Advertisement

தென்றல் – 29

              “எனக்கு தெரியும்மா. அப்பாவை பார்க்கனும்னு சொன்னார். அதுக்காக தான் வந்திருக்கார். நீங்க பேசுங்க…” என்றதோடு வேறெதுவும் அவன் சொல்லவில்லை.

பேசி முடித்து வந்த பத்மினி பிரசாத்தை பார்த்து புன்னகைத்தார். அவனெதிரில் வந்து அமர்ந்தவர்,

“ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா தம்பி?…” என கேட்க,

“நீங்க ஏன் குழப்பமா இருக்கீங்கம்மா? பிரச்சனை எதுவும் இல்லை. நல்ல விஷயமா தான் வந்திருக்கேன்…” அவரின் எண்ணவோட்டத்தை புரிந்ததை போல பிரசாத் சொல்ல,

“இல்ல அஷ்மியும் இல்லாம நீங்க மட்டும் வந்திருக்கீங்க. ஸ்வேதா ப்ராப்ளம் பிறகு இப்போதான் திரும்ப வந்திருக்கீங்க. ஸ்வேதா எதுவும் சொன்னாளா? இப்போலாம் இங்க யார்க்கிட்டையுமே எதுவுமே சொல்றதில்லை. நாங்களா தான் அவளை இழுத்து பிடிச்சு எங்கயும் கூட்டிட்டு போறோம். பேச வைக்கிறோம். இன்னும் இங்க வரலை. துவா கூட தான் இருக்கா…”

கவலையாக சொல்லியவரை பார்த்து பெருமூச்சொன்றை வெளியிட்டவன் வந்த விஷயத்தை மெதுவாய் ஆரம்பித்தான்.

“விஷால் எப்படி இருக்கான்? அவன் நார்மல் ஆகிட்டானா? ஐ மீன் எல்லார்ட்டயும் எப்படி நடந்துக்கறான்?…” என கேட்கவும் பத்மினியின் முகம் கவலையை காட்டியது.

“ஸ்வேதா அந்த பிரச்சனைக்கு பின்னால எதுவுமே சொன்னதில்லை. ஆனா ரெண்டு சின்ன பிள்ளைங்க மனசை இப்படி உடைச்சுட்டீங்க…”

“எங்க கையை மீறி நடந்த ஒன்னு தம்பி. நாங்க எவ்வளவோ சொல்லி பார்த்தோம் பூரணிட்ட. ஆனா?…” பத்மினிக்கு பேசவும் வரவில்லை இதை.

“இந்த விஷயத்தை இந்த வீட்டு பெரியவங்க நீங்க நினைச்சிருந்தா சுமூகமாவே பேசி தீர்த்திருக்கலாம். பசங்க மனசும் கஷ்டப்பட்டிருக்காது. வளரவிட்டுட்டு இன்னைக்கு வருந்தி என்ன செய்ய?…”

பிரசாத் சொல்லவும் மழுக்கென்று வந்து கண்ணீரை மெல்லிய விசும்பலுடன் துடைத்துக்கொண்டார் பத்மினி. பார்க்கவே இவனுக்கு கஷ்டமாக இருந்தது.

“சரி சங்கடப்படாதீங்கம்மா. முடிஞ்சதை பேச வேண்டாம். அதை நினைச்சுட்டு இருந்தா இதை சரிபண்ண என்ன வழியோ அது தெரியாம போய்டும்…”

“எனக்கு புரியலையே தம்பி…”

“அதி அப்பாவும் வந்திரட்டும். நான் வந்த விஷயத்தை சொல்லிடறேன்…” என கூறும் பொழுதே ரத்தினசாமி வந்துவிட்டார்.

“என்ன விஷயம்? இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?…” என மிதப்பாய் கேட்டவர் தன் இறுமாப்பு குறையாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை” என முனுமுனுத்தவன் ஏற்கனவே அப்படித்தான் அமர்ந்திருந்தான் ரத்தினசாமி வரவுமே.

“விஷயம் இல்லாமலா வருவோம்…” என பிரசாத்தும் அவரை போலவே பேச பத்மினிக்கு வியப்பாக போனது.

இத்தனை நேரம் தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவனா இவன்? என நினைத்தவருக்கு மெல்லிய புன்னகை எட்டிப்பார்த்தது. அஷ்மிக்கு சளைச்சவர் இல்லை போலவே? என நினைத்து நிற்க,

“எனக்கு குடிக்க காபி கொண்டு வா. வேணுமான்னு இங்கயும் கேட்டுக்க…” என மனைவியிடம் சொல்லி பிரசாத்தையும் கை காண்பிக்க,

“எனக்கு வேணும்னா நானே கேட்டு வாங்கிப்பேன். உங்களுக்கு வேணுமா குடிங்க…” என்னவிதமாய் சொன்னான் என்றே ரத்தினசாமிக்கும் புரியவில்லை. பத்மினியும் அதற்கு மேல் நிற்கவில்லை.

“இவன் என்னை கிண்டல் பன்றானோ?” கூர்ந்து கவனித்தார். அவர் பார்ப்பதை கண்டு இன்னமும் நன்றாக சாய்ந்து அமர்ந்து அவரை பார்த்தான் பிரசாத்.

“திமிர் புடிச்சவன். பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்க்க மாதிரில பார்க்கான்.” என நினைத்து,

“வந்த விஷயத்த சொன்னா நல்லா இருக்கும். எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. சும்மா உக்கார்ந்து நீ எப்ப சொல்லுவன்னு பாத்துட்டு இருக்க முடியாது…” விரைப்பாய் ரத்தினசாமி சொல்ல,

“அதை வந்ததுமே கேட்டிருக்கனும். பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை பார்க்கிற மாதிரி உத்து உத்து பார்த்துட்டு காபி நான் கேட்காமலே குடுக்க சொல்லிட்டு இப்ப வேலை இருக்குன்னா? சரி, ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க மெதுவா முடிச்சுட்டே வாங்க. நான் வெய்ட் பன்றேன்…”

“என்ன?…”

“ஆமா, என்னால உங்க வேலை கெடவேண்டாம் பாருங்க. அதான் போய்ட்டு வாங்க. பொறுமையா பேசலாம்…”

“என்ன விளையாடறியா?…”

“இந்த வயசுல நான் விளையாடலாம். தள்ளாத வயசுல உங்களால தான் முடியாது…”

“ஏய்…” என கோபத்தை காட்டியவர் பத்மினி வருவதை பார்த்து அடக்கிக்கொண்டார்.

“நீங்களும் உட்காருங்கம்மா…” என பத்மினியை அமர சொல்லியவன் அதிற்கு மேல் ரத்தினசாமியின் கோபத்தை அதிகரிக்காமல்,

“விஷால், ஸ்வேதா விஷயம் உங்களுக்கு தெரிஞ்சது தான். இதுல தலையிட எனக்கு கண்டிப்பா உரிமை இருக்கிறதா தான் நான் நினைக்கிறேன். இப்ப சொல்லுங்க இதுக்கு என்ன தீர்வு பார்த்திருக்கீங்க?…” என கேட்க ரத்தினசாமி திகைத்து போனார்.

“தீர்வுன்னா?…” என அவர் கேட்க பத்மினி என்ன சொல்ல வருகிறான் என குழப்பமாய் பார்த்தார்.

“இன்னும் எத்தனை நாளைக்கு ஸ்வேதா இங்க வராமலும் விஷால் எங்கயும் சேராமலும் இருப்பான்?…”

“என்ன செய்யனும்ன்ற? கொஞ்ச நாள்ல தானா சரியா போயிடும்…” இவன் ஏன் இதெல்லாம் பேசுகிறான் என்கிற எரிச்சல் வேறு அவரை கடுப்பாக்கியது.

“தானா எப்படி சரியாகும்?…”

“என்னதான் செய்யனுன்ற நீ? அதை சொல்லு. இதை பேச தான் வந்தியா?…” என பட்டென கோபமாய் கேட்டுவிட பத்மினி பதறிவிட்டார்.

“என்னங்க நீங்க? வீடு தேடி வந்திருக்கவர்ட்ட போய் மரியாதை இல்லாம. அதிக்கு தெரிஞ்சா…”

“என்ன பத்மி நீ வேற இவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு. நானே நாம பார்த்து வளர்த்த புள்ளைங்க முகத்துல கூட முழியாம வேற வேற திசையில நிக்குதுகன்னு உள்ளுக்குள்ள குமுறிட்டு இருக்கேன். இவன் என்னடான்னா வியாக்கியானம் பேசறான்…”

“இதுக்கு ஒரு நல்ல வழி சொல்லத்தான் வந்தேன். கேட்கிறதுக்கு விருப்பம் இல்லைனா நான் அதிட்ட பேசிக்கறேன். வரேன்ம்மா…” என பிரசாத் எழுந்துகொள்ள,

“அட உட்காருப்பா. நான் வேற ஒரு டென்ஷன்ல. ப்ச். உட்காரு. சொல்ல வந்ததை சொல்லு…” மகனிடம் பேசிக்கொள்கிறேன் என்று பிரசாத் சொல்லிய விதம் ரத்தினசாமிக்கு கலக்கத்தை உண்டாக்கியது.

“அது” என்னும் விதமாய் மீண்டும அமர்ந்தவன்,

“விஷாலுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடுங்க. இந்த மாதிரி இருக்கிற வீட்ல ஒரு விசேஷம் நடந்தா எல்லாமே சுணக்கமும் தீர்ந்து சந்தோஷம் வரும்னு பெரியவங்க சொல்லுவாங்க. இதை நீங்களே செஞ்சிருக்கனும். இப்போ என்ன? யார் சொல்லி செஞ்சா என்ன?…” பிரசாத் சொல்ல ரத்தினசாமியின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

“என்னதான் இந்த பிரச்சனை இப்போதைக்கு அதி சரி பண்ணிட்டார்னாலும் நாளைக்கே உங்க தங்கச்சி திரும்பவும் விஷால் ஸ்வேதா பிரச்சனையை ஆரம்பிக்க மாட்டாங்களா? அன்னைக்கு யாருமே எதிர்க்க முடியாதபடிக்கு ஏதாவது பிளாக்மெயில் பண்ணினா என்ன செய்வீங்க?…”

“இல்லை அப்படியெல்லாம் செய்ய மாட்டா. முன்ன கூட கீழே வர போக இருந்தா. இப்ப ரூம் விட்டு வெளில வரதே இல்ல…”

“அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருக்கறதால கீழே வர டைம் இல்லையோ என்னவோ?…” நக்கலாய் பிரசாத் சொல்ல,

“நீங்க சொல்றது சரிதான் தம்பி. ஆனா இதுக்கு விஷால் சம்மதிக்கனுமே?…”

“கண்டிப்பா, பேசற விதமா பேசினா சம்மதிக்காம எங்க போவான்? பேசலாம்…” பிரசாத் நம்பிக்கையாய் சொல்ல ரத்தினசாமிக்கும் இந்த யோசனை சரியென்றே தோன்றியது. ஆனாலும் இதை காண்பித்து கொள்ளாமல்,

“நீ சொல்ற மாதிரி இதை எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு செய்ய முடியாது. முக்கியமா அதிபன்கிட்ட பேசனும். விஷால் நாங்க சொல்றதை மீறும் பிள்ளை கிடையாது. நான் கிழிச்ச கோட்டை மட்டுமில்ல நினைச்ச கோட்டை கூட தாண்டமாட்டான்…” பெருமையாய் தாடையை தடவியபடி அவர் சொல்ல,

“ஆமாமா, அது தான் எனக்கு நல்லா தெரியுமே…” என்றவனின் இதழ்கள் புன்னகைக்க துணுக்குற்றது ரத்தினசாமியின் மனம்.

“ஆஹ இவனுக்கு எல்லாத்தையும் அந்த திமிர்ப்புடிச்சவ ஓதிட்டா போல. இருக்கட்டும்.” என பார்த்தவர்,

“புரிஞ்சா சரி…” என சொல்ல,

“நான் கிளம்பறேன்மா…” என்று எழுந்துகொண்டான்.

“இருந்து சாப்பிட்டு போகலாமே தம்பி? கொஞ்சம் இருங்க, இதோ ரெடி ஆகிடும்…” பத்மினி சொல்ல,

“இப்பவே டைம் ஆகிடுச்சு. நான் அதியை பார்த்துட்டு அப்படியே ஊருக்கு கிளம்பறேன்ம்மா…”

“அடுத்த முறை வரப்ப அஷ்மியை கூட்டிட்டு அம்மாவோட வாங்க தம்பி…”

“விஷால் கல்யாணத்துக்கு வந்திருவோம். சரியா?…” என்றவன் ரத்தினசாமியை பார்த்து தலை அசைக்க,

“இவன் வாய திறந்து சொல்ல மாட்டானாமா? வாரது, வாய்க்கிறதெல்லாம் இப்படியா தான் சேருதுக…” என கருவிக்கொண்டவர்,

“ஆங் ஆங், கிளம்பு…” என கெத்தை விடாமல் பார்த்திருக்க சிரித்துவிட்டான் அவர் பார்வையில்.

“சரிங்கம்மா. சீக்கிரமே ஊர்ல மாமாவோட பரம்பரை வீட்டு விசேஷத்துக்கு எல்லாரையும் அழைக்க குடும்பத்தோட வருவோம்…”என சொல்லிவிட்டு சென்றுவிட்டான். வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்த பத்மினி,

“வயசானாலே இப்படித்தான் போல? கொஞ்சமாவது மரியாதையா பேச தெரியுதா? அவர் நம்ம பையனோட நன்மைக்கு வந்து பேசிட்டு போறார். அதுக்காவது மதிக்க தோணுதா? இத்தனை வருஷம் என்னத்த அரசியல் பண்ணுனீங்களோ? கடவுளே?. உங்களால தான் சாப்பாடும் வேண்டாம்னு போய்ருப்பார்…” என திட்டிவிட்டு செல்ல,

“நானா? ஒன்னும் செய்யலையே? பேசினேன்ல. நான் என்ன பண்ணேன்? ஏய் பத்மி, இங்க வா…” என கத்த பத்மினி கண்டுகொள்ளவே இல்லை.

“என் உசுர வாங்கன்னே வந்து சேர்ந்திருக்குதுங்க. பொண்டாட்டி புருஷன் ரெண்டும் மதிக்கிறதில்ல. இப்ப அதுகளோட சேர்ந்து வீட்டாளுங்களும் பேச்சை கேட்கிறதில்ல. எல்லாம் என் நேரம்…” என புலம்பிக்கொண்டு இருக்க பிரசாத் அதியிடம் அவனை பார்க்க பேக்டரிக்கு வருவதாய் சொல்லிவிட்டான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அதிரூபன் அலுவலக அறையில் பிரசாத் எதிரில் விஷால். வந்ததிலிருந்து நலம் விசாரித்தலோடு வேறெதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான் விஷால்.

அவனை பார்வையால் அளவெடுத்துக்கொண்டிருந்தான் பிரசாத். பார்த்தவனுக்கு அவனின் தோற்றம் ஒப்பவில்லை. காடென தாடி வளர்ந்திருக்க முகம் கறுத்துவிட்டு கண்கள் இடுங்கி உடல் மெலிந்துபோய் இருந்தான். இவனா விசால என்னும் அளவிற்கு தோற்றம் மாறிப்போய் இருந்தது.

“எவ்வளவு நேரம் சைலன்ட் மெய்ண்டெய்ன் பண்ணுவ விஷால்?…” தனக்கு பிரசாத் பேச்ச துவக்க,

“இல்லை பேசணும்னு வர சொன்னது நீங்க. என்ன விஷயம்னு நீங்க தானே சொல்லனும். அதான் வெய்ட் பண்ணினேன்…” மிக மெல்லிய குரலில் அவன் சொல்ல,

“ரொம்ப நேரம் வெய்ட் பண்ண கூடாது. இன்னைக்கு முழுக்க நான் பேசாம இருந்தா பேசற வரைக்கும் வெய்ட் பண்ணியிருப்பீங்களா?…” என கேட்க,

“அது வந்து…”

“முடியாதுல்ல. நாம ஒரு பாதையை நோக்கி போறப்ப அந்த பாதையில் நம் காத்திருப்புக்கான வேல்யூ ஒரு இடத்துல இல்லைன்னா அந்த பாதையை தவிர்த்துட்டு வேற ஒரு வழியை தேடியோ இல்லை உண்டாக்கிட்டோ நாம போய்ட்டே இருக்கனும்…”

“என்னைக்கும் தேங்கும் ஒரே இடத்தில் குட்டையா இருக்க கூடாது. அருவியா, ஆறா ஓடிட்டே இருந்த தான் எந்த குப்பையும் சேராது. ஒரே இடத்துல குட்டையா இருந்தா அந்த தண்ணீர் நாளுக்கு நாள் அசுத்தமாகி யாரோட பயன்பாட்டுக்கும் பிரயோஜனமில்லாம போறதோட அது மூலமா நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் கேடு தான்…”

“நீங்க என்ன சொல்ல வரீங்க? எனக்கு புரியலை…”

“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? ஸ்வேதாவை ஹர்ட் பண்ணிட்டோமேன்னா? இல்லை ஏதாவது லவ் பெயிலியரா?…” இதை கேட்கும் பொழுது விஷால் முகத்தில் வலி ஒன்று பரவி மறைய அது பிரசாத்தினுள் அதிர்வை உண்டு செய்தது.

“இவன் இன்னும் அஷ்மியை நினைத்துக்கொண்டு இருக்கிரானா?” என்கிற எண்ணம் அத்தனை உவப்பானதாய் இல்லை.

“சொல்லுங்க விஷால்…” பிரசாத்தின் குரல் அவனறியாமல் படபடப்பாய் ஆனது.

“லவ், இனி அதை பத்தி பேச ஒரு யூஸும் இல்லை. பேசவும் கூடாது. இது இது எனக்கு நானே குடுத்துக்கற தண்டனை. நீங்க அன்னைக்கு சொன்னது சரிதான். வீட்ல நடந்த அந்த பிரச்சனையில ஸ்வேதாவை மேரேஜ். ப்ச் இப்ப இதை சொல்ல கூட எனக்கு வாய் கூசுது. ஆனா நான் அப்படி சொன்னதால அவ என் பக்கம் கூட திரும்ப மாட்டேன்றா…”

“எனக்கு அவளுக்குமான ரிலேஷன்ஷிப் அப்படிப்பட்டதில்லை. எனக்கு மட்டுமல்லை. எங்க வீட்லையே சின்ன  கஷ்டத்தை கூட அவளை நாங்க அனுபவிக்க விட்டதில்லை. ஆனா அதுக்கு எல்லாம் மொத்தமா நான் அவளுக்கு பெரிய வேதனையை குடுத்துட்டேன்…”

“என்கிட்டே அத்தனை கெஞ்சி கேட்டா முடியாதுன்னு சொல்லுன்னு. நான் மறுத்து எதுவுமே பேசலை. அவளுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும். இப்பவும் என் முகத்துல கூட முழிக்கமாட்டேன்னு ஒதுங்கி ஒதுங்கி போறா. அவளோட இந்த நிலைக்கு நான் தானே காரணம். அதான் எனக்கு நானே…” அவன் பேசி முடிக்க பிரசாத்திற்கு ஒருவித நிம்மதி.

“ஓஓஹோ அப்போ இப்படியே இருந்தா ஸ்வேதா சரி ஆகி உன்னோட பேசிடுவாளா? முட்டாள் தனமா இல்லையா?…”

“நான் என்ன தான் செய்யறது?…”

“ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. உன் கல்யாணத்துக்கு ஸ்வேதாவை உன் தங்கச்சி ஸ்தானத்துல துணை முடிச்சு போட வை. நீயும் உன் வொய்பும் உங்க வீட்டுக்குள்ள வரப்ப அவளை ஆரத்தி கரைக்க சொல்லு. அண்ணியை வரவேற்க ஸ்வேதா எல்லாத்தையும் மறந்து வீட்டுக்கு கண்டிப்பா வருவா…”

“என்ன?…” இவன் வாய்பிளந்து பார்க்க,

“ஏன் கல்யாணமே செஞ்சுக்காம பிரம்மச்சாரியா வாழ போறியா?…”

“இல்ல அப்படி இல்ல..” விஷால் திணற,

“சில சுபகாரியங்கள் மனகசப்புகளை ஓட்டிடும். என்னைக்கா இருந்தாலும் சம்சார வாழ்க்கையில் நீ வர தான் போற. அதை ஏன் தள்ளி போடனும்? வீட்ல நான் ஏற்கனவே பேசிட்டு தான் வந்திருக்கேன். பொண்ணு பார்த்தாங்கன்னா வேண்டாம்னு சொல்லாதே. பார்க்கிற பொண்ணுல எந்த பொண்ணை பிடிச்சிருக்கோ சந்தோஷமா கல்யாணம் செஞ்சுக்கோ…”

“நான் யோசிக்கனும்…”

“தாராளமா யோசி. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையா இருக்கேன்னு நினைக்காதே. ஸ்வேதாவும் நீயும் சகஜமாக இது ஒரு வாய்ப்பு. ஏற்கனவே உங்க பெரியப்பா அதி, துவா மேரேஜ்ல அவங்களை மீறி நடந்த சில விஷயங்களால இன்னும் அதை நினைச்சுட்டு இருக்காங்க…”

“இல்ல அப்படியெல்லாம்…”

“எனக்கு தெரியும் விஷால். இப்ப நடக்க போற உன் கல்யாணம் அவங்களுக்கும் உனக்கு பிடிச்ச மாதிரி நிறைவா நடக்கட்டும். இதுல துவாவும் துவா அம்மாவும் உங்க குடும்பத்தோட இன்னும் கொஞ்சம் ஒட்டி வரலாம். அதுக்கு பெரியவங்களை விட பசங்க உங்க பங்கு தான் ரொம்ப முக்கியம். உங்க குடும்பத்தோட மூத்த மருமகள் துவாரகா. அந்த மரியாதையை முழுமையா நீங்க எல்லாரும் தான் தேடி தரனும்…”

“குடும்பம் ஒன்னாகனும்னா சின்னவங்கன்னு ஒதுங்கி இருக்காம முயற்சி பண்ணுங்கப்பா. உங்களுக்கு எல்லா விதத்திலையும் நானும் அஷ்மியும் துணையா நிப்போம்…” பிரசாத் பேச பேச விஷாலுக்குள் ஒருவித வெளிச்சம் பரவியது.

“புரியுது. நீங்க சொல்றதை கண்டிப்பா ஏத்துப்பேன். ரொம்ப தேங்க்ஸ்…” என்ற விஷால் பிரசாத்தை அணைத்துக்கொள்ள,

“பொண்டாட்டிய தவிர மத்த எல்லாரும் பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப்புடிக்கிறாங்கைய்யா.” என நினைத்தான்.

விஷால் அங்கிருந்து தெளிந்த மனநிலையுடன் செல்ல அந்த அறைக்குள் வந்தான் அதிரூபன்.

“தேங்க்ஸ் பிரசாத். இதை நான் அவன்கிட்ட பேசியிருந்தா நிச்சயம் இதையெல்லாம் சொல்லியிருப்பானான்னு தெரியலை. நீங்க அழகா பேசி அவனை யோசிக்க வச்சுட்டீங்க. அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டேன். இனி நான் பார்த்துக்கறேன்…”

“தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதீங்க. நான் கிளம்பறேன். இப்பவே லேட். அஷ்மி வெய்ட் பண்ணிட்டு இருப்பா…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தும் கிளம்பிவிட அதிரூபன் அடுத்து விஷாலுக்கு என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

பிரசாத்தின் கார் குறிஞ்சியூர் அருகே சென்றுகொண்டிருந்தது. எத்தனை வேகமாக வந்தாலும் மாலை மயங்கிவிட்டது. லேசாக இருள் பரவ துவங்க அஷ்மி அழைத்துவிட்டாள்.

“காலையில இருந்து தரை பன்றேன். வெறும் மெசேஜ். உங்களை என்ன தான் ஹஸ் செய்ய?…” என்றவளின் திட்டுகளை வாங்கிவிட்டு நடந்த ஒவ்வொன்றையும் அவளிடம் விளக்கிக்கொண்டே வந்தவனின் பார்வை கூர்மை அடைந்தது.

“அஷ்மி. அஷ்மி…” என்ற பதட்டமான குரலுடன் அலறியவன் மொபைல் எங்கோ சென்று விழ அவளின் குரல் இவனை எட்டவே இல்லை.

Advertisement