Advertisement

தென்றல்  – 26(1)

              பிரசாத் வண்டியை கிளப்பியதில் அவன் முதுகில் ஒன்றியவள் கண்களை மூடிக்கொண்டாள். வெகுநேரம் தூரமாய் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து கண்களை திறந்தவள் போகும் திசை அறிந்து மீண்டும் சாய்ந்துகொண்டாள் அவன் மீது.

இருவரும் வந்து சேர்ந்தது பிரசாத்தின் பண்ணை வீடு. அவர்கள் ஊரைவிட்டு விலகி பலவருடங்கள் வாழ்ந்த வீடு. அஷ்மி திருமணத்திற்கு பின்னால் ஒரே ஓர்முறை அங்கே வந்திருக்கிறாள்.

இன்று இங்கே வந்ததும் உண்மையில் நிம்மதியாகவும் உணர்ந்தவள் வீட்டின் முன்னால் இருந்த அகன்ற திண்ணையில் சென்று அமர்ந்தாள். அவளை பார்த்துக்கொண்டே தன் மொபைலை எடுத்தவன் தனத்திற்கு அழைத்தான்.

“அம்மா, நானும், அஷ்மியும் பண்ணை வீட்டுக்கு வந்திருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு குடுத்துவிட்டுடுங்க. பொன்னு வீட்டுக்காரன் வருவான். அவன்கிட்ட குடுத்துவிடுங்க…”

“என்னடா திடீர்ன்னு? திரும்பவும் சண்டையா? வீட்டுக்கு வரமாட்டேன்னு முரண்டு பிடிக்கிறாளா? காலையில நல்லா தானே கிளம்பி போனா. நீ எதுவும் வம்பா பேசினியா?…” என பதட்டமாய் தனம் கேட்க,

“எனக்கு தேவை தான். கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பான்னு அவளை இங்க கூட்டிட்டு வந்தா நீங்க என்னமோ கொடுமைக்காரன் ரேஞ்ச்ல என்னை பேசறீங்க…” அவரின் படபடப்பில் இவன் கோபமாய் பேச,

“இப்ப என்னடா கேட்டேன்?…”

“ஒன்னும் கேட்க வேண்டாம். சாப்பாடு குடுத்துவிட்டா விடுங்க. இல்லைன்னா நான் பார்த்துக்கறேன்…” என்று வைத்தவன் எரிச்சலுடன் ஸ்கூட்டியின் மீதே சாய்ந்து நிற்க,

“ஹலோ எப்ப பார்த்தாலும் சும்மா அவெஞ்சர்ஸ் மூவி க்ளைமேக்ஸ் பார்க்கற மாதிரி அட்டேன்ஷன்லையே இருக்காதீங்க. முகத்துல துளி சிரிப்பு இல்லை…” என நக்கலாக அவனை பேச அதற்கும் முறைத்தவன்,

“வா உள்ள போகலாம்…” என்று சொல்லி அவளை தாண்டிக்கொண்டு நடக்க,

“இன்னை, நான் இங்கயே இருக்கேன். எனக்கு உள்ள வர வேண்டாம். இங்க தான் காத்தோட்டமா இருக்கு…” என்றவள் தன் சுடிதாரின் துப்பட்டாவை கழுத்தின் இருபக்கமும் போட்டு முன்பக்கமாக எடுத்து விட்டிருந்தவள் எழுந்து வீட்டை சுற்றி சுற்றிவர ஆரம்பித்தாள்.

வெயில் சுள்ளென்று அடித்தாலும் வீட்டை சுற்றி கொஞ்சமும் வெயிலின் தாக்கம் இல்லை. அடர்ந்த மரங்களுக்கு நடுவே ரம்யமாய் வீற்றிருந்தது அந்த வீடு. எவருமில்லாத தனிமை அதுகொடுத்த கிளர்ச்சி மனதிற்கு பிடித்தவன் கைக்கெட்டும் தூரத்தில். அந்த நிமிடம் இங்கேயே இருந்துவிடமாட்டோமா என்று தோன்ற ஆரம்பித்தது அஷ்மியின் மனதில்.

வெகு தூரத்தில் தோப்பில் தென்னைமட்டை வெட்டும் சத்தம் கேட்க அவர்கள் தோப்பில் தான் என்று புரிந்தது. தோப்பில் வேலை செய்யும் இருவர் பகலில் அங்கேயே தங்கிக்கொண்டு இரவில் வீட்டிற்கு காவலாய் இருந்து வருகின்றனர்.

பிரசாத் மட்டும் அடிக்கடி வருவான் இங்கே. ஆனால் தனம் வந்தால் ஒருமணி நேரம் கூட அவரை இருக்கவிடமாட்டான். இங்கேயே மீண்டும் வந்துவிடுவோமா என கேட்டுவிடுவாரோ என்கிற பயம் இன்னமும் அவனை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது.

இன்று அஷ்மியுடன் இங்கே இருக்கவேண்டும் போல தோன்ற அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.

கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல தனம் அழைத்துவிட்டார் அவனை. போனை எடுத்தவன் பதில் பேசாமல் காதில் வைத்திருக்க,

“உன் திமிருக்கு உன்னை…” என கோபமாய் ஆரம்பித்தவர்,

“சாப்பாட்டை குடுத்துவிட்டுட்டேன். வடக்கு தோப்புல காய் இறக்கிட்டு இருக்காங்க. நீ பண்ணை வீட்டுக்கு போய்ட்ட. ப்ச், சரி நீ அங்க இரு. நான் ஆட்டோவுக்கு சொல்லிட்டேன். தோப்புக்கு நான் போறேன். சாப்பிட்டு சண்டையை முடிச்சுட்டு சாயங்காலம் வந்தா போதும். வீட்டு சாவிய பூட்டி நான் கொண்டுபோறேன். தேடி வந்து வாசல்ல நிக்காத…”

அவனை பேசவிடாமல் அவரே கேட்டுவிட்டு பதிலையும் சொல்லி போனை வைத்துவிட இவனின் முகத்தில் புன்னகை.

“அம்மா அம்மா தான்…” என சொல்லிக்கொண்டு அங்கே இருந்த இளநீர் காய்களை எடுத்து திண்ணையில் போட்டு சீவி எடுத்து அஷ்மியை தேடி வந்தான்.

“எவ்வளோ ப்ளென்சென்டா இருக்கு இந்த வீடும் வீட்டை சுற்றி இருக்கிற தோட்டமும் தோப்பும். இங்க இருந்ததுக்கு அவ்வளோ பெரிய ஹிஸ்டரி. கசக்குதாமா இங்க வாழ? ரசனையே கிடையாது கொஞ்சமும்…” என அவனை திட்டிக்கொண்டே சுற்ற,

“இதை குடி. குடிச்சுட்டு ஆற அமர திட்டலாம்…” என்று அவளின் கையில் ஒரு இளநீரை கொடுத்தான்.

“யார் இதை வெட்டினது?…” என கேட்டுக்கொண்டே வாங்கி குடித்தவள் அவனின் கையில் வைத்திருந்த இன்னொன்றையும் வாங்கிக்கொண்டாள்.

“இங்க நம்மை தவிர யார் இருக்காங்களாம்? நான் தான். இன்னொன்னு வேணும்னா முன்னாடி வா…” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்று திண்ணையில் போட்டிருந்த இளநீர்களில் இன்னொன்றையும் லாவகமாய் சீவி அவளிடம் தர வாங்கியவள் மீண்டும் அவன் கைகளிலேயே திணித்தாள்.

“எனக்கு போதும். நீங்க குடிங்க…”

“ரொம்ப அக்கறை காட்ட வேண்டாம். எனக்கு வேணும்னா நானே சீவிப்பேன். நீ குடி…”

“எனக்கும் வேணும்னா நானே கேட்டுப்பேன். இதை குடிக்க முடியுமா முடியாதா?…” என பிடிவாதமாய் பேச,

“எல்லாம் கொழுப்பு உனக்கு…” என வாங்கியவன் குடித்துவிட்டு மற்ற காய்களை நகர்த்தி போட்டுவிட்டு அவளின் அருகே அமர்ந்தான்.

“உங்களுக்கு தான் ஸ்கூட்டி ஓட்ட பிடிக்காதே? லேடீஸ் ஓட்டத்தான் ஸ்கூட்டி. பசங்களுக்கு பெரிய பைக் தான் கெத்துன்னு பெருசா ஸீன் போடுவீங்க. பின்ன எப்படி என் வண்டியை வாங்கி ஓட்டுனீங்க?…” ஞாபகம் வந்தவளாக கேட்க,

“இதெல்லாம் உன்னை யாரு ஞாபகம் வச்சுக்க சொன்னா?…” என பல்லை கடிக்க,

“இது மட்டுமில்லை. எதுவுமே என் ஞாபகத்தில் இருந்து தப்பாது…” பெருமையாய் அஷ்மி சொல்ல,

“உன் ஞாபகத்தில் தீயை வைக்க. எல்லாத்தையும் போட்டு ஸ்டோர் பண்ணினா டஞ்சன் ஆகிடும்…” அவனின் முணுமுணுப்பு அவளுக்கும் கேட்டது. வலியுடன் குறும்பாய் புன்னகைத்தாள்.

ஆம், குறும்பு புன்னகை தான். அதுவும் வலிக்க வலிக்க வந்தது. வேதனையும் தந்தது. இனி காலாகலத்திற்கும் இந்த ரணம் அவளை விட்டு மறையபோவதில்லை. அவனுக்கும் வலிக்கத்தான் செய்தது. அவனின் கையை பற்றிகொண்டாள். இருவருமே பிணைக்கப்பட்டிருந்த கைகளுக்குள் தங்களின் நேசத்தை வார்த்துக்கொண்டிருந்தனர்.

பிரசாத் அழுத்தமாய் கரம் பற்றியவன் அவள் முகம் காணாமல் வேறுதிக்கில் பார்வை பயணப்பட சில நொடி மௌனம் நிமிடங்களாய் நீள மணிகளாய் மாறும் முன் அவர்களுக்கான உணவு வந்துவிட்டது. கேரியரை வாங்கி வைத்துவிட்டு அவனை அனுப்பியவன்,

“இப்போவாவது உள்ள வா அஷ்மி…” என்றதற்கு அவளின் கெஞ்சலான பார்வை அவனை தேக்க இடுப்பில் கைவைத்து முறைத்தான்.

“இங்க தான் யாரும் இல்லையே. இங்கயே உட்கார்ந்து சாப்பிடலாம்…” என்றவளை பார்த்து புன்னகைத்தவன்,

“வெய்ட்…” என சொல்லி உள்ளே சென்றான். திரும்பி வரும் பொழுது ஷர்ட், பேண்டை கழற்றிவிட்டு வேஷ்டிக்கு மாறி இருந்தான். ஒரு கையில் கனத்த ஜமுக்காளம் ஒன்றும். இன்னொரு கையில் இரண்டு தட்டுகளும் பெரிய சொம்பில் தண்ணீருமாய் வந்தவன் அதை திண்ணையில் வைத்துவிட்டு பின்னால் சென்றான்.

என்ன செய்கிறான் என அவளும் பின்னால் போக அங்கே ஒரு கயிற்று கட்டில் சாற்றி வைக்கப்பட்டிருந்தது. ஒற்றை காலை உயர்த்தி வேஷ்டியை மடித்துக்கட்டியவன் அந்த கட்டிலை தூக்கிகொண்டு வர,

“ஐயோ கவர் பன்றானே, கவர் பன்றானே. ஹஸ் ஹஸ் தான். உனக்கு வேஷ்டி தான் அத்தனை அழகா இருக்கு” என அவனை ரசிக்கும் பார்வை பார்க்க,

“வெள்ளெலி, என்ன வேடிக்கை? வந்து அந்த ஜமுக்காளத்தை விரி…” என்றதும் வேக வேகமாய் அவனுடன் செயல்பட்டால் அஷ்மி.

கட்டில் போட்டதும் பெட்ஷீட்டை விரித்தவள் அதன் மேல் உணவுகளை பிரித்து பரப்பினாள். அவனுக்கும் எடுத்துவைத்து தானும் போட்டுக்கொண்டவள் வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட அவன் சாப்பாட்டுடன் அவளின் அந்த பாவனைகளையும் சேர்த்து விழுங்கினான்.

“இன்னைக்கு என்னவோ சாப்பாடு ரொம்ப டேஸ்டா இருந்த மாதிரி இல்ல…”

“மனசுக்கு பிடிச்ச இடத்துல பிடிச்சவங்களோட சேர்ந்து சாப்பிடும் போது எந்த உணவுமே ருசிக்கும் மிசஸ் வெள்ளெலி…” பிரசாத் அவளை சீண்ட,

“கனவு தான்…” என்றபடி பாத்திரங்களை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அவளின் பின்னே மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவன் கதவையும் பூட்டிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தன.

பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தவள் அவனை பார்த்ததும் முகம் திரும்பிக்கொள்ள பிரசாத்தின் முகத்தில் விரிந்த புன்னகை.

“என்னை ஹாஸ்பிட்டல்ல ட்ராப் பண்ணிடுங்க…” மெதுவாய் சொல்ல,

“இன்னைக்கு உனக்கு லீவ் சொல்லியாச்சு. நீ ரிலாக்ஸ் பண்ண உனக்காக தான் இங்க வந்தோம்…” பிரசாத் சொல்லவும் அந்த குரலில் அசைவற்று நின்றவள் அனைத்தையும் கழுவி முடித்து கையையும் கழுவிக்கொண்டு,

“மண்ணாங்கட்டி. யாரை கேட்டு லீவ் சொன்னீங்க? நான் கிளம்பறேன். நீங்க இங்கயே இருங்க…” மனது படபடத்தது இத்தனை நாள் இல்லாத உணர்வொன்று அவளை கவ்விக்கொள்ள அங்கிருந்து நகர்ந்து வரவேற்பறை வந்து நின்றாள்.

பிரசாத் அவளின் பின்னோடு வருவதை உணர்ந்து தனது பொருட்களை சுற்றிலும் தேட தேட கண்ணிலேயே படவில்லை. திவானின் மேல் இருந்து சிறிய பில்லோக்களை தூக்கி வீசி எறிந்தவள் தலையில் கைவைத்து நிற்க,

“என்ன தேடற?…” அவளின் காதருகில் ஒலித்த குரலில் திரும்பாமல்,

“நான் போகனும். என் கீ எங்க?…” என்றாள் கோபமாய்.

“உன் கண் முன்னாடி திவான்ல தானே இருக்கு. கண்ணுமுன்னாடி வச்சிட்டு எதுக்கு அதை சுத்தியே தேடிட்டிருக்க…” அவளின் கையை எடுத்து சாவியின் மீது வைத்தவன்,

“இருக்கு பாரேன். டச் பண்ணினா பீல் பண்ண முடியுதா?…” விஷமமாய் அவளிடம் கேட்க வேகமாய் திரும்பியவள் கோபமாய் அவனை தள்ள,

“நான் சாவியை சொன்னேன். கண் முன்னாடி வச்சுட்டே காணோம்னு தேடற. அதான் அதை தொட்டதும் உன்னால அது உன்னோட கீ தான்னு பீல் பண்ண முடியுதான்னு கேட்டேன்…” என உல்லாசமாய் சிரித்தவனின் கள்ளப்புன்னகை அப்படியல்ல என்று அப்பட்டமாய் பறையடிக்க,

“யூ யூ. நீயெல்லாம்…” என அவனின் கழுத்தை நெரிக்க வந்தவள் கழுத்தை விட்டுவிட்டு பனியனை கொத்தாய் பற்றி,

“நினைக்க நினைக்க கோவமா வருதுடா. அன்னைக்கு அருவியூர்க்கு நந்தினிக்கு பதில் நான் அங்க வராம போய்ட்டேன். வந்திருந்தா உன்னை வச்சு செஞ்சிருந்திருப்பேன்…” என கொந்தளிக்க,

“இப்பவும் ஒன்னும் லேட் ஆகிடலை. மொத்தமா உன் கைக்குள்ள நான். வச்சுக்கோ. என்ன செய்யனும்னு தோணுதோ செஞ்சிக்கோ…” மொத்தமாய் அவளிடம் தன்னை ஒப்படைத்தவனாய் அவன் நிற்க அந்த குரலும் முகமும் பார்வையும் தனித்தனியாகவும் மொத்தமாகவும் அவளை மயக்கியது.  

Advertisement