Advertisement

தென்றல் – 21

                      “இதை வீடுன்னு நினைச்சாளா என்னன்னு நினைச்சா? நானும் பொறுமையா இருந்தா தலைக்கு மேல ஏறிடுவாளா?…” தனத்திற்கு அத்தனை கோபம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.

பிரசாத்தால் சமாளிக்க முடியவில்லை தனத்தை. என்றுமே இத்தனை கோபம் கொள்ளாதவர் இன்று அஷ்மியின் மீதான கோபத்தில் பொரிந்துகொண்டிருந்தார்.

“பிரபாவுக்கு போன் பண்ணு. நான் அவளை நேரா பாத்து நல்லா கேட்டா தான் என் மனசு ஆறும். இப்பவே நான் சென்னை கிளம்பறேன்…” என்றவர் மொபைலை எடுத்துக்கொண்டு,

“இன்னைக்கு அவங்கப்பாக்கிட்ட ரெண்டுல ஒன்னு நான் கேட்டே தீருவேன்…” தனம் கோபத்தில் எரிமலையென வெடித்துக்கொண்டிருந்தார்.

“அம்மா ப்ளீஸ் யாருக்கும் சொல்ல வேண்டாம். அஷ்மி இங்க இல்லைன்றதோ நம்மக்கிட்ட சொல்லாம அவ வீட்டை விட்டு போனதோ யாருக்காவது தெரியவந்தா நான் மனுஷனா இருக்கமாட்டேன்…”

“குடும்பத்தை பத்தி வாழவந்த வீட்டை பத்தி எந்த கவலையும் இல்லாம போய்ட்டா. அவளை காப்பாத்த நீ ஏன்டா நினைக்கிற? உன்னோட சந்தோஷத்துக்காக தான் அவளை நான் ஒன்னும் சொல்லாம இருந்தேன். அதுவும் தாயில்லாத பொண்ணுன்னு நினைச்சு பாத்துக்க நினைச்சா அவ நம்மளையே அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாளே? இத சும்மா விட சொல்றியா?…”

“விட்டு தான் ஆகனும். நானே சொல்றேன் உங்களுக்கு என்ன? பேசாம இருக்கனும்னு சொல்றேன்ல. இருங்க. இல்லைன்னா நானும் எங்கையாவது போய்டறேன். போகவா?…” என்று அவன் அதட்டிய அதட்டலில் தனத்தின் விழிகளில் நீர் கோர்த்துவிட்டது.

“அவங்க வீட்டாளுங்களுக்காவது அறிவு வேணா? கல்யாணத்தன்னைக்கே பயமில்லாம ராத்திரில வெளில போய்ட்டு வராளேன்னு எனக்கு மனசுல பட்டுச்சு இவ சரிப்பட்டு வருவாளோன்னு சந்தேகமாச்சு. பொண்ணு பொறந்த வீட்டுக்கு புருஷன் இல்லாம வந்திருக்காளேன்னு உறுத்து இருந்தா இந்நேரம் நம்மக்கிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்டிருக்கனும்ல?…” என்றவர் கண்களை துடைத்துக்கொண்டு மகனை பார்த்தார்.

“என்ன பிரச்சனைன்னு இப்ப எனக்கு தெரியனும் பிரசாத். உனக்கும் அவளுக்கும் நேத்து எதுவும் பிரச்சனையா? நீத்து கோவில்ல இருந்து வந்ததுல இருந்தே அவ சரியில்லை. இப்ப அவளே இங்க இல்லை. என்னன்னு சொல்லு. அப்பத்தான் தப்பு யார் பக்கம்னு எனக்கு தெரியும்…”

சரியாக மகனை பார்த்து அவர் கேட்க வார்த்தை வராமல் திண்டாடிப்போனான் பிரசாத். மகனின் முகத்தையே அவர் உற்று பார்க்க அதில் தலைகுனிந்தான்.

“அப்ப தப்பு உன் பக்கம் தானா?…” என்றவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சோர்வுடன் அமர்ந்துவிட்டார்.

“அம்மா இப்பவும் சொல்றேன்,அஷ்மி மேல எந்த தப்பும் இல்லை. பிரச்சனை என்னன்னு நான் சொல்ல முடியாது. ஆனா ஒரு பொண்ணா அவ காயப்பட்டிருக்கா என்னால. திரும்பி வருவா…” சமாதானம் சொல்ல,

“திரும்பி இங்க வருவாளா? இது என்ன சத்திரமாடா? போக வரன்னு இருக்க? நான் ஒத்துக்க மாட்டேன். தப்பு உன் மேல இருந்தாலும் அவ என்கிட்டே சொல்லிட்டாவது போய்ருக்கனும். வீட்டுல பெரியவங்கன்னு நான் எதுக்கு இருக்கேன். நான் என்ன செத்தா போய்ட்டேன்…”

தனத்திற்கு அப்படி ஒரு அழுகை பொங்கியது. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அவரின் மடியில் தலைசாய்ந்த பிரசாத் சிறிது நேரத்திற்கு பின்னால்,

“பசிக்குதும்மா. வாங்க சாப்பிடலாம்…” என்று அவரை எழுப்பிக்கொண்டு வந்து இருவருமாய் ஏதோ பேருக்கு உண்டு தனத்திற்கு மாத்திரைகளை எடுத்து போட வைத்துவிட்டு தன்னறைக்குள் வந்துவிட்டான்.

அறை முழுவதும் அவளின் வாசம் அவனை சுழற்ற முதுவாய் அங்குமிங்குமாய் நடந்துகொண்டிருந்தான். முதல்நாள் அஷ்மி உடுத்தியிருந்த புடவை ஒரு சேரில் கிடக்க அதன் மேல் பிரசாத்தின் சட்டை முதல்நாள் கழட்டி போடப்பட்டிருந்தது.

இரண்டையும் சேர்த்து எடுத்தவன் நெஞ்சோடு புதைத்து கொண்டான்.

வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்ட உணர்வு. இனி அடுத்த நொடியை கடக்கமுடியாத அளவுக்கு மூச்சுமுட்டு சுமை அவனின் நெஞ்சினில்.

அவ்வளவு தானா? இதுவரை எதுவும் அவளே தான் இனி என்றிருந்த அவனுக்கு அனைத்தும் அவ்வளவு தானா? என்று தோற்றம் அரும்ப தொடங்கியது.

உடைந்து சிதறி அனைத்தும் முடிந்தது என நினைக்கும் பொழுதில் வாழ்வின் வெளிச்சதுகள்களாய் அவள் பிம்பம்.

அத்தனை வேதனையிலும் புன்னகைத்தான் பிரசாத்.

காரணம் அவனின் அறையின் நிலைகண்ணாடியில் லிப்ஸ்டிக்கால் எழுதி அஷ்மி சொல்லியிருந்த விஷயம்.

“உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.”

பார்த்தவனுக்கு புரிந்துபோனது. அத்தனை நேரமும் இருந்த கவலை மறந்து ஒருவித ஆசுவாசம் பெற்றது அவனுள்ளம்.

“வெய்ட்டிங் வெள்ளெலி” என அவனிதழ்கள் முணுமுணுப்பாய் சொல்ல கண்கள் மூடி அவளின் வரவுக்காய் காத்திருக்க ஆரம்பித்தான். பிற்பகல் ஆகிவிட்டது.

ஆனால் வந்தது அஷ்மி அல்ல. உதய் பிரபாகரன்.

“பிரசாத்…” என்ற அழைப்பில் கண் திறந்தவன்,

“உள்ள வாடா…” என சோர்வாய் நிமிர்ந்தமர்ந்தான். உதயாவின் பார்வை பிரசாத்தின் கையில் பொதிந்திருந்த புடவையில் பட்டு மீள அதை கட்டிலில் போட்டவன்,

“என்னடா திடீர்ன்னு போன் கூட பண்ணலை?…” என சாதாரணமாய் கேட்க,

“அஷ்மி எங்க?…” கூர்மையாய் பார்த்துக்கொண்டே கேள்வியை வீச,

“அவ சென்னை போய்ருக்கா. மாமாவை பார்க்க…”

“நிஜமாவா?…”

“ஹ்ம்ம், ஆமா. உனக்கென்ன சந்தேகம்?…” என்றவன் அவனின் முகம் பார்க்காமல் அறையை விட்டு வெளியேற முனைய,

“ப்ச், என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேர்க்குள்ள?…” என நேராக விஷயத்திற்கு வந்தான்.

“பிரபா…” என ஒரு நொடி அதிர்ந்தவன்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா…” சமாளிப்பாய் சொல்ல,

“ஒண்ணுமே இல்லைன்னா இந்நேரம் நீ ஆக்ரால இருந்திருக்கனுமே அஷ்மியோட…” என சொல்லி தன்னுடைய மொபைலில் உள்ள போட்டோக்களை அவனுக்கு காண்பிக்க பார்த்தவன் கண்கள் விரிந்தது. முகத்தில் புன்னகை புக,

“எப்படா போனா?…” என உதயாவின் மொபைலை வாங்கி கிட்டத்தட்ட பிடுங்கிவிட்டான். அதில் அஷ்மி அனுப்பியிருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனின் பரிதவிப்பும் ரசனையும் கலந்த உணர்ச்சி மேலீட்டில் உதயாவிற்கு மனதை பிசைந்தது என்னவோ என்று.

“என்னடா நீயும் போய்ருப்பேன்ல நினைச்சேன். தனம் சித்திக்கு போன் செஞ்சப்போ தான் உனக்கு சமைக்கிறேன்னு சொல்லவும் ஷாக் ஆகிட்டேன்…”

“அப்போ உனக்கு முன்னவே இந்த ட்ரிப் பத்தி தெரியுமா பிரபா?…” என்றவனிடம் ஆமாம் என தலையசைக்க மெலிதாய் புன்னகைத்தான்.

தனது மொபைலை எடுத்துப்பார்க்க அஷ்மிக்கு அழைப்பு செல்லவே இல்லை. தன்னை ப்ளாக் செய்திருப்பாள் என்று புரிந்தவன் உள்ளம் ஒருநிமிடம் கசங்கியது.

“இப்ப சொல்லு என்ன பிரச்சனை?…” என்றவனின் பார்வை மூலையில் சின்னதாய் ஒரு ஏர்பேக் இருப்பதை பார்க்க பிரசாத்தும் பார்த்தான்.

“உனக்கு எல்லாம் பேக் பண்ணி ரெடியா தான இருந்தா? பின்ன என்னடா?…” என்று உதயா கத்தியேவிட,

“அப்பா சாமி வாய மூடுடா. அம்மாவுக்கு கேட்டா அவ்வளோ தான்…” என்று தொப்பென கட்டிலில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டான்.

 “உனக்கு எப்போ தெரியும்டா. ஏன் என்கிட்டே சொல்லலை?…”

“உனக்கு சப்ரைஸ் குடுக்கனும்னு தான் அஷ்மி சொன்னாங்க…”

“இப்ப அவ மட்டும் தனியா போய் பெரிய சப்ரைசா குடுத்திட்டா…” என்றவனை யோசனையுடன் பார்த்தவன் அந்த போட்டோக்களை மீண்டும் காட்டி,

“இது யார்ன்னு தெரியலையா?…” என கேட்க உற்று பார்த்தவனுக்கு சிரிப்பு அடக்கமாட்டாமல் பொங்கியது.

“நாச்சியா? என்னடா இது கிழவிக்கு வேஷம்?…” என சொல்லி சிரித்தான் பிரசாத்.

அவன் எங்கே முதலில் அஷ்மியின் அருகில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தான்? அவனின் பார்வை முழுவதும் அவளை மட்டுமே அல்லவா மொய்த்தது.

நாச்சியை பார்த்ததும், “கிழவிக்கு அலப்பறையை பாரேன். காலம்போன கடைசியில தாஜ்மஹால்…” என சிரிக்க,

“ஹ்ம்ம் கிழவிக்கு சாகறதுக்குள்ள தாஜ்மஹாலை பார்த்துடனுமாம். அதை அஷ்மிட்ட சொல்லியிருக்காங்க. அஷ்மியும் சப்ரைசா இருக்கட்டும்னு உன்கிட்ட சொல்லவேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்க வீட்ல நாச்சி நந்தினி வீட்டுக்கு போய்ருக்கறதா நினைச்சிட்டு இருக்காங்க. விஜி தான் போய் நாச்சியை அஷ்மி கூட அனுப்பிட்டு வந்தான். வீட்டுக்கு தெரிஞ்சா யாரும் விடமாட்டாங்கன்னு அஷ்மி ப்ளான். அந்தளவுக்கு கிழவி ஸ்க்ரூ ஏத்திருக்கு…”

உதயா பேசிக்கொண்டே வந்தாலும் பிரசாத்தை விட்டு அவனின் பார்வை அகலவே இல்லை. நந்தினியின் பெயர் சொல்லிய நிமிடம் அவனின் முகம் மாறியதை கவனித்தவன்,

“இப்ப சொல்லு என்ன ப்ராப்ளம்? அஷ்மி ஏன் உன்னை விட்டுட்டு போனாங்கன்னு என்கிட்டே சொல்ல உனக்கு என்ன? இல்லை உன் சொந்த விஷயம்னு நினைக்கறியா?…” உதயா கேட்க இதற்கும் மேல் மறைக்க ஒன்றுமில்லை என நினைத்தவன் அத்தனையும் சொன்னான்.

அதாவது அருவியூரில் தான் நடந்துகொண்டது, உதயா, நந்தினியின் திருமணம் அதற்கு பின்னான நிகழ்வுகள் என அனைத்தும் நந்தினியை பற்றிய தன் எண்ணத்தை தவிர்த்து.

“ஓ காட், அஷ்மிக்கு இது எப்படி தெரியும்? வாய்ப்பே இல்லையே…”

“அந்த அரைக்காப்படி பேசியிருக்கா போல. அதை கேட்டு தான் மேடம் ஹ்ம்ம் விடு. பார்த்துக்கலாம்….” என்று உதயாவை அவன் தேற்ற,

“இதை நான் நினைக்கவே இல்லைடா பிரசாத். நந்து ஏதோ கோவத்துல…”

“ப்ச், நீ ஏன் பீல் பன்ற? அவ வாய்த்துடுக்கும், படபடப்பும் இன்னைக்கு நேத்தா பார்க்கறோம். விடு. அவ என்ன பண்ணுவா? நீ போய் ஏதும் கேட்டுட்டு இருக்காத அவட்ட…”

“இன்னொன்னு இந்த விஷயம் வெளில தெரியறதுல எனக்கு இஷ்டம் இல்லைடா பிரபா. இதை எப்படி சமாளிக்கனுமோ அதை நான் பார்த்துப்பேன். நீ கவலைப்படாத. நீ யார்ட்டையும் சொல்லமாட்டேன்னு நினைக்கேன்…”

“கண்டிப்பா. நாளைக்கு இங்க வந்திருவாங்க…” என்றவன் அங்கிருந்து தனத்திடமும் பேசிவிட்டு செல்ல அஷ்மி இவனின் வாட்ஸ்ஆப்பிற்கு சில போட்டோக்களை அனுப்பிவிட்டாள்.

எடுத்து பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. நாச்சியும், அஷ்மியும் ஒரே நிறத்தில் பாட்டியாலா, குர்தியில் விதவிதமாய் கைகளையும் கண்களையும் காட்டிக்கொண்டு போட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தனர்.

“இவளை பெத்தாங்களா செஞ்சாங்களா?” எப்போதும் வரும் எண்ணம் இப்பொழுதும் தலை தூக்கியது. போட்டோக்களுக்கு கடைசியில் அஷ்மி அனுப்பியிருந்த செய்தி அப்படி.

“என்ன மிஸ்டர் சண்டியர், நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்னு பாடிட்டு இதான் சான்ஸ்ன்னு தண்ணியடிக்க தம்மடிக்க ஆரம்பிச்சுடாத. உன்னை உன்னோட நெஞ்சை பொசுக்க நான் வந்துட்டே இருக்கேன்…”

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்னு வசனம் ஏதும் இதுவரைக்கும் நெனப்புல இருந்துச்சு மோந்து பாக்க மூக்கு இருக்காது. ஒரே வெட்டு தான்.” என்று மெசேஜ் அனுப்பியிருக்க பார்த்தவனின் நெஞ்சம் அப்படி ஒரு உணர்வில் மிதந்தது.

என் மேல சந்தேகப்படறாளா? என்ற கோபம் எதுவும் அவனுக்கு எழவில்லை. அப்படி ஒரு எண்ணம் அஷ்மிக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்பது அவனின் திண்ணம். ஆனாலும் கோபப்படுத்தவென வேண்டுமென்றே அவள் சொல்லியிருந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை என்ற உவமையை தாண்டி மூக்கு இருக்காது என்கிற மிரட்டலில் புன்னகையோடு மூழ்கினான்.

“அப்போ இவ பண்ணிவச்சிருக்கற வேலை அவங்க வீட்ல யாருக்குமே தெரியலை போல .அதான் அதி கூட கூப்பிடலை.” என நினைத்தன.

எப்படி ஒரு கடினமான சூழ்நிலையையும் நொடியில் மாற்றிவிடும் தன்மை அவளிடம் கொட்டிக்கிடப்பதால் அவள் பால் தான் ஆகர்ஷிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை சுகமாய் ஏற்றான்.

எப்பொழுதும் குளிர் மேகமாய் தன்னை நிறைக்கும் அவளின் பார்வையில் நனைய காத்திருந்தான்.

——————————————————————

பரந்த வான்வெளியில் இயந்திரபறவையில் பறந்துகொண்டிருந்தவளின் இதயம் சிறகடிக்க இயலாது சுருண்டுகிடந்தது.

கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தவள் யாரையும் பார்க்க விருப்பமின்றி இருந்தாள். உண்மையில் சுற்றிலும் யாரையும் பார்க்கமுடியாது விழிமலர் கவிழ்ந்திருந்தாள்.

காணும் திசையெங்கும் கடக்கும் மாந்தர்கள் யாவரிலும் அவனின் நிழல் நிஜமாய் அவளை மனதால் அணுகியது. இந்தளவிற்கா அவனை விரும்பியிருக்கிறோம் என ஆச்சர்யமுற்று போனாள்.

தன்னில் சரிபாதியாக இல்லை, தன்னுடலின் குருதியாக இல்லை, உயிரின் பகுதியாக அதுவும் இல்லை, நாடி நரம்பிலும் உயிர்ப்பாக இல்லவே இல்லை,சுவாசத்தின் துடிப்பாக எதுவுமே இல்லை.

இவைகளில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனின் நினைவு அவளில் அப்படி இல்லையே.

அவளையே அவனாக அல்லவா உணர்ந்தாள்.இதுவாக இப்படியாக என பிரித்துப்பார்க்கவியலாத உடலின் மனதில் ஒரு பகுதியாக பிரிக்க விரும்பாத அவள் அவனை விட்டுவிட்டு வந்திருக்கிறாள்.

எந்த பக்கம் பார்க்கும் போதும் கண்ணில் உந்தன் பிம்பங்கள்

கண்ணில் ஏதும் கோளாறில்லை கண்ணா என்னை நம்புங்கள்

இந்த உறவும் வாழ்க , பிரிவும் வாழ்க , வலிகள் வாழ்கவே

பிரசாத்தின் இன்னொரு பரிமாணத்தை பற்றி கேட்டவளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

சண்டை போடவேண்டும், அவனை தண்டிக்கவேண்டும் என கோபம் கட்டுக்கடங்காமல் இருந்தாலும் அதிர்ச்சியில் வார்த்தைகள் எதுவுமே வரவில்லை.

எத்தனை எத்தனை ஆசையாக இருந்தாள் அவனுடன் முதன்முதலில் இந்த பயணம். அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நனைத்து தானே சுக்குநூறாய் உடைந்துபோய் நிற்கும் நிர்பந்தத்தை என்றோ அவன் செய்த செயலின் கர்மா இன்று நிர்ணயித்துவிட்டது.

அதற்கு தானும் தன் காதலும் பலிகடா. இப்படி ஒருவனை திருமணம் செய்துவிட்டோமே என்று எல்லாம் நினைக்க தோன்றவில்லை அப்போதும்.

இவன் இப்படி செய்யாமல் இருந்திருக்கலாமே? என்று தான் காதல் கொண்ட நெஞ்சம் விம்மியது. அவனை இப்படியே விடப்போவதில்லை. ஆனாலும் உடனடியாக பேசவும் விரும்பவில்லை.

முதலில் இந்த விஷயங்கள் முழுவதையும் ஜீரணித்துக்கொள்ள தனக்கு அவகாசம் வேண்டும் என்று நினைத்தாள். கோபத்தில் கேள்விகள் எதையும் மறந்துவிடக்கூடாது இல்லையா? பிரளயத்தின் ஆர்ப்பரிப்பு தாளாமல் கிளம்பிவிட்டாள்.

அதனை கொண்டு அவனை அழைக்காமலேயே நாச்சியுடன் கிளம்பிவிட்டாள். நாச்சியை உதயா வந்து விடாமல் விஜி வந்து விட்டுவிட்டு சென்றது அவளுக்கு வசதியாக போனது.

நாச்சியிடமும் பிரசாத்திற்கு கையில் அடி, ட்ராவல் பண்ண முடியாது என ஏதேதோ சொல்லி சமாளித்துவிட நாச்சியும் தன் ஆசை நிறைவேறபோகும் ஆசையில் விட்டுவிட்டார்.

இப்பொழுது மீண்டும் ஊரை நோக்கி ஒரு பயணம். பிரசாத்தை பார்க்கவேண்டும். ஆவலும் ஆத்திரமும் போட்டிபோட்டுக்கொண்டு சரிக்கு சமமாக அவளின் மனதில் பிரவாகம் எடுத்தது.  

முதன்முதலில் பார்த்தபொழுது இவனுள் இப்படி ஒரு பிரசாத் இருப்பதை அறியாமலே போனாளே?

மூடிய விழிகளுக்குள் தங்களின் முதல் சந்திப்பு காட்சிகளாய் சில பிழைகளுடன் விரிந்தது. நினைவுகள் இவளுள் மட்டுமா? இவளின் இவனுள்ளும் கூட.

நாகர்கோவில், கன்னியாகுமாரி இரு ஊர்களுக்கும் நடுவில் உள்ள ஒரு கிராமம்.

துவாரகாவின் வளைகாப்பு இன்னும் ஒரு வாரமே இருக்க அதிரூபன், ராஜாங்கம் இருவரின் மறுப்பையும், சொல்லையும் மீறிக்கொண்டு ஹாஸ்பிட்டலில் இருந்து மெடிக்கல் கேம்பிற்கு வந்துவிட்டாள்.

வரவழைத்ததன் பெயர் தான் விதியோ?

Advertisement