Advertisement

மணியோசை – 26

             நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக இருந்தது கார்த்திக்கிற்கு.

மெதுவாய் எழுந்து காலைகடன்களை முடித்துக்கொண்டு வந்தவன் தனது மொபைலை எடுத்து கண்மணிக்கு அழைக்க நினைத்தான். நேரத்தை பார்க்க அது பத்தை நெருங்கபோவதாக காட்டியது.

“போச்சுடா, இன்னைக்கு கிங்கினிமங்கினி வச்சு செய்ய போறா. சும்மாவே அத்தனை பேசுவா. ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் குளித்துவிட்டே அவளை அழைக்கலாம் என நினைத்து மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு உடைகளை எடுத்துக்கொண்டு சென்றான்.

பத்து நிமிடத்தில் குளித்து ஜீன்ஸ், ஷர்ட் அணிந்து வந்தவன் மொபைலையும் பர்ஸையும் எடுத்துக்கொண்டான்.

“கிங்கினிமங்கினி கூட்டிட்டு மூவி போய்ட்டு வருவோம். அப்படியே வேற எங்கையாவது போகலாம்.” என்று கணக்குப்போட்டுகொண்டே கார் கீயை எடுக்க மீண்டும் அதை எடுத்த இடத்திலேயே வைத்தான்.

“இன்னைக்கு கிருஷ்ணன் பைக்ல போவோம்.” என எண்ணிக்கொண்டே கதவை திறக்க சலசலவென பேச்சு சத்தம் இரைச்சலுடன் அவனின் காதில் விழுந்தது.

மெதுவாய் எட்டி பார்க்க அங்கே கூடியிருந்த சுற்றம், உற்றதாரை கண்டு அரண்டே போனான்.

“அம்மாடியோ கும்பல் ஒன்னுகூடிட்டாங்கைய்யா ஒன்னுகூடிட்டாங்கைய்யா…” என அவனின் மனது அலற பேசாமல் மேலே சென்றுவிடலாமா என நினைக்கும் போதே,

“டாக்டரு தம்பியே வந்துட்டாருல…” என்றொருவரின் குரலில்,

“இனி தப்பிக்க முடியாதுடா கார்த்திக். போய் பாரு” என நினைத்துக்கொண்டே கீழே இறங்க கடைசி மூன்று படிக்கட்டில் பெண்கள் அமர்ந்து பூண்டை உரித்துக்கொண்டிருந்தனர்.

“இவளுகளுக்கு வேற சோலிக்கழுத இல்ல. வெல்லுள்ளிய உரிக்க சொன்னா தூக்கிட்டு போய் வெயாக்கியானோ பேச கூடிட்டாளுக. உரிக்க எடமே இல்லாதாமாறி…” என இன்னொருவர் அங்கலாய்க்க,

“டாக்டரு இன்னேரோ எறங்கி வருவாருன்னா கண்டோ? போவும்…” என்று அமர்ந்திருந்த பெண்கள் நொடிப்புடன் சொல்ல கார்த்திக் அவர்கள் வழிவிடுவதற்காக நின்றான்.

அனைவரும் எழுந்து நகர்ந்து நிற்க படிக்கட்டு எல்லாம் பூண்டின் தோல். அவனின் காலில் ஒட்டிக்கொண்டது. அதை அங்கேயே அவன் தரையில் தேய்த்து எடுக்க பார்க்க,

“கால கழுவிடுக டாக்டர். போயிடும். ரொம்ப சொரண்டி பள்ளமாயிட போவுது…” என கேலி பெண்கள் பேச,

“தாவங்கட்டை பேந்துடும் பாத்துக்க. ஆர கேலி பேசுதீய. கொள்ளிக்கட்டைய வாயில சொருகிப்பிடுவேண்டி…” என வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிட்டார் சங்கரி.

“நீக சாப்புட வாங்க தம்பி…” என கார்த்திக்கை அழைக்க,

“வரேன் அத்தை…” என்றவன் அந்த பெண்களை பார்த்தான். வழி விட்டால் தானே செல்வதற்கு. சங்கரி அவர்களை முறைக்க,

“அட போ ஆத்தா. நாக பேசாம எவுக பேசுவாக? இல்லியா டாக்டரு?…” அவர்கள் இவனிடம் கேட்க அங்கிருந்து சிரித்துக்கொண்டே கண்மணியை தேடினான் கார்த்திக்.

“ஆரயோ அலசுதாப்புல இருக்குது?…” என கார்த்திக்கிடம் ஒரு பெண் கேட்க,

“கண்மணி…” அவன் சொல்லவுமே பெண்கள் குழுமம் சேர்ந்து ஓவென ஆர்ப்பரித்தனர்.

“டாக்டரு புள்ளய தேடாம அவரு கண்ணு மணிய தேடுதாம்…” இன்னொருத்தி சொல்ல அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. திருதிருவென முழிக்க,

“ஐயா ஒம்ம பொஞ்சாதி தெக்குவாசல்ல கோழி உரிக்குதா…” என ஒரு பாட்டி வந்து சொல்ல அவனும் நகர்ந்துவிட்டான்.

“ஏன்டி கூறுகெட்ட கூவைகளா அவரப்போயி இம்புட்டு பேசுதீய. பேச்சி பாத்தா கொடல உறுவிருவா பாத்துக்க…”

“அட நீ யே அப்பத்தா அவியிற? கேலிக்கார மொற தான? நாக பேசாம ஆரு பேசுவாக?…”

“அதுக்குன்னு ஒரு மருவாதி வேணாமாத்தா? தங்கமாட்டோ மணிப்புள்ளைக்கி வைரமாட்டோ மனுசே கெடச்சிருக்கா. கொண்டாடல செய்யோனு. கேலி ஆரன்னு இருக்குத்தா. புத்திக்கி தெரியனு…” அவர் சொல்லவும் அவர்களும் சிரித்துக்கொண்டே,

“ஒம்ம வைரத்த ஆரு இனி ஒன்னுஞ்சொல்ல மாட்டாக. போயி காப்பிய மண்டும்…” என்று சொல்லி அனைவரும் கொல்லென சிரிக்க,

“இவளுக அடங்க மாட்டாளுக….” என்று அந்த பாட்டி அங்கிருந்து புலம்பிக்கொண்டே செல்ல சங்கரி கண்மணியிடம் வந்தார்.

“இந்தா மணி அவரு முழிச்சு வந்துட்டாரு. போயி காப்பிய குடு…” என்று அவளின் கையில் இருந்த கோழியை வாங்க,

“அட இருக பெரிம்மா, இன்னோ கொஞ்சந்தேன். உரிச்சு வாட்டிட்டு வாரேன். ஒரே கையோட முடியட்டு…” கண்மணி சொல்ல,

“வெயிலு உச்சிக்கி வந்திருச்சி மணி. இன்னு உண்கவே இல்ல அவுக. போயி கவனிடி…” என்று அதட்ட,

“அத்தை நீங்க காபி கொண்டுவாங்க. நான் இங்கயே குடிக்கிறேன்…” என்றவன் தொட்டியின் பக்கத்தில் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்துகொண்டான்.

அவன் சொல்லவுமே வேகமாய் சென்று காபியை புதிதாய் போட்டு எடுத்துவந்து அவனிடம் கொடுத்தவர்,

“வெரசா உரிச்சுட்டு வாடி. வெளியில ஆம்பிளைக தம்பிய பாக்க இருக்காக. போனாருனா விடமாட்டாக. சாப்புட்டுட்டு போகட்டும்…” கண்மணியிடம் குசுகுசுப்பாக பேச கார்த்திக்கின் காதுகளிலும் விழத்தான் செய்தது.

“அதெல்லா வந்துருவேன். நீக போயி மத்தத பாருக பெரிம்மா…” என அனுப்பிவைத்தவள் இவனை பார்த்து சிரித்துவிட்டு மீதம் இருந்த கோழி இறக்கைகளை பிய்த்து எடுத்தாள்.

ஏற்கனவே அடுப்பு மூட்டப்பட்டிருக்க கோழியை உரித்துமுடித்தவள் அதை நன்றாய் கழுவி சுத்தம் செய்துவிட்டு மஞ்சளை தடவி தீயில் வாட்ட ஆரம்பித்தாள்.

அவள் லாவகமாய் செய்யும் வேலைகளை கவனித்துக்கொண்டே அமர்ந்திருந்தான் கார்த்திக்.

இளம் பச்சை வர்ண காட்டன் சேலையை இழுத்து சொருகி கரண்டை காலுக்கும் மேல் தூக்கி இடுப்பில் சொருகியிருந்தாள். முகத்தில் வேர்வைத்துளிகள் பளிங்காய் மினுமினுக்க கார்த்திக்கின் பார்வை அவளை விட்டு அங்குமிங்கும் விலகவே இல்லை.

“காலிகப்பை எம்பிட்டு நேரந்தேன் வாயில வச்சு வச்சு எடுப்பீறு? காபி தீந்துபோச்சு. கெளாச கழுவ போட்டுட்டு போவும். நீறு பாக்குத பார்வையை யாராச்சும் கண்டா கேலி பேசியே ஓச்சுப்பிடுவாக…” கண்மணி பொடுபொடுக்க,

“நம்ம வீட்ல நீ இப்படி புடவையை தூக்கி சொருகி வேலை பார்த்து பார்த்ததில்லையா. அதான் பார்த்தேன்…” அவன் சமாளிப்பாய் சொல்ல,

“நல்லாத்தேன் பாத்தீறு. மொத எடத்த விட்டு கெளம்புக…”  என்றவள் கோழியை வாட்டி முடித்து தனியே வைத்துவிட்டு கையை காலை கழுவிக்கொண்டே அவனை பார்த்தாள். பார்த்தவளின் முகம் சிவந்துவிட,

“ஒம்ம வச்சிக்கிட்டு ஒண்ணும்பண்ண முடியாது…” என்று அவனை முறைக்க சிரித்துக்கொண்டே அவளருகில் வந்தவன் சொருகியிருந்த புடவையை எடுத்துவிட்டு புடவை தலைப்பை கொண்டு அவளின் முகத்தில் கொலுவீற்றிருந்த வியர்வையை வலிக்குமோ என்பதை போல மென்மையாக ஒற்றிஎடுத்தான்.

அவனின் செய்கையை ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் குறுஞ்சிரிப்பு படர அவளை பார்த்து இவனும் என்னவென தலையசைக்க,

“ஆத்தீ, நல்ல வேலக்கழுததேன். மொத உண்கலாம். வாம்…” என்று கை பிடித்து இழுத்து வந்தவள் வாசல் வந்ததும் யாரும் பார்த்துவிட்டார்களோ என்கிற பதட்டத்தில் பட்டென கையை விட்டு,

“முன்னாடி போவும்…” என சொல்ல அவளின் பதட்டத்தில் சுவாரஸியம் பரவ அவளை பார்த்தவன் தன் கைகளை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு முடியாது என்பதை போல தலையசைத்தான்.

“எஞ்சாமி வந்துரும்ய்யா. நீறு எந்திச்சி வந்து இம்பிட்டு நேரம் உண்காம இருந்தா எங்கம்மா எஞ்சோலிய முடிச்சிப்பிடும். அப்பாவுக்கு தெரிஞ்சிச்சி…” என கண்களை உருட்டி அவனிடம் கெஞ்ச அபிநயம் செய்த விழிகளை ரசித்தபடி அவளின் கன்னத்தில் அவன் கிள்ள,

“அடியாத்தி, இந்த மனுசெனுக்கு கிறுக்குத்தேன் பிடிச்சிருக்கி. ஏம்ய்யா?…” அழமாட்டாத குறையாக அவள் கேட்கவும் வாய்விட்டு அவன் சிரித்துவிட்டான்.

“இந்த ஊர்ல உங்க வீட்ல ரொம்பவும் புதுசா தெரியறடி கிங்கினிமங்கினி. இது உன்னோட இந்த தவிப்பு, பதட்டம், அதுக்கு நடுவுல என்னை ரசிக்கிற உன்னோட அன்பு இது எல்லாமே ஒரு மாதிரி ஒரு மாதிரி என்ன சொல்ல? ஹ்ம்ம் போதையை தருது. பேசாம இங்கயே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையா செட்டில் ஆகிடலாம்னு தோணுது…”

கார்த்திக் மயக்கத்துடன் அவளின் சொல்ல அவன் சொல்லிய அனைத்துமே பின்னுக்கு போய் போதை என்கிற வார்த்தை முன்னுரிமை பெற,

“ஆத்தீ, போதையா? யோவ் ஒமக்கு போத குடிக்கிற பழக்கம் இருக்கிதா? ஒத்த பொழுதா சொன்னதில்லையே? ஆத்தா முத்துக்கருப்பி மோசம் போயிட்டேனே?…” என அப்பாவியாய் பதறி தலையில் கைவைத்து அவள் அமர்ந்துவிட அடக்கமாட்டாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான் கார்த்திக்.

“சிரிச்சீரு கெட்டக்கிறுக்காகிப்பிடும் சொல்லிட்டேன்…” என காளியாய் அவள் அவதாரமெடுக்க காதலாய் அவளை கனிந்து பார்த்தான்.

“இதுதான்டி கிங்கினிமங்கினி உன் மேல என்னை கிறுக்கா சுத்த வைக்குது. உன்னோட தைரியமும், சில அப்பாவிகுணமும்…”

“ஏன் பேசமாட்டீரு? ஒம்ம போத பொழுத தெரியாம மக்கியா இருந்தேன்ல. அப்பாவின்னு சொல்லத்தேன் செய்வீரு…” என்று சொல்லும் பொழுதே அவளின் கண்களில் மளுக்கென கண்ணீர் வந்துவிட கார்த்திக்கிற்கு தான் தாளவில்லை.

“ஹேய் கிங்கினிமங்கினி, நீ நினைக்கிற அந்த பழக்கம் எதுவும் எனக்கில்லைடி. நான் விளையாட்டா தான் இதை சொன்னேன். போதைன்னா அது ஒண்ணுதான் அர்த்தமா? உண்மையில் நீ மக்குதான். சரியான மடசாம்பிராணி நீ கிங்கினிமங்கினி…” என அவளின் கன்னம் கிள்ள,

“சத்தியமாவா?…”

“என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?…” அவளின் முகத்தை நிமிர்த்தி கண்களுக்குள் பார்த்துக்கொண்டே கேட்க,

“ஒம்ம நம்பாமலா? ஆனா நீறு சொல்லவும் உசுரா பதறிப்பிட்டேன்…” மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவள் சொல்ல,

“இத்தனை வருஷமாச்சு. ஒரு குழந்தையும் இருக்கு. என்னைக்காவது அந்த மாதிரி என்னை பார்த்திருக்கியா என்ன?…” என கேட்க இல்லை என்ற தலையசைப்பு வேகமாய் வந்தது.

“ஒகே, உனக்காக உன்னோட சந்தோஷத்துக்காக ஒண்ணு செய்யட்டா?…” என கேட்கவும்,

“ஏத்தா மணி…” என பேச்சி அழைக்கும் குரல் கேட்க திரும்பி பார்த்தவள்,

“கூப்புடுதாக…”

“கூப்பிடட்டும்…” என்றவன் அவளின் வலது கையை பிடித்து வருடியவன் அவள் எதிர்பாராத நேரம்,

“உன் ஆத்தா முத்துக்கருப்பி மேல…” என்றவனின் இதழ்களை கரம் கொண்டு மூடியவள்,

“நீறு சத்தியஞ்செஞ்சிதேன் நா நம்பனுமாக்கும். போவும்…” என்றவள் அவன் எதிர்பாராத நேரம் கன்னத்தில் அச்சாரம் இட்டுவிட்டு ஓடிவிட திகைத்துபோனான் கார்த்திக்.

“ஏய் கிங்கினிமங்கினி…” என்று அதிசயித்தவன்,

“என்னடா இப்படி இருக்குது? இந்த பீல், ஐயோ கிறுகிறுத்துபோகுது கிங்கினிமங்கினி…” என்று கிறங்கிப்போய் நின்றான்.

பின்னே அவள் கொடுத்த முதல் முத்தமல்லவா? திருமணம் ஆனதிலிருந்து இன்றுவரை எத்தனையோ முறை கேட்டிருக்கிறான். வாங்கியும் இருக்கிறான். ஆனால் இது அவளாகவே குடுத்த முத்தம். ரசனையுடன் தன் கன்னத்தை வருடிக்கொண்டவன் இதழ்களில் உறைந்த புன்னகையோடு உள்ளே சென்றான்.

இவனுக்காக இலை விரிக்கப்பட்டிருக்க கையை கழுவிக்கொண்டு சென்று அமர்ந்தான்.

“மணி நீயு கூட ஒக்காரு. இன்னும் உண்காம எம்பிட்டு வேல பாப்ப…” என சங்கரி சொல்லவும் பேச்சியை பார்த்தாள் கண்மணி.

“இன்னுமா நீ சாப்பிடலை? வா வா, உட்காரு…” என அவளின் கை பற்றி அமர்த்திவிட பேச்சி சங்கரியையும் கண்மணியையும் முறைத்தார்.  

“இன்னொரு இலை போடுங்க அத்தை…” என கார்த்திக் சொல்லவும் வேறு வழியின்றி இலையை எடுத்து போட்ட சங்கரி பேச்சியை பார்க்கவே இல்லை.

“நான் வர லேட்டானா  நீ சாப்பிட வேண்டியது தானே? காலையில நேரமா எழுந்துட்டு இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா என்ன அர்த்தம்?…” என்று பெற்றவர்களுக்கு முன்னவே அதட்ட அவனின் அக்கறையில் மற்றவர்கள் மனமகிழ்ந்து போயினர்.

“ஏத்தா பேச்சி, என்ன பாத்துக்கிட்டே நிக்கிறவ? எலையில எடுத்துவைய்யி…” என்றதும் தான் அங்கிருந்த பாத்திரங்களை பார்த்தான்.

முதலில் போல் பயந்து எல்லாம் விடவில்லை. சிரிப்புதான் வந்தது. இதை எல்லாம் இவர்கள் குறைத்திருந்தால் தான் ஆச்சர்யம் என நினைத்தவன் தனக்கு வேண்டியதை அவனே கேட்டு வாங்கி உண்டான்.

கண்மணி தான் இது அது என வகைதொகையாக வாங்கி உண்ண அவளை பார்த்து பார்த்து கவனித்தார் பேச்சி.

இட்லியுடன் அயிரை மீன் குழம்பு, நல்லி எலும்பு குழம்பு, ரத்தபொரியல், ஈரல் வறுவல் என அசத்தியிருந்தனர்.

“என்ன கிங்கினிமங்கினி ஊருக்கே உலை வச்சாச்சா?…” என கேலியாய் இவன் கேட்க அவனை முறைத்தவள்,

“வைக்காம? வந்தவுக வயிறு காஞ்சா போவாக? ஒம்ம பாக்கத்தேன் காத்துக்கிடக்காக. வேகமா உங்கிட்டு போம்…” என சொல்லவும் சொன்னது போல வேகமாய் தான் உண்டான்.

“ஏம்? எதுக்கு இம்பிட்டு வேகம்? மெதுவாத்தேன் சாப்புடும்…” எனதற்கும் சொல்ல,

“உன்னை வச்சிக்கிட்டு ஒரு வாய் சாப்பிட கூட முடியலைடி கிங்கினிமங்கினி…”

“ஏஞ்சொல்ல மாட்டீரு?…”

“ஏத்தா செத்த பேசாமத்தேன் சாப்புடேன். அவர உண்கவிடாம பேசிக்கிட்டே இருக்கித?…” சங்கரி அதட்ட சூடான கல் தோசையுடன் வந்துவிட்டார் பேச்சி.

“ஐயோ போதும் அத்தை…” என அவன் சொல்லவும் வைக்கவா வேண்டாமா என பாவமாய் பார்த்து நின்றார் பேச்சி.

முன்பென்றால் நல்லா சாப்பிடுங்க மாப்பிள்ள என சொல்லி அவனை திக்குமுக்காட வைப்பார். ஆனால் அவனின் கோபத்தை கண்கூடாக கண்டபின் இயல்பாகவே அவரால் இருக்கமுடியவில்லை.

எதையாவது செய்து கார்த்திக் கோபப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற சஞ்சலம் அவரை அவரின் நிம்மதியை கரைத்துகொண்டே இருந்தது. அது அப்பட்டமாய் முகத்தில் தெரிய கார்த்திக் தான் வருத்தம் கொண்டான்.

“இப்போ என்ன தோசை சாப்பிடனும். அவ்வளவு தானே? வைங்க அத்தை. ஆனா இது ஒண்ணுதான். சரியா?…” என சொல்லி வாங்கி சாப்பிட பேச்சியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை எனலாம்.

சாப்பிட்டு முடித்ததும் கிருஷ்ணன் வந்துவிட கையை கழுவிவிட்டு ஈரத்தை கண்மணியின் புடவையில் துடைத்தவன் தன்னருகே நிற்கும் கிருஷ்ணனை பார்த்து புருவம் உயர்த்தினான்.

“போலாமா மாப்பிள…” என அழைக்க,

“எங்க?…” கார்த்திக் கேட்டான்.

“இல்ல முத்தத்துல எல்லாரு ஒங்கள பாக்கத்தேன் வந்துருக்காக. அதேன் கேட்டேன்…” என சொல்லவும் தலையசைத்தவன் கண்மணியிடம் திரும்பி,

“ஏன்டி உங்க கவனிப்புக்கு ஒரு அளவே இல்லாம போகுது. இந்தா இருக்கற முற்றத்துக்கு எனக்கு வழி தெரியாதா? என்னவோ என்னை எல்லாரும் பொண்ணுபார்க்க வந்த மாதிரி துணைக்கு உன் அண்ணன் வந்து என்னை கூட்டிட்டு போய் காமிக்க போறான்?…”

“இந்த எகத்தாள தான வேணாங்கறேன். ஓமக்குத்தேன் அங்கன இருக்கறவகள பாத்தா குதிச்சி ஒட தோணுமே? அதேன் எங்க ஒடிடுவீகளோன்னு அண்ணே கூட்டிட்டு போவ வந்திருக்கு…”

கண்மணி தான் என்றோ சொல்லிய விஷயத்தை சொல்லி கிண்டல் செய்ய அவளை முறைத்தவன்,

“ரூம்க்கு வருவேல. பேசிக்கறேன்…” என்று சொல்லி கிருஷ்ணனுடன் நடந்தான். கிருஷ்ணன் கார்த்திக்கை ஒட்டிக்கொண்டு நடக்க,

“இவன் என்னடா உரசிக்கிட்டே நடக்கறான். நிஜமாவே ஓடவச்சிருவான் போலையே?” என மனதில் புலம்பிக்கொண்டே செல்ல இவனை பார்த்ததுமே அங்கிருந்தவர்கள் பரபரப்பாகினார்கள்.

நாட்டரசன் மடியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த மகனை பார்த்ததும் தூக்குவதற்கு கையை நீட்ட அவனோ பாய்ந்துகொண்டு வந்தான் கார்த்திக்கிடம்.

“வாங்க டாக்டரு தம்பி, எப்பிடி இருக்கீக?…” என கேட்க ஆரம்பித்தவர்கள் தான். ஓயாமல் பேச்சு பேச்சு பேச்சு என பேசிக்கொண்டே தான் இருந்தனர். கார்த்திக்கிற்கே வாய் வலித்தது.

அதிலும் ஏன் மொட்டைக்கு கூப்பிடவில்லை என்று ஒரு சிலர் தன்மையாக கேட்க ஒருசிலர் அப்படி அழைக்காமல் இருக்கக்கூடாதென அறிவுரையாய் சொல்ல, இன்னும் சிலர் எப்படி கூப்பிடாமல் நீங்களாக நடத்தலாம் என உரிமையாக கோபித்துக்கொள்ள கார்த்திக் திணறித்தான் போனான்.

விதவிதமான மனிதர்கள் அவர்களின் அணுகுமுறை பேச்சு என அனைத்தையும் பார்த்தவன் இந்த நிம்மதி எங்கும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தான்.

“மதினி…” என ஒரு பெண் வாசலில் நின்று அழைக்க யாரென கிருஷ்ணன் பார்க்க சென்றான்.

“வாத்தே…” என அப்பெண்ணை கிருஷ்ணன் அழைக்க,

“யாருலே அது?…” நாட்டரசன் உள்ளிருந்தே குரல் எழுப்ப,

“நம்ம மாரியக்காதேன்…” என கிருஷ்ணன் சொல்லவும்,

“என்னத்திக்கி வாசல்ல நிக்கிறவ? உள்ளாற கூப்பிடு…” நாட்டரசன் சொல்ல கார்த்திக்கின் மொபைல் சிணுங்கியது.

எடுத்து பார்த்தவன் யோசனையுடன் அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டு வாசலுக்கு வந்தான்.

“உள்ள வாக்கா. யே வாசல்ல நிக்கித?…” என கிருஷ்ணன் மீண்டும் அழைக்க அவர்கள் நின்ற இடத்தை தாண்டி சென்று நின்றான் கார்த்திக்.

அவனுக்கு அழைப்பை ஏற்பதா வேண்டாமா என எண்ணம் பிறக்க அழைப்பு நின்றது. மீண்டும் அழைப்பு வரும் முன்னர் பேச்சியின் குரல் முன் வாசலில் கேட்டது.

“ஏத்தா மாரி, உள்ள கூப்பிட்டா வர ஒனக்கு அம்பிட்டு பகுமானமாவே?…” என பேச்சி அதட்ட,

“இருக்கட்டு மதினி, இந்தா ஒங்கிட்ட வாங்கின காசு. ஆயிரரூவா. இத குடுத்திட்டு போவத்தே வந்தே…”

“இப்ப என்ன அவசரமின்னு தூக்கிட்டு வந்திருக்க?…”

“கையில இருக்கச்சவே குடுத்தாத்தேன். இல்லன்னா இதயும் தூக்கிட்டு போயி அது குடிச்சிப்பிடும்…” என்ற பெண்ணை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. தலையெல்லாம் கலைந்து வாரப்படாமல் இருந்தது.

“அவனுக்கு தெரியாதங்காட்டி வெக்கனும். ஒனக்கி வெவர வேணும்த்தா. போன எடத்துல குடிச்சிப்பிட்டு அவன் கைய ஒடச்சிக்கிட்டு வந்ததா சேதி. வீட்டுல மொடக்கி போடு கொஞ்சந. இப்ப இத ஒடனே குடுக்காட்டி என்ன? கொமாரு வேலைக்கி போவட்டும். பொறவு குடு. இத வச்சி குடும்பத்த நவுத்து. போ. வந்துட்டா…” என அவளின் குமட்டில் பேச்சி இடிக்க அப்பெண்ணிற்கு கண்கள் கலங்கிப்போனது.

“உள்ள வாத்தா, வந்து ஒருவா உண்கிட்டு போவ. போறப்ப புள்ளையலுக்கும் எடுத்துக்க…”

“இல்ல மதினி, இப்பிடியே என்னத்த வர? நா போறேன். அவுக தனியா இருப்பாக. வீட்டுல காஞ்சி ஆக்கிப்பேன்…”

“நாலு சாத்து சாதுனேனா. செரி நீ போ. நா ஆறுக்கிட்டையாச்சும் குடுத்துவுடறேன். ஒலைய வச்சிப்பிடாத. வெளங்குச்சா?…” என பேச்சி அதட்டலாக சொல்லி அப்பெண்ணிற்கு ஆறுதல் சொல்லி அனுப்ப கார்த்திக் இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டே இருந்தான்.

பேச்சியின் பேச்சில் அத்தனை ஆளுமையும் அதட்டலும் நிமிர்வும் இருக்க தன் வீட்டில் எப்படி இருந்தார் என நினைக்கும் பொழுதே மனம் கனத்துப்போனது.

“எப்பேர்ப்பட்ட பெண்மணி” என சில்லாகித்துக்கொண்டான்.

மீண்டும் அவனின் மொபைல் சிணுங்கியது. அதில் தெரிந்த பெயரை பார்த்து அதையே வெறித்த வண்ணம் நின்றான்.  

அழைப்பு மகாதேவியிடமிருந்து.

Advertisement