Advertisement

தென்றல் – 23

               “என்ன ரகு யார் இந்த பொண்ணு? இங்க வந்து என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம உன்னை வர சொல்லுது?…” என்று வாசலில் வந்து நின்ற மகனிடம் அவனின் தாய் படபடக்க ஹாலில் அமர்ந்திருந்த அஷ்மியை பார்த்தவன் எச்சிலை விழுங்கினான் அவளின் பார்வையில்.

வீட்டினுள்ளே கால் எடுத்து வைக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது. அந்த அச்சம் அவனின் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அவனின் தாயின் முகத்தில் குழப்பம்.

“என்னடா நான் சொல்லிட்டே இருக்கேன். பதில் சொல்லாம இப்படி முழிக்கிற?…” என கேட்க,

“அம்மா…”

“உள்ள வா ரகு…” சாதாரணம் போல அஷ்மி சொன்னாலும் அதில் மறைமுக அதட்டல் விஞ்சியிருந்தது.

இனி ஓடி ஒழிய முடியாது என்பதனால் எதுவானாலும் சமாளிக்கவேண்டும் என்கிற முடிவோடு அவன் உள்ளே வர,

“உட்கார், உன்னை பார்க்க தான் வந்திருக்கோம்…” அஷ்மியின் தோழி கீர்த்தி கடுகடுவென்ற முகத்துடன் அவனை பேச,

“யாரும்மா நீங்க எல்லாம்? எதுக்காக இங்க வந்து பிரச்சனை பன்றீங்க? ரகு அப்பா வந்தா கோவப்படுவாரு. அவர் வரதுக்கு முன்ன கிளம்புங்க. இல்லைனா உங்க வீட்டு மனுஷங்களை வரவைச்சு சத்தம் போட்டுடுவாரு…” ரகுவின் அம்மா சொல்ல அவரை புன்னகையுடன் பார்த்த அஷ்மி,

“அப்போ ரகு அப்பா வரவுமே பேசுவோமே?…” கால்மேல் கால் போட்டு அவள் சாய்ந்து அமர்ந்துவிட பதறிப்போனான் ரகு.

“அஷ்மி ப்ளீஸ் நான் தெரியாம பண்ணிட்டேன். அதுக்கு ஸாரி கேட்டுக்கறேன். முதல்ல இங்க இருந்து கிளம்பு. தயவு செஞ்சு கிளம்பு…” என்று பயப்பட,

“இந்த பயம் ஒரு விஷயம் செய்யறதுக்கு முன்னமே இருந்திருக்கனும். ராஸ்கல் யார்க்கிட்ட உன் வேலையை காட்டுற?…” என்று அவனின் சட்டை காலரை பற்ற,

“என்ன பொண்ணும்மா நீ? ஒரு ஆம்பிளை சட்டையை பிடிக்கிற? அதும் என் முன்னாடியே? எடு கையை. ரகு அப்பாவுக்கு பசங்க பொண்ணுங்கட்ட பழகறதே பிடிக்காது. இப்ப நீ என்னன்னா இப்படி வந்து வீட்டுக்குள்ள பிரச்சனை பன்ற?…” என சொல்ல அஷ்மி இகழ்ச்சியாக ரகுவை பார்த்தாள்.

“ஆஹாங் அப்படியா விஷயம்? இது எனக்கு தெரியாம போச்சே. அப்போ உன் அப்பாக்கிட்டையே பஞ்சாயத்தை பேசிக்கலாம்…” என சொல்லும் பொழுதே ரகுவின் தந்தையும் வந்துவிட அஷ்மியை பார்த்ததும் புருவம் சுருக்கினார் தயாளன். அட்வகேட் தயாளன்.

“யாரம்மா நீங்க எல்லாம்?….” என்று அஷ்மியையும் கீர்த்தியையும் பார்த்து கேட்க,

“நான் டாக்டர் அஷ்மிதா. உங்க சன் ரகு வொர்க் பன்ற ஹாஸ்பிட்டல்ல நானும் வொர்க் பன்றேன். என்னோட அப்பா பிஸ்னஸ் மேன் ராஜாங்கம்…” என சொல்லவும் ஒரு நிமிடம் யோசித்த தயாளனுக்கு ராஜாங்கம் தெரிந்துவிட,

“ராஜாங்கம் ஸார், ஓஹ் அதிரூபன், எக்ஸ் மினிஸ்டர் ரத்தினசாமி சன். எஸ், நான் உங்க மேரேஜ், ஸாரி அதிரூபன் ஸார் மேரேஜ்க்கு வந்திருந்தேன். நீங்க எப்படி இங்க? ரகுவை பார்க்க வந்தீங்களா?…”

ரகுவிற்கே ஆச்சர்யம் அஷ்மிதாவிடம் தயாளனின் பேச்சு அத்தனை தன்மையாகவும் பணிவாகவும் இருந்தது.

ரகுவை அஷ்மி கோபமாக பார்க்கும் பொழுதே கீர்த்தி நடந்ததை சொல்லிவிட்டாள் வேகமாய்.

“இங்க பாருங்க ஸார், உங்க பையன் சரியான சீப் மென்டாலிட்டி. அஷ்மி மேரேஜ் நின்னதுக்கு பின்னால அவளை ப்ரப்போஸ் பண்ணினான். அவளும் ரொம்ப டீசென்ட்டா வேண்டாம்னு சொல்லிட்டா. இதுல என்ன இன்செல்ட் கண்டுட்டான் உங்க மகன்? நாங்க எல்லாரும் கேம்ப் போயிருக்கும் போது அஷ்மியை அசிங்கப்படுத்தி மேரேஜ் பண்ணிக்க ப்ளான் பண்ணி போலியா அவன் ப்ரெண்ட்ஸ் வச்சு போலீஸ் மாதிரி வேஷம் போட வச்சு ஹோட்டல்க்கு அனுப்பிட்டான்…”

என்றவள் அங்கு நடந்ததை பொதுவாய் சொல்ல தயாளனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

“இவன் செஞ்சது மட்டும் அஷ்மி வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியனுமா என்ன?…”

“என்ன என்ன நடந்துரும்? எங்கப்பாவும் பெரிய லாயர் தான். உங்களால என்ன பண்ணிடமுடியும்?. ப்ரப்போஸ் பண்ணினா நோ சொன்ன. சரின்னு பொண்ணு கேட்க குடும்பத்தை அனுப்பறேன்னு தானே சொன்னேன். அதுக்கு எத்தனை பேசின நீ…”

“ஏய் அடங்குடா, ஆனானப்பட்ட மயிலே என்கிட்ட வச்சுக்க முடியாது, நீ என்னடா டுபுக்கு. நோன்னு சொன்னா நீ ஒத்துக்க மாட்டியோ? நீ சொன்னா உடனே ஓகே சொல்லனுமா? உங்கப்பா லாயர்ன்னா என்ன? என்ன சொல்லு? என்ன பண்ணிடுவார் உங்கப்பா கேளு…” என்று அஷ்மி சொல்ல தயாளனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவருக்கு அஷ்மிதாவின் தந்தை மேலும் அதிரூபன் மேலும் அப்படி ஒரு நன்மதிப்பு. அதுமட்டுமல்ல ரத்தினசாமியை பகைத்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பது நன்றாகவே தெரியும்.

சிங்கம் படுத்தாலும் சிங்கம் தான். அதை போன்றவர் ரத்தினசாமி. பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவரின் மதிப்பு அவருக்கான இடம் எப்போதும் அங்கேயே தான் இருக்கும். விஷயம் அதிரூபனுக்கு தெரிந்தால் இன்னும் பிரச்சனை. வார்த்தைகளை விட்டுவிட கூடாது என்று அமைதிகாக்க அவரின் மனைவியோ,

“ம்மா, என்னம்மா நானும் பார்த்துட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு வந்ததுல இருந்து ஓவரா பேசற. பொண்ணுன்னா கொஞ்சமாவது பதவிசா இருக்க தெரியுதா? ஏதோ உன் மேல இருக்கற ஆசையில அப்படி அவசரப்பட்டு பண்ணிட்டான் என் புள்ளை. அதுக்குன்னு இங்க வந்து ரவுடிசம் செய்வியா?…”

ரகுவின் அம்மா பேசிய பேச்சு அஷ்மிக்கு இன்னும் கோபத்தை கிளப்ப அங்கே அறைக்குள் நின்ற ஒரு சிறிய பெண்ணை அழைத்தாள்.

“இந்த பொண்ணு…”

“என்னோட மக, ப்ளஸ் ஒன் படிக்கிறா. நீ ஏன் கேட்கிற?…” என்று மகளை தன் புறம் இழுத்துகொண்டார் அந்த தாய்.

“என் இடத்துல உங்க பொண்ணு இருந்து இதே மாதிரி அவளுக்கு இரு பிரச்சனைன்னா உங்க பொண்ணை பத்தி யோசிப்பீங்களா? இல்லை அந்த பையனோட ஆசையை பத்தி நினைப்பீங்களா?…” என கேட்க பதில் சொல்ல முடியாமல் திகைத்தவர்,

“நீ உள்ள போ…” என மகளை அங்கிருந்து அனுப்ப பார்க்க,

“ஏன் போகனும்? அவளும் தெரிஞ்சுக்கட்டும் அவ அண்ணனோட யோக்கியதையை. ஆசைப்பட்ட பொண்ணை அசிங்கப்படுத்தி தான் கல்யாணம் செஞ்சிக்கனுமா? இதுக்கு பேர் காதலாம்? அவன் செஞ்ச தப்புக்கு இப்படி சப்பைக்கட்டு கட்டற நீங்க ஒரு அம்மா. ச்சீ…”

அஷ்மியின் முகச்சுளிப்பு ரகுவை கோபப்படுத்தியது. அதுவும் வீட்டில் இதுவரை பெற்றுவைத்திருந்த நற்பெயரை கெடுத்து பெற்றோர் முன்னால் தன்னுடைய பிம்பம் உடைந்ததை தாங்கமுடியவில்லை.

“அஷ்மிதா நான் கேட்டப்பவே சரின்னு சொல்லியிருந்தா நான் ஏன் இப்படி நடந்துக்க வேண்டிய அவசியமே இல்லையே. நீ பிகு பண்ணிக்கிட்ட…”

“நீயெல்லாம் ஒரு டாக்டர். நீ நினைச்சா அது நடக்கனுமா? போடா டேய். இப்ப நான் நினைச்சா உன்னோட ப்ரெண்ட்ஸ் கூட சேர்த்து உன்னையும் மாமியார் வீட்டுக்கு அனுப்ப முடியும். உன்னை சர்வீஸ் பண்ணவிடாம முடக்க முடியும். உன் குடும்பத்தையே எழுந்துக்கவிடாம செய்ய முடியும். பண்ணட்டுமா?…”

“என்ன மிரட்டறியா?…” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவன் வரை பளாரென அறைந்தேவிட்டாள் அஷ்மிதா.

“நானும் பார்த்துட்டே இருக்கேன், பேசிட்டே இருக்க. கொஞ்சமும் யோசிக்க மாட்டியா உன் குடும்பத்தை பத்தி?…” என்று எகிற அடுத்த அறை தயாளனிடமிருந்து கிடைத்தது ரகுவிற்கு.

இதற்கு பயந்து தான் ரகுவும் ரகுவின் அம்மாவும் பயந்தனர். தயாளன் அத்தனை கண்டிப்பான குடும்பத்தலைவர். தான் தன் பையனை சரியாகத்தான் வளர்த்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்க ரகுவின் இந்த நடவடிக்கையால் ஒரு நிமிடம் சிதைந்துவிட்டார்.

தவறை செய்தும் விட்டு இப்போது அதை நியாயப்படுத்த முயலும் அவனை கோபம் தீருமட்டும் அடித்துவிட்டார்.

“உன்னை இப்படியாடா வளர்த்தேன். நாய் நாய். உன்ன வச்சு தானிந்த குடும்பத்தோட எதிர்காலம்ன்னு இல்லை. ஆனா நானும் ஒரு பொம்பளபுள்ளையை பெத்து வச்சிட்டேனே?…” என தலையில் அடித்துக்கொள்ள,

“என்னங்க எவளோ சொல்றான்னு நம்ம பையனை போய்…” என வந்த ரகுவின் அம்மாவிற்கும் ஒரு அறை.

“வாய மூடிட்டு ஓரமா நில்லு சொல்றேன்…” என்று கொந்தளித்தவர் அஷ்மியிடம் திரும்பி,

“மன்னிச்சிடும்மா. இவன் இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லை. படிச்ச அளவுக்கு அறிவு இல்லாம போச்சு. நான் அவனுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன்ம்மா…” என்றவர்,

“அம்மாடி இந்த விஷயம் வீட்ல…”

“கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஆனா இனி உங்க மகனை நான் பார்க்க கூடாது…” என்றவள் ரகுவிடம் வந்து,

“டாக்டர்ன்னு வெளில சொல்லிடாத. உன்னால அசிங்கம்…” என்றவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

காரில் வந்துகொண்டிருக்க கீர்த்திக்கு தான் பொறுக்கவில்லை. அஷ்மி இதை வேறு விதமாய் ஹேண்டில் செய்வாள் என்று பார்த்தால் முற்றிலும் வேறாக நடந்துகொண்டாளே என பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எதுக்குடி இந்த பார்வை பார்க்கற? என்னன்னு கேட்டுடேன்…” என்று அவளை கேட்க,

“உன்னை என்னால புரிஞ்சுக்க முடியலை அஷ்மி. அவனை வெறும் அறையோட விட்டுட்டியேன்னு வருத்தமா இருக்கு…”

“வேற என்ன செய்யனும்? வீட்ல அந்த சின்ன பொண்ணு எப்படி மிரண்டு போய் பார்த்தான்னு நீயும் கவனிச்ச தானே?…” என்றவள்,

“நான் ஒன்னும் சும்மா விடனும்னு விடலை. இப்போ நான் இவனை பனிஷ் பண்ணி இவனோட அப்பா வீட்ல போய் என் அப்பாட்டையோ அதிட்டையோ போய் நின்னுட்டா பிரச்சனை இன்னும் தீவிரமாகிடும். அதான் போய் தொலையட்டும்னு விட்டுட்டேன்…”

“இங்க வந்து இவனை பேசறதுக்கு நீ ஹோட்டல்லையே வச்சு இவனை நாறடிச்சிருக்கனும். கையும் களவுமா மாட்டிருப்பான். அங்கயே தூக்கிருக்கலாம். நீ அங்கையும் பேசாம இருந்துட்ட. ஏன் அஷ்மி…” என்றதுக்கு மிதமான புன்னகை அஷ்மி முகத்தில்.

“ஹ்ம்ம் எல்லாம் அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம்னு ஈஸியா சொல்லிடறோம். ஆனா நிதர்சனம்.  என்னை ப்ரெஸ்ன்ற ஒத்தை வார்த்தை தான் தேக்கிருச்சு. என்னால அந்த நிமிஷம் வேற எதயுமே யோசிக்க முடியலை…”

“ஏன் நீ மேனேஜரை கூப்பிட்டிருக்கலாமே. அதையும் மீறி என்ன நடந்திரும். அதுவும் ஒரு போலியான போலீஸ் அவங்க…”

“இப்போ தானே தெரியுது ஃபேக் போலீஸ்ன்னு. அங்க எனக்கு தெரிஞ்சதெல்லாம் நிஜமா ரெய்ட் வந்திருக்காங்கன்றது தான். வெளில வந்து நான் மேனேஜரை கூப்பிடற வரைக்கும் ப்ரெஸ் சும்மா இருப்பாங்களான்னு நினைச்சேன். ஐ திங் கீழே ரிசப்ஷன்லையோ இல்லை லாபிலையோ இருக்காங்கன்னு நினைச்சுட்டேன்…”

“ஒரே ஒரு போட்டோ போதாது இப்ப இருக்கிற டெக்னாலஜிக்கு? என்னோட யோசனை தவறா கூட அந்த மாதிரி வந்திட கூடாதுன்னு தான். அதான் ரூம்க்குள்ளையே பிரச்சனையை சால்வ் பண்ண நினைச்சேன்…” என்றவள் காரை ஓரமாக நிறுத்தினாள்.

“சோஷியல் மீடியால இந்த மாதிரி என்னோட போட்டோ வந்து அதுக்கு பின்னால மேனேஜர் வந்து நான் யார்ன்னு ப்ரூப் குடுத்து என் மேல தப்பில்லைன்னு கண்டனம் தெரிவிச்சாலும் வந்த நியூஸ், பதிவு செஞ்ச என்னோட முகம் எல்லாமே மாறிடுமா? மறந்திடுமா? சரியோ தப்போ எனக்கு அது வேண்டாம்னு தோணுச்சு…”

“ஏற்கனவே என்னோட கல்யாணம் ஒருமுறை நின்னுபோச்சுன்னு எல்லாரும் பேசி அப்பா கொஞ்சம் வருத்தமா இருக்காங்க. நாங்க போட்ட ப்ளான் தான். இருந்தாலும் அது எங்களுக்கு தானே தெரியும். என்கிட்டே சொல்லலைன்னாலும் அப்பாவுக்கு கவலை தான். இப்போ இந்த கஷ்டத்தையும் அவருக்கு குடுக்க நான் விரும்பலை…”

“அந்த நேரமே அதிட்ட மட்டுமாவது சொல்லி இருக்கலாம். அவனும் இவனை உண்டில்லைன்னு ஆக்கிருப்பான் தான். ஆனா துவா. அவ பாவம். அவ வாழ்க்கையில் முதன் முதலா முழு சந்தோஷத்தோட அவ அனுபவிக்கிற வளைகாப்பு. அது என்னால பாதிக்க கூடாதுன்னு நினைச்சேன். அதிக்கு தெரிஞ்சா அவனோட முழு கவனமும் இதுக்கு பின்னால யார் இருக்காங்கன்னு தான் தேடுவான். நேத்து அவ்வளோ சூப்பரா பங்க்ஷன் முடிஞ்சது. நானும் ஹேப்பி, எங்களோட முயல்க்குட்டியும் ஹேப்பி…” என புன்னகைத்தவள்,

“என்னோட இந்த கவலைக்கு ஆதாரமே இல்லாம வந்தவங்க போலியான ஆட்கள்ன்னு தெரியவும் இதுக்கா இத்தனை பெரிய ரிஸ்க் எடுத்தேன்னு இப்ப நினைச்சாலும் சிரிப்பு தான் வருது…” என சொல்ல,

“ஆமாம் அஷ்மி, நீ சொல்றதும் சரிதான். இந்த ரகு கேம்ப்ல ப்ளான் சொதப்பலாகிடுச்சான்னு அவனுங்கட்ட பேசவும் தான் எனக்கே விஷயம் புரிஞ்சது. அவன் இப்படி ஒரு ப்ளான் பண்ணிருக்கான்னு…” கீர்த்தி கோபமாய் சொல்ல,

“இதுல நான் மட்டுமில்ல என்னால இன்னொருத்தனும் கஷ்டப்பட இருந்தான். பாவம் அவன். சரியான சோப்ளாங்கி போல. நோஞ்சான் ஒரு காய்ச்சல் அவனை அப்படி படுக்க வச்சிருச்சு. நான் தாலியை குடுத்து என் கழுத்துல போட்டுக்கவும் அவன் மிரண்டான் பாரு. பாவம் பயந்து சுபாவம் போல அவன்…” என சிரித்தவள்,

“ஒரு வேளை நிஜமான போலீஸ் வந்திருந்தா? பாவம் அவன். அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கலாம். இல்லை ஆகவேண்டி இருக்கலாம். அவன் பேமிலி இப்படி எத்தனையோ இருக்கலாம். என்னால அவன் ஏன் பாதிக்கப்படனும்? எல்லாம் யோசிச்சு தான் இப்படி பண்ணினேன்…”

“ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் அஷ்மி. எந்த பொண்ணுமே இந்த மாதிரி ஒரு டிசிஷன் அவ்வளோ ஈசியா எடுத்திட மாட்டா. ஆனா கொஞ்ச நேரத்துல நீ எத்தனை யோசிச்சிருக்க? யாருன்னே தெரியாத அவனுக்கும் சேர்த்து…” என சொல்லி,

“ஆமா அவன் பேர் என்ன? எந்த ஊர்?…” என கேட்க,

“யாருக்கு தெரியும்? நான் கேட்கவே இல்லையே. ஆனா நானே ஒரு பேர் வச்சேன் தெரியுமா? விஸ்வாசமூர்த்தி, கூட இருந்தவன் புண்ணியம். தாலிய காணோம்னு சொல்ல நான் ஒரு ப்ளான் பண்ணினா அவன் என்னன்னா இந்தாருக்குன்னு எடுத்து காமிச்சதும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு. வேற வழியில்லாம அதையும் செய்யவேண்டியதா போச்சு…” என சிரித்துக்கொண்டே சொல்ல,

“ஆனாலும் ரொம்ப தைரியம் தான் போ…” என கீர்த்தியும் புன்னகைத்தாள்.

இப்போது நினைத்தாலும் அஷ்மிக்கு அந்நிகழ்வு புன்னகையை தான் தரும். அதிலும் அவனை தனக்கு பேசியிருக்க விதியை நினைத்து இன்னும் சிரிக்கத்தான் தோன்றியது.

ப்ளைட் விட்டு இறங்கியதுமே உதயாவிடமிருந்து போன் வந்துவிட்டது. ஏர்போர்ட் வாசலில் காத்திருப்பதாக அவன் சொல்ல பிரசாத் வராததில் மனதினோரம் சிறிதாய் ஏமாற்றக்கருவி துளையிட்டது அவளை.

பிரசாத்திற்கு தான் இங்கே இப்பொழுது வருவது தெரியும் என்பதில் அத்தனை நிச்சயம்.  அப்படி இருந்தும் அவன் தன்னை அழைத்துச்செல்ல வரவில்லை என்பது ஏமாற்றத்தையும் தாண்டி கோபத்தை தந்தது. முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அஷ்மி செல்ல உதயாவால் அவளை எதிர்கொள்ள முடியவில்லை.

“வாங்க அஷ்மிதா, ஜர்னி எப்படி இருந்தது?…” என சாதாரணமாக பேச முயன்றான்.

“அதை பாட்க்கிட்டையே கேளுங்க பிரபா…” என அஷ்மி சொல்ல,

“கிழவி நீ வீட்டுக்கு வா இருக்கு கச்சேரி. அப்பா பயங்கர கோபத்துல இருக்காரு…”

“உன்னை யாருடா அவன்ட்ட சொல்ல சொன்னா?…”

“இன்னும் சொல்லலை. ஆனா போய் சொல்லுவேன்…” என மிரட்ட,

“பாத்தியா அம்மி இவன, இவனால இவன் பொண்டாட்டியோட போவ முடியல. நான் போய்ட்டேன்ல. அதான் பொறாம…” என நாச்சி நொடிப்பாய் சொல்ல நந்தினியை பற்றி சொல்லவும் அஷ்மியின் முகமே மாறிவிட்டது.

அதை முன்னால் இருந்து கண்ணாடியில் பார்த்த உதய் பிரபாகரனின் முகம் வருத்தத்தில் ஆழ்ந்தது. இதில் தன்னால் என்ன செய்ய முடியும்? தான் உள் நுழைவதை பிரசாத் மட்டுமல்ல அஷ்மியும் விரும்ப மாட்டாளே. அமைதியாய் காரை செலுத்தினான் உதயா.

கார் பிரசாத்தின் வீட்டு வாசலில்  வந்து நிற்கும் வரை அஷ்மியும், நாச்சியும் பார்த்த இடங்களை பற்றி அவனிடம் சொல்லிக்கொண்டே வந்தனர். நேரம் போனதே தெரியாத அளவிற்கு பிரச்சனைகள் எதுவுமே இல்லாததை போல அஷ்மி பேச பேச வியப்புடன் அவளை பார்த்தவன் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தவும் தான் வந்திருக்கும் இடம் உணர்ந்தாள்.

உடல் தானாய் ஒரு இறுக்கத்தையும் விரைப்பையும் கொடுக்க முகம் மலர்ச்சியை தொலைத்ததை போல ஆகியது. நொடியில் சரிபண்ணிக்கொண்டு புன்னகையோடு கீழே இறங்கியவள்,

“உள்ள வாங்க பிரபா. வந்து ஏதாவது சாப்பிட்டு போகலாமே?…” என கேட்க,

“நாளைக்கு வரேன். நீங்க போய் ரெப்ரெஷ் ஆகுங்கள். ரெஸ்ட் எடுங்க. கண்டினியுஸ் ட்ராவல் வேற. டயர்டா இருப்பீங்க…”

“எனக்கே அட்வைஸ். எனிவே தேங்க் யூ…” என்றவள் நாச்சியை பார்த்து

“பை பாட். டேக் ரெஸ்ட்…” என்று சொல்லி கார் கிளம்பவும் வீட்டினுள் நுழைந்தாள்.

நேரம் மாலை ஆகிவிட்டிருந்தது.

“கொஞ்சம் நில்லும்மா…” என அஷ்மி உள்ளே நுழையவுமே தனம்  நிறுத்திவிட்டார்.

உணர்வுகளை தொலைத்த முகத்தோடு அவரை பார்த்தவள் அவருக்கு பின்னால் டைனிங் டேபிளில் சாய்ந்து தன்னையே பார்த்தபடி நின்ற பிரசாத்தையும் பார்த்தாள்.

இடைவெளிகளின் வெளியிலே இரு இதயங்கள் எரியுதே

எரிவதிலும் சுகமிருக்கு எரியும் மெழுகும் ஒளி வீசும்

Advertisement