இவ்வளவு பேசும் போதும் நாகேதிரனும் தருணும் அங்கேயே தான் இருந்தனர். “அச்சோ, இந்த பெண் பேரிலா? வராமல் இருந்திருக்கலாமோ!” என்று தோன்றிய போதும் வராமல் இருந்திருக்க முடியாது என்று தெரியும்.

திரு இருவரின் தொழிலையே முடக்கி இருந்தான். “நீங்கள் என் பணத்தை திரும்ப கொடுக்காமல் செயல் பட முடியாது” என்பது போல,

சத்தம் மட்டும் தான் போடுவான் திரு என்று இருவரும் நினைத்திருக்க, அவர்களிடம் பணத்தை கொடுங்கள் என்று ஒரு வார்த்தை கூட கேளாமல், அவர்களையே தன்னை வந்து பார்த்து, இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்க செய்திருந்தான். அந்த அவகாசமும் பாதி பணம் கொடுத்த பிறகே கொடுத்திருந்தான்.

நாகேந்திரனுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் வெங்கடேஷிற்கு தெரியும், தருணிற்கு கொடுக்கும் நெருக்கடிகள் ராதாவிற்கு தெரியும். இருவரிடம் சொல்லியே செய்தான். ஆனாலும் இருவரும் தெரிந்தது போல யாரிடமும் காண்பித்து கொள்ளவில்லை.   

மொத்தத்தில் அண்ணன், தங்கை, தம்பி என அவர்களின் ஒற்றுமை யாருடைய கண்களையும் கவராத போதும் மிகவும் ஸ்திரமாய் இருந்தது.

அதனால் திருவை தெரிந்தவர்களாக அவர்கள் அமைதியாயிருக்க, அவனின் சித்தப்பாக்களே யோசனையோடு பார்த்து இருந்தனர்.

முகம் முழுவதும் புதர் போல தாடி மண்டி கிடக்க, திரு பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தான்.

“எதுக்குடா இப்படி இருக்க?” என்று வீட்டினர் கேட்டிருக்க, பார்ப்பவர்கள் கேட்க , வேண்டுதல் என்று முடித்து விடுவான்.

“என்ன வேண்டுதல்?” என்று துளசிக்கு தானே தெரியும், ஆம்! மீசை வைப்பதற்காக என்று புரிந்து, மீசையோடான அவனின் முகம் பார்க்க அத்தனை ஆவலாய் இருந்தாள். இன்னும் கண்ணில் காட்டவில்லை திரு.

கூடவே துளசியிடம் வந்திருந்த ஒரு நிமிர்வு யாரும் எதிர்பாராதது. பேச்சுக்கள் இல்லவே இல்லை, அந்த பார்வை, அந்த முகத்தினில் தெரிந்த ஒரு தீட்சண்யம், யாரையும் அவளிடம் முன்பு போல வம்பு செய்ய விடவில்லை. திருவினது அங்கீகாரம் தானாக எல்லாம் அவளுள் கொண்டு வந்திருந்தது. 

அவனை அதட்டும், அதிகாரம் செய்யும், கோபப்படும், சண்டையிடும் துளசியை திரு எதிர்பார்க்க, இல்லை, அது மட்டும் அவளிடம் வரவே இல்லை. ஆனால் கொஞ்சலும் உரிமையும் நன்கு வெளிப்பட ஆரம்பித்து இருந்தது. அது கூட அவர்களின் தனிமையில் மட்டுமே. மகளின் முன் கூட காண்பிக்க மாட்டாள்.  

ஆனால் மற்றவர்களை நன்கு கையாண்டாள். திருவிற்கு புரிந்தது, இது உடனே வந்திருக்க கூடியது அல்ல. இயல்பிலேயே அவளிடம் இருந்திருக்க கூடும். ஆயினும் அதனை காண்பித்து இருக்க மாட்டாள் என்று. எதுவோ ஒன்று இதுவாகினும் தேறிக் கொண்டாளே என்பது தான் அவனின் எண்ணம்.

பூஜை செவ்வனே முடிய, அதன் பிறகு துளசிக்கு ஏழாம் மாதம் வளவி பூட்டினர்.

அந்த மாதத்தில் அதுவே நல்ல நாள் என்பதால் எல்லாம் அன்றே. இரண்டாவது குழந்தை என்பதால் பெரிதாக செய்யவில்லை என்றாலும் வீடு வரை செய்ய அகிலாண்டேஸ்வரி ஆசைப் பட்டார்.

துளசியின் அம்மா வீட்டினர் மற்றும் மேகநாதனின் உடன் பிறந்தவர்கள் வீடு மட்டுமே!

அவளை அமர வைத்து நலங்கிட்டு, வளையல் போட்டனர். முன்பு உடல் எடை குறைந்திருக்கிறது என்றது போய், இப்போது நன்றாக எடை அதிகரித்து இருந்தாள். உடல் நன்றாகவே பூசி இருந்தது.

மீரா அவளிடம் வந்தவுடனே கேட்டு இருந்தாள், “என்ன அக்கா இவ்வளவு வெயிட் போட்டுட்ட? இன்னும் மூணு மாசம் இருக்கு! அப்போ இன்னும் போடுவ!”  

“தானா போடுது, நான் என்ன பண்ண? இப்போ சாப்பாடும் குறைக்க முடியாது. குழந்தை பிறந்து ஒரு வருஷம் கழிச்சு பார்த்துக்கலாம்” என்றாள் அசால்டாய் துளசி.

“இப்படியே போ, யாரு இந்த குண்டு லேடின்னு மாமாக்கு உன்னை அடையாளம் தெரியாது. துளசியை காணோம்னு யார் பின்னேயாவது போயிடப் போறார்” என கிண்டல் செய்தாள்.

“அப்படியா இரு, உன் மாமா கிட்ட கேட்கலாம்!” என்று திருவை தேடுவது போல பாவனை செய்ய,  

“அம்மாடி, உன் கிட்ட சொன்னேன் பாரு!” என்று மீரா ஓடியே போனாள்.

திருவாவது வேறு ஒருத்தியின் பின்னால் போவதாவது, தாலி கட்டியதில் இருந்து காதலித்த பெண்ணின் பின் கூட, அவன் காதலி என்ற எண்ணத்தோடு போனதில்லையே. அவளை காப்பாற்ற ஒரு நல்ல வாழ்க்கை அவளுக்கு அமைய என்று தானே உதவ போனான். நெறி தவறாத மனிதன் என் கணவன் என்ற கர்வம் துளசியின் முகத்தினில் அப்பட்டமாய் தெரிந்தது. அந்த கர்வத்தோடே அவளின் பார்வை திருவை தொட்டு தொட்டு மீண்டது.

“எதுக்கு இவ நம்மை இப்படி பார்க்கிறா? கண்லயே சாப்பிடறா என்னை?”  என்று திருவின் மனது முழுவதும் உல்லாசங்கள்.    

பெண்கள் எல்லோரும் வளையல் இட்டு முடிக்க கடைசியாய் ராதா வந்தவள், “உங்க பொண்ணு போட்டோ எடுக்க ஃபோகஸ் லைட்டே வேண்டாம் அண்ணி,  உங்க முகமே அவ்வளவு ப்ரைட்டா பளிச்சின்னு இருக்கு!” என்று சொல்லியடி சந்தனத்தை எடுத்து அதிகப் படியாய் துளசியின் கன்னங்களில் அப்பினாள்.

ஆம்! அந்த நிகழ்ச்சியில் படம் பிடித்துக் கொண்டிருந்தது மீனாக்ஷி, அப்பாவிடம் சொல்லி கேமரா வாங்கியிருந்தவள், அம்மாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தாள். அதற்க்காக ஒரு நாள் கிளாஸ் அவளின் அப்பாவோடு சென்று படித்தாள். பதிமூன்று வயது பிறந்திருக்க, அந்த வயதிற்கு சற்று அதிகம் தான் ஆனாலும் திரு உடன் சென்று மகளுக்கு பயிற்று வித்தான்.

விளைவு தரையில் முட்டிகாலிட்டு அமர்ந்து போகஸ் செய்து கொண்டிருந்தாள்.   

“மீனா அம்மாவை மட்டும் எடுக்கக் கூடாது, வந்தவங்களையும் எடுக்கணும்” என்று வெங்கடேஷ் சொல்ல,

“அம்மாவை முதல்ல எடுக்கறேன் சித்தப்பா, அப்புறம் எல்லோரையும் எடுக்கலாம். நீங்க நான் ஃபோட்டோ எடுக்கற வரை யாரையும் வெளில விடக் கூடாது!” என்று அதட்டி சொல்ல,

“இது வேறையா!” என்று வெங்கடேஷ் நொடிப்பது போல பாவனை செய்தான்.

“இது வேறையா இல்லை, இது மட்டும் தான் உங்க வேலை!” என்றவள் “சித்தி” என்று ஷோபனாவையும் அழைத்து “சித்தப்பா, நான் சொன்ன வேலையை செய்யறாரா பார்த்துக்கங்க” என்று அவளையும் இழுத்தாள்.

“ஆன்னா ஊன்னா என் பொண்ணு எனக்கு ஃபோன் பண்ணுவா, பேசுவா, நடக்கிறதெல்லாம் சொல்லுவா, இப்போல்லாம் அப்படியே மாறிட்டாளே!” என்று சாரதா பார்த்திருந்தார்.

அடுத்து திரு வந்தவன், கண்ணாடி வளையல்களையே அணிவித்தான். பின் அவளின் கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் பொட்டு வைக்க,

ஒன்றோன்றிர்க்கும் “அப்பா இருங்க, இங்க பாருங்க, இன்னும் கொஞ்சம் திரும்புங்க” என்று மீனாக்ஷி படுத்தி எடுத்தாள். அவள் செய்த கலாட்டாவில் மனைவியின் முகத்தில் கூட திருவின் கவனமில்லை.

“அப்பா போயிடறேனே ப்ளீஸ்” என்று திரு ஏறக்குறைய கெஞ்சல் குரலில் கேட்டான்.

“அதெல்லாம் முடியாது” என்று வித விதமாய் எடுத்தவள்,

“இப்போ அம்மா பக்கத்துல நில்லுங்க, இந்த ஒரு ஷாட் மட்டும் தான்!” என்று நிறுத்தி வைத்தாள். துளசி அமர்ந்திருக்க திரு அவளின் பின்னால் அந்த நாற்காலியை பிடித்த படி நிற்பது போல.

எல்லாம், எல்லாம், துளசி ஒரு வாடாத புன்னகையோடு பார்த்திருந்தாள்.

ஷாட் வைத்தவள் ராதாவை கூப்பிட்டு “அத்தை, அம்மா முகத்துல சந்தனம் இருக்கு, அப்பா முகத்துல அது மிஸ்ஸிங்! பூசிவிடுங்க!” என,

எல்லோர் முகத்திலும் சிரிப்பு!

“உங்கப்பன் முகத்துல தாடி தான் இருக்கு, எங்க முகம் தெரியுது!” என்று அகிலாண்டேஸ்வரி நொடித்தார்.

“மீனா அதெல்லாம் வேண்டாம்” என்று திரு நகர, துளசியின் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு!

திரு நகரப் போக, “வெங்கடேஷ் பிடி” என்று ராதா சொல்ல,

வெங்கடேஷ் விரைந்து பிடித்து கொண்டான், திமிரியா விடு பட முடியும்? “விடுங்கடா” என்று பரிதாபமாய் திரு சொன்னான்.

ராதா வந்து அவனின் கன்னத்திலும் அப்பி விட்டாள்.

மக்கள் மூவரும் இந்த கலாட்டா செய்ய, மீனாக்ஷியின் கேமரா எல்லாம் படம் பிடித்தது. ஒரு வழியாய் பின் திருவை துளசியின் பின் நிற்க வைத்து புகை படம் எடுத்த பிறகு தான் அந்த இடத்தை விட்டு திருவால் நகர முடிந்தது.

“ஷப்பா” என்று வந்து திரு அமர, துளசியின் பார்வை முழுவது திருவிடம் தான்.            

அவனின் பக்கத்தில் அமர்ந்த ராதா, “என்ன அண்ணா, நீ எதோ ஸ்பெஷலா அண்ணிக்கு தங்கமோ வைரமோ மரகதமோ இப்படி வளையல்  போடுவேன்னு பார்த்தா, இப்படி ஏமாத்திட்டியே”  என்று வாயடித்தாள்.

“அதெல்லாம் யார் வேணா போடலாம், எப்போ வேணா போடலாம், ஆனா இப்போ இது தான் போடணும்! கண்ணாடி வளையல் தான் சுமங்கலி பொண்ணுங்களுக்கு அழகு, அதையும் விட இப்போ இந்த சத்தம் வயத்துக்குள்ள இருக்குற குழந்தையோட பேசுமாம்” என்று திரு பேசிக் கொண்டே மனைவியை பார்த்தான்.

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கவிதையாய் இருக்க, மீனாக்ஷி அதையும் படம் பிடித்தாள்.

அவ்வளவு இனிமையான ஒரு நாள் துளசியின் வாழ்வில் வந்ததே இல்லை.  

ஒரு இனிய கனவு போல இருந்தது.   

அவளையே பார்த்திருத்த திருவிற்குள் ஷெரினாவின் ஞாபகங்கள். திருமணத்திற்கு பின்னான அவனின் வாழ்வு எப்போதும் நிம்மதியான ஒன்று தான், அதையும் விட இப்போது உயிர்ப்பு, காதல், மகிழ்ச்சி என்று திளைக்க, அவளது வாழ்வு முடிந்தே விட்டது.

ஷெரீனாவின் வாழ்க்கையும் தன்னதை போல நன்றாய் இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மனதின் ஒரு ஓரத்தில் கூட அவளோடு தன்னுடைய வாழ்வு இருந்திருக்க கூடாதா என்று இப்போது மட்டுமல்ல, திருமணம் முடிந்த பின் எப்போதுமே தோன்றியதில்லை.  

நடப்பவை எவற்றிர்க்கும் யாரும் காரணமல்ல என்று சொல்லிக் கொண்டாலும், நடந்தவை எதுவும் இல்லை என்றாகிவிடாது, அதன் காரணியும் அவன் இல்லை என்றாகிவிடாது.

மனதில் ஒரு வலி தானாய் எழுந்தது.

அதனை திருவின் முகமும் பிரதிபலிக்க,

நொடியில் அதனை உணர்ந்த துளசி “என்ன?” என்பது போல இரு புருவம் உயர்த்தினாள்.

“ஒன்றுமில்லை” என்பது போல தலையசைத்தவன், இரு உதடுகளையும் குவித்து யாரும் அறியாமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மாத்திரையில் சத்தமின்றி முத்தமிட்டான்.   

வித விதமாய் முத்தமிடும் கலையை கற்றும் இருந்தான், கற்றுக் கொடுத்ததும் இருந்தான், அது அவளை தொட்டு, முத்தமிட்டு!  

அன்பாய், அணைப்பாய், காதலாய், காமமாய், வேட்கையாய், ஊடலாய், கூடலாய், சண்டையாய், சமாதானமாய், மயக்க, மயங்க, எனப் பலப் பலவிதம்.

அதில் இது எந்த விதம்?

அதுவும் தொடாமல்!  

மனதை மறைக்க ஒரு முத்தம்!

இந்த முத்தம் நிறைய கணவன்மார்களிடம் பிரசித்தம்!

இதுவும் சத்தமில்லாத ஒரு முத்தம்!

மனைவியின் சிரிப்பை வாட விடக் கூடாது என்று கொடுக்கப் படும் முத்தம்!