Advertisement

தீண்டல் – 12

             ஆகிற்று ஒரு மாதம். நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. ஆனால் நடந்தவை அனைத்தும் நன்மையாகவே நடந்தது என்று தான் பார்கவி நினைத்துகொண்டார்.

இத்தனை வேதனைகளையும், வலியையும் கொடுத்தது, தன்னுடைய இழப்பு எல்லாம் இந்த சொந்தங்கள் இணைவதற்காகவே என்று அதையும் ஏற்றுகொண்டார் அவர்.

இந்தமட்டிலும் முனீஸ்வரன் மனம் மாறியதே என்ற ஆனந்த கண்ணீர் அவ்வப்போது கசிந்தாலும் அடிமனத்தின் பயம் முழுமையாக சந்தோஷிக்க அனுமதிக்கவில்லை.

எப்பொழுது எப்படி நடந்துகொள்வார் என்று புரியாமல் அவசரப்பட்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டாம் என மனதை அடக்கியே வைத்தார் பார்கவி. ராதாவும், கோமதியும் இல்லையென்றால் குடும்பம் என்னவாகியிருக்குமோ? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அவரால்.

அனைத்தையும் தாண்டி மற்ற மூவரும் கூட உடல் தேறிவிட்டனர். ஆனால் சந்நிதி இன்றளவும் அதே நிலை தான். எழுந்து நடக்க இன்னும் ஐந்து மாதங்களாவது ஆகும் என்று சொல்லிவிட்டனர் மருத்துவர்கள்.

பார்ப்பவர்களுக்கு தான் வேதனை எல்லாம். அவளோ மிக சாராதணமாக தான் இருந்தாள்.

ராதா தான் உடனிருந்து இவர்களை எல்லாம் பார்த்துக்கொள்கிறார். கம்பன் வார நாட்களில் வந்து செல்வதுதான். கோமதி பகலில் இங்கிருந்துவிட்டு இரவு தான் வீடு திரும்புவது.

நீதிமாணிக்கத்தின் மூத்தமகன் புவனேஷ்வரனும் அவன் மனைவி அபிராமியும் அவ்வப்போது வந்து சென்றாலும் இன்றுவரை முனீஸ்வரனிடம் சரியாக பேசுவதில்லை.

ஆனால் சித்தியிடமும் தங்கைகளிடமும் மிகுந்த ஒட்டுதல் காண்பிக்கைவில்லை என்றாலும் அதிகம் விலகியும் இல்லை. நன்றாகவே அக்கறையுடன் பேசி பழகினான் புவனேஷ்வரன்.

இத்தனை வருட இடைவெளியும் முனீஸ்வரன் பேச்சுக்களும் அவனை அங்கு சகஜமாய் பழகவிடவில்லை. அபிராமி சொல்லவே வேண்டாம். கோமதி, நீதிமாணிக்கத்திற்கு பயந்தோ, மரியாதை கொடுத்தோ அங்கு வந்து சென்றுகொண்டிருந்தாள்.

ராதாவை முதலில் முனீஸ்வரன் முறைத்தாலும் அவரோ அப்படித்தான் வருவேன், போவேன் என்று ஒரேபோடாக போட பெண்களுக்கும், மனைவிக்கும் பெண் துணை தேவை என்கிற எண்ணம் அவரின் வீம்பை கைவிட செய்தது.

ஆனால் முனீஸ்வரனே உள்ளார்ந்து ஏற்ற உறவு என்றால் அது புகழ் மட்டுமே. அவனிடம் எதுவோ ஒன்று அவரை அடங்கி போக செய்தது.

எதுவானாலும் சொல்வதென்றால் தன் அண்ணனிடம் நேரடியாக சொல்லமாட்டார். புகழிடம் சொல்லி பேசும் அளவிற்கு இந்த ஒரு மாதத்தில் முன்னேற்றம் வந்திருந்தது,

இதை தாண்டி வேறொன்றும் தேவையில்லை இதுவே போதும் என்னும் எண்ணத்தில் மற்றவர்களின் நிம்மதி நிலைத்தது அங்கே.

“நான் கடைக்கு போகலை புகழ், சும்மா காலாற நடந்துட்டு வரலாம்னு தான் கிளம்பினேன். அப்படியே கோவிலுக்கு போன மாதிரியும் இருக்கும்ல…” என்றார் முனிஸ்வரன் புகழிடம்.

“இருக்கட்டும் சித்தப்பா, கடைக்கு போகனும்னா கூட நானும் வரேன். உங்களை ட்ராப் பண்ணிட்டு நான் தறிச்செட்டை போய் பார்த்துட்டு திரும்ப வரப்ப உங்களை பிக்கப் பண்ணிக்கறேன். இன்னைக்கு வேலை அவ்வளோ தான்…”

புகழ் இப்பொழுது முனீஸ்வரனின் பட்டு ஜவுளி மாளிகையையும் சேர்த்து பார்வையிட்டு வருகிறான் முனீஸ்வரன் சொல்லியதற்காக.

“என்ன சித்தப்பா யோசிக்கிறீங்க?…” என கேட்டுகொண்டே சட்டையின் கையை இழுத்துவிட்டு பட்டன்களை கழட்டி கைமுட்டி வரை மடித்தான். இன்னமும் அவரின் முகம் யோசனையாய் இருக்க,

“வேற எங்கையாவது போகனுமா சித்தப்பா?…” ரகசிய குரலில் அவன் குனிந்து மெல்ல கேட்க அவன் கேட்டவிதம் முனீஸ்வரனை பதில் சொல்ல வைத்தது.

“ஹ்ம்ம் ஆமாம். ஜோஸியர் போன் பண்ணியிருந்தார். நம்ம சந்தியாவுக்கு வரன் ஏதோ வந்திருக்குன்னு. நல்ல பொருத்தமான இடம்னு. அதான் போய் பார்க்கலாமான்னு யோசிச்சேன். இப்ப வீடு இருக்கற சூழ்நிலை…”

“சித்தப்பா இருங்க நாம வெளில போய் பேசுவோம்…” என்றவன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்தவன்,

“வாங்க கார்ல பேசிட்டே போகலாம்…” என அவருடன் வெளியில் வந்து காரை கிளப்பினான்.

“இப்ப என்ன யோசனை சித்தப்பா? நல்ல இடம்னா பேசிடலாமே…” அவனே ஆரம்பிக்க,

“அதுல கொஞ்சம் சிக்கல் இருக்குப்பா. இப்பதான் ஆக்ஸிடன்ட் ஆகி எல்லாருக்கும் அடி. இன்னும் சின்னது நடமாடலை. எவன் கருமாந்திரம் புடிச்சவன் கண்ணு பட்டுச்சோ குடும்பத்தோட எமன் வாயில விழ இருந்தோம்…” என பல்லை கடித்தவர்,

“ஒருவேளை சம்பந்தம் தகைஞ்சு உடனே கல்யாணம் செய்யனும்னா நடத்த எனக்கும் தெம்பு வேண்டாமா? ஓடியாடி வேலை பாக்கனுமில்ல…”

“ஏன் சித்தப்பா நான் பார்த்துக்கமாட்டேனா? என் தங்கச்சிக்கு செய்யாம யாருக்கு செய்வேன்?…” புகழ் கேட்டதும் நெகிழ்ந்துபோனார் முனீஸ்வரன்.

“இதுக்குத்தான் ஒரு ஆம்பிளை பிள்ளை வேணும்ன்றது. எனக்கு ரெண்டும் பொட்டையா போச்சுங்க…” என மனத்தாங்கலுடன் சொல்ல அந்த பேச்சு புகழுக்கு ரசிக்கவில்லை.

“ஆண், பொண்ணுன்னு இதுல எதுக்கு சித்தப்பா? விடுங்க. பொண்ணில்லாத எங்களுக்குத்தான் அவங்க அருமை தெரியும். மகாலட்சுமிங்க, தெய்வகடாச்சம் எல்லாம் பொண்ணுங்க இருக்கற வீட்டில தான்னு எங்கம்மா சொல்லுவாங்க. இப்போ என்ன உங்களுக்கு பசங்களா நானும் அண்ணனும் இருக்கோம். என் அப்பாவுக்கு பொண்ணுங்களா தியாவும், நிதியும். போதுமே…”

புகழ் சாமர்த்தியமாக பேசி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன் ஜோஸியர் வீட்டு வாசல் முன்பு காரை நிறுத்தினான்.

“எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்காம போவோம் சித்தப்பா. என்ன ஏதுன்னு பார்த்துட்டு முடிவு செய்வோம்…” என்று அவருடன் படபடப்புடன் உள்ளே நடந்தான் புகழ்.

பின்னே இது இவன் கொண்டுவந்த சம்பந்தம் அல்லவா. தேடி தேடி பிடித்த வசீகரனுக்கும், புகழுக்கும் பிடித்துப்போன மாப்பிள்ளை. சந்தியாவிற்கு மிக பொருத்தமான மாப்பிள்ளை.

உள்ளே சென்று வந்ததில் இருந்து முனீஸ்வரனின் முகம் யோசனையில் தான் இருந்தது. புகழுக்கு அதை கண்டு பயமாகிவிட்டது எங்கே வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்று.

“விடாதடா புகழ், யோசிக்க விடாத” என மனதினுள் தன்னையே எச்சரித்துக்கொண்டவன்,

“சித்தப்பா என்ன இத்தனை யோசனை?…”

“இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வருமா? அது தான்…” என்றதுமே பக்கென்று ஆனது.

“ரெண்டு நாள் டைம் குடுங்க சித்தப்பா விசாரிச்சுட்டு சரிவருமா வராதான்னு சொல்றேன். உடனடியா எந்த முடிவுக்கும் வரவேண்டாம்…” என்று அப்போதைக்கு அவரை அமர்த்தினான் புகழ்.

இரண்டுநாட்களாக வசீகரனிடம் பேசி மாப்பிள்ளை பற்றி முனீஸ்வரன் என்னவிதமான் கேள்விகள் எழுப்புவார் என்று யோசித்து அதற்கேற்றார் போன்ற பதில்களை புகழுக்கு சொல்லியவன் சொதப்பிடாதே என்கிற எச்சரிக்கையும் விடுத்திருந்தான் மிக அழுத்தமாய்.

ஒருவழியாய் அவனிடம் பேசிவிட்டு முனீஸ்வரனை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்த புகழ் வரன் பற்றிய பேச்சை துவங்கினான்.

“நான் விசாரிச்ச வரை ரொம்ப ரொம்ப நல்ல இடம் சித்தப்பா. நம்ம பொண்ணை நம்பிக்கையா குடுக்கலாம். பையனுக்கு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை. மரியாதையான குடும்பம், மதிப்பான பையன்.  இது எல்லாத்தையும் விட உங்களுக்கும் மாப்பிள்ளைக்கும் நிறையவே ஒற்றுமை சித்தப்பா. கிட்டத்தட்ட உங்களை போல தான் அவர். கட் அன்ட் ரைட்டான ஆளு…”

முனீஸ்வரனுக்கு கடைசி வாக்கியத்தில் குளிர்ந்துவிட்டது. உண்மையில் மகிழ்ந்து போனார் அவர். தன்னை போல் ஒருவன் என்கிற மிதப்பும், சந்தோஷமும் கூட.

“சொத்துபத்துன்னு குடும்பத்துக்கு நிறைய இருந்தாலும் தனக்குன்னு தனி அடையாளம் வேணுமின்னு அவர் இந்த வேலைக்கு போய்ட்டிருக்கார். எத்தனை கெத்தான வேலை. பேர்ல கூட உங்க ரெண்டு பேருக்கும் ஒற்றுமை பாருங்களேன். விஷ்வேஷ்வரன்…”

மீண்டும் ஒரு ஐஸ் மலையை தூக்கி அவரின் தலையில் வைக்க கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்தாலும் அவரின் புத்தி எனவோ சண்டித்தனம் செய்தது.

“எல்லாம் சரித்தான். ஆனா?…”

“இப்ப உங்க தயக்கம் என்ன? சொல்லுங்க சித்தப்பா. நாமளா ஒன்னு நினைச்சு ஒரு நல்லதை வேண்டாம்னு சொல்ல கூடாதுல…” தன்னுடைய ஆர்வத்தை அடக்கிய குரலில் அவன் பேச,

“சொந்தமா எந்த பிஸ்னஸும இல்லை. மாத சம்பளம்…”

“சித்தப்பா சொந்த பிஸ்னஸ் பன்ற நாம என்ன எல்லாம் நேரமும் லாபம் பார்க்கோமா? நமக்கு நஷ்டமும் இருக்குது தானே?.  மாச சம்பளம் அதுவும் கவர்மெண்ட் சம்பளம். கசக்குதா?…”

“பெரிய குடும்பமா இருக்குதே?…”

“இப்போலாம் ஒத்துமையான குடும்பத்தை பார்த்திருக்கோமா? இப்ப வரை நாலு தலைமுறையா ஒத்துமையான கூட்டு குடும்பமா இருக்காங்க. தனியாவே வளர்ந்துட்ட நம்ம தியா அங்க சந்தோஷமா இருப்பா…”

“என்னதான் பசங்க நீங்க இருந்தாலும் மருமகனா வரப்போறவர் நமக்கு கட்டுசெட்டா இருப்பாரா? நம்ம குடும்பத்து குணநலத்தோட ஒத்துபோவாரா?…” என கேட்க புகழுக்கு எங்காவது சென்று முட்டிகொள்ளலாம் போல இருந்தது.

“கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்த போறது மகள். ஆனா இவருக்கு கட்டும் செட்டுமா மாப்பிள்ளை வேணுமாம். ஆனாலும் உன் சொத்தப்பாக்கு ஓவர் பேராசை புகழ். இருக்கற அடிமைங்க போதாதுன்னு புதுசா ஒரு அடிமை…” புகழின் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் வழியாக வசீகரன் கவுன்ட்டர் கொடுக்க புகழின் அவஸ்தை தான் பெரும் சோதனையானது.

“சித்தப்பா இப்ப நம்ம தியாவோட ஜாதகப்படி இப்ப விட்டா இன்னும் நாலு வருஷத்துக்கு கல்யாணம் ஆகறது சிரமம்னு ஜோஸியர் சொல்லிருக்காரே. அவ ஜாதகப்படி ஒரு வரன் அமையுறதே கஷ்டம். கிடைச்சதும் நல்ல வரனா கிடைச்சிருக்கு. விடவேண்டாமே சித்தப்பா?…”

சரியான நேரத்தில் சரியான லாக் வைத்தான் புகழ். முனீஸ்வரனின் முகம் இப்பொழுது முடிவெடுத்துவிட்ட பாவம் காண்பிக்க,

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரிதான். ஹ்ம்ம் வீட்ல எல்லார்ட்டயும் கலந்து பேசிட்டு அவங்களை பார்க்க வர சொல்லுவோம்…” என சொல்லவும் தான் புகழுக்கு உயிரே வந்தது.

“கிளம்புவோம்…” என்றவர் நடக்க ஆரம்பிக்க புகழின் காதுகளில் வசீகரன் பொரிந்துகொண்டிருந்தான்.

“நான்லாம் அட்வர்டைஸ்மென்ட்ஸ்க்கு புதுவிதமான கான்சப்ட்னு புதுசா யோசிக்கிறவன். என்னைய போய் சொத்தப்பாவ சமாளிக்க யோசிக்க விட்டுட்டீங்களேடா? எல்லாம் உன் தங்கச்சியால. எங்க கல்யாணம் முடியட்டும்…” என்று பல்லை கடித்தான் வசீகரன். அவனின் பேச்சில் பொங்கி சிரித்த புகழ்,

“இது உங்க கல்யாணத்துக்கான பிளானிங் இல்லை. அதுக்கு தனி ஸ்கெட்ச் போடனும். இப்ப போனை வைக்கிறேன்…” என்று கட் செய்துவிட்டு முனீஸ்வரனுடன்  ஓடிச்சென்று இணைந்து நடந்தான்.

புகழிடம் பேசிவிட்டு மொபைலை வைத்த வசீகரன் தன்னுடைய லேப்டாப்பில் கவனம் செலுத்த உள்ளே வந்தார் அம்பிகா.

“ம்மா, அப்பவே வந்துட்டு இப்பதான் உள்ள வரீங்க?…”

மகன் தான் வந்ததை கவனித்திருக்கிறான் என புரிந்தவர் அவனருகே அமைதியாக அமர,

“இது அம்மாவே இல்லையே? என்னாச்சு உங்களுக்கு?…” என அவரின் பக்கம் நன்றாய் திரும்பி அமர அவனின் முகத்தில் இருந்த புன்னகையை வாஞ்சையுடன் பார்த்தவர்,

“அப்பவே வந்தேன் தான். நீ புகழ் கூட பேசிட்டிருந்த. அதான் முடிக்கட்டும்னு இருந்தேன்…”

“இதுவும் அம்மா இல்லை…” என்று அவரின் மூக்கை பிடித்து ஆட்ட,

“அட போடா, சும்மா விளையாடிட்டு. நீ பீல் பண்ணுவன்னு உனக்கு துணையா நானும் கொஞ்சம் பீலிங் ஆஃப் காஞ்சிபுரமா இருக்கலாமேன்னு பார்த்தேன். விடமாட்டியே…” தன் வழக்கமான குரலில் அம்பிகா பேச அட்டகாசமாய் சிரித்தான் வசீகரன்.

Advertisement