Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க – அத்தியாயம் 7(1)

எத்தனை மணி நேரம் உறங்கினானோ, அர்ஜுன் கண்விழிக்க அறை இருட்டாயிருக்க ஒன்றும் புரியவில்லை. ‘இன்னுமா விடியல? இப்படி இருட்டா இருக்கு..’

விளக்கை உயிர்ப்பிக்க மணி ஏழென்று கடிகாரம் காட்டியது. வெளியிலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது.

கைப்பேசியை எடுக்க அதில் உயிரில்லை. சார்ஜில் போட்டுவிட்டு “அம்மூ” என்றான். ‘அவன் அம்மூ’வை தான் மனம் தேடியது. அரவமில்லை. குளியலறை சென்று வந்தான். வீடே இருட்டில். பொட்டு சத்தமில்லை. ‘எங்க போனா?’.

அவள் மேல் கோபம் தான்.. ஆனால் அதையும் தாண்டின காதல்.. காதலையும் மறைத்த சந்தேகம். கடைசியில் அவன் சந்தேகம் அவன் காதலை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

“அம்மூ..” ஹாலுக்கு செல்ல காலில் தட்டுப்பட்ட அமுதவள்ளியின் கைப்பேசியை எடுத்தான். அவன் கைப்பட்டதும் திரையில் அர்ஜுனும், அம்முவும் ப்ரணவோடு சிரித்து நின்றனர். முன் இரவும் விடியலும் நினைவில் வந்து போனது.

அவன் மனம் போலவே வீடும் இருட்டில் மூழ்கி இருக்க.. அதில் நிலவிய அமைதி… அவனை பயமுறுத்தியது. மீண்டும் தொலைத்துவிட்டேனா அவளை? உடைந்தே போனான். என்ன மனிதன் நான்?

இருட்டில் சுவரோடு உரசிக் கொண்டே கால் நீட்டி அமர்ந்துவிட்டான். மீண்டும் மனது கனமானது. கைப்பேசியில் தெரிந்த அவள் முகம் பார்க்கப் பார்க்க கண் பனித்தது. அவன் பேசியதெல்லாம் அச்சு பிசகாமல் காதில் ஒலித்தது.

‘பாவி.. உன் மனைவியிடமே நீ இப்படி பேசுவாயா? அவள் அப்படி பட்டவளாகவே இருந்தாலும் தவறு யாருடையது?’ என தன்னையே கேட்டுக்கொண்டான்.

‘மனைவியை அப்படி ஒரு பாவத்திற்குள் தள்ளிய நான் தானே பாவி?’ குற்ற உணர்வு வந்து ஒட்டிக்கொண்டது. கோப அலைகள் எல்லாம் அடங்கி இருக்கக் கொஞ்சமாய் மூளை செயல்பட ஆரம்பித்தது.

அன்று ஒரு நாள் அவள் வெற்றிடையை அவன் பார்த்ததுக்கே அவள் கூசிப் போனாளே.. அவளா அப்படிப் பட்டவள்? இல்லை.. எங்கோ ஏதோ தப்பான புரிதல்..

‘பழைய வேலை’ இடம் சென்றதாய் தானே உறைத்தாள். அவள் மேலும் டெட்டாள் வாடை தானே வந்தது.

‘ஐயோ…’ எச்சில் விழுங்க கூட முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டு வலித்தது. வந்த பதில் எல்லாம் அவன் தலையில் பாறாங்கல்லாய் இறங்கியது.

“இது என்ன ஆயா வேலை? நர்ஸ் வேலை? மானத்தை வாங்கவா?” இவன் தானே கேட்டான். இவனுக்குத் தெரியும் தானே… அவள் மறைக்கவில்லையே..

“எனக்கு கண்டிப்பா இந்த மாச கடைசிக்குள்ள பத்தாயிரம் வேணும்.. சம்பள பணம் பத்திரமா இருக்கு.. அது மட்டும் பத்தாது. மொத்தம் ஒரு லட்சம் வேணும் மாமா..” அவள் மாமாவிடம் பேசியது… மனது அடித்துக் கொண்டது. ‘அவளுக்கு இவ்வளவு பெரிய தொகை தேவைப் பட்டிருக்க.. என்னிடம் வரவில்லையே.. மாமனிடம் தானே சென்றாள், ஒரு கணவனாய் என்ன நம்பிக்கை அவளுக்குக் கொடுத்தேன்…’

‘என்ன தேவை? கேட்டிருக்க வேண்டும். கேட்காமல் போனேனே…’

“உங்களுக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது. தெரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணல நீங்க..”

“..உங்க எல்லையை மீறாதீங்க வார்த்தையாலும் பார்வையாலும் பழக்கத்தாலும்!”

“என் வயத்துக்கு நான் தான் சம்பாரிக்கணும்.. என்னைப் பத்தி எதுவுமே உங்களுக்கு தெரியாது.. என் மேல தவறான எண்ணம் இருந்தா என்னை விட்டுடுங்க.. நான் வரலை.. சரி படாது. எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம். என்னை நம்பினா மட்டும் வரேன்!

“என் தன்மானத்தை சீண்டாதீங்க. அத மட்டும் நான் பொறுத்துக்கவே மாட்டேன்.”

எல்லாம் கோர்வையாய் மனதில் நிழலிட சோர்ந்தே போனான்.

ஏன் இப்படி நினைத்தேன்.. சந்தேகப் படும்படி ஒன்றுமே நடக்கவில்லையே.. விஷயம் நெருடியதும் அவளிடம் ஒரு வார்த்தை கேட்காமல் போனேனே…

கண்டிப்பாய் மகனோடு கிளம்பிவிட்டாள் என்று தெரிந்தது. ‘இரண்டாவது முறையாக என்னை விட்டு போயே போய்விட்டாள்.’ கண் கரித்தது. இதயம் கனத்தது.

‘பேசி பேசியே அவளை அனுப்பி விட்டேனே.. எங்குச் சென்றிருப்பாள்.. சின்ன பெண்.. கைக்குழந்தையோடு..’ முழங்காலில் கைகொடுத்து தலையைத் தாங்க வேண்டிய சூழ்நிலை. எல்லாம் இருந்தும்.. எல்லாம் பறிக்கப்பட்ட உணர்வு. தன் வாயால் தணலைத் தலையில் போட்டுக்கொண்ட நிர்க்கதியான நிராதரவான நிலை.

அவ்வளவு பேசியும் வாய் திறவாமல் அவன் அணைப்பிலிருந்த அமுதாவை நினைக்கையில் பயமாய் தோன்றியது. அழவில்லை, ஆர்ப்பாட்டம் செய்யவில்லை..

போராடக் கூட இல்லை. உள்ளுக்குள் போட்டுப் புதைத்திருப்பாளோ.. ‘என் முகமாவது இனி பார்ப்பாளா?’

மகனும் இல்லை. மனைவியும் இல்லை.

பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் ஒரு முறை அவளைத் தொலைத்தான்… நிதானித்துப் பேச வேண்டிய நேரத்தில் நிதானமிழந்து பேச.. ஒரேயடியாய் தொலைத்துவிட்டானோ.. அவன் வாழ்வின் துணையை?

இருளான அவன் வானில் நிலாவாய் வந்தவளாயிற்றே.. இன்று வானில் நிலவில்லை! அவன் வாழ்வில்?

வார்த்தைகள் உள்ளத்தின் பிரதிபலிப்பு.

காதலித்தான், உண்மையாய்.

கைபிடித்தான், ஆசையாய்.

அவள் உணர்ச்சிகளுக்கு மதிப்புகொடுத்தான்.. இடைவெளி விட்டான்.

இடையில் புகுந்தார் அவன் அம்மா.. பிளவை ஏற்படுத்தி, மருமகள் மேலிலிருந்த வெறுப்பெல்லாம் விஷமாய் அவன் மனதில் அவனை அறியாமலே விதைத்தார். முடிவு.. அவர் மகனின் வாழ்வு முடிந்தது. பூத்துக் குலுங்க வேண்டிய வாழ்வு இன்று ஒன்றுமில்லாமல் போனதோ? கூடவே ஒன்றும் தெரியாத அப்பாவி பெண் வாழ்வும்!

அவன் வாழ்வு அவன் யோசித்திருக்கவேண்டும். அம்மாவே சொன்னாலும், அவன் மனைவியை அவன் அறிந்திருக்கவேண்டும். எல்லாவற்றிலும் தவறிவிட்டான். வார்த்தைகளை விடுவது எளிது.. கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது.

கண்மூடி எவ்வளவு நேரம் அமர்ந்திருந்திருந்தானோ? அறையில் திடீரென வெளிச்சம் பரவ, மூடியிருந்த கண் கூசியது. கண்ணைக் கசக்கிப் பார்த்தான்.  ஒருபக்க தொளை சுவரில் சாய்த்து.. கையை மார்புக்குக் குறுக்காய் கட்டிக்கொண்டு அவனையே கூர்மையாய் பார்த்து நின்று கொண்டிருந்தாள் அவன் திராட்சை நிற கட்டழகி.

கண்ணை உறுத்தாத நிறத்தில் காட்டன் புடவை உடுத்தியிருந்தாள். சின்னதாய் சிகப்பு பொட்டு நெற்றியை அலங்கரிக்க.. அடர்த்தியாய் மை தீட்டியிருந்தாள். கழுத்தில் தாலியிருந்தது, வகிட்டில் கொஞ்சமாய் குங்குமம். இடையைத் தாண்டி தொடை வரை நீண்டிருந்த கூந்தலைத் தளர்வாய் பின்னி, ஒரு முழ மல்லி சரத்தால் அலங்கரித்திருந்தாள்.

நிமிர்வாய் நின்றுகொண்டிருந்தாள். பார்வையில் கூர்மை. அவன் மனைவி என்று பெருமையாய் சொல்லிக்கொள்ளும் தோற்றம். புன்னகை இல்லை ஆனால் அர்ஜுனைத் தான் அவள் ஊடுருவும் பார்வையால் துளைத்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு வயிற்றில் பால் வார்த்த எஃபெக்ட். ‘என்னை விட்டுப் போகவில்லையா’ அப்படி ஒரு நிம்மதி.

“அம்மூ..” நா தழுதழுக்க எழுந்து நின்றான்.

அவள் பார்வையில் மாற்றமில்லை. அவன் பேசிய பேச்சுக்கு அழுது கரைந்து சுக்கு நூறாய் உடைந்திருப்பாள் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்க.. அவள் ‘உன் சொல் என்னைச் சாய்க்காது’ என்பது போல் நின்று கொண்டிருந்தாள்.

அவள் உள்ளுக்குள் உடைந்தது நிஜம் தான். ஆனால் அதை வெளிக்காட்டவில்லை. காட்டவும் மாட்டாள் இன்றைய அர்ஜுனிடம்.

அவன் பேச்சிற்கு அழுகை எல்லாம் வரவில்லை. எதற்கு எடுத்தாலும் பயந்து அழுத காலம் மலையேறிவிட்டிருக்க.. யோசனை மட்டும் தான்.

உறவுகள் தானாய் உடைவதில்லை.. எல்லா விரிசல் பின்னும் ஒரு கதை இருக்கும். இவன் வார்த்தைக்கும் காரணம் உண்டு.. அதை தெளிவு படுத்தாமல் போகப்போவதில்லை. தெரிந்து தெளிவுபடுத்திய பின்னும் போகும் நினைப்பெல்லாம் இல்லை. சரி படுத்தமுடியும்.. முடியாவிட்டால் போராடத் தயார்.

மான் முடிந்த வரை, தன் உயிரைக் காப்பாற்ற ஓடுவதில்லையா? ஒவ்வொருவருக்கும் ஒரு போராட்டம் இருக்கத்தான் செய்கிறது. இது இவளுடையது… போராடத் தயாராய் நின்றிருக்கிறாள்… மூவர் வாழ்விற்காய்! தன் சுயத்தை விட்டுக்கொடுக்காமல், அமுதவள்ளியாய்!

“சாப்பாடு எடுத்துவைக்கவா? சப்பிடுரீங்களா?” என்றாள்  எப்பொழுதும் போல் அவன் முகம் பார்த்து.

அவனுக்கு அவளை பார்க்கவே மலைப்பாய் இருந்தது! இவள் எந்த வகையை சார்ந்தவள். அவனுக்கு உண்மையிலேயே அவளைத் தெரியவில்லை தான். சராசரி பெண், இவன் பேசிய பேச்சுக்கு அவனை விட்டு சென்றிருப்பாள்… இல்லை அழுது  ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். இவன் கூட அம்முவை விட அதிகமாய் அழுதிருப்பான் போலும்!

“இல்ல..வேண்டாம். பசிக்கல” என்றான்.. அவன் முகம் பார்க்கக் கூசி.

“அப்போ சமைச்சத என்ன பண்ணட்டும்? வேஸ்ட் பண்ண முடியாது. வந்து சாப்பிடுங்க!” எதுவுமே நடவாதது போல் பேசினாள்… ஆனால் கொஞ்சம் அதட்டலாய்..

இப்பொழுது இவனுக்கே சந்தேகம்.. நடந்தது நிஜமா? இல்லை கனவா? என்று.

அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தவன் அவள் எல்லாவற்றையும் எடுத்து வைப்பதைப் பார்த்துத் தயங்கித் தயங்கி… “நீ சாப்பிடலையா?” என்று ஒருவழியாய் சொல்லி முடித்தான்.

மேசையைத் துடைத்து கொண்டிருந்தவள் பதில் தரவில்லை. தலையை மட்டும் உயர்த்தி அவன் கண் பார்த்தாள். ஒன்றும் சொல்லவில்லை. ‘நீ பேசாதே’ என்ற பார்வை.

வாய் மூடி உள்ளே செல்ல.. “எங்க போறீங்க? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நீங்க பேசிட்டீங்க.. நான் பேசலையே.. பேசனும்” என்றாள்.

முதல் நாள் அவள் பேசியது போல் இருந்தது. அவன் கண் பார்த்து அவன் உதட்டசைவுக்கு மயங்கி நின்ற அம்மு இல்லை என்பது உறுதி.

‘அப்போ நடந்தது கனவில்லை!’ கொஞ்சமாய் வயிற்றைக் கலக்கியது. ‘அவளை பேசும்போது இருந்த வீரம் எங்கே?’ என்றது மனது.  ‘வீரமா… அப்படினா?’ என்றது நினைவு!

படுக்கையறை வாசல் வரை சென்றவன் அங்கேயே நின்றுவிட..  ‘திக் திக்’ நிமிடங்கள் அவனுக்கு. எல்லாவகை உணர்வுக்கு நடுவிலும் ஒரு வகை நிம்மதி.. என்ன நடந்தாலும் என் மனைவி என்னை விடமாட்டாள் என்ற நிம்மதி. அதே நிம்மதியை அவளுக்குக் கொடுத்தானா? ‘இல்லை’ என்றது வீட்டின் சூழல்.

“நான்.. சாரி” என்ற சத்தத்திற்குத் தலை தூக்கியவன் பார்த்தது அறை வாசல் நிலைக்காலில் சாய்ந்து நின்ற அமுதவள்ளியை தான்.

இருவரும் எதிர் எதிரில்.. நடுவே ஒரு அடி தூரம் இடைவெளி… இது உடலளவில்! மனதளவில்.. அளக்க முடியா தூரம்!

வாய் சாரி சொன்னது… ஆனால் முகத்தில் அதற்கான ரேகை இல்லை.

‘சாரியா?’ என்று நினைத்தவனுக்குப் பெரிய அதிர்ச்சிதான்..  முகமும் அதைக் காட்டவே..

“ஏதோ.. நான் செய்ய போய் தானே.. உங்களுக்கு என் மேல சந்தேகம்.. அதுவும் இப்போ தான் அந்த சந்தேகம் ஒரு ரெண்டு வாரமா.. யோசிச்சு பார்த்தேன்.. அன்னைக்கு மாடில என் மாமா கூட நான் பேசினத நீங்க கேட்டிருக்கீங்க… நான் இந்த தாலியோட வெளில போனதை பார்த்திருக்கீங்க! சரி தானே?”

அவன் முகம் பார்க்க.. அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை. தன்னையே கேவலமாக உணர்ந்தான்.

Advertisement