Advertisement

தீண்டல் – 4 (2)

இதை பார்த்துக்கொண்டிருந்த வசீகரனுமே ஒருகணம் ஸ்தம்பித்து போனான். ஒரு நொடியும் யோசிக்கவில்லை. சூர்யாவை அழைத்து அவனின் காரை எடுக்க சொன்னவன் மொபைலை பார்த்துக்கொண்டே முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டான்.

பதறிப்போய் கூசி நின்ற தந்தை, தாயின் நிலை எப்படி இருக்குமென்று அவனால் வரையருக்கவே முடியவில்லை.

“வேகமா போடா…” என கோபத்தில் வார்த்தையை கடித்து துப்ப இங்கே ராதாவிற்கு பெரும் அதிர்ச்சியாக போனது.

இதை பற்றி தன்னிடம் முன்பே அம்பிகா சொல்லியிருந்தால் அதற்கேற்றது போல பேசியிருக்கலாமே என எண்ணி வருந்தினார் ராதா.

“நீங்க சொல்றது எங்களுக்கு புரியலை…” அம்பிகாவிற்கு அவமானத்தில் கண்கள் கலங்கிவிட்டது. அனுபமா அதிர்ச்சியில் வசீகரன் இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதையே மறந்துபோனாள்.

“இங்க பாருங்க, மரியாதையா பேசுங்க…” குகன் சொல்ல,

“அப்படித்தான்யா பேசுவேன். உனக்கெல்லாம் என்னய்யா மரியாத? உன் பையனுக்கு பொண்ணு குடுக்க நான் என்ன இளிச்சவாயனா? இதுல இந்தம்மாவுக்கு ஒன்னும் புரியலையாம். அட ச்சீ வெளில போங்க…”

“கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணு கல்யாணம் காட்சின்னு வந்துற கூடாதே? உடனே தட்டை தூக்கிட்டு வந்துடுவீங்க சம்பந்தம் பேச. தானா வழிய வந்து இத்தனை பேசறீங்கன்னா உள்நோக்கம் எதுவும் இல்லாமலாருக்கும்?…”

முனீஸ்வரன் பேச பேச காரில் வசீகரனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஓங்கி டேஷ்போர்டை குத்தியவன் தன்னுடைய கோபத்தை அடக்க படாதபாடு பட்டான்.

“ஸாரி அம்மா, வெளில வந்துருங்க. உங்களை அனுப்பிருக்கவே கூடாது. ஸாரி அப்பா…” என அவனின் உதடுகள் பெற்றவர்களிடம் மன்னிப்பை வேண்டிக்கொண்டே இருந்தது. சூர்யாவிற்கும் ஒன்றும் புரியவில்லை. நடப்பதை பார்த்துக்கொண்டு அவனும் விரைவாய் காரை ஓட்டினான்.

“வெளில போங்கன்னு சொல்லியும் வெக்கமில்லாம நிக்கிறீங்க? அந்த குடும்பத்தோட சம்பந்தப்பட்ட யாரும் எனக்கு தேவையில்ல. உங்க குடும்பத்துக்கு என்னால பொண்ணை குடுக்க முடியாது…”

“அத்தான் என்ன பேசறீங்க? பெரியத்தான் குடும்பத்துல சம்பந்தபட்டவங்களா? இவங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? அப்படினா நீங்க எங்களையே ஒதுக்கி வைக்கனும். பேசனும்னு சும்மா பேசாதீங்க…” ராதா அவரை எதிர்த்து பேச,

“இது என் வீடு. யார் இருக்கனும், இருக்க கூடாதுன்னு நான் முடிவு செய்வேன். முதல்ல உன்னை இங்க நுழைய விட்டிருக்க கூடாது. குடும்பத்துக்கு பெரியமனுஷி மாதிரி நாட்டாமை பண்ணிட்டு. போனா போகுதேன்னு விட்டா அளவுக்கு மீறி பேசற. நீ முதல்ல வெளில போ. போன்றேன்ல…”

முனீஸ்வரன் முகத்தில் முழியாததை போல அவர் பேசிவிட எதற்கும் அழாத ராதாவிற்கு அழுகை பொங்கியது. கண்ணீருடன் அம்பிகாவிடம் திரும்பியவர்,

“இது இந்த குடும்பத்தோட சாபக்கேடு. இங்க இருக்கறவங்களுக்கு எந்த காலத்திலயும் விமோச்சனம் கிடைக்காது. இந்த பொண்ணுங்களை ஒரு நல்லவன்கிட்ட ஒப்படைச்சு இனியாவது சந்தோஷமா இருக்கட்டுமேன்னு தான் நினைச்சேன். அது அந்த கடவுளுக்கும் பொறுக்கலை. இவருக்கும் பொறுக்கலை. என்னை மன்னிச்சிடுங்க அம்பிகாம்மா…”

ராதா அம்பிகாவிடம் கைகூப்பி மன்னிப்பை வேண்ட பார்த்து நின்ற பார்கவிக்கு உள்ளம் பதறியது.

“இந்த நாடகத்தை எல்லாம் வெளில போய் வச்சுக்கோங்க. உண்மையை மறைச்சு என்னை அந்த கும்பலோட சேர்க்கவா திட்டம் போடறீங்க? கூண்டோட அழிச்சுடுவேன்…”

“யப்பா சாமி. போதும். நீங்க ஒன்னு சேரவும் வேண்டாம். உங்களால நிம்மதியா இருக்கற அந்த குடும்பத்தோட சந்தோஷத்தை கெடுக்கவும் வேண்டாம். ஏற்கனவே மூணு ஜீவன்கள் இங்க படற வேதனை போதாதா? உங்கள அங்க சேர்த்து அந்த பாவத்தை வேற என்னை கட்டிக்க சொல்றேங்களா?…” ராதா வெடுக்கென்று பேசிவிட்டு,

“வாங்கம்மா போகலாம்…” என அழைக்க அம்பிகா திரும்பி கூட பார்க்கவில்லை எவரையும்.

“இந்தா இதையும் அள்ளிக்கிட்டு போம்மா…” என்று கையில் இருந்த வசீகரனின் ஜாதகத்தை தூக்கி வீச பொறுக்கமாட்டாமல் வாய்விட்டே அழுதுவிட்டார் அம்பிகா.

“இதுக்கெல்லாம் அனுபவிப்பீங்க…” என்ற குகன்,

“அபி அழாம வா. இப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சா நாம இங்க வந்திருக்கவே மாட்டோம்…” என தேற்ற அனுபமா தான் ஜாதகத்தை வேகமாய் வந்து எடுத்துக்கொண்டாள்.

அவர்கள் வெளியேறியதும் பார்கவியையும் மகள்களையும் முனீஸ்வரன் முறைக்க பிள்ளைகள் அறைக்குள் சென்று முடங்கினர். பார்கவி உதவிக்கார பெண்ணை அழைத்து கீழே சிதறிக்கிடந்த கண்ணாடி துண்டுகளையும் காபியையும் சுத்தம் செய்ய சொன்னார்.

சுத்தம் செய்வதை வெறித்த பார்வையுடன் பார்த்துக்கொண்டே நின்றார் தன் பெண்ணின் எதிர்காலமும் இப்படி சிதறிவிட்டதென்று கலங்கிபோனார். இத்தனை களேபரத்திலும் வீட்டு சத்தம் வெளியே எட்டவே இல்லை.

காரில் ஏறிய பின்பு ஜாதகத்தை ஹேண்ட்பேக்கில் வைக்கும் பொழுதுதான் மொபைலில் வசீகரன் லைனிலேயே இருப்பதை உணர்ந்த அனு தலையில் கைவைத்துவிட்டாள்.

வசீகரன் அதில் சிவந்த முகத்துடன் தெரிய அனு வாயை திறக்கும் முன்னால் வசீகரன் உதட்டில் விரல் வைத்து பேசாதே என்றவன் லைனை கட் செய்துவிட்டான்.

அனுபமாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வசீகரன் இங்கே வந்துகொண்டிருக்கிறான். அதை யாரிடமும் சொல்லவும் அனுமதிக்கவில்லை. சூர்யாவிற்கு மட்டும் மெசேஜ் அனுப்பி அவனை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அம்பிகாவிடம் திரும்பினாள்.

ராதா அவரிடம் மன்னிப்பை வேண்டிக்கொண்டே தான் வந்தார். குகன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வீட்டிற்கு போய் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தவர் அம்பிகாவின் முகத்தை பார்க்கவே அஞ்சினார். இத்தனை வேதனையாய் அம்பிகா இருந்தே இல்லை. அதுவே மனதை வலிக்க செய்தது.

முனீஸ்வரனின் வீட்டில் எவரும் மதிய உணவை அருந்தவில்லை. முனீஸ்வரனுமே இரண்டுமணிநேரம் கடந்துதான் உணவு உண்ணவே வந்தார்.

“எங்க பிள்ளைங்க? வர சொல்லு…” என்று மனைவியை அதட்ட பார்கவி சென்று அழைத்துவந்தார்.

“உங்களுக்கு ஊட்டியா விடனும்? சாப்பிட தானா வந்து உட்கார தெரியாதா?…” என திட்டியவர் பார்கவியை பார்க்க மூவருக்கும் பரிமாறினார்.

“உனக்கு தனியா சொல்லனுமா? உனக்கும் போட்டுட்டு உட்காரு…” என அவரையும் குதற மூன்று பெண்களுக்கும் உணவு இறங்கவே இல்லை.

அத்தனை கடினமாக சாப்பிட்டுகொண்டிற்கும் பொழுதே கதவு படாரென அறைந்து திறந்தது. இன்னும் சிறிது வேகமாக அடித்திருந்தால் உடைந்திருக்கும். என்னவோ என பதறி பார்க்க அங்கே ருத்ரமூர்த்தியாய் நெற்றிக்கண் திறந்த சிவனாய் வசீகரன் நின்றிருந்தான். அவனின் பின்னே சூர்யா.

“டேய் யார்ரா நீ? வீட்டுக்குள்ள வந்து அராஜகம் பன்ற?…”

“பெரியமனுஷன்ற போர்வையில உங்கள மாதிரி மனுஷ தன்மையே இல்லாத ஆள் இருக்கற வீட்ல அராஜகம் பண்ணாம ஆராதனையா பண்ணுவாங்க?…” ஏளனமும் இகழ்ச்சியுமாய் வசீகரன் கேட்க,

“யார்ன்னு கேட்டா பதில் சொல்லுடா. இல்ல போலீஸை கூப்பிடுவேன்…”

“கூப்பிடுங்க. கூப்பிட்டு தான் பாருங்களேன். அட கூப்பிடுங்கன்னு சொல்றேன்ல…” முனீஸ்வரனை புரட்டியெடுக்கும் வேகம் இருந்தும் அவரின் வயது காரணமாயும் தன் வளர்ப்பு காரணமாயும் அங்கிருந்த டீப்பாயை தூக்கி போட்டு உடைத்தான்.

“டேய் ரவுடிப்பயலே…”

“சொல்லிக்கோங்க. தாராளமா சொல்லிக்கோங்க. வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுத்தி அனுப்பினா உங்கள பாராட்டுவாங்களா?. ரவுடித்தனம் தான் பண்ணுவேன்…”

“என்னாலே சொல்லுற?. ஓஹ் இப்ப வந்துட்டு போச்சுங்களே…” என்று ஏச,

“ஏய்…” என்று முனீஸ்வரனை நோக்கி அடிப்பதை போல கை நீட்டியவன் அவருக்கு பின்னால் நின்ற பெண்களை பார்த்தான்.

சந்தியா பயத்தில் வெடவெடத்துக்கொண்டு சந்நிதியின் பின்னால் மறைய சந்நிதி முகம் முழுவதும் கலக்கமும் கண்ணீரும். பார்கவி அவனை பார்த்து கையெடுத்து கும்பிட வெறுத்துப்போனது வசீகரனுக்கு.

ஒரு நிமிடம் மூச்சை இழுத்து வெளியிட்டவன் பின் வரவழைக்கப்பட்ட நிதானத்துடன் முனீஸ்வரனை பார்த்தான்.

“முறைப்படி பேச தானே அனுப்பிவச்சேன். மரியாதை தெரியாத குடும்பம்னு முதல்லையே தெரிஞ்சிருந்தா இந்த வீட்டு வாசப்படி மிதிக்க விட்டிருக்கமாட்டேன் என் அம்மாவை…”

“கல்யாண வீட்டுக்கு வயசு பொண்ணுங்க வந்துற கூடாதே. உடனே பின்னால லவ்வு கருமாந்திரம்னு அலைய ஆரம்பிச்சிடுவீங்க. போடா…”

“நானே இன்னும் இதை லவ்ன்னு டிக்ளர் பண்ணலை. நீங்களா ஏன் சொல்றீங்க? அதுவும் பின்னால அலைஞ்சேன்னு. பெரியவங்களை சம்பந்தம் பேச தானே அனுப்பினேன்…” அத்தனை ஆத்திரத்திலும் வார்த்தைகளில் அத்தனை கவனமாய் இருந்தான்.

“பிடிக்கலைன்னா தன்மையா சொல்லியிருக்கனும். நீங்க வர சொன்னதால தான வந்தாங்க. வரவச்சு அவமானப்படுத்தீட்டீங்க…”

“அப்படித்தான்டா பேசுவேன். கல்யாணத்துக்கு வந்தோமா கொட்டிக்கிட்டோமா போனோமான்னு இல்லாம என் பொண்ணை ஏன் பார்க்கனும்? கேட்கனும்? அப்பா நான் பேசத்தான் செய்வேன்…”

அவன் கவனமாய் இருந்தாலும் முனீஸ்வரனின் அகம்பாவமும் வார்த்தையும் அவனை மேலும் கோபமுற செய்தது. மிரட்டிவிட்டு எச்சரித்து செல்லத்தான் வந்தான்.

ஆனால் இந்த குடும்பத்துடனான இவன் பந்தம் உறுதிசெய்ய அந்த இறைவன் முனீஸ்வரனின் வாய் முகூர்த்தமாகவே அதற்கு பிள்ளையார் சுழி போட வைத்தார்.

“உன் வீட்ல சம்பந்தம் பண்ண உனக்கு பொண்ணை குடுக்க எனக்கு பிடிக்கலை. வேண்டாதவங்க வந்தா அப்படித்தான் பேசுவேன். யாரா இருந்தா என்ன? உன்னால முடிஞ்சதை நீ பார்த்துக்க. இப்ப நீ எதுக்குடா வந்த? வெளில போடா….” முனீஸ்வரன் ஆட்டமாய் ஆட நிதானமாய் அங்கே ஓரமாய் நின்றிருந்தவளை அழுத்தமாய் பார்த்தான்.

“போச்சு முடிஞ்சா பார்த்துக்கோன்னு வார்த்தையை விட்டுட்டாரே இந்த மனுஷன். இவன் இனி முடிச்சுட்டு தான பார்ப்பான். அட போங்க பெருசு…” என சூர்யா உள்ளுக்குள் புலம்பினான். அவன் நினைத்ததை போலவே அடுத்து வந்தது வசீகரனின் பேச்சு.

முனீஸ்வரன் சொல்லவும் ஒருநிமிடம் திகைத்து நின்றவனின் உதட்டில் வஞ்சகமான முறுவல் படர்ந்தது.

“ஓஓஹோ, ஓகே. இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. கல்யாணவீட்டில் உங்க பொண்ணை பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சது. அவளையும் என்னை பார்க்க வச்சேன் அன்னைக்கு. இனியும் பார்க்க வைப்பேன். நினைக்க வைப்பேன், என்னை பிடிக்க வைப்பேன். கல்யாணமும் செய்வேன். இந்த வீட்டுக்கு மருமகனா நான் கண்டிப்பா வருவேன். இதை உங்களால முடிஞ்சா தடுத்து பாருங்க…”

“என்னடா சவாலா?…” முனீஸ்வரன் கொதிப்பாய் கேட்க,

“நான் சொல்லாம இருந்தாலே செய்வேன். இப்ப சொல்லிட்டேன். கண்டிப்பா செஞ்சு காட்டுவேன். உங்களை தோக்கடிப்பேன். பின்னால அலைஞ்சதாவா சொன்னீங்க. அப்படி இனி உங்க பொண்ணு பின்னால ஊர் பார்க்க நான் அலைஞ்சா யாருக்கு அவப்பெயர். இது எனக்கு பிரச்சனை இல்லை. வருங்கால மாமனாரா வேற போய்ட்டீங்க. உங்க பொண்ணு பின்னால சுத்தி உங்க ஆசையை கண்டிப்பா நிறைவேத்தறேன். உங்களால என்ன செய்ய முடியுதுன்னு நான் பார்க்கறேன்…”

சொடுக்கு போட்டு அவரிடம் சொன்னவன் அவருக்கு பின்னால் நின்றவர்களை அழுத்தமாய் பார்த்தான்.

“இத யார் நினச்சாலும் மாத்த முடியாது. உங்களை என் அப்பாம்மாகிட்ட மன்னிப்பு கேட்க வைக்கலை நான் வசீகரன் இல்லை. என்னால முடிஞ்சதையா பார்க்க சொன்னேங்க. இனி என்னால் என்ன முடியுது, உங்களால என்ன முடியலைன்னு பார்த்திடுவோம்…” என்றவன் கீழே கிடந்த டீப்பாயை மீண்டும் ஒரு எத்து விட்டு வெளியேறிவிட்டான்.

அவனின் பின்னே வந்து கதவை அடைக்க போனவர் வாசலில் நின்ற கூட்டத்தை பார்த்து அதிர்ந்துபோனார்.

இதை தானே அவர் நடக்க கூடாதென்று நினைத்தார். நடந்துவிட்டது. ஊர்க்காரர்கள் சிலருக்கு வீட்டு சத்தம் வெளியே கேட்டுவிட்டது.

அதையும் தாண்டி வசீகரன் சொன்ன அந்த விஷயம்.

“கல்யாணவீட்டில் உங்க பொண்ணை பார்த்தேன். அவளையும் என்னை பார்க்க வச்சேன் அன்னைக்கு.” என்ற வசீகரனின் பேச்சில் சந்தியாவை திரும்பி அனல் கக்கும் விழிகளுடன் பார்த்தார்.

Advertisement