சந்தனா யாதவின் புகைப்படத்தையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள். கோவையிலிருந்து கணபதிபாளையம் வந்து ஒரு மாதத்திற்கும் மேலே ஆகி இருந்தது. இந்த இடை வெளியில் அவளின் கோபமும் மட்டுப்பட்டிருந்தது. நேசம் கொண்ட அவள் மனம் கணவனின் அருகாமையை பெரிதும் எதிர்பார்த்தது. அதுவும் கருவுற்று இருக்கும் வேளையில் அவன் அருகாமையும் அக்கறையும் தேவை என மனம் பெரிதும் ஏங்கியது.
தன் குழந்தை தன் கணவனைப் போன்றே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு அவளுள் பரவி இருந்தது. அவன் முகம் காண முடியாத தருணம் பெரிதாய் இம்சித்தது. அவளுக்கு ஆறுதலாய் இருந்தது அவனது புகைப்படங்களும் நினைவுகளுமே. ஆனாலும் அவன் அழைப்பினை ஏற்கும் அளவு கோபம் குறையவில்லை. ஒரு மனம் அவனுக்காய் ஏங்க, ஒரு மனம் அவன்மேல் உள்ள கோபத்தை குறைக்க மறுத்தது.
இடையில் ஒரு முறை யாதவ் கணபதிபாளையம் வந்தான். கோவையிலிருந்து ஈரோடு வந்து ஒரு வார இடைவெளியில் யாதவ் கணபதிபாளையத்திற்கு வர, அப்பொழுது அவன் மீது இருந்த கோபத்தில் சந்தனாவால் அவன் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை, அவளுடைய அறையினை தாளிட்டு விட்டு அறையின் உள்ளேயே இருந்தாள்.
சந்தனா அறையிலேயே முடங்கி இருக்க, சுந்தரேஸ்வரி அம்மாளும் காமாட்சி அம்மாவும் யாதவிடம் பேசவே இல்லை. யாதவ் என்ற ஒருவன் அங்கே இருப்பது போல கூட இருவரும் காட்டிக் கொள்ளவில்லை.
யாதவ் மனதளவில் மிகவும் உடைந்து போனான். “நாம் இங்கிருந்தால் சந்தனா உணவு உண்ணக்கூட வெளியே வரமாட்டாள்” என்று உணர்ந்து அன்றே கோவைக்கு திரும்பி விட்டான். முன்பெல்லாம் அவளின் கோபத்தை ரசித்தவன், அவள் தன் கூட்டை விட்டு வெளி வர வேண்டும், மற்றவர்களைப் போல கோபதாபங்கள் வெளிப்படுத்த வேண்டும் என விரும்பியவன், இன்று அவளது கோபத்தை ஒரு கணப்பொழுது கூட தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தான்.
ஏற்கனவே யாதவிற்கு இருந்த கவலை, இப்பொழுது பன்மடங்காய் பெருகியது. ஏற்கனவே அவனுடைய குறுந்செய்திகளும், கைப்பேசி அழைப்புகளும் பதில் இல்லாமல் போய் இருக்க… இப்பொழுது சந்தனாவின் ஒதுக்கம், பெரியவர்களின் ஒதுக்கம் தன்னை அவர்கள் வெறுப்பதாகவே உணர்ந்தான். தனக்கு யாருமே இல்லை, தன்னை எல்லோரும் வெறுத்து விட்டனர் என எண்ணம் வர அவன் முழுவதும் உடைந்து விட்டான்.
எதையோ உண்டு, எதிலுமே கவனம் இல்லாமல், சரியான உறக்கம் இல்லாமல், கவலையிலேயே உழன்று இந்த ஒரு மாதத்தில் துரும்பாய் இளைத்து பார்க்கவே பாவமாய் இருந்தான். யாதவாக கூறாமல் சூர்யாவால் எதனையும் தெரிந்து கொள்ள முடியாது என்பதனை சூர்யா நன்கு அறிவான். சூர்யாவால் யாதவின் இந்த நிலைமையை காண முடியவில்லை. அவனிடம் தினமும் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும் பதில்தான் கிடைப்பதாய் இல்லை.
யாதவை உணவருந்த வைக்கவே சூர்யாவிற்கு பெரும்பாடாய் இருந்தது. ஆனாலும் சூர்யா என்ன முயன்றும் யாதவின் உடல்நிலை மோசமடைவதை அவனால் தடுக்க முடியவில்லை. கடந்த சில வாரங்களில் அவனது எடை கணிசமாக குறைந்திருப்பது பார்வையிலேயே புரிந்தது. அதிலும் பொலிவிழந்த அவன் முகம், எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் அவன் ஒதுக்கம் சூர்யாவுக்கு மிகுந்த கவலையை கொடுத்தது.
ஒரு நாள் அலுவலகத்திலேயே யாதவ் மயங்கி விழவும், சூர்யா மிகவும் பதறி போனான். யாதவை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தான். அங்கே அவனது உடலில் பலமின்றி இவ்வாறு ஆனதாக மருத்துவர்கள் கூறினார்கள். சூர்யாவும் அதனை அறிவான்தானே, ஆனால் இப்படி உடலில் வலுவில்லாத நிலைக்கு யாதவ் வருவான் என அவன் நினைத்தது கூட இல்லை.
மருத்துவமனையிலேயே இரு தினங்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்க சூர்யா உடன் இருந்து கவனித்துக் கொண்டான். மருத்துவர்கள் யாதவுக்கு ஓய்வு அவசியம் என கூற, பிறகு யாதவின் மாமான்களிடமும் அம்மாவிடமும் சூர்யா பேசிவிட்டு யாதவை ஈரோடு அழைத்து சென்றான்.
முதலில் அவன் சந்தனாவுக்கு தான் கூற நினைத்தான். கருவுற்று இருக்கும் பெண்ணிடம் இப்படி அதிர்ச்சியான விஷயத்தை சொல்வது சரியாக இருக்காது என்று எண்ணி மற்றவர்களிடம் கூறினான்.
ஈரோடு அழைத்து சென்றதும், “இரண்டு நாட்களாக ஏன் சொல்லவில்லை” என யாதவின் மாமன்மார்கள் சூர்யாவை வறுத்தெடுத்து விட்டார்கள். அதிலும் யாதவ் துரும்பாய் இளைத்திருந்த தோற்றம் அவர்களை பெரிதாய் பாதித்தது, அவர்கள் அனைவரும் யாதவின் நிலையை எண்ணி மிகுந்த கவலை கொண்டனர்.
இத்தனை நாட்கள் யாதவ் ஈரோடு வராமல் இருந்ததால் அவனுக்கு அதிக வேலைப்பளு என்று ஏற்கனவே எண்ணி இருந்தவர்கள், இப்பொழுது வேலைப்பளுவினால்தான் அவன் உடல் நிலையும் இப்படி ஆனது போலும் என்று அவர்களாகவே எண்ணிக் கொண்டனர்.
சுந்தரேஸ்வரி அம்மாளும், காமாட்சி அம்மாவும் விஷயம் கேள்விப்பட்டு ஈரோடு விரைந்து வந்துவிட்டனர். அவர்கள் சந்தனாவிடம் எதையும் கூறவில்லை. வயிற்றில் குழந்தையோடு இருக்கும் அவளிடம் அதிர்ச்சியான, சங்கடம் தரும் விஷயத்தை சொல்லி கலவர படுத்த வேண்டாம் என்று எண்ணி சந்தனாவிடம் எதையும் கூறவில்லை.
சந்தனா இரண்டு மூன்று தினங்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்தாள். அவள் கைப்பேசி அழைப்பினை ஏற்கிறாளோ இல்லையோ யாதவ் தினமும் ஒருமுறையேனும் அவளை அழைப்பான். ஆனால் மூன்று தினங்களாக எந்த அழைப்பும் வராது போகவே மிகவும் பயந்து போனாள்.
கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய், அவளே அவனுக்கு அழைத்தும் பார்த்தாள். ஆனால் யாதவின் கைப்பேசி பேட்டரி குறைந்து கவனிப்பாரின்றி அணைந்திருந்தது. சந்தனாவின் பயம் மேலும் அதிகமானது.
யாதவுக்கு என்ன ஆனதோ என சந்தனாவின் மனம் பெரிதும் தவிக்க, சில தினங்களில் அவள் கவலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அவளுக்கு சூர்யாவிடம் விசாரிக்கலாம் என்ற எண்ணம் ஆக்கிரமித்தாலும், அவனிடம் என்னவென்று சொல்வது, யாதவிடம் சண்டை என்பதை எப்படி அவள் கூறுவாள் அது அவர்களின் அந்தரங்கம் அல்லவா அதை எப்படி வெளிப்படுத்த, இந்த எண்ணங்கள் எழவே சூர்யாவிடம் கேட்கலாம் என்பதைப் பற்றி அதன் பிறகு அவள் சிந்திக்கவில்லை.
யாதவோ கொஞ்சம் தேறியதும் அவன் கண்கள் தேடியது சந்தனாவைதான். சுந்தரேஸ்வரி அம்மாள் அவன் தேடலை உணர்ந்து சந்தனாவிடம் யாதவின் உடல்நிலைப்பற்றி கூறாததையும் அதற்கான காரணத்தையும் கூறினார். மறந்தும் அவனிடம் பழைய விஷயங்களை பேசாமல், துளியும் கோபம் காட்டாமல் யாதவிடம் பழையபடியே பேசினார்.
யாதவ் இருந்த நிலையில் அவனை பார்த்த பிறகு அவன்மீது எப்படி கோபத்தை தக்க வைக்க முடியும். பெரியவர்களின் கோபம் சமாதானம் ஆனதிலேயே யாதவ் பாதி தேறி விட்டான். இப்பொழுது மனமெங்கும் உற்சாகமாகவே சந்தனாவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.
ஆனாலும் பாட்டி நினைப்பதும் சரிதான், இது போன்ற நேரத்தில் அவளை வருத்த வேண்டாம். சந்தனா எப்படியும் அழைப்பை எடுக்க போவதில்லை, ஒருவேளை எடுத்து எனது குரலிலிருந்தே எனது உடல்நிலையை அறிந்து விட்டால்…? உடல்நிலை தேறிய பின்னரே அழைத்து பேசிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
கிட்டத்தட்ட பத்து நாட்களாக ஓய்வெடுத்து ஓய்வெடுத்து களைத்து போய்விட்டான். கொஞ்சம் உடல் நிலை தேரியதும் சந்தனாவுக்கு அழைத்தான். சில தினங்கள் கழித்து சந்தனாவுக்கு அழைக்கிறான், அவனுள் ஏதோ ஒரு நம்பிக்கை இந்த முறை அவள் அவனுடைய அழைப்பை புறக்கணிக்க மாட்டாள் என்று. யாதவின் எண்ணம் பொய்க்கவில்லை. சந்தனா அவனுடைய அழைப்பை ஏற்றாள்.
சந்தனாவுக்கு யாதவின் அழைப்பு வந்ததும் அவளுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக கைப்பேசியை அணைத்து வைத்து அவன் படுத்தியது நினைவு வர, அழைப்பு முடியும் தருவாயில் சற்று கோபமாகவே அதனை ஏற்றாள்.
அழைப்பினை எடுத்தவள் அவனை பேச கூட அனுமதிக்காமல், “என்ன இவ்வளவு நாளா போன் செய்யாம ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என வேகமாக பொரிந்து தள்ளினாள்.
ஏனோ யாதவுக்கு இன்று அவளுடைய கோபம் பழையபடி உற்சாகத்தை கொடுத்தது. மெல்லிய புன்னகையோடு, “எனக்கு போன் செஞ்சயா தங்கம்???” என்று கேட்டான் அவளிடம்.
“நான் ஏன் உங்களுக்கு போன் பண்ண போறேன்…” எங்கிருந்தோ தேடி பிடித்து வரவழைத்த கோபத்தோட கூறினாள். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்ட அவனுடைய குரலினால் அவள் அடி மனம் முழுவதும் இன்ப ஊற்று பொங்கி அது அவள் முகத்த்திலும் பிரதிபலித்துக் கொண்டு இருந்தது.
“பாரேன் தங்கம்… எனக்கு போன் செய்யாமையே என் போன் ஆஃ ப் ல இருந்ததை கண்டு புடிச்சு வெச்சு இருக்கிற…. உன் அறிவே அறிவு….”
சந்தனாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தன்னை கண்டு கொண்டு விட்டானே என்ற வெக்கம் ஒருபுறம், உடனே சமாதானம் ஆகக் கூடாது என்ற ஈகோ மறுபுறம். பேசாமல் அவனுடைய அழைப்பை துண்டித்துவிட்டாள்.
சந்தனாவுக்கு யாதவுடன் பேசிய மகிழ்ச்சி ஒரு புறமும், யாதவ் தன்னை கண்டு கொண்டு விட்டானே இனி கோபத்தை எப்படி தூக்கி வைப்பது என்ற எண்ணம் மறுபுறமுமாக இருந்தது.
“எப்படி கண்டுகொண்டார்… நாம்தான் கொஞ்சம் அவசரப்பட்டு உளறிட்டோம்…” தன்னை தானே நொந்து கொண்டு இருந்தாள்.
யாதவின் மனம் மகிழ்ச்சியில் புரண்டது. அவளுக்காக சில குறுந்செய்திகளை அனுப்பிவிட்டு அதனை படிப்பவளின் முகம் எப்படி சிவக்கும் என மனதில் கற்பனை செய்து கொண்டே புன்னகையோடு படுத்திருந்தான்.
பாட்டியும் அன்னையும் தன்னிடம் பழையனவற்றை எதையும் கிளறாமல் இயல்பாக, பாசமாக பேசுவதே யாதவுக்கு பெரிய சந்தோஷம் என்றால், சந்தனாவின் இயல்பும் அவனுக்கு பெரும் தெம்பைக் கொடுத்தது. இழந்த சொர்கத்தை மீட்ட உணர்வு, வான வீதிகளில் உலாவும் பிரம்மை, உலகையே வென்று விட்டது போன்று உவகை.
அவனுக்காக பழச்சாறுடன் அவன் அறைக்கு வந்த துளசி இங்கே வந்ததிலிருந்து இறுக்கமான மனநிலையில் இருந்த யாதவின் முகம் இன்று மலர்ந்திருந்ததை வாஞ்சையுடன் பார்த்தார்.
“என்ன தம்பி பாப்பா கூட சமாதானம் ஆகிட்டீங்க போல” அக்கறையாக பழச்சாறை கொடுத்தவாறே கேட்டார்.
இவருக்கு எப்படி தெரியும் என்ற யோசனையிலேயே அவருக்கு பதில்கூட சொல்லாமல் சற்றே திருதிருவென முழித்தபடி அமர்ந்திருந்தான்.
“என்கிட்டே யாரும் சொல்லலை தம்பி.. நானாதான் கேக்கிறேன்…” என்றவர் அவனிடம் எந்த பதிலும் வராது போகவே அவரே மேலும் தொடர்ந்து,
“இங்கே வந்ததிலிருந்தே பாப்பா முகம் சரி இல்லை. நீங்களும் இந்த பக்கமே வரலை. பாப்பாவை நான்தான் ஹாஸ்பிடல் செக்கப்புக்கு கூட்டிட்டு போறேன்… டாக்டர் அவகிட்ட அடுத்த முறை ஸ்கேன் எடுக்கணும் முடிஞ்சா உங்க ஹஸ்பெண்டையும் கூட்டிட்டு வாங்க அப்படின்னு சொன்னாங்க…”
“அவ முகத்துல சந்தோசமே இல்லை சாதாரணமா தலையை ஆட்டிட்டு வந்தா… உங்களை பத்தி பேசுனாலே பூரிச்சு போகிறதைதான் பார்த்து இருக்கிறேன் அவளை இப்படி பார்த்ததே இல்லை அதுதான் கேட்டேன்” என்றார்.
இப்பொழுதும் யாதவ் மௌனத்தையே தொடர்ந்தான். அவன் செய்த தவறை எண்ணி வேதனை கொன்டான். சந்தனா தன் மீது எத்தனை கோபத்தில் இருந்திருப்பாள் என்பதனை எண்ணி இப்பொழுதும் முகம் வாடி வதங்கி போனான்.
அவன் முகம் வாடுவதை பார்த்த துளசி, “கவலை படாதீங்க தம்பி எல்லாம் சரியா போகும். குடும்பம்னு இருந்தா சண்டை சச்சரவு இருக்கத்தானே செய்யும்… இன்னும் நாலு நாளில் அவளுக்கு ஸ்கேன் எடுக்க போகணும் அப்போ இங்கே வருவா அப்ப சமாதானம் செஞ்சுடுங்க” என்று ஆறுதலாய் கூறினார்.
அவன் முகம் மீண்டும் மலர்ந்தது, மலர்ச்சியுடனே “தேங்க்ஸ் அத்தை” என்றான்.