Advertisement

                            சிவபைரவி – 1

“மீனாட்சி மீனாட்சி… அண்ணே காதல் என்னாச்சி…” என்று FM-ல் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க,

“யக்கா சவுண்டா வைக்கா…” என்று வந்த குரலுக்கு,

“இட்லி வாங்கின்னு இடத்த காலி பண்ணு… போ…” என்று எள்ளாய் வெடித்தார், செல்வி.

அந்த ஏரியா இளசுகளுக்கு செல்வியக்கா. பெருசுகளுக்கு செலுவி.

காலை எட்டு மணி. பரபரப்பாய் இயங்கிக்கொண்டு இருந்தது செல்வியின் சிறு உணவுக் கடை. கடை என்னவோ சிறிது தான் ஆனால் அவர் சமையல் ருசி பெரிது. யாரும் அடித்துக்கொள்ள முடியாது.

சிங்காரச் சென்னையின், சிக்கல் மிகு தெருக்கள் கொண்ட, சேரியும் அல்லாத, சீரான இடமும் அல்லாத, இரண்டிற்கும் இடைப்பட்ட தெருக்களை கொண்ட பகுதி. அனேக சினிமாக்களில் நாம் பார்க்கும், அத்தனை அம்சமும் அங்கே உண்டு.

செல்வியின் கடை முன்னே நாலைந்து பல்சர்கள் நின்றிருக்க, “ஏய் வண்டிய அப்பால நிறுத்து..” என்ற குரல் உரத்து ஒலிக்க,

“தோடா…!! இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் போடற பார்த்தியா…” என்று குரல் கொடுத்தபடி வந்தான் சிவா…

தன் பைக்கில் வராது அன்றேனோ நடந்து வந்திருந்தான். வண்டி சத்தம் கேட்டிருந்தால், செல்வி எப்போதோ அலர்ட் ஆகிருப்பார்.

சிவா – எரியாவாசிகளின் ஹீரோ…!!

அவனே அப்படி தன்னை உருவாக்கிக் கொண்டான். இருபது வயது வரைக்கும் அவன் இருக்கும் இடம் அங்கே தெரியாது. அத்துனை அமைதி. அப்படித்தான் வளர்த்தார் அவனின் அம்மா. அதாவது தான் அமைதி என்பதுபோல் காட்டிக்கொண்டான்.

அதன் பின்னே வந்த ஆண்டுகளில் எல்லாம் சிவா தன் இருப்பை அங்கே அனைவரினுள்ளும் பதிய வைக்க, இதோ இப்போது எதற்கு எடுத்தாலும் “ண்ணா…”

“சிவா..” “டேய் கண்ணு…” இப்படியான அழைப்புகள் அவனை நோக்கியே இருக்கும்.

இல்லை என்றாலும், இருக்க வைத்துவிடுவான்.

வேறு யாரேனும் அங்கே தலை தூக்கினால் கூட “ஓய்…!” என்று அவன் சுட்டு விரல் நீட்டி மிரட்டினாலே போதும், கப் சிப் ஆகிடுவர்.

சொந்தமாய் ஒரு மெக்கானிக் செட் வைத்திருக்கிறான். அதுதான் அவனுக்கு அனைத்தும். காலை மாலை உண்பதெல்லாம் செல்வியக்கா கடையினில். மதியம் மட்டும் வீட்டில் இருந்து வரும். பலநாள் உறங்குவது கூட செட்டில். வீட்டிற்கு செல்வது என்பது நாளுக்கு ஒருமுறை. அதாவது முதல்நாள் இரவு அவன் வீடு சென்றால், மறுநாள் அங்கிருந்து வருவான்.

அதுதான் அவன் வீடு செல்லும் முறை.

அம்மாவின் நச்சரிப்பு, அப்பாவின் பார்வை, தங்கையின் கோபம் எல்லாம் அளவை மீறினால், கண்டிப்பாய் தினம் தினம் வீடு செல்வான். அவை எல்லாம் தனியாவும், மீண்டும் பழையபடியே. தனிமை விரும்பி அல்ல, என்னவோ இப்படியே எல்லாம் பழகி விட்டது. அதற்காக குடும்பத்து மீது பாசமில்லை என்றில்லை. ஒன்றேன்றால் உயிரையும் கொடுப்பவன். கடமையில் என்றும் தவறியதில்லை.

முக லட்சணமாய் இருந்தாலும், நிறம் ஏனோ சற்று மட்டுதான் ஆனால் குணம் மட்டில்லை.

இதோ கணவனை இழந்து கஷ்ட ஜீவனம் செய்துகொண்டு இருந்த செல்விக்கு, தன் செட்டின் பக்கவாட்டில் இருந்த காலி இடத்தை சற்றே சரி செய்து கொடுத்து,

“கடை வச்சு நடத்திக்கோ க்கா…” என்று சொல்லிவிட்டான்.

வாடகை என்று ஆயிரமோ ஐந்நூறோ செல்வி ஏதேனும் கொடுத்துவிடுவார், கையினில் இருப்பதை பொறுத்து. வேண்டாம் என்று மறுக்காது வாங்கியும்கொள்வான்.  

மற்றவர்களை விட, செல்விக்கு, சிவா என்றால் தனி பிரியம். அவன் என்ன பேசினாலும், சில நேரம் திட்டினாலும் கூட அதனை பெரிதாய் எடுக்கமாட்டார்.

“வா கண்ணு.. இட்லி துண்ணு…” என்று வேகமாய் ஒரு தட்டை எடுத்து தன் சேலை முந்தானை கொண்டு துடைத்தவர், அவன் பார்த்த பார்வையில்,

“முட்ட தோஷ ஊத்தட்டா…” என்றார் வேகமாய். 

“சிவான்னு பேரு வச்சிட்டு, திங்க கிழம கவுச்சி சாப்பிட்டா சிவன் குத்தம் ஆயிடும்…” என்றவன், வேறென்ன இருக்கிறது என்று பார்க்க,

“ஏக்கா சிவாதான் வாரத்துல முத நாள் முட்ட கூட சாப்டமாட்டான் தெரியும்ல…” என்று அங்கலாய்த்த மணியை முறைத்த செல்வி,

“இடியப்பம் சூடா இருக்கு…” என்று தட்டில் வைத்து, அதற்கு சுட சுட ஆவி பறக்க குருமா வைக்க,

“அதெல்லாம் சரி.. என்ன சவுண்டு பலமாருக்கு…” என்றான் சிவா.

“அதானே நல்லா கேளு மச்சி…”

“வண்டிய ஓரமா நிறுத்தாம, உறும விட்டுட்டே இருந்தானுங்க அதான்..”

“அதுக்கு….!!!” என்றபடி இடியாப்பத்தை விழுங்கினான்.

“ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல…”

“அதெல்லாம் இல்லடா.. உங்க வீட்டுக்கு பின்னாடி,  சின்னதா பங்களா மாதிரி ஒரு புது வீடொன்னு இருக்குல்ல. அதுக்கு இன்னிக்கு ஆள் வர்றாங்க அங்க இனிமே நம்ம செல்வியக்கா சமையல் தானாம்…” என்று மணி எடுத்துக் கொடுக்க, அப்படியா என்பது போல் பார்த்தான் சிவா.

அவனுக்கு இச்செய்தி முற்றிலும் புதியது. இரண்டு நாட்கள் ஊரில் இல்லை. நண்பனின் திருமணம் என்று பாண்டிச்சேரி வரைக்கும் சென்றிருக்க, அதற்குள் இத்தனை நடந்திருக்கிறதா என்று பார்க்க,

“ஆமா சிவா.. நேத்து தான் வந்து பேசி அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்தாங்க…” என்று சிரித்து வைத்தார் செல்வி.

“ஓஹோ…!!” என்று யோசித்தவன், “கடையும் நடத்தி, அங்கயும் செய்ய முடியுமா??” என,

“பண்ணிடலாம் சிவா…” என்றார்.

“ஹ்ம்ம் எதுன்னாலும் யோசிச்சு செய்.. கடைன்னா நீதான் இங்க முதலாளி. அங்க வேலைன்னா அதுவேற. பார்த்துக்கோ..”

“சரி கண்ணு. பாப்பாக்கு படிக்கிறதுக்கு கூட உதவி பண்றேன் சொல்லிருக்கு அந்த பொண்ணு…” என்று அடுத்து அடி எடுத்து வைத்தார் செல்வி.

“எந்த பொண்ணு..”

“அந்த வீட்டுக்கு வரப் போற பொண்ணு…”

“ம்ம்ம்… என்னவோ.. புதுசு புதுசா வர்றாங்க.. ஒண்ணு மட்டும்கா காசு கொடுக்கிறாங்கன்னு அவங்களுக்கு அடிமையாகிடாத…” என்று சொல்லி, தட்டை அவரிடம் நீட்டியவன், கை கழுவிவிட்டு, உண்டதர்கான பணம் கொடுக்க,

“வேணாம் வேணாம்னு சொன்னாலும் நீயும் துட்டு குடுக்காம இருக்கப் போறதில்ல…” என்றபடியே அவன் கொடுத்த காசினை வாங்கி, கல்லாப்பெட்டியில் போட்டவர்,

“எதுன்னாலும் பார்த்துக்க நீயிருக்க பின்ன என்ன…” என்றபடியே தன் வேலையை தொடங்கினார்.

“பார்ப்போம் பார்ப்போம்…” என்றபடியே சிவாவும், அவன் ஷெட்டினுள், தான் அணிந்து வந்திருந்த சட்டையை கழட்டியபடி நுழைய,

“ண்ணா… நேத்திருந்து ரெண்டுதபா சேட்டு வண்டி கேட்டு வந்துட்டான்ணா…” என்று அங்கு வேலை செய்யும் சிண்டு சொல்ல,

“இன்னும் நாலு தடவ வரட்டும்..” என்றவன் கரம் ஸ்பானர்களை தூக்கியது.

“சேட்டு உங்கிட்ட வண்டி குடுத்திட்டு படாதபாடு படுறான்….” மணியும் பேசியபடி அவனோடு வேலையைத் தொடங்க,

“முன்ன, எங்கம்மா மோதிரத்த அடகு வச்சிட்டு, திருப்ப போனப்போ எத்தினி தடவ நடக்க விட்டான்.. அதுக்கெல்லாம் வசூல் வேணாமா…”

“அப்புடிசொல்லு.. சேட்டு எத்தினி பேரு பொருள அபேஸ் பண்ணிருப்பான்..”

“ம்ம்ம்…” என்றவன் வேலையில் கவனமாகிப் போனான்.

சிவா ‘ம்ம்ம்…’ என்று சொல்லிவிட்டாளே போதும், அதற்குமேல் அவனும் யாரோடும் பேசிட மாட்டான். அவனோடும் யாரும் பேசிடக் கூடாது.

இது அவனின் கூட்டாளிகளுக்கு நன்கு புரியும்.

பேச்சினை நிறுத்த சிவா ‘ம்ம்ம்…’ சொல்லிவிட்டானே தவிர, சிந்தனை எல்லாம் அந்த புது வீட்டிற்கு வரப் போகும் புது ஆட்கள் மீதே இருந்தது.

‘யாரா இருக்கும்..??’ என்ற யோசனை ஓட, அதற்கான பதில் அன்றைய மதியமே கிடைத்துவிட்டது.

செல்வியின் கடை காலை ஆறில் இருந்து பதினொரு மணி வரைக்கும். மாலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரைக்கும். அன்றும், காலை வேலையில் கடை முடித்து அனைத்தும் எடுத்து வைத்தவர்,

“சிவா நான் கிளம்புறேன்…” என்று வழக்கமான சத்தத்துடன் கிளம்ப, அவர் கடை தாண்டும் முன்னே,

“இந்தா ஏ செலுவி… புது வீட்டுக்கு ஆள் வந்து பால் காய்ச்சியாச்சு. ஏன்னா செஞ்சினுருக்க. வேலைக்கு சேர்ந்தா மட்டும் போதுமா…” என்று ஒரு ஆள் வந்து சத்தமிட,

“ந்தா.. ந்தா வந்துட்டேன்…” என்று வேகமாய் நடந்தார்.

“இன்னாடா பயங்கர ரவுசாருக்கு…” என்று சிவாவும், செட்டில் இருந்து வெளிவர, அதற்குள் செல்வி சென்றிருந்தார்.

என்னவோ அவனுக்கு இந்த புதிய சத்தங்கள் சிறிதும் பிடிக்கவில்லை. அவர்களின் வாழ்வு முறையில் புதிதாய் இப்படி யாரோ வந்து, இங்கே சத்தம் கொடுப்பதெல்லாம் அவன் அனுமதிப்பானா என்ன??!

“வர்றது யாருடா.. பெரிய கை எதுவுமா??” என்றான் மணியிடம்.

“தெர்ல மச்சி.. ஆனா வந்த சாமானெல்லாம் பார்த்தா அப்டிதா இருக்கு…”

“சரி பார்த்துக்கோ…” என்றவன், கையை அங்கிருந்த ஒரு துணியில் துடைத்துவிட்டு,

“டேய் சிண்டு.. சேட்டு வந்தா நாளிக்குன்னு சொல்லு…” என்றபடி சட்டையை மாட்ட,

“நாளிக்கு வந்தா??” என்று கேட்டான் சிண்டு.

“அதையே சொல்லு…” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

“எங்கடா கிளம்பிட்டான்..”

“தெர்லண்ணே…”

“ஹ்ம்ம்.. இந்த மணி இருக்கிறதால இந்த கடை இருக்கு.. இல்லன்னா…” என்று மணி இரு கைகளையும் மேலே தூக்கிக் காட்ட,

“கடைல தாண்ணே நீயிருக்க…” என்று சிண்டு சிரிக்க, ஏகத்துக்கும் முறைத்தவன், தன் வேலையில் முகம் திருப்பிக் கொண்டான்.

சிவாவிற்கு மனம் முழுதும் யாராய் இருக்கும் என்ற கேள்வி எழுந்து சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது.

தேவையின்றி பிறர் விசயங்களில் தலையிட மாட்டான், ஆனால் செல்வி அவனிடம் ஒருவார்த்தை கேட்க கூட இல்லாது முன்பணம் வாங்கியது அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை.

‘ஹ்ம்ம் துட்டுன்னு வந்துட்டா பழக்கம் எல்லாம் மறந்துடும் போல… கேட்க கூட வேணா. ஒருவார்த இப்படி சிவான்னு சொல்லிருக்கலாம்…’ மனதிற்குள் லேசாய் ஓர் முனகல்.

அதன் பின்னே இந்த சங்கதிகளை எல்லாம் விட்டுவிட்டான். செல்வியும் எப்போதும் போல, கடை திறப்பதும், பின் சமையல்  வேலைக்கு என்று செல்வதுமாய் இருக்க, அவருக்கு முன்னேபோல நின்று பேசக் கூட நேரமில்லை.

சிவா அனைத்தையும் கவனித்தாலும், எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. அவரவர் வாழ்வு, அவரவர் விருப்பம்.

அன்றும் அப்படித்தான், செல்வி காலையில் வியாபாரம் முடித்து, கடை அடைத்து கிளம்பிச் சென்றுவிட, சிறிது நேரத்திலேயே அவரிடம் இருந்து சிவாவிற்கு அழைப்பு வந்துவிட்டது.

“கண்ணு ஒரு உதவி வேணும்…” என்று.

“என்னக்கா எதுவும் பிரச்சனையா??”

“அதெல்லாம் இல்ல சிவா.. இது வேற.. ஒரு சின்ன உதவி, நம்ம பசங்க யார்னா நாலு பேர கூட்டின்னு வாயேன்…”

“ம்ம்ச் செல்விக்கா.. ஏன்னா மேட்டருன்னு சொல்லு… என்ன எவனும் பேஜார் பண்ணானா??” என்று கேட்ட சிவாவின் தொனியே மாறிப்போனது.

“ஏய்.. ஏய்.. அத்தெல்லாம் இல்லடா.. இங்க கொஞ்ச சாமான் வந்திருக்கு.. எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள வைக்கணும்.. வண்டிக்காரன் செய்யமாட்டேங்கிறான்…”

“ஓ..!! அதுக்கு…”

“யார்னா கூட்டின்னு வா சிவா…” கெஞ்சாத குறையாய் செல்வியின் குரல் ஒலிக்க,

“ம்ம்ச் உன்னோட….!!!” என்று கடிந்தவன் “பசங்க இருந்தா அனுப்பிவிடுறேன்..” என,

“ஆ…!! நீயே இட்னு வந்து வுட்டு போ… இல்லன்னா எதுவும் சொல்லுவானுங்க…” என்று அடுத்து கேட்க,

“இன்னாக்கா நீயி…” என்ற சலிப்புடன் போனை வைத்தவன்,

“டேய் எவனா நாலு பேர கூட்டின்னு வாடா…” என்றான் மணியிடம்.

“நம்மள சேத்தா இல்லா சேக்காமையா…?”

“ம்ம்ச்… உன்னிய சேர்த்து நாலு… போ…” என்று அவன் பிடனியில் தட்ட,

“ம்ம் ம்ம் எல்லாம் நேரம்டா…” என்றபடி மணி செல்ல, அடுத்து சில நிமிடங்கள் கழித்து, அனைவரும் அங்கே அந்த புதிய வீட்டின் வெளியே நின்றிருந்தனர்.

“வா கண்ணு.. உள்ள வா…” என்று செல்வி வெளியே வந்து அழைக்க,  செல்வியை முறைத்தவன், “இவனுங்கட்ட சொல்லு எடுத்து வைப்பானுங்க…” என்று பார்வையை திருப்பிக்கொண்டான்.

அதே நேரம் உள்ளிருந்து ஒரு குரல் “செல்விமா…” என்று.

“இதோ வர்றேன் பாப்பா…” என்று செல்வி ஓடாத குறையாய் உள்ளே ஓட, ஏனோ சிவாவிற்கு எரிச்சலாய் வந்தது.

கிளம்பிவிடலாமா என்று பார்க்க, அதற்குள் செல்வி வந்து “கண்ணு சாமானெல்லாம் உள்ள கொண்டு வர சொன்னாங்க..” என்று சிவாவிடமே சொல்ல,

“டேய்…” என்று அவன் திரும்பி சத்தம் போட்டதில், மணியோடு சேர்ந்து வந்திருந்தவர்கள், வேகவேகமாய் அங்கே நின்றிருந்த வண்டியில் இருக்கும் பொருள் எல்லாம் இறக்க, அனைத்தும் மர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பழங்கால பொருட்கள்.

கட்டில், அலமாரி, ஊஞ்சல், சோபா என்று இன்னும் நிறைய, அனைத்துமே அழகாய், பார்க்கவே கலைநயத்தோடு இருக்க, சிவாவிற்கு அதனைப் பார்த்ததும் தன்னையும் மீறி “பார்த்து தூக்கின்னு போங்கடா…” என்று சொல்ல முடிந்தது.

“ஆமா ஆமா.. எல்லா ரொம்ப உசத்தி விலையாம்…” என்று செல்வியும் சொல்ல, ஒவ்வொரு பொருளாய் உள்ளே செல்ல, சிவா அப்போதும், பேண்ட் பக்கெட்டினுள் கை விட்டு ஒரு ஓரமாய் தான் நின்றிருந்தான்.

காம்பவுண்ட் சுவருடன் கூடிய தனி வீடு. ஒரு சிறு பங்களா என்றே சொல்லலாம். இருந்த பழைய வீட்டினை ஒன்றை வாங்கி அதனை முடிந்தளவு மாற்றம் செய்து இப்போது புத்தம் புதிதாய் நிற்கிறது. வீட்டை சுற்றியும் தோட்டம் போட்ட இடம். அதில் புதிதாய் இப்போதுதான் மண் நிரப்பி இருப்பார்கள் போல. ஈர மண்ணின் வாசம் வந்து அவன் நாசி தொட்டுக்கொண்டு இருக்க,

“பார்த்து.. பார்த்து.. மெல்ல..” என்று அதே இனிமைக் குரல்.

செல்வி வாசலுக்கும் உள்ளேயும் மாறி மாறி நடந்துகொண்டு இருக்க, குரல் வரவுமே, மீண்டும் நடையை வேகமாய் உள்ளே செலுத்தினார் “இன்னாச்சு பாப்பா…” என்று.

“ஷ்..!! யப்பா இந்த செல்வியக்காரவுசு தாங்கல…” என்று முனுமுனுக்க,

“செல்விமா… இதெல்லாம் செட் பண்ணி வைக்கணுமே.. கார்பெண்டர் யாரும் வருவாங்களா…?” என்ற குரல் காற்றோடு கலந்து வெளி வர,

‘கிளம்பிருடா சிவா.. அடுத்து செல்வியக்கா உண்ணான்ட வரப் போவுது…’ என்று நகரப் பார்க்க,

“சிவாட்ட சொல்லிட்டா போதும்.. யாரனாலும் இட்டுன்னு வந்துடுவான்…” என்றபடி செல்வி வெளி வருவது தெரிந்தது.

“போச்சுடா…” என்று தலையை இட வலமாய் ஆட்டிக்கொண்டான் சிவா.

“சிவா… சிவா…” என்று ஏலமிட்டபடி வந்தவர், “கண்ணு…” என்று வந்து சிரிக்க,

“இப்போ என்னவாம்?” என்றான் கோபத்தை அடக்கி.

“அது அந்த மர சாமானெல்லாம்…” எனும்போதே, “அத, அந்தம்மா வந்து சொல்லமாட்டாங்களோ..” என்றான் ஏகத்தலாமாய்.

“அட கண்ணு… அது அம்மா இல்ல.. பொண்ணு.. ஒத்த பொண்ணு தான். வேற யாருமில்ல… பாவம்ல தனியா இருக்கு…” என,

‘இத்தாம் பெரிய வீட்ல ஒருத்தியாவா…’ என்று யோசனையோடு, வீட்டினைப் ஒருமுறை பார்த்தான்.

“செல்விமா….” என்று குரல் மட்டும் இப்போது வரவில்லை, குரலுக்கு சொந்தக்காரியும் வெளி வர, வீட்டினை அளந்தவன் பார்வை, தானாகத் திரும்ப இளம் பச்சை நிறத்தினில், சிறு சிறு பிங்க் நிற பூக்கள் தெரிக்கவிட்ட, லாங் குர்தா அணிந்து, கேசம் பறக்க நடந்து வந்தவளைக் காண, ஒருமுறை சிவாவிற்கு இதயம் நின்று தான் துடித்தது.

பைரவி – ‘உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா…’ என்றுதான் பாடத் தோன்றும். நிறமட்டுமல்ல, குணமும் கூட வெள்ளை தான். அழகி, வசதி வாய்ப்புகள் இன்னும் ஒரு நிமிர்வை கொடுத்திருந்தது. அது அவள் நடந்து வந்த விதத்திலேயே தெரிய, சிவா ஓரளவு கணித்துவிட்டான்.

“என்ன பாப்பா வேணும்…”

“இல்ல.. இவங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல வந்தேன்…” என்றவள், சிவாவை நேருக்கு நேரே கண்டு “தேங்க்ஸ்…” என்று சொல்ல, அவள் பேசுவதே, பாடுவது போலிருந்தது.

‘இவள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே…’ என்று எண்ணம் போக,

“ண்ணே… இந்தக்கா டிவில வந்திருக்குண்ணே…” என்றபடி சிண்டு வர, பைரவி ஒரு புன்னகையோடு நின்றிருந்தாள்.

வசீகரிக்கும் புன்னகை.. அவள் மீது வந்த வாசம் கலந்து வந்த புன்னகை, அவனுள் சட்டென்று கலந்து போனது.

Advertisement