Advertisement

அத்தியாயம் பதினேழு :

சீரும் சிறப்புமாய், யாரும் சீர் செய்யாமலேயே மீனாக்ஷியின் விஷேஷம் எந்த வித பிரச்சனைகளுமின்றி சௌக்கியமாய் நடந்து முடிந்தது. கணவனும் மனைவியும் அகத்தின் அழகை முகத்தினில் காண்பிக்காமல் இருப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பதால் விஷேஷம் நன்றாகவே நடந்தது.

விருந்தினர்களை உபசரிப்பதிலேயே நேரம் சென்று விட்டது. வேறு எதுவும் ஞாபகத்திலேயே இல்லை. அதுவும் ஏன் சீர் வேண்டாம் என்று வந்தவர்களிடையே ஆயிரம் கேள்விகள்.

வீட்டினர் எல்லோரும் திருவை தான் காண்பித்தனர் அவனின் முடிவு என்பது போல. அவனோ வேண்டுதல் என்று ஒற்றை வார்த்தையில் அனைவரின் வாயினையும் அடைத்தான்.

மீரா முழுநேரமும் மீனாட்சியிடம் இருந்ததினால் துளசியை அவள் அதிகம் தேடவில்லை.

எல்லாவற்றிற்கும் உச்சமாக நிருபமா அவளின் அப்பா சத்தியநாதனிடம் “அப்பா எனக்கு அவரை பிடிச்சு இருக்கு, கல்யாணம் செஞ்சு வைக்கறீங்களா” என்று பிரசன்னாவை காண்பித்து கேட்க,

மகளின் இந்த பரிமாணத்தில் அசந்து நின்று விட்டார். அவசரமாய் சுற்றும் முற்றும் பார்த்தவர், “இங்க எதுவும் பேசக் கூடாது” என்று அதட்டினார்.

“சரி, பேசலை, நீங்க அவரை நல்லா பார்த்துக்கங்க” என்று சொல்லி விட்டு தூர நகர்ந்து விட நொந்து விட்டார். நிருபமா அப்பாவிடம் அதிக செல்லம், எந்த தயக்கமும் இன்றி எப்போதும் பேசுவாள். அதனால் இதனை அப்படியே சொல்லி விட்டாள்.

பின்னே பிரசன்னா இங்கே வருவது கிடையாதே, அதனால் இப்போது தானே காண்பிக்க முடியும்.

இது எதுவும் பிரசன்னாவிற்கு தெரியாது! நிருபமாவிற்கு அவன் மீது விருப்பம் இருப்பதும் தெரியாது.

அப்போதிருந்தே ஒரு உச்சபட்ச பதட்டத்தில் இருந்தார் சத்தியநாதன்.

இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் விஷேஷம் இனிதாய் நடந்து முடிந்தது. சித்ரா வீட்டினில் எல்லோரும் வந்திருக்க, சாரதாவின் வீட்டினில் சாரதாவும் அவரின் மகனும் மட்டும் வந்திருக்க நாகேந்திரன் வரவில்லை.

ஆனாலும் பெண் மக்கள் இருவரும் அமைதியாக இருந்தனர். ஏனென்றால் இது அண்ணன் வீடல்ல உறவுகள் கூடியிருக்கும் இடம், இங்கே ஏதாவது பேசினால் அவர்களை பெயர் தானே கெட்டு போகும்.

மீனாட்சியின் சடங்குகள் செவ்வனே முடிய, பின்பு பந்தி ஆரம்பிக்க, “இங்க இத்தனை பேர் இருக்காங்க, பார்த்துக்குவாங்க, நீ உட்கார்” என்றான் திரு துளசியிடம். ஆம் வந்திருந்த ஜனக்கட்டு குறைய ஆரம்பித்து இருந்தது.  

துளசியும் வார்த்தையாடாமல் ஒரு சேரில் அமர்ந்து கொண்டாள். காலையில் இருந்து அமராமல் அலைந்து திரிவதில் உடல் அசரிக்கையாய் இருந்தது.

வெகுவாக எந்த பிரச்னையும் வராமல் விஷேஷம் நடந்து கொண்டிருப்பதில் மனதும் மிகவும் ஆசுவாசமாக உணர, அமர்ந்து விட்டாள். அதுவும் அவள் நடந்து வந்துகொண்டிருக்கும் போது திரு பைக்கில் வந்து பார்த்த பார்வை “அய்யோடா, இன்றைக்கு ஒரு வழியானோம்” என்று நினைக்க, அப்போது அரட்டியவன் தான். பின்னே மண்டபம் வந்த பிறகு எதுவுமில்லை. வீட்டிற்கு சென்ற பிறகு எப்படியும் எதாவது வரும் என்று தெரியும். ஆனால் இப்போது ஒன்றுமில்லை தானே, அதுவே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.      

ரத்னா சொல்லியிருக்க பிரசன்னா பந்தி நடக்கும் இடம் சென்று துளசிக்கு குடிக்க மோர் எடுத்துக் கொண்டு வந்தவன், அவளுக்கு கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.

அக்காவும் தம்பியும் அமைதியாக தான் அமர்ந்து இருந்தனர். பேசிக் கொள்வர் தான், ஆனாலும் அவசியமான பேச்சுக்கள் மட்டுமே. துளசிக்கும் அதிக பேச்சுக்கள் வராது, பிரசன்னாவிற்குமே!

அதற்கு நேர்மாற் மீரா! டாக்டர் என்பதையும் மீறி சல சலவென்று வாய் ஓயாமல் பேசும் ஜீவன்.

ஆராத்தி எடுத்திருக்க மீரா மீனாக்ஷியை அவள் அமர்ந்திருந்த மேடையில் இருந்து கீழே இறக்கி கூட்டி வர, மீனாக்ஷி வந்து அம்மாவின் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அம்மா, ரொம்ப டையர்டா தெரியறா மீனா, சாயாத, தள்ளி உட்கார்!” என்று பிரசன்னா சொல்லவும்,

“நான் சாஞ்சு உட்கார்ந்திருக்கேன். ஆனா ரொம்ப சாயலை” என்று மீனாக்ஷி வாய் பேசினாள்.

துளசி தன் உடன் பிறந்தவர்கள் மற்றும் மகளுடன் அமர்ந்திருப்பது எல்லோர் கண்ணையும் பறித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அங்கிருந்த அத்துணை பேரிலும் மூவருமே தனித்து தெரிவர் தோற்றத்தில். துளசி அழகு, அவளையும் விட மீரா அழகு! இவர்களுக்கு சற்று குறையாமல் இருப்பான் பிரசன்னா. சற்று கவர்ச்சியான கம்பீரமான ஆண்மகன்.

இவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்த ஷோபனா வெங்கடேஷிடம், “உங்க அண்ணியோட தங்கை டாக்டர், அவ்வளவு அழகா இருக்கா, நீங்க சைட் அடிக்கலையா? கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப் படலையா?” என்று கேட்டு, அப்படி ஒரு முறைப்பை வெங்கடேஷிடம் இருந்து பெற்றுக் கொண்டாள்.

“ஏன்? அழகான பொண்ணுங்களை பார்த்தா எல்லா ஆம்பிள்ளை பசங்களும் கல்யாணம் பண்ண ஆசைப்படுவாங்களா, இல்லை சைட் அடிப்பாங்களா! ஒரு சிலர் செய்யறதால எல்லோரும் அப்படின்னு நினைக்க கூடாது”

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்லுவாங்க. அது அம்மா பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, கணவன் மனைவிக்கும் பொருந்தும். எங்கப்பா எங்கிட்டா நான் காலேஜ் போகும் போதே உனக்கு ஷோபனாவை தான் கல்யாணம் பண்ணப் போறேன் சொன்னார். அதுக்கு பின்ன இதுவரை நான் யாரையும் அந்த இடத்துல வெச்சு பார்த்ததில்லை. ஆனா நீ மரியாதையில்லாம, இடம் பொருள் தெரியாம நடந்துக்கும் போது இப்படி ஒரு பொண்ணை எங்கப்பா பார்த்துட்டாறேன்னு கோபம் வரும். ஆனா இப்போ நீ கொஞ்சம் பரவாயில்லை” எனப் பேசிக்கொண்டிருக்க,  

“ஷோபனா” என்ற அகிலாண்டேஸ்வரியின் குரலுக்கு “அத்தை கூப்பிடறாங்க” என்று க்ஷணமும் தாமதியாமல் பொறுப்பாய் சொல்லி சென்றாள். எப்போதும் எங்கேயும் அவள் சரியாக நடந்து கொள்ளாமல் சோம்பியிருக்கும் போதே விட்டுக் கொடுக்காதவன் வெங்கடேஷ், மனைவியின் இந்த பரிமாணத்தில் அவ்வளவு திருப்தியை உணர்ந்தவன் பந்தியை கவனிக்க சென்றான்.

எல்லோரும் விடை பெற ஆரம்பிக்க, திரு அவர்களை வழியனுப்பி கொண்டிருந்தவன், பார்வை கூட துளசியையும் அவளின் உடன்பிறப்புகளையும் தொட்டுத் தொட்டு மீள, எல்லோரையும் கவனித்தாலும் பார்வை முழுவதும் துளசியின் மேல்.

அவள் ரோடில் நடந்து வந்து கொண்டிருந்த தோற்றம் தான் நினைவிற்கு வந்தது. அதனை இப்போது நினைத்தாலும் சட்டென்று கோபம் மனதினில் பொங்கியது. “ஏன் ஒரு ஃபோன் செய்து என்னை அழைக்க மாட்டாலாமா” என்று! 

இப்போது அவளை ஊன்றி கவனித்தான், புடவை மட்டுமே ஒரு மெல்லிய கரையிட்ட பட்டு, கூட ஒரு நெக்லஸ் மட்டுமே. வேறு பெரிதாக அலங்காரங்களும் இல்லை நகைகளும் இல்லை, எப்போதும் துளசியின் மையிட்ட விழிகள் அவனை ஈர்க்கும், இன்று அது கூட இல்லை. ஆனாலும் ஒரு தேஜஸ் அவளின் தோற்றத்தில், அவளை விழிஎடுக்காமல் பார்க்க வைத்தது.

திரு அவளிடம் பேசாமல் பாராமுகம் காண்பித்த போது கூட அமைதியாய் இருந்த அவளின் முகத்தினில், இந்த சில நாட்களாக சஞ்சலம் மட்டுமே. தான் அவளை மிகவும் வதைக்கிறோம் எனப் புரிந்தது. “உனக்கு ஏன்டா இவ்வளவு கோபம்” என்று அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டவன்,           

எல்லோரும் சொல்லி கொள்ள ஏதுவாக துளசி என்று அவளை கூப்பிட்டான்.  

திரும்பியவளிடம் “வா” என்று அழைத்து அருகில் நிறுத்தி கொண்டான். அதுவரை சோர்ந்திருந்த துளசியின் முகத்தினில் சோர்வையும் மீறி ஒரு பொலிவு கணவன் அருகில் நின்ற போது. பார்த்தும் பாராமல் பார்த்த திரு பின் உறவுகளிடம் கவனத்தை திருப்பினான்.

வந்தவர்கள் பேசினாலும் சரி, போகிறேன் என்று சொல்லிக் கொண்டாலும் சரி, ஒரு புன்னகை ஒரு தலையசைப்பு மட்டுமே துளசியிடம். அதை ஈடு கட்டும் விதமாக திருவே பேசி எல்லோரையும் கவனித்தான்.

துளசி அப்படிதான் பேசினால், பேசுவாள். அவளாக பேசுவது என்பது மிகவும் குறைவு. எப்போதும் எல்லோரிடமும் வஞ்சனையின்றி புரிவது புன்னகை மட்டுமே! இன்றும் அதனையே செய்தாள். 

மனைவி அருகில் இருக்க, இப்போது பார்வை மகளிடம் என்ன செய்கிறாள் என்பது போல, மீராவும் அவளும் பேசி இருப்பது பார்த்துக் கொண்டே இருந்தான்.  

மீனாக்ஷி மீராவிற்கு சளைக்காமல் பேசிக் கொண்டிருக்க, திரு பார்வையை அங்கே வைத்திருப்பது புரிந்து துளசியும் அங்கே பார்க்க, “ரொம்ப பேசறா இவ” என்று மகளைப் பற்றி முணுமுணுத்தான்.

“அப்படியே உங்களை மாதிரியே எல்லா விஷயத்துலையும்” என்று துளசியும் பதில் கொடுத்தாள். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் மகளை பார்த்தபடியே இந்த பேச்சு.

பிறகு உறவுகள் வர இவர்களின் பேச்சு நின்று போனது.

மேகலா தன் கணவர் கமலநாதனிடம் “துளசி தங்கை ரொம்ப அழகா இருக்காள்ல, டாக்டர் வேற! நம்ம விஷ்ணுக்கு பார்க்கலாமா, நல்லா பழகவும் செய்யறா! துளசி மாதிரி பேசாம எல்லாம் இல்லை! நல்லா பேசறா! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! இவ்வளவு அழகா பொண்ணு கிடைக்கறது கஷ்டம்!” என அடுக்க,

“ஆங்” என வாய்பிளந்து தான் கமலநாதன் பார்த்திருந்தார்.

இப்படி துளசியின் பிறந்த வீட்டினருக்கும் தெரியாமல், அவள் வாழும் வீட்டினருக்கும் தெரியாமல், அவளின் சின்ன மாமனார்கள் வீட்டினில் பலதும் ஓடியது, பிரசன்னாவையும் மீராவையும் கொண்டு.

பிரசன்னா துளசியின் அருகில் வந்தவன் “மீனாக்ஷிக்கு பசிக்குதாம் அக்கா. என்ன பண்ண?” என்றான்.

“இரு, அத்தைக் கிட்ட அவளை சாப்பிட கூட்டிட்டு போகலாமான்னு கேட்கிறேன்” என்று துளசி அந்த இடம் விட்டு நகரப் போக,

“எங்க போற? இரு!” என்ற திரு,

“நீயே கேட்டுக்கோ பிரசன்னா” என்று விட்டான்.

பிரசன்னா ஒரு தயக்கத்தோடு செல்லவும், துளசி திருவின் முகம் பார்த்தாள். “அம்மா பார்த்துக்குவாங்க. பிரசன்னா என்ன வேற ஆளா, கேட்டுக்கட்டும், நீ எங்கயும் அலையக் கூடாது பேசாம உட்காரு!” என்றான் அதட்டலாக.

எதற்கு துளசி திருவை மறுத்து பேசியிருக்கிறாள், அப்படியே அமர்ந்து கொள்ள, பிரசன்னா சென்றவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.

மீனாட்சியின் மேல் திரு ஒரு கண் வைத்திருக்க, மீனாக்ஷி இடத்தை விட்டு எழுந்து அம்மாவை நோக்கி வருவது புரிய, “அங்கேயே இரு” என்று அவளை நோக்கி சைகை செய்தான்.

“நான் அங்க வரணும்” என்று மகள் பதில் சைகை காண்பித்தாள்.

அங்கேயே இருன்னா இரு என்பது போல திரு காண்பித்து, மீராவிடம் அவளை உட்கார வை என்றும் காண்பிக்க,

“உட்காரு மீனா” என்று மீரா அவளை இழுத்து பிடித்து அமர வைத்தாள். துளசியும் இதனை பார்த்து தான் இருந்தாள்.

துளசியிடம் திரும்பியவன், “அங்க போ, நான் வர்ற வரை அவ இடத்தை விட்டு அசையக் கூடாது” என்றான் இறுக்கமாக.

“ம்ம்” என்று தலையாட்டி துளசி மகளின் அருகில் செல்ல, “மா பசிக்குது” என்றாள்.

“ப்ச்” என்று சலித்த துளசி, “ஒரு நேரம் லேட்டா சாப்பிட்டா என்ன ஆகிடுவ நீ, இது உன்னோட விஷேஷம் ஒரு இடத்துல உட்காராம அங்கேயும் இங்கேயும் அலையுவியா? அப்பா உட்கார சொன்னா நீ வர்ற!” என்று அவளை அதட்ட,

உதடு பிதுக்கி முகத்தினை சுருக்கி அம்மாவை செல்லமாய் முறைத்து மீனாக்ஷி அமைதியாய் அமர்ந்தாள்.

“அப்பா சொன்னதையும் மீறி நீ வர்ற, இப்படி பண்ணக் கூடாது!” என்று துளசி மீண்டும் சொல்ல,

“அப்படி தான் பண்ணுவேன்” என்று மீனாக்ஷி தெளிவாய் பதில் சொன்னாள்.

“மீனாக்ஷி” என்று துளசி கோபமாய் அதட்டி முறைக்க,

“என்ன பண்ணுவார்? திட்டுவார்! அடிப்பார்! செஞ்சிக்கட்டும்!” என்று மகள் தோளை குலுக்க, அவள் சொன்னதையும் விட மீரா முன் சொன்னது துளசிக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது.

“இந்த மாதிரி பேசறதுன்னா என்கிட்டே இனிமே நீ பேசாதே” என்றாள் உடனே.

மீரா தான் “அக்கா! என்ன பேசற? அவ சின்ன பொண்ணு, பொறுமையா சொல்லு!” என்று சொல்ல,

அப்போதும் துளசி மகளை முறைத்த படி இருந்தாள்.

தூரமாய் இருந்து திரு பார்த்திருந்தான், என்னவென்று தெரியாத போதும் மனைவியின் முகத்தினில் கோபத்தை பார்க்க, மீனாக்ஷியின் முகத்தினில் அலட்சியம் தெரிந்தது.

அவர்களையே பார்த்திருந்தான்.    

 

Advertisement