அத்தியாயம் இருபத்தி ஒன்று:  

திரு துளசியை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் அவர்கள் முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். அதாகப்பட்டது முன்பு போல காலையில் எழுந்து திரு ஷட்டில் ப்ராக்டிஸ் சென்றான். ஆனால் நேரமாக வந்து மீனாக்ஷியை அவனே பள்ளிக்கு கொண்டு விட்டு வந்து குளித்து உண்டு மில்லுக்கு கிளம்பினான். மதியம் வருவான், உண்பான், கிளம்புவான். மாலை மீனாக்ஷியை விட வருவான், காஃபி குடிப்பான், கிளம்புவான். இரவு வருவான், உண்பான், உறங்குவான்.

என்ன துளசியின் முகம் பார்த்து பத்தி சொல்ல ஆரம்பித்து இருந்தான். ஆனால் துளசி கேள்வி கேட்டால் தானே.

ஆம்! பேச்சுக்கள் அதிகம் இருவருக்குள்ளும் இன்னும் வரவில்லை, அவசியமான பேச்சுக்கள் மட்டுமே!

ஆனாலும் கண்ணுக்குள் வைத்து தான் தாங்கினான். இதுவரை முகம் பார்க்காமல் காலையில் துளசியிடம் வாங்கிய காஃபிக்கும் இப்போது பளிச்சென்ற புன்னகையோடு துளசியிடம் வாங்கும் காஃபிக்கும் அவ்வளவு வித்தியாசம். அந்த புன்னகையிலேயே துளசியின் அன்றைய நாள் அழகாகிவிடும். கனிவான பேச்சுக்கள் திருவிற்கு வரவிட்டாலும் அந்த அதட்டல் பேச்சிலேயே தெரியும் கனிவும், அக்கறையும், துளசிக்கு மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் அனைவருக்கும் புரிந்தது.

மேகநாதனிற்கு பல வருடங்களுக்கு பிறகு அப்படி ஒரு நிம்மதி மனதினுள்!

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் யாரும் கவனியாதவாரு அவனின் பார்வைகள் துளசியை தொடரும், அது துளசிக்கு அவளையறியாமல் மனதிற்கு ஒரு இதத்தையும் தைரியத்தையும் கொடுத்தது என்றால் மிகையல்ல.

அவ்வபோது “துளசி” என்ற திருவின் குரல் அவன் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. ஆனால் இன்னும் “என்னங்க” என்றோ “வர்றேங்க” என்ற துளசியின் சத்தமோ ஓங்கி ஒலிக்கவில்லை.

அவனின் அழைப்பிற்கு பதிலாய் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டு வேகமாய் அவன் முன் சென்று நின்று கொள்வாள்.

“எதுக்கு இவ்வளவு வேகமா வர்ற? இதோ வர்றேன்னு ஒரு சத்தம் கொடுக்க வேண்டியது தானே!” என்று திரு கடிந்தாலும் தலையை தலையை ஆட்டுவாள், ஆனாலும் குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கவே ஒலிக்காது. முன்பாவது மகளிடம் ஒலிக்கும் இப்போது அவளிடமும் இல்லை.

மீனாக்ஷி தான் குறும்பே செய்வதில்லையே, திருவின் ஆதிக்கம் மீனாக்ஷியிடம் அதிகம் இருக்க, கொஞ்சம் பொறுப்பாய் மாறிக் கொண்டு இருந்தாள். இயல்பிலேயே புத்திசாலி, படிப்பில் கவனமில்லாமல் இருந்தாள்.

இப்போது திரு அவளை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டு இருந்தான். அவனுடைய போதனைகளும் அவனை போலவே வித்தியாசமானவை.

“நான் உன்னை ஃபர்ஸ்ட் வான்னு சொல்லலை. ஆனா நாம ஃபெயில் ஆகக் கூடாது. உன் கிளாஸ்ல நாற்பது பேர் இருக்காங்களா, நீ அதுல பெஸ்டா வரணும்னு கிடையாது. ஆனா நீ கிளாஸ் ஒரு கவனிக்கப்படற ஆளா இருக்கணும். முன்னையும் அப்படி தான் இருந்த, ஆனா அது வேற அது உன்னோட டல்நெஸ்னால, நீ பண்ணின கலாட்டானால. இனி அப்படி இருக்கக் கூடாது” என பேசினான். சமயம் கிடைக்கும் போதெல்லாம் வேறு வேறு வார்த்தைகளை கொண்டு.

மீனாக்ஷிக்கு திருவின் மீது என்ன கோபம்? அம்மாவிடம் அவன் நடந்து கொண்ட முறை தான், இப்போது திரு துளசியை திட்டுவதில்லை என்பது மட்டுமே மீனாக்ஷிக்கு போதுமானது. அப்பாவிடம் ஃபிரண்ட் ஆகிவிட்டாள். ஆம்! ஃபிரண்ட் தான் ஆகிவிட்டாள். அப்படி தான் திரு மீனாக்ஷியை நடத்தினான். கண்டிப்பு நிச்சயம் இருந்தது, ஆனால் முன்பு போல அதட்டல் உருட்டல் மிரட்டல் இல்லை.    

திருவின் நிம்மதியான வாழ்க்கை அவனின் முரட்டுத்தனத்தை சற்று குறைக்க ஆரம்பித்தது.          

அதனையும் விட திரு துளசியின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான விஷயம் இருவரும் ஒரே படுக்கையை பகிர்ந்து கொண்டது. ஆம், திருமணமான நாள் முதல் அது இருந்தது இல்லை. எப்போதும் அவனின் ரூம் உள்ளே ஒரு ரூம் என்பதால் இவன் வெளியில் இருந்த ரூமில் தான் படுத்துக் கொள்வான்.

அவனின் தேவைகளுக்கு மட்டுமே உள்ளே செல்பவன், பின் வெளியில் வந்து படுத்துக் கொள்வான். இந்த சில வருடங்களாக தான் அவனுக்கு கட்டில் மெத்தை எல்லாம்.

அதற்கு முன் வெறும் தரை தான் அவனின் படுக்கை. துளசியை கீழே படுத்துக் கொள் என்று சொல்லியிருந்தாலும் அவள் செய்திருப்பாள் ஆனால் சொன்னதில்லை.

துளசி கூட சில முறை “நீங்க இங்க படுத்துக்கங்க, நான் கீழ படுத்துக்கறேன்” என்று சொல்லியிருக்கின்றாள், ஆனால் சில முறை தான். அதன் பிறகு அவளின் கர்ப்பம் பின்னே குழந்தை, அதனால் அவள் மேலேயே உபயோகித்து கொள்ள, 

இவன் முன் ரூமில் வெறும் தரையில்! வெறும் தரையில் தான் எப்போதும் அவனின் உறக்கம். மீனாக்ஷிக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு “அப்பா ஏன் கீழ படுக்கறார், பெட் கூட இல்லை” என்று கேட்ட பிறகு துளசி தான் “கீழ படுக்காதீங்க, மீனாக்ஷி கேள்வி கேட்கறா” என்ற பிறகு தான் கட்டில் மெத்தை எல்லாம்.

மீனாக்ஷியுடன் ஃபிரண்ட் ஆனதும் திரு செய்த முதல் வேலை, “நீ இனிமே தனியா படுக்கணும், நீ வளர்ந்துட்ட, அம்மாவை எப்பவும் தேடக் கூடாது” என அதையும் இதையும் சொல்லி துளசியை தன்னோடு அழைத்துக் கொண்டான்.

அதை செய்து முடிப்பதற்குள் அவன் பட்ட பாடு!! ஷப்பா!!!

துளசியிடம் தான் முதலில் சொன்னான், “நீ இங்கே என்னோட படுத்துக்கோ” என்று.

“மீனாக்ஷி விட மாட்டா என்னோட தான் படுக்கணும்ன்னு சொல்வா”

“நீ சொல்லு, நீ பெரிய பொண்ணாகிட்ட தனியா படுக்கணும்னு”

“நானா.. அதெல்லாம் முடியாது! என்னை நிறைய கேள்வி கேட்பா”

“இப்போ நீ என்னோட படுத்துக்குவியாயா? மாட்டியா?” என்று கோபமாக ஆரம்பித்தவன், “ஏற்கனவே நிறைய வருஷம் போச்சு” ஆதகங்கமாக முடித்தான்.

“நானா வேண்டாம்னு சொன்னேன்” என்றெல்லாம் துளசி சண்டையிடவெல்லாம் இல்லை.

“என்னால அவ கிட்ட நான் அப்பாவோட படுத்துக்கறேன்னு சொல்ல முடியுமா? நானெல்லாம் சொல்லவே மாட்டேன்!”.

“அப்படி சொல்லாத, நீ இனிமே தனியா படுக்கணும்னு சொல்லு!”  

“ஏதாவது சொதப்பிட்டேன்னா, அவ நிறைய கேள்வி கேட்பா, அப்புறம் அந்த சான்சே எடுக்க முடியாது” என்று துளசி கவலையாக சொன்ன விதத்தில்,

“சரி! நானே பார்த்துக்கறேன்” என்று தான் திரு களத்தில் இறங்கினான்.

செய்து முடிப்பதற்குள் எப்படி மீனாட்சியிடம் பேச என்று எத்தனை ஒத்திகை! எத்தனை வார்த்தை கோர்வைகள்! ஷப்பா எப்படியோ செய்து முடித்து விட்டான்!

இதுவரை அவனின் வாழ்க்கையில் செய்த சாதனை என்ன என்று கேட்டால் இதனை தான் சொல்லுவான்! ஆனால் மனதிற்குள்!

இதோ துளசி அவனின் அருகில், அவளின் சோர்வு குறைந்து விட்டது. ஒரு அமைதி அவளிடம் வந்து விட்டது. மனது அதையும் இதையும் நினைக்கவில்லை. ஆனாலும் திருவிற்கு போதவில்லை, அவளிடம் இன்னும் ஒரு கலகலப்பை எதிர்பார்த்தான்.

இந்த யோசனை மனதில் தோன்றும் போதே துளசியிடம் அசைவு தெரிய,  அவளை பார்த்திருந்தான்.

விழிப்பு வரவும் துளசியும் அவனை தான் பார்த்தாள் “தூங்கலையா?” என்றவளிடம்,

“பன்னண்டு மணி தான் ஆகுது. இன்னும் தூக்கம் வரலை, இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் தூங்க!” என்றான்.

துளசி எழுந்து அமர, அவனும் எழுந்து அமர்ந்தான்!

“எப்பவுமே இப்படி தான் தூங்குவீங்களா? எனக்கு அது கூட தெரியலை! பத்து பத்தரைக்கே தூங்கிடுவேன்!” என்று கவலையாகப் பேச,

“நான் தூங்கலைன்றது எப்படி தெரியும்! நான் தான் உன்னை என் பக்கத்துலயே விடலையே!”

“இருந்தாலும் தெரிஞ்சிருக்கணும் இல்லையா?”

“எப்படி தெரியும்? நான் தான் தெரியவிட்டதே இல்லையே, டீ வீ கூட பதினோரு மணிகெல்லாம் ஆஃப் பண்ணிடுவேன். அப்புறம் சும்மா தான் படுத்திருப்பேன். ஆனா தூக்கம் மட்டும் சீக்கிரத்துல வராது!

“ஏன் வராது?” என்று துளசி கேட்க,

“வேண்டாம்! நாம் அதை பத்தி பேசவே வேண்டாம்! பழசு எதுவுமே பேச வேண்டாம்! இனி எப்படி சீக்கிரம் தூங்கறது மட்டும் யோசிப்போம். இப்போவே எனக்கு முப்பத்தி நாலு வயசு, இப்போ தான் ஒரு குழந்தை பெத்துக்கப் போறேன், பையனோ பொண்ணோ தெரியாது, எப்படியும் ஒரு இருபத்து அஞ்சு வருஷம் நான் ஆரோக்யமா இருக்கணும். அதுக்கு நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு முக்கியம்! சாப்பாடு எனக்கு குறையில்லை எப்பவும் நீ பார்த்துக்கற , தூக்கம் அது சீக்கிரம் தூங்கி பழகணும்” என்றவன் படுத்துக் கொண்டான்.

துளசி அவன் பேசும் வரை அவனையே பார்த்திருந்தவள், அவன் படுத்துக் கொண்டதும் எழுந்து பாத்ரூம் சென்று வந்தாள். இப்போது ஐந்தாவது மாதம் வயிறு கொஞ்சம் நன்றாக தெரிய ஆரம்பித்து இருந்தது.

பின் சென்று மீனாக்ஷியை பார்த்து அவளுக்கு நன்றாக போர்வையை போர்த்தி விட்டு வந்தாள்.

வந்தவள் திருவைப் பார்க்க, அவன் நேராக படுத்து கண்களை மூடி இருந்தான். ஆனால் உறங்கவில்லை என்று புரிந்தது. கையை தலைக்கு முட்டுக் கொடுத்து இருந்தான்.

இந்த ஒரு வாரமாக சேர்ந்து உறங்கினாலும் பக்கத்தில் மட்டுமே படுத்தனர் அவ்வளவே தான்! உடல்கள் கூட உரசவில்லை. துளசியாக அருகில் செல்ல நினைத்தாலும் அந்த உரிமை வரவில்லை, எதோ ஒரு தயக்கம் இருந்தது.

“ஒரு வாரமாக அவனின் பக்கத்தில் உறங்குகிறேன், ஆனால் அவன் எப்போது உறங்குகிறான் என்று கூடத் தெரியவில்லை. அவ்வளவு நிம்மதியான உறக்கம் அவன் உனக்கு கொடுக்க, நீ என்ன செய்கிறாய்” என்ற யோசனை தான்.

திருவிற்கு ஒரு நிம்மதியான உறக்கம் கொடுத்தே ஆகவேண்டும் என்று புரிய, படுத்தவள் நெருங்கி உடல் உரச படுக்க, திரு கைகளை எடுத்து தலையை மட்டும் திருப்பி “என்ன துளசி?” என்றான் அவளின் செய்கையில்.

“என்ன, என்ன?” என்றாள் துளசி ஒரு புன்னகையுடன்.

அந்த மங்கிய ஒளியில் துளசியின் சோபையான புன்னகை அப்படி திருவை வசீகரித்தது.

“அதுதான் நானும் கேட்கறேன், என்ன?”

“ஒன்னுமில்லையே” என்ற துளசியின் முகத்தினில் புன்னகை விரிய,

“ஒன்னுமில்லையா! ம்ம்ம், யோசிக்கணும்? இப்படி நீ என்னை இடிச்சிட்டு படுததேயில்லையே!”

“நான் ஒன்னும் இடிச்சிட்டு படுக்கலை, ஒட்டிக்கிட்டு தான் படுத்திருக்கேன்!” என்று இரு புறம் புருவம் உயர்த்தி பாவனையாக துளசி சொன்ன விதத்தில் திருவின் இதயம் ஒரு நொடி நின்று தான் துடித்தது.

யார் சொன்னது பருவத்தில் தான் காதல் வருமென்று, பருவத்தில் தான் காதல் அதிகரிக்குமென்று, பருவத்தில் தான் பித்தாக்கும் என்று! திருவை கேட்டால் இல்லவே இல்லை என்பான்.