Advertisement

மணியோசை – 29(1)

               கார்த்திக் விஷயத்தை சொல்லவுமே தன் வீட்டிற்கு போன் செய்ய போனாள் கண்மணி.

“இரு கண்மணி, இந்நேரம் சொல்ல வேண்டாம். போனாலும் பார்க்க விடுவாங்களோ என்னவோ? விடியவும் சொல்லிப்போம். நாம இப்போ கிளம்பினா எட்டுமணிக்குள்ள போய்டலாம்…” என்று சொல்லவும் கண்மணிக்கு மனதே இல்லை.

தனியாக எப்படி மணிகண்டன் சமாளிப்பார்? என்று கவலையாக இருந்தது.

ஆம், மகாதேவி இரவு பாத்ரூம் செல்லும் பொழுது தூக்ககலக்கத்தில் வழுக்கி விழுந்து வலது காலில் முறிவு. தலையில் வேறு காயம் என்பதால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது என்று வேறு பயம் காட்டிவிட மணிகண்டனால் அதை தாங்கமுடியவில்லை.

எத்தனை தைரியமானவராக இருந்தும் மகாதேவியை அந்த நிலையில் பார்த்தவரது இதயம் பலமிழந்து போக யாரேனும் உடன் இருக்கமாட்டார்களா என தவித்துபோனார்.

யாராவது உடன் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்து தயக்கத்துடன் தன் அண்ணனுக்கு அழைத்தவர் அவர் வருவதற்காக காத்திருந்தார். கார்த்திக்கிற்கு கூட சொல்ல தோன்றவில்லை.

ஆனால் கார்த்திக்கின் பெரியப்பா அவனுக்கும், கண்மணியின் வீட்டிற்கும் தகவல் சொல்லிவிட்டார்.

“ஒன்னும் பதட்டபடாத மணி. நாங்க எல்லாருமே இருக்கோம்ல. சின்ன கால் முறிவு தானே?…” என தேற்ற உடைந்துபோனார் மணிகண்டன்.

“பின் மண்டையில வேற அடிபட்டு ரத்தம் வருதுண்ணே. அதான் பயமா இருக்கு….” மணிகண்டன் மகாதேவியின் மேல் கொண்ட பாசப்பிணைப்பை பார்த்து புன்னகைத்துகொண்டார் பெரியப்பா.

எத்தனை கோபதாபங்கள் இருப்பினும் வெறுப்பு இருந்தாலும் மனைவி என்பவள் தனி அல்லவா?

இவர்கள் இருவரும் அமர்ந்திருக்க மகாதேவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்து பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லும் வரை ஒருவித அலைப்புருதலிலே இருந்தார் மணிகண்டன்.

டாக்டர் சொல்லிவிட்டு நகர பேச்சியும், நாட்டரசனும் கிருஷ்ணனுடன் வந்துவிட்டனர்.

“என்னாச்சிக அண்ணே?…” என பேச்சி கேட்கவும் அவரின் குரலில் நிமிர்ந்தவருக்கு கண்கள் கலங்கிப்போனது.

“அட என்னத்துக்கி கண்ண கசக்கிட்டி? எல்லாஞ்செரியா போவும். கண்ணே தொடங்க…” என நாட்டரசன் மணிகண்டனின் மறுபுறம் அமர்ந்து அவரை தேற்ற ஏதோ யானை பலம் வந்ததை போல உணர்ந்தார் மணிகண்டன்.

உறவுகள் கொடுக்கும் தைரியமும், நம்பிக்கையுமே தனி அல்லவா? அதிலும் மகாதேவியின் குணத்திற்கு இப்படிப்பட்ட உறவுகள் தங்களை தாங்க புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்றுதான் நினைத்தார் மணிகண்டன்.

காலை மகாதேவி கண்விழிக்கும் வரை அங்கே இருந்த பெரியப்பா அவரை பார்க்க உள்ளே சென்றார்.

“என்னம்மா இப்ப வலி பரவாயில்லையா?…” என ஆறுதலாய் கேட்க வலியுடன் நிமிர்ந்து பார்த்தவருக்கு சுருக்கென்று இருந்தது.

சுளித்த முகத்துடன் பார்வையை திருப்பிக்கொண்ட மகாதேவி தன் காலையும், நெற்றியையும் தடவிப்பார்த்தார். கண்ணீர் முட்டியது.

“இப்ப என்னத்துக்கு இங்க வந்தீங்க? நான் கால் உடைஞ்சி இருக்கறதை பார்த்து சந்தோஷப்படவா?. பார்த்தாச்சுல, கிளம்புங்க. நீங்க வரலைன்னு யார் அழுதா?…” என விஷத்தை கக்குவதை போல பேச பெரியப்பாவின் முகம் வாடிவிட்டது.

வெளியே பேச்சியுடன் பேசிக்கொண்டிருந்த மணிகண்டனிடம் வந்தவர் எதையும் காண்பித்துகொள்ளாமல் கிளம்புதவாய் சொல்லி சென்றார். அவரின் முகமாற்றத்தை கண்டுகொண்ட மணிகண்டன் அவரின் கையை பிடிக்க,

“அட என்னங்கண்ணே அதுக்குள்ள கெளம்புதன்னு சொல்லுதீக? அக்கா இட்டிலியும் சாம்பாரும் வெச்சி குடுத்தனுப்பிருக்கி. ரெண்டு வா உண்கிட்டு போவம். ஒங்களோடன்ன அண்ணேனும் உண்கிப்பாக…” என்று பேச்சி சொல்லி கொண்டுவந்திருந்த பாத்திரத்தை பிரிக்க,

“மணி இப்படிப்பட்ட மனுஷங்க கிடைக்க குடுத்து வைக்கனும்டா நீ. தொலைச்சுடாத…”

“ஆமாண்ணே. புரியுது…” என்றவருக்கும் விழிகள் கசிந்தது.

“ஒக்காருகே…” என்றவர் இருவருக்கும் தட்டின் மீது இட்லியை வைத்து சாம்பார் சட்னியை ஊற்ற இருவரும் வேண்டாமென மறுக்காமல் சாப்பிட்டனர்.

பசிக்காக அல்ல, பேச்சியின் அன்பிற்காக. அவர்கள் குடும்பத்தின் மீதான பாசத்திற்காக. இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் உள்ளே மகாதேவி அவசர அலாரத்தை அடிக்க மணிகண்டன் எழ போனார்.

“இருகண்ணே. நா போயி பாக்குதேன்…” என்று நாட்டரசனிடம் கண்ணை காண்பித்துவிட்டு உள்ளே பேச்சி செல்ல நர்ஸ் தான் வந்திருக்கிறாள் என நினைத்து,

“பெட்பேன் எடுத்துவை…” என சொல்ல பேச்சிக்கும் புரிந்தது. சத்தமில்லாமல் எடுத்துவந்து மகாதேவியின் பெட்டினருகே வர அருகில் கேட்கும் வளையல் சத்தமும், நாசியை நிறைத்த மஞ்சள் வாசனையும் மகாதேவியின் கண்களை திறக்க வைத்தது.

“கொணந்தானுக மதினி. வலி மட்டுப்பட்டிச்சா?…” என கேட்டுக்கொண்டே பெட்பேனை வைக்கப்போக ஆத்திரத்துடன் அதை பிடுங்கி எறிந்தார் மகாதேவி.

அது வாசலை தாண்டி வந்து விழுந்தது. சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு அவர்கள் வர சரியாக கண்மணியும், கார்த்திக்கும் வந்துவிட்டனர். கிருஷ்ணனிடம் கார்த்திக் குழந்தையை வீட்டிற்கு அனுப்பிவிட்டான் இங்கே வேண்டாம் என்று.

“அப்பா…” என்று கார்த்திக் அழைத்ததுமே நிமிர்ந்து பார்த்தவர் நாட்டரசனையும் கண்மணியும் பார்க்கமுடியாமல் தலைகுனிந்து நின்றார்.

“வெளிய போங்க, உங்களை நான் கூப்பிட்டேனா? போங்கன்னு சொல்றேன்ல. பிடிக்காதுன்னு தெரிஞ்சும் எதுக்காக வந்து உயிரை எடுக்கறீங்க?…” என தன் பலத்தை எல்லாம் திரட்டி மகாதேவி கத்த தலை பயங்கரமாய் வலி எடுத்தது.

அனைவரும் வேகமாய் உள்ளே செல்ல வந்திருப்பவர்களை பார்த்த மகாதேவி கோபத்துடன் முகம் திருப்பிகொண்டார்.

“நீ பன்றது கொஞ்சமும் சரியில்லை மகா…” என மணிகண்டன் இறைஞ்சும் குரலில் சொல்ல தாய் தலையை பிடித்தபடி வலியை பொறுத்து கொள்வதை கவனித்த கார்த்திக்,

“எல்லாரும் வெளில இருங்க. நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்ல பேச்சியின் முகம் வாடிப்போனது. கண்மணி உட்பட அனைவரும் அறைக்கு வெளியில் நிற்க கார்த்திக் மட்டும் தாயை நெருங்கினான்.

தலையை ஆராய்ந்து கத்தியதில் ரத்தம் ஏதும் வருகிறதா என பரிசோதித்தான். காலையும் பார்த்தவனுக்கு தாயின் நிலை கண்டு பதறியது.

“தலையில ஸ்டிச்சஸ் போட்ருக்காங்கம்மா. இந்த நிலைமையில உங்களை பார்த்துக்க வந்தவங்கட்ட போய் ஏன் கோபத்தை காட்டறீங்க? என்னம்மா?…” கலங்கிப்போய் அவன் கேட்க,

“நர்ஸ் வர சொல்லு கார்த்திக். என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை. ப்ளீஸ்…” என்று சொல்லும் போதே மகாதேவியின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்க ஆரம்பித்தது.

மகாதேவியின் படுக்கைக்கு தலைமாட்டில் உள்ள ஜன்னல் வழியே அவர் பேசியது கேட்க கார்த்திக் வெளியே வந்து எடுக்கும் முன்னே அதை பேச்சி எடுத்து நிற்க,

“அம்மா, எனட்ட குடும்ங்க…” என்று கண்மணி வாங்கும் முன் கார்த்திக்  வந்துவிட்டான்.

“நீங்க ஏன் அத்தை? ப்ளீஸ் என்கிட்டே குடுங்க…” என பிடுங்காத குறையாக வாங்கி உள்ளே வர,

“கார்த்திக், நீ வேண்டாம். நர்ஸை வர சொல்லு…” பல்லைக் கடித்துகொண்டு சொல்ல,

“அம்மா நான் ஒரு டாக்டர்…”

“ஆனா நீ என் மகன் கார்த்திக்…” என மறுப்பாய் சொல்லும் பொழுதே நர்ஸ் வந்துவிட்டாள்.

வந்ததும் பெட்பேனை வாங்கி கார்த்திக்கை வெளியில் நிற்குமாறு சொல்லி மகாதேவியை கவனித்தாள்.

அவள் வந்து சென்ற பின் ட்யூட்டி டாக்டர் வந்து பார்த்துவிட்டு செல்லவும் மணிகண்டன் மட்டும் உள்ளே வந்தார். கார்த்திக்கிற்கு ஒருமாதிரியாக இருக்க ஜன்னலுக்கு அருகிலேயே அமர்ந்துகொண்டான். உடன் கண்மணியும்.

சாப்பிட சொல்லியதற்கு கூட மாட்டேன் என்று சொல்லிவிட யாரும் ஒன்றும் பேசவில்லை அவனின் மனநிலை அறிந்து.

தாய்க்கு இப்படி ஆனது ஒருபுறம், யாரையும் நெருங்கவிடாமல் பிடிவாதமாய் முகம் திருப்புவது ஒருபுறம் என அவனை வதைத்தது. கண் மூடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

பேச்சியை இருத்திவிட்டு நாட்டரசன் மட்டும் கிளம்பிவிட மணிகண்டனுக்கு மகாதேவியை அந்த நிலையில் கண்டிக்க முடியாமல் திணறிப்போனார்.

கிளம்பும் பொழுது நாட்டரசன் உள்ளே வந்து பொதுவாய் கிளம்புவதாய் சொல்லி செல்ல மகாதேவி கார்த்திக்கை தவிர அனைவருமே கிளம்பிவிட்டதாய் நினைத்தார்.

“அவங்களுக்கு எல்லாம் ஏன் சொன்னீங்க?…” நாட்டரசன் சொல்லி சென்ற ஒரு ஐந்து நிமிடத்தில் இவர் கேட்க,

“மகா நேத்து நீ இருந்த நிலமையில என்னால தனியா சமாளிக்க முடியலை மகா. நீ ஏன்மா இப்படி இருக்க?…”

“இதுநாள் வரை நான் தனியா யாரும் வேண்டாம்னு தானே இருந்தேன். இப்போ எனக்கு முடியலைனா? உங்களால முடிஞ்சா என்னை பார்த்துக்கங்க. இல்லைனா விடுங்க…”

“என்ன பேசற மகா?…”

மணிகண்டன் பதற அனைத்தும் தெள்ளதெளிவாய் ஜன்னலின் வழி கேட்டது. வெளியில் அமர்ந்திருந்த கார்த்திக்கிற்கு கோபம் வந்துவிட வேகமாய் எழுந்துவிட்டான்.

கண்மணி தான் அவர்கள் பேசட்டும் அமைதியாக இருக்கும் படி கார்த்திக்கை பிடித்து நிறுத்தி மீண்டும் அமரவைத்தாள். பேச்சி நாட்டரசனுடன் ஹாஸ்பிட்டல் வாசல் வரை சென்றிருக்க இவர்கள் பேச்சு தொடர்ந்தது.

“நான் சரியாதான் பேசறேன். எனக்கு அவங்களை புடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் வரவழைக்கனும்? என்னால அவங்க முன்னாடி இப்படி நடமாட முடியாம படுத்திருக்க முடியாது. அவங்க என் மேல அன்பா பார்த்தா எனக்கு அது பரிகாசமா தான் தோணும்…”

மணிகண்டன் பேசவே இல்லை. மனதில் இருப்பதை கொட்டி தீர்க்கட்டும் என அமைதியாக இருந்தார்.

“புடிக்கலைன்னு சொல்லி ஒதுக்கிட்டு எனக்கு முடியாதப்போ அவங்களோட உதவியை வாங்கறதை நான் அவமானமா நினைக்கிறேன். அவங்கள வேணாம்னு சொல்லிட்டு எனக்கு முடியலை வந்து பாருங்கன்னு நிக்கிறது எனக்கு பிடிக்கலை…”

“அவங்க நம்ம மேல வைக்கிற அக்கறைம்மா. அதனால தான் வந்து பார்க்கறாங்க…”

“அக்கறை படற அளவுக்கு நான் ஒன்னும் செஞ்சிடலை அவங்களுக்கு. இன்னைக்கு அக்கறைன்னு செஞ்சிட்டு நாளைக்கு நான் தப்பு பண்ணும் போது உனக்கு அவங்க எப்டியெல்லாம் செஞ்சாங்கன்னு சொல்லி காட்டவா? எனக்கே தெரியும் அவங்க எல்லாரையும் நான் துச்சமா தான் நினைச்சேன். அப்படி நினைச்சிட்டு இன்னைக்கு எனக்கு அவங்க வந்து பார்த்ததும் ஐயோ இவ்வளவு நல்லவங்களையா நாம உதாசீனபடுத்தினோம்னு நினைக்க என்னால முடியாது…”

“திடீர் நல்லவளா நான் ஏன் மாறனும்? எனக்கு ஒன்னு நல்லது செஞ்சிட்டா நானும் மாறிடனுமா? அது உண்மையான மாற்றமாவா இருக்கும்? அப்ப திரும்ப எனக்கு பிடிக்காததை செஞ்சா திரும்பவும் நான் கெட்டவளா மாறனுமா? அது எதுக்குன்றேன்? ஆரம்பத்திலையே எனக்கு அவங்க மேல ஒரு அபிப்ராயம் விழுந்திருச்சு…”

“மாத்திக்க, மாறிடுன்னு சொன்னா என்னால முடியலை. ஏன் என்னை கட்டாயப்படுத்தறீங்க? நான் இப்படித்தான்னு முதல்லையே தெரியும் தானே? இங்கன்னு இல்லை என் குடும்பம் ,என்னை பெத்தவங்க இப்படியே என்னை ஒருவித வறட்டு கௌரவத்தோட விட்டுகுடுக்காத தன்மையோட வளர்த்துட்டாங்க. தப்பு, நான் வளர்ந்துட்டேன். திடீர்ன்னு மாத்திக்கன்னா?…”

“சின்னதுல இருந்தே இப்படி இருந்துட்டு நான் ஏன் மத்தவங்களுக்காக மாறனும்னு எனக்கு புரியலை. உங்களுக்கு புடிச்சது சேர்ந்துட்டீங்க. எனக்கு பிடிக்கலை விலகி நிக்கிறேன். எல்லாரும் என்னை சீண்டும் போது தான் கோபம் கண்ணை மறைச்சு நிறைய வேணுமின்னே பண்ணினேன். அவங்க முன்னால என்னோட கெத்தை விடாம இருக்க….”

“அவங்க யாருங்க எனக்கு பார்க்க? அவங்களுக்கு என்ன தலையெழுத்தா? எதுக்காக? எனக்கு காய்ச்சல்ன்னு சொன்னது குடும்பத்தோட வரிஞ்சுகட்டிக்கிட்டு வந்து நின்னு எனக்கு ஊழியம் பண்ண சொன்னா? நான் கேட்டேனா? இல்லையே. என்னால அவங்க முன்னால படுத்திருக்க முடியலை…”

“என்னோட நிலைமை அவங்களை எதிர்பார்த்து நிக்கிற அளவுக்கு ஆகிடுச்சேன்ற வெறுப்புல தான் அவங்களை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தினேன். வேணும்னு தான் செஞ்சேன் அப்படியாவது அவங்க போய்டுவாங்கன்னு. அவங்களை எவ்வளவு கீழா பார்த்தேன்னு எனக்கு நல்லாவே தெரியும்…”

“அப்படி இருக்கறப்ப நான் படுக்கையில இருக்கும் போது என் முன்னால அவங்க நடமாடிட்டு எனக்கு வேணும்ன்றதை அவங்க கைல இருந்து எதிர்பார்க்கிற நிலைமை எனக்கு பிடிக்கலை. என் முன்னால இது வேணுமா அது வேணுமான்னு அக்கறையா விசாரிக்கறது இது எல்லாமே எனக்கு கோபத்தை உண்டாக்குச்சு. அதான் அப்படி பண்ணினேன். அவங்க என்னன்னா பொண்ணுக்காக பொண்ணுக்காகன்னு தேமேன்னு இருக்காங்க. கடுப்பாகும்ல…”

“இவ்வளோ நடந்திருக்கு. இத்தனை பேர் என்னை மாறுன்னு சொல்றீங்க. புரிஞ்சுக்கோன்னு வற்புறுத்தறீங்க. ஒண்ணை கவனிச்சீங்களா? உங்க மருமக என்னைக்குமே என்னை புரிஞ்சிக்கோங்கன்னு  நின்னதே இல்லை. என்னை நானா இருக்கவிட்டா. அவ அவளா இருந்தா. இதுல கண்டிப்பா அவளை பாராட்டத்தான் செய்யனும். அவ அளவுக்கு நீங்க யாருமே இல்லை…”

“இந்தளவுக்காவது கண்மணியை நீ புரிஞ்சிக்கிட்டது அவளை ஏத்துக்கிட்டது சந்தோஷமா இருக்கு மகா…” என மணிகண்டன் சொல்ல,

“இங்க தான் தப்பு பன்றீங்க. நான் அதை ஒரு குறிப்பா அவ இப்படின்னு சொன்னேன். நீங்க அதை வேற மாதிரி பார்க்கறீங்க. நான் அவளோட குணத்தை பத்தி சொன்னேன். அதுக்கு நீங்க பூசற சாயம் வேற. எனக்கு இன்னும் அவளை பிடிக்காது தான். எனக்கு என் மகனுக்கு என் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு வரனும்னு ஆசைப்பட்டு நிறைய கனவெல்லாம் கண்டுவச்சிருந்தேன். அது நடக்காதுன்னு தெரிஞ்சிப்ப நான் தவிச்சது எனக்கு தான் தெரியும்…”

“அது எல்லாமே உடைஞ்சு போய் இருக்கறப்ப என்னோட எதிர்பார்ப்புல ஒரு சதவீதமும் இல்லாத ஒருத்திய மருமகன்னு கொண்டுவந்து நிறுத்தினா என்னால எப்படி ஏத்துக்க முடியும்? கண்டிப்பா வெறுப்பு தானே வரும்? அதையும் என் மகனுக்காக நான் செஞ்சேன்…”

“எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? சத்தமில்லாம அவ வீட்டாளுங்களை பார்த்து கல்யாணத்தை நிறுத்தியிருக்க முடியாது என்னால? கண்டிப்பா முடியும், போய் நாலு கேள்வி கேட்டிருந்தாளோ? இல்லை அவங்கட்ட எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லியிருந்தாளோ பொண்ணை கட்டிகுடுத்திருப்பாங்களா? கண்டிப்பா மாட்டாங்க. அதையும் என் மகனுக்காக நான் செய்யலை…”

“இதெல்லாம் பண்ணலைன்றதுனால நான் நல்லவன்னு காட்டிக்க தயாரா இல்லை. என்னை நீங்க நம்பனும்னு எனக்கு சப்போர்ட் செய்யனும்னும் நான் இதை சொல்லலை. எனக்கு தோனுச்சு சொன்னேன். அவ்வளோ தான். நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பேன்…”

“என் இஷ்டப்படி கல்யாணம் நடக்கலைன்னு அவங்களை பார்க்கறப்ப எல்லாம் குத்தி குத்தி பேசத்தான் செஞ்சேன். எங்கே அவ வீட்டு மனுஷங்களுக்கு அதிக முக்கியத்துவமாகிடுமோன்னு பயத்துல தான் என்னோட இருப்பை எதோ ஒரு விதமா காமிச்சுட்டே இருந்தேன். அதுலயும் எல்லாரும் அவங்களையும் என்னையும் கம்பேர் பண்ணி பேசறது என்னோட கோபத்தை அதிகமாக்கத்தான் செஞ்சது…”

“நான் தப்பாவே இருந்துட்டு போறேன். அதுக்குன்னு என்னை கவனிச்சுக்கறேன்னு அவங்களாம் தியாகிபட்டம் வாங்க நான் ஏன் காரணமா இருக்கனும்? பிடிச்சவங்கட்டையே எதுவும் வாங்க பிடிக்காது எனக்கு. பிடிக்காதவங்க மூலமா வர உதவியை மட்டும் நான் எப்படி ஏத்துப்பேன்?…”

“ஏறி மிதிச்சிட்டு ஐயோ இவங்களை போயா மிதிச்சோம்ன்ற  குற்றவுணர்வு எனக்கு வேண்டாம். நான் இப்படித்தான் இருப்பேன். இப்படியே இருந்துட்டு போறேன். என்னை கார்த்திக் கூட பார்க்க வேண்டாம். யார் முன்னாடியும் நான் எதிர்பார்ப்போட இருக்க விரும்பலை…”

“உங்களால என்னை பார்துக்க முடிஞ்சா பாருங்க. இல்லையா ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்ங்க…” என்றவர் முடிந்தது என்பதை போல கண்களை மூடிக்கொண்டார்.

வெளியில் இதை அனைத்தையும் கேட்டுகொண்டிருந்தவர்கள் என்னமாதிரி உணர்ந்தனர் என்றே புரியாமல் அமர்ந்திருந்தனர்.  மகாதேவிய எந்த விதத்தில் சேர்ப்பது என புரியாமல் தவித்திருக்க கார்த்திக்கை எழுப்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் கண்மணி.

அப்போதுதான் தன் தாயும் ஓரமாக நின்றிருப்பதை கண்டாள். கார்த்திக்கிற்கு எதையும் பார்க்கும் நிலையில் இல்லை. அவள் இழுத்த இழுப்பிற்கு எழுந்து சென்றான்.

“பாத்தீகளா? இப்பவாச்சும் அவுகளை இப்பிடியே இருக்க விடும். சும்மா அவள புரி இவள பறின்னு புத்தி சொல்லிட்டே இருந்தியன்னா இப்பிடித்தேன் கடுப்பாவும். வெளங்குதா?…” என கேட்க தலையை மட்டும் அசைத்தான் கார்த்திக்.

“யோவ் டாக்டரே, என்ன முழிய்யா இதி?…” என்று அவனின் கையை கிள்ளிவைக்க,

“ஸ்ஸ்யா….” என்ற அலறலுடன் கையை தடவினான் கார்த்திக்.

“அப்ப சொரண இருக்குதி…” என சிரிப்புடன் அவனை பார்க்க,

“உன்னை உன் வீட்டை பிடிக்கலைன்னு சொன்னாங்கடி என் அம்மா. நீ சிரிக்கிற…”

“அதுக்கின்னி அழுவ சொல்லுதீகளா. அழுதாப்பிடி பிடிக்கிருமாக்கி? அட போம்மய்யா. ஒருத்தவகள புடிக்க, புடிக்காம இருக்கன்னி திணிக்கவா முடியு? ஆராலையு முடியாதி. புத்தி இருந்தாங்காட்டி வெளங்கிக்கனு. இனிமேட்டாச்சும் கம்மின்னி கெடக…” என்ற கண்மணி எழுந்து செல்ல அவளையே பார்த்தபடி இருந்த கார்த்திக்,    

“இவ்வளவு யோசிக்கறவங்க எனக்காகன்னு கூட உன்கிட்ட மட்டுமாவது நல்லவிதமா நடந்துக்கலாம்ல?…” அவளை பின்தொடர்ந்து வந்து அவன் கேட்க,

“எதுக்கிங்கறே? ஒங்கம்மா நீக சொல்லுததுக்காட்டி யே மாறனு? அவுகளுக்கு என்னிய பிடிக்காட்டியே போவட்டுமே? என்ன கெட்டுப்போச்சி? போயி ஊசி குத்தும். எப்ப பாத்தாலு பஞ்சாயம்பண்ணிக்கிட்டி…” என்று சொல்ல இவன் தான் வாயை மூடவேண்டியதாய் போனது.

Advertisement