Advertisement

தென்றல்  – 26(2)

“இப்போலாம் ரொம்ப பேசற ஹஸ் நீ…” என்றதற்கு அவளின் விழிகளை அவன் ஊடுருவ,

“என்ன சைட் அடிக்கிறியா?…”என்றவளை பார்த்தவனுக்கு அந்த தனிமை ஏகாந்தத்தை கொடுத்தது.

புல்லாங்குழலின் துளையில் இருந்து கிழித்துக்கொண்டு வரும் நாதத்தை போல தித்திக்கும் தென்றலாய் அவள் மீதான நேசம் அவனின் அடிமனதிலிருந்து எழுந்தது.

“அடிக்கலாம் தான். இந்த பொண்ணுக்கு ஓகேனா அடிக்கலாமே…” என்று கண்ணடிக்க,

“எனக்கு கை நீளம் தெரியும்ல. பேச்சு எல்லையை தாண்டுதே…” என்றவளின் தோளின் இருபுறமும் கை போட்டு தன் கைவளைவிற்குள் கொண்டுவந்தவன்,

“நீளமா இருந்து என்ன யூஸ்? என்னை கட்டிப்பிடிக்கலை. அணைக்கலை. சோ கொஞ்சம் நீளம் கம்மிதான் வெள்ளெலி…” கிறக்கமாய் ஒலித்த அவனின் குரலில்,

“உன் வாய்ஸ் ஏன் இப்படி மாறிட்டே வருது?…” என்றதற்கு அவன் சிரிக்க,

“என்ன பேசிட்டு இருக்கும் போதே பீப்பி ஊதற? இங்க பாரு, எப்ப பார்த்தாலும் நான் சீரியஸா பேசறப்ப எல்லாம் என்னை டைவர்ட் பண்ணிடற.  ஹஸ் என் பொறுமையை சோதிக்காத…” எச்சரிக்கையாய் இத்தனை பேசினாலும் அவனை விட்டு விலகத்தான் அவள் முயலவே இல்லை.

“சரி சிரிக்கலை. சொல்லு…” முகத்தில் அந்த கள்ளப்புன்னகையும் களவாடும் காந்தப்பார்வையும் மட்டும் குறையவே இல்லை.

“ப்ச், ஒரு டாக்டருக்கு செல்ப் கன்ட்ரோல் எவ்வளோ இம்பார்டேன்ட் தெரியுமா? எமோஷன்ஸ் ஹேண்டில் பண்ணனும். ஆனா இன்னைக்கு உன்னால நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருக்கேன். ஹாஸ்பிட்டல் விட்டு கிளம்பிட்டேன் உன்னை பார்க்க…” அவனின் கையை தட்டிவிட்டு திரும்பி நகர அவளின் கை பிடித்து இழுத்து நிறுத்தியவன் தன்னருகே கொண்டுவந்தான்.

“டாக்டர்ஸ்க்கு மட்டுமில்லை வெள்ளெலி, ஹஸ்பன்ட்ஸ்க்கு கூட செல்ப் கன்ட்ரோல் ரொம்ப முக்கியம் தான்மா. எங்களுக்கும் கூட எமோஷன்ஸ் ஹேண்டில் பண்ண தெரியனும் தான். இது ஒரு பெரிய விஷயமா?…” என்று அவளை சீண்ட,

“உனக்கென்னைய்யா?…” எரிச்சலாய் அவள் கேட்க அவளின் இடையில் அழுத்தம் கூட்டியவன்,

“பின்ன கண்ணுமுன்னாடி உன்னை வச்சிட்டு? ப்ச், என்னோட கன்ட்ரோலை நான் என்ன சொல்ல?…” என்று ஹஸ்கி வாய்ஸில் பேச வாயடைத்துப்போய் நின்றாள் அஷ்மி.

அவளின் பார்வையில் அவனாகவே அவளை விட்டு விலகியவன் கதவை திறந்துகொண்டு வெளியில் வந்து நின்றான். ஆண்மகன் அவனின் வெட்கம் அத்தனை அழகாய் இருந்தது.

மூச்சை ஆழமாய் இழுத்துவிட்டவன் திரும்பி அவளை பார்க்க கதவில் சாய்ந்து நின்றவள் அவனை பார்த்து சிரித்தாள்.

“ஹஸ் கழுதை வயசுல வெட்கத்தை பாரு…” என அஷ்மி கிண்டல் பேச பிரசாத்தின் முகத்தில் அப்பட்டமாய் அகன்ற புன்னகை. வாய் விட்டு சிரித்தவன்,

“இன்னும் என்னதான்டி உனக்கு வேணும்? எத்தனை நாள் இப்படியே இருக்க?…” என்றதும் முகம் சோபை இழந்து போனது அஷ்மிக்கு. மெதுவாய் அவனின் அருகே வந்து கை கோர்த்து தோள் சாய்ந்தவள்,

“ஹ்ம்ம் தெரியலை. இங்க இப்படியே வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு என்னோட மனசெல்லாம் கொண்டாட்டம் போடுது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல நாம வாழனும். இந்த நிமிஷம் உனக்குள்ள நான் அடங்கி போய்டனும்னு ரொம்பவே பேராசையா இருக்கு ஹஸ். ஆனா முடியலை…”

கையில்லாத பனியனில் அவளின் விரல்கள் கொடுத்த அழுத்தம் அவனுக்கு வலியை தரவில்லை. பேசட்டும் பேசாமல் மூடி வைத்திருக்க உள்ளுக்குள் புகைந்துகொண்டே தான் இருக்கும். பேசட்டும் என்று அப்படியே அவளின் தலை மேல் தன் தலையை சாய்த்துகொண்டான் ஆதரவாய்.

“என்னால முடியலைங்க. விஷால் செஞ்ச தப்பை தட்டி கேட்டேன். அவனை தள்ளி வச்சேன். என் எதிர்க்க பேச கூட அவனை நான் அனுமதிக்கலை. தப்பு யார் பண்ணினாலும் தப்புதான்னு பேசினேன். ஆனா அதே மாதிரி ஒன்னை நீ பண்ணியிருக்க. என்னால உன்னை வெறுக்கவும் முடியாம சேரவும் முடியாம நரகம்…”

“அஷ்மி…” அவளின் கைகளுக்கு அழுத்தம் கொடுக்க,

“என் லைப்ல இந்த வாரம், இது வராமலே போய்ருக்கலாம். உன் லைப்லையும் அருவியூர் நீ போகாமலே இருந்திருக்கலாம். நடந்திருச்சு. புரியுது. ஆனாலும் இந்த ஸ்டுப்பிட் தாட் வராம இருக்கமாட்டிங்கே?…” தவிப்புடன் அவள் சொல்ல அவளின் இதழ்களை விரல்கொண்டு பூட்டியவன் அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு வெளிப்பக்கமாய் இருந்த படிக்கட்டு வழியாக மாடிக்கு செல்ல பதில் பேசாமல் ஒண்டிக்கொண்டாள்.

அங்கே பாதி வீடாகவும் பாதி இடம் காலி மெத்தாகவும் இருக்க காலி இடத்தில் மரத்தின் நிழல் விழ ஈஸிசேரில் அவளை அமர்த்தியவன் மடக்கு கட்டில் ஒன்றை கொண்டுவந்து போட்டு தலையணை போர்வையை போட்டு அங்கே கை நீட்ட மறுக்காமல் சென்று படுத்துக்கொண்டாள். அவளருகே அமர்ந்தவன் நெற்றியில் இதழ் பதிக்க விழிகள் தளர்த்தி அதை அஷ்மி வாங்கி கொள்ள,

“இங்க பார் அஷ்மி, ஒரே ஒரு விஷயம் நான் எக்ஸ்ப்ளைன் பன்றேன். இதுக்கு மேல இதை பத்தி நான் பேசவே மாட்டேன். இதுதான் லாஸ்ட்…” அழுத்தமாய் அவன் சொல்ல விழி மலர்த்தி அவனை பார்த்தாள்.

“நந்தினியை நான் விட்டுகுடுக்க முடியாதுன்ற ஓர் எண்ணம் எனக்குள்ள இருந்திருந்தா அவளை பிரபாவோட சேர்த்துவைக்க நான் மெனக்கெட்டிருக்க மாட்டேன். அவன் காப்பாத்தன்னு தானே தாலி கட்டினான்னு அதை மீற என்னால முடியாதா என்ன? எப்படியாவது அவளோட சேரனும்னு நினைக்கவே இல்லை. எனக்கு அவ வேணும்னு எண்ணம் வரலை…”

“மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு வந்து நின்னா ரசிக்க தான் செய்வாங்க. எனக்கும் அது மாதிரி தான். அவ மேல வந்த ஈர்ப்பு வந்த வேகத்துல மறைஞ்சு போய்டுச்சு. துளி கூட அவளை மிஸ் பண்ணிட்டோமேன்னு நான் பீல் பண்ணினது இல்லை. அவ கிட்ட இப்படி நடந்துக்கிட்டோமேன்னு இப்ப வரைக்கும் நான் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்…”

“உனக்கு எப்படி புரிய வைக்கன்னு நான் தவிச்சிட்டு இருக்கேன்டி. என்னமோ உண்மையை மறைச்சேன் மறைச்சேன்னு சண்டைகோழி மாதிரி சிலுத்துக்கற? உன்னை மிஸ் பண்ணிட கூடாதுன்றதனால மட்டும் தான் உண்மையை சொல்லாம நான் மறைச்சேன். இது கூட உனக்கு புரியலை…”  என கோபமாய் சொல்ல கண்களை மூடிக்கொண்டாள்.

“ஏய் கேளுடி வெள்ளெலி. எப்ப பார்த்தாலும் நொய்நொய்யின்னு கேட்டுட்டே இருப்ப? இப்ப மட்டும் என்னவாம்?…” என்று அவளின் கன்னம் பற்றி கேட்க,

“தூக்கம் வருது ஹஸ்…” என்று அசால்ட்டாய் அவள் சொல்ல,

“மனுஷனை சீரியஸா பேசவே விட்டுடாத. நீ இருக்க பாரு…” என்று அவளின் தலையை பிடித்து ஆட்ட முகத்தில் நிறைந்த புன்னகையோடு உறங்க ஆரம்பித்தாள் அஷ்மி. சிறிது நேரம் அவளையே பார்த்திருந்துவிட்டு எழுந்து கீழே வந்தான்.

தோப்பில் இருந்தவர்களை அழைத்து பால்ப்பண்ணையில் பால் வாங்கிவரும் படி சொல்லிவிட்டு மீண்டும் வந்தவன் தோப்பில் நடப்பவற்றை பற்றி தனத்திற்கு அழைத்து கேட்டுக்கொண்டிருந்தான்.

மாலை கவிழ்ந்தது. சிலுசிலுவென காற்றடிக்க நன்றாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அஷ்மிதா. அவளாக வருவாள் என்று பார்க்க அவனாக சென்று தான் எழுப்பவேண்டியதாக போனது.

“இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேனே?…” என்று புரண்டு வந்து அவன் மடியில் படுத்துக்கொண்டு அவனின் இடுப்பை வளைத்துக்கொள்ள,

“ஓவரா பன்றடி. முதல்ல எழுந்து ப்ரெஷ் ஆகிட்டு வா. டீ குடிக்கலாம்…” என சொல்லவும் வேகமாய் தலை உயர்த்தியவள்,

“ஹஸ் இத்தனை நாள்ல உனக்கு டீ போட வரும்னு சொன்னதே இல்லையே…” என வேகமாய் எழுந்தவள்  அவன் சொன்னது போல வந்து டீ குடிக்க அமர்ந்தாள்.

அதனோடு வாழை இலையில் காரமாய் வெங்காய போண்டாவும் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியுடன் கமகமக்க ருசி அள்ளிக்கொண்டு போனது.

“வாவ், செம்ம டேஸ்ட்…” என சில்லாகித்துக்கொண்டே  அவள் உண்ண சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“இது இங்க ஒரு டீ கடையில வாங்கினது. ரொம்ப சுத்தமா செய்வாங்க. நல்லா தான் இருக்கும்…” என அவளுடன் பேசிக்கொண்டே உண்டனர்.

பிரச்சனைகள் தீரவில்லை. பேசி தீர்க்கப்படவும் இல்லை. ஆனால் அதை கடந்துவர நினைத்தனர் இருவருமே.

“இலகுவில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் இவளின் தன்மையே இலகுவில் எதையும் மறக்கவோ மன்னிக்கவோ விடுவதில்லை என்பதை முழுதாய் புரிந்திருந்தான் அவன்.

நெஞ்சை அறுக்கும் நினைவுகள் நினைவில் வரும் பொழுதெல்லாம் அவற்றை எதிர்க்கொள்ள தன் மனதை வலிமையாக்க முயன்று தன் காதலை அந்த வலிமைக்கு வித்திட்டாள் அவள்.

ஆனால் இன்னும் இதை அழுத்தமாய் பேசி தீர்த்து இருக்க வேண்டுமோ? பேசவில்லை. பேசியிருக்கலாம்.

“டீ இன்னும் கொஞ்சம் வேணுமா அஷ்மி?…” என்றவனிடம் இல்லை என தலையசைக்க,

“சரி கிளம்பலாமா?…” என கேட்டதற்கு பதில் சொல்லவில்லை அவள்.

“அஷ்மி…” அழுத்தமாய் அழைக்க,

“இன்னைக்கு இங்கயே இருக்கலாமே. அத்தையை வேணும்னா இங்க வர சொல்லிடுவோம்…” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பிரசாத்தின் மொபைல் இசைத்தது.

“லக்ஷ்மிம்மா கூப்பிடறாங்க…” என சொல்லி அழைப்பை ஏற்க,

“பிரசாத், அஷ்மி இருந்தா கூட்டிட்டு கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா. கௌரிக்கு முடியலை. பெருமாள் அண்ணன் வேற இங்க இல்லை…” என பதைபதைக்க,

“இதோ கிளம்பிடறோம் லக்ஷ்மிம்மா…” என்றவன் அஷ்மியிடம் விஷயத்தை சொல்ல அவள் வேகமாய் உள்ளே சென்று தன்னுடைய பேக் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

“ஹஸ் வாங்க…” என பிரசாத்திற்கு முகமே சரியில்லை. இப்பொழுது தான் அவளிடம் பேசியிருக்கிறோம். மறுபடியும் முதல்ல இருந்தா? மீண்டும் நந்தினியை பார்த்து ஏதாவது குழப்பம் வந்தால் என்று நினைக்க அவனை புரிந்தவளாக,

“ஹஸ் இப்ப நான் ஒரு டாக்டர். பர்சனல் ப்ராப்ளம்ஸ் எதுக்கும் இங்க இடம் கொடுக்க கூடாது. கோ பாஸ்ட். க்விக்…” என்றதும் வேகமாய் சென்றவன் உடையை மாற்றிக்கொண்டு வந்தான்.

உதய்பிரபாகரன் வீடு நோக்கி சென்றனர் பிரசாத்தும் அஷ்மிதாவும்.

வீட்டில் அனைவரும் இவர்களுக்கு காத்திருக்க அங்கே மித்ரநந்தினியும் இவர்களுக்காய்.

Advertisement