Advertisement
அத்தியாயம் பத்தொன்பது :
துளசியின் பிறந்த வீட்டினர் அன்று மாலை கிளம்பிவிட, இப்போது யாருமில்லை எப்போதும் போல வீட்டினர் மட்டுமே!
திரு அவர்கள் கிளம்பியதும் மில்லுக்கு சென்று விட்டான். புது உத்வேகமே அவனிடம்! அங்கு சென்று வேலைகளை பார்த்து அவன் வீடு வந்த போது, இரவு வெகு நேரமாகிவிட்டது.
துளசியை தவிர ஹாலில் யாருமில்லை.
திரு வந்ததும் உணவு எடுத்து வைப்பதா இல்லை அவனே உண்பானா என்று துளசி தடுமாறினாள். பின்னே அந்த சண்டை வந்ததில் இருந்து துளசி பரிமாறவில்லை வேண்டாம் என்று விட்டிருந்தான்.
இன்று அவனையே பார்த்தபடி சோஃபாவில் அமர்ந்திருக்க, “இவ திருந்தமாட்டா” என்று நினைத்தவனாக,
அவளைப் பார்த்தவன் “சாப்பாடு போடற வேலை ஒன்னு தான் நீயா செய்வ, இப்போ அதுல இருந்தும் நான் சண்டை போட்டவுடனே விட்டது தொல்லைன்னு எஸ்கேப் ஆகிட்டியா” என்று முறைத்தான்.
அவன் பேசியது எல்லாம் துளசியின் கருத்தில் இல்லவே இல்லை பரிமாறுவதா வேண்டாமா என்பது மட்டும் தான் அவளின் சிந்தனை.
அப்படியே பார்த்திருக்க, திருவிற்கு கோபமா வந்தது. “கொஞ்சத்தான் மாட்டா, சண்டையாவது போடறாளா, இவளை..” என்று முறைத்து பார்த்தவன்,
“வாடி இங்க” என்றான் அதே கோபத்தோடு.
இப்போது என்னவோ என்ற பாவனையோடு அருகில் வரவும்,
“கொஞ்சமாவது சூடு சொரணை வேணும், திட்டுனா கோபம் வரணும், சண்டை போடணும், ஏதாவது பண்ணனும். இப்படி நீ எனவோ பேசிக்கோன்னு பார்த்துட்டே நிற்பியா” எனப் பேசினான்.
அவனுக்கு உடனே ப்ளேட் எடுத்து வந்து சாப்பிட எடுத்து வைக்க,
“நீ என்கூட சண்டை போட்டா தான் சாப்பிடுவேன்” என்று சொல்லி எரிச்சலில் கைகளை கட்டி அமர்ந்து கொண்டான்.
“சண்டையா? என்ன போட? எனக்கு போட வரலையே” என்று பரிதாபமாக துளசி சொல்ல,
“சண்டை போட வரலையா? அப்போ அந்த சாப்பாடை தூக்கி என் தலைமேல போடு!” என்று கோபமாக அவன் எழ,
அவனின் கை பிடித்தவள் “ஏன் இவ்வளவு கலாட்டா பண்றீங்க, உட்காருங்க, பசிக்குது!” என்றாள்.
“நீ இன்னும் சாப்பிடலையா?”
“இல்லை” என்பது போல அவள் தலையசைக்க,
“ஒரு பேச்சு கூட நான் சொன்னா கேட்க கூடாதுன்னு நினைச்சு இருக்கியா?. நான் முன்னமே சொன்னேன் தான் மீனா சாப்பிடும் போதே சாப்பிட சொல்லி”
“அப்போ பசிக்கலை இப்போ உங்களை பார்த்த பிறகு தான் பசிக்குது”
“எப்படி எல்லாம் என் உயிரை எடுக்கறதுன்னு டிசைன் டிசைன்னா யோசிப்பியா நீ”
துளசி சற்றும் அசராமல் “பசிக்குது, உட்காருங்க” என்றாள்.
“நீயும் உட்காரு” என்று சொல்லிக் கொண்டே இருவரும் உணவருந்தினர். அதன் பிறகு அவர்களிடம் எந்த பேச்சுமில்லை.
திரு உறங்கப் போக, எல்லாம் ஒதுங்க வைத்து முன்பு போல மீனாவுடன் துளசி உறங்க சென்று விட, திரு கடுப்பின் உச்சிக்கே போய்விட்டான்.
“போடி, இனி நீயா வராம நானா வந்தா ஏன்னு கேளு” என்று மனசுக்குள் புலம்பிக் கொண்டவன், படுத்து உறங்கி காலையில் எழும் போதே,
நிறைய நாட்களுக்கு பிறகு பள்ளி போவதால் மீனாக்ஷி எழுந்து தயாராகி இருந்தாள்.
திருவும் வேகமாக குளித்து தயாராகி வந்தான்.
“சீக்கிரம் சாப்பிடு மீனா பஸ் போய்டும்” என்று துளசி அவளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்க, அப்போது தான் திரு ரூம் விட்டு வெளியே வந்தான்.
“இவன் என்ன குளிச்சிட்டு வந்துட்டான், ஷட்டல் போகலையா?” என்று யோசனையோடு பார்த்துக் கொண்டே உணவினை ஊட்டினாள்.
“தோ மா” என்று சொல்லிய மகள் பேக்கில் புக்கினை துருத்த, “சரியா வை” என்றபடி திரு வந்து சோஃபாவில் அமர்ந்தான்.
“லேட் ஆச்சுப்பா பஸ் போயிடும்” என்று மீண்டும் துருத்த,
“மீனா சரியா வை” என்றான் மீண்டும் அழுத்தமான குரலில்.
“பா” என்று சிணுங்கியபடி மகள் பார்க்க,
“நான் தான் கொண்டு போய் விடப் போறேன், அவசரமில்லை!”
“நீங்களா” என்று விழி விரித்தவள், “ம்ம், அப்போ சரி” என்றபடி எல்லாம் சரியாக வைத்த படி “அம்மா என்ன லஞ்ச்?” என கேட்க ஆரம்பிக்க,
திரு கொண்டு போய் விடப் போகிறான் என்பது மகிழ்ச்சி என்றாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்ற சுணக்கம் மனதில் தோன்றியதை துளசியால் தடுக்க முடியவில்லை.
துளசி மெதுவாக மீனாட்சியிடம் “இவ்வளவு நாள் ஏன் லீவ்ன்னு யாராவது கேட்டா என்ன சொல்லுவ?”
“ம்ம்” என்று யோசித்தவள், “என்ன சொல்லட்டும்” என்று அம்மாவிடமே கேட்க,
“உடம்பு சரியில்லைன்னு சொல்லு, எல்லாம் எல்லார் கிட்டயும் சொல்லணும்னு அவசியமில்லை, இதெல்லாம் உடம்புல நடக்குற இயற்கையான மாற்றம், இதை பெரிய விஷயமா நினைச்சுக்க வேண்டாம். ஃபிரண்ட்ஸ்னா கூட இதெல்லாம் பேசிக்க வேண்டாம்” என்று விட்டாள் துளசி.
மெல்லிய குரலில் மகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தாலும் தெளிவாக திருவின் காதினில் விழுந்தது. எப்போதும் போல இப்போது தினசரி அவன் கையினில். ஆனால் கவனம் முழுவதும் துளசியிடமும் மகளிடமும்.
அகிலாண்டேஸ்வரி அப்போது தான் குளித்து வந்தவர், திரு ஹாலில் குளித்து தயாராகி அமர்ந்திருப்பதை பார்த்து “எங்கே போகிறாய்?” என்று கேட்க கூடாது என்பதற்காக “எங்கே? எங்கே?” என்று சைகையில் கேட்க,
திருவும் “என்னமா? என்னமா?” என்றான் மீண்டும் மீண்டும் புரியாமல்.
இருவரின் பாஷையும் பார்த்தபடி எழுந்து வந்த வெங்கடேஷ், “திரு, நீ எங்க போறன்னு அம்மா கேட்கறாங்க” என்று சொல்லியபடி அகிலாண்டேஸ்வரியின் அருகில் அமர்ந்தான்.
அவனின் தோளில் அடித்தவர் “டேய் போகும் போது எங்க போறன்னு கேட்க கூடாது” என,
மீனாக்ஷி அதற்கு பதிலாக “அப்பா எங்கே போறார் உட்கார்ந்து தானே இருக்கார் பாட்டி” என்றாள்.
“நீ வா செல்லம்” என்று அழைத்து மீனாக்ஷியிடம் வெங்கடேஷ் ஹய் ஃபை கொடுத்தான்.
“டைம் ஆகுது” என்றபடி திரு எழ,
“பாட்டி என்னை அப்பா கொண்டு போய் விடறார்” என்ற படி மீனாக்ஷி உற்சாகத்தோடு கிளம்ப,
வீடே அதிசயமாக பார்த்தது. “என்ன உங்கப்பாவா?” என்று வாய் விட்டு கேட்டான் வெங்கடேஷ்.
“ம்ம்ம் எஸ் சித்தப்ஸ்” என்றபடி மீனாக்ஷி கிளம்ப,
அவள் அப்பாவின் பைக்கில் பின்னால் அமரும் சமயம் தான் மேகநாதன் வாக்கிங் முடித்து தன் தம்பிகளோடு வந்தார்.
மேகநாதன் மகனுக்கு இப்போதாவது பொறுப்பு வந்ததே என்றபடி ஒரு பார்வையை மகனை நோக்கி வீச,
அவர் தன்னை தான் பார்க்கிறார் என்று தெரிந்தும் கண்டுகொள்ளாமல் கிளம்பினான்.
போகிற போக்கில் சித்தப்பாக்கள் இரண்டு பேரிடமும் “கிளம்பிட வேண்டாம் சித்தப்பா, உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணும், சாப்பிட்டிட்டு வீட்டுக்கு வாங்க” என்று சொல்லியபடி போக,
“என்ன பேசணும் இவனுக்கு?” என்று எல்லோருக்கும் யோசனையாகிப் போனது.
மகளை விட்டு வந்தவன் “துளசி” என்று ரூமின் உள் இருந்து குரல் கொடுத்தான்.
துளசி சமையல் அறையில் இருப்பாள் என்று நினைத்து குரல் கொடுக்க, அவளோ அப்போது தான் குளித்து உள் அறையில் தயாராகி கொண்டு இருந்தவள், “இங்கே தான் இருக்கேன்” என்று சன்னக் குரலில் சொல்ல, உள் அறைக்குள் அவன் சொல்ல, புடவையை கட்டி முடித்திருந்தவள், கொசுவத்தை உள்ளே சொருகிக் கொண்டிருக்க,
“வந்தா ரூம்குள்ள எட்டி பார்க்க மாட்டியாடா?” என்று அவனுக்கு அவனே திட்டுக் கொண்டு “வட போச்சே” என்ற பார்வையை துளசியினிடம் செலுத்தினான்.
“எதுக்கு கூப்பிட்டீங்க”
“பேசணும்” என்றான் ஒற்றை வார்த்தையில்.
துளசி “பேசுங்க” என்ற பார்வையைப் பார்த்தாள்.
“ஒரு இடம் ஒன்னு வாங்க போறோம். பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கொஞ்சம் தள்ளி மெயினான இடத்துல. அட்வான்ஸ் குடுத்துட்டோம், நாலு மாசம் ஆச்சு, இந்த மாசத்துக்குள்ள கிரையம் பண்ணிடுவோம். அது எல்லோர் கிட்டயும் சொல்லப் போறேன். அதுக்கு தான் முன்ன உன்கிட்ட சொன்னேன்”
“ம்ம் சரி” என்று விட்டு வெளியில் போகப் போனாள். உண்மையில் மகளை பள்ளிக்கு விடப் போவதை பற்றி அவன் சொல்லவில்லை என்று சுணங்கிய மனம் இதனை ஒரு விஷயமாகக்கூட எடுக்கவில்லை. சொத்தெல்லாம் அவளுக்கு ஒரு விஷயமேயில்லை.
“ஏய், என்னடி? நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு உம் சரின்னு சொல்லிட்டு போனா என்ன அர்த்தம்? உட்காருடி, ஆளும் அவளும்! நான் என்ன பேச வந்தாலும் என்னை கோபப்படுத்திடற” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“இல்லை, உங்களுக்கு டைம் ஆகிடும். இன்னும் ஒன்னும் செய்யலை, தனம் இன்னைக்கு வரமாட்டா, அதான் போனேன், சமைக்கணும்” என்று துளசி விளக்கம் கொடுக்க,
“சமைக்க தான் நீ பொறந்தியா! ஒன்னு சமை, இல்லை சாப்பாடு போடு, எரிச்சல் பண்றடி!” என்று கத்தினான்.
உடனே அமைதியாய் “என்ன பேசணுமோ பேசு” என்ற பார்வையை தாங்கி அமர்ந்து கொண்டாள்.
வெறுத்துப் போனான் திரு. “யாருக்கு உழைக்க வேண்டும்?” என்ற எண்ணம் சட்டென்று தோன்ற,
சில நொடிகள் அவளை, அவளின் பார்வையை தாங்கி பார்த்தவன், “போடி” என்ற பார்வையை கொடுத்து பேசாமல் வெளியில் சென்று அமர்ந்து கொண்டான்.
துளசிக்கு உணமையாய் எப்படி அவனிடம் நடந்து கொள்வது என்று தெரியவில்லை. ஒரு பதினைந்து நாட்களில் எல்லாம் மாறிவிடுமா என்ன?
அவன் நினைப்பது போல உரிமை மனதில் வானளவு இருந்தாலும், அதனை காண்பிக்க முடியவில்லை. வெகுவாக ஒரு மன உளைச்சல் ஆரம்பித்தது.
எதற்கு கோபப்படுகிறான்? ஏன் கோபப்படுகிறான்? என்றே புரியவில்லை. இந்த வாழ்க்கைக்கு அவள் பழகியிருந்தாள். புதிதாய் திருவினுள் விழித்திருக்கும் ஆசை புரியவுமில்லை, அவன் சொன்னாலும் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அது இயல்பாய் வரவேண்டும் அல்லாவா, துளசியின் இயல்பே அல்ல அது?
அதுவும் கர்ப்பமாய் இருக்கும் பொழுது அவளுள் நடக்கும் மாற்றங்கள் அவளை சரியாய் சிந்திக்க விடவில்லை. ஒரு சோர்வு எப்போதும்.
திரு இப்படி எழுந்து போனது மனதிற்குள் பிசைந்தது.
திருவிற்கோ தான் தன் எதிர்பார்ப்பை சொல்லியும் துளசி அருகில் வரவில்லை என்பது அப்படி ஒரு காயத்தைக் கொடுத்தது. பேசினாலும் பேசாவிட்டாலும் அவனின் வாழ்க்கை நன்றாக தானே சென்றது. தான் பாராமுகம் காட்டினாலும் அவள் என்னிடம் நன்றாக தானே நடந்தாள். அப்போது அதெல்லாம் என்ன? நான் யார் அவளிற்கு?
அவனுக்குள் எதோ வந்து அமர்ந்து கொண்டதா? இல்லை அவளுக்குள்ளா? கருங்கல் சுவரா? மாயத்திரையா?
அவனுள் இருந்த உற்சாகமும் மொத்தமாய் வடிந்தது.