ஃபிரிட்ஜில் இருந்து துளசி பால் எடுத்து காய்ச்சும் வரை கதவில் சாய்ந்து அவளை பார்த்து நின்றிருந்தான். இதற்கு பால் எடுக்கும் போதே “நான் பால் காய்ச்சட்டுமா?” என்று கேட்டும் இருந்தான்.

சமையலறையும் திருவும் எதிர் எதிர் துருவங்கள்!

கேட்டது அவனா என்ற சிந்தனை இருந்த போதும் அமைதியாய் அவனை தலையசைத்து மறுத்தவள், அவளே செய்தாள்.

அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் கூட சேர்த்து விட்டவள், அவனுக்கு ஒரு டம்பளர் கொடுக்க, “முதல்ல நீ குடி” என்றான்.

அவள் அவளின் பாலை சூடு குறையும் வரை ஆற்ற ஆரம்பிக்க,

“எதுக்கு இப்படி ஆத்துற” என்று திரு கேட்கவும்,

“சூடா இருக்கக் கூடாது” என்று துளசி சொன்னாள்.

“கொடு” என்றவன் வாங்கி அதனை ஆற்ற ஆரம்பித்தான்.

திருவிற்கு இதெல்லாம் கூட வருமா என்று துளசி பார்த்திருக்க, அவள் நின்று கொண்டே தன்னை பார்த்திருப்பதை புரிந்தவன், கையினில் இருந்த பாலை கீழே வைத்து, அவளின் அருகினில் வந்தவன், அவள் என்ன என்று உணரும் முன்னே அவளின் இடையில் இரு பக்கமும் கை கொடுத்து தூக்கி சமையல் மேடையில் அமரவைத்தான்.

சிறு சிரமமும் இன்றி இடையில் கை கொடுத்து, எதோ குழந்தையை தூக்குவது போல அனாயாசமாக  தூக்கியதை உணர்ந்த துளசி “ஆங்” எனப் பார்த்திருந்தாள்.

“என்ன அப்படி பார்க்கற துளசி?” என்று பால் ஆற்றியபடியே கேட்க,

துளசிக்கு நடப்பது எதுவும் நம்ப முடியவில்லை!

இப்படியான பொழுதுகள் எல்லாம் அவள் வாழ்வில் வரும் என்று நினைத்தது இல்லை.

பார்த்தது பார்த்தபடியே இருந்தாள்.

“என்ன துளசி?” என்றான் இப்போது திரும்பி அவளை பார்த்து.

என்ன சொல்வது என்று தெரியாமல், “ரொம்ப ஈசியா தூக்கிட்டீங்க ரெண்டு கைல” என்று சொல்ல,

“ஒன்னு நீ வெயிட் குறைவா இருக்கணும், இல்லை நான் ஸ்ட்ராங்கா இருக்கணும். எது உன்னோட சாய்ஸ்?” என்றான்.

திருவிற்கு இவ்வளவு இலகுவாக கூடப் பேச வருமா என்ற ஒரு பிரமிப்பில் இருந்தாள் துளசி.

அந்த பிரமிப்பு அகலும் முன்னே “குடி” என்று அவளின் கையினில் கொடுத்து அவனும் திட்டில் சாய்ந்த படி அவனதை அருந்த ஆரம்பித்தான்.

துளசிக்கு அவளின் உள் இருந்த உடல் சூட்டின் அவஸ்தை கூட குறைந்தது போலத் தோன்றியது.

மெதுவாக அவள் பருக, அவளையே தான் பார்த்திருந்தான் திரு. அந்த பார்வையில் அவளின் கையினில் இருந்த டம்பளர் கூட நடுங்கியது.

“சுடுதா என்ன?” என்று அவளின் கை பிடிக்க,

“இல்லையில்லை” என்ற தலையசைப்பு மட்டும் துளசியிடம்.

“கையெல்லாம் நடுங்குது, என்ன பண்ணுது துளசி?” என்றான் கவலையாக.

“உன் பார்வையின் தாக்கம்!” என்றா சொல்ல முடியும், “ஒன்றுமில்லை” என்பது போல தலையசைத்தவள், மளமளவென்று அதனை குடித்தாள்.

எந்த கேள்வி கேட்டாலும் தலையசைப்பு மட்டுமே வருவதை பார்த்த திரு,

“நான் உன்கிட்ட முன்ன பேசினதில்லைன்னு இப்போ நீ இப்படி பண்றியா துளசி?” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவனின் கேள்வியில் அதுவரை இருந்த துளசியின் முகமே மாறிவிட்டது.

“எப்படி பண்றேன்?” என்றாள்.

“நான் கேட்டா பதில் பேச மாட்டேங்கற” என்றான் சிறுபிள்ளை போல்.

அவனின் முக சுணக்கம் மனதை பிசைய “அது, அது, எனக்கு சட்டுன்னு வர்றதில்லை!”

“ஏன் வர்றதில்லை?” என்ற கேட்ட திருவின் குரலில் நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் அளவுக்கு அதிகமாய் இருந்தது.

“நிறைய லைஃப்ல மிஸ் பண்ணிட்டோம் துளசி. இன்னும் இன்னும் மிஸ் பண்ணவேண்டாம்” என்று சொல்லி கைகளை கட்டி அவள் அமர்திருந்ததற்கு பக்கவாட்டு சமையல் திட்டில் இன்னும் வாகாக பொருந்தி நின்று கொண்டான்.

துளசி அமைதியாய் இருக்க, திருவும் அமைதியாகினான். ஆனால் நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கூர்மையான பார்வை அவளை துளைத்து எடுத்தது.  

தயக்கமாய் ஆரம்பித்தாள், “நான் இங்க கல்யாணம் பண்ணி வந்த பிறகு என்னோட பேச்சு ரொம்ப குறைவு தானே! யாரோடவும் அப்படி சகஜமா பேசறதேயில்லைல்ல மீனாவைத் தவிர, அதான் வர மாட்டேங்குது. அதுவும் உங்க கிட்ட வரவே மாட்டேங்குது” என்றாள்.

“நான் தான் உன்னோட பேசலை ஓகே, ஆனா பாக்கி எல்லோர் கிட்டயும் நீ ஏன் சகஜமா பேசலை? அம்மா எல்லாம் பேசினா வாயே மூட மாட்டாங்க. சரி விடு, எங்க ஆளுங்களை விடு! உன்னோட அப்பா, அம்மா, தம்பி, தங்கைன்னு யார்கிட்டயும் நீ சகஜமா பேசி நான் பார்த்ததில்லை! ஏன்?” என்ற கேள்வியோடு நின்றான்.

“நீங்க என்கிட்டே பேச மாட்டீங்க இல்லையா? அப்போ எனக்கு யார் கூடவும் பேசப் பிடிக்காம போயிடுச்சு” என்றாள் மெல்லிய குரலில் அவனை பார்க்காமல் எங்கோ பார்த்து.   

அவளுடைய இத்தனை வருடங்களின் ஏக்கம் எல்லாம் அந்த குரலில் தெரிய, என்ன பேசுவது என்று கூடத் தெரியாமல் திரு ஸ்தம்பித்து நின்றான்.

“உங்களை பெருசா தப்பு சொல்ல முடியாது! உங்களை பேச வைக்கணும்னு நினைச்சிருந்தா கண்டிப்பா என்னால முடிஞ்சிருக்கும். நீங்க சொன்னீங்க இல்லையா, நான் கொஞ்சறதே இல்லைன்னு, நான் கொஞ்சியிருந்தா எல்லாம் சில வருஷத்துக்கு முன்னமே கூட சரியாகியிருக்கலாம். ஆனா எனக்கு அது பிடிக்கலை!” என்றாள் மெல்லிய தெளிவான குரலில்.

“ஏன்னா எனக்கு தெரியும், நீங்க யாரையோ லவ் பண்ணுனீங்க. என்கிட்டையும் அதை சொன்னீங்க, எல்லாம் எனக்கு தெரியும். ஒரு கட்டாயத்துல தான் நம்ம கல்யாணம் நடந்தது. அதை சரி பண்ண நானா முயற்சி செய்யறது எனக்கு தப்பு மாதிரி தோனுச்சு!”

“எனக்கு நானே சொல்லிக்கிட்டது, நான் இல்லைன்னா வேற யாரையாவது உங்க அப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருப்பார்ன்னு. ஒரு வேளை நான் மறுத்திருந்தா, ஏதாவது செஞ்சு அந்த பொண்ணை கூட நீங்க கல்யாணம் செஞ்சிருக்கலாம், எதுவேணா நடந்திருக்கலாம்! எப்பவும் பைக்ல சுத்துவீங்க, ஸ்கூல் போகும் போது வரும் போது எல்லாம் பார்த்திருக்கேன். எங்கப்பாவோட மொதலாளி வீட்டு பையன்! நீங்க, உங்க வீடு, உங்க வசதி வாய்ப்புகள், நான் கிட்ட நெருங்க முடியாத ஒருத்தங்க. அந்த வயசுல காதல் எல்லாம் சொல்ல முடியாது. அது ஒரு ஈர்ப்பு. எட்ட முடியாத கனவு. உங்க மேல, உங்க வீட்டு மேல, எங்க வீடு மாதிரி கஷ்ட ஜீவனம் இல்லாம, உங்க வசதியான வாழ்க்கை முறைல எல்லாம். திடீர்ன்னு என்கிட்ட அது வரும் போது, நான் எப்படி அதை வேண்டாம்னு சொல்வேன். எங்கப்பா சொன்ன போது எங்கம்மா கூட சின்ன பொண்ணு வேண்டாம்னு முதல்ல ரொம்ப தடுத்தாங்க. என்னோட இஷ்டம் பார்த்து தான் சரின்னு சொன்னாங்க”

“கல்யாணம் செஞ்சு வந்துட்டாலும், வேற ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு சொல்றவங்களை நீ எப்படி கல்யாணம் பண்ணுவ, அவர், இந்த வீடு, வசதி வாய்ப்பு எல்லாம் உன்னை அப்படி வசியப் படுத்துதா, நீ செஞ்சது தப்புன்னு ஒரு நினைப்பு இருந்திட்டே இருந்தது!”

“நான் ரொம்ப சுயநலவாதியா தோணிச்சு. உங்க கிட்ட மட்டுமில்லை, இங்க வீட்ல யார்கிட்டையும் கூட என்னோட உறவை நான் சரி படுத்திக்கணும்ன்னு தோணலை. நீங்களா வந்தா வாழ்க்கை சரியாகட்டும், இல்லை இப்படியே போகட்டும் தான் என்னோட எண்ணம். எப்பவும் நீங்க எப்போ வருவீங்க தான் பார்த்து இருப்பேன். ” 

“ஒரு கட்டத்துல, இனி சரியாகாதுன்னு நினைச்சு, உங்களுக்கு தோணும் போது நீங்க என் பக்கத்துல வர்றது மட்டும் போதும்னு நினைச்சு இருந்தேன். இப்போ திடீர்ன்னு எல்லாம் நீங்க எதிர்பார்க்க, எனக்கு அது வரமாட்டேங்குது!” என்று குரலில் முகத்தில் ஒரு இனம் காண முடியாத பாவனையோடு தவிப்போடு அவள் பேசப் பேச நொடியில் அவளின் அருகில் வந்தவன் அவளை இறுக அணைத்திருந்தான்.

அவளின் தவிப்பு அவனை தவிக்க வைத்தது!

அவனின் அணைப்பிலேயே பேசினாள், “இதெல்லாம் யோசிக்க, யோசிக்க, எனக்கு, எனக்கு…” என்று அவள் தடுமாற,

 “ஷ், பேசாத துளசி” என்று அவளின் முதுகில் மெதுவாய் குழந்தையை தட்டி கொடுப்பது போல தட்டிக் கொடுத்தவன்,

“எது நடந்திருந்தாலும் நடந்ததாவே இருக்கட்டும் எதுவும் யோசிக்காதே! நீ என் பக்கத்துல வரவேண்டாம், கொஞ்ச வேண்டாம், எதுவும் வேண்டாம். எப்பவும் போலவே இரு, எப்போவாவது வர முடிஞ்சா வா, இல்லைன்னா கூட ஒன்னுமில்லை, நானே வர்றேன், நானே உன்னை கொஞ்சிக்குவேன். உனக்கு எந்த டென்ஷனும் வேண்டாம்! புரியுதா?” என்றவன்,

துளசியை விலக்கி அவளின் முகம் பார்த்தான், துளசியும் அவனை தான் பார்த்தாள், அவளின் பார்வை, முகம், இன்னும் ஏதோ அவனிடம் சொல்ல தவிக்கும் உதடுகள், எல்லாம் அவனை எதோ செய்ய,

அந்த உதடுகளில் அழுத்தமாக, ஆழமாக, சத்தமின்றி முத்தமிட்டான்!   

சமையல் மேடையில் துளசி அமர்ந்திருக்க, திரு நின்ற படியே முத்தமிட்ட போதும், உதடுகள் அந்த வேலையில் இருந்த போதும் கைகள் துளசியின் கைகளை தேடி அவனை சுற்றி அவனே போட்டுக் கொண்டான்.

அவனாக போட்ட பிறகு துளசியின் கைகள் அவனை சற்று இறுக்கிப் பிடிக்க, இப்போது திருவின் உதடுகள் அவளை இன்னும் இறுக்கிப் பிடித்தன. அந்த இறுக்கம் துளசிக்கு மிகவும் தேவையாய் இருக்க, அவளுள் இருந்த சஞ்சலங்கள் குறைந்து ஒரு பிடிப்பு, ஒரு தைரியம் வர, முத்தத்தை திரு முடிக்க நினைக்க, துளசி முடிக்க விடவில்லை.

ஆம்! திரு விலகி துளசியின் முகம் பார்க்க, அதில் தெரிந்த உணர்வுகள், அந்த பார்வை, அதில் தெரிந்தது யாசிப்பா, தேவையா, வேட்கையா, ஏக்கமா, எதோ ஒன்று, அவனை முடிக்க விடாமல் மீண்டும் முத்தமிட வைத்தது.

திரு மொத்தத்தையும் முத்தத்தால் காண்பிக்க, மொத்தமாக வீழ்ந்து கொண்டிருந்தாள் துளசி!