Advertisement

“உங்களை எல்லாம் நான் அங்க விட்டதே இல்லை தெரியுமா? கீழே கிடக்கற எதையாவது வாய்ல எடுத்து வச்சுட்டானா என்ன பன்றது?  அவனுக்கு அங்க இடம் வசதிப்படுமோ என்னமோ?…” மகாதேவிக்கு எரிச்சலாக வந்தது தன் பேச்சிற்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை என்று.
“அம்மா கொஞ்சம் பேசாம இருங்கன்னு சொல்றேன்ல. திரும்ப திரும்ப பேசிட்டேருக்கீங்க?…” என பொறுமையிழந்து கத்தியேவிட்டான் கார்த்திக்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க அவனுக்கே வெறுத்துவிட்டது. கண்மணி வேறு முறைக்கவும் அங்கிருந்து அறைக்குள் சென்றுவிட்டான். மணிகண்டன் இதை எல்லாம் பார்த்துவிட்டு வெளியில் சென்று அமர்ந்துகொண்டார்.
அவருக்கு புரிந்தது அனைத்தும் மகாதேவியால் என்று. அவர் மூலமாக இந்த வீட்டின் நிம்மதி குலைவதை கண்கூடாக கண்டுகொண்டிருந்தார். 
கண்மணி எந்தளவிற்கு குடும்பத்தை கட்டி வைக்கவேண்டும் என நினைக்கிறாளோ அதை விட வேகமாய் மகாதேவி உடைக்க நினைக்கிறார். உடைக்கவென்று சொல்வதை விட கண்மணியை வெறுத்து அந்த ஆத்திரத்தால் கோபத்துடன் நடந்துகொள்ள அதன் விளைவு கார்த்திக் மனதளவில் மகாதேவியின் மேல் அதிருப்தியை வளர்த்துக்கொண்டிருக்கிறான்.
இதை என்று தான் மகாதேவி புரிந்துகொள்ள போகிறாரோ என ஆயாசமாக இருந்தது. வயதின் முதிர்ச்சி வேறு மனதளவின் தளர்ச்சி வேறு அவரை உருக்கியது. தானும் இல்லைஎன்றால் மகாதேவியின் நிலை நினைக்கவே முடியவில்லை.
கண்மணி பார்த்துகொள்வாள் என்றாலும் அதற்கு மகாதேவி ஒத்துழைக்க மாட்டார். அதுவே கார்த்திக்கின் கோபத்தை தூண்டும். இதை எதையும் யோசிக்கமாட்டார் மகாதேவி என நினைத்தவரின் கவலை அதிகமாகியது.
தவத்திற்கு அதற்கு மேல் சாப்பாடு இறங்கவில்ல. அவன் எழுந்துகொண்டான்.
“என்னங்க சரியா சாப்பிடலையே?…” சந்திரா பதற மகாதேவி கையை பிசைந்துகொண்டு நின்றார். தவத்தின் மேல் மாப்பிள்ளை என்கிற மரியாதையை தாண்டி கொஞ்சம் பயமும் இருந்தது அவருக்கு. 
“பிரச்சனையே சாப்பாட்டை வச்சுன்னு இப்பத்தான தெரியுது? நிம்மதியா சாப்பிட முடியுதா? ஒன்னும் வேண்டாம். நான் நைட்ல பெரியமாமா வீட்டுல சாப்பிட்டுக்கறேன். ஆளைவிடு…” என தவம் குத்தலாய் சொல்லி செல்ல மகாதேவிக்கு கோபமாய் வந்தது.
“ஏன்டி அவளுக்குத்தான் அறிவில்ல. எடுத்துட்டு வந்துட்டா, நீ சொல்லி வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே? பாரு இப்ப பிரச்சனை ஆகிடுச்சு…” என்று மகளை திட்ட சந்திரா மகாதேவியை முறைத்துவிட்டு தவத்தின் பின்னால் செல்ல,
“இப்ப சந்தோஷமாடி? புள்ளையையும் அங்க விட்டுட்டு வந்துட்டா சாப்பாட்டை தூக்கிட்டு…” என எரிந்து விழ,
“இப்ப என்னத்துக்கு இம்புட்டு கோவம் அத்தே? அடுத்தவக வீட்டுலையா இருக்கான்? கொஞ்ச நேரத்துல அருள தூக்கிட்டு வந்து விட்டுட்டு போவாக. விசேசத்துக்கு கெளம்பனுமில்ல…” என்றவள்,
“இன்னொன்னும் சொல்லுதேன் கேட்டுக்குக. சாப்பாட்டை எடுத்துட்டு வந்தே வந்தேன்னு இத்தனை ஏச்சு ஏசுதீகளே இந்த வீட்டுல பொங்குத அரிசிநெல்லு அவுக வயக்காட்டுல வெளஞ்ச நெல்லா இருந்தா வேணாமின்னு அம்பிட்டையும் அள்ளி வெளில தூத்திருவீகளாக்கும்?…” என கேட்க,
“முதல்ல இப்படி பேசறதை நிப்பாட்டு. எனக்கு ஆத்திரமா வருது….”
“பசி வந்துட்டா எல்லா நோக்காடும் வந்துடும். பொறுங்க எதையாச்சும் செஞ்சி கொண்டாறேன்…” என கண்மணி மகாதேவிக்கு சமைக்க செல்ல,
“இந்தாடி நீ செஞ்சு எனக்கு ஒன்னும் வேண்டாம். இத்தனை நாள் உன் கையாள தான் சாப்பிட்டேனா? எனக்கு வேணும்ன்றதை நான் செஞ்சிப்பேன். உன் வேலையை பாரு…” என்று அவளை முந்திக்கொண்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டார்.
அவரின் செயலில் எரிச்சல் வந்தாலும் தலையில் அடித்துக்கொண்ட கண்மணி இரண்டு தம்ளர்களில் பாயாசத்தை ஊற்றி ஒரு ப்ளேட்டில் பழங்களை எடுத்துக்கொண்டு தவத்தின் அறைக்கு சென்றாள்.
கதவு திறந்தே இருக்க கட்டிலில் நெற்றியை பிடித்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தான் தவம். அவனுக்கு பக்கவாட்டில் கையை கட்டிக்கொண்டு நின்றாள் சந்திரா.
“இப்ப என்ன ஆகிபோச்சுன்னு மதினிய கைய கட்டி நிக்கவச்சிருக்கீக அண்ணே?…” என கண்மணி கேட்க அவள் இன்னமும் அறை வாசலிலேயே நிற்பதை பார்த்த தவம்,
“உள்ள வாம்மா. ஏன் வெளியிலையே நிக்கற?…” என்று அழைத்ததும் உள்ளே வந்தவள் பாயாசத்தையும் பழங்களையும் ஸ்டூலில் வைத்துவிட்டு,
“சாப்பிடுங்கண்ணே. சரியா சாப்பிடாம வந்துட்டீகன்னு மதினி வெசனத்த பாருக…” 
“போதுமம்மா. சாப்பிட உட்கார்ந்ததும் அங்க பேசின பேச்சுல பசியே போயிடுச்சு. அதான் எழுந்து வந்துட்டேன். நீங்க போய் சாப்பிடுங்க….” என்றவன் சந்திராவை பார்த்து தலையசைக்க அவள் மறுப்பாய் குனிந்துகொண்டாள்.
“நீக உங்காம இருந்தா மதினிக்கு சோறு எறங்குமா? பேசுத பேச்ச பாருக? மொத இந்த பாயாசத்த குடிங்க. பொறவு நாங்க போறோம். என்ன மதினி?…” என சந்திராவிடம் கேட்கவும் அவளை நன்றியுடன் பார்த்தாள் சந்திரா.
“நீ சொல்லி மாட்டேன்னு சொல்லுவேனா என்ன? அதுவும் நீ வச்ச பாயாசம். குடும்மா…” என வாங்கி குடித்தவன் இன்னொரு தம்ளரிலும் பாயாசம் இருக்க,
“அதையும் குடு. சந்திரா சாப்பிட்டுட்டு குடிப்பா…” என வாங்கிக்கொள்ள,
“இதுவு ஒங்களுக்குதேன். நீக கேட்பீகன்னு தெரியும்ல…” என கண்மணி சிரிக்க அவளை பார்த்த தவத்தின் மனதில் பாசம் பெருக்கெடுத்தது.
“கல்மிஷமில்லா அன்பு கொண்ட இப்பெண்ணை எப்படி பிடிக்காமல் போனது மகாதேவிக்கு என யோசனையுடன் இருந்தான் தவம்.
“செரிண்ணே நாங்க போய் சாப்புடறோம். அருளு வந்தான்னா விடமாட்டான்…” என்று சந்திராவை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்து தங்களுக்கு இலையை போட்டு தாங்களே பரிமாறிக்கொண்டனர்.  
 இருவரும் சாப்பிட ஆரம்பிக்க மகாதேவி ஒரு தட்டில் தோசையுடன் வந்து அமர்ந்தார். இத்தனை நேரத்திற்கு பின்னால் குக்கரில் சாதம் வைத்து அது எப்போது தயாராக? பசியில் மயக்கவே வந்துவிடும் நிலை அவருக்கு.
சாப்பிட்டு மாத்திரை வேறு போடவேண்டும். என்ன செய்வது என யோசித்தவர் காலையில் செய்த தக்காளி சட்னியும், புளித்துவையலும் இருக்க மாவை எடுத்து தோசை வார்த்தவர் சட்னி, துவையலை வைத்துக்கொண்டு கூடவே எண்ணெய் விட்ட எள்ளு மிளகு பொடியை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார்.
“அம்மா என்ன பிடிவாதம் இது? சாப்பாடு சாப்பிடலாம்ல. இந்நேரம் தோசை சாப்பிடறீங்க? என்னம்மா இதெல்லாம்?…” சந்திராவிற்கு கஷ்டமாக இருந்தது தாயை விட்டு உண்ண.
ஆனால் கண்மணிக்கு அப்படி இல்லை. அவள் எந்தவித சங்கடமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அதை கண்டுமகாதேவிக்கு கோபம் வந்தது.
“கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாம எப்படி சாப்பிடறா பாரு…” என மகளிடம் சொல்ல,
“ஒங்கள உங்க வேணாமின்னு சொல்லி நா உங்கிட்டு இருக்கேனா அத்தே? வீம்புக்கு வெளக்கு பிடிச்சா நா என்னத்த பண்ண?…” சொல்லிவிட்டு அவள் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
வாசலில் மாமனார் தனியாக அமர்ந்திருக்க அவருடன் அமர்ந்து ஊர்க்கதைகளை பேசிக்கொண்டிருக்க சிறிது நேரத்தில் அருளை தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர் பெரியப்பா வீட்டினர். 
மகனை வாங்கி மடியில் போட்டு உறங்க வைத்தவாறே கண்மணி மணிகண்டனிடம் வளவளத்துக்கொண்டிருக்க அவளை இத்தனை நேரமாகியும் காணாது தேடிவந்த கார்த்திக் அவர்களுடன் இணைந்துகொண்டான். 
மணிகண்டனின் மனதில் இருந்த சஞ்சலம் கொஞ்சம் குறைவதை போல இருக்க நிம்மதியாக உணர்ந்தார்.
மூன்று மணியை தாண்டவுமே பரபரவென அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர் விசேச வீட்டிற்கு.  
ஐந்து மணிக்கெல்லாம் தயாராகி அனைவரும் வர மகாதேவி இன்னமும் புறப்படாமல் இருக்க கடுப்பான கார்த்திக் முன்னாள் சென்றுவிட்டான் தவத்துடன்.
“என்ன மகா இது? இன்னும் கிளம்பாம இருக்க?…” என மணிகண்டன் கேட்க,
“ஆறுல இருந்து ஏழு மணிக்கு தானே? நான் அப்ப வரேன். முன்னாடியே என்னால அங்க வந்து நிக்க முடியாது. நீங்க போகனும்னா போங்க…” மணிகண்டன் விட்டுவிட்டு தனியாக செல்லமாட்டார் என நினைத்து அவர் சொல்ல,
“செரிங்க அத்தே, மாமா நாம போவலாம். அத்தே அங்கன வந்து என்ன செய்யபோறாக? நமக்கு ஆயிரத்தெட்டு வேல கெடக்கு. அவுக வாரப்ப வரட்டும். வாங்க நாம கெளம்புவோம்….” என சொல்லி அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட மகாதேவி கண்டுகொள்ளவே இல்லை. 
தன்னை வற்புறுத்தாத வரைக்கும் சந்தோசம் என நினைத்து மெதுவாய் கிளம்ப ஆரம்பித்தார். மாப்பிள்ளை வீட்டினர் வந்த பின்பு தட்டு தாம்பாளம் மாற்றும் நேரம் சரியாக வந்தார் மகாதேவி. 
அவரின் முகத்தில் போனால் போகிறதென்பதை போல ஒரு பாவம். அதிலும் வைர நகைகளை அணிந்துகொண்டு பெருமிதமாய் வந்து சபையில் அமர அங்கே சில உறவுகள் வந்த கிசுகிசுத்தனர்.
“மகாதேவி இங்க வந்து உட்காரேன். அங்க காத்து சரியா வராது. இந்த பேனுக்கு நேரா உட்காரு…” என வாயெல்லாம் பல்லாய் ஒரு உறவுக்கார பெண்மணி சொல்ல அலட்சியமாய் பார்த்துக்கொண்டே மகாதேவியும் வந்து அமர,
“ஏம்மா உட்கார இடம் குடுத்தா உடனே உன்கிட்ட பேசிடபோறாகளாக்கும்? அட ஏம்மா நீக எல்லாம்?…” என தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து கண்மணி நகர அவளருகே நின்ற கார்த்திக் சிரித்துவிட்டான். 
அவனையும் சேர்த்து மகாதேவி முறைக்க கார்த்திக் அதை கவனித்தால் தானே? மனைவி சுழன்றுகொண்டு அங்கே வேலை பார்த்து வந்தவர்களை கவனிப்பதை பெருமையாய் பார்த்துக்கொண்டு நின்றான்.
விசேஷம் நல்லவிதமாய் முடிந்து திருமணத்திற்கு நாள் பார்க்க ஆரம்பித்து அனைவரும் சாப்பிட செல்ல மகாதேவி கிளம்பிவிட்டார். சாப்பிட சொன்னவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட வருத்தமாய் பார்த்த பெரியப்பா, பெரியம்மாவிடம்,
“அட என்னத்துக்கி உம்முன்னு ஆகிட்டீக? அத்தேக்கும் சேத்தே நா சாப்புடுதேன். சரிதான?…” என கேட்டு அவர்களை கலகலப்பாக்கினாள் கண்மணி.  அப்பெரியவர்களுக்கும் கார்த்திக் உறவினர்களுக்கும் அவளின் இயல்பில் உள்ளம் நிறைந்துவிட்டது.
அனைவரும் கிளம்பவும் கார்த்திக்கும் கண்மணியுடன் வீட்டிற்கு வந்ததும் லக்கேஜ்களை எடுத்து காரில் வைத்தான்.
“காரத்திக் நாளைக்கு போகலாம்லப்பா…” மகாதேவி கேட்க,
“நாங்க கிளம்பறோம்மா…” முகத்தையும் பார்க்காமல் ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்ள கண்மணியின் முன்பு கெஞ்ச விருப்பமில்லாமல் வாயை மூடிகொண்டார் மகாதேவி. 
மணிகண்டனிடம் சொல்லிக்கொண்ட கண்மணி தவத்திடம் பேசிவிட்டு சந்திராவை அவளின் உடல்நிலையை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி காரில் ஏறிக்கொண்டாள்.
மற்றவர்களிடம் சொல்லும் முன்பே மகாதேவியிடம் சொல்லிவிட்டிருந்தாள். மகாதேவியும் வெறும் தலையசைப்பை மட்டுமே கொடுக்க மற்றவர்களிடம் பேசிவிட்டு கிளம்பிவிட்டாள்.
காரில் அமர்ந்ததும் ஐந்து நிமிடத்தில் உறங்கிவிட்டனர் கண்மணியும், அருளும். சிறிது நேரத்திலேயே கார் நின்றுவிட்ட உணர்வில் கண் திறந்தவள்,
“அதுக்குள்ளே ஊருக்கு வந்துட்டோமா?…” என கண்ணை கசக்கிக்கொண்டு பார்க்க அவள் வந்திருந்தது அவளின் ஊரிற்கு. கார் கண்மணியின் வீட்டு வாசலில் நின்றிருந்தது. ஆச்சர்யமாய் விழி விரித்தவள்,
“சொல்லவே இல்ல?…” என கணவனை சந்தோஷமாய் பார்க்க,
“இதுக்காகத்தான்டி கிங்கினிமங்கினி சொல்லாம கூட்டிட்டு வந்தேன்…” என்று அவளின் கன்னம் கிள்ளியவன் முத்தமிட நெருங்க,
“ஆத்தீ நல்ல வேல பாத்தீக நடு வீதியில நிப்பாட்டி. பாக்கறவக சிரிச்சிற மாட்டாக? போவும்…” என சொல்லிக்கொண்டு கண்மணி காரை விட்டு இறங்க,
“உஷாருடி கிங்கினிமங்கினி நீ…” என புன்னகையுடன் இறங்கினான் கார்த்திக். 
அவர்களை வரவேற்க மொத்த குடும்பமும் வாசலில் நின்றது. இவர்கள் இறங்கிய நொடி அக்கம்பக்கத்தில் திண்ணையில் படுத்திருந்தவர்கள் சத்தம் கேட்டு விளித்து பார்க்க,
“அட நம்ம மணியும், மருமவப்புள்ளையும் பேரனோட வந்துருக்காகளா?…” என சத்தமாய் கேட்க தெருவே விழித்துக்கொண்டது.
சில நிமிடங்களில் அனைவரும் கண்மணி வீட்டு வாசலில் நின்று குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட அவர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டாள் கண்மணி. கார்த்திக்  இதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டே கண்மணி வீட்டு திண்ணையில் அமரந்தான்.

Advertisement