Advertisement

தென்றல் – 15
             “ஹாய் ஆன்ட்டி வீட்ல யாரும் இல்லையா?…” என்றபடி வந்த அஷ்மிதாவை பார்த்து ஆச்சர்யமுற்ற பத்மினி,
“வாடா அஷ்மி…” என்று மகிழ்ச்சியாய் அழைத்தவர் அன்னபூரணியை பார்க்க அவரோ அடமாய் அஷ்மிதாவை பார்த்துவிட்டு முகம் திருப்பினார்.
அவள் எப்போது வந்தாலும் முதலில் இன்முகமாய் அஷ்மியை வரவேற்பது அன்னபூரணி தான். அஷ்மிக்கு தன் மீது ஏதோ பிடித்தமின்மை இருக்கிறது என்பது புரிந்தாலும் அன்னபூரணி அஷ்மியை ஒருபோதும் மரியாதை குறைவாக நடத்தியதில்லை.
அதிலும் அதிரூபனுக்கு என்று அவள் பேசியபொழுது முழுமனதாய் ஏற்க இருந்தார். அதுவரை அன்னபூரணிக்கு அஷ்மியின் மனதில் அகிலாவின் மீதான மரியாதையும், தன் மீதான மனக்குறையும் உள்ளதென்பது தெரியாது.
ஆனால் என்று துவாரகாவை அதிரூபன் திருமணம் செய்தானோ அன்றிலிருந்து அஷ்மியின் பேச்சையும் பார்வையையும் உணர்ந்துகொண்டார். ஆனால் கட்டிகொள்ளவில்லை.
என்று வைத்தியநாதனின் மரணம் நிகழ்ந்ததோ, அகிலவேணி தன் ஆசையை நிராகரித்தாரோ அன்றிலிருந்து தான் அன்னபூரணியின் அடிமனதில் அமிழ்ந்துகிடந்த அழுக்குகள் உயிர்பெற துவங்கியதோ?
அன்னபூரணியின் பேச்சுகள், நடவடிக்கைகள் என அனைத்தும் வைத்தியநாதனை கொண்டே இருக்க அவரே இல்லாதபோது அன்னபூரணியை கட்டுக்குள் வைக்க எந்தவித பிடிமானமும் இல்லாமல் போனது தான் அக்குடும்பத்தின் தற்போதைய புயலுக்கு காரணமாகிற்று.
“ஹாய் ஆன்ட்டி, நீங்க எப்படி இருக்கீங்க?…” தானாகவே கேட்டாள் அஷ்மிதா. கேட்டுவிட்டாளே என்று பூரணியும் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“நான் நல்லா இருக்கேன். நீ எப்போ வந்த? உன் அப்பாவுக்கு முடியலைன்னு கேள்விப்பட்டேன். இப்போ சரியாகிடுச்சா?…” என்று இடைவிடாது பேச,
“ஓஹ் உங்களுக்கு தெரியுமா? நான் கூட தெரியாதோன்னு நினைச்சேன்…” என்றவள் சுற்றிலும் வீட்டை பார்க்க,
“விஷால், அர்னவ் ரெண்டு பேரும் அவங்க ரூம்ல இருக்காங்க அஷ்மி. சந்தியாவும், ஸ்வேதாவும் துவாவுக்கு துணையா ராஜாங்கம் அண்ணா வீட்ல இருக்காங்க…”
“முக்கியமான ஆளை காணுமே ஆன்ட்டி?…” என்று கேட்டுக்கொண்டே தானே கிட்சனுக்கு சென்று குடிக்க தண்ணீர் கொண்டுவந்து குடித்துவிட்டு அன்னபூரணிக்கும் தர,
“எனக்கு வேண்டாம்…”
“பரவாயில்லை ஆன்ட்டி. குடிங்க…” என பாட்டிலை நீட்ட,
“ப்ச், இப்ப உனக்கு என்ன வேணும்? உங்கப்பாவை பார்க்க வந்தா பார்த்துட்டு போகவேண்டியது தானே? இந்த வீட்ல உனக்கென்ன வேலை?…” அன்னபூரணி கடுப்பாய் கேட்டுகொண்டிருக்கும் பொழுதே ரத்தினசாமியும் விஷால், அர்னவும் வந்துவிட வெளியில் சென்றிருந்த சங்கரனும் வந்துவிட்டார்.
“வாம்மா அஷ்மி, நல்லா இருக்கியா? இப்பதான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தேன் உன் அப்பாவை பார்க்க. நீ இங்க வந்திருக்கறதா துவா பொண்ணு சொல்லுச்சு. அதான் வேகமா வந்தேன்…” என சங்கரன் சொல்ல,
“நீங்க எப்படி இருக்கீங்க அங்கிள்?…” என கேட்டவள் ரத்தினசாமியை பார்க்க அவரின் முகத்தில் அத்தனை கவலையும் வேதனையும் அப்பிக்கிடந்தது. பதில் எதுவும் பேசாமல் சிறு தலையசைப்பு மட்டுமே அவரிடமிருந்து.
“கூட இருந்து உன்னோட அப்பாவை கவனிச்சுக்கறதை விட்டுட்டு இங்க எதுக்கு இப்ப வந்த? அதி கூட இங்க இல்லை…” அன்னபூரணி பட்டென பேச சங்கரனுக்கு கோபம் வந்தது.
“பூரணி வரவர உன்னோட பேச்சும் நடவடிக்கையும் சரியில்லைம்மா. நானும் அமைதியா போய்ட்டே இருக்கேன். இன்னைக்கு வீட்டுக்கு வந்திருக்கற புள்ளைட்ட இப்படித்தான் பேசனுமா?…” என கடிந்து சொல்ல,
“நீங்க கூட தான் இப்படி மாறிப்போவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. எனக்குன்னு இந்த குடும்பம் இருக்குன்னு நினைச்சேன். ஆனா இப்போதான் தெரியுது என் நினைப்பு தப்புன்னு. அப்பா என்னோட முடிவு சரிதான். இப்பவும் நான் சுதாரிக்கலைனா அவ்வளவு தான்…” அன்னபூரணியும் பதிலுக்கு பேச,
“பூரணி இப்ப எதுக்கு இந்த பிரச்சனை? பேசாம இரும்மா…” என்ற சங்கரன்,
“அண்ணி வந்த புள்ளைக்கு சாப்பிட ஏதாவது குடுத்தீங்களா?…” என பத்மினியிடம் கேட்டுவிட்டு,
“உட்காரும்மா அஷ்மி. மாப்பிள்ளை எங்க? உன் கூட வரலையா?…” என கேட்க,
“இருக்கார் அங்கிள். கார்ல போன் பேசிட்டு இருக்கார்…” என்றதும்,
“சங்கரா முதல்ல போய் நீ உள்ள கூப்பிடு…” என சொல்லி சங்கரனை அனுப்பிய ரத்தினசாமி சோபாவில் அமர,
“அண்ணே நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல…” என அன்னபூரணி ஆரம்பிக்க விஷாலும் அர்னவும் அங்கிருந்த நகர பார்த்தனர்.
“என்ன விஷால், அர்னவ் வீட்டுக்கு வந்தா அவங்களை வாங்கன்னு கூப்பிட மாட்டீங்களா ரெண்டு பேரும்?…” என்று கேட்டு நிறுத்த விஷால் நிமிரவே இல்லை அஷ்மியிடம்.
“இல்லை நீங்க பேசிட்டு இருந்தீங்க அதான்…” என்று சொல்லிய அர்னவ் விஷாலை பார்க்க,
“வாங்க…” என்று மட்டும் பேசவேண்டுமே என்று பேசினான். ஆனால் அவனின் மனமோ இருக்கிற வெறுப்பெனும் நெருப்பில் என்னை ஊற்றுவதை போல இவள் வேறு வந்து நிற்கிறாளே என்று இருந்தது.
“பச்சைக்கிளி கூட பேசலை பார்த்தியா அர்னவ். உன்னை கான்டெக்ட் பண்ணினானா?…”
“இல்லை அஷ்மி. அண்ணாவுக்கும் ரீச் ஆகலை. அவனுக்கும் போகலை. இல்லை ரெண்டு பேருமே வேலையை முடிச்சுட்டு பேசலாம்னு மொபைலை ஆஃப் பண்ணியிருக்காங்களான்னு தெரியலை. மெசேஜ் மட்டும் செஞ்சிருக்கேன்…”
அர்னவ் சொல்லும் போதே வாசலில் சங்கரனுடன் பிரசாத்தும், அவனின் பின்னால் ஸ்வேதா வர குடும்பமே அதிர்வாய் பார்க்க அன்னபூரணியின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது.
“உள்ள வா ஸ்வேதா…” என்று அவளை அஷ்மி அழைக்க அவளோ அன்னபூரணியை பார்க்க அவரின் பார்வையில் பரவிய உக்கிரத்தில் பயந்துபோய் பிரசாத்தின் கையை பிடித்துக்கொண்டு அவனின் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்ள அவளின் கையை ஆறுதலாய் தட்டிகொடுத்தான் பிரசாத்.
“ஏய் என்ன காரியம்டி பன்ற? அறிவிருக்கா உனக்கு? வீட்டு மனுஷங்க இத்தனை பேர் இருக்கும் போது, உன்னை கட்டிக்க போறவன் பார்க்கும்போது எவனோ ஒருத்தன் பின்னாடி அவன் கையை பிடிச்சுட்டு நிக்கிறியே. வா இங்க…”
அன்னபூரணி வீடே அதிரும்படி கத்த அதுவரை அப்படி ஒரு குரலில் அவர் பேசி கேட்டிராத அஷ்மி கூட அதிர்வுடன் பார்த்தாள்.
“நான் எவனோ ஒருத்தனாவே இருந்துட்டு போறேன். பாதுகாப்பு குடுக்க வேண்டிய குடம்பமே அவளை பலி குடுக்கற மாதிரி ஒரு காரியம் பண்ண நினைச்சா பாதுகாப்பை அவ வெளியில தான் தேடுவா. இது கூட புரியாத நீங்க என்ன தாய்?…” பிரசாத் வேஷ்டியை மடித்துக்கட்டி சொல்ல,
“இந்த ஹஸ் பன்ச் டயலாக் பேசன்னே வேஷ்டியை கட்டிருப்பான் போலவே. சும்மா மாஸ் காட்டி நிக்கிறான் மல்லுவேட்டி மைனர்…” அஷ்மி பார்வையாலேயே அவனுக்கு பாராட்டு படிக்க அதை கவனிக்காத பிரசாத் ஸ்வேதாவின் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்துவந்தான்.
“வேண்டாம்னா நான் அதி அண்ணா வீட்டுக்கே வரேன். எனக்கு இங்க வேண்டாம்…” ஸ்வேதா வர விருப்பம் இல்லாதவளாக அவனிடம் கெஞ்ச,
“இங்க உனக்கு பிடிக்காம ஏதாவது நடந்தா அதி வீட்ல இல்லை என்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போய்டறேன் என்னோட தங்கச்சியா. நீ பயப்படாதம்மா. வா…” என சொல்ல,
“யாருக்கு யார் தங்கச்சி? என் பொண்ணை சொந்தம் கொண்டாடிட்டு நடு வீட்ல வந்து நிக்கிற. உன் பொண்டாட்டியை வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா நீயெல்லாம் நடு வீட்ல நின்னு பேசுவியா?…” அன்னபூரணி கொதிக்க,
“அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணிடுவீங்க நீங்க?…” பிரசாத் தெனாவெட்டாய் கேட்க யாரும் பதில் பேசமுடியாமல் நின்றனர்.
“உங்களை என்னவோன்னு நினைச்சேன் ஆன்ட்டி. ஆனா உங்க மனசுக்குள்ள இத்தனை வக்கிரம் இருக்குன்னு இப்பதான் தெரியுது. அப்பா இத்தனை வருஷம் நல்லவங்க மாதிரி நடிச்சீங்களா?…” அஷ்மி கேட்க,
“நீ என்ன வேணும்னாலும்  சொல்லிக்கோ. ஆனா எனக்கு தெரியும் நான் என் புருஷனுக்காக வாழ்ந்தேன். அவரோட சந்தோஷத்துக்காக வாழ்ந்தேன்…”
“நிச்சயம் இல்லை ஆன்ட்டி. அவரை உங்களோட தக்கவச்சுக்க நடிச்சிருக்கீங்க. அதுதான் உண்மை. இன்னொரு குடும்பத்தையும் கலைச்சு நீங்களும் உண்மையா வாழாம என்ன வாழ்க்கை நீங்க வாழ்ந்தது?…”
அஷ்மி பேசியது புரியவில்லை என்றாலும் இதன் பின்னால் பெரிய பிரச்சனை என்று பிரசாத்திற்கு நன்றாக புரிந்தது. தன் கையை பிடித்தபடி நடுக்கிகொண்டிருக்கும் ஸ்வேதாவை தட்டிகொடுத்து ஆறுதல் படுத்திய பிரசாத்தின் பார்வை  விஷாலை வட்டமிட்டது.
விஷால் நிமிரவே இல்லை. அமைதியாய் நின்ற இடம் நகராமல் அசையாமல் நின்றான். பார்க்க பார்க்க கோபம் தான் வந்தது பிரசாத்திற்கு. அமைதியாக நின்றான் அஷ்மிக்காக. முழுவிபரம் தெரிந்தவள் பேசட்டும் என பார்த்திருந்தான்.
“அதை பத்தி பேச நீ யார்? முதல்ல வெளில  போ நீ…” என அன்னபூரணி இரைய,
“பூரணி பேசாம இருன்றேன்ல…” என்ற ரத்தினசாமி,
“இங்க பாரும்மா. இதை நாங்க பேசிக்கறோம். உன் அப்பாவை பார்த்துக்க தானே வந்த. நீ உன் புருஷனை கூட்டிட்டு கிளம்பு.  போய் அவரை கவனிச்சுக்க. அதிபன் வர வரை ஸ்வேதா அங்கயே இருக்கட்டும்…”
“நான் கிளம்பனுமா? ஏன் ஏன் கிளம்பனும்? நான் இங்க அதி இடத்துல பேச வந்திருக்கேன். அவனே இருந்தாலும் என்னை தடுத்திருக்கமாட்டான். அதயும் நானும் வேற இல்லை. இப்ப அத்திக்கு பதிலா இந்த வீட்டோட மூத்த மகளா நான் நிக்கிறேன். எங்க இப்ப சொல்லுங்க என்னை வெளில போக சொல்லி…”
அஷ்மிதா ரத்தினசாமியின் முன்னால் நின்று சொல்லவும் அவளை நிமிர்ந்து பார்த்தவரின் கண்கள் கலங்கிப்போனது.
“யோவ் மயிலும், என்னய்யா இது கண்ணுல தண்ணியெல்லாம். இதை விட எத்தனை பார்த்திருப்ப? இந்த விஷயத்துக்கு போய் உடைஞ்சி நிக்கிற. இவ்வளவு தான் உன்னோட வீரமா?. பேசாம ஓரமா போய் உட்காரு. நான் பார்த்துப்பேன்…”
அஷ்மி பேசியதை கேட்ட ரத்தினசாமியின் முகம் இயல்பிற்கு திரும்பியது மெல்ல மெல்ல. அமைதியாக அமர்ந்துகொண்டார்.
“அண்ணே முதல்ல இவங்க ரெண்டு பேரையும் வெளில போக சொல்லுங்கண்ணே…” என்று பிரசாத்தையும் அஷ்மியையும் காண்பிக்க,
“இங்க பாரு பூரணி. எப்ப அதிபன் இடத்துல அஷ்மி இருக்கறதா சொன்னாளோ அப்பவே இதுல நான் பேசறதுக்கு ஒண்ணுமில்ல. அஷ்மியை அனுப்பறதும் என் புள்ளை அதிபனை போன்னு சொல்றதும் ஒண்ணுதான்…” என ரத்தினசாமி கையை விரித்துவிட்டார்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற மனநிலையில் இருக்கும் அவருக்கு அத்தனை தூரம் அன்னபூரணியின் மேல் வெறுப்பாகிவிட்டது. அஷ்மியாவது இந்த பிரச்சனைக்கு ஒருவித தீர்வை கண்டுவிட்டால் போதும் என்ற நிலையில் இருந்தார்.
“ஓஹோ அப்போ நான் சொன்னதுக்கு சம்மதிக்க மாட்டீங்க. அப்படி தானே? இருக்கட்டும். முதல்ல ரெண்டுபேரையும் நானே வெளில அனுப்பறேன்…” என அன்னபூரணி அஷ்மியிடம் வர அவளுக்கு முன்னாள் வந்து நின்ற பிரசாத்,
“இது உங்க வீடா இருந்தா நீங்க சொல்றதுல நியாயம் இருக்கு. நீங்களே உங்கண்ணன் வீட்ல இருந்துட்டு என் மனைவியை வெளில போக சொல்ல நீங்க யார்?…” பிரசாத் கேட்க,
“சபாஷ் அண்ணா…” என கை தட்டினான் அர்னவ்.
“இந்த வீட்ல கேட்க யாருமில்லைன்னு தான் இத்தனை அராஜகம் நடக்குது. அதி அண்ணா வரவும் இதுக்கொரு முடிவெடுக்கனும்னு இருந்தோம். இப்ப நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம். இனி என்னோட பாப்புக்குட்டி ஹேப்பியா இருப்பா…” என்று சொல்லவும் ஸ்வேதாவின் அழுகை சத்தம் அதிகமாகியது.
“எல்லாரும் ஒன்னு கூடிட்டீங்களா? இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இங்க பாருங்கண்ணே, நான் சொன்னது நடக்கலைன்னா என்னை உயிரோட பார்க்க முடியாது. இப்பவே நான்…” என சொல்லுபோழுதே,
“என்ன மிரட்டறீங்களா? இத்தனை வருஷம் வாழ்ந்துட்டீங்க. இருந்து என்ன பண்ண போறீங்க? நீங்க போன பின்னால உங்க பிள்ளைங்களாவது நிம்மதியா இருக்கட்டும்…” அஷ்மி பத்மினி பதறிப்போனார்.

Advertisement