Advertisement

 அத்தியாயம்….36 
“என்ன அதை மட்டும் பார்த்தியா…வேறு…என்..ன…?” என்ன நடந்தது என்பதை கேட்க கூட  பயந்து பவித்ரன் தயங்கி தயங்கி பேசினான்.
உதயேந்திரனை பற்றி அவனை காணும் முன்னவே  அவனுக்கு தெரியும். அதுவும் பெண்கள் விசயத்தில். அதை கொண்டு அவன் பயந்தாலும், வேணியை பற்றியும் நமக்கு தெரியும் தானே…
உதயேந்திரனை பற்றியாவது மற்றவர்கள் வாய் மூலமோ…தான் ஏற்பாடு செய்த டிடெக்டீவ் ஏஜென்ஸி கொடுத்த ரிப்போட் மூலம் தான்  தெரியும்.
ஆனால் வேணி தான் பார்க்க வளர்ந்த பெண். தன் தாயின் வளர்ப்பும், அத்தையின் வளர்ப்பும், தப்பாக போகாது என்று அவன் மனதுக்குள் அவனே இப்படி ஆயிரம் சமாதானம் செய்து  கொண்டாலும்…
வேணியிடம்… “அதோடு வேறு என்ன நடந்தது….? என்று  கேட்டு விட்டு அவள் பதில் சொல்வதற்க்குள் மனிதனின் மனம் குரங்கி என்பதற்க்கு தகுந்தார் போல,  பவித்ரனின் மனம் என்ன என்னவோ நினைக்க தோன்றியது.
எப்போதும் தான் வாய் மூடுவதற்க்குள் பதில் பேச்சு பேசும் இந்த வேணி, இன்று ஏன் இப்படி திக்கி திணறி..என்னவோ இப்போதான் கண் முழித்த குழந்தை போல் என்னை  பார்த்து பேந்த பேந்த விழிப்பதும்.
மழலை குழந்தைகள் பேச்சு கற்றுக் கொண்டு யோசித்து யோசித்து  பேசுமே, அது போல் பேசுகிறாளே..எப்போதும் வேணியின் மீது ஏற்படாத ஒரு வித எரிச்சல் இன்று பவித்ரனுக்கு ஏற்ப்பட்டது.
தான் கேள்வி கேட்டும் பதில் சொல்லாது ஒரு வித சங்கடத்துடன் தன்னை பார்த்துக் கொண்டு இருக்கும் வேணியை பார்த்து… 
“சொல்லி தொல…என்ன நடந்தது…?” என்று  பவித்ரன் வேணியிடன் வார்த்தையை வீசினான்.
அவனின் இந்த கோபமே வேணிக்கு அவன் என்ன நினைத்து இப்படி  தன்னை திட்டுகிறான் என்பதை புரிந்துக் கொண்டு…
 “என் உடம்பில் அவர் ரத்தம் ஓடினாலும், என்னை வளர்த்தது என் அத்தை, அம்மா பவி. எனக்கு வழிகாட்டியா இருந்தது..தாத்தா மாமா.” என்ற சொல்லின் மூலம் பவித்ரன் நெஞ்சில் பாலை வார்த்த வேணி…
தொடர்ந்து… “முக்கியமா எது நல்லது எது கெட்டதுன்னு என் கூடவே  இருந்து என்னை சொல்லி கொடுக்க என் நண்பன் இருக்கும் போது நான் தப்பு செய்ய மாட்டேன் பவி.” என்று பேசிய வேணி அந்த கடைசி வார்த்தை சொல்லும் போது வேணியின் குரல் கொஞ்சம் கர கரத்து தான் போனது.
“இல்லடா…எனக்கு தெரியும் டா உன்ன பத்தி நான் உன்ன தப்பா நினைப்பேனா…தோ நீ சொன்னியே அத்தை அம்மா வளர்ப்புன்னு நானும் அதையே தான் குட்டிம்மா நினச்சேன். என் பயம் எல்லாம் அவன் மேல தான். அவன பத்தி  எனக்கு முன்னவே தெரிஞ்ச விசயம். அது தான் கொஞ்சம் பயந்துட்டேன். நான் உன்ன தப்பா நினைப்பேனா…” என்று கெஞ்சி கொஞ்சி பவித்ரன் வேணியை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கும் போது வேணிக்கு பவித்ரனின் வார்த்தை எங்கோ குத்துவது போல் இருந்தது.
பவித்ரன் நினைப்பது போல் தவறாய் நடக்கவில்லை என்றாலும், ஒன்னும் நடக்கவில்லை என்றும் சொல்லி விட முடியாது தானே….
“பவி நான்..நான்…” என்று இழுத்து பேசியவளின் பேச்சை கேட்டு “என்ன வேணி. இன்னிக்கு என்ன நீ இப்படி என் கிட்ட பேச தயங்குற…எதுன்னாலும் தைரியமா பேசும் அந்த வேணி தான் எனக்கு வேணும். சொல் என் கிட்ட என்ன சொல்லனும் எது என்றாலும் மனசு விட்டு பேசு வேணி.” என்று பவித்ரன் வேணிக்கு தைரியம் கொடுத்ததும்…
“அந்த லிப்டல…உதய் என்னை என்…னை  கிஸ் செய்..தா…ர் பவி.” என்று சொல்லி விட்டு  வேணி பவித்ரனின் முகத்தை பார்க்க கூசியவளாய் தன் மனதை உறுத்தும் விசயத்தை சொல்லி விட்டு  தலை குனிந்து விட்டாள்.
கிஸ்…என்ற வார்த்தை எவ்வளவு சாதரணமாக சொல்கிறாள். இந்த வார்த்தை இவள் வாயில் இருந்து சாதரணமாக வர எது  காரணம்…? என்று யொசித்த பவித்ரனுக்கு அப்போது தான் வேணியின் பேச்சில் உதயேந்திரனை பற்றி பேசும் போது…
உதய்…அவர் இவர். என்று  வேணி சொன்ன வார்த்தைகள் பவித்ரனின் மனதில் பதிந்தது. அப்போ அந்த முத்தமும் உதயேந்திரன் இவளுக்கு வலுக்கட்டயமாக கொடுக்கவில்லை.
அப்படி வலுக்கட்டயாக கொடுத்து இருந்தால் அவனை கன்னத்தில் அரைந்து விட்டு  அந்த விசயத்தை இவள் அப்போதே மறந்து இருப்பாள். இப்படி குற்றவுணர்ச்சியில் புழுங்கி இருக்க மாட்டாள்.
அப்போ அந்த முத்தத்தில் ஒருவர் பங்கு மட்டும் இல்லை. வேணியும்… இதற்க்கு மேல் இதை பற்றி  அவன் யோசிக்க யோசிக்க போன தலை வலி திரும்ப வரும் போல் இருந்தது.
வேணிக்கு உதய் கொடுத்த முத்ததில் அவன் மீது கோபம் இல்லை. அப்போ இவள் அவனை விரும்புறாள். இதை தன் குடும்பம் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்று நினைத்தவன்.  முதலில் அவர்கள் இதை எந்த விதத்தில் பார்ப்பார்கள்.
நாம் ஒன்று நினைத்து சென்னைக்கு வந்தால், இங்கு வேறு பூகம்பம் வெடிக்கும் போல இருக்கிறது. அதுவும் தன் அத்தையை நினைக்க நினைக்க…
தன்  ஒரே மகள். தன் வாழ்க்கையை பறித்தவளின் சகோதரனை விரும்புகிறாள். இது தெரிந்தால் தன் அத்தையின் மனது எந்தளவுக்கு  வேதனை படும். இப்படி பவித்ரன் தன் மனதுக்குள்ளயே குழப்பிக் கொண்டு இருக்க…
 வேணியோ  தான் சொன்னதற்க்கு  ஒன்று தன்னை அடிப்பான். இல்லை நான் இருக்கேன் என்று சொல்லுவான் என்று   வேணி எதிர் பார்த்தாள். ஆனால் தன் பேச்சுக்கு எந்த பேச்சும் இல்லாததை நினைத்து குனிந்து இருந்த தலை நிமிர்ந்து பவித்ரனை பார்த்தாள்.
அங்கு பவித்ரனின் குழம்பிய முகத்தை பார்த்து… “பவி நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்னா…?” என்று கேட்ட வேணியின்  குரலில் தெரிந்த குற்றவுணர்ச்சியில்…
“இல்ல குட்டிம்மா. உன்னால எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.” என்று சொன்னவன்…
பின்… “நான் இப்போ என்னை பத்தி யோசிக்கல. உன்னால எனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பரவாயில்ல…ஆனா இந்த உன் காதலால் நம்ம குடும்பம் எந்த அளவுக்கு  பிரச்சனையை எதிர் நோக்கும். அத்தையின் மனது எந்த அளவு பாதிக்கப்படும் என்று நினச்சா தான் எனக்கு வேதனையா இருக்கும்.”
இந்த  காதலால் நம் குடும்பம் எந்த  அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை வேணிக்கு சொல்லி விட்டான்.
அவளுக்கே அது தெரியும் தான். தெரிந்ததால் தான் அவளின் மனமே அவளின் காதலை  ஏற்றுக் கொள்ளாது சண்டி தனம் செய்கிறது.
ஆம் அவள் மனது இப்போது வேணிக்கு தெள்ள தெளிவாக  விளக்கி விட்டது. தான் உதயேந்திரனை விரும்புவது.
இந்த விருப்பம் எப்போதிலிருந்து என்றால், என்ன யோசித்தும் அது அவளுக்கே தெரியாத ஒன்றாய் தான்  இருந்தது. 
முதன் முதலில் பார்த்த  போதே அவனின் ஆளுமையில் மயங்கி விட்டேனா…? அவளுக்கு அவளே கேட்டு கொண்டதில், சட்டென்று  அவன் மனது அவளுக்கு கொடுத்த பதில் இல்லை. இல்லவே இல்லை என்பதே…
முதன் முதலில் அவனை பார்க்கும் போது அவனை எப்படி வீழ்த்துவது இதுவே அவள் எண்ணமாய் இருந்தது.
பின் எப்போது என் மனம் அவன் பால் வீழ்ந்தது. பவித்ரன் சொன்ன அவன் பெண்கள் விசயத்தில் ஒரு மாதிரி…
அந்த கண்ணோட்டத்தில் அவனை சந்தேக கண் கொண்டு பார்த்தால் கூட, வேணிக்கு இவனா…அப்படி…? என்று தான் நினைக்க தோன்றியது.
அதுவும் ஒரு முறை இவள் பார்க்க  கீர்த்தி ஏதோ உதயிடம் பேசினாளோ இல்லை செல்லம் கொஞ்சினாளோ…அப்போது பவித்ரன் தன் தலையில் செல்லமாக கொட்டுவது போல், உதய் கீர்த்தியின் தலையில்  கொட்டி விட்டு, பின் அவனே கீர்த்தியில் தலை கோதிக் கொண்டே அவளிடம் ஏதோ பேசினான்.
அப்போது அவன் கண்ணில் தாய்மை உணர்வை தான் வேணி பார்த்தாள். கண்டிப்பாக தெரியும் அதில் கள்ளம் இல்லை. கபடம் இல்லை. ஏன் என்றால் பவித்ரன் தன்னை பார்க்கும் போது எல்லாம் அவன் கண்ணில் இந்த பார்வையை தான் அவள் பார்த்திருக்கிறாள்.
இப்படி பட்டவன் பவித்ரன் சொன்னது போல் எப்படி பொம்பளை  பொறுக்கியாக இருக்க முடியும். கீர்த்தியிடம் பழகும் முறை பார்த்து தன் மனது அவனிடம் சாய்ந்ததா…அதற்க்கும் பதில் இல்லை தான்.
அப்படி பார்த்தால் தன் மனதில், பவித்ரனுக்கு தான் இடம் கொடுத்து இருக்க வேண்டும். பவித்ரனை பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும். வீட்டில்  தங்களுக்கு திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தும் போது எல்லாம், செய்து கொள்ளலாம் என்று தான் அவள் நினைத்து இருக்கிறாள்.
ஆனால்  தங்கள் திருமணத்தை பற்றி  பவித்ரனிடம் பேசியது இல்லை. எது தடுத்தது என்று அவளுக்கே அது புரியாத ஒன்று. ஆனால் இப்போது எல்லாம் பவித்ரனை தன்னோடு இணைத்து திருமணம் பேச்சு பேசும் போது எல்லாம் ஏதோ செய்ய கூடாத தப்பு செய்வது போல் இருந்தது.
அதற்க்கு உண்டான காரணம் அப்போது விளங்கவில்லை. ஆனால் இப்போது…மயக்கத்தில் ஏதோ இதழ் ஒத்தடம்… இது வரை உணராத இதம்.
ஆம் அதை இதம் என்று தான் சொல்ல வேண்டும். அது கனவா…?  நினைவா…? என்று தெரியாது, பின் நினைவு தான் என்று தன் மனது உறுதி செய்ய…
மயக்கத்தில் கொடுத்த முத்தமே இன்று வரை அடி ஆழம் வரை தித்திக்கும் போது,  நினைவில் அவன் இன்று கொடுத்த இதழ் தீண்டல் சொல்லாமல் சொல்லி விட்டது. இது காதல் தான் என்று.
அதே போல் அவன் மனதையும் இன்று அவள் தெள்ள தெளிவாக உணர்ந்தாலும், இரு குடும்பத்தில் பிரச்சனை…இதோ பவித்ரன் சொன்னது போல், இந்த உறவால்    உடைய போகும் மனது தன் அன்னை என்றாகும் போது…
இந்த காதலை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்வது சரியா…? என்ற வேணியின் கேள்விக்கு பவித்ரனின் பதில்…பொறு பார்க்கலாம் என்பதே
உதயேந்திரனின் கேள்விக்கு ராஜசேகர்  பதில் அளிக்கும் முன், தன் மகள் காயத்ரியை பார்த்த ராஜசேகர்…
“நான் வர லேட் ஆகும்.  நீயாவது ஆபிசுக்கு போறியா…?” தன் மகளை அங்கு இருந்து அனுப்பவே அவர் அவ்வாறு கேட்டார்.
தன் மகள் ஆபிசில் போய் ஒன்றும் செய்ய மாட்டாள் என்று அவருக்கே நன்கு தெரியும்.  கைய் பேசியில் தான் சொன்னதை செய்ய தன்னுடைய திறமை வாய்ந்த ஜூனியர்களே போதும். 
இவள் அங்கு போனாள் அவர்கள் செய்வதையும் குழப்பி விடுவாள் என்பது அவருக்கு நிச்சயமே… இருந்தும்  ஒரு தகப்பனை பற்றி ஒரு மகள் தெரிந்துக் கொள்ள கூடாத விசயத்தை தான் இப்போது உதயேந்திரனிடம் சொல்ல போவது.
மேலோட்டமாக பார்த்தால் அந்த காலத்தில் அவர் ஜெய்சக்தி சந்திரசேகர் காதலுக்கு உதவினார். சென்னையில் இருந்த இவர்களின் நட்பு வட்டம்  அப்படி தான் அன்று சொன்னது.
ஏன் என்றால் ஏற்கனவே சந்திரசேகருக்கு திருமணம் முடிந்ததோ…கம்பத்தில் சந்திரசேகர் மனைவி இருப்பதோ சென்னையில் இருக்கும் நட்பு வட்டத்திற்க்கு தெரியாது.
அதனால் அவர் செய்த வேலைக்கு அன்று நட்புக்கள்… “ பரவாயில்ல தோஸ்த்து. பொண்ணு பெரிய இடம். அதுவும் நீங்க வேல செய்யும் முதலாளி பொண்ணு என்று தெரிஞ்சும் இவங்க காதலுக்கு நீ உதவி செய்த பார்த்தியா…? நீ எங்கேயோ போயிட்ட தோஸ்த்.”  என்று இப்படி ஒருவன் சொன்னால் என்றால்…
மற்றொருவனோ அவர்களின் சட்டக்கல்லூரி பாஷையில் … “ நீ  கெத்து தான் மச்சான். நீ தான் உதவி செய்தேன்னு அந்த முதலாளிக்கு தெரிஞ்சா  உன் வேலை. உன் எதிர் காலம் போகுமுன்னு தெரிஞ்சும் உதவி செஞ்ச பார்த்தியா… நீ கெத்துடா…” அவர்களின் நட்பு வட்டம் அப்போது அவனின் மார் தட்டி சொன்னார்கள்.
ஆனால் உண்மையில் அன்று நடந்த விசயத்தை தன் பெண் முன் கூட  சொல்ல முடியாத ஒரு ஈன காரியத்தை தான் அன்று ராஜசேகர் செய்தது.
தன் தந்தை தன்னை ஏன் அங்கு இருந்து விரட்டுகிறார் என்று  கூட தெரியாது காயத்ரி… 
“நான் போக மாட்டேன். அது தான்  நீங்க சொன்னதை செய்ய உங்களுக்கு அத்தனை எடு புடி இருக்குங்கல…அதுங்ல  செய்ய சொல்லுங்க.” என்று சொன்ன காயத்ரி, இன்னும் சட்டமாக அமர்ந்து கொண்டாள்.
தன் மகளை இங்கு இருந்து என்ன சொல்லி அனுப்புவது என்று அவர் யோசித்துக் கொண்டு இருக்கும் போது…
உதயேந்திரன் காயத்ரியின் காதருகில் சென்று… “உனக்கு பவித்ரன் வேண்டுமா…? வேண்டாமா…?” என்று அவள் காதை கடிக்க..
பலமா…. “வேண்டும்.” என்பது போல் அவள் தலை ஆட்டினாள்.
“அப்போ இங்கு இருந்து போ…” என்று சொன்னது தான் கப் சிப் என்று  வாய் மூடிக் கொண்டவளாய்…
“அப்பா நான் ஆபிஸ் போகும் போது ஏதாவது பைல் எடுத்துட்டு போகனுமா…?” என்று  காயத்ரி தன் தந்தையிடம் கேட்டாள்.
இப்படி தன்னிடம் கேட்பது தன் மகளா…? என்று அவருக்கு சந்தேகம் வந்தாலும்… “ஒரு பைலும்   இல்லேம்மா…” என்றவர்.
பின்… “அவங்கல வேல செய்ய விடுமா…” என்று பாவம் போல் சொன்ன ராஜசேகரை பார்த்து உதயேந்திரனுக்கு சிரிப்பு தான் வந்தது.
மனதில்  “பவித்ரன்  நீ செத்தேடா…என்னை வேணியிடம் பேச முடியாம செய்யுறலே…அதுக்கு தண்டனை இவளை உன்கிட்ட கோர்த்து விட்டுறது தான்.”
யாருக்கு தெரியும்…இது பவித்ரனுக்கு தண்டனையா….? தட்சணையா…? என்று.

Advertisement