Episode 24 (1)

மேசையில் மயங்கி கிடந்தவளை தண்ணீர் தெளித்து எழுப்பி , ” ஏன் மா சாப்பிடலயா நீ ….இந்தா இந்த ஜுஸ் குடி” எனவும் வாங்கி குடித்தவளுக்கு அது அன்னாசி பழ ஜூஸ் என்பது தெரியவும் ,

“அத்தை வாஷ் ரூம் போய்ட்டு வாரேன்” என்றவள் வேகமாக சென்று வாய்க் கொப்பளித்து முகம் கழுவி வந்தாள்.

அவள் வருகையில் தில்லையின் அருகில் ஒரு இளைஞன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கையில் லேப்டாப் மற்றும் சில ஃபைல்கள் இருந்தன .

யார் இவர் என யோசித்துக் கொண்டே வந்தவளிடம் பழச்சாறைக் காட்டி குடி என்றதற்கு “இல்லத்த கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றதும் ,

“விஜய் .. இவ தான் உங்க சித்தப்பா ஃபிரண்ட் விஜயானந்த் பொண்ணு பூமாலை….இவளோட ஷேர்ஸ்தான் அது…”

அவனும் வரவேற்பாக புன்னகைக்க பூமாலை கைகுவித்து”வணக்கம் சார்” என்றாள். அவனை அனுப்பி விட்டு ,

“பூமாலை இந்த ஃபைல்ஸ் எல்லாம் படிச்சுப் பார்த்துட்டு சைன் பண்ணி வை , இப்ப வந்தான் இல்லயா விஜய் அவன் வந்து நான் சொல்லும் போது உன்கிட்ட வாங்கிட்டு வந்துருவான்…” என்றவர் அவள் கைப்பிடித்து,

“இது எல்லாம் உனக்கு சேர வேண்டியதுதான் , உங்க மாமா உனக்குனு விட்டுட்டு போனது தான். இதுக்கும் மேலக் கூட நான்  தர தயாரா இருக்கேன் … ஆனா சூர்யா உன் கழுத்துல தாலி போட்டதயோ…. நீ தாமரையோட பொண்ணுனு எனக்குத் தெரியும்கிறதையோ யார்கிட்டயும் சொல்லாத முக்கியமா சூர்யாவுக்கு …. உன் படிப்புக்கும் , உன் எதிர்கால வாழ்க்கைக்கும் இந்தப் பணம் தாராளம் கண்ணு… இனி நான் உன்னப் பார்க்கவோ பேசவோ வரமாட்டேன். இது உன் மாமா சொன்னது தான். நீயும் எங்களோட தொடர்புல இருக்க வேண்டாம் … அது உன் எதிர்காலத்துக்கும் நல்லதில்ல … சூர்யா எதிர்காலத்துக்கும் தான் …. அவன் மேல உனக்கு அக்கறை இருக்கும்னு நினைக்கிறேன். அவன் உன் கூட நல்லா பேசி பழகியிருப்பான் தான் … அது அவனுக்கு தப்பான விஷயம் கிடையாது ….”

அவள் முகம் பார்க்காது , “கியூபர்ட் பெனிட்டா ரிலேஷன்ஷிப் எப்படியோ அப்படி தான் உனக்கும் அவனுக்குமான தொடர்பு ….. நீ புரிஞ்சுக்குவனு நினைக்கிறேன்…. இனி உன் படிப்ப நீ பார்…. இந்த வயசு படிக்கிறதுக்கானது ,இப்ப போய் கல்யாணம் குழந்தைனு இருக்கிறது நல்லதில்ல ….அவன் வேலைய அவன் பார்ப்பான் …. நீ எங்கிருந்தாலும் நல்லாருக்கணும் பூமாலை …. நான் வாறேன் ….” என்றவர் திரும்பி நடக்க முற்படுகையில் ஏதோ தோன்ற நின்று ,

“உன்னோடது எல்லாம் உன் கிட்ட ஒப்படைச்சிட்டேன் ….அவனோடது வேற எது இருந்தாலும் திருப்பிக் கொடுத்துரு பூமாலை….அப்படியே இருந்தாக்கூட நீயே வச்சுக்கோ …. இல்ல.…. அ ….. என் வாயால சொல்ல முடியாது….என்னை மன்னிச்சிரு… உன்கிட்ட இருக்குதுனு சூர்யாகிட்ட சொல்லிராத….. ஏன்னா உங்கம்மாவால நான் நிறைய இழந்துட்டேன்…. ஏன் என் புருஷனோட நம்பிக்கையக் கூட … உன்னால என் பையனயும் இழக்க விரும்பல…. நீ நல்லபடிய படிப்ப முடி…. நானே நல்ல பையனா பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்…நான் வாறேன்” என்று விறுவிறுவென்று வெளியேறி விட்டார்.

அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் , “அத்தை என்ன சொல்லிட்டுப் போறாங்க…. எங்கிட்ட அவங்களோடது இருக்குன்னா … வேற கல்யாணம் பண்ணி வைப்பாங்களா……”

வயிற்றில் கை வைத்துக் கொண்டவள் , “அப்ப தெரிஞ்சுதான் இந்த ஜூஸ் வாங்கித் தந்தாங்களா… இல்ல இருக்காது ….” என்றவாறு அவர் தந்த ஃபைல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள்.

ரேஷ்மா வந்தவள் , இவளது கைகளிலிருந்த ஃபைல்களைப் பார்த்து விட்டு , ” நிறைய தமிழ்ல இருக்கு … ஒன்னுமே புரியல “என்றவள், ஆங்கிலத்தில் இருந்தவற்றைப் படித்து விட்டு … “ஹேய் அந்த கம்பெனி ஷேர்ல உனக்கும் இவ்வளவு பங்கா… நீ பெரிய பணக்காரினு சொல்ல வே இல்லப் பார்த்தியா ….”

இது எல்லாம் அவளுக்கும் தெரிந்த விஷயம் என்பதால் , அதை பெரிதாக எடுக்காமல் யோசனையிலயே இருந்தாள். “இது என்ன… இவ்வளவு அமொன்ட்… கூடவே ஒரு வெற்றுப் பத்திரம் ….” என்றதும் அதை வாங்கிப் பார்த்தாள்.

ஒன்றில் “உனக்கு நான்கு வருட படிப்பிற்கான தொகை இதில் இருக்கிறது. சூர்யாவின் வாழ்க்கையில் என்னால் உன்னை என்றுமே இணைத்துப் பார்க்க முடியாது. முடிந்தால் இந்த வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்திட்டுத் தா…. உன்னிடமிருந்து தாலியை வாங்கிக் கொண்ட நானே உனக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை அமைத்து தருவேன்.”

கண்ணீர் பொங்கி வழிந்துக் கொண்டே இருந்தது … ரேஷ்மா பதறிப் போய் , “என்னடி இப்படி அழுகிற….அதுல என்ன எழுதியிருக்கு ….” என ஆங்கிலத்தில் தான் கேட்டாள். பூமாலையோ  அழுது கொண்டே அவள் இடுப்பைக் கட்டிப்பிடித்து ,

“ரேஷு….அவங்க என்னைய சும்மாவே விலகி இருனு சொல்லி இருக்கலாம் ….இப்படி இப்படி பணத்தக் கொடுத்து …..”

ரேஷ்மா உடனே ” இங்கிலீஷ்ல பேசுடி… எனக்கு ஒன்னுமே புரியல….” என ஆங்கிலத்திலும் இந்தியிலும் புலம்ப ….

அழுகையை நிறுத்தி தேம்பிக் கொண்டே உனக்கு தெரியக்கூடாதுனு தானே தமிழ்ல பேசுறேன்…. என்று பூமாலை நினைத்துக் கொண்டிருக்க , ரேஷ்மாவின் வட இந்திய தோழி ஒருவள் வந்து அழைக்கவும், ” நான் போய்ட்டு வந்து கேட்கிறேன்…. இந்தா தண்ணிக்குடி ” என பாட்டலை அவளிடம் தந்து விட்டு சென்றாள்.

தன் வயிற்றில் கை வைத்துக் கொண்டவள் , “பேபி நமக்கு யாருமில்ல தான் ….. ஆனா உங்கள யாருக்காகவும் எதுக்காவும் விட்டுத்தர மாட்டேன்…. அம்மா இருக்கேன் உங்களுக்கு , இது எல்லாம் உங்களுக்கு ஈடாகுமா …. எனக்கு எதுவுமே வேண்டாம்….” என்று தேம்பிக் கொண்டே அந்தப் பேப்பர்களில் எல்லாம் கையெழுத்திட்டு அடுக்கி வைத்தவள், ஒரு பையில் போட்டு ஓரமாக வைத்துவிட்டாள்.

இந்த படிப்பையே விட்டு விட்டு வேறு ஏதாவது ஊருக்குப் போய் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்துக் கொள்ளலாமா என்றுத் தோன்றியது. ஒன்று மாற்றி ஒன்று யோசித்துக் குழப்பிக் கொண்டவள், சூர்யா எப்படியும் ஒரு முறை வருவான் , அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

இரு நாட்களில் வந்த விஜயபாண்டியன் அவளிடமிருந்து கோப்புகள் அடங்கிய பையை சித்தி வாங்கி வரச் சொன்னதாகக் கேட்டு வாங்கிச் சென்றான்.

அதன் பிறகு தில்லையை இப்போது அவரது இறுதி நேரத்தில் தான் பார்த்தது .

ஊட்டி வந்து சேர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே இறங்கினர். மகனின் முகம் மட்டுமே தெரியுமாறு அணிவித்திருந்த அந்த உடை சூர்யாவை மகனிடமே பார்வையை வைக்கச் சொன்னது. இறங்கி வந்து அவனைக் கையில் வாங்கியவன் ,

“ரோஸ் பட் … நான் உன்னை முதன் முதல்ல இங்கப் பார்க்கும் போது நீயும் இப்படித்தான் முகம் மட்டும் தெரியுற ட்ரஸ் போட்டுருந்த… பொம்மை மாதிரி இருப்ப ….”

“ச்சு போங்க மச்சு … பாகீமா எப்பவும் என்னைய எப்பவும் அப்படித்தான் போட்டுக்க வைப்பாங்க … இப்பக்கூட பார்த்தீங்க தானே ,, அந்த டிரைவர் கிட்டபோன் வாங்கி “பட்டு பிள்ளைக்கு அந்த ஸ்வெட்டர் போடு ….குல்லா போடுனு … என்னையப் பார்த்தது போலவே பார்க்கிறாங்க….” என்றவள் ,

அந்த தோட்டத்தில் முன்பு வேலைப் பார்த்த தெரிந்த ஆட்களோடு பேசிக் கொண்டிருந்தவரைக் காட்டி ,

“பாகீமா….அன்னம்மா இவங்கலாம் எனக்காகவும் என் ஆதிக்காகவும் கடவுள் அனுப்பி வச்ச தேவதைங்க…. உடல் அழகைத்தான் தேவதைங்கங்களுக்கு ஒப்பிடனுமா என்ன …. உள்ளத்தால் அழகானவங்க யாரையும் சொல்லலாம்….அவங்க ரெண்டு பேரும் இல்லைனா , இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் இல்ல…”

அதற்குள் அந்த தோட்டத்தைப் பார்த்து கையிலிருந்த ஆதி நழுவி ஓடி பாக்யத்திடம் சென்றிருக்க , பூமாலையைப் பார்த்து புன்னகைத்தவன் ,

” உண்மை தான் மை டியர் ஸ்வீட் ஏஞ்சல்”

“மச்சூஉஉஉ” என சினுங்கியவள் அருகில் வந்தவன் ….. அவள் காதினில் ,

“நீ சார் சார்னு சினுங்கும் போதே … உங்கூட கபடி விளையாடத் தோணும்… இப்ப இந்த மச்சூ பயங்கரமா போதை ஏத்துது ரோஸ் பட்….. உங்கூட கபடி விளையாடனும் போல இருக்கு …..”

முகத்தில் சிவப் பேறினாலும் அதைக்காட்டாது, “சரி நாம ஏன் ஊட்டி வந்தோம் .. அதைச் சொல்லுங்க ” என்றவாறு வீட்டினுள் நுழையப்போனவள்… “வா…..வ் … .. பாகீமா…. இங்க பாருங்க … இதெல்லாம் நான் வச்ச செடி தானே….. எப்படி வளர்ந்துருக்குப் பாருங்க… “குழந்தையாக குதூகலித்தவள் அருகே வந்த சூர்யா ,

“ஏன் இங்க வந்தோம் கேட்டீல்ல… இதுக்குத்தான்… இந்த அழகான சிரிப்ப பார்க்கத்தான் … என்னோட ரோஸ் பட் சிரிப்ப மறந்து ரொம்ப நாளாச்சுனு தோணிச்சு ….அது திரும்ப கொண்டு வர என்ன என்ன செய்யணுமோ அதை எல்லாம் செய்ய தோணிச்சு…. பாக்யம் ஆன்டிக்கிட்ட கேட்டேன்… நீ இங்க தான் ஸ்கூல் படிச்சியாம் … இந்த ஊருனா உனக்கு ரொம்ப பிடிக்கும் சொன்னாங்க ….அதான் இங்க வந்தோம்….அப்புறம் நாம ரெண்டு பேரும் ஒருத்தரப் பத்தி ஒருத்தர் தெரிஞ்சிக்கவும் தான் ….”

கண்கள் கலங்க அவன் பேசுவதைக் கேட்கவும் , அவள் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து ,

“ஆன்டி ஆதியப் பார்த்துக்கிட்டா , நான் உன்னையப் பார்ர்ர்க்க… வசதி அது தான் அவங்களையும் கூட்டிட்டு வந்தாச்சு …..” என ராகம் இழுத்துப் பேசவும் ,

“ச்சு போங்க மச்சு” என்றவள் வெட்கப்பட்டுக் கொண்டே  உள்ளே சென்றாள்.

உள்ளே செல்லும் அவளையே கைகட்டிக் கொண்டுப் பார்த்தவன் , ” எப்படி … எப்படி ரோஸ் பட்…. உன்னையப் பார்க்காம பேசாம இத்தனை வருஷம் இருந்துருக்கேன்…. கடைசி ரெண்டு வருஷம் அம்மாவ மட்டுமே நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா அதுக்கு முன்ன….. உன் ஞாபகம் வராமலா இருக்கும் ….. ம்ஹூம்…. நான் உன்னைய மறக்கல … மறக்க வைக்கப்பட்டேன் அது தான் உண்மை…. “

அன்று தில்லை அமெரிக்கா கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய் என்றதும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தவன் , அதற்கான ஏற்பாடுகளைப் பார்க்க ஆரம்பித்தான். இடையே பூமாலையைப் பற்றி அம்மாவிடம் பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தில் , அவர் அறைக்குச் சென்று “ம்மா அப்பா பூமாலையை பத்தி உங்ககிட்ட எதுவும் சொன்னாரா ….”

“ஆமாம் பா … உங்கப்பா ஃப்ரண்ட் விஜயானந்த் பொண்ணுனு சொன்னாரு , அவரு பாக்யம் வீட்டுக்காரருக்கு தூரத்து உறவுனு தெரியும் … பாக்யம் உறவுலயே ஒரு பொண்ண விரும்பிக் கட்டிக்கிட்டாருன்னாங்க… பாவம் … இப்ப ரெண்டு பேரும் உயிரோடு இல்லயாம் … “

கேட்ட சூர்யாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை , நானே சொல்லாமல் நீங்கள் யாரும் என் தங்கை மகள் என்பதை சொல்லி விடாதே என்று ஆதவன் கேட்டுக் கொண்டதால் …. “அப்பா அப்போ ரோஸ் பட் யாருனு அம்மாகிட்ட சொல்லலயா….. ஓ காட் … இப்ப நான் என்ன செய்றது…” என அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ,

“பாவம் பா சின்ன பிள்ளை அது… அவங்க ரெண்டு பேரும் போனதும் உங்கப்பா தான பாக்யத்துக்கிட்ட அவள பார்க்க வச்சாரு… அந்த நன்றிக்கு உங்கப்பா என்ன சொன்னாலும் ‘சரிங்க மாமா…. சரிங்க மாமானு’ தலையாட்டுவா… உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டவரு.. பாவம் தாய் தகப்பன் இல்லாத கேக்க ஆளு இல்லாத சின்ன பொண்ண … அதுவும் படிக்கிற பிள்ளைக்கு …. சாமிக்கு போட வச்சுருந்த தாலிய எடுத்து உன்னைப் போட வச்சுருக்காரு… அது ரொம்ப பெரிய தப்புப் பா”

அவன் முகத்தையேப் பார்த்தவர் , “நீ அதப் பெரிசா எடுத்துக்க மாட்டனு தெரியும் …. எனக்கும் கோவில்ல அதப் போடாததால் தான் உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சுனு திரும்ப வாங்கினேன். ஆனா …. ஆனா ” என்றவர் தந்தை இறந்த அன்றுக் கூட அப்படி அழவில்லை… ஆனால் இன்று அவனைக் கட்டி பிடித்து அப்படியொரு அழுகை. அதற்கு மேல் சூரியாவால் என்னப் பேச முடியும்.