை கேட்டதும் தலைவனாய் இருந்த ஜேம்ஸ் என்பவன் சரி சரியென தலையாட்ட அடுத்த இரண்டு நாட்களில் அவனை வண்டியில் எங்கோ அழைத்து சென்றார்கள்.
 
அங்கிருந்து அவனை விமானத்தில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒரு பயணம். அவர்கள் அவனை விட்டுச் சென்றது மொழியறியாத ஒரு ஊரில்.
 
மலேசியாவில் இருந்தான் அவன், யார் வீட்டிலோ அடிமையாக்கப் பட்டிருந்தான். அவனை ஒருவருக்கு அடிமை போல் விற்றுவிட்டு சென்றுவிட்டனர் அவனை கடத்தி வைத்திருந்தவர்கள்.அவன் வேலை செய்தால் தான் அவனுக்கு உணவு என்ற நிலை.
 
அவனுக்கோ உணவைவிட போதை தான் பெரிதாய் இருந்தது.அவனால் போதை மருந்தில்லாமல் இருக்கவே முடியவில்லை.
 
நாளடைவில்அவனின் மூர்க்கத்தனம் பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர் அவனை மருத்துவமனையில் சேர்த்தார். ஏனோ அவருக்கு நல்ல மனம் இருந்தது போலும், வேறு யாரென்றாலும் இப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
 
அவன் நன்றாக மிக மிக நன்றாகவே அந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வந்தான்.அவனை மருத்துவமனையில் சேர்த்தவருக்கு நன்றி சொன்னான்.
 
ஆனால் அவருக்கு தான் அவன் பேசும் மொழி புரியவில்லை. ஏனேனில் அவர் பேசியது மலாய், அவனுக்குதமிழ் தவிர தெரிந்த இதர மொழிகள் ஆங்கிலமும், தெலுங்கும் கொஞ்சம் ஹிந்தியும் அறிவான் அவன்.
 
அந்த நிலையில் தான் அவனை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு வந்திருந்தான் அவனை கடத்தி வைத்திருந்தவர்களில் ஒருவன்.
 
அவன்பெயர் ஆனந்த், வேறு அலுவலாய் அங்கு வந்திருந்தவன் பிரியனை கண்டதும் அவனை நோக்கி வந்தான்.
“சார் நல்லாகிட்டீங்களா நீங்க??” என்று அவன் தமிழில் பேசியதும் பிரியனுக்கு அப்படியொரு ஆனந்தம்.
 
மொழியறியாத ஊரில் வசிப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை அங்கு வந்த நாளில் தான் அவன் புரிந்திருந்தான்.
 
வதனாவும் இப்படித்தான் தவிக்கிறாளோ அவளுக்கு என்னானது ஏதானது என்ற தவிப்பும் அவ்வப்போது அவனிடத்தில் தோன்றாமலில்லை.
 
ராம் அப்படி கைவிட்டிருக்க மாட்டான் என்றும் அவன் உள்ளம் சொன்னது. அதனால் தான் அவனால் சற்று நிம்மதியாக இருக்க முடிந்தது. இல்லையென்றால் என்னாகியிருப்பானோ??
 
“நீங்க நீங்க…” என்றவனுக்கு அடையாளம் தெரியவில்லை மற்றவனை.
 
ஆனந்த் என்பவன் இப்போது அவனருகே நெருங்கி நின்று மெல்லிய குரலில் “சார் என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா, நான் அந்த கூட்டத்தில ஒருத்தன்”
 
“என்னவோ எனக்கு அப்போலாம் உங்களை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும் சார்… நீங்க உங்க வைப் பேரு சொல்லி ரொம்பவும் வருத்தப்படுவீங்க,ஊசி போடு அவங்களை நினைக்கணும்ன்னு சொல்லி கலாட்டா செய்வீங்க”
 
பிரியன் எதுவோ கேட்க எண்ண “என் பேரு ஆனந்த் சார்…”
 
“ஆனந்த் எனக்கு இவ்வளோ நாள் என்ன நடந்துச்சுன்னு சொல்ல முடியுமா… உங்களுக்கு என்னை யார் கடத்தி வைச்சாங்கன்னு தெரியுமா…” என்றான் கண்களில் ஒருவித கூர்மையுடன்.
 
அவனுக்கு தெரிந்தே ஆக வேண்டி இருந்தது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று அறியாமல் அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தான் என்ன தவறிழைத்து விட்டோம் என்ற ஆதங்கமும் இருந்தது அவனுக்கு.
 
“என்ன நடந்துச்சுன்னு வேணா சொல்றேன் சார்… உங்களை கடத்தினவங்க பத்தி எல்லாம் எனக்கு தெரியாது சார்…”
 
“ப்ளீஸ் ஆனந்த் எதாச்சும் உங்களுக்கு ஞாபகம் இருக்கறதை சொல்லுங்க…”
 
“சாரி சார் எனக்கு அப்படி எதும் ஞாபகம் இல்லை… ஜேம்ஸ்க்கு தான் அவங்க எப்பவும் போன் பண்ணுவாங்க… அவனோட தான் பேசுவாங்க… நாங்க ஜேம்ஸ் சொல்றதை தான் செய்வோம்…”
 
“இதைத்தவிர எனக்கு வேற ஒண்ணும் தெரியாது… நீங்க தமிழ் ஆளுன்னு தெரிஞ்சதும் நான் தான் உங்களுக்கு போடுற மருந்தோட அளவை குறைச்சேன்…” என்றவன் அவனை அடைத்து வைத்ததில் இருந்து போதை மருந்து செலுத்தியது பின் அவனை நாடுக்கடத்தி இங்கு வந்து அடிமையாய் விற்றுவிட்டு சென்றது என்று அனைத்தும் கூறினான்.
 
பிரியனின் கண்கள் நிகழ்ந்தவைகளை கேட்டு மௌனமாய் கண்ணீர் சொரிந்தது. அவன் கையில் இன்னமும் அந்த ஊசி போட்ட தடங்கள் இருக்கத்தான் செய்தது.
 
“ரொம்ப நன்றி ஆனந்த்” என்றான் மனம்விட்டு.
 
“பரவாயில்லை சார், நமக்கு நாமே உதவலைன்னா எப்படி சார்… உங்களை ஒரேடியா என்னால அப்போ காப்பாத்த முடியலை… ஏன்னா உங்களைப்பத்தி எனக்கு ஒரு விவரமும் தெரியாது…”
 
“நீங்களும் அதையெல்லாம் சொல்ற நிலைமையில இல்லை… இவங்க அப்பப்போ உங்களுக்கு வைச்சிருந்த ஆளுங்களை மாத்திட்டே இருந்தாங்க…”
 
“அப்படி தான் நானே அங்க வந்து சேர்ந்தேன்… ஒரு நாள் நீங்க தமிழ்ல பேசவும் தான் எனக்கு தெரிஞ்சது, நீங்க நம்ம ஊரை சேர்ந்தவர்ன்னு… அதுவரைக்கும் நீங்க தெலுங்குன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்…”
 
“தமிழ்ன்னா தான் காப்பாத்துவியா தெலுங்குன்னா காப்பாத்த மாட்டியான்னு நீங்க கேட்கற மாதிரி இருக்கு சார்உங்க பார்வை…யாராயிருந்தாலும் இதைத்தான் செஞ்சிருப்பேன்…
 
“இருந்தாலும்மொழி தெரியாத ஊர்ல நம்ம மொழி பேசுற ஒருத்தரை பார்க்கும் போது உண்டாகுற உணர்வு மாதிரி தான் சார் அப்போ எனக்கும் இருந்துச்சு… வேற எதுவும் இல்லை சார்…”
 
“ரொம்ப ரொம்ப நன்றி ஆனந்த், இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன்… எனக்கு உங்க போன் நம்பர் கிடைக்குமா??”
 
“எதுக்கு சார்??”
 
“கண்டிப்பா உங்களை தொந்திரவு பண்றதுக்காக இல்லை…”
 
“நான் உங்களை தப்பா நினைக்கலை சார்… ஆனா நாங்க போன் நம்பர் மாத்திட்டே இருப்போம் சார்… உங்ககிட்ட தான் போன் இல்லையே…”
 
பிரியன் ஒன்றும் சொல்லவில்லை வெறுமே அவனை பார்த்தான். என்ன தோன்றியதோ அவன் கைபேசி எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி அவனிடம் நீட்டினான்.
 
கிளம்புமுன் அவனுக்கு எதுவோ தோன்ற “சார் ஒரு விஷயம் நான் சொன்னேன்னு தெரியக் கூடாது…” என்று அவன் பீடிகை போட பிரியன் அவன் சொல்லப்போவதை கேட்க ஆர்வமானான்.
 
 
 
நாடாளும்
ஆசைக்காய்
பிரித்தாளும்
சூழ்ச்சி செய்தாய்!!
வந்திட்டான்
ஈசனவன்
பேர் கொண்டோன்
பிரித்தாளும்
வித்தைஇனி
நீயறிய
செய்திடுவான்!!

Advertisement