Advertisement

 தீண்டல் – 14(1)

           ரவி வந்து வசீகரனை அவனின் இல்லத்தில் விட்டுவிட்டு மறுநாள் காலை வந்து அழைத்துக்கொள்வதாக சொல்லி நான்கு திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

வசீகரன் வந்ததுமே அவனை உடை மாற்ற கூட விடாமல் உண்டுவிட்டு செல்லும்படி சொல்லி இரவு உணவை எடுத்துவைத்த அம்பிகா வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க குகன் மகனை பார்ப்பதும் மனைவியை முறைப்பதுமாக இருந்தார்.

“ப்பா, எதுக்கு இத்தனை கோவம்? அம்மாவை முறைச்சுட்டே இருக்கீங்க?…” வசீகரன் கேட்டேவிட்டான் பொறுமை இன்றி.

“ப்ச் என் கோவத்துக்கெல்லாம் இங்க மதிப்பிருக்கா என்ன?…” என இகழ்ச்சியாய் புன்னகைக்க,

“ஏன்டா அவரே பல வருஷத்துக்கு பின்னால என்னை இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்திட்டிருக்கார். உனக்கு அது பொறுக்கலையா?…” அம்பிகா கணவனுக்கு பரிந்துகொண்டு வர,

“அவர் உங்களை முறையோ முறைன்னு முறைக்கிறார்…” மகன் எரிச்சலாக,

“அவர் எப்படி பார்த்தா என்ன? பார்க்கிறார்ல அதுதான் முக்கியம். இது கூட தெரியாம உனக்கு என்னன்னு கல்யாணம் செய்ய போறேனோ?…” அங்கலாய்க்கும் குரலில் அவர் அலுத்துக்கொள்ள மகனின் முகத்தில் புன்னகை.

“என்ன கிண்டலா அபி?…” குகன் மனைவியிடம் வர,

“உங்கள கிண்டல் பண்ணாம யார பண்ண போறேன்?…” அதற்கும் அம்பிகா பதில்  கொடுக்க,

“அம்மா களத்துல குதிச்சுட்டாங்க…” சிரிப்புடன் முணுமுணுத்தவன் சாப்பிட்டு முடித்து கையை கழுவிவிட்டு தனது வழக்கமான வேலையான வேலையை ஆரம்பித்தான். அடுப்பில் பாத்திரத்தை வைத்து மூவருக்குமாய் இரவு குடிப்பதற்கு பாலை காய்ச்ச ஆரம்பித்தான்.

கணவன் மனைவியின் வாக்குவாதம் டைனிங்டேபிளில் இருந்து ஹாலுக்கு இடம் பெயர்ந்தது. வசீகரன் பாலுடன் வர குகன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க அம்பிகா கன்னத்தில் கை வைத்து கணவனை பார்த்திருந்தார்.

“என்னாச்சும்மா…” என வர,

“பாவம் உன் அப்பா. தலை வலிக்குதாம்…” பாவம் போல அம்பிகா சொல்ல குகனுக்கு வந்ததே கோபம்.

“கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு பேசாம இரேன் அபி. நான் இவன்கிட்ட பேசனும்…” என்றதும் வேண்டுமென்றே அவரை சீண்ட வாயை இரு கைகளாலும் மூடிக்கொள்ள வசீகரனின் சிரிப்பு அடக்கமாட்டாமல் பொங்கியது.

“இப்படிதான் பன்றா உன் அம்மா. எப்பவும் என்னை பேச விடாம இப்படித்தான் பண்ணிட்டே இருக்கா…” மகனிடம் புகார் வாசிக்க,

“இன்னைக்கு தான் அம்மா பன்றது உங்களுக்கு தெரியுதாப்பா?…” மகனும் பேச,

“நான் கிளம்பறேன். என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க…” குகன் எழுந்துகொள்ள,

“பாலை குடிக்காம போனா எப்படி? புள்ள காய்ச்சி கொண்டுவந்திருக்கான்ல…” என்றதும் திரும்பி முறைத்தவர் பின் மனைவியின் முக பாவனையில் லேசாய் சிரித்துவிட்டார்.

“உன்னை வச்சுக்கிட்டு முழுசா கோபப்பட கூட முடியலை அபி…” என சொல்லி மனைவிக்கு குடிக்க எடுத்து கொடுத்தவர் தனக்கு பாலை எடுத்துக்கொள்ள வசீகரனும் எடுத்துக்கொண்டு அவர் அருகில் அமர்ந்துகொண்டான்.

“நாளைக்கு கண்டிப்பா போகனுமா வசீ?…” அவனின் உறுதியை இன்னும் தெரிந்துகொள்ள விரும்பிக்கொண்டே தான் இருந்தார் குகன்.

“கண்டிப்பா போறேன்ப்பா…”

“வசீ…”

“அப்பா ப்ளீஸ், உங்க மரியாதைக்கு எந்த குறைவும் வராம நான் பார்த்துப்பேன். என்னை நம்புங்க…”

“உன்னை நம்பாம வேற யாரை நம்ப போறாராம்? அதெல்லாம் நம்புவார்…” அம்பிகா இடைபுக மனைவியை முறைத்தவர் வசீகரனை பார்த்து பெருமூச்சுடன்,

“ஹ்ம்ம் உன் மேல் எனக்கு நம்பிக்கை நிறைவே இருக்கு வசீ. இன்னமும் யோசிக்கனும்னு தான் எனக்கு தோணுது. ஆனாலும் உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். ரொம்ப முக்கியம் உன் அம்மாவுக்கு…” என சொல்லி மனைவியின் அருகில் எழுந்து சென்று அமர்ந்துகொண்டார்.

“இத்தனை நேரம் எத்தனை பேச்சு?. இப்பொழுது ஜோடி போட்டுட்டு என்னை வெறுப்பேத்தறீங்க…” வேண்டுமென்றே வசீகரன் முறைக்க,

“பாலை குடிச்சுட்டா போய் தூங்கு. அப்பாவே ஓகே சொல்லிட்டார்ல. நாளைக்கு எழுந்து கிளம்ப வேண்டாமா? எங்களை கிண்டல் பண்ணிட்டு இருக்க?…” அம்பிகா அவனை விரட்ட இப்பொழுது குகன் மனைவியை முறைக்க,

“எனக்கு தூக்கம் வருது, நான் குட்நைட்…” என்று எழுந்து சென்றுவிட அவரின் செயலில் அப்பா, பிள்ளை இருவருக்குமே சிரிப்பு தான்.

“ஓகே வசீ, குட்நைட்…” என்ற குகன் மகனின் கையை அழுத்திவிட்டு உறங்க சென்றார்.

இருவரும் சென்றதும் கதவை அடைத்துவிட்டு பால் குடித்த தம்ளர்களை எடுத்து சென்று  கிட்சனில் போட்டுவிட்டு விளக்குகளை அணைத்து தன்னறைக்கு வந்து உடை மாற்றி படுத்துவிட்டான்.

படுத்ததும் ஏதேதோ நினைவுகளில் உறக்கம் கண்களை தழுவிய சில நிமிடங்களில் அவனின் மொபைலில் அழைப்பு சத்தம். எடுத்து பார்த்ததுமே அட்டன் செய்தான்.

சந்தியா பேச அவளுடன் புகழும், விஷ்வேஷ்வரனின் குரலும் சேர்ந்து கேட்க தான் தான் முதலில் பேசுவேன் என்று அண்ணனுக்கும் தங்கைக்கும் போனிலேயே வாக்குவாதம்.

“ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? இல்லை நான் போனை கட் பண்ணிட்டு வசீக்கிட்ட பேசட்டுமா?…” விஷ்வேஷவரனின் அதட்டலில் புகழ், சந்தியா இருவரும் கப்சி.

“என்ன நடக்குது அங்க? தூங்கற நேரத்துல போன் பண்ணிருக்கீங்க?…” வசீகரன் குரலில் கலையாத தூக்கம் மிச்சமிருக்க அலுப்பாய் கேட்டான்.

“என்ன ஜூனியர் நாளைக்கு நேரமே வந்துடுவ தானே?…” விஷ்வா கேட்க,

“ஹலோ சீனியர் இதை கேட்க ஒரு போனா? கட்டிக்கபோற பொண்ணோட போன்ல பேசறதை விட்டுட்டு என்னோட என்ன பேச்சு? அதும் கான்பரென்ஸ் கால்?…” இப்பொழுது தூக்கம் முழுவதுமாய் விடைபெற்றிருந்தது.

“நல்லா பேச விட்டீங்கடா. என் நேரம் அவ கூட பேசனும்னா கூட உங்க எல்லாரையும் தாண்டி பேசற மாதிரி இருக்கு…” விஷ்வா கடுப்பாய் சொல்ல மற்ற மூவரின் சிரிப்பு சத்தம் அவனின் காதை பஸ்பமாக்கியது.

“ஓகே இதை விடு, நீ நாளைக்கு நேரமே வந்திரனும். அதை சொல்ல தான் கூப்பிட்டோம்…”

“ஆமா கண்டிப்பா சீக்கிரம் வரனும். வருவீங்க தானே?…” சந்தியா கேட்க,

“தியா நான் கண்டிப்பா வருவேன். எத்தனை முறை சொல்ல?…” வசீகரனுக்கு நெகிழ்வாய் இருந்தது அவர்களின் தேடல்.

“அதை சொன்னா நம்பமாட்டேன்னு சொல்றா இவ. அதான் உங்களுக்கு போன்…” புகழ் பேச,

“அதான் கன்பார்ம் ஆகிடுச்சுல. ரெண்டுபேரும் போனை கட் பண்ணுங்க…” விஷ்வா சொல்ல புகழும் வசீகரனும் சிரிக்க,

“நல்லா வருவீங்கடா. இந்த ரெண்டு மாசமா எங்களை பேசவிடாம செஞ்சதுக்கு உள்ள தூக்கிவச்சு லாடம் கட்டினா கூட என் மனசு ஆறாது…” என புலம்பும் குரலில் பேச சந்தியாவின் நகைப்பும் அவனின் செவிகளை தீண்டியது.

“கிண்டலா?…” என கேட்டவனும் அவர்களுடன் சிரிப்பில் இணைந்துகொள்ள மேலும் அரைமணிநேரம் நீடித்தது அவர்களின் கலந்துரையாடல். பேசிவிட்டு போனை வைத்தவனின் முகத்தினில் உறைந்த புன்னகை. அதனுடனே ஆழ்ந்த உறக்கத்திற்கு போனான் வசீகரன்.

புகழின் மூலம் வசீகரன் அறிமுகமாகி இப்பொழுது நல்ல நண்பர்கள் அவர்கள். விஷ்வா அத்தனை இனிமையாக அவனிடம் பேச நாட்கள் செல்ல செல்ல அவர்களின் நெருக்கம் கூடியது.

விஷ்வாவிற்கு வசீகரன் முனீஸ்வரன் பிரச்சனை என்னவென்று புகழ் மூலம் நன்றாகவே தெரியும். அதனை கொண்டு இருவரும் ஒரே வீட்டில் பெண்ணெடுக்க போகிறவர்கள் என்பதயும் தாண்டி ஒருவித நட்பு மலர்ந்தது.

முனீஸ்வரனின் குணம் புரிந்த விஷ்வா பெண் பிடித்திருக்கிறது, தன் வாழ்க்கைக்கு அவள் சரியாக இருக்கிறாள், போதும் என்கிற தெளிவான முடிவில் இருந்ததால் முனீஸ்வரனின் ஆளுகை பற்றி எந்த கவலையும் இல்லை.

தன் விஷயத்தில் அவரின் அதிகாரத்தை காட்டினால் அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவு அவனை சரியாக வழிநடத்தியது.

திருமணம் காஞ்சிபுரத்திலேயே வைத்திருக்க மணமகன் வீட்டார் அந்த வார இறுதியில் நாகர்கோவிலில் ரிசப்ஷன் வைத்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

காலை நேர முகூர்த்தம் என்பதால் அனைவரும் பரபரப்பாக இருந்தனர். சொந்தங்கள் அத்தனை பேரையும் வரவேற்று உபசரிக்கும் பொறுப்பை மனமுவந்து மொத்தமாய் நீதிமாணிக்கம் குடும்பமே எடுத்து நடத்த ராதாவும், கம்பனும் அதற்கு உறுதுணையாக இருந்தனர்.

முனீஸ்வரனின் உற்றார் உறவினர் வந்திருந்தாலும் ஏனோ அவரிடம் அத்தனை நெருக்கம் எதையும் காண்பிக்கவில்லை. வந்து கலக்கவேண்டும் என்பதற்காகவே வந்ததை போல தான் இருந்தது அவர்களின் நடவடிக்கைகளும் பார்வைகளும்.

அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் முனீஸ்வரனுக்கும் சேர்த்து பார்கவி அனைவரையும் விழுந்து விழுந்து கவனித்தார்.

அதை எதையும் செய்யமுடியாது சந்நிதி முதல் வரிசையில் வீல்சேரில் அமர்ந்திருந்தாள். கை,கால் எலும்பு இன்னமும் கூடவில்லை என்பதால் ஸ்டிக் வைத்து சமாளிக்க முடியாதென்று அதில் இருந்தாள்.

வீட்டில் இப்பொழுது ஸ்டிக் வைத்து கொஞ்சம் கொஞ்சம் நடக்க ஆரம்பித்திருந்தாள்.

மண்டபத்தில் சட்டென எழுந்து செல்லமுடியாதென்பதாலும், ஒரு கையினால் ஸ்டிக்கை பிடித்து கூட்டத்தில் ஏதேனும் தடுமாறி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்பதாலும்  வீல்சேரிலேயே அமர்ந்துகொண்டாள். இதுவும் புகழின் யோசனை.

இதோ பெண்ணை முஹூர்த்த புடவை வாங்கி செல்ல மணவறைக்கு அழைத்து வரும் நேரம். சந்தியா வந்து அமர்ந்ததும் விஷ்வாவின் பெற்றோரையும், சந்தியாவின் பெற்றோரையும் மேடைக்கு அழைக்க லலிதாவை காணவில்லை.

“அம்மா எங்கப்பா?…” விஷ்வா கேட்க,

“அதோ வரா பாரு…” என்று அவனின் தந்தை காட்டிய திசையில் விஷ்வாவும், சந்தியாவும் பார்க்க அங்கே வசீகரன் உள்ளே வந்துகொண்டிருந்தான் வலிதாவிடம் பேசியபடி.

முகத்தில் எப்பொழுதும் போல அழகான வசீகரிக்கும் புன்னகை. ஹாஃப் வைட் கலர் பேண்ட், மெரூன் கலர் ஷர்ட் என்று பார்ப்பதற்கு அத்தனை அழகனாய்.

வாசலில் சந்தனம் எடுத்து வைத்திருப்பான் போலும். துளியளவு நெற்றியில் தீற்றிய சந்தனம் அவனுக்கு அப்படி ஒரு பொலிவை தந்திருந்தது.

இவர்களை பார்த்து கை அசைத்தவன் சத்தமில்லாத ஒரு வாழ்த்தை தன் உதட்டசைவில் சொல்ல இருவருக்கும் அத்தனை சந்தோஷம்.

சந்தியா அவனை அமரும் படி சொல்ல தலையசைத்து திரும்பி பார்த்தவன் முதல் வரிசையில் இவனை பயந்த விழிகளுடன் பார்த்த சந்நிதி தான் கண்களை நிறைத்தாள்.

அவளின் பார்வையே சொல்லிற்று அவனின் வருகையை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதையும் தாண்டி பிரச்சனை செய்ய வந்திருக்கிறானோ என்கிற அச்சம் அவளின் முகத்தில் அப்பட்டமாய்.

சந்தன நிற பட்டில் பாவாடை தாவணி அணிந்து தலை முழுவதும் மல்லிகையை சூடி நெற்றியில் சிறு நெற்றி சுட்டி, காதில் பெரிய பெரிய ஜிமிக்கி என்று மனதில் பதியும் ஓவியமென இருந்தவளின் முகத்தில் இவனை பார்த்த நொடியில் இருந்து நெற்றிப்பொட்டில் வியர்வை பூக்கள் அரும்ப தொடங்கின.

“இங்க உட்காருங்க தம்பி…” என்று சந்நிதியின் அருகில் இருந்த இருக்கையில் அமர சொல்லியவர் மேடைக்கு சென்றுவிட மேடையில் நின்றிருந்த முனீஸ்வரனின் முகம் போன விதம் வசீகரனின் புன்னகையை அதிகப்படுத்தியது.

முனீஸ்வரனுக்கு இவன் ஏன் இங்கு வந்திருக்கிறான் என்கிற கேள்வி ஒரு புறம் லலிதா அழைத்து வந்து அமர செய்தது ஒருபுறம் என்று குழப்பமும் கேள்வியுமாய் பயத்தில் நின்றிருந்தார்.

அதனால் மற்ற எவரும் எதுவும் அவரின் கருத்தில் பதியவில்லை. சந்நிதி அருகில் அவன் அமர்ந்திருப்பதும் கூட.

திறந்த வாயை மூடாமல் ஆவென பார்த்தபடி எதுவும் பேசி திருமணத்தை நிறுத்த பார்ப்பானோ என்கிற அச்சம் நெஞ்சை கவ்வ அவனையே பார்த்தபடி நிற்க அவனோ தன் வலதுகை ஐந்து விரல்களையும் விரித்து பின் குவித்து வாயை மூடும்படி சைகை காண்பித்து கால் மேல் கால் போட்டு தோரணையாய் அமர சட்டென வாயை மூடியவரின் முகத்தில் அவன் மீதான கொலைவெறி பிறந்தது.

முறைத்து பார்த்தவரை அங்கே பாருமைய்யா என்பதை போல மணமக்களை காண்பித்து பார்க்க சொல்லி மீண்டும் கையால் சைகை காண்பிக்க முகத்தை திருப்பிக்கொண்டார் முனீஸ்வரன்.

இனி இவனை பார்க்கவே கூடாது என்று முகம் திருப்பியவரால் நிம்மதியாக திருமண சடங்குகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஒருவித பதட்டத்திலேயே இவர் இருக்க,

“என்ன பொண்ணோட தோப்பனார் கை நடுங்கறது?…” என ஐயர் மந்திரத்துனூடே கேட்க அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த புகழ்,

“பொண்ணுக்கு கல்யாணம், அந்த எமோஷன்…” என்று சமாளித்து முனீஸ்வரனை பார்க்க அவருக்கோ மனது நிலைகொள்ளவில்லை.

வசீகரனை மெதுவாய் பார்க்க இப்பொழுது வேண்டுமென்றே சிரிப்பை தொலைத்த இறுக்கமான முகபாவனையை முகத்தில் கொண்டுவந்தவன் அவரை முறைத்து இருக்கையில் இருந்து எழுவதை போல பாசாங்கு காண்பிக்க அவ்வளவு தான் அரண்டுபோனார்.

“சித்தப்பா இங்க பாருங்க. மாப்பிள்ளைக்கு முகூர்த்த பட்டு வேஷ்டி குடுக்கனும். கவனத்தை இங்க வைங்க. வரவங்களை அப்பாவும் அண்ணனும் பார்த்துப்பாங்க…” என்று திசைதிருப்ப முனீஸ்வரனுக்கு வியர்த்து போனது.

Advertisement