Advertisement

                         சிவபைரவி – 2

பைரவிக்கு, எல்லாமே புதிதாய் இருந்தது. சொல்லப் போனால், சென்னை என்பதே அவளுக்கு கடந்த சில மாதங்களாய் தான் தெரியும் அதிலும் கூட ஹோட்டல் வாசம் அல்லது, தோழிகள் இருவரோடு பிளாட் தனியே எடுத்து தங்கியிருந்தாள்.. பிரபல தொலைக்காட்சி சேனல் நடத்திய இசைப் போட்டியில், இறுதி சுற்று வரைக்கும் வந்து பங்கேற்று, தன் இசை திறமையை வெளிப்படுத்தியவள். 

தன் பாட்டுத் திறமையால் ஒருபுறம் பிரபலம் என்றாலும், அவளின் தோற்ற பொழிவால் இளைஞர்கள் மத்தியில் இன்னுமே பிரபலமாகிப் போயிருந்தால்.     

இப்போது இந்த வீட்டினில், அதுவும் அவளுக்கென்றே சொந்தமாய். எல்லாம் அவள் அம்மாவின் ஏற்பாடு. இப்போது அவரில்லை என்றாலும் கூட, ஏனோ மகளுக்கு இப்படியொரு பகுதியில் வீடு வாங்கி, அதனை மாற்றி அமைத்துத் தந்திடவேண்டும் என்ற யோசனை வந்திருந்தது போல.

அப்படியிருக்க, ஒவ்வொன்றிற்கும் அவள் செல்வியைத் தான் எதிர்பார்த்தாள். அதற்காக பைரவி தயங்கவோ இல்லை, யோசிக்கவோ இல்லை. செல்வியிடம் ஒரு விஷயம் சொன்னால் போதும், சிவாவை பாடாய்ப் படுத்தி அதனை நடத்த செய்திடுவார்.

அவன் முறைத்தால் கூட போதும் “பாவம் கண்ணு.. யாருமில்லாத பொண்ணு.. என்னவோ இந்தாண்ட வீடு வாங்கி வந்திருக்கு.. நம்மலே செய்யங்காட்டி எப்புடி…” என்பார்.

அப்படியும் சிவா மசியவில்லை எனில் “ஹ்ம்ம் என்ன சம்பாரிச்சு என்ன புண்ணியம்.. யாருமில்லாதவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணா அது புண்ணியம்..” என்று அடுத்து பேசுவார்.

இப்படி இவரின் நச்சரிப்பு தாங்காமலேயே, சிவா அவர் கேட்பதை செய்வான். அதற்கு ஒரு நன்றியும் பைரவியிடம் இருந்து கிடைக்கும்.

கிட்டத்தட்ட, பைரவி அவர்களின் பகுதிக்கு வந்தும் கூட இருபது நாட்கள் ஆகிப்போனது. மூன்று நான்கு முறைக்கு மேல் சிவா அங்கே செல்லவும் நேர்ந்திருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் வீட்டினுள் சென்றதில்லை.

செல்வி அழைப்பார், பைரவி வெளியே வந்து “தேங்க்ஸ்…” என்பாள்.

அத்தோடு அது முடிந்துவிடும். உள்ளே வாருங்கள் என்றோ, இல்லை அதனைத் தாண்டிய பேச்சுக்களோ வேறெதுவும் இருக்காது.

பைரவி பழக எளிமையான பெண்தான். என்னவோ சிவாவின் பாவனைகள், பேசும் விதம், அவன் சொல்லுக்கு மற்றவர் உடனே கட்டுப்பட்டு நடப்பது  இதெல்லாம் கண்டு அவளுக்கு ஓர் ஒதுக்கம் வந்திருந்தது, கூடவே ஓர் மரியாதையும் கூட. தன்னை காணும் இளம் வயது ஆண்கள் யார் கண்ணிலும் சட்டென்று தோன்றி மறையும் ஒரு ஆவலை அவள் சிவாவின் கண்களில் கண்டிடவில்லை.

அதனாலேயே ஓர் மரியாதை கூட உள்ளுக்குள்ளே. இதேது சிண்டு, மணி எல்லாம் வந்தால், வாய் வாய் வாய் அப்படி வாயடிப்பார்கள்.

இந்த இருபது நாளில் அவர்களின் பழக்கம் அப்படியாகி இருந்தது. விகல்பம் இல்லாது, வித்தியாசம் பாராது, ஏற்றத்தாழ்வு எல்லாம் காணாது,  பைரவி பேசுவது பார்த்து செல்வியே முதலில் ஆச்சர்யமாய் பார்த்தார். பின்னே அவள் பேசும் ஆங்கிலமும், ஹிந்தியும், பேசும் ஆட்களும் அவ்வப்போது கவனித்துக் கொண்டுதானே இருந்தார்.

‘ஹ்ம்ம் பாக்காவே சோக்கா கீது.. எப்படியாபட்ட பொண்ணா இருக்குமோ…’ என்ற நினைப்பு ஆரம்பத்தில் உள்ளுக்குள்ளே இருந்ததுதான். யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. சம்பாத்தியம் முக்கியம் அல்லவா.

அந்த நினைப்பு அப்படியே மாறிப்போனது. சிவாவிடம் கூட சொன்னார் “ஆளு மட்டுமில்ல, பாப்பாக்கு மனசும் அழகுதான்..” என்று.

அவனோ “அது பாப்பாவா உனக்கு..?” என்று பதில் கேள்வி கேட்பான்.

“ஆமா அப்புடித்தான்..” என்றுவிட்டு போவார் அவர்.

முதல் நாள்,  சிண்டு பைரவியை “ண்ணே இந்தக்கா டிவில வந்திருக்குண்ணே…” என்று சொல்லவும்,

‘அப்படியா??’ என்றதொரு பார்வை மட்டுமே சிவாவிடம்.

பைரவியோ, தன்னை கண்டுகொண்டிருப்பான் என்றெண்ணி புன்னகை மட்டும் செய்து நிற்க, சிவாவிற்கு யாரென்று நிஜமாய் தெரியவில்லை. அப்படியொன்றும் டிவியில் வரும் ஆட்களை எல்லாம் மனதில் பதித்துக்கொள்பவன் இல்லை அவன். டிவி பார்க்க நேரமும் இல்லை அவனுக்கு.

கிடைக்கும் நேரத்தில் பாடல்கள் கேட்பான். அதுவும் கூட முக்கால்வாசி போனில் பாடல்களை ஓடவிட்டு, படுத்து கேட்டுக்கொண்டு இருப்பான் அவ்வளவே. இப்போது அவனுக்காய் அவள் யார் என்று கேட்கவும் தயக்கம்.

யாரிடம் கேட்பான்? சிண்டுவிடம் கேட்டால் சொல்லிடுவான் தான், இருந்தாலும் அவனின் அந்த ‘ஈகோ…’ தடுத்தது.

அவளும் அந்த நேரத்தில் தன்னை யார் என்று சொல்லிக்கொள்ளவில்லையா, ‘போ டி… டிவில வந்தா என்ன இல்ல வேறேதுல வந்தா என்ன?’ என்று நினைத்துக்கொண்டான்.

இருந்தும் அவ்வெண்ணம், வண்டாய் உள்ளே குடைய, அன்றைய தினம் காலையில் வேறு செல்வி சொன்னார் என்று ஒரு எலெக்ட்ரிசியனை அங்கே அனுப்பியிருந்தான். சென்ற வேலை முடிந்து, நேரே சிவாவின் செட் வந்த எலெக்ட்ரிசியனோ,

“அண்ணாத்த அந்தக்கா சூப்பரூ… ஜூசு எல்லாம் குடுத்துச்சு…” என்று வந்து சொல்ல, கடுப்பாகிப் போனான் சிவா.

“குடுத்தா குடிச்சிட்டு கிளம்பு…” என,

“இல்லண்ணாத்த… டிவில வந்தக்கா நமக்கு ஜூசு எல்லாம் போட்டுக்குடுத்தா சும்மான்னு நினச்சியா??” என்று அவன் மேலும் பேச,

“டேய் போறியா இல்ல ஸ்பானர வாய்ல விடவா?” என்று சிவா எகிற, அங்கிருந்த அனைவருமே சற்று என்னவென்று திரும்பித் தான் பார்த்தனர்.

வந்தவனோ, சிவாவின் அதட்டலில், அரண்டுபோய், விட்டால் போதும் என்று ஓடிவிட்டான்.

“டே… இன்னாடா…” என்று மணி வர,

“ஒண்ணுமில்ல.. போ போ..” என்று சிவா விரட்ட,

“என்னவோ போ.. ஆளு தினுசாதான் இருக்க…” என்று சொல்லியபடி மணி வேலையில் கவனமாக, சிவாவிற்கு வேலை செய்யும் எண்ணமே சென்றுவிட்டது.

‘இன்னாடா இது… யாரோ எவளோ.. எவளா வேணா இருக்கட்டும்.. அதுக்கு இம்புட்டு பில்டப்பு தர்றானுங்க…’ என எண்ண,

இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற நினைப்பு எதுவுமே இல்லாது பைரவி தன் வேலைகளில் மூழ்கியிருந்தாள். வீட்டிலேயே ஓர் அறையில், ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்திருக்க, அது அவளின் அம்மாவின் காலத்தில் இருந்தே இருப்பதால், சிறு வயது முதலே அவளுக்கு அதில் அனைத்தும் அத்துபடி.

என்ன இக்கால அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ப அதனை சற்று மாற்றியிருந்தாள்.

ஒரு ‘ஆல்பம் சாங்…’ ஷூட்டிங் முடிந்திருக்க, அதனின் ரெக்கார்டிங் வேலையில் இருக்க, திடீரென என்ன நேர்ந்ததோ, என்ன பழுது என்றே அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவளால் முடிந்த மட்டும், சரிபார்க்க, ம்ம்ஹும் எதுவும் பலனில்லை..

‘காட்…!! நல்லாதானே இருந்தது… இப்போன்னு பார்த்து என்னாச்சு…’ என்றவள், அங்கிருக்கும் கருவிகளை சுற்றி வந்தது தான் மிச்சம்.

நேரம் கடந்துகொண்டே இருக்க, செல்வி வேறு வந்து “பாப்பா…” என்று எதற்கோ அழைக்க,

“செல்விம்மா ப்ளீஸ்… நான் செம டென்சன்ல இருக்கேன்.. எதுன்னாலும் நீங்களே பாருங்க…” என,

“அட பாப்பா…. தனியா பேசின்னுருக்கியே இன்னாதுன்னு கேக்க வந்தே…” என்று சிரித்தார் செல்வி.

“ஆ…!!!!” என்று தலையில் கை வைத்தவள், “இன்னிக்கு பஞ்சமி, நல்ல நாள் ரெக்கார்டிங் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருந்தேன்… இப்போன்னு பார்த்து மக்கர்.. என்னாச்சுன்னு கண்டுபுடிக்க முடியல…” என்று பாவமாய் சொல்ல,

“பஞ்சமியோ என்னவோ… அத்தெல்லாம் எனக்கு தெரியாது பாப்பா… வேணும்னா சிவாக்கு சொல்லவா?? ஆளு கூட்டி வருவான்…” என,

“ஓ…!! நோ நோ…!! இதெல்லாம் சரி பண்ண வேற ஆளுங்க தனியா இருக்காங்க…” என்றாள் வேகமாய்.

“அப்போ இன்னாத்துக்கு இப்படி போட்டு புலம்பிட்டு இருக்க… காலு போடு… கூப்பிடு…”

“கால் பண்றது பெருசில்ல… வந்தா இன்னிக்கு முழு நாள் ஆகிடும்.. ப்ரிபேர் பண்ணி வச்சது கூட ப்ளோ போயிடும்…” என்றவாறே தன் அலைபேசியை எடுத்தாள்.

“ஹெலோ ஜான்….” என்று ஆரம்பிக்க, எதிர்முனை என்ன சொன்னதோ,

“ஹேய்… போதும் போதும்… ஸ்டாப் இட் மேன்.. என்ன ப்ராப்ளம்னு தெரியலை சவுண்ட் ரிசீவ் ஆகலை.. நீ சீக்கிரம் வந்து என்னன்னு பாரு.. எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம்.. டுடே கண்டிப்பா ஸ்டார்ட் பண்ணியே ஆகணும்…” என,

“யா… பைரவி டோன்ட் வொர்ரி.. வர்றேன்…” என்று சொல்லி ஜான் வைக்க, அடுத்து அரை மணி நேரமாகியும் அவன் வந்தபாடில்லை.

நேரம் செல்ல செல்ல, பைரவியின் பொறுமை கடந்துகொண்டே போக,   ஜானிற்கு திரும்ப அழைத்தாள்.

“வந்துட்டேன்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்… நல்ல ஏரியால வந்து ஸ்டே பண்ண நீ…” என்று கடுப்படித்து ஜான் போனை வைக்க, அவன் சொன்னது போலவே அடுத்த இரண்டு நிமிடத்தில் வந்தும் சேர்ந்துவிட்டான்.

“ஏன் இவ்வளோ நேரம்…? அர்ஜென்ட்னு கூப்பிட்டா ரொம்ப பண்ணுவியா நீ…” என்றபடியே வரவேற்ற பைரவியை ஜான் முறைத்துப் பார்க்க, செல்வி ஒரு வரவேற்பு புன்னகையோடு பார்த்தார்.

“ஓ..!!!  பைரவி… கூல்… இந்த ஏரியா சின்ன பசங்க இருக்காங்களே… யப்பா சாமி..!! கார் ஹார்ன் அடிச்சிட்டே தான் டேர்ன் பண்ணேன்.. வந்து நேரா சைக்கிள் விடறான்.. போதும் போதும்னு ஆகிடுச்சு…” என,

“ஹேய்.. வேற எதுவும் ஆகிடுச்சா??” என்றாள் சற்றே படபடப்பாய்.

“நோ நோ…” என்றவன், செல்வி கொடுத்த ஜூஸ் டம்ப்ளரை கையில் எடுக்க,

“வந்ததே லேட்.. இதுல ஜூஸ் வேற உனக்கு.. கம் கம்.. பர்ஸ்ட் வந்து என்னன்னு பாரு.. அப்புறம் இதெல்லாம் பார்க்கலாம்…” என்று பைரவி அவன் கை பிடித்து இழுக்காத குறையாய் இழுத்துச் செல்ல,

“சரியான பிசாசு…” என்று சிரித்தபடி ஜானும் சென்றான்.

அங்கே சிவாவின் செட்டிலோ, ஒரு கூட்டமே கூடி நின்றது. அனைவரும் சிறுவர்கள். பத்தில் தொடங்கி பதினாறுக்கு உள்ளே இருக்கும் அனைவரின் வயதும்.

“ண்ணாத்தே வா… வந்து இன்னான்னு கேளு…”

“இடிச்சிட்டு எப்புடி சவுண்டு விட்டான் தெரியுமா…”

“நம்ம ஏரியாக்கு வந்து நமக்கே ரவுசு குடுக்குறான்…” என்று இப்படி பலவாரியான குரல்கள்.

“டேய் இன்னாடா வேணும் உங்களுக்கு…?” என்று மணி அனைவரையும் சத்தம் குறைக்கவைக்க,

“சிவாண்ணா எங்க… வரச்சொல்லு…” என்றனர்.

“என்னடா?? எங்க போய் என்ன வம்பு வளத்தீங்க??” என்றபடி சிவா செட்டின் உள்ளிருந்து வர, கூட்டத்தின் நடுவில் ஒரு சிறியவன், கையில், தலையில் லேசான சிராய்ப்புகளோடு நின்றிருந்தான்.

“டேய் இன்னாடா ஆச்சு??” என்று சிவா அவனைத் தொட்டு பதற,

“ஒரு கார் காரான் நேரா வந்து எம்மேல வுட்டான்…” என்று அவன் சொல்ல,

“காரா..?? நம்ம ஏரியாக்குள்ள எவன்டா??”

“அந்த டிவிக்கார அக்கா வீட்டுக்கு வந்தவன்… நேரா வந்து சைக்கிள் மேல ஏத்திட்டான்.. நான் விழுந்துட்டேன்…” என்றவனுக்கு வலியில் முகம் சுருங்கியது.

“ஏத்திட்டு எப்புடி பேசிட்டு போனான் தெரியுமா?? நம்மளையே சாவுகிராக்கின்னு சொல்லிட்டு போறான்… சின்ன பசங்கன்னு எப்புடி சவுண்டு விட்டான் தெரியுமா?” என்று பக்கத்தில் இருந்தவன் சொல்ல,

மற்றொருவன் “கார தொட்டு நிறுத்தினோம் அதுக்கு.. ஏய் ஏய் டச் பண்ணாதன்னு அவ்வளோ கேவலமா பேசிட்டு போறான்…” என,

இன்னொருவன் “அடி பட்டிருக்குன்னு சொல்றோம், சும்மா காசுக்கு ஆசைப்பட்டு நடிக்காதீங்க.. எத்தினி பேர பார்த்திருப்பேன்னு சொல்லிட்டு போறான் நீ வாண்ணா.. வந்து இன்னான்னு கேளு…” என,

“இருக்கானா இல்ல போயிட்டானா??” என்றான் சிவா.

சடுதியாய் அவனுக்கு மனதில் பல பல பழைய நியாபகங்கள். அவன் சிறுவனாய் இருந்தபோதும் இது போன்றதொரு நிகழ்வுகள் நடந்திருக்கிறது. சில பல காட்சிகளும் கண் முன்னே விரிய, அப்போதைய காயம், இப்போதும் வலிக்கச் செய்ய, ஏனோ கோபம் கோபமாய் வந்தது.

அந்த சிறுவனுக்கு அடி என்னவோ சின்னதுதான். இதுவே பெரிதாக இருந்திருந்தால். என்ன ஒரு பொறுப்பில்லாத தனம்? பணம் இருந்தால், கார் இருந்தால் எதுவும் செய்யலாமா?? செய்துவிட்டு கண்டபடி பேசியும் செல்லலாமா??

“இருக்கான் இருக்கான்.. அந்தக்கா வீட்ல இருக்கான்… பாத்துட்டு தான் வர்றோம்…” என்ற பதில் வர, அவ்வளோதான் சிவா கிளம்பிவிட்டான்.

இதுநாள் வரைக்கும், அவளின் வீட்டினுள் சென்றதில்லை. இன்று அவன் செல்லும் சூழலே மாறிப்போனது. அணிந்திருந்த கைலியை மடக்கிக் கட்டிக்கொண்டு, சட்டை காலரை ஒரு தூக்கு தூக்கிவிட்டபடி சிவா நடக்க, அவனின் பின்னே மொத்த கூட்டமும்.

பொதுவாய் அவனுக்கு பணம் சார்ந்தோ இல்லை வாழ்வு முறை சார்ந்தோ யாரையும் இழிவாய் பேசினாலே பிடிக்காது. அதுவும் ஒருவன் அவன் ஏரியா சிறுவர்களிடம் பேசிவிட்டு, காயம் செய்துவிட்டு சென்றிருக்கிறான் என்றால் சும்மா விடுவதா??

இச்சிறுவனுக்கு பட்டதுபோல், இரண்டு மடங்கேனும் அவனுக்கு காயம் செய்ய வேண்டாமா??!!

அந்த வேகம் மட்டுமே அவனுள்…!

“ஏய் யார்ரா… வெளிய வா…” என்றபடி பைரவியின் வீட்டினுள் நுழைந்துவிட்டான் சிவா.

பைரவியும், ஜானும் ரெக்கார்டிங் தியேட்டரினுள் இருக்க, இவர்களின் சத்தம் கேட்டு செல்வி வந்தவர் “கண்ணு வா வா…” என,

“எங்க அவன்…” என்று பல்லைக் கடிக்க,

“யாரு? இன்னாச்சு கண்ணு…” என்றார் செல்வி பதறி.

“எங்க அவன்..? கார்ல வந்தவன்….” என்று அதட்ட, அவரின் கை தன்னைப்போல் ரெக்கார்டிங் தியேட்டர் பக்கம் நீள,  சிவாவின் பார்வையும் அங்கே செய்ய, கண்ணாடி தடுப்புகளுக்கு அந்த பக்கம் ஜான், பைரவியோடு எதையோ சிரித்து பேசியபடி, அங்கிருக்கும் கருவிகளை ஆராய்வது தெரிய,

“இடிச்சிட்டு வந்துட்டு இங்க இளிச்சின்னு இருக்கானா…” என்று முணுமுணுத்தபடி, வேகமாய் அங்கே போக,

“சிவா.. சிவா.. நில்லு கண்ணு…” என்று செல்வி அவனோடு போக, அதற்குள் சிவா அங்கே சென்று வேகமாய் கண்ணாடி கதவையும் தள்ளியிருந்தான்.

உடன் வந்த சிறுவர்களோ, ‘தரமான சம்பவம்…’ ஒன்றைப் பார்க்க வெளியே ஆவலாய் நிற்க,

“ஏய்…” என்றபடி உள்ளே சென்ற சிவாவை, உள்ளிருந்த இருவருமே அதிர்ந்தும் புரியாமலும் பார்க்க,

“இன்னாடா கார் வச்சிருந்தா இடிச்சிட்டு வருவியா நீ…” என்று கொத்தாய் ஜானின் சட்டையை பிடித்தவன், அப்படியே அவனை பின்னிருந்த சுவரில் வைத்து, மேலே தூக்கி விட்டான்.

“ஹேய்…!! என்ன என்னாச்சு?? ப்ளீஸ் விடுங்க.. அவனை விடுங்க…” என்று பைரவி சென்று தடுக்க,

செல்வியும் “சிவா விடு…” என்று பதற,

வெளியில் இருந்தோ “அண்ணாத்தே.. வுடாத…” என்று குரல்கள்.

“யார்டா நீ.. இங்க வந்து என்னை அடிக்கிற… நான் யார்னு தெரியுமா??” என்று ஜான் திமிறியபடி பேச,

“நீ எவனா வேணா இரு. ஆனா இது என்னோட ஏரியா.. இங்க நான்தான் எல்லாம்..” என்றவன், “சின்னப் பையன இடிச்சிட்டு வந்துட்டு என்ன சவுண்டு…” என்றபடி அப்படியே பொத்தென்று கைகளை விட, ஜான் தடுமாறி கீழே விழுந்துவிட்டான்.

“அச்சோ…!!!” என்று பதறி பைரவி அவனைப் போய் பிடிக்க,

“ஏய்…!!” என்று விரல் நீட்டி தடுத்தவன், “அசஞ்ச கொன்னுடுவேன்…” என்றுவிட்டு, மீண்டும் ஜானை அடிப்பதற்காக, தூக்க, அடுத்த இரண்டு நொடிகள் என்ன நடந்தது என்றே யாருக்கும் விளங்கவில்லை.

“செல்விம்மா.. என்னதிது… சொல்லுங்க ப்ளீஸ்.. எதுன்னாலும் பேசிக்கலாம்…” என,

“சிவா விடு கண்ணு.. என்னன்னு விசாரிப்போம்…” என்று செல்வியும் அவர்களுக்கு இடையில் புகப் பார்க்க, ம்ம்ஹும் முடியவேயில்லை.

சிவாவின் காதினில் யார் பேசும் விழவே இல்லை.  சிவாவின் கரத்தினில், ஜான் பந்தை உருள, விளைவு, பைரவியின் இருபத்தி ஒன்றாவது பிறந்தாளுக்கு என்று, அவளின் அம்மா ஆசையாய் வாங்கிக் கொடுத்த சிறிய மைக் செட் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது.

அத்தனை வேகத்தில் ஜானைப் பிடித்து சிவா தள்ளியிருக்க, மைக் செட் விழுந்து நொறுங்கியதுமே, பைரவிக்கு எங்கிருந்து அத்துனை ஆத்திரம் கிளம்பியதோ, எங்கிருந்து அத்துனை வேகம் கிளம்பியதோ, ஜானை அடித்துக் கொண்டிருந்த சிவாவின் பின் சட்டைப் பகுதியை ஒரே இழுவாய் இழுத்து, தன் முன்னே அவனை நிற்க வைத்து,

“எவ்வளோ தைரியம் உனக்கு…” என்று கேட்டபடி, சப்பென்று ஓங்கி ஓர் அறை விட்டுவிட்டாள்.

அவ்வளோதான்…!!! அப்படியொரு நிசப்தம் அங்கே..

முதல் சந்திப்பில் தேவதை போல் மிதந்து வருகிறாள் என்று நினைத்தவன் முன்னே, இப்போது கண்கள் கோபத்தில் விரிந்து, அனல் மூச்சு பறக்க, காளி சொரூபமாய் நின்றிருந்தாள் பைரவி…

ஆனந்த பைரவி… இப்போது ஆங்கார பைரவி…!!                      

Advertisement