Advertisement

தென்றல் – 31(1)

ஆறு வருடங்களுக்கு பின்…

         நீண்ட நெடிய ஆறு வருடங்கள். ஆனால் நீண்டதும் தெரியவில்லை. நெகிழ்ந்ததும் எண்ணிக்கையில்லை. ஆனால் நீளமும் நெகிழ்வும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது அஷ்மி பிரசாத் வாழ்க்கையில்.

           “அஷ்மி இப்பவே எல்லாம் எடுத்து வச்சுக்கோமா. துவா கூட அங்க ஒரு வாரம் இருக்கனும். இப்பவே பேக் பண்ண ஆரம்பிச்சா தான் கிளம்பறப்போ சரியா இருக்கும். வித்து குட்டிக்கு அங்க போய் அது இல்லை இது இல்லைன்னு சொல்ல கூடாது…”

தனம் பேசிக்கொண்டிருக்க அஷ்மிக்கு புன்னகை. என்னவோ எதுவுமே கிடைக்காத ஊருக்கு பேரனை அழைத்துக்கொண்டு செல்ல போவதாக அவர் அப்பாவியாக பேசபேச இன்னும் புன்னகை தான்.

“அத்தை அவனுக்கு வித்துன்னு கேட்டுச்சு உங்களை கரெக்ட் பண்ண வந்துடுவான்…” என ரகசியம் சொல்ல,

“வரட்டுமே வந்து பார்க்கட்டுமே…” தனமும் பெருமையாய் சொல்ல,

“முதல்ல நாளை மறுநாள் ஹோமத்துக்கு ஏற்பாட்டை பார்ப்போம். நிறைய வேலையிருக்கு…”

“ஆமாமா, பூஜைக்கு உங்க வீட்ல வர சொல்லலாம்னா கல்யாண வேலை இருக்குன்னு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு வந்து போக முடியாதேன்னு சொல்லிட்டாங்க. ஹ்ம்ம்…” என பெருமூச்சு விட,

“அம்மா, அப்பா கூட தோப்புக்கு போய்ட்டு வந்துட்டேன்…” என்றபடி வந்து அஷ்மியின் காலை கட்டிக்கொண்டான் அவளின் செல்ல புதல்வன் வித்யூத்.

“வாவ், குட்டிம்மா வந்தாச்சா? நீ விட்டுட்டு போய்ட்டியா, அம்மா ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்டா…” என அவனை தூக்கி வைத்து செல்லம் கொஞ்ச,

“நான் டர்ட்டியா இருக்கும்போது என்னை லிப்ட் பண்ணாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது அம்மா? கீழே விடுங்க…” என்றான் அந்த பெரிய மனிதன்.

“அடடா, ஓகே விட்டுடலாமே. இப்ப போய் ப்ரெஷ் ஆகிட்டு வருவீங்களாம். ஓகே…”

“ஹ்ம்ம், நீங்க இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து சீக்கிரமே வந்தாச்சா?…” என கேட்டுகொண்டே அவர்கள் அறைக்குள் செல்ல,

“பின்னாடியே சுத்த விடறான். பதில் சொல்லலைன்னா அதுக்கும் சண்டை பிடிச்சு முறுக்கிட்டு நிப்பான் என் மகன். வர வர இந்த ஹஸ் ட்ரெய்னிங் ரொம்ப ஓவரா போகுது…” என புலம்பிக்கொண்டே அவன் பின்னே சென்றவள் அவனுக்கு வேறு உடையை எடுத்து வைத்தாள்.

“எங்கடா உங்கப்பா?…” என கேட்க,

“அப்பா பைக் நிறுத்த முடியாம உங்க ஸ்கூட்டியை வச்சிருக்கீங்களாம். அப்பா திட்டிட்டே எடுத்து வைக்கிறாங்க…” என அவன் போட்டுகொடுத்துவிட,

“வரட்டும் பேசிக்கறேன்…” என அஷ்மியும் பார்க்க அதற்குள்,

“வித்யூத்…” என பிரசாத் வெளியில் இருந்து அழைக்க குளிக்க உள்ளே செல்ல போனவன் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் அம்பாய் தந்தையை தேடி ஓடிவிட்டான்.

“டேய் குளிச்சுட்டு போடா…” என அஷ்மி எத்தனை அழைத்தும் ஓடிவிட அவனின் பின்னே இவளும் ஓடவேண்டியதாகிற்று.

“இப்ப என்ன அவசரம்னு இவனை கூப்பிடறீங்க? குளிச்சுட்டு தான் வரட்டுமே…” அஷ்மி பிரசாத்திடம் முறைக்க,

“குளிக்காம வந்ததுல உனக்கென்ன குறைஞ்சு போச்சாம்?…” என கேட்டு மகனுடன் ஹைபை கொடுத்துக்கொண்டான் பிரசாத்.

“என்ன இப்படி இருட்டிட்டு நிக்குது? நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வரப்போ கூட இல்லையே?…”

“உன் கிட்ட சொல்லிட்டுதான் இத்தனை நாளா வெதர் சேஞ்ச் ஆச்சாம்மா?…” என கேட்டு மீண்டும் ஹைபை கொடுக்க கடுப்புடன் உள்ளே செல்ல போனவள்,

“அத்தை…” என தனத்தை அழைத்துக்கொண்டு வந்தாள்.

“என்னன்னு கேளுங்க. ஊருக்கு போற நேரத்துல இவர் பன்ற அழிச்சாட்டியத்தை…” அஷ்மி மாமியாரிடம் சொல்ல,

“ஏன்டா உனக்கு மழையை பழக்கனும்னா நீ நனைய வேண்டிதான். எதுக்குடா வித்துவ நனைய பன்ற?…” தனம் பேச,

“அப்பா ஆச்சி சேல்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க. வித்து வித்து…” என்று தனத்தை போலவே சொல்லி காண்பிக்க பிரசாத்திற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“ஆச்சீ வித்துனா சேல். என்னை சேல் பண்ணாதீங்க. வித்யூத். சொல்லுங்க. வித்யூத்…” என ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தம் திருத்தமாய் சின்னவன் சொல்ல அவனின் வாயசைப்பிலும் முகபாவனையிலும் மயங்கிபோனாள் தாயவள்.

“லவ் யூ வித்யூத்…” என்று மகனை அள்ளி அனைத்து முத்தமிட அந்த காட்சியை காதலுடன் கண்களுக்குள் கவர்ந்துகொண்டிருந்தான் அவளின் கள்வன்.

வித்யூத் இருவரின் முழு அவதாரம் என்றே சொல்லலாம். அனைத்திலும் தாய் தந்தை இருவரையும் கொண்டே பிறந்திருந்தான். இருவரின் குணாதிசயங்களும் அட்சுபிசகாமல் மகனிடம் குடிகொண்டிருந்தது. உருவத்தில் அஷ்மியும் நடை உடை பாவனையில் பார்வையில் பிரசாத்தும்.

“அம்மா விடுங்க…” என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பெரிய பெரிய தூறல்களாக மழை பிடிக்க அடித்துப்பிடித்து ஓட்டமெடுத்து வீட்டு வாசல் கூரையுனுள் சென்று நின்றுகொண்டான் பிரசாத்.

“தூக்குதுரைக்கு வாய் தான். ஊர் பஞ்சாயத்த பேச சொல்லு. இங்க இருந்து சென்னை வரை கையும் நீளும். வாயும் அதுக்கு மேல நீளும். ஆனா ஒரு காத்து, மழைக்கு தாங்காது. சரியான புள்ளப்பூச்சி…” என சத்தமாய் அவள் சொல்ல,

“நீ பேசி முடிச்சுட்டு என்கிட்டே தானே வருவ. வச்சிக்கறேன் உன்னை…” என பிரசாத் வாயை மட்டும் அசைத்து சொல்ல அவனின் இதழ்கள் மொழிந்த வார்த்தைகள் அவனின் குரலாய் இவளுள் மழை நீரை விட ஜில்லிப்பாய் இறங்கியது.

“அம்மா லெட்ஸ் என்ஜாய்…” என மகன் அவளையும் நனைத்துவிட்டு விளையாட உள்ளே சென்ற தனம் மீண்டும் வந்தார் கைகளில் டவலுடன்.

“என்னடா அஷ்மியும் நனையுறா…” என கேட்க,

“பழகட்டும்மா. இப்போ என்ன?…” அவர்களை பார்த்துக்கொண்டே தனத்திற்கு பதிலை மட்டுமே கொடுத்தான்.

“என்னடா இது? நாளை மறுநாள் வீட்ல பூஜை. அடுத்த நாளே ஊருக்கு போகனும். திருப்பதில கல்யாணம். திரும்ப சென்னையில ரிசப்ஷன். எத்தனை அலைச்சல். சும்மாவே உடம்பு தாங்காது. இது வேறையா? இழுத்து வைக்கிற நீ…”

“அம்மா என்னவோ நானே நனைஞ்சிட்ட மாதிரி பொரியறீங்க. அதேல்லாம ஒன்னும் ஆகாது…”

“ஆமா நீ நனைஞ்சிட போற போ. வாய் தான்…” தனம் நொடிப்பாய் சொல்ல,

“வர அவர அவளை மாதிரியே கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க…” அம்மாவிடம் சண்டைக்கு கிளம்பினான். அவர் பதில் சொன்னால் தானே? கவலையுடன் பேரனை பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஓகே வித்யூத். போதும். உள்ள போகலாம்…” எனவும் மறுபேச்சு பேசாமல் தாவிக்கொண்டு தனத்திடம் சென்றான் வித்யூத். தனம் அவனை துடைத்தபடி,

“இவனை என்னோட ரூம்ல குளிக்க வச்சிடறேன். நீயும் போய் குளி. நான் ரெண்டு ரூம்லையும் ஹீட்டர் போட்டுவிட்டுட்டேன். லேசான சூட்டுல குளிக்காம பொறுக்கற சூட்டுக்கு வெளாவிக்கோ…” என்றவர் பேரனை அழைத்துக்கொண்டு சென்றுவிட ஈரம் சொட்ட சொட்ட நின்றுகொண்டிருந்தாள் அஷ்மி.

பார்க்க பார்க்க தெவிட்டாத ஓவியம் போல கண்ணெடுக்க முடியாமல் அவளை பார்த்தபடி நிற்க,

“இப்படியே நின்னா எனக்கு தான் ஜுரம் வரும். ஒரு டவல் எடுத்துட்டு வாங்க. இல்லைனா ரூம் வரைக்கும் ஈரம் ஆகிடும். நம்ம வீட்டுக்கு அவ்வளவு சீக்கிரம் காயாது. போங்க ஹஸ்…” என சொல்ல அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் பிரசாத். திகைத்துப்போனவள்,

“வர வர என்ன பன்றோம்னே உங்களுக்கு புரியறதே இல்லை…”

“புரியாமல் எதுவுமே செய்ய நான் என்ன சின்ன பிள்ளையா?. இந்த மழைக்கு நாம எப்படி நிக்கிறோம்னு பார்க்க யாருக்கும் நேரமில்லைம்மா. நீ என்னை பார். நான் உன்னை பார்க்கிறேன்…” விஷமமாய் பேச,

“விடுங்க ஹஸ், உங்க மேல எல்லாம் ஈரம் ஆகுது…” அவனை நகர்த்த பார்க்க அவனோ இன்னும் அவளுள் அடங்க பார்த்தான்.

“சொன்னா கேளுங்க…” என அவனை தள்ள,

“மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்…” என ஹஸ்கி வாய்ஸில் அவளை பாடி தன்னுடைய உணர்வுகளை அவளுள் கடத்த பார்க்க,

“இப்படி கட்டிப்புடிச்சுட்டு நின்னா கண்டிப்பா காய்ச்சல் வரத்தான் செய்யும் ஹஸ்…” என கிண்டலாய் இவள் பேச லேசாய் தாழ்வாரத்திலிருந்து ஓரம் வந்து நின்றுவிட பிரசாத்தை மழைநீர் அணைத்தது.அதை பார்த்த அஷ்மி,

“ஐயோ வாங்க உள்ள…”

“போலாமே…” என  அஷ்மியை அள்ளிக்கொண்டவன் தங்களறைக்குள் புகுந்து கொள்ள அவனின் எண்ணம் புரிந்தவள்,

“நாளைக்கு வீட்ல பூஜை இருக்கு ஹஸ்…”

“நாளை மறுநாள்…”

“இருக்குல…”

“இருந்துட்டு போகட்டும். சாமி கோச்சுக்காது…” என அஷ்மியை வாயடைக்க செய்தவன்,

“தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் நின்று நான் சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா…” அவனின் குரலில் அவனுலகிற்குள் சென்றுகொண்டிருந்தவள்,

“ஹஸ் சுடிதார் தான் போட்டிருக்கேன். சேலை இல்லை…”

“உன்னை வச்சுக்கிட்டு…” என்றபடி தன் ஆதிக்கத்தை அதிகரிக்க,

“கட்டிக்கிட்டு ஹஸ்…” அதற்குமேலும் அவளை பேசவிடவில்லை அவன்.

மறுநாள் விடியலில் இருந்தே அஷ்மி பயங்கர கோபத்திலும் கடுப்பிலும் இருந்தாள். தனத்திற்கும் கோபம் தான். ஆனால் தானும் கோபப்பட்டால் மருமகள் இன்னும் பேசுவாள் என்று அமைதியாக இருந்தார்.

“இப்ப எழுந்து இதை குடிக்கலை. மேல ஊத்திடுவேன் பார்த்துக்கோங்க…” என கத்திக்கொண்டிருந்தாள் அஷ்மி.

தனமும் வித்யூத்தும் மெதுவாய் சத்தமில்லாமல் அந்த அறையை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நேத்து அவ்வளோ சொன்னேன். கொஞ்சமாவது கேட்டீங்களா? தெரியாம பண்ணினா கேட்கலாம். தெரிஞ்சே பன்றப்போ…”

“ஹேய் வெள்ளெலி. முடியலடி…” அனத்தலுடன் பெட்ஷீட்டை இழுத்து போர்த்தி படுத்திருந்தான் பிரசாத். முகமெல்லாம் கன்றிபோய் சிவந்து சினந்து கிடந்தது. லேசாய் உடல் நடுங்க படுத்திருந்தவன் அவளை பார்த்து புன்னகைக்க,

“அப்பா, நான் சிரப் குடிச்சுட்டேன். நீங்க டேப்லட் போடுங்க…” என மகனின் குரல் வாசல் பக்கம் கேட்க அங்கே அவர்களை பார்த்தவள்,

“சின்ன குழந்தை அவன பார்த்து கத்துக்கோங்க. நான் ஊருக்கு டாக்டரா இந்த வீட்டுக்கு டாக்டரான்னே தெரியலை. உங்கள மாதிரி ஒருத்தருக்கு நான் ட்ரீட்மென்ட் பண்ணினதே இல்லை. அப்பப்பா…” என அரட்டிக்கொண்டே அவனை எழுந்து அமர வைத்தவள் மாத்திரைகளை வாயில் போட்டுவிட்டு கஞ்சிதண்ணீரை ஊற்றினாள்.

“இதுல சார்க்கு ஹாட் வாட்டர்ல டேப்லெட் போட பிடிக்காதாம்…” என பொருமிகொண்டிருந்தாள்.  உடனே அவன் படுக்க போக,

“டேப்லெட் போட்டதும் படுத்தீங்க தொலைச்சிடுவேன் பார்த்துக்கங்க. இப்பதான் சாப்பிட்டு இருக்கீங்க. டேப்லெட் போட்ருக்கீங்க. இன்னும் பத்து நிமிஷமாவது உட்கார்ந்து தான் இருக்கனும். இதை வச்சிட்டு வாரேன்…” என வெளியே வர வித்யூத் வீட்டிற்குள்ளேயே விளையாடிக்கொண்டிருந்தான்.

குற்றால சீசன் ஆரம்பித்திருந்ததால் மழை விட்டுவிட்டு பெய்துகொண்டே தான் இருந்தது.

“வித்யூத் போய் கொஞ்சம் நேரம் தூங்கும்மா…”

“அம்மா சொல்லாதீங்க. நான் பாய்…” என மகன் திருத்த,

“எனக்கு இப்பவே தலை வலிக்குது இவங்களை வச்சிக்கிட்டு…” என தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட டீயுடன் வந்துவிட்டார் தனம்.

“இஞ்சி டீ. குடி கொஞ்சம் குளிருக்கு நல்லா இருக்கும்…” என கொடுத்துவிட்டு அவரும் அமர,

“நான் பெத்தது ஒரு இடத்துல நிக்கவே மாட்டேங்குது. நீங்க பெத்தது ஒரு இடத்தை விட்டு அசைவேனான்னு இருக்குது. உங்க பிள்ளைக்கு காய்ச்சல்ன்னு வந்துட்டா எனக்கு தான் உயிர் போகுது அத்தை…” அஷ்மி சொல்ல தனத்திற்கு சிரிப்பு.

“ஏன் சிரிக்க மாட்டீங்க? இங்க நான் அவஸ்தை படறேன். சோதனை மேல் சோதனை போதுமடா சாமின்னு எனக்கு நானே பாடிக்கனும் போல இருக்கு…” என்றவள்,

“நான் போய் படுத்துட்டாறான்னு பார்த்துட்டு வரேன். இவனை எப்படியாச்சும் கொஞ்சம் நேரம் தூங்க வைங்க அத்தை…” என சொல்லிவிட்டு அறைக்குள் நுழைய அங்கே நன்றாய் உறங்கிக்கொண்டிருந்தான் பிரசாத்.

பார்த்தவளின் முகத்தில் முதலில் கோபம் வந்தாலும் பின் முறுவல் மலர கதவை அடைத்துவிட்டு அவனருகே சென்று எழுப்ப அதில் விழித்தவன்,

“படுத்துக்கட்டுமா?…” என கேட்க,

“அதான் படுத்துட்டீங்களே? இப்ப பர்மிஷன் வேறையா? இது ஓவரா தெரியலையா ஹஸ்?…” என முறைக்க,

“ரொம்ப பண்ணாதடி…” என கண்களை மூடிக்கொண்டான்.

“நாளைக்கு பூஜையை தள்ளி போட முடியாது ஹஸ். ஒழுங்கா சுறுசுறுப்பா இருங்க. எழுந்து ஹால்ல வந்து உட்காருங்க. படுத்தே இருந்தா எப்படி காய்ச்சல் விடும்?…”

“நீ தான் காய்ச்சலை குடுத்த. அதே மாதிரி எடுத்துக்கோ. சரியாகிடும்…” உல்லாசமாய் அவளை பார்க்காமல் கண் மூட்டி சொல்லியவன் அவளுக்கு அழைப்பாய் கை விரிக்க,

“நானா நான் என்ன பண்ணேன்?…” என யோசித்தவள் பின் அவன் சொல்ல வருவதை புரிந்து,

“யோவ் ஹஸ், மறுபடியும் முதல்ல இருந்தா?…” என அவனின் முதுகில் சரமாரியாக வலிக்காமல் மொத்த சுகமாய் அதனை பெற்றுகொண்டான் பிரசாத்.

மறுநாள் பூஜைக்கு உதய் பிரபாகரன் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருக்க பிரசாத்தின் காய்ச்சல் கூட கொஞ்சம் குறைந்திருந்தது. பூஜை முடிந்து வந்திருந்தவர்கள் கிளம்பும் வரை அஷ்மியினால் தன்னுள் எழுந்த படபடப்பை குறைக்க முடியவில்லை.

ஆம், பிரசாத் இருக்கும் இடத்தில் நந்தினியை பார்க்கும் நேரமெல்லாம் அவளுள் அந்நினைவுகள் எழும்பி அவளை படபடக்க செய்துகொண்டிருந்தன.

அந்த தவிப்பை அவளின் முக மாறுதலை கண்டுகொண்டவன் அந்த சிறு தவிப்பையும் அவளுக்கு தர விரும்பாதவன் இப்பொழுதெல்லாம் நந்தினியுடனான விளையாட்டுத்தனமான பேச்சுக்களை நிறுத்திக்கொண்டான்.

அஷ்மியிடம் பேசி சமாதானம் செய்திருக்கலாம் தான். ஆனால் பேச்சுக்களில் அடங்கும் விஷயமல்லவே அஷ்மியின் நுட்பமான உணர்வுகள். அவளிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் என அவனும், அவனிடம் நந்தினியுடன் பேசாதே என்று அவளும் ஒரு வார்த்தையும் கேட்கவோ சொல்லியதோ இல்லை.

இந்த உறுத்தல்கள் கசப்பாய் அடிமனதினுள் தங்கிவிட்டது. அதை கிளறாமல் இருந்தாலே போதுமானது என்று தான் இருவருமே நினைத்தனர்.

நந்தினி கூட உதயாவிடம் இதை பற்றி ஆரம்பத்தில் கேட்க அவன் எடுத்து சொல்லிய விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மாற்றிகொண்டாள். இப்பொழுதெல்லாம் பிரசாத்திடம் முகம் திருப்புவது இல்லை. அதே நேரம் அவமதிப்பாக எரிச்சலாக பேசாமல் இருந்தாலும் சகஜமாக பேசுவதும் இல்லை. என்னவேன்றான் என்ன என்பதோடு அவளின் இடத்தில் நின்றுகொண்டாள்.

மறுநாள் குடும்பத்துடன் அனைவரும் சென்னை கிளம்ப அங்கே சென்றதும் அஷ்மியை கையில் பிடிக்க முடியவில்லை. கால் தரையில் பாவாமல் தான் சுற்றிக்கொண்டிருந்தாள்.

ஸ்வேதாவின் திருமணம். மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை திருப்பதியில் தான் வைக்கவேண்டும் என சொல்லிவிட அதிரூபனும் சம்மதித்து சென்னையில் பெரிதாய் ரிசப்ஷன் வைத்துவிடலாம் என சொல்லிவிட அவனின் பேச்சிற்கு மறுபேச்சு ஏது அந்த வீட்டில்.

இப்பொழுது குடும்பத்தின் பொறுப்புகளை மொத்தமாக தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான் அதிரூபன். அனைவரின் விருப்பமும் அதுவே. ஆனால் துவாரகா விஷயத்தில் எதுவும் மாறவில்லை. ரத்தினசாமி கூட லேசுபாசாக அதிரூபனிடம் இங்கேயே வந்துவிடும் படியும், இனி எந்த பிரச்சனைகளும் வராது என்றும் சொல்லியும் அவள் இங்கே வர விரும்பவே இல்லை.

வற்புறுத்தி சொல்லவும் பயமாக இருந்தது அனைவருக்குமே. கொஞ்சம்நஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த உறவை கூட விட்டு விலகிவிடுவாளோ என்கிற அச்சத்தில் வலுத்து சொல்லவில்லை. அவளாக வரும் போது வரட்டும் என விட்டுவிட்டாலும் அவள் குழந்தை குடும்பமாய் தங்கள் வீட்டிற்குள் வரவேண்டும் என விரும்புவதை அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டே தான் இருந்தனர்.

விஷால் திருமணத்திலும் இதுதான். பிரசாத் சொல்லியதை எந்தவித மாற்றமும் இல்லாமல் விஷால் நிறைவேற்றினான். ஸ்வேதா அத்திருமணத்தில் முதலில் பெரிதாக பங்கெடுக்க முயலாமல் இருந்தால் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தான் கூட்டிலிருந்து வெளியே வந்தாள். காரணம் விஷாலுக்கு மனைவியாய் வந்த பவித்ரா.

Advertisement