Advertisement

தீண்டல் – 4

           நல்லவிதமாய் ரிசப்ஷன் நடந்து முடிய சொன்னது போல முனீஸ்வரன் சந்தியா சந்நிதியை அங்கே இரண்டுநாட்கள் இருக்க வைத்தார். சந்தோஷமாய் தலையாட்டியவர்களுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி அவரும் சேர்ந்து அங்கே தங்கிவிட்டது தான்.

ரிசப்ஷன் கிளம்பிக்கொண்டிருக்கும் பொழுதே சந்தியாவின் மாதாந்திர பிரச்சனை வந்துவிட என்ன செய்வதென தெரியாமல் பதறிவிட்டார் பார்கவி.

“இது ஒரு பிரச்சனையா? அவ அங்க வந்து என்ன பண்ண போறா? பேசாம அங்க ஒரு இடத்துல உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கட்டும்…” ராதா சொல்ல,

“இப்படி ஆகலைன்னாலும் அதைத்தான் பண்ணியிருப்போம்…” என சந்நிதி துடுக்காய் சொல்ல,

“நிதி…” என அதட்டினார் பார்கவி.

“தியாவால அப்படி இருக்க முடியாது ராதா. அவளுக்கு வலி இருக்கும். இங்கயே ரெஸ்ட் எடுக்கட்டும்…” பார்கவி சொல்ல,

“தனியாவா?…” ராதாவிற்கு மனதே இல்லை.

“நிதி கூட இருக்கட்டும்…” என்றவர் கணவரிடம் செல்ல,

“இந்த கருமத்தை எல்லாம் முதல்லையே பார்க்கறதில்லையா? இன்னொரு வீட்ல வந்தா இப்படி?. இப்படின்னா புள்ளைங்களை கூட்டிட்டே வந்திருக்க வேண்டாம்ல…” என்று குதிக்க,

“இல்லைங்க இது ரொம்ப அலைச்சலால தான். நாளைக்கு சரியாகிடும்…” பதட்டத்துடன் சொல்ல,

“இங்க ஒத்தையில விட்டுட்டு அங்க என்ன பண்ண சொல்ற?…”

“தியாவுக்கு துணையா நிதி இருப்பாங்க…”

“அவ பெரியமனுஷி பாரு. சின்னபுள்ளைய விட்டுட்டு வரது பெரிய விஷயமாம்…”

கல்யாணத்தன்னைக்கு சந்நிதியை சின்னபிள்ளையா என்று சொல்லியவர் இப்படி சொல்ல பார்கவிக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை.

“அண்ணே அதெல்லாம் வீட்டுக்கு காவலுக்கு ஆள் இருக்காங்க. சமையல்காரம்மாவும் இருக்கு. ஹோட்டல் இங்க இருந்து பக்கம் தானே? ஒரு போன் பண்ணினா நாம உடனே வந்துற போறோம்…” கம்பன் சொல்ல,

“சரி நீ முன்னாடி போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்…” என்று அனுப்பிவிட்டு அதன் பின்னர் வெகுநேரம் கழித்தே பார்கவியுடன் சென்றார்.

இரவே கிளம்பிவிடுவார் என்று நினைத்திருக்க அவரோ விட்டுவிட்டு நகல்வேனா என்பதை போல இருந்துகொண்டார்.

பார்கவி மேல் நம்பிக்கை இல்லை அவருக்கு. நீதிமாணிக்கம் குடும்பத்தினர் ஒருவேளை தான் கிளம்பியதும் இங்கே வந்துவிட்டால்? அதுவும் வயது பெண்களை விட்டுவிட்டு தம்பி வீடாகவே இருந்தாலும் விட்டு செல்ல மனதில்லை.

புதிதாய் திருமணமான தம்பதிகள் வேறு இருக்க சின்னபிள்ளைகள் துடுக்காய் பேசிவிட்டால் மரியாதை இல்லாது போய் விடும் என்றும், என்ன வளர்ப்பு என்றும் யாரும் நினைத்துவிட கூடாது என எண்ணினார்.

அதனால் தானும் இருந்தே அழைத்து செல்லலாம் என்று அங்கிருந்தே தறி ஆலையிலும், பட்டு மஹாலிலும் வேலைகளை போன் மூலம் உத்தரவிட்டுக்கொண்டிருந்தார்.

“இதுக்கு உன் அப்பா உங்களை கூட்டிட்டே போய்ருக்கலாம்…” என ராதா முணுமுணுத்தாலும் அவர்களை கவனிப்பதில் எந்த குறையும் வைத்துவிடவில்லை.

பின்னே அத்திபூத்தார் போன்று முனீஸ்வரன் குடும்பத்துடன் தங்கி இருக்கிறாரே? இங்கே இருக்கும் வரையில் பார்கவி, சந்தியா, சந்நிதி மூவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பிரம்மப்ரயத்தனப்பட வேண்டியதாக இருந்தது ராதாவிற்கு.            

கம்பனை வைத்து அவ்வப்போது அவரை தங்கள் சிமிண்ட் பேக்டரிக்கு அதற்கு இதற்கு என வெளியே அழைத்துசெல்ல சொல்ல கம்பனும் பிள்ளைகளுக்காய் அதை செய்தார்.

அந்த நேரத்திலெல்லாம் சந்தியா, சந்நிதியின் முகம் அத்தனை சந்தோஷமாய் மின்னும். இரண்டே நாட்களில் பிரபு கூட முனீஸ்வரனின் குணத்தை கண்டுகொண்டான். அதற்கேற்றார் போல அவரிடம் பேசவும் செய்தான்.

வீட்டு மாப்பிள்ளை என்பதால் முனீஸ்வரனும் ஓரளவு தன்னுடைய விரைப்பை காட்டவில்லை.

கிளம்பும் அன்று தான் அம்பிகாவிடம் பேசிய விஷயத்தை பற்றி தனியாக முனீஸ்வரனிடமும், பார்கவியிடமும் ஆரம்பித்தார் கம்பன். உடன் ராதா மட்டும்.

“நல்ல இடம் அண்ணே. அவங்களா நம்ம குடும்பத்துல சம்பந்தம் செய்ய வரது நம்ம பொண்ணு பண்ணின அதிர்ஷ்டம். நீங்க யோசிச்சு சொல்லுங்க…” எனவும் முனீஸ்வரனின் முகம் யோசனையை பிரதிபலிக்க,

“நீங்க இப்ப சந்தியாவுக்கு வரன் பார்த்துட்டு தானே இருக்கீங்க? சந்தியாவை விட அஞ்சு மாசம் தான் ரேவதி மூத்தவ. நல்ல இடம்னதும் முடிக்கலையா அத்தான்?…” ராதாவிற்கு இதை எப்படியாவது பேசி முடித்துவிடவேண்டும் என்ற அவா.

அதிலும் அம்பிகாவின் குணமும் குகனின் பேச்சும் ராதாவையும் கம்பனையும் அத்தனை ஈர்த்தது. இத்தனை நல்ல குடும்பத்தில் சென்றால் நிச்சயம் அவள் சந்தோஷமாக தான் இருப்பாள் என்று திண்ணம்.

“விரும்பி கேட்கும் போது. தேடாமலே அற்புதமா ஒரு சம்பந்தம். பையன் அவ்வளவு அழகா இருக்கான். கண்ணுக்கு நிறைவா நம்ம பொண்ணுக்கு சமமா. குறை சொல்ல முடியாத அளவுக்கு. உங்களுக்கு வேணும்னா அவங்கள்ட்ட பேசி தெரிஞ்சுக்கங்க அத்தான்…” ராதா அத்தனை பொறுமையாக எடுத்து சொல்லவும்,

“திடுதிப்புன்னு சொல்றம்மா. ஹ்ம்ம் நீயும் யோசிக்காம சொல்ல மாட்ட. சரி, பார்க்கலாம். ஊருக்கு போய்ட்டு நான் தகவல் சொல்றேன் உனக்கு…” என்றவர் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்.

பார்கவி அப்போதிருந்தே இறைவனை வேண்ட ஆரம்பித்துவிட்டார் இந்த சம்பந்தம் கூடி வரவேண்டும் என்று.

ஊருக்கு சென்று அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருந்தாலும் ராதா சொல்லியது ஒரு புறம் அவரை பிடுங்கிக்கொண்டே இருந்தது. சரி பேசித்தான் பார்க்கலாமே என்று ராதாவிடம் சொன்னார்.

“இங்க பாரும்மா, அவங்க வரட்டும். பொண்ணு பார்க்கறதா இருக்க வேண்டாம். சாதாரணமா உன்னோட வர மாதிரி வரட்டும். நாளைப்பின்ன தகையாம போச்சுன்னா ஊர்ல நாலுபேர் எதையாவது பேசி வச்சு இல்லாததும் பொல்லாததுமா பரப்பிவிட்டுருவான். ரெண்டு பொண்ணை வச்சிருக்கேன்…”

“இல்லை அத்தான், நீங்க சொல்றது புரியுது. நான் நம்ம கடைக்கு வரமாதிரி வந்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்…” என்று ஒரு ஐடியாவை சொல்ல முனீஸ்வரனும் ஏற்றுகொண்டார்.

முதலில் சந்தியாவை திருமணம் முடித்து இந்த வருடம் அனுப்பிவிட்டால் அடுத்த வருடம் சந்நிதியை அனுப்பிவிடலாம். அதுவரை வயிற்றில் நெருப்பை கட்டியதை போல தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டார்.

நல்லவிதமாய் ஊர் போற்ற பெண்களை கௌரவமாக புகுந்தவீடு அனுப்பிவைக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் வலுபெற்றது. அவரை பொறுத்தவரை கௌரவம் உயிரை விட மேல் என்று நினைத்தார்.

ஊரார் ஒருவரும் ஒரு வார்த்தை தன்னை தன் வளர்ப்பை பேசிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். முசுடு, திமிர், அராஜகம் இப்படி எத்தனை பெயர்களையேனும் வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் பெண்கள் விஷயத்தில் ஒரு அவப்பெயரேனும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாய் இருக்க அதுவே தன் வீட்டு பெண்களை மிகவும் கட்டுப்பாட்டில் வைக்க செய்தது.

ஏற்கனவே சத்தமில்லாமல் வெளியில் தெரியாமல் சந்தியாவிற்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறார் தான். அவளின் ஜாதகத்தில் சிலபல சிக்கல்கள். அதன்கொண்டே வரும் வரனை தட்டிவிட மனமில்லை அவருக்கு.

புதன்கிழமை அன்று ராதாவுடன் அம்பிகாவும் குகனும் வந்துவிட சூர்யாவின் மனைவி அனுபமா வந்திருந்தாள். அவளிடம் அத்தனை முறை சொல்லி அனுப்பியிருந்தான் வசீகரன்.

அங்கே வீட்டிற்குள் செல்லும் முன்னரே வீடியோகாலில் தன்னுடன் கனேக்ட்டில் இருக்கவேண்டும் என்று. அவளின் வீட்டு வாசலில் சென்று இறங்கும் பொழுதே மொபைலை ஆன் செய்துவிட்டு வசீகரனின் முகம் தெரியவும் உள்ளே சென்றாள்.

“எதுக்கும்மா?…” என்ற அம்பிகாவிடம்,

“அவன் கேட்கமாட்டான் அம்மா. இருக்கட்டும் அவனுக்கும் ஒரு ஆசை இருக்கும்ல வாழபோற வீட்டை பார்க்கனும்னு…” என கிண்டலாய் சொல்ல,

“கத்தரிக்கா வா வச்சிக்கறேன் உன்னை…” என்று அனுவை முறைத்தான்.

“சத்தமில்லாம போன்க்குள்ளையே இருடா அண்ணா…” என்றவள் வாசலில் வந்து வரவேற்ற பார்கவியை பார்த்ததும் பார்வையை அங்கே பதித்தாள்.

வீட்டிற்குள் நுழையவுமே முனீஸ்வரன் உள்ளே இருந்து வந்துவிட்டார் கை கூப்பி வணங்கியபடி. வாங்கிவந்திருந்த ஸ்வீட், பூ, பழங்களை பார்கவியிடம் கொடுத்தார் அம்பிகா.

“வாங்க வாங்க. உட்காருங்க…” என அமர்த்தியவர் பார்கவியை பார்க்க உடனே ஓடிச்சென்று வந்தவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

மெதுவாய் சந்தியாவும் சந்நிதியும் வெளியே வந்து எட்டிப்பார்த்தனர். அவர்களுக்கு யார் எதற்கு வந்திருக்கின்றனர் என்றே தெரியவில்லை. முனீஸ்வரனும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அன்று கோவிலுக்கு காலையிலேயே சென்றுவிட்டு வந்ததால் சந்தியா இன்னமும் புடவையிலேயே இருந்தது பார்கவிக்கு நிம்மதியாக போனது.

சொல்லிவிடுவோம் என்று சொன்னதற்கு கூட முனீஸ்வரன் தடுத்துவிட்டார்.

“எப்ப சொல்லனுமோ அப்ப நான் சொல்லிப்பேன். அவங்க வரட்டும் வந்து பார்க்கட்டும். பேசிப்போம்…” என அதட்டிவிட அதன் பின்னும் வாயை திறப்பாரா பார்கவி?

“பிரயாணமெல்லாம் சௌகரியமா இருந்ததுங்களா?…” என  மரியாதை நிமித்தமான பேச்சுக்கள் நடந்தன.

அம்பிகாவும் அவர்கள் கடை பற்றியும் பேச பொதுவான பேச்சுக்கள் தான் நடந்துகொண்டிருந்தது. சந்தியாவும் சந்நிதியும் இவர்கள் அருகிலேயே வரவில்லை. ஆனாலும் தூரத்தில் இருந்து இவர்களை பார்த்துகொண்டு தான் இருந்தனர்.

“பார்கவி சந்தியாட்ட ஸ்வீட் குடுத்தனுப்பு…” என்று மனைவியை சொல்ல சந்தியாவிடம் இனிப்பை கொடுத்து உடன்வந்தார் பார்கவி.

“இன்னைக்கு சந்தியாவோட பிறந்தநாள். இனிப்பு எடுத்துக்கங்க…” என முனீஸ்வரன் சொல்ல புன்னகையுடன் எடுத்துக்கொண்டனர் அம்பிகாவும், குகனும், அனுவும்.

“அடடே நானே மறந்துட்டேன் பாருங்க…” என்ற ராதா எழுந்து நின்று வாழ்த்தை சொல்ல அமைதியாய் கேட்டுகொண்டவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவந்து தங்கையுடன் நின்றுகொண்டாள்.

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வசீகரனுக்கு இருப்புகொள்ளவில்லை.

“அங்கயும் போய் நேரா பேசாம சுத்திவளைச்சுட்டு உட்கார்ந்திட்டு இருக்காங்க.” என இங்கே இவன் படபடத்துக்கொண்டிருந்தான். அதே நேரம் குகன் ஆரம்பித்தார்.

“விஷயத்தை சொல்லியிருப்பாங்க தானே?…”

“ஹ்ம்ம் சொன்னாங்க…” என்றவர் தள்ளி நின்ற மனைவியை பார்வையாலேயே அருகே அழைத்து நிறுத்திகொண்டார் முனீஸ்வரன்.

“நேரடியாவே விஷயத்துக்கு வரோம். எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணத்துல பார்த்துட்டு மனசுக்கு பிடிச்சிருச்சு. என் பையனுக்கும். உங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்…”

“ராதா இது விஷயமா என்கிட்டே பேசினப்போ கூட யோசிக்கலாம்னு தான் இருந்தேன். நானும் அவளுக்கு வரன் பார்க்கலாம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். நீங்க கேட்கவும்…”

“ஜாதகம் எல்லாம் கொண்டு வந்திருக்கோம். பொருத்தம் பார்க்கறதா இருந்தா நீங்களே கூட பார்த்து சொல்லுங்க…” என அம்பிகா வசீகரனின் ஜாதகத்தின் காப்பியை முனீஸ்வரனிடம் நீட்ட அப்பாடா என்றிருந்தது அவருக்கு.

பின்னே அவர்களும் பெண்ணின் ஜாதகத்தை கேட்டால் என்னசெய்ய சிக்கலான காலகிரகம் இருக்கும் ஜாதகம். தானே பார்த்து என்ன செய்வது என்று பார்த்துக்கொள்ளலாம் என்னும் முடிவிற்கே வந்துவிட்டார்.

“நானே எங்க குடும்ப ஜோசியர்க்கிட்ட பேசிட்டு சொல்றேன்…” பட்டும் படாததை போல பேசி வைக்க அம்பிகாவிற்கு பதட்டமாகிவிட்டது.

“ஏதாவது சாப்பிடுங்க. சாப்பிட்டுட்டே பேசலாமே…” என மனைவியை பார்க்க அவரும் சென்று காபியை எடுத்துக்கொண்டு வந்தார்.

இதற்கிடையில் நடந்த ஒவ்வொன்றையும் பயத்துடன் குழப்பத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும்.

“தியா உனக்கு தான் கல்யாணம் பேசறாங்க…” சந்நிதி அவளின் காதில் முணுமுணுக்க,

“இவங்க நம்ம ரே மேரேஜ்ல பார்த்தேன் நிதி அந்த அம்மாவை…” தியா சொல்ல,

“ஹ்ம்ம் நானும் பார்த்தேன்…” நிதியும் சொல்ல,

“எனக்கு பயமா இருக்கு…” சந்தியாவிற்கு வியர்த்துபோனது பயத்தில்.

“எதுக்கு பயம்? எப்படியும் கல்யாணம் ஆகும் தானே?…” நிதி சொல்ல,

“என்னோட பயம் அப்பா பார்த்திருக்கார் இந்த வரனை. அவங்க வீட்லயும் அப்பா மாதிரியே இருந்தா?…” கலக்கத்துடன் தங்கையை பார்த்தாள் சந்தியா.

“நீ எதுவும் நினைக்காதே. முதல்ல அங்க நடக்கிறதை பார்ப்போம்…” சந்தியாவை தட்டிக்கொடுத்து பேசிக்கொண்டிருக்க சிலீரென்ற சத்தம் காதை கிழித்தது. பதட்டத்துடன் திரும்பி பார்க்க முனீஸ்வரன் வேட்டைச்சாமியை போல எழுந்து ஆக்ரோஷமாய் நின்றார்.

“என்னாச்சு?…” என நிதி கேட்கும் பொழுதே சந்தியா அவளையும் இழுத்துக்கொண்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள்.

“அந்த குடும்பத்தோட சம்பந்தப்பட்டவங்களா நீங்க? எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனை தெரிஞ்சும் தைரியமா என்வீட்டு படியேறி வந்திருக்கீங்கன்னா என்னை பார்த்தா என்ன கேணையன் மாதிரி இருக்கா? எந்திச்சு வெளில போமா…” என்று கொந்தளித்தார்.

“அப்படி என்ன சொல்லிவிட்டோம் தாம்?” என அம்பிகா பேயறைந்ததை போல பார்க்க குகனுக்கு அவமானமாக போனது.  

பார்கவி காபி கொண்டு வரவும் அதை எடுத்து குடிப்பதற்குள் அம்பிகா எங்கே முனீஸ்வரனுக்கு விருப்பமில்லாமல் போய்விடுமோ என எண்ணி,

“உங்க அண்ணன் மருமக என் வீட்டுக்காரரோட தம்பி மக தான் அண்ணே. நீங்க நம்பிக்கையா பொண்ணை குடுக்கலாம். இதுவும் பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்த மாதிரி தானே? இன்னும் உறவு பலப்படும்…” என சொல்லி முடித்திருக்க காபி ட்ரேவை ஆக்ரோஷமாய் இழுத்து தூக்கி வீசியிருந்தார் முனீஸ்வரன்.

Advertisement