Advertisement

தென்றல் – 31(2)

எதற்கெடுத்தாலும் தன் அண்ணியை முன்னிறுத்தினான். அவளின் உரிமையை உணர்த்த மற்றவர்களும் உதவினார்கள். ஆனால் சபையில் அனைத்தையும் முகம் மாறாமல் முழுமனதாக செய்தவள் வீடு என்று வரும் பொழுது இரும்பாய் இளக்கமின்றி நின்றாள்.

பூரணி முன்பை விட இன்னும் நிலை மோசமானது. உடல்நிலை இல்லை. மனநிலை. தன் பிள்ளைகளை கூட நெருங்கவிடாமல் செய்கின்றனரே என அவராக ஒரு உலகம் படைத்து அதற்குள் தான் தன் கணவரின் நினைவுகள் என வாழ ஆரம்பிக்க பின் அதுவே நிரந்தரமாய் போனது.

யாரையும் தெரியாமல் சுற்றம் மறந்து தன்னையும் மறந்து நினைவில் மொத்தமும் வைத்தியநாதன் மட்டுமே. இப்பொழுது படுக்கையில் வேறு. உடன் இருந்து பார்த்துக்கொள்ள இரு நர்ஸ்களை ஏற்பாடு செய்திருந்தான் அதிரூபன்.

திருப்பதியில் திருமணம் முடிந்து சென்னையில் ரிசப்ஷன். வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தான் விஷால். அவனின் அருகே வித்யூத்தும், அதிரூபன், துவாரகா புதல்வி நிலாவிழியும்.

“உன்னை எங்க எல்லாம் தேடறது வித்யூத்…” என்றபடி அஷ்மி வர,

“இங்க என்னோட வந்து நிக்கனும்னு சொன்னான். அதான் கூட்டிட்டு வந்தேன்…” என விஷால் சொல்ல,

“அது சரி, அங்க பவித்ரா ஒரு இடத்துல உட்காராம ஸ்வேதா கூடவே எவ்வளவு நேரமா நின்னுட்டே இருக்கா. அதை பார்த்து சத்தம் போட்டு உட்காரவைக்க முடியாதா உன்னால? இப்போதான் கன்சீவா இருக்கா. அவ ஹெல்த் கண்டீஷன்க்கு நல்லா பார்த்துக்கனும்னு தெரியாதா? இங்க வந்து வரவங்களுக்கு எல்லாம் ரோபோ மாடல் மாதிரி நிக்கிற?…” என்று அவனிடம் எகிற,

“அதே தான் நாங்களும் சொன்னோம். சின்ன அண்ணிட்ட இருந்து எஸ்கேப் ஆக இதுதான் சாக்குன்னு இங்க வந்து பட்டவர்த்தனமா எல்லாரும் பார்க்க ஒளிஞ்சு நிக்கிறான்…” என சந்தோஷ் அர்னவுடன் வந்து விஷாலை கலாய்த்தான்.

“ஓய் பச்சைக்கிளி, இன்னும் அஞ்சு மாசத்துல நீயும் அர்னவும் கூட அவனை மாதிரி தான் நிக்கனும். இப்ப அவனை சொல்லி கிண்டலா? கர்மா இஸ் பூமாராங். திருப்பி அடிச்சா ஒன்றை டன் வெய்ட்டுடான்னு சாய்ச்சிட போகுது…” என அவர்களையும் விட்டுவைக்காமல் அஷ்மி ஓட்டினாள்.

ஆம், அர்னவ், சந்தோஷ் இருவருக்கும் இன்னும் ஐந்தே மாதத்தில் திருமணம். அதுவும் ஒரே மேடையில். அர்னவ் ஏனோ திருமணத்தில் நாட்டமில்லாமல் இப்போதைக்கு வேண்டாம் என தள்ளி போட்டுக்கொண்டே வர சந்தோஷ் திருமணத்துடன் அவனோடதையும் நடத்திவிடவேண்டுமென அதிரூபன் உறுதியாய் சொல்லிவிட பெண் பார்த்து நிச்சயமும் செய்தாகிற்று.

“இங்க என்ன மாநாடு போட்டுட்டு நிக்கிறீங்க? எவ்வளவு வேலை இருக்கு? அதை கவனிக்காம இங்க வெட்டி பேச்சு பேசிட்டு…” என ரத்தினசாமி வர,

“மாநாடு வெட்டிப்பேச்சு இதெல்லாம் உனக்கு கை வந்த கலை மயிலு. அதான் கும்பலா நாலு பேர் நின்னாலே உனக்கு மாநாடுன்னு தோணுது. உன் கூட்டணிக்கு வேற எத்தனை பேர் வருவாங்களாம்?…” என கிண்டல் பேச மற்ற மூவரும் அடக்கப்பட்ட சிரிப்புடன் கப்சிப்.

“ஆங் மயிலு மயிலு…” என நிலாவிழி சொல்ல அஷ்மியை முறைத்த ரத்தினசாமி பேத்தியிடம் அப்படியே மலர்ந்த முகத்துடன் திரும்பினார்.

“என்னடா அம்மா…”

“மயிலு சொன்னே மயிலு…” என மீண்டும் சொல்ல,

“கூப்புடும்மா கூப்புடும்மா. நீ என்ன வேணாலும் கூப்பிடு…” பேத்தி இந்த வார்த்தையை சொல்லி அழைத்தால் ஏதோ பெரிய விருது வாங்கியதை போல அகமகிழ்ந்து போவார்.

“ஒன்ன மறந்திருக்க ஒருபொழுதும் அறிய, மயிலுக்கு பேத்தி மொகத்த தவிர வேறெதுவும் தெரியல…” என அஷ்மி பாட அவளை பார்க்க,

“மயிலுக்கு கரகாட்டகாரன் பாட்டு. ஓகே தான?…” என்று சொல்லிக்கொண்டு சென்றுவிட ரத்தினசாமிக்குமே அவளின் கலாட்டாவில் லேசான புன்னகை தான். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல்,

“இவளோட வாய்க்கொழுப்பு மட்டும் குறையவே குறையாது…” என சந்தோஷிடம் சொல்லியவர் வித்யூத் பார்ப்பதை அறிந்து,

“ரெண்டு பேரும் வாங்க. தாத்தா கூட அங்க போய் உட்காரலாம். இங்க நிறைய வருவாங்க…” என இருவரையும் இரு கைகளில் பிடித்துக்கொண்டவர்,

“அர்னவ், சந்தோஷ் நீங்க இங்க நில்லுங்க. சந்தியாவை அனுப்பறேன் கூட. விஷால் நீ போய் பவித்ராவை பாரு. அவ அப்பாம்மா வந்துட்டாங்க. போய் கவனி…” என அனுப்பிவிட்டு இரு குட்டிப்பிள்ளைகளுடன் பெருமிதமாய் அந்த அரங்கை சுற்றிவந்தார் ரத்தினசாமி.

பார்ப்பவர்களிடம் எல்லாம் என் பேத்தி, என் பேரன் என்று தான் அறிமுகம் செய்தார். முன்பை போல எந்தவித கோபதாபங்களும் இல்லை. ஆனாலும் பழைய மிடுக்கை விடவும் மனமில்லை. துவாரகாவிடம் பேச விருப்பம் தான். ஆனாலும் நேரடியாக பேசிவிட மாட்டார்.

எதுவாவது சொல்லவேண்டும் என்றால் யாரையாவது வைத்துக்கொண்டு அவர்களிடம் சொல்லி சொல்வதை போல சொன்னாலும் அது நேரடியாக சொன்னதை போல தான் இருக்கும். ஆனாலும் மாறாமல் இப்படியே சென்றது.

இப்பொழுது அரசியலில் சங்கரனை இறக்கிவிட்டிருக்கிறார். அவர் மூலமாக தான் விட்டதை பிடிக்கவேண்டும் என்று முனைப்புடன் இருந்தார்.

“எங்கலாம் உன்னை தேட?…” என வேகமாக வந்தான் பிரசாத் அஷ்மியை பார்த்து.

“எதுக்காம்? என்ன தேடல்?…” என மையலுடன் அவனை பார்க்க,

“இந்த லுக் எல்லாம் பப்ளிக்ல குடு. உன்னையெல்லாம்…” இதழ்கள் கடுப்படித்தாலும் பார்வை அவளுக்கு சளைக்காத மையலுடன் அவளை மையம்கொண்டது.

பர்ப்பிள் கலர் வெல்வெட் டிஸைனர் லெஹெங்காவில் தேவதையாய் அவள் தேரேறி வர ஏற்கனவே மயங்கி கிடக்கும் இவனின் மயக்கம் அத்தனை எளிதில் தெளிந்துவிடுமா என்ன?

“அசத்துற வெள்ளெலி…”

“தெரியுமே. இப்ப எதுக்கு வந்தீங்க? அத சொல்லுங்க…” என ஞாபகப்படுத்த,

“ஸ்ஸ் மறந்துட்டேன் பாரேன். நீ பக்கத்துல இருந்தாலே எல்லாமே மறந்து போய்டுது…” என்றவனை பார்த்து விறைப்பாய் நின்றவள்,

“பிரசாத் கன்ஃபெஷன் ரூம்க்குள்ள வாங்க. அப்பப்ப நீங்க வேற ஒரு ஜோன்குள்ள போய்டறீங்க. இது இந்த ரிசப்ஷன் ரூல்ஸ்க்கு எதிரானது…” என குரலை கரகரப்பாய் வைத்து சொல்ல இவன் அட்டகாசமாய் சிரித்துவிட்டான்.

“ஒன்னு பேசியே கவுக்கறது. இல்லை சிரிச்சே கவுக்கறது…” அஷ்மி சொல்ல,

“ஆனா மேடம் ப்ளாட் ஆனா மாதிரியே தெரியலையே…” இடது கையால் தலையை கோதிக்கொண்டு கழுத்தை சாய்த்து அவளிடம் கேட்க,

“டேய் நான் என்ன சொன்னேன். நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?…” என அவனின் முதுகில் தட்டினான் உதய் பிரபாகரன். திடுக்கிட்டு திரும்பிய பிரசாத்,

“பிரபா, நீ எங்கடா இங்க? உன்னை பார்க்கத்தான், நீ கிளம்பறன்னு சொல்லி எக்ஸ்ப்ளைன் பண்ணி கூட்டிட்டு வரதுக்குள்ள நீயே வந்துட்ட…” என சமாளிப்பாய் பேச,

“அதான் பார்த்தேனே நீ கூட்டிட்டு வந்ததை. கிளம்பறதை கூட எக்ஸ்ப்ளைன் பண்ணுவியா? உன் பின்னாலையே தான் நானும் வந்தேன்…” என்றதும் பிடிபட்டவனாய் புன்னகைக்க,

“சிரிச்சே மழுப்பிடு…” என்றவன்,

“ஓகே அஷ்மி எல்லார்ட்டயும் சொல்லிட்டேன். நான் கிளம்பறேன்…” என விடைபெற,

“என்ன இது? ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு தான் வந்தீங்க? வீட்டுக்கு கூட வரலை. இருந்துட்டு நாளைக்கு கூட கிளம்பலாமே?…”

“இல்லைம்மா, இன்னொரு முறை குடும்பத்தோட வீட்டுக்கு வரேன். இப்போ கிளம்பறேன். நந்தினிட்ட வரேன்னு சொல்லிட்டேன்…”

“ஹ்ம்ம் ஓகே. பார்த்து போய்ட்டு வாங்க…” என சொல்லி அஷ்மி நகர்ந்துவிட,

“வாடா, பார்க்கிங் வரை வரேன்…” என உடன் நடந்தான் பிரசாத்.

“நீ அதிரூபன்கிட்ட சொல்லிடு பிரசாத். நந்தினிக்கு இது எட்டாவது மாசம். இங்கயும் அங்கயும் அலையவேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க. நானும் வந்துட்டேன். அதனால அங்க அப்பாவும் விஷ்ணுவும் தான் பார்த்துக்கனும். குடும்பத்தோட வரனும்னு சொல்லிருந்தாங்க. நீ தான் சூழ்நிலையை சொல்லி புரியவைக்கனும். எதுவும் நினைச்சுக்காம…” என,

“அதெல்லாம் நினைக்க மாட்டங்க பிரபா. நான் பேசிக்கறேன்…” என சமாதானம் சொல்லி அவனை அனுப்பிவிட்டு போன் பேசிக்கொண்டிருந்தான்.

“அங்க பேமிலி போட்டோ எடுக்க உன்னை தேடிட்டு இருக்காங்க, இங்க என்ன பண்ணிட்டு இருக்க?…” என ரத்தினசாமி வந்து நிற்க அவரை பார்த்தவன்,

“பார்த்தா தெரியலை. கேர்ள்ப்ரெண்ட் கூட பேசிட்டு இருக்கேன்….” என கிண்டலாய் சொல்லி போனை வைத்துவிட,

“யாரு நீ? அட போய்யா…” என சிரித்துவிட்டு முன்னே நகர பிரசாத்திற்கும் புன்னகை. “இந்த மனுஷன் இருக்காரே?” என நினைத்துக்கொண்டே அவருடன் சேர்ந்து நடந்தான் பிரசாத்.

தம்பதிகளாக, பெற்றோர்களாக, பெண்களாக, ஆண்களாக, குழந்தைகளாக பின் அனைவருமாக என விதவிதமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். குடும்ப படம். ஆனால் அதில் எதிலுமே அஷ்மி, பிரசாத் இல்லாமல் இல்லை. தனத்தை கூட பத்மினியும் அகிலாவும் விடவில்லை.

இரண்டு நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. அத்தனை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் கடந்தன. விருந்தும், உபசரிப்புகளும் தடபுடலானது.

மூன்றாம் நாள் மறுவீடு சென்றுவிட்டு உடனே ஹனிமூன் சென்றுவிட்டாள் ஸ்வேதா தன் கணவனுடன். தனமும் ஊருக்கு கிளம்பிவிட்டார். அஷ்மி இன்னுமொரு நான்கு நாட்கள் இருந்து வரட்டும் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

மாலை அஷ்மியும் பிரசாத்தும், அதிரூபன் துவாரகாவுடன் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

“எங்க போறோம்னு சொல்லாம கிளம்பினா எப்படி? வர வர நீங்க கூட அஷ்மி மாதிரி செய்ய ஆரம்பிச்சுட்டீங்க…” என அதிரூபன் சொல்ல,

“சொல்லிட்டு போங்க, ஆனா எங்கன்னு அங்க போய் தெரிஞ்சுக்கோங்க…” என்றவன் ஏர்போர்ட் சென்று காரை நிறுத்த,

“டாக்டர் என்னாச்சு? இங்க எதுக்கு வந்துருக்கோம்…” துவாரகா கேட்க,

“அடி என் செல்ல முயல்க்குட்டி. இப்பவே தெரிஞ்சு என்ன பண்ண போற?…”

“ப்ச், விளையாடாத அஷ்மி. யாராவது வராங்களா? ரிசீவ் பண்ண வந்திருக்கோமா?…” அதிரூபன்,

“நேரம்டா, நான் ஏன் விளையாட போறேன். நீயும் உன் பொண்டாட்டியும் தான் ஹனிமூன் போக போறீங்க…”

“வாட்? ஆர் யூ மேட். இத்தனை வருஷம் கழிச்சு ஹனிமூன்?…” அதிரூபனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“உனக்கு மேட் தான தெரியும். ஆனா முயல்குட்டியை பாரு ஹனிமூன் சொல்லவும் பல்ப் எரியுது. ப்ளாஷ் பாரேன்…” என துவாரகாவை கிண்டல் செய்ய துவாரகாவின் முகம் இன்னும் மலர்ந்து விகசித்தது. அதை ஆர்வமாய் பார்த்தான் அதிரூபன்.

“போகலாமா?…” என கேட்க சரி என்ற தலையசைப்பு தான் துவாரகாவிடம். அதை கண்டு சத்தமாய் சிரித்தவன்,

“ஓகே அப்போ பாப்பாவை கூட்டிட்டு வந்திருவோம்…”

“ஆமா நானும் பையனை கூட்டிட்டு வரேன். பேமிலி டூர் போவோம். மக்கு மக்கு. பச்சைபட்டாணி. ஒழுங்கா இப்படியே கிளம்பற வழியை பாரு. இவளை கட்டின நாள்ல இருந்து உன் குடும்ப பஞ்சாயத்து பண்ணினது எல்லாம் போதும். இதுவரை எங்கையாவது கூட்டிட்டு போய்ருக்கியா நீ?…” என அவனிடம் பாய்ந்தேவிட்டாள் அஷ்மி. சிரிப்புடன் அதிரூபன் பிரசாத்தை பார்க்க அஷ்மியும்,

“நான் அவன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கேன் நீங்க வாய் பார்த்துட்டு இருக்கீங்க ஹஸ்?…” என அவனிடமும் காய,

“இரும்மா பாய்ன்ட் வரட்டும்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்…” என கேலியாய் பிரசாத் அஷ்மியிடம் சொல்லிவிட்டு,

“கிளம்பிடுங்க அதி. இல்லை உண்டில்லைன்னு ஆக்கிடுவா…” என ப்ரீ அட்வைஸ் குடுக்க,

“சரி சரி கிளம்பறேன். ஆனா லக்கேஜ்?…”

“அங்க போய் வாங்கிக்கோ. கிளம்பு முதல். இந்தா ப்ளைட் டிக்கெட்…” என கொடுக்கவும் வாங்கி பார்த்தவன்,

“ப்ளான் எல்லாம் இங்க வாரத்துக்கு முன்னவே போட்டாச்சு போல?…” என கேட்க,

“அதீ…….ஈஈஈஈஈஈ இன்னும் பேசிட்டு இருக்க?…” என அவனின் காதுக்குள் கத்த வேகமாய் காரை விட்டு இறங்கினான் அதிரூபன். மற்றவர்களும் இறங்க துவாரகாவை அணைத்து விடைகொடுத்தவள் டிக்கியில் இருந்த ட்ராலியையும் எடுத்துவந்து கொடுத்தாள்.

“பேக்கிங் நானே பண்ணிருக்கேன். மூணே நாள். ஆனா உங்களுக்கு மட்டுமேயான நாள். இங்க போன் எதுவும் பண்ண கூடாது. நாங்களும் பண்ணமாட்டோம். குட்டீஸ், அப்பா எல்லாம் நாங்க பார்த்துப்போம். சந்தோஷமா போய்ட்டு வாங்க….” என்றவள்,

“அதி மூணு நாள் தான். நாலாவது நாள் இங்க இருக்கனும். சொல்லிட்டேன்…” என மிரட்டலாய் அவனிடம் சொல்ல கேட்டுக்கொண்டு தலையாட்டியவன் அவளின் தலையில் ஒரு கொட்டையும் வைத்துவிட்டு துவாரகாவை அழைத்துக்கொண்டு நடக்க அஷ்மியை திரும்பி பார்த்துக்கொண்டே துவாரகா சென்றாள்.

“துவா உன்கிட்ட ஏதோ சொல்ல விருப்பபடறா போல. உன் முகத்தையே பார்த்துட்டு பார்த்துட்டு போகுது…” அங்கிருந்து கிளம்பி வீடு திரும்பிக்கொண்டிருந்தவன் காரை ஓட்டிக்கொண்டே கேட்க,

“குழந்தைகளை, அப்பாவை, அகிலா ஆன்ட்டியை இவங்களை எல்லாம் நான் எப்படி பார்த்துப்பேனோன்னு கவலை மேடம்க்கு. என்கிட்டே சொன்னா நான் எதுவும் நினைச்சுப்பேன்னு அப்படி பார்த்துட்டே போறா பொண்ணு…” என சிரிக்க அவளுடன் இணைந்து சிரித்தவன்,

“நாம எப்போ ஹனிமூன் போலாம் வெள்ளெலி?. அதை மைண்ட் பண்ணிக்கறதே இல்லை…” என சரசமாய் அவளிடம் கேட்க,

“என் மைண்ட்ல நான் என்ன மைண்ட் பன்றேன்னு உங்களுக்கு மைண்ட் பண்ண தெரியாதாமா ஹஸ்?…” அவளும் அவனை நெருங்கி அமர்ந்து தோள் சாய காரை ஓரமாய் நிறுத்திவிட்டான்.

“என்னாச்சு?…” என நிமிர்ந்தவளை கண்டு புன்னகைத்தவன்,

“போகலாம். இன்னும் போய்ட்டே இருக்கலாம். உன் கூட உன் கை பிடிச்சு ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்…” என அவளின் கண்களுக்குள் பார்த்து உருக்கமாய் பேச,

“ஆர் யூ ஓகே ஹஸ்?…” என்று குறும்பாய் கண்ணடித்தாள் அஷ்மிதா. அவளின் குறும்பில் நெற்றியுடன் தன் நெற்றி முட்டியவன் ஒற்றை முத்தமொன்றை அழுத்தமாய் ஒற்றிவிட்டு,

“உன்னோட இந்த பேச்சு தானடி என்னை கட்டி வச்சிருக்கு…” என முகம் கொள்ளா புன்னகையுடன் காரை கிளப்பிக்கொண்டு சென்றான். அவனின் தோள் சாய்ந்து அவளும் அவளின் உயிர் சார்ந்து அவனுமாய் இவ்வாழ்க்கை முழுவதும்.

வாழ்க்கை முழுவதும் தெவிட்டாத தித்திப்பாய் தேன் அள்ளி தெளிக்கும் இத்தென்றல் இளம் தென்னங்கீற்றின் வருடலாய் பிரசாத்ஷ்மி மத்தியில் குளிர்விக்கும் சுவாச காற்றாய்.

சுபம்

Advertisement