Advertisement

மணியோசை – 29(2)

ஆறுமாதங்களுக்கு பின்…

முத்துக்கருப்பி கோவில் அருளின் மொட்டையும் கெடாவெட்டும்.

கண்மணியின் ஊரும் உறவினர்களும் நிறைந்திருந்தனர் அந்த கோவில் முழுவதுமாக. கார்த்திக்கின் குடும்பத்தினரும் உறவினர்களும் கூட வந்துவிட்டனர் கண்மணியின் அழைப்பின் பெயரில். வந்தே ஆகவேண்டும் என்பதை உரிமையோடு உத்தரவாகவே சொல்லியிருந்தாள் கண்மணி.

வெளிநாட்டிலிருந்து சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக தவத்துடன் வந்திருந்தாள். தாய்மையின் பூரிப்பு அவளிடம் நிறைந்திருந்தது.

“எம்லே கோட்டிப்பயலே ஒனக்கி வழிக்கதெரிமா தெரியாதாவே? புள்ளைய இம்பிட்டா அழுத்தா பிடிப்ப?…” என பேச்சி முடியிறக்கும் ஆளிடம் எகிறிக்கொண்டிருந்தார்.

அனைவருக்குமே காலை உணவு கோவிலிலேயே ஏற்பாடு செய்திருக்க மொட்டை போட்டுவிட்டு குலதெய்வத்திற்கு பூஜையும் போட்டு அதன் பின்னரே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

அனால் மொட்டை போடுவதற்குள் அந்த ஆளை படாத பாடு படுத்திக்கொண்டிருந்தனர் சங்கரியும், பேச்சியும். கார்த்திக் கூட கண்மணியிடம்,

“கிங்கினிமங்கினி, பேசாம நாம வெளில போய் சாப்பிட்டுட்டு வந்துடுவோமா? இன்னைக்கு உன் அம்மா அவரை முடியிறக்க விடப்போறதில்லை. அதான்…” என்று கண்ணடிக்க முறைத்தாள் கண்மணி.

“கம்மின்னு போம்…” என்று மிரட்ட சிரித்தபடி நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே ஏகப்பட்ட வாக்குவாதம் ஆகியிருந்தது மொட்டைபோடும் விசேஷத்திற்கு. பேச்சி திருவிழா அன்று மொட்டை போட வேண்டும் என்று சொல்ல கார்த்திக் அத்தனை கூட்டத்தில் சென்று போட வேண்டாம் என்று சொல்ல கண்மணி தான் திக்குமுக்காடி போனாள்.

கடைசியில் திருவிழா அன்று மொட்டை போட்டால் நீங்கலாக போய் போட்டுக்கொள்ளவும் என்று கார்த்திக் பிடிவாதமாய் சொல்லிய பின்பு தான் பேச்சி கார்த்திக் சொல்லியதற்கு சரி என்றார். அதை நினைக்கையில் புன்னகை கூடியது.

“இவங்க வீட்ல ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒரு பஞ்சாயத்து.” என சிரித்துக்கொண்டே அவன் பார்க்க அதற்குள் மொட்டை போட்டு முடித்துவிட்டனர்.

குழந்தையை கிணற்றருகில் உள்ள பம்புசெட்டில் குளிக்கவைத்து துடைத்து கொண்டுவந்து மகாதேவியின் மடியில் வைத்துவிட்டு,

“நா போயி உடுப்பு எடுத்தாரேன் அத்தே. இவனுக்கு சந்தனத்த பூசுக…” என சொல்லி சென்றுவிட,

“உத்தரவு போட்டுபோறா மகாராணி. இவ சொன்னா நான் செய்யனுமா?…” என்று முறுக்கிக்கொண்டாலும் அவரின் கை தன்னை போல பேரனுக்கு சந்தனத்தை தடவியது.

மகாதேவி கால்கள் ஓரளவு சரியாகிவிட்டாலும் அவரால் முன்பு போல நடக்கமுடியவில்லை. முடியாத பட்சத்தில் ஸ்டிக் வைத்துதான் நடப்பார்.

அதையும் முகத்தில் பழைய கர்வம் குறையாமல் அவர் பார்க்கும் விதம் இவர் எந்தகாலத்திலும் மாறமாட்டார் என்கிற எண்ணம் போய் இவர் எப்போதுமே இப்படித்தான் என நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

துணியை கொண்டுவந்து கொடுத்துவிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துவைக்க உதவ சென்றுவிட்டாள். சிறிது நேரம் கழித்து வந்த கண்மணி,

“கும்பிடலாம் வாக…” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றாள். பூஜை முடிந்து அனைவரும் சாப்பிட அமர அவர்கள் ஊரே கார்த்திக்கின் குடும்பத்தையும் உறவினர்களையும் விழுந்து விழுந்து கவனித்தனர்.

காலை உணவு நடந்துக்கொண்டிருக்கும் பொழுதே மதிய உணவிற்கான ஏற்பாட்டை கவனிக்க சென்றார் பேச்சி. அங்கே,

“யக்கா பேச்சி, வெடக்கோழியோட நாலு போந்தா கோழிய போட்டோமின்னா நெறக்குமில்ல. என்னத்துக்கி இம்பிட்டு கோழி? ஆட்டை வேற இத்தினி வெட்டிரிக்கி?…” என சமைக்கும் இடத்தில் ஒருவன் சொல்ல,

“செரியான கூறுகெட்டவனாலே இருக்கே? சங்கில மிதிக்கே போறே பாருலே. காசாலே முக்கியோ? கம்மின்னி வேலைய பாரி. ருசி மாறட்டி செத்தவே…” என்று திட்டிவிட்டு ஆட்டை உரைக்கும் இடத்திற்கு சென்றார்.

“எம்பிட்டு நேரந்தே இத்தே உருவிட்டி கெடப்பே? அவுகளா சடுதியா உண்குறவக. மணியாக்கினே மனுசியா இருக்கமாட்டேலே….” என்று மிரட்ட,

“அட போமத்தே, நாக பாத்திகிடுவம். நீ சொல்லன்னுமாக்கி? போயி மணி மாமியாரு, மாமனார கவினி. போ போ…”

பேச்சியின் கோபத்தை கூட பொருட்படுத்தாது சந்தோஷமாய் பேசியபடி மதிய கறிவிருந்து தடபுடலாய் நடந்துகொண்டிருந்தது. சமைக்கும் பொழுதே அதன் வாசனையில் அனைவரின் நாசியிலும் சுவை அரும்புகள் கும்மாளமிட்டனர்.

எத்தனை பெரிய ஹோட்டலிலும் சாப்பிட்டாலும் வராத ருசி கிராமத்து மண்ணிலும் தோப்பு, வயல் வரப்பிலும் சமைக்கும் பொழுது கூடுதலாய் ருசிக்கும்.

“ஏடி குருவு எம்பிட்டி நேரந்தேன் மசாலாவ அரப்பியா? வெறு ஒரல பிடிச்சு சுத்திக்கிட்டே கெடக்க? நல்லா தள்ளிவிட்டி தண்ணிய தெளிச்சி ஆட்டு…” என்றவர் இன்னொரு உரலில் இருந்த மிளகாய் வற்றலையும் தனியாவையும் வேகவேகமாய் ஆட்ட ஆரம்பித்தார்.

கோவிலுக்கருகே மூன்று நான்கு உரல்களும், அம்மிகுலவியும் அங்கேயே தான் கிடக்கும். அதிகபட்சம் யாரும் பாக்கெட்டில் கிடைக்கும் மசாலா தூள்களை உபயோகிக்க மாட்டார்கள். சமையலுக்கு என தனி ஆட்களும் இல்லை. உறவினர்கள் சேர்ந்து தான் சமையல்.

“கறிய வேவ போடு. நாலு இஞ்சிய தட்டி போடு. அப்பத்தேன் வெரசா வேவும்…” என்று அதட்டலுடன் வேலை வாங்க கார்த்திக்கை சேர்ந்தவர்கள் வாய்பிளந்து நின்றனர்.

நாங்களும் உதவுகிறோம் என்று அவர்களுடன் சேர்ந்து சிறுசிறு உதவியுடன் கலகலப்பான பேச்சுக்களுடனும் மதியவிருந்து அமர்க்களமாக தயாராகிவிட சாப்பிட்டவர்களின் நாக்கில் சுவ ஒட்டிக்கொண்டது. எதுவும் குறையின்றி அனைத்தும் எதிர்பார்த்ததை விடவே நிறைவாய் சிறப்பாய் நடந்தது.

வந்தவர்கள் மொய் எழுதிவிட்டு கிளம்ப மாலை மழை வரும் போல மேகம் கூடி நின்றது. வேகவேகமாய அனைத்தையும் எடுத்து ட்ராக்டரில் வைத்துக்கொண்டு ஊர் மக்களுடன் மூன்று ட்ராக்டர்கள் கிளம்பியது.

கார்த்திக் குடும்பத்தினர் ஒரு வேனில் வந்திருக்க அவர்களும் சொல்லிக்கொண்டு இனி எந்த விசேஷமேன்றாலும் தங்களை கண்டிப்பாக அழைக்கவேண்டும் என்கிற சொல்லுடன் கிளம்பிசென்றனர்.

“நாங்களும் கிளம்பறோம். கார்த்திக் நீ எங்களோட வரியா?…” என கேட்ட மகாதேவி பின் என்ன நினைத்தாரோ,

“இன்னைக்கு தான் மொட்டை போட்டிருக்கு. இங்க இருந்துட்டு நாளைக்கு வந்துடு…” என சொல்ல,

“வீட்டுக்கு வந்துட்டு போவலாமிங்க. கோயிலோட கெளம்பிதேன்னு நிக்கீக…” சங்கரி மகாதேவியிடம் சொல்ல,

“பரவாயில்லை. கிளம்பறோம்…”  மகாதேவி சொல்லிவிட்டு சென்று அவர்கள் வந்த காரில் ஏறிக்கொண்டார்.

“அவளை விடுங்கம்மா. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். போக மனசே இல்லைன்னு தான் சொல்லனும். இருக்கட்டும் இன்னொரு முறை கண்டிப்பா வரோம். என்ன ஒன்னு இந்த மொட்டைக்கான மொத்த செலவையும் நீங்க மட்டும் செஞ்சிட்டீங்க. நாங்களும் பங்கு வரோம்னா வேண்டாம்னு சொல்றீங்க. அதான்…” மணிகண்டன் சொல்ல,

“நம்ம பேரனுக்கிதேனே? ஆரு செஞ்சா என்ன?…” நாட்டரசன் சொல்ல அவரின் கையை பிடித்துக்கொண்ட மணிகண்டன் நெகிழ்ந்துபோனார். பின் அவர்களும் சொல்லிக்கொண்டு கிளம்ப மற்றவர்கள் கார்த்திக்கின் காரில் அமர்ந்துகொண்டனர்.

கண்மணியும் கார்த்திக்கும் முன் இருக்கையில் அமர்ந்துக்கொள்ள பேச்சி, சங்கரி, முத்துக்கருப்பி மூவரும் பின்னால் அமர்ந்துக்கொள்ள கிருஷ்ணனும் நாட்டரசனும் பைக்கில் வந்துவிட்டனர்.

இரவு உணவை முடித்துக்கொண்டு அன்றைய களைப்பில் அனைவரும் உறங்கிவிட மறுநாள் காலை கண்மணியுடனே கண்விழித்த கார்த்திக் பேச்சியிடம் மட்டும் சொல்லிக்கொண்டு கண்மணியுடன் காரில் கிளம்பினான்.

“என்னத்திக்கி அவதி அவதியா இழுத்திட்டி வாரேரு?. பெரிம்மா பணியாரம் ஊத்திட்டு இருந்திச்சி. உண்கவிட்டீரா?…”  என முறைக்க,

“ஏன்டி உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லலாம்னு வந்தா ஏன்டி கிங்கினிமங்கினி?…” என்று காரை நிறுத்தியவன் கீழே இறங்கிவிட்டான்.

“கோச்சிக்கிட்டாரோ?…” என்றபடி கண்மணியும் கீழே இறங்கி,

“இப்ப என்ன கேட்டிட்டேனி மூஞ்சிய தூக்கி முகரேல வெக்கிதீரு? ஒன்னு பேசல சாமி. சொல்லும்….” என்று அவனின் முன்னால் வந்து நிற்க அவனோ புன்னகையுடன் பாக்கெட்டில் இருந்த கவரை நீட்டினான்.

அதை பிரித்து பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை கண்டு முறைக்க,

“இனி உன் கூறுகெட்ட புருஷன் திரும்பவும் இந்த ஊர்ல தான் குப்பைகொட்ட போறான். அதுதான் இதுல இருக்கு…” என்று சொல்ல,

“இத்த வாயதெறந்தி சொன்னாத்தே என்னவா? பேப்பர நீட்டி இதில இருக்கின்னா படமா காட்டு இதி?. இத்த வீட்டடில சொல்லிருந்தா பெரிம்மாவ இனிப்பு பலகாரோ செய்யசொல்லிரிக்கலா…” என்று அதற்கும் குறை சொல்ல,

“ஏன்டி மனுஷனை ஸ்கோர் பண்ணவே விடமாட்டியா? எப்ப பார்த்தாலும் கவுன்ட்டர் குடுத்துட்டே இருக்க?. இதுல சாப்பாடு ஒண்ணுதான் குறை…” அழமாட்டாத குறையாக,

“அதே ஒத்த காரி இருக்கே இன்னொரு காரி எதிக்கி? பகுமானோ பண்ணாதேக சொல்லிப்பிட்டே…” கண்மணி தீவிரமாய் அவனை எச்சரிக்கும் குரலில் சொல்ல பட்டென சிரித்தவன்,

“அது கார் இல்லைடி ஸ்கோர். அதை விடு நான் பழையபடி இந்த ஊருக்கே ட்ரான்ஸ்பர்ல வந்துட்டேன். உனக்கு சந்தோஷம் இல்லையா?…” என கேட்க,

“எனக்கி வெளங்குதத்தேன் நாஞ்சொல்லுவே. அங்கன பாத்த வேலயத்தேன் இங்கன பாக்கபோறீக. ஊருமாத்தம் வந்தாப்பிடி நீரு பிளைனயா ஓட்டபோரீறு? போடற ஊசிய மொத வலிக்காட்டி போட கத்துக்கும். வந்துட்டாரு. போம்…” என்று முறுக்கிக்கொண்டு வந்த வழி நடக்க அவளை தாண்டிக்கொண்டு ஒரு இளநீர் குடுவை பறந்து போய் விழுந்தது. பதறிப்போன கண்மணி,

“எம்பிட்டி எகத்தாளோ ஒமக்கி? காலாங்காத்தால காட்டுக்கி கூட்டியாந்து லந்தா குடுக்கீரு? எகிறி நாளாச்சில. அதேன் அய்யாவுக்கி தவிச்சிகெடக்கி…” என்று சேலையை சொருகிக்கொண்டு வேகமாய் அவள் வர,

“கூட்டிட்டு வந்த என்னை விட்டுட்டு எங்க போற?…”

“அதுக்கி குடுவேல எறிவீகளோ? எம்பிட்டு நோவு குடுக்கி தெரிமா?…”

“அது உனக்கு தான் தெரியலை. நீ கூட தான் என் மேல இதை எரிஞ்ச. எனக்கும் எவ்வளவு வலிச்சது தெரியுமா?…” என கார்த்திக் பாவமாய் சொன்னாலும் அவனின் முகத்திக் காதல் கலந்து ததும்பியது.

கண்மணிக்கு முதலில் புரியவே இல்லை. அதன் பின்னே தான் ஞாபகம் வந்தது தங்களின் முதல் சந்திப்பும் தான் அவனை அடித்தது. மெதுவாய் அவனருகே கண்கள் மின்ன சென்றவள்,

“வேணுமின்னாய்யா செஞ்சாக? நீரு பேசின பேச்சி அப்பிடி. அதேன்…” என்று அசடுவழிய நிற்க ரசனையாய் பார்த்தான் கார்த்திக்.

“சுத்தி பாரு, அதே இடம். அதே கார். உன்னோட அதே தோப்பு. அதே நீ. அதே நான். அன்னைக்கில்லாத ஒண்ணு நம்மோன இந்த உறவும் அதோட சேர்ந்து இருக்கிற காதலும். அன்னைக்கு சொல்லாமல் விட்டதை இன்னைக்கு சொல்றேன்…” என்றவன் கண்மணியை நெருங்கி அவளின் கன்னம் தாங்கி கண்களுக்குள் பார்த்தவன்,

“நான் உன்னை காதலிக்கிறேன் கிங்கினிமங்கினி. ஐ லவ் யூ…” என சொல்ல அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒருவர் பெல் அடித்தபடி கடந்து செல்ல,

“ஆத்தி, யோவ் கொஞ்சமாட்டம் கூறு இருக்கா? இன்னிக்கி கெரகந்தே போ. அந்த ஆளு என்ன நெனப்பா? ஒம்ம சொல்லி என்ன? எனக்கி புத்தி இல்ல பாரு. ஆத்தி ஆராச்சும் கேட்டா அம்பிட்டுத்தேன்…” என்று அவனை திட்டிக்கொண்டு  காரில் ஏறிவிட அவளின் சுபாவம் அறிந்தவன் சிரித்தபடி காரை கிளப்பினான்.

“கலியாணமாயி கெழந்தட்டிப்பிடிச்சி. லவ்விஸாமில்ல லவ்விஸ்ஸு…” என்று கார்த்திக்கை முறைக்க அதிர்ந்துபோனான் கார்த்திக்.

“என்னது கிழடு தட்டிருச்சா? மனசாட்சி இருக்காடி கிங்கினிமங்கினி?…”

“பின்ன எளம ஊஞ்சலாடுதாக்கி? புள்ள பெத்தாலே அரக்கெழம். புரிஞ்சி வயசுக்காப்பிடி அடக்கிஒடிக்கி இரும்…” என்று புது பிலாசபி அவள் பேச அவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டவன்,

“போதும்டி கிங்கினிமங்கினி. வச்சு செய்யோ செய்யின்னு செஞ்சிட்ட. இப்ப நாஞ்சொல்லுதேன், நீ கம்மின்னி இருக்காப்பிடி. இல்லை என்னோட இஷ்டத்துக்கு  உன்னை இருக்கிபிடி தான்….” என்று மிரட்டினான்.

அவனின் பேச்சையா கேட்பாள் கண்மணி? பேச்சு மட்டும் அவளுக்கு ஓயவே இல்லை. கார்த்திக்கின் வாழ்வில் கூழாங்கற்களிடையே வைரமாய் மின்னிக்கொண்டு சலசலத்து செல்லும் தெளிந்த நீரோடையாய் கண்மணி என்றும் என்றென்றும் நீக்கமற நிறைந்திருப்பாள்.

அவன் என்கிற அடையாளம் மறைந்து அவள் என்கிற ஆர்ப்பரிப்பினுள் நிறைந்து  அவன் அவளாகி, அவள் அவனாகி நாம் என்னும் வெளிச்சதுளைக்குள் வீசும் தென்றலாய் அவர்கள் நேசம்.

சுபம்

Advertisement