Advertisement

மணியோசை – 27(1)

                அழைப்பை ஏற்காமல் விட்டால் மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே தான் இருப்பார் என நன்றாகவே தெரிந்தது கார்த்திக்கிற்கு. எனவே இவனே அழைப்பை துண்டித்துவிட்டு கூப்பிட்டான்.

“எங்க இருக்க கார்த்திக்?…” என எடுத்ததும் மகாதேவி கேட்க அவரின் குரலில் தெரிந்த வெப்பம் இங்கே இவனை பொசுக்கியது.

“நீங்க கேட்கிறதுல இருந்தே தெரியுதேம்மா. உங்களுக்கு நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சிருக்குன்னு. தெரிஞ்சுட்டே கேட்டா என்ன பதில் சொல்ல?…”

“கார்த்திக்…” மகாதேவி பல்லை கடிக்க,

“எங்க இருக்கேன்னு நீங்க நினைக்கிறீங்களோ அங்க தான் இருக்கேன். போதுமா?…” என்று சொல்ல,

“ஏன் கார்த்திக் என்கிட்டே சொல்லிட்டு கூட போகமுடியாத அளவுக்கு நான் வேண்டாதவளா போய்ட்டேனா கார்த்திக்?…” என உருக்கமாய் கேட்க,

“இதுக்கும் அதுக்கும் என்னம்மா சம்பந்தம்?…”

“எனக்கு தெரியும்டா உன் பொண்டாட்டி பேச்சை கேட்டுத்தானே நீ இப்படியெல்லாம் நடந்துக்கற?…”

“இங்க பாருங்கம்மா, உங்கமேல எனக்கான அன்பும் பாசமும் என்னைக்கும் போலதான் இருக்கு. நீங்களா அதுக்கொரு வடிவம் கொடுத்தா நான் பொறுப்பாக முடியாதும்மா. சும்மா இதுல கண்மணியை இழுக்காதீங்க ப்ளீஸ்…”

கார்த்திக்கிற்கு ஆயாசமாய் இருந்தது மகாதேவியை எப்படி சமாளிக்கவென. எதற்கெடுத்தாலும் குறை சொல்லிகொண்டே இருக்க விளக்கம் சொல்லியும் புரிந்துகொள்ளாதவரை என்ன சொல்லவென தெரியாமல் அமைதியாய் இருந்தான்.

“நீ உன் மாமனார் வீட்டுக்கு போகனும்னு ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லியிருக்கலாம்ல. சந்திராவும் மாப்பிள்ளையும் பேசிக்கிட்டதை வச்சு தான் எனக்கு தெரியும். என்ன கார்த்திக் இது?…”

“சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்கம்மா? உண்மையை சொல்லுங்க…”

“அங்க உனக்கு செட் ஆகாது கார்த்திக். நீ அங்க போய் இருந்தா உன்னால ரிலாக்ஸா இருக்க முடியாது. உன் வேவ்லென்த் வேற, அவங்க வேற. அதுங்க எல்லாம்…”

“அம்மா, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அவங்களும் மனுஷங்க தான். இன்னும் சொல்லபோனா நம்மை விட மனுஷத்தன்மை உள்ளவங்க. சும்மா எதையாவது பேசாதிங்க. இப்ப என்ன வேணும்?…”

“நீ கிளம்பி இங்க வா…”

“இதுக்குத்தான் உங்கட்ட சொல்லாம வந்தேன். திரும்பவும் ஆரம்பிக்கிறீங்க. ஊருக்கு திரும்ப கிளம்பும் போது வந்துட்டு தான் போவேன். இப்ப போனை வைங்க…” என சொல்லி வைத்துவிட்டான்.

மகாதேவி போனையே வெறித்துப்பார்த்து நிற்க மணிகண்டன் வந்து நின்றதோ கார்த்திக்கிடம் இவர் பேசியதை கேட்டதோ எதையுமே அறியவில்லை மகாதேவி.

போன் பேசிவிட்டு அவன் உள்ளே வந்து மீண்டும் மற்றவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

அருள் உறங்கிவிட கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு அவனை தூக்கிக்கொண்டு மாடிக்கு வந்தவன் மகனை கட்டிலில் படுக்கவைத்து தானும் அருகில் படுத்து உறங்கியும் போனான்.

தாயை பற்றிய கவலை கரையானாய் அரித்தும் ஏனோ உறக்கம் அத்தனை வேகத்தில் தழுவியது அவனை.

மதிய விருந்து தயாராகிவிட்டதால் அனைவரும் கார்த்திக் வரட்டும் என காத்திருக்க கண்மணி தான் தேடி வந்தாள். கதவை திறந்துவைத்தே உறங்கியிருந்தான் கார்த்திக்.

வந்து பார்த்ததுமே நன்றாக தூக்கத்தில் இருக்கிறான் என்பது தெரிந்துபோனது. எப்படி எழுப்பவென யோசனையுடன் அவள் பார்க்க எழுப்ப மனமே வரவில்லை. சரி இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் மற்றவர்களை சாப்பிட சொல்லுவோம் என கண்மணி திரும்பும் முன் கார்த்திக்கின் செல்போன் வைப்ரேட் ஆகியது.

எடுத்து பார்த்தவள் மாமியார் தான் அழைக்கிறார் என்பதை பார்த்து அட்டன் செய்து பேச ஆரம்பித்தாள்.

“சொல்லுக அத்தே. சாப்புட்டீகளா? என்ன செய்யுதீக?…” என இயல்பாக அவள் கேட்க இதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது போன்ற மெத்தனத்தில்,

“கார்த்திக் எங்கே?….” என்றார். கோபத்திலும், அலட்சியத்திலும் வந்த வார்த்தையை கண்டுகொள்ளவே இல்லை.

“அவுக ஒறங்குதாக…” என இவள் சொல்ல,

“அப்படி சொல்ல சொன்னானா?…”

“ஓஹ் சொல்லியும் சொல்லமாமோ? எங்கூறுக்கு இதி வெளங்காம போச்சி பாருக? அவுக எந்திச்சதும் கேக்குதேன் நீக சொனாப்ல சொல்லனுமான்னு?…” கண்மணி தடாலடியாக போட்டு தாக்க,  

“ஏய் என்னடி திமிரா?…”என மகாதேவி உஷ்ணமாக,

“ஒறங்குதாகன்னு சொல்லியும் சடவா பேசறது நீகதேன். எந்திச்சதும் பேச சொல்லுதேன்னும் சொல்லிப்பிட்டேன். இதுக்கி மேல என்னத்த சொல்ல அத்தே? நீகளே சொல்லுக…” கண்மணி என்னவோ சாதாரண குரலில் சொன்னாலும் மகாதேவிக்கு அது நக்கலில் பேசுவதை போல இருக்க,

“என்னடி என் மகன் உன் முந்தானைக்குள்ள இருக்கற திமிருல ஆடறியா? ஆடு, ஆடு. எவ்வளோ நாள்ன்னு நானும் பார்க்கறேன்…”

“நீகளா ஒன்ன நெனச்சி பேசுதப்ப நா என்ன சொன்னாலும் கேக்கமாட்டீக. வெக்கிதேன் அத்தே…” என கண்மணி வைத்துவிட அதில் இன்னும் கடுப்பான மகாதேவி மீண்டும் அழைத்துவிட்டார்.

“சொல்லுக அத்தே, எதாச்சும் பேச மறந்துட்டீகளா?…” என கேட்க,

“எவ்வளவு தைரியம் இருந்தா நான் பேசிட்டு இருக்கும் போதே லைனை கட் பண்ணுவ?…”

“அய்ய அத்தே நானு…” என கண்மணி பேசும்பொழுதே,

“நான் தானே போன் பண்ணேன். நான் தான் கட் பண்ணுவேன்…” என்று போனை வைத்துவிட சிலநொடிகள் கண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. பின் அதை நினைத்து சத்தமாகவே சிரித்துவிட அடித்துபிடித்து எழுந்தான் கார்த்திக்.

“என்னடி காதுல இடி விழற மாதிரி சிரிக்கிற?…” என பயந்துபோய் அவன் கேட்க,

“அச்சோ, சத்தமா சிரிச்சிட்டேனா? சரி உண்கிட்டு வந்து ஒறங்குக…” என அவனை அழைக்க அவளின் கையில் இருந்த தன்னுடைய் மொபைலை பார்த்தவன்,

“என்னவாம அம்மா கால் பண்ணினாங்களா?…” என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்று முகத்தை கழுவ சென்றான்.

“ஒறங்குதவுக துணிய மாத்திட்டு ஒறங்கினாத்தேன் என்னவா?…” அவள் கேட்டு முடிக்கவும் முகத்தை கழுவிவிட்டு வந்தவன்,

“அருள் தூங்கிட்டான். கையை விடவே இல்லை. அதான் நானும் படுத்துட்டேன்…” என சொல்லி தலையை வாரிவிட்டு மொபைலை வாங்கி  பார்த்தான்.

இருபத்தைந்து முறை அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது மகாதேவியிடமிருந்து. பார்த்தவனுக்கு கவலையாய் போனது.

“அவுகள பத்தித்தேன் தெரியுமில்ல. பொறவு என்னத்துக்கி வெசனப்படுதீக?…”

“ஆக உன் மாமியார் உன்கிட்ட என்ன பேசினாங்கன்னு மேடம் சொல்லமாட்டீங்க…” கார்த்திக் சிரிப்புடன் கேட்க,

“ம்க்கும், ஒக்காந்து கத பேசத்தேன் நேரமிருக்காக்கும். அட வாம்மய்யா…” என்று அவனின் கையை பிடித்து இழுக்க,

“ஏய் கிங்கினிமங்கினி அருள் தனியா தூங்கறான்…”

“வீட்டுக்குள்ள தான ஒறங்குதான். அண்ணேன வரசொல்லிடுவம்…” என சொல்லி முன்னால் நடக்க கார்த்திக் மகனுக்கு அணைவாய் தலையணைகளை சுற்றி வைத்துவிட்டு கண்மணியை பார்த்து முறைத்தான்.

“இடஹி கூட எடுத்துவைச்சிட்டு வர தோணுதாடி கிங்கினிமங்கினி…”

“அதேன் நீக வெக்கிதீகள. பொறவு நா என்னத்துக்கி?…” அதற்கும் சால்ஜாப்பாய் சொல்ல,

“நீ இருக்க பாரு…” கார்த்திக் சிரித்துவிட்டான்.

“செரி செரி போவம்…” என அவள் முன்னால் செல்ல கார்த்திக் அவளுடனே நடந்தான்.

கீழே சென்றதும் அனைவரும் கார்த்திக்கை சூழ்ந்துகொள்ள பரபரப்பாய் பந்தி ஆரம்பித்தது வந்திருந்த சொந்தங்களுக்கு.

“ஒன்னைய எங்களா தேடுதேன் அண்ணே. எங்க போன?…” வெளியில் இருந்து வந்த கிருஷ்ணனிடம் கண்மணி கேட்க,

“காலயில மாரியத்த வந்திருந்திச்சி. அந்தாளுக்கு மேலுக்கி முடியல. அதேன் அம்மா கறிக்கஞ்சிய குடுத்துட்டி வரசொன்னாக. என்ன மணி?…”

“ஒம்மருமவே மாடியில ஒறங்குதான். இவரு சாப்புட்டு வாரவரிக்கி அங்க செத்த இருண்ணே…” என கண்மணி சொல்லவும்,

“கூறிருக்கா மணி. புள்ளைய ஒத்தேலே விட்டுப்பிட்டு வந்தியாக்கும்…” என அவளை திட்டிவிட்டு வேகமாய் மாடிக்கு சென்றான் கிருஷ்ணன்.  

அதை சரியாக கவனித்த கார்த்திக் வாய்க்குள் சிரிக்க கண்மணி மிதப்பாய் பார்த்தாள்.

“அவசரப்பட்டு சிரிச்சுட்டேன். இவ பார்வையே சரியில்லையே?” என கார்த்திக்கின் மனதினுள் அபாயமணி ஒலிக்க அவளை கெஞ்சலாய் பார்த்துவைத்தான்.

“மாமா, காலலே அவுக செரியா உண்கவே இல்ல. பாத்து கவெனிக…” என்று மாரிமுத்துவிடம் கார்த்திக்கை பிடித்துகுடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

சொல்லவும் வேண்டுமா? திணற திணற அவனை கவனிக்க பார்த்த கண்மணிக்கே பாவமாய் போனது.

“வச்சு செஞ்சிட்டடி கிங்கினிமங்கினி…” என்னும் புலம்பலோடு இலையை மூடிவிட்டு எழுந்துவிட்டான்.

“மணி இத போயி குடிக்க குடுடி. மனுசே கெறக்கமா தெரியாவுக…” என சங்கரி மண்குடுவையில் நீர் மோர் கலந்து குடுக்க அதை எடுத்துபோனவள் கார்த்திக் போன் பேசிக்கொண்டிருந்த நேரம் பார்த்து அறையில் வைத்துவிட்டு அருளை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள்.

மதிய நேரம் அனைவரும் உண்டுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு செல்ல மாலை நான்கு மணியை நெருங்கியது.

“பெரிம்மா கறவைக்கி வந்துடுவாகள. நா போயி கூட்டி கழுவிட்டு வாரேன்…” என கண்மணி எழுந்து செல்ல,

“நீ புள்ளைய பாரு. நா போறேன்…” சங்கரி எழுந்து செல்ல,

“போயி குளிச்சிட்டு கோயிலுக்கு கெளம்புடி. இன்னு வாய் பாத்துட்டு கெடக்க?…” என பேச்சி கண்மணியை திட்ட,

“என்னத்துத்தா திடுதிடுப்புன்னு கோயிலுக்கு?….” நாட்டரசன் கேட்க,

“ரெம்ப நா கழிச்சு வந்திருக்காக. குடும்பத்துக்குள்ள வேற ஒரே விரிசலு, பூசெலுமா கெடக்கி. அதேன் போயி அவ கையால வெளக்கேத்தி வேண்டிக்கிட்டு வரட்டுமின்னு தோணிச்சி…” பேச்சி சொல்ல,

“அதுவுஞ்சேரித்தேன்…” என்றவர்,

“பாத்து வெரசா போயிட்டு இருட்டமின்ன வந்துருக. மணி வெளங்குதா?…”

“ஆங் செரிப்பா…” என அவள் தலையாட்டிவிட்டு எழ,

“தலைக்கி ஊத்துடி. கறிகஞ்சி பொழங்கிருக்க…” கூடுதலாக சொல்லி அனுப்ப அருளை தூக்கினாள் கண்மணி.

“புள்ளைய விட்டுட்டு போ. நாலு கையி மாறிருக்கு. புள்ளைக்கி நா குளிப்பாட்டறேன். நல்லா மேலு உருவி ஊத்தினா அவனுக்கு சொடக்கெடுத்தாப்புல உடம்பு காத்தாயிடும்…”

“அம்மா அவேன் நல்லாத்தேன்…”

“போயி அவேனுக்கு உடுப்பு எடுத்தா. போ போ…” என கண்மணியை பேசவும் விடாமல் விரட்ட,

“அடுப்புல தண்ணி வச்சிட்டி போறேனே?…” கண்மணி சொல்ல,

“அதெல்லா நா வெச்சி வெளாவிட்டே. நீ மொத போறியா?…” என சொல்லிக்கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு பின்புறம் சென்றார்.

Advertisement