Advertisement

தீண்டல் – 3(1)

                 அம்பிகா போட்டோ எடுப்பது என்னவோ மணமக்களை எடுப்பதை போலதான் இருந்தது. ஆனால் அவருக்கு தெரியுமல்லவா ஏன் எதற்கென்று.

“பெரியம்மா எப்படியிருக்கீங்க?…” என்ற குரலில் மொபைலை உள்ளே வைத்துக்கொண்டிருந்தவர் திரும்பி பார்க்க அங்கே அபிராமி தன் கணவனுடன் நின்றாள்.

“நீ அபியில்ல…”

“நான் அபிராமி தான். வேற யாரும் இல்லை…” என அவளும் சிரித்தபடி சொல்ல,

“ஹேய் உன் கல்யாணத்துல பார்த்தது. ரெண்டு வருஷம் இருக்குமா? அதான் கொஞ்சம் யோசிச்சுட்டேன். வா வந்து உட்கார்…”

“என் ஹஸ்பன்ட். ஞாபகம் இருக்கா?…” என்று கணவன் புவனேஷ்வரனை காண்பிக்க,

“வணக்கம் தம்பி…” என கை கூப்பினார்.

“அம்மா வரலையா?…”

“வந்திருந்தாங்க. இன்னைக்கு இன்னொரு கல்யாணம். கண்டிப்பா போயி ஆகனும். அதான் கோவில்ல இருந்தமானைக்கே கிளம்பிட்டாங்க. நாங்களும் இப்ப கிளம்பனும்…”

“நல்ல முகூர்த்தம்னு சொந்தக்காரங்க எல்லாமே ஒரே நாள்ல கல்யாணம் வச்சா இப்படித்தான், அங்க ஒரு கால் இங்க ஒரு கால்ன்னு நாம தான் தவிக்கனும்…” அம்பிகா சொல்ல,

“ஓகே நீ பேசிட்டு வா அபி, நான் போய் காரை எடுக்கறேன். இப்ப கிளம்பினா தான் போக சரியா இருக்கும். வரேன் அத்தை…” என்ற புவனேஷ்வரன் சொல்லிக்கொண்டு கிளம்ப,

“மாப்பிள்ளை கூட நமக்கு சொந்தம் தான் அபி. எங்க சின்ன பாட்டி வலசல்…”

“பொண்ணு என் சின்ன மாமியார் பொண்ணு. சுத்தி வளைச்சு இன்னும் நெருக்கமான சொந்தம் ஆகிட்டோம்…” பெண்கள் பேசிக்கொண்டிருக்க வசீகரன் வந்துவிட்டான்.

“இவன் தான் வசீ. வசீகரன். என் பையன்…”

“ஹாய் அண்ணா…” என அபி சொல்ல,

“உனக்கு சின்னவ தாண்டா. இருபத்தி மூன்று வயசு தான் ஆகுது. முழிக்கிற. அபிராமி உன் அப்பாவுக்கு ஒண்ணுவிட்ட தம்பி பொண்ணு…” என்று சொல்ல,

“இந்த விட்ட சொந்தம், விடாத சொந்தம் ஹிஸ்டரி ஜாக்ரஃபி சொல்லி படுத்தாதீங்கம்மா. இவங்க எனக்கு தங்கச்சி. அதுதானே. விட்டா மண்டபத்துல இருக்கற மொத்த பேர்ட்டையும் போய் என்ன உறவுன்னு பேசி எனக்கு பாடம் எடுக்க ஆரம்பிச்சுடுவீங்க…” என அம்பிகாவின் வாயை அடைத்தவன்,

“ஹலோ சிஸ்டர்…” என்றான் ஸ்நேகமாய். தாய், மகன் சம்பாஷணையை பார்த்த அபிராமி புன்னகையுடன் நிற்க,

“அபி இவன் இப்படித்தான். நீ கண்டுக்காத…” என்றவர்,

“இந்தா உன் மொபைல். சூர்யா போன் பண்ண சொன்னான். மெசேஜ் பண்ணியிருக்கானாம். அதை பார்த்துட்டு கால் பண்ணுவியாம்…” என கொடுத்துவிட்டு அபியிடம் திரும்பியவர் மகன் நகர்ந்ததும்,

“அபி அங்க ஒரு பேமிலி இருக்காங்க பாரு. அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா?…” என்று தூரத்தில் குடும்பமாய் அமர்ந்திருந்த முனீஸ்வரனை காட்டி கேட்க மொபைலில் அபிராமியின் கணவன் அழைத்துவிட்டான்.

“ஏன் பெரியம்மா? அவர் என் சின்ன மாமனார் தான். என் மாமனாரோட கூடபிறந்த தம்பி…” எதற்கு கேட்கிறார் என்ற யோசனை பிறந்தாலும் போனை அட்டன் செய்து,

“இதோ வந்துட்டேங்க…” என்ற பதிலை சொல்ல,

“அந்த க்ரீன் கலர் ட்ரெஸ்,…”

“அவரோட பொண்ணு தான் பெரியம்மா. சரி நான் வந்து பேசறேன். இப்ப லேட் ஆகிடுச்சு…” என்றவள் வேகமாய் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு சொல்லவேண்டிய முக்கியமான விஷயத்தை சொல்லாமல் கிளம்பிவிட்டாள்.  போன் பேசிவிட்டு வந்த வசீகரன் அம்பிகாவின் அருகே அமர்ந்தான்.

“என்னம்மா அவங்களை காணும்?…”

“இன்னொரு முகூர்த்தம் இருக்காம்டா. அதான் கிளம்பிட்டாங்க. நாமளும் கிளம்புவோமா?…” என கேட்க அவரின் கேள்வி காதிலேயே விழாதவன் போல கால்களை நீட்டி கையிரண்டையும் கழுத்தின் பின்னால் வைத்து நெட்டி முறித்தவன்,

“ம்மா இங்க லஞ்ச் வெஜ்ஜா நான் வெஜ்ஜா? உங்களுக்கு தெரியுமா?…” என கேட்க,

“ஏன்டா வந்ததும் கிளம்புவோம்னு பறப்பன்னு பார்த்தா சாவகாசமா உட்கார்ந்திட்டு லஞ்ச் பத்தி பேசற. வரும் போதே கல்யாணம் முடியவும் கிளம்பனும், ரிசப்ஷன்ல பார்த்துப்போம்னு சொன்ன?…”

“சூர்யா இன்னைக்கு எனக்கு லீவ் குடுத்துட்டான்…”

“யார் அவன் உனக்கு லீவ் குடுக்கானா? அவனை ரொம்பத்தான் படுத்தற…” இத்தனை பேச்சு வார்த்தையிலும் வசீயின் பார்வை மணப்பெண்ணின் அருகில் நின்ற அவனின் பச்சைக்கிளியின் மீதே லயித்திருந்தது.

“அவ கலர்க்கு இந்த க்ரீன் ரொம்ப ப்ரைட்டா இருக்கு தானேம்மா. ட்ரெஸ் கலரும், அவ ஸ்கின் கலரும் ஒண்ணுக்கொண்ணு ரொம்ப டாமினேட் பண்ணுது…”

“பார்த்துடா பொண்ணு நமக்கு சொந்தமன்ற மாதிரி வந்தா என்ன முறை வேணும்னாலும் இருக்கும்…” மகனின் அலம்பலில் அம்பிகா போட்டு தாக்க பட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான்.

“ம்மா…” என பார்க்க,

“முறை தான்டா. ஏன் பதறுற?…” என்று சிரிக்க,

“எனக்கொண்ணும் இல்லை. நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா உங்களுக்கு சதாபிஷேகம் நடந்த மாதிரி தான். அடுத்த ஜென்மத்துல தான் கல்யாணம் பார்த்துக்கோங்க…”

“அப்ப உன் வாயை வச்சுக்கிட்டு பேசாம இரு. நான் அபிகிட்ட பேசிட்டேன். அவளுக்கு சின்ன மாமனார் மகள் வருதாம். அதுவும் ரொம்ப சொந்தம். அதனால இதுல பிரச்சனை எதுவும் இருக்காது…”

“ஓஹ். அப்போ அப்பாக்கிட்ட பேசிட்டு பேசலாம். இப்ப நாம போய் ஒரு ஹாய் சொல்லலாம். வாங்க…”

“டேய், அவசரப்படாத. ரிசப்ஷனுக்கு எப்படியும் வருவாங்க. இப்ப பேசி தொந்தரவு செய்ய வேண்டாம். போட்டோ எடுத்திருக்கேன். வீட்டில அப்பாட்ட பேசிட்டு இவங்கட்ட பேசுவோம். அப்பாவோட சேர்ந்து இவங்கட்ட பேசறது தான் முறை வசீ…”

“ஹ்ம்ம் ஓகே ம்மா…” என்றவன் அம்பிகாவுடன் பேசிக்கொண்டே அவளை பார்த்தான்.

மணப்பெண்ணின் அருகே முகத்தில் மெல்லிய சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவளின் முகத்தில் லேசான பயரேகைகளும், எச்சரிக்கை  உணர்வும் போட்டி போட்டன.

இவனின் பார்வை குறுகுறுப்பிலோ என்னவோ பார்வையை சுழற்றியவள் இவனில் வந்து நிறுத்த அம்பிகா குனிந்தபடி மொபைலில் குகனுடன் பேசிக்கொண்டிருந்தார் வாட்ஸ்ஆப்பில். முனீஸ்வரனின் குடும்ப புகைப்படத்தை அனுப்பி அதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.

அவள் பார்த்ததும் வசீகரனுக்கோ ஒரு நொடி மின்சாரம் பாய்ந்த உணர்வு. இப்படி சட்டென அவளின் விழிகள் தன்னில் நிலைக்கும் என எதிர்பார்க்காதவன் அவளின் பார்வை வீச்சில் தடுமாறித்தான் போனான். ஆனாலும் அவளிடம் மையம் கொண்ட தன் பார்வையை விலக்கிக்கொள்ளவே இல்லை.

இன்னும் அழுத்தமாக பார்த்தான். மீண்டும் நன்றாக சாய்ந்தமர்ந்து மார்பின் குறுக்கே இரு கைகளை கட்டிகொண்டு கால்மேல் கால் போட்டு அவன் பார்க்க பெண்ணவளின் பார்வை இப்பொழுது தகப்பனை சந்தித்தது.

பெண்ணின் பதட்டத்தை கண்டுகொண்ட வசீகரன் பார்த்தானே தவிர பார்வையில் எந்தவித உணர்வையும் காண்பிக்கவில்லை. அவளுக்கு சந்தேகமே வந்துவிட்டது அவன் தன்னை பார்க்கிறானா இல்லை மணமக்களை பார்க்கிறானா என்று. மீண்டும் நிமிர்ந்து அவனை பார்க்கும் தைரியமின்றி கீழே இறங்கி தாயுடன் சென்று அமர்ந்துகொண்டாள்.

“பயப்படறா. சுபாவமே இப்படித்தானோ?” வசீகரன் நினைக்க,

“வசீ, வா சாப்பிட்டு கிளம்பலாம். இப்ப கிளம்பினா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துப்பேன் வீட்டுக்கு போய்…”

“கரெட்க்ம்மா. எவ்வளவு நேரம் தான் நீங்களும் இந்த மண்டபத்தை தூக்கி சுமந்துட்டு இருப்பீங்க? யார் கைய்யிலையாவது ஒப்படைச்சிட்டு வாங்க…” என அம்பிகாவுடன் எழுந்து நடக்க நின்று அவனை முறைத்தவர் முதுகில் ஒரு அடி வைத்து அவரும் புன்னகைத்தார்.

சிரிப்புடன் தாயின் தோளோடு சேர்த்தணைத்தவன் பார்வை தன்னைப்போல அவளிடம் சென்றது. அவன் நினைத்தது போல அவளும் அவனை பார்த்தாள். இவன் பார்த்ததும் பார்வையை பதறி திருப்ப இவனும் பார்த்துவிட்டு டைனிங் ஹாலினுள் நுழைந்துகொண்டான்.

வசீகரனுக்கு இது இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பிடித்திருந்தது. தன் பார்வையை அவள் உணர்கிறாள் என்ற எண்ணமே ஒருவித சிலிர்ப்பை தர சுகமாய் உள்வாங்கினான்.

சாப்பிட்டு முடித்து வரும் பொழுது அவள் இருந்த சுவடையே காணவில்லை. ஒருவேளை கிளம்பிவிட்டனரோ என்று நினைத்தவன்,

“அவங்களை காணோம்மா…” தாயிடம் சொல்ல,

“இன்னும் ரெண்டு நாள்ல ரிசப்ஷன். அங்க பார்த்துப்போம். இப்ப கிளம்புவோம். நான் பிரபு அம்மாக்கிட்ட கேட்டு அவங்க அட்ரெஸ் எல்லாமே கலெக்ட் பண்ணிடறேன்…” என சொல்லி மகனை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு வந்த முனீஸ்வரனின் குடும்பத்தினரிடம் கம்பன்  பேசிக்கொண்டிருக்க,

“நிதி, கிட்சனுக்கு போய் அப்பாவுக்கு இந்த ப்ளாஸ்க்ல வெந்நீர் வாங்கிட்டு வாடா…” என பார்கவி சொன்னதும் யோசனையுடன் எழுந்து சென்றாள் சந்நிதி.

“தியா ஏன் அவ முகமே வாட்டமா இருக்கு?…” கணவருக்கு கேட்டுவிடாமல் மெல்லிய குரலில் இயம்ப,

“புகழ் அண்ணா பார்த்தாராம். முறைச்சிருப்பாரு போல. அப்செட் ஆகிட்டா…”

“அவன் சும்மா கூட பார்த்திருப்பான். இவளுக்கு ஏனாம்?…”

“அக்கா மகனுக்கு தான் சப்போர்ட்…” சந்தியா சொல்ல,

“என்ன?  நிதி எங்க?…”என முனீஸ்வரன் கேட்டதும்,

“உங்களுக்கு வெந்நீர் வாங்க தான் கிட்சனுக்கு அனுப்பியிருக்கேன்…” அதற்கே பதட்டமாகிபோனது பார்கவிக்கு.

“இப்ப நான் கேட்டேனா உன்கிட்ட வெந்நீர் வேணும்னு? அவளை ஏன் அனுப்பின? சாப்பிட போகும் போது நீயே அங்க சர்வீஸ் பன்ற பசங்கட்ட சொல்லி வாங்கியிருக்க வேண்டியதுதான?…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் குரலை தழைத்துக்கொண்டு சீற பார்கவியின் விழிகள் கலங்கிவிட்டது. சந்தியா அவரின் கையை பிடித்துக்கொள்ள,

“இல்ல திடீர்ன்னு கேட்டீங்கன்னா. அதான்…”

“கூட கூட பேசறதை நிப்பாட்டு. வந்துட்டா அக்கறைல…” என எரிந்துவிழ,

“அண்ணே நான் போய் என்னனு பார்த்து அனுப்பறேன். இருங்க…” என்ற கம்பன் சந்நிதியை தேடி சென்றார்.

“புது ஊருக்கு வந்திருக்கோமே. கல்யாண வீடு. வயசு பசங்களும் தறுதலைங்களா சுத்துவானுங்க. நீ பிள்ளைய தனியா அனுப்பிருக்க. அறிவு வேண்டாம்?…”

“சின்னபிள்ளை தானுங்க…” மெல்லிய குரலில் வேறு யாருக்கும் கேட்டுவிடுமோ என  அஞ்சி சொல்ல,

“என்னது சின்னபிள்ளையா? அவ என்ன தவக்கற கொழந்தையா? காலேஜ்ல செக்கேன்ட் இயர் படிக்கிறா. சந்தியாவுக்கு சின்னவனா ஊருக்கே சின்னவளா? பார்க்கறவன்லாம் அப்படியா நினைப்பான்? காலம் கெட்டுக்கிடக்குறது உன் புத்திக்கு உரைக்கலையா?…”

பொது இடமென்றும் பார்க்காமல் வார்த்தைகளால் பார்கவியை கடித்து குதற சந்தியா ஒடுங்கியே போனாள். ஒரு வார்த்தை எதிர்த்து பேசிவிட்டாலும் மண்டபமே கூடிவிடும் அளவிற்கு குரலை உயர்த்திவிடுவார் என்று பயந்து அமர்ந்திருந்தாள். இந்தமட்டும் வேறு எவருக்கும் கேட்டுவிடாமளாவது அடக்கி பேசுகிறாரே என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனால் முனீஸ்வரன் எதை நினைத்து மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தாரோ அதையே அவரின் அண்ணன் மகன் நேரடியாக சந்நிதியிடம் கத்திக்கொண்டிருந்தான்.

Advertisement