Advertisement

மணியோசை – 24
               “கார்த்திக் என்னப்பா லக்கேஜை அதுக்குள்ளே பேக் பன்ற?…” மணிகண்டன் வந்து கேட்கும் பொழுது வீட்டில் மகாதேவியை தவிர வேறு எவருமில்லை.
கண்மணியுடன் சந்திரா பெரியப்பாவின் வீட்டிற்கு சென்றிருக்க கார்த்திக் தான் அவர்களின் உடமைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான்.
“இன்னைக்கு நைட் கிளம்பறோம் அப்பா. பங்க்ஷன் முடியவும் கிளம்பிடுவோம். அதான் பேக் பன்றேன்…” 
“இன்னும் ஒரு நாள் இருந்துட்டு போகலாமே கார்த்திக்…” மகாதேவி சொல்லவும் அவரை பார்த்தவன்,
“இருக்கட்டும்மா, அடுத்து லீவ் கிடைக்கும் போது வரப்பார்க்கேன்…” என சொல்லிவிட்டு அவரின் பதிலையும் எதிர்பார்க்காமல் எடுத்துவைக்க,
“வந்து கூட எடுத்து வையேன் கார்த்திக்?…” மீண்டும் தாய் பேச,
“இப்போ வச்சா தான் நாங்க வந்ததும் அப்படியே கிளம்ப முடியும். இல்லைன்னா அந்நேரம் டென்ஷன். அதான் வேண்டாம்னு இப்பவே ரெடி பன்றேன்…”
“இதை நீ எடுத்து வைக்கனும்னு என்ன இருக்கு கார்த்திக்? நம்ம வீட்டு வேலையை கவனிக்காம இவளுக்கு அங்க என்ன வேலை?…” மகாதேவி மீண்டும் கண்மணியை இழுக்க,
“சொந்தபந்தம் வேணும்னு அவ நினைக்கா. ஒரு விசேஷ நாள்ல தான் எல்லாரும் ஒண்ணா இருக்க முடியும். நான் தான் போக சொன்னேன்…” பட்டென அவனும் சொல்ல சுதாரித்த மகாதேவி,
“போனவ அருளையும் தூக்கிட்டு போய்ட்டா. இங்க விட்டுட்டு போய்ருந்தா நான் பார்த்திருந்துருப்பேன்ல? கூட்டத்துக்குள்ள எதுக்கு குழந்தை?…” 
“நான் தான் போக சொன்னேன். எனக்கு நம்ம குடும்பத்து ஆளுங்க பாதி தெரியலை. என் பிள்ளையும் அப்படி இருக்க கூடாதுல. கூட்டமாவே இருந்தாலும் பழகட்டும். தப்பில்லை…”
“சாயங்காலம் தானே பார்க்க வராங்க. நேரத்துக்கு போனா ஆகாதா?.இப்பவே அங்க போய்…”  என்ற மகாதேவி மகனின் பார்வையில் வாயை மூடினார்.
“உங்களுக்கு என்னதான்மா பிரச்சனை? எனக்கு புரியலை. அவளைத்தான் உங்களுக்கு புடிக்கலையே. கண்ணுல பட்டாலே கரிச்சுக்கொட்டுறீங்க. இங்க இருந்தா தேவையில்லாம பேசுவீங்க. அதான் நானே போக சொன்னேன். இப்ப மட்டும் என்ன உங்களுக்கு அவ மேல அக்கறை?…” எனவும்,
“நான் ஏன் அக்கறைப்படறேன்? முன்னாடியே போய் விழுந்து விழுந்து வேலை பார்த்து கூடி குலாவுற அளவுக்கு அவங்க வொர்த் இல்லை கார்த்திக். நாம எப்பவு நம்ம கெத்தோட இருக்கனும். நம்ம மரியாதை நமக்கு முக்கியம்…”
“அதுக்கு என்னம்மா பன்னனும்ன்றீங்க?…” சலிப்பாய் அவன் கேட்க,
“நாம தகுதி அறிஞ்ச வீட்டுல சம்பந்தம் செஞ்சிருந்தா கட்டிட்டு வந்தவளுக்கு எங்க எப்ப போகனும்னு தெரிஞ்சிருக்கும். நீ தான்…” என முடிக்கும் கை நீட்டி தடுத்து நிறுத்திய மணிகண்டன்,
“தகுதி விகுதியை பார்த்திருந்தா எங்கம்மா உன்னை மருமகளா ஏத்திருந்திருக்கவே மாட்டாங்க மகா. நாம எப்படி வந்தோம்ன்றதை மறந்துட்டு பேச கூடாது…” என சொல்லவும் மகாதேவிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
“என்னப்பா நீங்களும்?…” கார்த்திக்கிற்கு என்னவோ போல் ஆக,
“பின்ன என்னடா சும்மா இதையே இன்னும் எத்தனை வருஷத்துக்கு சொல்லிட்டு இருப்பா? நானும் பொறுமையா போனா ரொம்பத்தான் பேசறா. இந்த குடும்பத்துக்கு உன் அம்மா வர வரைக்கும் எப்படி இருந்தது தெரியுமா?…”
“குடும்பத்துல நடக்கற எந்த ஒரு விசேஷமும் இந்த வீட்டுல தான் நடக்கும். எந்நேரமும் சொந்தபந்தங்களோட கூச்சலும் கொண்டாட்டமும் தான் இந்த வீட்டை நிறைச்சிருக்கும். என்னைக்கு இவ கழுத்துல தாலி கட்டினேனோ அன்னைக்கே எல்லா சொந்தங்களும் போயாச்சு…”
தளர்ந்து போய் அமர்ந்த கணவனை சமாதானம் செய்யாமல் நின்ற இடம் விட்டு அசையாமல் நின்ற மகதேவிக்கு அழுகையும் கோபமும் சேர்ந்து வந்தது.
“உங்களை விட வசத்தில கொஞ்சமே தான் குறைச்சல் எங்க வீட்டுல. ஆனா நான் வளர்ந்தது ராணி மாதிரி தான். எதுக்கும் இல்லைன்னு இல்லாம வளர்ந்தேன். இப்போ என்னவோ சொல்லி காண்பிக்கீங்க?…”
மூக்கு விடைக்க மகாதேவி கோபத்தில் மணிகண்டன் மேல் பாய்வது போல கேட்க கார்த்திக் பயந்துவிட்டான் பெரிய சண்டையாகிவிடுமோ என்று.
இப்போதெல்லாம் வாக்குவாதம் என்றாலே அலர்ஜியாகி போனது அவனுக்கு. சமீபமாக வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் வேறு அவனை பந்தாடிக்கொண்டிருந்தது.
“அம்மா விடுங்களேன். சண்டை போடற வயசா இது? யாராவது பார்த்தா அசிங்கமா நினைக்க போறாங்க…”கார்த்திக் கத்த,
“அவரு பேசினது மட்டும் சரியா கார்த்திக்?…” என்று மகனிடமே புகார் வாசிக்க கண்மணியும், சந்திராவும் வந்துவிட்டனர். கலங்கியிருந்த கண்ணீரை கண்மணி பார்த்துவிடும் மும் வேகமாய் முகத்தை துடைத்துக்கொண்டு பழைய கர்வத்தோடு மணிகண்டனின் அருகில் சென்று அமர்ந்துகொண்டார்.
“என்னம்மா வேலை எல்லாம் முடிஞ்சதா? வந்துட்டீங்களே?…” மணிகண்டன் கேட்கவும்,
“ஆமா மாமா,  மத்தியானத்துக்கு சமச்சு எல்லாரு முடிச்சாச்சு. அதேன் கெளம்புதேன்னு சொல்லவும் பெரியத்தே வீட்டுக்கு அங்கன இருந்தே கொண்டுபோக சொன்னாக. எடுத்துட்டு வந்திருக்கோம். வாங்க சாப்பிட…”
“என்ன? அங்க இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்தியா? யாரை கேட்டு கொண்டுவந்த? இங்க யாரும் இதை சாப்பிட மாட்டோம்…” 
மகாதேவி சொல்லிமுடிக்கும் முன்னே கார்த்திக்கும், மணிகண்டனும் கையை கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்துவிட்டனர். அவர்களை உறுத்து விழித்தபடி மகாதேவி பார்க்க,
“நீயே சமைச்சதா கண்மணி? எடுத்து வைம்மா…” என மணிகண்டன் சொல்ல,
“நா மட்டுமில்ல மாமா. சந்திரா மதினி, அங்க இருந்தவகன்னு எல்லாருந்தேன் செஞ்சோம். ஓட்டல்ல சொல்லுதோம்னாக. இத்தன பேரு இருக்கச்ச என்னத்துக்கி? அதேன் மடமடன்னு செஞ்சிட்டோம்…”
கண்மணி சொல்லிக்கொண்டே அந்த பெரிய டிபன்கேரியரை பிரித்து எடுத்துவைக்க ஆரம்பித்தாள்.
“சும்மா ஹெல்ப் பண்ணினது தான்ப்பா நாங்க. சமையல் கண்மணி ஸ்டெயில் தான். அவதான் சமைச்சா…” சந்திராவும் பெருமையாக சொல்ல,
“நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க சாப்பிட உட்கார்ந்தா என்ன அர்த்தம்?…” மணிகண்டனின் பக்கத்தில் வந்து மகாதேவி கேட்க,
“பசிக்குது, சாப்பிட போறோம்னு அர்த்தம். இப்ப எதுக்கு கோபப்படற மகா. நீயும் வந்து சாப்பிடு…”
“நானா? ச்சீ ச்சீ. போயும் போயும் அந்த வீட்டு சாப்பாடா சாப்பிடனும்?…” 
“அதென்னத்தே ச்சீன்னு சொல்லுதீக? சோத்த பழிச்சா அந்த அன்னபூரணியை பழிச்ச மாதிரி. கெடப்புல கஞ்சி கெடக்காது பாத்துக்கிடுங்க…”
“ஏய் உன்னை யாருடி இப்ப பேச சொன்னா? என்னோட தகுதி என்ன? அந்த வீட்டுல இருந்து கொண்டுவந்து அதுல நான் பசியாறனுமா?…” மகாதேவி வாயை கொடுத்துவிட கார்த்திக் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
அவனின் தோளில் தட்டிய மணிகண்டன் சந்திராவை பார்த்து தங்களுக்கு பரிமாற்ற சொல்லிவிட்டு,
“மருமக பார்த்துப்பா, நீ சாப்பிட்டு முடி கார்த்தி…” என்று சொல்லவும் வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். அமைதியாக இருக்கவேண்டும் என்று தான் கண்மணியும் நினைத்தாள். மகாதேவி விடுவதாக இல்லையே.
“பெரிய்ய தகுதிதேன். தங்கத்தையும் வைரத்தையுமா தின்னுறீக? இதே சோத்தைத்தான் நீகளும் உண்ணுதீக, குடிசையில இருக்கறவகளும் உண்ணுதாக. ரோட்ல கெடக்கறவகளும் உண்ணுதாக. இதுல தகுதி எங்கன இருந்து மொளச்சது?…” 
சேலையை சொருகிகொண்டு இடுப்பில் கை வைத்து அவள் கேள்வி கேட்க மகாதேவியால் பதில் சொல்ல முடியவில்லை.
“ஒங்களுக்கு புடிக்காட்டி கம்முனு இருக்கனும். அத வுட்டுட்டு பசியா சாப்புடுதவகள கூடாதுன்னு தொண்டையை புடிச்சு இறுக்கினா அந்த கடவுளுக்கே பொறுக்காது. அவுக என்ன அடுத்த வீட்டு சாப்பாட்டையா சாப்பிடுதாக? மாமாவோட அண்ணே வீட்டு சாப்பாடு தானே?…”
“இந்த வீட்டுக்கு யார் சாப்பாடு குடுக்கனும்னு ஒரு தராதரம் இருக்கு. உனக்கு அது புரியாது. நீ கொண்டுபோன குடுத்த. போகுதுன்னு விட்டா அங்க இருந்து கொண்டுவர. இந்த வீட்டு மனுஷங்களுக்கு சாப்பாடு குடுக்கற அளவுக்கு தைரியம் வந்திருச்சா அவுகளுக்கு? பேசிக்கறேன். இனி இந்த மாதிரி செய்யனும்னு கனவுல கூட நினைக்க கூடாது…” மகாதேவி ஆட,
“எதுக்குங்கறேன்? அப்படித்தேன் குடுப்பாக. ஒங்க கொணம் அறிஞ்சிதேன் வேண்டாமின்னாக போல. நாந்தேன் எதுக்கி தனியா இங்கன ஒலை வெக்கனும்னு எடுத்துட்டு வந்தேன். என்னிய பேசுக. அவுகள பேசினா நா சும்மா இருக்கமாட்டேன்…” கண்மணி சொல்லவும்,
“நினைச்சேன்டி உன்னோட வேலையா தான் இருக்கும்னு. உன்னால இன்னும் என்னவெல்லாம் இந்த வீட்டுக்குள்ள நுழையுமோ?…” 
மகாதேவி சொல்லும் பொழுதே தவம் உள்ளே நுழைந்தான். அவனை பார்த்ததும் இதை கேட்டிருப்பானோ என்று நினைத்து வாயை மூடிக்கொண்டவர் அமைதியாக அவ்விடம் விட்டு நகர சந்திராவும் கண்மணியும் நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.
“என்ன கல்யாணவீட்டு சாப்பாடா? கரெக்ட்டா வந்துட்டேன்…” என அவனும் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர அவனுக்கும் இலையை போட்டு பரிமாறினாள் சந்திரா.
“உங்கம்மா சாப்பிடலையா?…” மனைவியிடம் கேட்டுக்கொண்டே தவம் சாப்பிட கார்த்திக்கும் மணிகண்டனும் உண்டு முடித்து இலையை மடக்கிவிட்டனர்.
“என்ன அதுக்குள்ள மூடிட்டீக? பாயாசம் இருக்குல…” என கண்மணி சொல்ல மகாதேவிக்கு நாக்கே வறண்டுவிட்டது. பாயாசம் என்றாலே கண்மணி சொல்லியது தான் இன்றுவரை கண்முன் வந்து செல்கிறது அவருக்கு. 
“இவ பாயாசத்துல பால்டாயில கலப்பேன்னவ. இவ கையாள வாங்கி குடிச்சுட்டாலும்” என மனதினுள் கருவியபடி பார்த்தார்.
“தம்ளர்ல குடும்மா. நாங்க போய் கை கழுவிட்டு வரோம்…” என மணிகண்டன் சொல்ல,
“நீ எனக்கு எடுத்திட்டு வா. குடிச்சுட்டு வாஷ் பண்ணிக்கறேன்…” என கார்த்திக் சொல்லவும் கடுகடுவென வந்தது மகாதேவிக்கு. 
“பொண்டாட்டியா பார்த்துட்டா போதும் குப்பற விழுந்துடறான். இவனை எப்படியெல்லாம் வளர்த்தேன்.” என நினைத்தவருக்கு  அப்போதுதான் ஞாபகம் வந்தது பேரன் இல்லை என்று.
“அருள் எங்க சந்திரா?…” மகளிடம் கேட்க,
“பெரியம்மாவை விட்டு வரமாட்டேன்னு ஒரே அழுகை. அதான் விட்டுட்டு வந்தோம். அங்க எல்லார்ட்டயும் நல்லா ஒட்டிக்கிட்டான்ம்மா. எனக்கே ஆச்சர்யமா போச்சு. அங்க கண்மணியை தேடவே இல்லை…” என சிரித்துக்கொண்டே சந்திரா சொல்ல,
“அறிவிருக்கா சந்திரா. குழந்தையை அங்க விட்டுட்டு இந்த சாப்பாட்டை தூக்கிட்டு வந்தீங்களாக்கும்? இப்ப இது ரொம்ப முக்கியமா? போனோமா வந்தோமான்னு இல்லாம அந்த வீட்டுக்கு சமையல்க்காரிக மாதிரி ஆக்கிபோட்டுட்டு வந்ததும் இல்லாம புள்ளையை விட்டுட்டு வந்திருக்கீங்க. உங்களை என்ன சொல்ல?…”
“அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க. அவர் சாப்பிட்டு முடிக்கட்டும்…” சந்திரா பதட்டமாக சொல்லவும்,
“தெரியட்டுமே மாப்பிள்ளைக்கு. நான் சொன்னது சரின்னு தான் சொல்லுவாரு. ஏனா நியாயம் தெரிஞ்சவர் அவர்…” என்றதும் தவத்திற்கு புருவங்கள் முடிச்சிட்டன. முகத்தை சுருக்கிக்கொண்டு யோசனையாக அவன் சந்திராவை பார்க்க,
“பாருங்க மாப்பிள்ளை. நானே என் மகளை பொண்ணோ பூவோன்னு பார்த்துட்டு இருக்கேன். இப்பதான் ட்ரீட்மென்ட்ல இருக்கா.  இப்ப போய் உங்க மாமனாரோட அண்ணன் வீட்டுல விசேஷம்னு எல்லா வேலையையும் இழுத்துபோட்டு செஞ்சிருக்கா. உடம்புக்கு முடியாம போனா என்ன பண்ண?…”
இப்படி பேசினால் தான் தவத்தின் ஆதரவு கிட்டுமென்கிற ஆர்வத்தில் மகாதேவி பேசி வைக்க,
“உங்க பெரிய மச்சினர் வீட்டுக்கு தானே போனா? அதை சொல்றதை விட்டுட்டு ஏன் சுத்திவளைச்சு முறை சொல்றீங்க அத்தை? அவ போனதுல என்ன தப்பு? வேலை பார்த்ததுளையும் எந்த தப்பும் இருந்ததா எனக்கு தெரியலை. இதை ஒரு பெரிய விஷயமா ஏன் பிரச்சனை ஆக்கறீங்க?…” தவம் அழுத்தமாய் சொல்ல,
“இங்க பாருங்கம்மா அருள் அழுதா யாராவது கொண்டு வந்து விடுவாங்க. பல மைல் தள்ளியா அருளை அனுப்பி வச்சிருக்கோம். இந்தா இருக்கற வீடு. இதுக்கு போய் எதுக்கு இந்த அலப்பறை? அமைதியா இருங்க…”

Advertisement