Advertisement

தீண்டல் – 8

          சந்நிதி சென்றபின் அங்கேயே தான் நின்றான் வசீகரன். அவனின் மனதில் இனி அவளை எப்படி அணுகுவது என்கிற யோசனைகளை படமெடுக்க எதுவும் முகத்தில் பிரதிபலிக்கவில்லை.

“என்ன வசீ இப்படியே நிக்கிற?. என்ன சொன்னாங்க தங்கச்சி?…”

“நான் அவ பின்னலா வர கூடாதாம். இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ண கூடாதாம்…”

“கூடாதுன்னா? என்ன பண்ண போற?…” என்றவனை பார்த்து அலட்சியமாய் தோள்களை குலுக்கியவன்,

“வா போய் என்ன வேண்டுதல் செய்யறாங்கன்னு பாப்போம்…”

“அடேய் இப்ப தானடா வேண்டாம்னு சொல்லிட்டு போனதா சொன்ன? திரும்ப பார்க்கனும்ன்ற?. சனி வேற சட்டை போட்டு அய்யனார் மாதிரி நிப்பாரே?…” கலவரமாய் சூர்யா சொல்ல,

“இதுக்கு முன்னால என்னை அவங்க பார்க்கிற மாதிரி போன எனக்கு அவங்க பார்க்காத மாதிரி போக தெரியாதா? வாடா…” என அவனை இழுத்து செல்ல,

“உனக்கு மட்டும் எல்லா அநியாயமும் எப்படிடா நியாயமா தெரியுது?…” சூர்யா புலம்பலுடன் அவனுடன் சென்றான்.

அங்கே துலாபாரம் குடுக்கும் இடத்தில் முனீஸ்வரனின் குடும்பத்தினர் நின்றுகொண்டிருந்தனர். உணர்வுகள் துடைக்கப்பட்ட முகத்துடன் சந்தியா நிற்க முனீஸ்வரன் பார்கவியிடம் கடுமையாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பெண்மணியும் கர்மசிரத்தையாக கேட்டுக்கொண்டிருக்க சந்நிதி முனீஸ்வரனை அவருக்கு தெரியாமல் கோபமாய் பார்ப்பதும் பின் சந்தியாவின் கையை பிடித்து அழுத்துவதுமாய் இருந்தாள்.

அதன் பின் சந்தியா துலாபாரத்தின் ஒரு பக்கம் அமர முனீஸ்வரனும், பார்கவியும் வெல்லத்தை எடுத்து இன்னொரு பக்கத்தில் அடுக்கிக்கொண்டிருந்தனர்.

“உன் மாமனார் மேட் இன் இண்டியான்னு சொல்ல முடியாது. மேட் இன் வேர்ல்ட்ன்னு சொன்னா கூட மனுஷங்க அடிக்க அடிக்க வந்துடுவாங்க. எந்த கிரகத்து ஏலியனோ?…” சூர்யா கடுப்பாய் பேச வசீகரன் சலனமின்றி அங்கே பார்த்தபடி நின்றான். அவனை பார்த்த சூர்யா,

“வசீ பாவமா இருக்குடா. முனியை பழி வாங்கறேன்னு அந்த பொண்ணுக்கு தண்டனை குடுக்கற. இதெல்லாம் மனசால ஏத்துக்க கூடியதா? பரிகாரம் பலகாரம்னு என்ன பாடு படுத்தறார் இந்த மனுஷன்?…”

“ஹ்ம்ம் ஆமா…”

“அப்ப போய் அந்த சனிக்கிட்ட உண்மையை சொல்லிடலாம் வா…” என அழைக்க,

“எந்த உண்மையை? நான் பார்த்ததும் பிடிச்சதும் உங்க ரெண்டாவது பொண்ணு தான்னு சொல்லனுமா? சொல்லி?…”

“வசீ, அப்படி சொல்ல வேண்டாம். நான் சும்மா தான் சொன்னேன்னு சொல்லி அந்த மனுஷன் மனசுல பாலை வார்த்திடு…”

“எதுக்கு பாலையும் மோரையும் வார்க்கனும்? நான் ஒன்னும் சும்மா சொல்லலையே? அதுவும் இல்லாம அவன் இங்கையும் நாம அவங்களை தொடர்ந்து தான் வந்திருக்கோம்ன்ற மாதிரி பேசிட்டு போறா. இப்ப அவர்கிட்ட போய் இதை சொன்னா அவ்வளோ தான். இந்த ட்ரிப் நிஜமாவே அம்மா ப்ளான் பண்ணினது. எனக்காக. அவங்க இங்க வருவாங்கன்னு நானே எதிர்பார்க்கலை…”

“இதெல்லாம் ஓவரா இல்லையா? இல்லைனாலும் நீ போய் உடனே அவர்கிட்ட சொல்லிடுவ. அட போடா…” என்றவன் மீண்டும் சந்தியாவை பார்த்துவிட்டு,

“நீயெல்லாம் மான்ஸ்டர்டா. உனக்கும் அவருக்கும் பத்து பொருத்தமும் அப்படி பொருந்தி இருக்கு. இரக்கம்ன்றதே இல்லையாடா உனக்கு? அந்த பொண்ணு எத்தனை கஷ்டபடுது பாரு. இதுக்காகவாச்சும் நீ போய் அந்த சனிக்கிட்ட சொல்லுடா…”

சூர்யா வசீகரனிடம் மன்றாடும் குரலில் பேச அவனோ தூரத்தில் தெரிந்த சந்தியாவையும், உடன் வருத்தத்தை மறைத்துக்கொள்ள பாடுபட்டபடி நிற்கும் சந்நிதியையும் பார்த்தபடி நின்றான்.

“வசீ…” சூர்யா அவனை உலுக்க,

“ப்ச், விடுடா. இப்ப என்ன? அந்த பொண்ணு கஷ்டப்படுதுன்னு ஏன் நினைக்கிற? நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுதல் பன்றதா நினைச்சுக்கோ. கஷ்டமா இருக்காது…”

“மனுஷனா நீ? என்ன லாஜிக்டா இது?…”

“கல்யாணத்துல எதாச்சும் தோஷம் இருந்தா தடை இருந்தா பரிகாரம் செய்யறதில்லையா? அது மாதிரி நினை. தப்பா தெரியாது. சந்தியா இத்தனை கஷ்டபடரதுக்காவாச்சும் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையனும். நாம தான் அதுக்கு பொறுப்பு…”

“என்னது நாமளா? என்ன என்னை ப்ரோக்கர் ஆக்கலாம்னு ப்ளானா? இந்த ஆட்டத்துக்கு நான் வரமாட்டேன்…” என அங்கிருந்து கிளம்ப,

“நான் அனுக்கிட்ட பேசிக்கறேன்…” என்றான் வசீ.

“என்னன்னு?…” மனைவியின் பெயரில் அந்த இடத்திலேயே சூர்யா நின்றுவிட,

“ஒரு பொண்ணோட நல்ல எதிர்காலத்துக்காக உன் புருஷன் எனக்கு உதவியா உறுதுணையா இருக்கமாட்டேன்னு சொல்றான்னு சொல்லுவேன். எனக்கு துணையா இந்த நல்ல விஷயத்துக்கு வரமாட்டேன்னு உறுதியா சொல்லிட்டதா சொல்லுவேன்…”

“வந்துட்டேன். வந்துட்டேன். போதுமா?…” என வசீகரனின் அருகே வந்து கையை பிடித்துக்கொள்ள அது என்பதை போல பார்த்த வசீகரன் பொங்கிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு,

“வா போய் அம்மாவை பார்ப்போம். தேடிட்டு இருப்பாங்க…”

“இப்பதான் ஞாபகம் வருதாக்கும்?…” என்ற புலம்பலுடன் அவனுடன் நடக்க சூர்யாவின் கோபத்தை பார்த்து அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவனுடன் நடந்தான் வசீகரன்.

அவர்களுக்கு தெரியாமல் பார்த்துவிட்டதாய் இவர்கள் நினைத்திருக்க துலாபாரம் நிறைவுறும் நேரம் அங்கே இருந்த கண்ணாடியில் வசீகரனின் முகம் தெரிய திடுக்கிட்டு போன முனீஸ்வரன் அவர்கள் இருந்த திசையை திரும்பி பார்த்தார்.

அந்த நேரம் தான் சூர்யாவை வசீகரன் அனுவிடம் மாட்டிவிடுவதாய் சொல்லிக்கொண்டிருக்க முனீஸ்வரன் பார்த்ததை அவன் அறியவில்லை.

கூட்டத்தில் எதுவும் பேசிக்கொள்ளவேண்டாம் என முனீஸ்வரன் அந்த இடத்தில் தன் கோபத்தை அடக்க முயன்று பார்கவியிடம் எரிந்து விழுந்தார்.

எப்போதுமே அன்பாக பேசுபவர் இல்லை என்றாலும் சற்று நிமிடம் முன்னால் இத்தனை கடுமை காட்டியிறாதவர் திடீரென வார்த்தையால் சுட்டு பொசுக்க காரணம் தெரியாமல் பதட்டத்தில் செய்வதையும் தவறுதலாக செய்துவைக்க அதற்கும் திட்டுவாங்கினார்.

கலங்கிய கண்களை மறைத்துக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு இனியாவது தன் பிள்ளைகளுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்தி கொடு இறைவான என மனமுருக வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

சந்நிதிக்கோ இனிமேல் வசீகரனின் தொந்தரவு இருக்காது என்கிற நிம்மதி ஒருபக்கம் இருந்தாலும் இதை தகப்பனுக்கு யார் புரியவைக்க என்று குழப்பத்துடனே நடக்க சந்தியாவின் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை.

அதை பார்த்த சந்நிதி சந்தியாவுடன் சேர்ந்து தகப்பனை விட்டு இரண்டு அடிகள் பின் தங்கி நடந்தவாறே,

“தியா இனிமே அந்த வசீகரன் நம்ம பக்கம் வரமாட்டார்…” என கிசுகிசுப்பாய் அவளிடம் சொல்ல,

“என்ன உளர்ற? உனக்கெப்படி தெரியும்?…” என கேட்க,

“ப்ச், இப்ப நான் எதுக்காக போனேன் தெரியுமா?…”

“உன் காலேஜ் ப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க எக்ஸ்ட்ரா புட்டமுது பாக்கெட் வாங்க போன…”

“அதான் இல்லை. நான் அந்த வசீகரனை பார்க்க தான் போனேன்…” வெகு ஜாக்கிரதையாக முனீஸ்வரனுக்கு கெட்டுவிடாத தூரத்தில் சந்தியாவிடம் சொல்ல,

“அறிவிருக்கா நிதி? இது அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னே போட்ருவாரு…”

“பரவாயில்லை. இப்போ மட்டும் உயிரோடவா இருக்கோம்…” அவள் சொல்லிய வார்த்தை அவளுக்கு சாதாரணமானது. ஆனால் கேட்டவளுக்கோ உயிர் துடித்தது.

தன்னை விட இரண்டு வருடம் இளையவளே இருந்தாலும் தன்னை அவளின் தாய் ஸ்தானத்தில் இருத்தி தன் குழந்தையாக தான் நிதியை பார்த்து வந்தாள் தியா.

இப்படி ஒரு வார்த்தையை அவள் சொல்கிறாள் என்றால் எத்தனை எத்தனை வருந்தியிருக்கிறாள்? வாழ்க்கையின் மேல் கொஞ்சமும் பற்றில்லாதவளை போல ஆசைகளற்று பேசுகிறாளே? என வேதனையும் கலக்கமுமாய் தங்கையை பார்க்க,

“நிதி, ஏன் இப்படி பேசற?…”

“ப்ச், இதுவா முக்கியம்? நான் போன விஷயம் தான் முக்கியம்….”

“சரி சொல்லு. ரூம்க்கு போனா ஒன்னும் பேசமுடியாது…” சந்தியா அவசரப்படுத்த,

“நாமளும் அப்பாவும் தான் அவரை தப்பா நினைச்சிருக்கோம். அவர் அன்னைக்கு கோவமா பேசினதோட சரி. அதை மறந்துட்டார் போல. இதுவரைக்கும் அவர் வந்தது எல்லாம் வேலைக்காக தான் போல. இனிமே தவறியும் வரமாட்டாங்க. நான் பேசிட்டேன். எவ்வளோ ஜெம் தெரியுமா? அப்பா தான் மிஸ்அன்டர்ஸ்டேன்ட் பண்ணிட்டார்…”

“பேசிட்டல. விடு. இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம். வேகமா போவோம். இதுக்கே அப்பா திட்டுவார்…” சந்தியா அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் முனீஸ்வரன் தேடுவதற்குள் அவரின் பின்னே நெருக்கமாய் நடந்து சென்றனர்.

அன்றைய நாள் விசேஷமானது என்பதல கூட்டம் வேறு அலைமோத மெதுமெதுவாக தான் நகர்ந்து செல்ல முடிந்தது.

தூரத்தில் கோவிலை விட்டு வெளியே வரும் நேரம் வசீகரன் குடும்பத்துடன் சிரித்தபடி பேசிக்கொண்டே அவர்கள் வந்த வேனில் ஏறி செல்வதை முனீஸ்வரனின் மொத்த குடும்பமும் பார்த்தது.

முக்கியமாக அவனை முனீஸ்வரன் பார்த்துவிட்டாரா என்கிற பதற்றம் மூன்று பெண்களையும் தொற்ற மெதுவாய் நிமிர்ந்து பார்த்தவர்களின் நெஞ்சை பயம் கவ்விப்பிடித்தது. ஏனெனில் முனீஸ்வரனின் கண்கள் கோபத்தில் ரத்தமாய் சிவந்திருக்க சந்தியாவின் கையை வலிக்கும்படி பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்.

“இந்த அப்பா எப்பத்தான் யோசிக்க போறார்? அந்த குடும்பம் முன்னாடியே கோவிலை விட்டு போயாச்சு. இப்பத்தான் நாம கிளம்பறோம். இப்ப போய் என்னவோ அவங்க இவளை பார்த்துட்ட மாதிரி கோவமா தியா கையை பிடிச்சு இழுத்துட்டு போறாரே? முருகா…” என நொந்த மனதுடன் ஓட்டமும் நடையுமாக அவரை பின்பற்றி செல்ல முனீஸ்வரன் தாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் சென்றுதான் சந்தியாவின் கையை விட்டார்.

“எல்லாத்தையும் பேக் பண்ணுங்க. இப்பவே கிளம்பனும்…” என்று கர்ஜிக்க,

“நாளைக்கு இன்னொரு வேண்டுதல் இருக்குன்னு சொன்னீங்களே…” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பார்கவி கேட்டுவிட தீயாய் முறைத்தவர்,

“கிளம்புன்னு சொன்னா மறு வார்த்தை பேசாம கிளம்பனும். என்ன புதுசா எதிர்த்து பேசற? குளிர்விட்டு போச்சா?…” என மீசையை முறுக்க,

“ம்மா, பாத்ரூம்ல டவல் இருக்கு. எடுத்துட்டு வாங்க. ஈரமா இன்னும் காயாம இருந்தா இந்த கவர்ல வச்சுப்போம்…” சந்நிதி தான் பேச்சை மாற்றி தாயை காப்பாற்றினாள்.

வேகமாய் சின்ன மகளை முறைத்தவர் சந்தியாவை பார்த்தார். அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் துணிகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தாள். ஆனால் முனீஸ்வரனுக்கு அந்த அமைதி கூட அமைதியை கொடுக்கவில்லை.

“எங்கிட்டு போனாலும் காலை சுத்தின பாம்பாட்டம் கூடவே ஒட்டிக்கிட்டு வரானே? இவனை என்ன பன்றதுன்னே புரியலை. பொம்பளைப்புள்ளை சமாச்சாரம்னு கையை கட்டி நிக்கிறேன். இல்ல அவன உரு தெரியாம அழிச்சிட்டு தான் மறுவேலை….”

அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு வாய்க்குள் முணுமுணுத்தபடி நிலைகொள்ளாமல் தவித்தார்.

“ஏழரை மாதிரி கூடவே வரான். ஒரு இடம் போக முடியலை. இருக்கட்டும் எதுலயாவது சிக்காமலா போய்டுவான். வச்சிக்கறேன்…”

“ஐயோ…” என பார்கவியின் குரல் பதட்டமாய் ஒலிக்க,

“என்னாச்சு?…” என வேகமாய் திரும்பினார்.

“கோவில்ல குடுத்த பிரசாதம் எல்லாம் கீழே கொட்டிருச்சுங்க…” என நடுக்கத்துடன் சொல்ல,

“மரமண்ட மரமண்ட, உனக்கெல்லாம் ஆண்டவன் புத்திய தலையில வச்சானா இல்லையா? ஒரு கவர்ல இருக்கிற பொருளை கூட கவனமா எடுத்து பேக்ல வைக்க முடியாதா? உன்னை கூடவே கூட்டிட்டு வந்து வேண்டுதல் செஞ்சா என்னத்த பலன் கிடைக்கும்?…”

வாய்க்கு வந்தபடி ஏச அதையும் கூட கேட்டுக்கொண்டே உதட்டை கடித்து அழுகையை அடக்கியபடி கீழே கிடந்ததை எடுத்து வைத்தவர் மனதே சரியில்லை. அபசகுனமாக பட அந்த ஆறுமுகக்கடவுளை வேண்டியபடி பேக்கில் வைத்தவர்,

“தியா புடவையோட ட்ராவல் பன்றது கஷ்டமா இருக்கும். நீ போய் சுடிதார் மாத்திக்கோ…” என சொல்ல தட்டாமல் சென்று மாற்றி வந்தாள் சந்தியா.

“உங்க அலப்பறை முடிஞ்சதா? கிளம்பி தொலையுங்க. போங்க பையை தூக்கிட்டு…” என திட்டி அவர்களை முன்னால் அனுப்பி அறையை ஒருமுறை எதையும் விட்டு சென்றிருக்கிறார்களா என ஆராய்ந்துவிட்டு கதவை பூட்டிக்கொண்டு வந்தார்.

ட்ரைவருக்கு போன் செய்து ஏற்கனவே வர சொல்லிவிட்ட படியால் ஹோட்டல் ரிசப்ஷனில் ரூம் சாவியை கொண்டுவந்து ஒப்படைக்க,

“என்ன ஸார் நாளைக்கு வரைக்கும் புக் பண்ணியிருந்தேங்க. இப்ப திடீர்ன்னு வெக்கேட் பன்றீங்க?…” அந்த மேனேஜர் என்னவோ சாதாரணமாக தான் கேட்டான். ஆனால் ஏற்கனவே கோபத்தில் இருந்த முனீஸ்வரன்,

“வேலைன்னு வந்தா போவாம உன் ஹோட்டல்லையே இருந்து குப்பைகொட்ட சொல்றியா? ரூம் வேண்டாம்னு கிளம்பினா மூடிட்டு சாவியை வாங்கி வச்சுக்கிட்டு எவ்வளவு காசுன்னு கணக்கு சொல்லு. இந்த கேள்வியெல்லாம் நீ கேட்க கூடாது…” என்று பாய மேனேஜருக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு,

“இல்லை ஸார், நான் அப்படி கேட்கலை. இங்க உங்களுக்கு எதுவும் சௌவுகர்யமா இல்லைன்னா நாங்க அதை சரி செய்வோம். எதாச்சும் குறை இருந்தா சொல்லுங்க…”

“இந்த ஓட்டலே குறை தான். என்ன இடிச்சுட்டு வேற புதுசா காட்டுவியா? எவ்வளோ ஆச்சுன்னு சொல்லிட்டு காச வாங்குடா. மேல பேசின பார்த்துக்க. உனக்கென்ன இன்னிக்கே கிளம்பிட்ட நாளைக்கான காசு போச்சுன்னா நினைக்க? அதையும் சேர்த்து தரேன் வச்சுக்க. பிச்சை போட்டதா நினைச்சுக்கறேன்…”

வசீகரன் மேல் உள்ள கோபம் யார் யார் மேலெல்லாமோ வரைமுறையின்றி பாராபட்சம் பார்க்காமல் பாய்ந்தது. அந்த மேனேஜர் மூன்று பெண்களையும் அத்தனை பரிதாபமாய் பார்த்தான்.

“இந்த மனிதனிடமா வாழ்கிறீர்கள்?” என்னும் பட்சாதாபம் அவனின் பார்வையில் நிரம்ப,

“அங்க என்னடா பார்வை?…” என முனீஸ்வரன் அதற்கும் பாய்ந்துகொண்டு வர அதுவரை தன்மையாக இருந்தவன்,

“ஸார், மரியாதையா பேசுங்க. கிளம்பனுமா கிளம்புங்க. ஏதாவது பிடிக்கலைன்னு தெரிஞ்சா தீர்த்து வைக்கலாமேன்னு தான் கேட்டா ரொம்ப ஓவரா பேசறீங்க? உங்க பிச்சை காசு யாருக்கு வேணும்? வேணும்னா நீங்க கிளம்புங்க. உங்களுக்கு இலவசமா வாடகைக்கு ரூம் விட்டதா நான் நினைச்சுக்கறேன்…” என தன்மானத்தோடு அவன் பேச,

“டேய் யாருக்கு யார் இலவசமா குடுக்கறது? நீ வாடா, உனக்கு நான் வருஷமெல்லாம் இலவசமா காஞ்சி ஊத்தறேன். என்னோட தகுதி தெரியுமாடா?…” என வேஷ்டியை மடித்துக்கட்டி ஆக்ரோஷமாய் பேச,

“பைத்தியமா இவர்?” என்னும் பார்வை அப்பட்டமாய் அந்த மேனேஜர் கண்களில்.

“அய்யா…” என வேகமாய் ஓடிவந்தார் முனீஸ்வரன் ட்ரைவர்.

“சாமியப்பா இவனுக்கு நான் யாருன்னு காட்டலை, என்ன பேச்சு பேசறான் தெரியுமா?…” என ட்ரைவரிடம் ஒப்பிக்க ட்ரைவர் கெஞ்சும் பார்வை பார்த்தார் மேனேஜரை.

“அம்மா புள்ளைங்கள கூட்டிட்டு போய் கார்ல உட்காருங்கம்மா. நாங்க வந்திடறோம்…” என அவர்களை அனுப்பிவிட்டு,

“போவோம் அய்யா. நேரமாகுதுல…” என சொல்லவும் தன்னுடைய சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மேனேஜரின் மேல் விட்டெறிந்தவர்,

“பொறுக்கிக்க…” என சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியேற அவரின் வார்த்தையிலும் செயலிலும் கோபம் கொண்ட மேனேஜர் வேகமாக ஒரு நாள் வாடகைக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிஞ்சிய பணத்தை வெளியில் நின்ற மூன்று பிச்சைக்காரர்களுக்கு போட்டுவிட்டு முனீஸ்வரனை கை காண்பித்தான்.

காரில் ஏறிவிட்டு இதை திரும்பி பார்த்த முனீஸ்வரன் மீண்டும் காரை விட்டு இறங்கும் முன்னால் காரை கிளப்பிவிட்டார் சாமியப்பன்.

“இவன் வாங்கறது மாச சம்பளம், ஆனா பார்த்தியா எத்தனை திமிர் காட்டறான்னு. எல்லாம் அவனால வந்தது. அவனை  பார்த்ததுல இருந்து பாக்கறவனெல்லாம் அவனை மாதிரியே தான் இருக்கானுங்க…” என்றவர்,

“எல்லாம் இவளால வந்தது…” என பின்னால் அமர்ந்திருந்த சந்நிதியை பார்த்து சொல்ல சந்நிதியின் வயிற்றுக்குள் இருந்து உருவமில்லா உருண்டை வந்து தொண்டையில் அடுத்து நின்றது.

“இவளுக்கு போன வாரமோ? இல்லை வார வாரமோ சேர்ந்தாப்புல லீவ் கிடைச்சிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? போயும் போயும் இந்த வாரமா கிடைக்கனும்…”

முனீஸ்வரன் நியாயம் பேசியதில் ட்ரைவருடன் சேர்த்து மற்ற மூவருக்கும் எங்கே முட்டிக்கொள்ளலாம் என்று வந்தது.

“அய்யா கோசுக்காதீங்க, அந்த தம்பியை பார்த்தீங்களா?…” என தயங்கி கேட்க அவரை முறைத்தார் முனீஸ்வரன்.

“இல்ல இத்தனை கோவப்படறீங்க…”

சாமியப்பனுக்கு மட்டுமே அந்த வீட்டில் அன்று வசீகரன் குடும்பம் வந்து சென்றதும், பின் அவன் வந்து பிரச்சனை செய்ததும் தெரியும் என்பதால் முனீஸ்வரன் இதை பற்றி எங்கும் பேச கூடாதென்று கடுமையாக எச்சரித்திருந்தார்.

“ஹ்ம்ம் ஆமா, வந்திருந்தான் குடும்பத்தோட கும்பலா…”

“அய்யா திரும்பவும் சொல்றேன்னு கோச்சுக்காதீங்க. ஒருவேளை அவர் சாதாரணமா கூட குடும்பத்தோட வந்திருக்கலாம்ல…”

“அவன் சாதாரணமா வந்தானோ? சண்டை போட வந்தானோ? அவனை பார்த்தாலே எனக்கு ஆகறதில்லை….” கோபமும் ஆத்திரமுமாய் முனீஸ்வரன் சொல்ல,

“அய்யா இத்தனை வயசுக்கு இவ்வளவு கோவம் கூடாதுங்க…”

“சாமியப்பா…” என்று இரைய,

“மன்னுச்சுக்கோங்க…” அத்துடன் வாயை மூடிக்கொண்டார் சாமியப்பன். தற்செயலாக வசீகரனின் வேனை போன்ற ஒரு வேன் இவர்கள் பின்னால் வருவதை பார்த்த முனீஸ்வரன் அவன் தான் பின் தொடர்ந்து வருகிறான் என்னும் கோபத்தில்,

“சாமியப்பா வண்டியை வேகமா ஒட்டு…” என கத்த என்னவோ என்று பதறி கையில் இருந்த தாமிரத்தால் ஆனா கனத்த வாட்டர் பாட்டிலை கீழே போட்டாள் சந்நிதி. அது சந்தியாவின் காலில் பலமாய் விழ வலியில்,

“அம்மா…” என்று அலற என்னவோ என பதறிய முனீஸ்வரனோடு சாமியப்பனும் திரும்பி பார்க்க நொடிநேர கவன சிதறலில் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பெரும் விபத்தில் சிக்கியது.

“பாரு…” என்கிற முனீஸ்வரனின் அலறல் அந்த இடத்தையே ஸ்தம்பிக்க செய்தாது.

முதன்முதலில் கணவனின் வாயால் தனது பெயரை கேட்ட பார்கவி துக்கத்துடன் மயக்கத்தில் ஆழ்ந்தார்.

Advertisement