Advertisement

மணியோசை – 25

               நாட்டரசனும் பேச்சியும் பேரனிடம் பிஸியாக சங்கரி வந்தவர்களுக்கு சாப்பிட தயார் செய்ய உள்ளே சென்றுவிட்டார். கண்மணியும் பேசிக்கொண்டிருக்க யாரையும் தொந்தரவு செய்யாது அமைதியாக அமர்ந்துகொண்டான் கார்த்திக்.

அவர்களுக்கு கார்த்திக், கண்மணி வரும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால் திடீரென அவர்களை பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டனர்.

கார்த்திக்கின் வீட்டிற்கு வருவதை கண்மணி சொன்னபோது கூட தங்கள் வீட்டிற்கு வருவார்களா என்று நம்பிக்கையே இல்லை அவர்களுக்கு. கண்மணியிடம் மட்டும் முடிந்தால் வந்துவிட்டு செல்லுமாறு சொல்லிவைத்தனர் போனில்.

திருப்பூரில் பிரச்சனையாகி என்று தங்கள் ஊருக்கு வந்தனரோ அன்றிலிருந்து இன்றுவரை கார்த்திக் அவர்களிடம் பேசுவதே இல்லை. தங்கள் மேல் கோபத்தில் உள்ளானோ என நினைத்து இவர்களும் பேசவில்லை.

ஒருவித சஞ்சலத்துடனே இருந்தவர்களின் கண்முன்னே மகளையும் பேரனையும் கொண்டுவந்து நிறுத்திய கார்த்திக்கை நினைக்கையில் பூரித்துதான் போயினர். அதனால் கையும் ஓடாமல் காலும் தரையில் பாவாமல் பேரனை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

ஊர்க்காரர்களிடம் வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த மனைவியை பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கு தூக்கம் கண்களை சுழற்ற அவனை கிருஷ்ணன் தான் கவனித்தான்.

“இந்தா மணி கூறுகெட்டவளே? பாரு அவரு ஒறங்கிட்டாரு…” என கண்மணியின் கையை பற்ற,

“ஆத்தீ… ஆத்தா முத்துக்கருப்பி, என்ன வேல பண்ணிப்பிட்டேன்…” என பதறிப்போனவள்,

“ஏம் எந்திக…” என கண்மணி வந்து தட்டவும் விழித்தவன் அவளை பார்த்து சிரிப்புடன்,

“பேசிமுடிச்சாச்சா?…” என எழுந்து நிற்க,

“மன்னிச்சிக்கிடுக டாக்டரு தம்பி. புள்ளைய பாத்ததும் நேரக்குறிப்பில்லாம பேசிட்டம்…” என்று கண்மணியின் பக்கத்துவீட்டு தாத்தா கேட்க,

“ஐயோ அதெல்லாம் எதுக்குங்க தாத்தா. விடுங்க. ரொம்ப நல கழிச்சு உங்க எல்லாரையும் பார்க்கறா. அதான் நானும் தொந்தரவு செய்யலை…” என்று சிரிக்க,

“தம்பி மொவம் எப்பவு வாட்டமாதேன் இருக்காப்பிடி. சிரிச்ச மொவமா. எங்க மணி குடுத்துவச்சவ…” என்று ஒரு பெண் கண்மணியின் முகத்தில் திருஷ்டி எடுத்து நெட்டி முறிக்க,

“போது போது. போயி ஒறங்குக. காலையில பாத்திக்கிடலாம்…” என தாத்தா விரட்ட அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.

வாசலிலேயே கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்துவிட உள்ளே அவர்கள் வரும் போதே தாளிக்கும் வாசனை நாசியை நிறைத்தது.

என்னவென கேட்கும் முன்னால் அருளை கண்மணியிடம் கொடுத்த பேச்சி,

“செத்த இருங்க…”என சொல்லி வேகமாய் வாசலுக்கு விரைந்தார். வரும் போது கையில் மண் இருக்க இதை எதிர்பார்த்தேன் என்பதை போல கண்மணி சிரிக்க அடுப்படிக்குள் சென்று உப்புக்கல்லும், வரமிளகாயும் எடுத்துவந்து,

“மூணுபேரும் ஒண்ணா நின்னுக…” என்று அவர்களுக்கு திருஷ்டி எடுத்து அடுப்பில் கொண்டுபோய் போட்டவர்,

“அம்புட்டு கண்ணு பொசுங்கி போவட்டு….” என்றபடி வெளியே வர இதை எல்லாம் பார்த்திருந்த கார்த்திக்கின் முகத்தில் மென்மையான புன்னகை.

“மாப்பிள நீக போய் உடுப்பு மாத்திட்டு வாங்க. சாப்பிடலாம்…” என நாட்டரசன் சொல்ல,

“இல்லை மாமா, நைட் சாப்பிட்டுட்டு தான் வந்தோம்…” என கார்த்திக் தயங்க,

“அப்பா நாங்க வாரோம். நீக போய் எடுத்துவையுங்க…” என்று சொல்லி கார்த்திக்கை இழுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள்.

அவர்கள் பின்னே வந்த கிருஷ்ணன் அவர்களின் துணிமணிகள் அடங்கிய பேக்கை கொண்டுவந்து வைத்து,

“வெரசா வாங்க ரெண்டுபேரும்…” என்று சொல்லி சென்றான். அவன் போனதும் கதவை அடைத்துவிட்டு கண்மணி இவனை பார்க்க,

“கீழே வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க கிங்கினிமங்கினி. போய்ட்டு வந்து பேசுவோம்டி. நாமளும் டயர்ட். நமக்காக அவங்களும் வெய்ட் பண்ணுவாங்க. தூங்கனும்ல….” என்று சொல்லி வேகமாய் ஒரு டிஷர்ட்டையும் லுங்கியையும் எடுத்துகொண்டு பாத்ரூம் சென்றான்.

உடையை மாற்றிவிட்டு முகம் கைகால் என கழுவிவிட்டு வர கண்மணியும் சாதாரண சேலையில் மாறியிருந்தாள். வழக்கமான முறைப்பை வீசிவிட்டு கீழே செல்ல கண்மணி  மகனுக்கு மாற்று உடை எடுத்துக்கொண்டு அவன் பின்னே போனாள்.

“அம்மா இத அவனுக்கு மாத்துவிடுக…” என்று பேச்சியிடம் அருளுக்கான உடையை தர வாங்கிக்கொண்டார் பேச்சி.

கொஞ்சிக்கொண்டே பேரனை உச்சிமுகர்ந்து அவனின் உடையை கலட்ட ஆரம்பித்தார். அவரை கழட்ட விடாமல் விளையாட்டுடன் கழுத்து முடியை அவன் பற்றி இழுக்க சுகமான வழியை தாங்கியவர் குழந்தையின் முகத்தோடு முகம் இழைத்தார்.

பொக்கைவாய் கொண்டு எச்சில் முழுவதையும் அவரின் முகத்தில் தேய்த்தவன் கிளுக்கி சிரிக்க பார்த்த பேச்சிக்கும் நாட்டரசனுக்கும் கண்கள் கலங்கிப்போனது.

“எங்கைய்யா உம்ம பாக்கமுடியாம எம்புட்டு தவிச்சுப்பிட்டோம். அய்யா, எம்ய்யா…” என பேச்சி பேரனை கட்டிக்கொண்டு சத்தமில்லாமல் கண்ணீரை வடிக்க,

“ஹே இந்தா ப்ச், பேச்சி மாப்பிள இருக்காப்பிடி. சூதானமா பேசுவே….” என்று அரட்டினாலும் அவரின் மனமும் நெகிழ்ந்துபோய் இருந்தது.

“உக்காருக. எத்தா பேச்சி எலைய எங்கத்தா?…” என்று கேட்கும் போதே வீட்டின் பின்பக்கத்தில் இருந்து கிருஷ்ணன் இலையோடு வந்துவிட்டான்.

“ஏலே எம்புட்டு நேரோ?…” என சங்கரி திட்ட,

“நம்ம வாழ எல்லாங் செரியா இல்லைங்க பெரிம்மா. அதே வெட்டுவாண்ணே வீட்டு எலைய சீவிட்டு வந்தே…”

“யே அவன்ட்ட சொல்லிட்டியா?…” நாட்டரசன் கேட்க,

“நா நம்ம வாழைய பார்த்துட்டி இருக்கறத பாத்துப்பிட்டு அவுகதே கூப்பிட்டக. அவுகதே சீவி தந்தாக…” என்று சொல்லிகொண்டே இலையை கழுவிவிட்டு வந்தான்.

“தூங்கற நேரத்துல எதுக்கு இத்தனை சிரமம் அத்தை?…” கார்த்திக் கேட்டாலும் இலையில் வைக்கப்பட்டிருந்த ஆவிபறக்கும் பஞ்சுபோன்ற இட்லியையும் தேங்காய், தக்காளி சட்னிகளையும் பார்த்தவனுக்குள் லேசாய் பசியுணர்வு பாய்ந்தது.

“சாமத்துல வந்திருக்கீக. பசியாமலா இருக்கோ? சாப்புடுங்கைய்யா…” என சங்கரி அவனின் இலையில் எடுத்து பரிமாற அவர்களின் அன்பில் நெக்குருகிபோனான்.

“வீட்டுல எல்லாரு சொகந்தான மாப்பிள?…” நாட்டரசன் கேட்க அப்படியே அங்கே நடந்த விசேஷங்களை பற்றியும் பேச நேரம் போனதே தெரியவில்லை.

பசிக்கவில்லை என்றாலும் நன்றாகவே சாப்பிட்டனர் கண்மணியும் கார்த்திக்கும். உண்டுமுடிக்க இருவருக்கும் பாலை காய்ச்சி கொண்டுவந்து ஆற்றி குடுக்க மறுக்காமல் வாங்கி குடித்தான் கார்த்திக்.

இரவு நேரம் குளுமை, வெதுவெதுப்பான வீட்டு மாட்டுப்பாலில் நாட்டுசர்க்கரை போட்டு குடிக்க அமிர்தமாய் இருந்தது. குடித்து முடித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு கார்த்திக்கின் அடுத்தடுத்த கொட்டாவியை கண்டு பாவமாகிவிட,

“போய் ஒறங்குக மாப்பிள. காலையில் பாப்பம்…” என நாட்டரசன் சொன்னதும் கிருஷ்ணன் கிடுகிடுவென போய் புது பெட்சீட்களை எடுத்துவந்தான்.

“மணி இத கட்டிலுக்கு மாத்திக்க. அது பழசாயிடுச்சு. போத்திக்க இத வச்சிக்க…” என்று தரவும் அவனை பார்த்து புன்னகைத்த கார்த்திக் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மாடி ஏற குழந்தையை வாங்க பார்த்தல் கண்மணி.

அருள் பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டு விடமாட்டேன் என்பதை போல சிணுங்கலுடன் பேச்சியிடம் ஒட்டிகொண்டான். அவனின் விழிகள் உறக்கத்திற்கு சென்றிருக்க,

“அவன் அத்தையோடவே தூங்கட்டும் கண்மணி. விடு…” என்று சொல்லி சென்றுவிட்டான்.

“இருங்கம்மா ராவுக்கு என்னிய பாலுக்கு தேடுவான். நா போயி பாட்டில கொண்டாறேன்…”

“ம்க்கும், அது கூடவா இல்லாம இருக்குதோம். புது பாட்டிலு இருக்குது. நீ போய் அவுகள பாரு. போத்தா…” என மகளை அனுப்பியவர் அவர்கள் சென்றதும் குழந்தையை மாற்றி மாற்றி தூக்கிவைத்து கொஞ்சினார்கள்.

“ஆத்தா முத்துக்கருப்பி ஆயுசுக்கும் இது போதும்த்தா. இப்புடி மாப்பிள கெடைக்க குடுத்துத்தேன் வச்சிருக்கம். காலத்துக்கும் மவராசனா இருக்கனு அவரு மனசுக்கு….” என கார்த்திக்கை பாராட்டி கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.

கிருஷ்ணன் அந்நேரமே மாமன் மாரிமுத்துவிற்கு அழைத்து விபரத்தை சொல்லிவிட்டான். அந்நேரமே வருகிறேன் என்றவரை காலையில் வரசொல்லிவிட்டு இவர்கள் குழந்தையுடன் ஒன்றிவிட்டனர்.

உறங்கிவிட்டவனை கீழே பாயும் அதன் மேல் பெட்சீட்டும் விரித்து படுக்கவைத்துவிட்டு நால்வரும் சுற்றிலும் படுத்துகொண்டனர்.

கிருஷ்ணன் காற்றுக்காக இரண்டு டேபிள் பேன்களை கொண்டுவந்து இருபுறமும் சுற்றவிட்டு வந்து படுத்துக்கொண்டான்.  ஆனால் உறங்கத்தான் இல்லை. பார்வை முழுக்க அருளை மொய்த்துக்கொண்டு இருந்தது.

கண்மணி மேலே வரும் பொழுது கார்த்திக் வெளி மெத்தில் நின்று போனில் மணிகண்டனுடன் பேசிக்கொண்டிருந்தான். பேச்சை கேட்டதுமே அவளுக்கு புரிந்துபோனது ஏற்கனவே பேசிவைத்து முடிவுடன் தான் இங்கே வந்திருக்கிறான் என்று.

பார்த்தவளின் நெஞ்சம் நிறைந்துபோனது. இவன் கிடைக்க என்ன தவம் செய்துவிட்டேன் நான் என்ற எண்ணம் தோன்ற சிரிப்புடன் கட்டிலில் விரித்திருந்த விரிப்பை எடுத்துவிட்டு புதிதாய் விரித்தவள் தலையணை உறைகளையும் மாற்றி மாற்றியதை எடுத்துக்கொண்டு கீழே அழுக்கு துணிகள் போடும் இடத்தில் சென்று வைத்துவிட்டு குடிக்க தண்ணீரை எடுக்க வந்தாள்.

தன் வீட்டினர் அனைவரும் முற்றத்தில் அருளை சுற்றி படுத்திருக்க நடுநாயகமாகா குழந்தை இரு கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு உறங்கியிருந்தான். கண்மணியின் கொலுசு சத்ததில் விழித்த பேச்சி,

“ஏத்தே என்னத்துக்கி கீழ வந்த மணி?…” என கிசுகிசுப்பாய் தலையை உயர்த்தி கேட்க,

“தண்ணி எடுக்க வந்தேம்மா…” கண்மணியும் அவரை போலவே பேசிவிட்டு பின் சிரித்தவள்,

“அவன் எந்திக்க மாட்டான்ம்மா. நீக நல்லாவே பேசுக…” என அவரருகில் அமரப்போக,

“இங்கன என்னடி சோலிக்கழுத ஒனக்கி?…” என்று பேச்சி கேட்க,

“முத்தத்துல ஒறங்கி எம்பிட்டு மாசமாச்சி. நானும் இங்கன ஒறங்குதேன்ம்மா…” கண்மணி சொல்லிய நொடி எழுந்தமர்ந்துவிட்டார் பேச்சி. அவிழ்ந்த கொண்டையை அள்ளிமுடிந்துகொண்டு,

“கூறுகெட்டவளே, நல்ல சங்கதிக்கி ஒக்காந்தடி. அந்த மனுசே ஒத்தையில விட்டுப்பிட்டு. உன்னிய என்னத்த கொண்டி சாத்த. போடி தண்ணிய மோந்துக்கிட்டு. இவளாம் என்னத்த புள்ளைய பெத்தா?…” என்று திட்டிவிட முறைத்துக்கொண்டே எழுந்து சென்றாள் கண்மணி.

கண்மணி கீழே சென்றதும் எங்கே போகிறாள் என பார்க்க அவளின் பின்னே வந்த கார்த்திக் இவை அனைத்தையும் பார்த்துகொண்டிருக்க மாடிப்படியில் அவனை பார்த்தவள் அவனை இன்னுமே முறைத்துக்கொண்டு அவனை தாண்டி மேலே ஏறிவிட்டாள்.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளின் பின்னே சென்றவன் கதவை அடைத்துவிட்டு திரும்பி பார்க்க கண்மணி மெத்தில் சென்று நின்றுகொண்டாள்.

“என்னவாம் மேடம்க்கு கோபம்? கீழே அவங்களோட தூங்கனும்னா நானும் ரெடி தான். போவோமே. இதுக்கு ஏன் கோச்சுக்கனும்?…” என்று அவளின் கன்னம் தாங்கி கேட்க,

“ஒம்ம திட்டமென்னன்னி அகப்பட்டுகிடுச்சு. நீறும் சேந்து வந்து அங்கன படுக்க பெரிம்மா என் சிண்டுமுடிய ஆஞ்சிப்பிடும். நல்ல கதெதேன். போவும்…” என்று அவள் மிஞ்ச,

“ஓகே, அப்ப இந்த கோபத்தை உள்ள வந்து காமிக்கலாம். ஏன் இங்க நின்னுட்டு இருக்க? வா…” என அவன் கெஞ்ச அசையாமல் நின்றாள் கண்மணி.

“இன்னும் என்னடி?…” சலிப்பாய் அவன் கேட்க,

“இங்கதேன் கூட்டியாறீகன்னு ஏன் சொல்லல?…”

“ஓஹ், இவ்வளவு தானா? ஊஃப்…” என்று மூச்சை விட,

“அப்ப இதுமாட்டிமில்லாம வேறென்ன இருக்கி?…” கண்மணி அதை பிடித்துக்கொள்ள,

“நீ இருக்கி, இருக்கின்றப்போ சத்தியமா உன்னை இறுக்கிக்கனும்னு தான்டி கிங்கினிமங்கினி தோணுது…” அவளின் காதோரம் அவனின் குரல் கிசுகிசுப்பாய் வர,

“இந்த வெயாக்கியானோ எனக்கு தேவயில்ல…” அவள் மீண்டும் முருங்கைமரம் ஏற,

“ஒரு சப்ரைஸ் குடுக்கலமேன்னு தான். நீயும் அருளை குழந்தையா தூக்கிட்டு வந்ததோட இங்க வரவே இல்லை…”

“வரவிட்டீகளாக்கும்?…” அதற்கும் நொடிக்க,

“ஒத்துக்கறேன்டி. விடலை தான். அதான் இப்ப கூட்டிட்டு வந்தேன்…”

“மாமாவுக்கெல்லா சொல்லிருக்கீக? என்னட்ட ஏஞ்சொல்லல?…”

“அம்மாவை தவிர எல்லாருக்குமே தெரியும். நீ ஊருக்கு போயி ஆகனும்னு சொல்லவுமே லீவ்க்கும் குடுத்துட்டேன். இன்னும் ஒரு நாலு நாள் இங்கதான். சும்மா ஜாலியா என்ஜாய் பண்ணலாம்…” என்று கண்ணடிக்க,

“நீறு எஞ்சாயிம். எனக்கென்னத்திக்கி?…” என அப்படியே அவள் வேண்டுமென்றே நிற்க,

“நீ சரிப்படமாட்டடி…” என்று உள்ளே சென்றவன் தங்கள் அறைக்கதவையும் திறப்பதை போல பாவலா செய்து,

“ஒய் கிங்கினிமங்கினி மெத்துலையே நிக்காம உள்ள வாடி…” என்று உல்லாசமாக சற்று அழைக்க பதறிக்கொண்டு ஓடிவந்தாள் கண்மணி.

“ஆத்தீ, என்ன காரியப்பண்ணிப்பிட்டீக?. ஆருக்காச்சும் கேட்டுச்சி மானமே போச்சி…” என்று அவனின் வாயை அடைக்க கார்த்திக்கின் கண்களில் குறும்பு குற்றால அருவியாய் கொட்டியது. அவனின் விளையாட்டில் புன்னகைத்தவள்,

“உம்ம வச்சிக்கிட்டு நா படுதபாடு இருக்கிதே?…” என செல்லமாய் அவளின் தலையில் அடித்துக்கொள்ள இருபுறமும் கதவை அடைத்துக்கொண்டு வந்து அவளை அணைத்துக்கொண்டான் கார்த்திக்.

“கிங்கினிமங்கினிஇதை பார்க்கறப்போ எனக்கு நம்ம வெட்டிங்டே ஞாபகம் வருதுடி. அதே அட்மாஸ்பியர். பட் பூவும், பழமும் ஊதுவர்த்தியும் தான் இல்லை…”

“குறைச்சலாக்கும்? போயி எடுத்தாரவா…”

“மாட்டேன்னே சொல்லமாட்டேன்…” விஷமாமாய் சொல்ல,

“எனக்கி புரிஞ்சிடுச்சி. புள்ளைய அம்மாக்கிட்டயே இருக்கட்டுமின்னு நீறு சொன்னப்பவே நெனச்சே…” என அவனின் கையை கிள்ள,

“நினைச்சிட்டே தான் இவ்வளவு நேரத்தை வேஸ்ட் பண்ணினியா கிங்கினிமங்கினி? வெரி பேட்…” அவளின் காதை மென்மையாய் கடித்துவைக்க,

“நீறு இருக்கீரே…” என லைட்டை ஆஃப் செய்துவிட்டு வர இருளில் அவளை அன்றியவன்,

“கிங்கினிமங்கினி பழம், ஊதுவர்த்தி மறந்துட்டடி…” என சொல்லி அவளிடம் சிலபல செல்ல அடிகளையும் வாங்கிக்கொண்டான்.

“செக்கெண்ட ஹனிமூன் கொண்டாடலாம்னா விடமாட்ட போலடி கிங்கினிமங்கினி….” என அட்டகாசமான சிரிப்புடன் அவளுள் நிறைந்தான்.

சரியாக தன் வீட்டில் மாட்டு கத்தும் ஓசை கேட்க வழக்கமாய் விழிப்பு வந்து வாரிசுருட்டிக்கொண்டு எழுந்தவள்  கார்த்திக்கை பார்த்தாள்.

தான் எழுந்ததும் ஒரு தலையணையை கட்டிக்கொண்டு அவன் உறக்கத்தை தொடர அவனின் முகத்தை பார்த்தவளுக்கு அன்பு பெருகியது. உறங்கும் முன்பே,

“கிங்கினிமங்கினி உன் அலாரத்தை உன்னோட வச்சுக்க. இன்னைக்கு எழுப்பிடாத. டென்ஷன் ஆகிடுவேன்…” என சொல்லிவிட்டு தான் உறங்கவே ஆரம்பித்தான்.

அதை நினைத்து சிரித்தவள் இன்னொரு சத்தத்தில் கலைந்து வேகவேகமாய் குளித்து முடித்து வேறு புடவை ஒன்றை கட்டிக்கொண்டு கீழே இறங்கி வந்தாள். அவள் வரும் நேரம் அறுப்பில் பால் பொங்கும் வாசம் மணக்க அதை சுவாசித்தபடி மகனை பார்த்தாள்.

இப்போது முற்றத்தில் அல்லாது கீழே உள்ள அறையில் அருள் உறங்கிக்கொண்டிருந்தான். அருகில் நாட்டரசன் அமர்ந்திருந்தார்.

“காட்டுக்கு போவலியாப்பா?. நேத்தே களை எடுக்கனுமின்னு அம்மா சொல்லுச்சு…” என மகள் கேட்க,

“இல்லம்மா செவலைட்ட சொல்லியனுப்பிட்டேன். அவன் பாத்துப்பான்…” என்றவர் பேரனை விட்டு நகலவில்லை.

“செரிப்பா…” என சொல்லிவிட்டு வாசலுக்கு விரைய அங்கே பேச்சி சாணியை வாளியில் கரைத்துக்கொண்டு இருந்தார்.

“என்னமா இம்பிட்டு நேரசெண்டு வாச தூக்குறீக?…”

“கொஞ்ச அசதியில ஒறங்கிட்டேன். நவுந்து நில்லு. தெளிச்ச பின்னாடி ஒக்காரு…” என சொல்லி விறுவிறுவென தெளித்துவிட்டு கோலமாவை எடுக்க முன்னறைக்குள் வந்தவர் கண்மணியை பார்த்து கடுப்பாகிவிட்டார்.

“ஒனக்கு எம்பிடுத்தேன் சொல்லி மாளடி? கூறே உண்டாவாதா?…” என திட்ட,

“என்னம்மா? குளிச்சிட்டுதேன் வந்தேன். தெரியலியா?…” என அச்சத்துடன் கேட்க,

“எல்லாந்தெரியுதி. ஏன்டி வாவரசி வெருநெத்தியா நிக்கலாமாடி? அறிவு வேணா? போடி போயி பூசயில இருக்கற குங்குமத்த இட்டுட்டு வா…” என்று அனுப்பினாலும் பேச்சிக்கு மனதே ஆறவில்லை.

“ஆத்தா முத்துக்கருப்பி மன்னிச்சிகிடுத்தா. இன்னைக்கு புள்ளையல கோவிலுக்கு அனுப்பிவிடுதேன்…” என வேண்டிக்கொண்டே புள்ளிகளை வைக்க சுருங்கிய முகத்துடன் வந்து அமர்ந்தாள் கண்மணி.

சங்கரி சரியாக காபியுடன் வரவும் திண்ணையில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தவளுக்கு வருத்தமெல்லாம் பறந்துபோனது. அதன் பின்னால் தெருவில் போவோர் வருவோரிடம் கதைபேசிக்கொண்டும் பேச்சியிடம் திருப்பூர் கதைகளை கூறிக்கொண்டும் இருந்தாள்.

கோலமிட்டு முடித்து வாசலை சரிபார்த்துவிட்டு உள்ளே வந்த பேச்சி கையை கழுவிவிட்டு வந்து கண்மணியை அழைத்தார்.

“மணி விடியக்கருக்குல நெத்தியில போட்டு இல்லைன்னதும் நெஞ்ச்சுகூட்டுல சுருக்குங்குது. அவுக எந்திக்கவும் நம்ம முத்துக்கருப்பி கோயிலுக்கு போய்ட்டு வந்திருத்தா…” என்ற பேச்சி சொல்ல திகைத்தாள் கண்மணி.

“எதுக்கும்மா?…” கார்த்திக்கை சமாளித்து எப்படி அழைத்துச்செல்ல போகிறோம் என்கிற யோசனையில் இவள் கேட்க,

“போன்னா போ. கொலசாமி கோவிலுக்கு போன்னு சொல்லிட்டேன். போவாம இருந்துறாத. மனசுக்கு வெசனமாகுது…” பேச்சி முகம் கவலையாய் தெரிய,

“செரிம்மா…” என்றாள் கண்மணி. அதன்பின்னர் தான் முகம் தெளிந்தது பேச்சிக்கு.

“இந்தா மணி, நேரத்த பாரு. ஏழாவது. போயி அவருக்கு இந்த காப்பிய குடுத்துட்டி வா…” சங்கரி சொல்ல அவரை சங்கடமாய் பார்த்தவள்,

“இல்ல பெரிம்மா அவரா எந்திக்க வர எழுப்பாதன்னு சொல்லிருக்காரு. அசந்து ஒறங்குதாரு. அதேன்…” என சொல்ல,

“செரித்தா, வா போயி வேலைய பாப்பம்…” என்ற சங்கரி,

“அவரே எந்திச்சு வரட்டு. கேக்குதவகட்ட ஒறங்குதாருன்னு சொல்லாத. போனுல பேசுதாருன்னு சொல்லு…” என சொல்லிகொடுக்க கேட்டுக்கொண்டிருந்த பேச்சிக்கு சிரிப்புதான் வந்தது.

மகளின் முகத்தை கண்டும் காணாமல் பார்த்து பார்த்து விழிகளுக்குள் நிறைத்து பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்.

அவருக்கு பயம் தாங்கள் கிளம்பிய பின்னால் மகாதேவி செய்த வேலையை கொண்டு மருமகன் மகளை கோவித்து இருப்பாரோ என்று. எத்தனை பிரச்சனை இருந்தாலும் கண்மணி சொல்லமாட்டாள் தான். ஆனாலும் தாயுள்ளம் பதறத்தான் செய்தது.

இப்போது இணக்கமாக மருமகனே மகளை அழைத்துவந்து கண்ணில் காட்டிவிட்ட பொழுது என்ன மனகிலேசம்? அனைத்தும் பறந்துபோனது.

கண்மணி மற்ற வேலைகளை பார்க்க அருளை தலைக்கு குளிக்க வைத்து சாம்பிராணி தூபம் போட்டு வேறுடை மாற்றி ஜம்மென்று விளையாட விட்டிருந்தார் பேச்சி.

சங்கரி அவனுக்கு விளையாட்டுபோக்கிலேயே சாப்பாட்டையும் ஊட்ட சமத்தாய் சாப்பிட்டு முடித்தான் அருள்.

அவனுக்கு வீடு நிறைய ஆட்கள் இருப்பதை கண்டு ஏக கொண்டாட்டம். கையில் பிடிக்கமுடியவில்லை. இங்குமங்கும் மாறி மாறி தவழ்ந்தே ஓடிக்கொண்டிருந்தான்.

ஆம், கார்த்திக், கண்மணியை பார்க்க சொந்தபந்தங்கள் என மொத்தமாய் படையெடுத்து வந்திருந்தனர்.  வீடு நிறைய ஆட்கள். வந்தவர்களில் அனைவரும் ஏன் மொட்டைக்கு சொல்லவில்லை என்கிற அங்கலாய்ப்பு.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் சொல்லி முடிக்கும் முன்னர் கண்மணிக்கே மூச்சு திணறிப்போனது.

பேச்சி தான் அடுத்த மொட்டை முத்துக்கருப்பி கோவிலில் என்று சொல்லி வாயடைக்க வைத்தார்.

Advertisement