Advertisement

தீண்டல் – 14(2)

“இதெல்லாம் தப்பு, அப்பா பாவம்…” அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த சந்நிதி அவனிடம் பேச்சை ஆரம்பிக்க திரும்பி பார்த்தவன்,

“ஓஹ், நீ இங்க தான் இருக்கியா? கவனிக்கலை…” என்றான் சாதாரணம் போல.

“பொய் சொல்றீங்க, நீங்க என்னை பார்த்துட்டே வந்ததை நானும் பார்த்தேன். ஏமாத்தாதீங்க…” சந்நிதி இறைஞ்சுதலாய் பேச,

“உன்னுடன் சேர்த்து என்னையே நான் ஏமாற்றிகொண்டிருக்கிறேன் பெண்ணே” என அவளை ஊடுருவும் விதமாய் பார்த்து,

“நான் பார்த்தேன்னு தெரியும் தானே? உங்க வீட்டு கல்யாணம். வந்தவனை வாங்கன்னு கூப்பிடவே இல்லை. நல்லா இருக்கேனான்னு கேட்கவே இல்லை. சாப்பிடறீங்களான்னு உபசரிக்கவே இல்லை. இதுதான் உங்க பண்பா?…”

தனது தவிப்பிற்கெல்லாம் தீனி போடுவதற்காக வேண்டுமென்றே அவளை டென்ஷன் ஆக்கும் வேலையில் இவன் இறங்க,

“நீங்க ஏன் வந்ததில இருந்து அப்பாவை டீஸ் பன்றீங்க? பாருங்க அவங்க அங்க ரெஸ்ட்லெஸ் ஆகிட்டாங்க…”

“நான் கேட்டதுக்கு இதுவா பதில்?…” அவளை ஆழ்ந்து பார்த்து கேட்க அவனின் பார்வையும் தன்னை நெருங்கி தன் முகம் அருகில் குனிந்து அவன் கேட்டவிதமும் அவளை விதிர்க்க செய்ய மேடையை பார்த்தாள் சந்நிதி.

நல்லவேளை முனீஸ்வரன் இங்கே இவர்களை பார்க்கவில்லை. சடங்குகளில் கவனம் வைத்திருந்தார். அவர் பார்ப்பதற்குள் இங்கிருந்து நகர்ந்துவிடவேண்டும் என்று தனது வீல்சேரை இயக்க அது அவளால் முடியவில்லை.

வசீகரனின் ஒரு கால் மிக ஸ்திரமாக சக்கரத்தை நகரவிடாமல் தடுத்து இருக்க அவனின் கை அவளின் கை மேல் அழுத்தமாய் இருந்தது.

“என்ன இது கையை எடுங்க…” சந்நிதிக்கு தொண்டை வறண்டுபோனது.

“நீ ஏன் இப்போ என்னை அவாய்ட் பண்ணிட்டு போக பார்க்க?…”

“அப்படி இல்லை. நான் போகனும்…”

“இங்க இருந்து நகரனும்னு நினைச்சா நானே உன் பின்னாடி எழுந்து வந்து திரும்ப இந்த இடத்தில் நிறுத்தி இதே மாதிரி உட்கார்ந்துப்பேன். உன் கை மேல கை வச்சேன். நீ போகனும்னு திரும்ப சொன்னா உன் கையோட என் கையை கோர்த்துப்பேன்…”

அடாவடியாய் அவன் பேச இவளின் விழிகள் பயத்தில் அகன்றது. எச்சிலை கூட்டி விழுங்கியவள்,

“அப்போ என்கிட்டே சொன்னது பொய் தானே?…” என்றால் கலங்கும் கண்களை கட்டுப்படுத்திக்கொண்டு.

“என்ன சொன்னேன்?…”

“இனிமே எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன். பின்னால வரமாட்டேன் அப்டின்னு…”

“இப்போ நான் பிரச்சனை பண்ண வந்திருக்கேன்னு உன்கிட்ட சொன்னேனா?…” சின்ன சிரிப்புடன் அவளிடம் கேட்க அவன் கேட்ட விதம் லேசாய் பெண்ணின் மனதை இதமாய் பதம் பார்த்தது.

“அப்போ இல்லையா? பின்ன ஏன் நீங்க இங்க?…”

“உங்கப்பாவுக்கு தான்  மூளை வேலை செய்யாதுன்னா பொண்ணுன்னு நிரூபிக்கிறியே நீ?…” என்றதும் சந்நிதி முறைக்க பெரிதாய் சிரித்தவன்,

“எனக்கும் இன்விடேஷன் வந்திருக்கும்மா. என்னையும் இந்த வெடிங்க்கு அழைச்சிருக்காங்க மாப்பிள்ளை சைட். போதுமா?…” என சொல்லியதும் தான் சந்நிதியின் முகம் தெளிந்தது.

“நிஜமாவா சொல்றீங்க?…” என சந்தோஷ சிரிப்புடன் சொல்லியவளை பார்த்து கண்சிமிட்டினான் வசீகரன்.

பெண்ணவள் நெஞ்சம் திடுக்கிட்டது இவனின் செய்கையில். புன்னகைக்கிறான், கண் சிமிட்டுகிறான். அன்பாய் மனதை தொடுமாறு பேசுகிறான். அவனறியாது இவளின் நெஞ்ச குளத்தில் சிறிய கல்லை வீசிவிட்டான் அவனின் நடவடிக்கைகளால்.

காதல் சொல்லப்படவில்லை. உணர்த்தப்படவும் இல்லை. அவன் மீதான நினைப்பை அவளிடம் விதைத்துவிட்டான் மெதுவாய்.

“நம்புடாம்மா, நம்பு…” என்று அவளின் கையில் இன்னுமே அழுத்தம் கூட்ட அவனின் பேச்சு இவளின் உள்ளத்தை குளிர்வித்தது என்றால் அவனின் தீண்டல் தீயாய் சுட்டுவிட்டது.

பட்டென்று கையை எடுத்துக்கொள்ள முடியாமல் கட்டு போடப்பட்டிருந்த கை அவளின் இயலாமையை காட்ட,

“கையை எடுங்க ப்ளீஸ்…” என்றாள் பரிதவிப்பான குரலில். அவள் குரலில் தன் கையை விலக்கிக்கொண்டவன்,

“இன்னும் எத்தனை மாசம் ஆகும்னு சொன்னாங்க?…”

“என்ன?…”

“உன் கால், கை சரியாக…” என்றவனுக்கு பதில் சொல்லாமல் அவனின் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தவள் கெட்டிமேள சத்தத்தில் சுயம் திரும்பி மேடை பக்கம் திரும்பிக்கொண்டாள்.

அவளை அதிகம் சோதிக்காமல் தானும் நன்றாக திரும்பி மேடை பார்த்து அமர்ந்தவனின் மனது அவளின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்துக்கொண்டு இருந்தது.

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க புகழ் வசீகரன் பக்கம் முனீஸ்வரன் திரும்பாமல் பார்த்துக்கொண்டான்.

மணமக்கள் உடை மாற்றி வர திருமாங்கல்யம் அனைவரின் ஆசிர்வாதத்திற்கும் கீழே அனுப்பப்பட்டது. அபிராமி தான் அதனை கொண்டுவந்தது.

வந்திருந்த விருந்தினர்கள் மூன்று தரப்பாக பிரிந்து அமர்ந்திருந்தனர். நடு பகுதியின் முன் வரிசையில் இவர்கள். சந்நிதி, வசீகரன். அவர்களிடம் அபிராமி செல்ல செல்ல முனீஸ்வரனின் இதயத்துடிப்பு தாளம் தப்பி துடித்தது.

போதாததற்கு வசீகரன் வேறு அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்து வைக்க ரத்த அழுத்தம் தாறுமாறாக ஏற மயக்கம் வரும் போல ஆனது அவருக்கு.

“சோதிக்கிறானே என்னைய…” என கடுகடுத்துக்கொண்டே அவர் நொந்த பார்வை பார்க்க புகழுக்கு தெரிந்தது அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று.

சட்டென நகர்ந்து வசீகரனுக்கு அழைத்தவன் அவன் போனை எடுத்து காதில் வைத்ததும்,

“உன் கால்ல விழறேன் சாமி, கல்யாணம் நல்லபடியா முதல்ல முடியட்டும். அந்த மனுஷன் தஸ்ஸுபுஸ்ஸுன்னு ஏற இறங்க மூச்சு விட்டுட்டு இருக்காரு. நீ பன்ற அலும்புல பயத்துல நெஞ்சை பிடிச்சுருவாறோன்னு எனக்கு பக்குன்னு இருக்கு…” என்று கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச பதில் ஏதும் சொல்லாமல் இவன் இருக்க அபிராமி வந்துவிட்டாள் திருமாங்கல்யம் கொண்டு.

இவனை பார்த்ததும் அவள் புன்னகைத்து நலம் விசாரிக்க இவனும் பதில் சொல்லிவிட்டு முனீஸ்வரனை பார்க்க அவரோ நெஞ்சின் அருகே கையை கொண்டு போக,

“அட ராமா அந்த அட்சதையை எடுத்துட்டு அண்ணியாரை அனுப்பிவிடுடா. எனக்கே நெஞ்சுவலி வந்துரும் போலையே…” அழமாட்டாமல் புலம்ப வசீகரனுக்கு சிரிப்பு தாளவில்லை.

தன் வருங்கால மாமனாரை தாண்டி பார்வையை கீழே கொண்டுவர “அடேய்” என்ற பார்வையுடன் விஷ்வா துப்பாக்கியை தூக்கவா என்பதை போல கண்ணாலேயே கோபத்தோட்டாக்களில் இவனை சுட்டுக்கொண்டிருக்க,

“ப்ளீஸ்…” என்னும் சந்நிதியின் குரல் இவனுக்கு மட்டும் கேட்க மெதுவாய் அட்சதையை போனால் போகிறது எடுத்துவிட்டு அபிராமியை அனுப்பினான்.

அதுவரை அவளை பேச்சில் நிறுத்திவைக்க இவன் பண்ணிய சேட்டையில் சம்பந்தப்பட்டவர்களிடம் மூச்சுத்திணறலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு தான் நிம்மதியானான்.

“அந்த பயம் இருக்கட்டும்” என்னும் விதமாய் மிடுக்காய் கர்வமாய் முனீஸ்வரனை பார்க்க,

“உனக்கு இருக்குடா” என்னும் பார்வை தான் அவரும் பார்த்துக்கொண்டிருந்தார்.

திருமாங்கல்யம் அனைவரின் ஆசிர்வாதம் பெற்று மேடைக்கு வர கெட்டிமேளம் முழங்க சந்தியா திருமதி விஷ்வேஷ்வரன் ஆகினாள். மனதில் ஒருவித நிம்மதியும் பூரிப்பும் அவளை நிறைத்தது.

அந்த நிறைவுடன் விஷ்வேஷ்வரனை புன்னகையுடன் பார்க்க அவன் அவளின் கழுத்தை சுற்றி அவளின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தான் அவன். அனைத்தையும் பார்த்தபடி இருந்த வசீகரன் சந்நிதியை திரும்பி பார்த்தான்.

அவள் அங்கு நடந்துகொண்டிருந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பெரியோர்கள் கால்களில் விழுந்து அவர்கள் ஆசிர்வாதம் வாங்கி மேலும் சில சடங்குகள் நடந்து முடிய அனைத்தையும் பார்த்தபடி இருந்த சந்நிதி,

“தேங்க்ஸ்…” என்றாள் இவனை பார்த்து. கேள்வியாய் அவன் புருவம் உயர்த்த,

“கஷ்டப்படறவங்களுக்கு ஒரு வலின்னா, அதை கண்கூடா பார்த்து தடுக்கமுடியாம கையாலாகாத தன்மையோட வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறவங்களுக்கு அது  இன்னும் வலி. எனக்கும் மேல அதிகமா அனுபவிச்சது தியாவும், அம்மாவும் தான். ஆனா என்னால எதுவும் செய்ய முடியாது. என்னை அவங்க கஷ்டம் எத்தனை பாதிக்கும் தெரியுமா?…”

“இப்போ இந்த நிமிஷம் தியாவுக்கு மனசுக்கு பிடிச்ச அவளை புரிஞ்ச ஒரு மாப்பிள்ளை. அத்தான் அத்தனை ஸ்வீட். இனி அவ ஹேப்பியா இருப்பா. இது எல்லாம் போக நான் சொன்ன தேங்க்ஸ் நடந்ததை மறந்துட்டு நீங்க சந்தோஷமா அக்கா மேரேஜ்ல கலந்துக்கிட்டதுக்கு…”

“சந்தோஷமா கலந்துக்கிட்டேன் உண்மை தான். ஆனா நடந்த எதையும் மறந்துட்டேன்னு சொல்லவே இல்லையே…” என்றவன் அர்த்தமான புன்னகையுடன் அவளை பார்த்துவிட்டு எழுந்து மேடை நோக்கி சென்றான்.

அதிர்ந்த முகத்துடன் அவன் செல்வதையே பார்த்தபடி அசையாது இவள் இருக்க மீண்டும் தன் மொபைலை எடுத்துக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்தவன்,

“கொஞ்சம் சிரிச்ச முகமா இரு. எப்போ பார்த்தாலும் பயந்து பார்க்கிறது. என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது நிதி. ஸ்மைல் ப்ளீஸ்…” அவன் சொல்லியதற்கான அர்த்தம் புரியவில்லை என்றாலும் அவனின் முகத்தில் இருந்த புன்னகை இவளையும் தொற்றியது. சரி என்று தலையசைத்து புன்னகைக்க,

“தட்ஸ் மை கேர்ள்…” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான். இப்பொழுது சந்நிதியின் பார்வை முழுவதும் சந்தியாவிடம் வர சந்தோஷமாய் புன்னகைத்தாள் சந்நிதி.

மேடையில் வாழ்த்து சொல்ல அனைவரும் கூட்டமாய் வர வசீகரனை லலிதா வந்து கூட்டி சென்றார் விஷ்வா சொல்லி.

மேடைக்கு வந்ததும் முனீஸ்வரன் என்ன செய்ய போகிறானோ என்று பார்த்திருந்தாலும் மகளின் கழுத்தில் தாலி ஏறிவிட்டது ஒரு தைரியத்தை கொடுக்க அவனை நேராகவே முறைத்தார்.

“வா வசீ, எப்போ வர சொன்னா இத்தனை லேட்டாவா வருவ மேன்?…” என்று அவனின் தோள் மேல் கை போட்டு அருகே நெருக்கமாய் அணைத்துக்கொள்ள முனீஸ்வரனுக்கு பக்கென்று ஆனது.

“ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? இத்தனை ஒட்டிக்கிட்டு இருக்காங்க?” என்று அவரின் மூளையில் வண்டு குடைய ஆரம்பித்தது. அவர்கள் இருவரையும் குறுகுறுப்பாய் பார்த்தபடி இவர் இருக்க இன்னும் நிறையப்பேர் காத்திருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாழ்த்தை சொல்லியவன்,

“உங்க ரெண்டு பேருக்கும் என்னோட சின்ன கிப்ட். உங்களுக்கு ஹனிமூன் பேக்கேஜ். லீவ் அதிகமில்லைன்னு சொன்னதால நாலு நாள்க்கு பேக்கேஜ். என்ஜாய்…” என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றவன் மேடையை விட்டு இறங்க அவனின் பின்னேயே முனீஸ்வரன் வருவதை கவனிக்கவில்லை.

ரவியிடம் இருந்து கிளம்புவதற்கு அழைப்பு வர மனமில்லாமல் கிளம்பினான். சந்நிதியை சொல்லிக்கொள்ள பார்க்க அவள் கம்பனின் மகளுடன் சிரித்து பேசியபடி அவன் மனதை அள்ள,

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?

அதில் கொள்ளை போனது என் தவறா?

பாடல் வரிகள் தன்னிச்சையாய் இதயத்தினுள் வலம்வர முதன் முதலில் மலர்ந்து சிரிக்கும் அவளின் புன்னகையை காண்கிறான். முதன்முதலில் பார்த்த மிரண்ட பார்வைக்கே இன்று வரை கட்டுண்டு அவள் நினைப்பில் இருந்தவன் இப்புன்னகையில் வேர்வரை சாய்ந்துதான் போனான் அவளிடம்.

மெதுவாய் அவனின் பார்வையோடு தன் பார்வையை கோர்த்தவள் தலையசைக்க சிரிப்புடன் தானும் தலையசைத்து விடைபெற்றவன் வெளியே காரை நோக்கி செல்ல பின்னோடு வந்த முனீஸ்வரன் அவனை வழிமறித்தார்.

திடுமென்று அவர் வந்து நிற்க கூடும் என்று எதிர்பார்க்காதவன் என்னவென பார்க்க,

“என்னமோ சவால் எல்லாம் விட்ட இப்போ பார்த்தியா உன் கண் முன்னாடியே என் பொண்ணு கல்யாணத்தை நடத்தி காட்டிட்டேன். இப்போ புரியுதா நான் யாருன்னு. முடியாதுன்னு சொன்னா முடிச்சு காட்டுவேன்னு உதாரா விட்ட? போ போ. போயி பொழப்பை பாரு…” என்று திமிராய் அவர் சொல்ல இடுப்பில் கை வைத்து அடக்கமாட்டாமல் சிரித்தவன்,

“பார்ரா! ஹ்ம்ம், இப்பவும் சொல்றேன் நான் உங்க வீட்டுக்கு மருமகனா வர தான் போறேன். ஏனா நான் பார்த்தது, எனக்கு பிடிச்சது உங்க பெரிய பொண்ணை இல்லை. உங்க சின்ன பொண்ணு சந்நிதியை…” என அழுத்தமாய் சொல்லியேவிட்டான்.

சொல்லவேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் போகிறவனை இழுத்து வம்பு பேச வசீகரனும் “இன்னும் கதறட்டும்” என்று வேண்டுமென்றே தான் சொல்லிவைத்தான்.

“போய் ஆகவேண்டிய வேலையை பாருங்க. இல்லைன்னா நான் உள்ள திரும்ப வரவேண்டியதாக இருக்கும்…” என்று சொல்லி முனீஸ்வரனின் அதிர்ச்சி பாவம் இன்னமும் குறையாமல் இருக்க அவரை ஒரு உலுக்கு உலுக்கி,

“மாமா உன் பொண்ண குடு….” என்று பாடிக்கொண்டே சிரிப்புடன் அவரை கடந்து செல்ல நீதிமாணிக்கம் வந்து அழைக்கும் வரை அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை முனீஸ்வரன்.

Advertisement