Advertisement

மணியோசை – 23
         “கிங்கினிமங்கினி உன்னை யாருடி சொத்தை பத்தி அம்மாட்ட பேச சொன்னது? பிபி ஏறி நிக்கறாங்க பாரு…” கார்த்திக் மனைவியை கடிந்து பேச,
“ஆமா நா கேட்டதும் ஒங்கம்மா கீளுன்னு கேட்டுட்டு முத்திர பதிச்சுருவாக. போவும்…” அலட்சியமாய் கண்மணி சொல்ல,
“இதுக்குத்தான் வரவேண்டாம்னு சொன்னேன். கேட்டியா? இந்த பேச்சு தேவையா நமக்கு?…” என மகனின் முகத்தை பார்த்தபடி பேச,
“இப்ப ஆரு பேசிட்டாக? அத்தே தானே? கோவத்துல வார்த்த வுடறது புதுசா? விடுதீயளா? பேசாம ஒறங்குக. அங்கன புடுங்கிட்டு ஓட பாத்துட்டு இங்கன வந்து வெடிக்க வேண்டியது…” என அவனை சாட,
“கிங்கினிமங்கினி எல்லாம் என் நேரம்டி. ஏன் சொல்லமாட்ட?…” என மகனை படுக்க வைத்து அருகில் படுக்க,
“செத்த பொறுங்க, நா போயி குடிக்க எடுத்தாரேன்…” என்று திரும்ப கதவை தட்டிக்கொண்டு சந்திராவும் தவமும் வந்தனர்.
“என்னடா கார்த்திக் கோபமா இருக்க போல?…” என கேட்டுக்கொண்டே தவம் வர,
“நல்லா கேளுங்கண்ணே. இதுக்கு போயி கோச்சுக்கிட்டு கெளம்புதேன்னு நிக்கிதாக…” கண்மணி புகாரை சொல்ல வந்து கேலியில் தாவ அவளை முறைத்தவன்,
“கொஞ்சம் பேசாம இரேன்…” என்று கார்த்திக் கூற,
“குடிக்க எடுத்தாரேன் எல்லாருக்குமே…” என்று வெளியேற,
“என்ன கார்த்திக் இது? உன்னோட வீட்டுக்கு வர உனக்கு எதுக்கு இத்தனை கோபம். கண்மணி சொல்ற மாதிரி இரேன்…” சந்திராவே சொல்ல,
“பார்த்தீங்க தானே அம்மா பேசினதை? அவ என்ன பண்ணிட்டான்னு இவ்வளவு பேச்சு பேசிட்டாங்க. அவங்க அமைதியா இருந்திருந்தா கண்மணியும் இதை பேசியிருக்க மாட்டா. இது ஏன் அவங்களுக்கு புரியலை?…” கார்த்திக் கடுகடுக்க,
“கார்த்திக், விடு இது அவங்க மாமியார் மருமக பேசிக்கறாங்க. கண்மணி தான் சமாளிச்சுடுச்சே. நீ ஏன் டென்ஷன் ஆகற?…” 
தவம் அவனை அமைதிப்படுத்த முயல அதற்குள் கண்மணி எலுமிச்சைசாறுடன் வந்துவிட்டாள். அனைவரும் ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டு அமர சந்திரா தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை தூக்கி தன் மடியில் போட்டு தடவி கொடுக்க அதுவரை இருந்த இறுக்கம் குறைந்தது கார்த்திக்கிடம்.
“நீ ஊருக்கு போற வரை எங்களோட வந்து இரேன்க்கா…” என அழைக்க அவனை பார்த்து புன்னகைத்த சந்திரா,
“அம்மா பன்றது தப்பாவே இருந்தாலும் அவங்களை நான் தனியா விட்டுட முடியுமா கார்த்திக்? நான் கிளம்பற வரைக்கும் அவங்களோடவே இருக்கேன். ப்ளீஸ்…” 
“அருளை நீ ரொம்ப மிஸ் பன்றன்னு நினைக்கேன். அதான் வான்னு சொன்னேன்…” என கார்த்திக் சல்ல,
“அதுக்கேன் அவுகள அலையவெக்கனும்? நா வேணுமின்னா மதினி கெளம்புத வரைக்கி இங்கன இருந்துட்டு பொறவு வரேன்…” என கண்மணி சொல்ல ஜூஸை குடித்துக்கொண்டிருந்தவனுக்கு புரையேற தலையை தட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான் மனைவியை.
“ஏய் ஏன்டி?…” என கிலியுடன் அவளை கேட்க,
“ஏன்டா ஒரு பத்து பதினைஞ்சு நாள் உன்னால தங்கச்சியை விட்டுட்டு இருக்க முடியாதா? இதுக்குப்போய் கண்ணுல தண்ணி வச்சுக்கிட்ட?…” என தவம் கேலி பேச,
“அட நீங்க வேற, நான் பயந்தது அம்மாவுக்காக. சும்மாவே இவளை பார்த்தா சாமி ஆடறாங்க. கூடவே இருந்தா அவ்வளோ தான்…” என கேலியும் உண்மையுமாக பேச,
“மதினி நா இங்கதேன் இருக்க போறேன். என்ன சொல்லுதீக?…” வம்படியாய் கண்மணியும் பேச அவளை முறைத்தவன்,
“இதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வர கூடாதுன்னு சொன்னது. இப்படி ஒரு ப்ளானோட தான் நீ வரனும்னு இருந்தியா?…”  
“இப்ப வரைக்கி எனக்கு ஒரு திட்டமும் இல்ல. ஆனா நீக சொன்னீகல. அதேன் முடிவ மாத்திட்டேன். நா இங்கதேன் இருக்க போறேன்…” என சட்டமாக சொல்லி காலி தம்ளர்களை எடுத்துக்கொண்டு செல்ல தலையில் கையை வைத்து அமர்ந்தான் கார்த்திக்.      
அவனை கண்ட தவத்திற்கும் சந்திராவிற்கும் சிரிப்பாய் போக அவர்களையும் முறைத்தவன்,
“என் பேச்சை யார் கேட்கறா இங்க?…” என பொறும,
“விட்ரா விட்ரா இது ஒரு பிரச்சனையா? பார்த்துக்கலாம்…” என்று அவர்கள் கிளம்ப கண்ணை மூடி மகனுடன் படுத்துவிட்டான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவனை தட்டி எழுப்பிய கண்மணி அவனின் தூக்கம் கலைவதற்குள் தோளில் டவலை எடுத்து போட்டு,
“போய் கெளம்பி வாங்க, பெரிய மாமா வீட்டுக்கு போவலாம்…” என சொல்ல,
“நாளைக்கு போவோம் கிங்கினிமங்கினி. செம்ம டயர்டா இருக்கேன். ப்ளீஸ்…” என்று அந்த டவலை முகத்தில் மூடி மீண்டும் உறங்க யத்தனிக்க,
“அப்பா செரி, நா போயி பாத்துட்டு பேசிட்டு மெதுவா வாரேன். புள்ளைய பாத்துகிடுங்க….” என அசால்ட்டாய் சொல்ல படக்கென எழுந்தமர்ந்தான் கார்த்திக்.
பின்னே அருளுக்கு தாய் தன்னை தூக்கி சுமக்கவேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் அவனிருக்கும் இடத்தின் கண்மணியின் இருப்பு அவசியம். தன் கண் முன்னால் தன் தாய் நடமாடிக்கொண்டிருக்க வேண்டும். 
கண்மணி இல்லை என்று  தெரிந்தால் அருள் செய்யும் ஆர்பாட்டத்தில் யாராலும் சமாளிக்க முடியாது. அது கார்த்திக்காகவே இருந்தாலுமே. அதனை கொண்டே அவனின் இந்த பதட்டம்.
“பழி வாங்கறடி கிங்கினிமங்கினி. இதுக்கெல்லாம் என்ன பன்றேன்னு பாரு…”
“பதிலுக்கு புள்ளைய குடுத்து நீக பழி வாங்குவீகளாக்கும்?…” என நக்கலாய் அவள் கேட்க கார்த்திக்கின் முகம் மலர்ந்துபோனது.
“நான் ரெடிடி கிங்கினிமங்கினி…” என சரசமாய் பேச,
“பாவிமனுஷா, நா என்னத்த சொல்லுதேன். நீறு என்னத்த பேசுதீரு? நெனப்பப்பாரு…” என முறைக்க,
“நீ தானடி புள்ளைய குடுத்து பழிவாங்குவேனான்னு கேட்ட?…” உல்லாசமாய் சிரித்துக்கொண்டே எழுந்து சென்று குளித்து தயாராகி வந்தான். 
அவன் வரவும் அவனோடு கலந்த அந்த வாசத்தை அடிமனம் வரை உள்ளிழுத்து நுகர்ந்தாள். தான் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டு வந்த அன்று உணர்ந்த அந்த வாசனை இன்றும் அந்த அறையில் சுற்றிகொண்டே இருப்பதை போல உணர்ந்தவளின் முகம் பொலிவை சிந்தியது.
“என்னடி கிங்கினிமங்கினிஇந்த பார்வை பார்க்கற?…” என குதூகலமாய் அவன் வர,
“சும்மாதேன். வேணான்னா பாக்கல…” என சொல்லி மகனை தூக்க,
“அதுக்குள்ளே எழுந்துட்டானா? ரெடி பண்ணிட்ட போல?…” என தன் கையில் அருளை வாங்கிக்கொண்டான்.
“பின்ன நீறு குளிச்சு சீவி சிங்காரிச்சு வரமுன்ன நாங்க ரெடி ஆகிட்டோம்ல…” என்று கண்மணி அவனை வாரிவிட்டு முன்னால் நடக்க,
“இனி உன்கிட்ட ஏதாவது கேட்டேனா பாரு?…” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவளை இடித்துக்கொண்டு முன்னே சென்றுவிட்டான். 
அவனின் கோபத்தை கண்டு சிரித்தவள் அடுப்படிக்கு சென்று பெரிய எவர்சில்வர் வாளியை தூக்கிக்கொண்டு வந்தால் கண்மணி.
“என்னடி இது?…” என கார்த்திக் கேட்க சரியாக மகாதேவியும் ஹாலுக்கு வந்தார் மணிகண்டனுடன்.
“பெரிய மாமா வீட்டுக்கு கொஞ்சமேட்டும் லட்டும், முந்திரிக்கொத்தும் பண்ணேன். கல்யானவீட்டுக்காராவக. கடையிலதேன் இத வாங்குவாக. நாம இருக்கயில வெளியில என்னத்துக்கி வாங்கனு? அதேன் நானே செஞ்சிட்டேன்…”
“ஏன் கண்மணி தனியாவா இவ்வளவையும் பண்ணின? என்னை கூப்பிட்டிருக்கலாமே ஹெல்ப்புக்கு…” சந்திராவும் வந்து கேட்க,
“அட இது பெரிய வேலையா மதினி?…” என்று சிரிக்க,
“யார் வீட்டு சம்பாத்தியத்துல யாருக்கு பண்டம் பன்றது?…” என வரிந்துகட்டிக்கொண்டு வந்த மகாதேவி,
“பார்த்தீங்களா வந்ததும் நாட்டாமத்தனத்தை. அள்ளிக்குடுக்க ஆரம்பிச்சிட்டா. ஊருக்கு தள்ளிவிடத்தான் சொத்து சேத்திருக்கேனாக்கும்?…” என பேசியவர் மணிகண்டனை பார்த்ததும் கப்பென வாயை மூடிக்கொண்டார். 
அவர் வாங்கிருந்த மண்டகப்படி அப்படி. ஆனாலும் வாயை கட்டுப்படுத்த முடியவில்லை அவரால். பொடுபொடுவென கண்மணியை பார்த்து நின்றார்.
“கார்த்திக் கண்மணியை கூட்டிட்டு கிளம்புப்பா…” என மணிகண்டன் சொல்ல,
“சந்திரா முகத்தை கழுவிட்டு வேற புடவை மாத்திட்டு நீயும் வா. நாமளும் போய் கொஞ்ச நேரம் இருந்திட்டு வரலாம்…” என தவம் சொல்லவும் சந்திராவை மகாதேவி உக்கிரமாக பார்க்க,
“நீ வரையா இல்லை நான் கிளம்பவா?…” தவம் அழுத்தமாய் இம்முறை அழைக்கவும் சந்திராவும் கிளம்ப சென்றுவிட்டாள்.
“மாமா என்ன இது?…”
“ஏன்டா நீ மட்டும் சொந்தங்களோட உறவாடனும். நான் ஆட கூடாதா?…” என தவம் கேட்க,
“ஆமா அண்ணே. கேளுக…” என கண்மணியும் ஒத்து ஊத,
“நல்லா ஆடுங்க, யார் வேண்டாம்ன்னா?. கேட்டிருக்கவே கூடாது…”கார்த்திக் கடுப்பாகி சொல்ல தவமும் கண்மணியும் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
“வாங்க போகலாம்…” என்று சந்திராவும் வர அவளின் கையில் மல்லிகைப்பூ தொடுத்திருந்த கவர் ஒன்று இருந்தது.
“சந்திரா…” என மகாதேவி அழைக்க,
“இல்லம்மா அன்னத்தை பார்க்க போறப்ப வெறும்கையோட எப்படி போக? அதான் நம்ம வீட்ல வச்சிருந்த பூவை எடுத்துக்கிட்டேன். கல்யாணம் ஆகப்போற பொண்ணு…” 
மகள் தயங்கியபடி சொல்ல மணிகண்டனின் பார்வை மகாதேவியின் வாய்க்கு பூட்டு போட்டிருந்தது. வாயை திறக்கமுடியாமல் மௌனமாய் நிற்க தவம் ஒரு பார்வை பார்த்துவிட்டு அனைவரோடும் கிளம்பி விட்டான்.
நால்வரும் பேசிக்கொண்டே செல்ல அதை பார்த்து மகிழ்ந்த மணிகண்டனின் மனம் நிறைந்திருந்தது. இதை விட அவருக்கு வேறென்ன வேண்டும்? மகன், மகள், மருமகன், மருமகள் என ஒற்றுமையாய் செல்ல பார்த்தவருக்கே கண்கள் பட்டுவிடும் போல இருந்தது.
“இந்த வீட்ல வழக்கமில்லாத வழக்கமா புதுசு புதுசா நடக்குது. இது நல்லதுக்குன்னா நினைக்கறீங்க?…” மகாதேவி ஆதங்கமாய் பேச,
“மகா எனக்கொரு காபி, இல்லைன்னா டீ கொண்டு வாயேன்….” என அவர் சொல்லவும் வேகமாய் அடுப்படிக்குள் சென்றவர்,
“இவளாம் என்னத்த குடும்பத்தை பார்த்துக்க போறா? பாருங்க பெரிய மாமனார் வீட்டுக்கு இத்தனை செஞ்சு எடுத்துட்டு பொரவ நமக்கு குடிக்க தரனும்னு தோணுச்சா?…” என பேசிக்கொண்டே டீ வைக்க பாத்திரத்தை எடுக்க,
“மகா இங்க வா. இத பாரு…” என அழைத்ததும் வந்து டைனிங் டேபிளை பார்த்தவர் முகம் போன போக்கில் மணிகண்டனுக்கு சிரிப்பு வந்தது.
“இத இங்க வச்சிட்டு போனவ சொல்லிட்டு போறதுக்கென்ன?…” டேபிளில் பிளாஸ்கில் டீ போட்டு வைத்திருக்க ஊற்றி குடிக்க டீக்கப் முதற்கொண்டு எடுத்துவைக்கப்பட்டிருந்தது.
கூடவே கண்மணி செய்திருந்த பலகாரமும் கொஞ்சம் காரவகைகளும் எடுத்து வைக்கப்பட்டிருக்க மகாதேவி அமர மணிகண்டனே மனைவிக்கு ஊற்றி கொடுத்தார்.
அந்த செயலில் மகாதேவியின் மனம் சமன்பட்டதோ? கண்மணியை மறந்துவிட்டு மற்றதை பேச ஆரம்பித்தார். ஆனாலும் மனதிற்குள் இன்னும் சில நாட்களில் அனைவரும் கிளம்பிவிடுவனரே என்ற பரிதவிப்பு எவரறியாமலும் உள்ளுக்குள் புளுங்கிக்கொண்டிருந்தது.
இரவு உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டு வந்த பிள்ளைகளையும் மருமக்களையும் பார்த்தும் ஒன்றும் பேசாமல் மகாதேவி சென்றுவிட மணிகண்டனிடம் வந்தான் கார்த்திக்.
“சாப்பிட்டாச்சாப்பா? உங்களை பெரியப்பா தேடினாங்க. வருவீங்கன்னு நினைச்சாங்க. ஏன்ப்பா?…” என கேட்க மெல்லிய புன்னகையை பதிலாய் கொடுத்த மணிகண்டன்,
“எல்லாருமே அங்க போய்ட்டா உங்கம்மா தனியாயிடுவா கார்த்திக். காலம் முழுக்க எத்தனை கஷ்டத்திலும் கை விடமாட்டேன்னு அக்னிசாட்சியாய் வாக்கு குடுத்திருக்கேன். தப்புதான். அவகிட்ட நிறையவே தப்பு இருக்குது தான். அதுக்குன்னு விட்டுட முடியுமா? என்னால முடியலை கார்த்திக்…”
“ரியலி க்ரேட்ப்பா நீங்க…” மகன் பெருமிதமாய் பார்க்க,
“எவ்வளவு வெறுப்பு அவள் மேல இருக்குதோ அதே அளவுக்கு அன்பும் இருக்கு கார்த்திக். நிறைகுறையோட ஏத்துக்கறது தான் வாழ்க்கை. குறையை மட்டுமே பார்த்தா வாழ முடியாதுப்பா…”
“சாப்ட்டாச்சாப்பா? பதில் சொல்லலையே…” மீண்டுமாய் அவன் கேட்க,
“ஹ்ம்ம் சாப்பிட்டோம் ரெண்டு பேருமே. நீங்க போய் தூங்குங்க. பேரனை கொஞ்ச நேரம் என்கிட்டே குடு. வந்ததுல இருந்து தூக்கலைன்னு சுணக்கம் வேற உன் அம்மாவுக்கு. நானே வந்து தரேன் இவனை…” என்று அருளை வாங்கிக்கொள்ள குதித்துக்கொண்டு தாத்தாவிடம் ஒட்டினான் அந்த குட்டி கண்ணன்.
“இவனுக்காகவாவது உன் அம்மா இவன் அம்மாவை புரிஞ்சுக்கட்டும்…” என சொல்லி செல்ல கார்த்திக்கும் உள்ளே சென்றான். அதற்குள் கண்மணி வேறு புடவைக்கு மாறி இருக்க அவளை வழக்கமாய் முறைத்தான்.
அவர்களுக்குள் அவ்வப்போது உண்டாகும் உரசல் தான். கண்மணி இரவு உடை அணிவதில் விருப்பம் கொள்ள மாட்டாள். ஆனால் கார்த்திக்கிற்கு விருப்பம். தன்னிடம் மட்டுமாவது இரவில் அணிந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணம். அதை கண்மணி காதுகொடுத்து கேட்பதே இல்லை என்கிற கடுப்பு கார்த்திக்கிற்கு.
“நீயெல்லாம் திருந்தவே மாட்டடி கிங்கினிமங்கினி…” எரிச்சலாய் சொல்லி தான் உடை மாற்றாமல் படுத்துக்கொள்ள,
“திருந்தலன்னா என்ன செய்யறதா உத்தேசமா?…” அவள் வம்பாய் அவனருகே படுக்க,
“ப்ச், போடி…” என்று விலகினான்.
“இப்பலா ரெம்பத்தேன். நீக போங்க…” என கண்மணியும் திரும்பிக்கொள்ள,
“தேவுடா, உன்னை கட்டிட்டு? ஒரு நாளாச்சும் நீ என்னை சமாதானமா சரிக்கட்டிருக்கியாடி?. எப்ப பார்த்தாலும் நான் தான் வரனும்…”  என்று தன் பக்கம் இழுக்க பார்க்க,
“அதெல்லா செரியாத்தேன் கெட்டியிருக்கேன். ஒம்ம பாத்தா தெரியாதாக்கும்?…” அவளின் நொடிப்பில் வாய்விட்டு சிரித்தவன்,
“ம்ஹூம், இன்னும் சரியா கட்டலை. திரும்பி கட்டிக்கலாம்…” என வம்பிழுக்க,
“போவும், எரிச்ச வந்துரும் பாத்துக்கும்…” என எழுந்து அமர,
“அட வாம்மா கிங்கினிமங்கினி. சும்மா சும்மா முறுக்கிட்டு…” என அவன் இழுக்கவும்,
“நீறு சரியான ஆளுய்யா. போவும்…” என சிணுங்கிக்கொண்டே அவனின் அணைப்பில் அடங்க,
“உனக்கு என்னனு இவ்வளவு பேச வருது. சரியா அம்மாவை லாக் பன்ற மாதிரி பேசற. உன்னோட அறிவுக்கு…” 
“ரொம்பத்தேன். பாராட்டு பத்தரமாக்கும்? என்னைய சாடத்தானே செஞ்சீக? இப்ப மட்டும் என்னவாம்?…” என கெத்து காட்ட,
“சாடாம? என்னடி பண்ண? நீ பேசினதுல நானே பதறிட்டேன். சும்மாவே அம்மாவுக்கு பிடிக்காது. இதுல நீ பேசினதுக்கு பிபி ஏறிருக்கும். இது வேண்டாம்னு தான் நான் சொன்னேன். நீ கேட்கலை. அவ்வளவு பிடிவாதம்….”
“ஒம்ம பெத்தவகளுக்கு புடிச்சாலும் இல்லனாலும் நாந்தேன் பாக்கனும். கடைசி காலத்துல அவுகள பாத்துக்க கடம உடம பட்டுருக்கோமில்ல. இத்தாத்தூண்டு சண்டக்கி  மூஞ்சில முழியாம போனா அவுகள பாத்துக்க வேண்டிய நேரத்துல ரெண்டுபேத்துகும் மனசு ஒத்துப்போகாம போயிடும்….” 
“ஹ்ம்ம் தென்?…” அவன் அக்ன்னத்தில் கை வைத்து கதை கேட்க, 
“தென்னும் இல்ல, தென்னமர பன்னும் இல்ல. வெயாக்கியான பேசாம கேளும். பேசாமட்டே இருந்தா அது வெரசல சரியாவாது. குடும்பத்துக்குள்ள பள்ளம் விழுந்த மாதிரி ஆயிப்போயிடும். அவுகள பாத்துக்க நெனச்சாலும் மனசுக்குள்ள ஒன்னு உறுத்திட்டே இருக்கும். அவுகளுக்கும் நம்மள இத்தன நாள் வுட்டுட்டு இன்னிக்கின்னு வராகன்னு தோணும்…”
“அதெல்லாம் தோணாது. நீ பார்த்தியாக்கும்?…” கார்த்திக் அவளை பேசவிடாமல் நிறுத்த பார்க்க,
“நீறு என்னத்த பாத்தீறு? கம்முனு கேட்கனும்…” என அவனின் கை இரண்டையும் ஒன்றாய் தன் கைகளுக்குள் பிடிக்க அவன் உருவ பார்க்க முடியவில்லை.
“ஹேய் கிங்கினிமங்கினி என்னை விட ஸ்ட்ராங்காடி நீ?…” என வியப்பாய் பார்க்க,
“இன்னைக்கித்தேன் இதுவே தெரிஞ்சதாக்கும்? என்னத்த குடும்பம் நடத்துனிரோ?…” கண்மணி மற்றதை மறந்து அவனிடம் கேலி பேச,
“இன்னும் நடத்தலாம் தான். கையை விடேன்…” என அவனும் பதிலுக்கு இழைய கண்மணி பேச வந்ததே மறந்து அவனின் பேச்சுக்களுக்கு பதில் கொடுக்க ஜாமத்தை கடந்தது அவர்களின் பேச்சும் சிரிப்பும். 
கண்மணியுடனான பேச்சில் என்றைக்குமே கார்த்திக்கிற்கு சுவாரஸியம் குறைந்ததே இல்லை. நித்தம் நித்தம் எதுவாவது ஒன்று அவனை கவர்ந்துகொண்டே இருந்தது. இன்றும் ஒரு பரிமாணம். அதையும் ரசிக்கவே செய்தான் கார்த்திக்.
இருவரும் லேசாக உறங்க ஆரம்பித்த வேளையில் கதவு தட்டப்பட கார்த்திக் எழுந்து செல்ல,
“நீக போய் உடுப்பை மாத்துக. நானும் கவனிக்கல. நா போய் கதவ தெறக்கேன். மாமவாத்தேன் இருக்கும். லைட்ட போடாம போக. அருளு முழுச்சுப்பான்…” என கண்மணி செல்ல கார்த்திக்கும் எழுந்து மெல்லிய இரவு விளக்கு வெளிச்சத்தில் லுங்கியை எடுக்க கதவை திறந்தாள் கண்மணி.
அவள் திறந்த நேரம் கொண்டையாய் சுருட்டி இருந்த முடி அவிழ மகாதேவி கார்த்திக் தான் என்கிற நினைப்பில் சரியாய் இவள் புறம் திரும்ப மெலிதான சேலை விரிந்துகிடக்கும் தலைமுடி என பயங்கரமாக தெரிய நொடியில் வாய்விட்டு ஆவென அலறிவிட்டார் மகாதேவி.
அவரின் சத்தத்தில் அருள் விழித்துவிட பாட்டியின் கத்தலில் பயத்தில் அவன் வீறிட்டு அழுக லுங்கியை தூக்கிக்கொண்டு என்னவோ என பயந்துபோய் வந்தான் கார்த்திக்.
கதவிற்கு பின்னால் இருந்த லைட்டை போட்ட கண்மணி அருளின் பயத்தில் கோபமானவள் ,
“இப்ப என்னத்துக்கு பேய பாத்த மாதிரி அலறுரீக?…” என கேட்டு மகனை வாங்கிக்கொண்டு அவனை சமாதானம் செய்ய, 
“நீ ஒவ்வொரு தடவையும் வேணும்னு தான பன்ற? பேய் மாதிரி இப்படி வந்து நின்னா பக்குன்னு இருக்காதா?…” மகாதேவி அலறிய சத்தத்தில் வீடே விழித்துக்கொண்டது. அதிலும் அருள் அத்தனை கத்து கத்தினான்.
காதுக்குள் பாட்டியின் ஓங்காரம் ஒலித்துக்கொண்டே இருந்தது போல அவன் தேம்பி தேம்பி அழ கண்மணிக்கு கலங்கிவிட்டது. அருள் அழுவான் தான். ஆனால் இத்தனை அழுகை என்றுமே இருந்ததில்லை. மகாதேவி மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.
“முதல்ல முடிய முடிடி. எப்ப பாத்தாலும் என்னை பயம் காட்டிட்டே இருக்க. யாரை வேணும்னாலும் கேட்டுப்பாரு. நீ வந்து நின்ன கோலத்துக்கு யாரா இருந்தாலும் இதத்தான் சொல்லுவாங்க…” என சொல்லவும் கார்த்திக் மகனை வாங்க கண்மணி முடியை கொண்டையாக சுழற்றினாள்.
“மகா, என்ன பன்ற நீ? எதுக்கு அப்படி கத்தின? ஏன் கண்மணியை திட்டுற?…” என மணிகண்டன் கேட்க,
“இங்க பாருங்க இவளை தேடினான்னு அருளை குடுக்கத்தான் வந்தேன். கதவ திறந்தவ விரிந்த கோலமா நிக்கிறா. எனக்கு பயமா இருக்காதா? கதவை திறக்கறவ லைட்டை போட்டுட்டு திறக்க வேண்டியதுதானே?…”
“விட வந்த நீ வெளி லைட்டை போட்டிருக்க வேண்டியது தான? நீ ஏன் அப்படியே வந்த?. நான் தூக்கிட்டு போறேன்னு சொன்னதுக்கு கார்த்திக்கை பார்த்துட்டு வரேன்னு வந்த. இப்ப எதுக்கு இந்த கத்தல்? கண்மணி தானே?…” மணிகண்டன் அதட்ட,
“பழக்கமான நம்ம வீடு. வெளிச்சமும் இருக்கு. இவ இப்படி நிப்பான்னு தெரிஞ்சா நான் ஏன் லைட்டை போடாம வரப்போறேன்…” என சொல்லி நெஞ்சை நீவிவிட வியர்த்துவிட்டிருந்தது மகாதேவிக்கு.
கண்மணியின் வெளிர்நிற சேலை அந்த மங்கிய இருளுக்கு அப்படித்தான் தெரிந்தது. தவத்தின் முகத்தில் அப்பட்டமான சிரிப்பு ஒட்டியிருந்தது. வாய்விட்டு சிரிக்க ஆசை தான். ஆனால் மகாதேவி இன்னமும் உட்சபட்ச கொதித்தலுக்கு ஆளாவாறே என எண்ணி அடக்கிக்கொண்டான்.
மெதுவாய் வெளியில் இருந்த சோபாவில் அமர்ந்த மகாதேவி புடவை தலைப்பால் முகத்தையும் கழுத்தையும் துடைக்க துடைக்க படபடப்பு குறைவேனா என்றிருந்தது.
“மதினி தண்ணி எடுத்து குடுங்க அவுகளுக்கு…” என்றதை கூட கண்மணி தான் சொன்னாள்.
“நீ பேசாதடி…” என்று அவளை முறைத்து மகாதேவி சொல்ல இன்னும் உக்கிரமாய் விழிகளை விரித்து முறைத்தாள் கண்மணி.
“பாருங்க, பாருங்க எப்படி முறைச்சு பயங்காட்டுறான்னு? அப்ப வேணுமின்னே தானே பண்ணினா? அன்னைக்கும் அப்படித்தான். இப்பவும். இப்பவும்…” அவரை கார்த்திக் வந்து தோளை தட்டிகொடுத்தவன்,
“ரிலாக்ஸா இருங்கம்மா…” என சொல்ல அவனின் கையை இறுக்கமாய் பற்றிகொண்டார் மகாதேவி.
சந்திரா தண்ணீர் சொம்புடன் வரவும் வாங் வேகமாய் குடித்தார். குடித்துக்கொண்டிருக்கும் பொழுதே வெளியில் நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் கேட்க பதறிப்போய் சொம்பை கீழே போட போனார் மகாதேவி.
“ஒண்ணுமில்ல மகா. எதுக்கு இந்த பதட்டம்?…” மணிகண்டன் கவலையாக சொல்ல,
“அதெல்லாம் இல்லையே. நான் சும்மா தான்…” என மேம்போக்காக பேசினாலும் பார்வை பேரனை தேடியது. அவனோ விசும்பிக்கொண்டே கார்த்திக்கின் கழுத்தை கட்டிக்கொண்டு படுத்திருந்தான்.
“முதல்ல எல்லாரும் போய் படுங்க. இதை இப்படியே விடுங்க…”  மணிகண்டன் சொல்லவும்,
“போய் தூங்குங்கம்மா…” என மகனும் சொல்ல மெதுவாய் எழுந்தவர் கண்மணி புறம் கூட திரும்பவில்லை. சென்றுவிட்டார்.தவமும், சந்திராவும் சென்றுவிட,
“நீ எதுவும் நினைச்சுக்காதம்மா கண்மணி…” என மணிகண்டன் சொல்ல,
“இருக்கட்டுங்க மாமா. போய் அத்தே என்ன பன்றாகன்னு பாருங்க…” என அவரை அனுப்பிவிட்டு தானும் தங்களறைக்குள் வர கார்த்திக்கும் அவளின் பின்னால் வந்து கதவை பூட்டினான்.
சிறிது நேரம் மகனை தோளில் போட்டவாறு இங்கும் அங்குமாய் நடந்தவன் அவன் உறங்கியதும் படுக்கவைத்துவிட்டு லைட்டை அணைத்தவன் கண்மணியை பார்க்க எதுவும் சொல்லுவானோ என அவள் எழுந்து நின்றாள்.
கார்த்திக் என்ன நினைக்கிறான் என்றே அவளால் கணிக்க முடியவில்லை. அந்தளவிற்கு அவனின் முகம் உணர்வற்று இருந்தது. கோபமாய் இருப்பானோ? என நினைத்தவள், கோபப்பட தான் ஓன்று செய்யவில்லையே என்கிற நினைப்பும் வர அதன் பின்னே தாயை அவன் தாங்கியதும் வந்து சேர்ந்தது.
என்னவென்றாலும் அவனாகவே சொல்லட்டும் என பார்த்து நின்றாள். அவளை இழுத்து இருளில் நிறுத்தி கொண்டையை அவிழ்த்துவிட்டவன் இரண்டு நிமிடங்கள் அப்படியே பார்த்து நிற்க கண்மணியின் பொறுமை பாராசூட்டில் பறந்தது.
“இப்ப என்னத்துக்கி இந்த பார்வைங்கறேன்?. ஒமக்கும் என்னிய பாத்தா பேயா தெரியுதோ?…” என சூடாக கேட்க,
“ஹ்ம்ம் பேயா தான் தெரியுற…” என்று அவனும் சொல்ல அதில் எரிச்சலில் ஏற்பட கண்மணி அவனை தாண்டிக்கொண்டு செல்ல இழுத்து அணைத்தவன்,
“நீ பேய் தான்டி. இந்த கிங்கினிமங்கினி பேய் என்னை எப்பவோ புடிச்சிருச்சு. இப்ப வரைக்கும் அதோட மாய வலையில இருந்து என்னை விடுவிக்காம மந்திரக்கட்டு போட்டுவச்சிருக்கு. பேய் பேய் தாண்டி நீ. ஆனா அம்மா சொல்ற மாதிரி உன்னை பார்த்தா பயம் வரலை எனக்கு. வேறென்னவோ…” என்று அவளை இறுக்கிக்கொண்டே தனக்குள் உருக்கினான்.
அவனின் அணைப்பிற்கு சற்றும் குறையாத அணைப்பை தந்த கண்மணி தன்  தவிப்பை அதில் உணர்த்தினாள். சில நொடிகள் மட்டுமே அணைப்பில் கட்டுண்டு இருந்தவள் பின் கார்த்திக்கின் உச்சி முடியை பிடித்து ஆட்ட வலித்தாலும் புன்னையையோடு என்னவென பார்க்க,
“இதுக்குத்தேன் கம்முன்னு நின்னீகளா? எம்புட்டு அஞ்சிட்டேன் தெரியுமா? போவும். நான் கோவமாயிட்டேன்…” என முறுக்கிக்கொள்ள,
“பேசாம் இருந்ததுக்காடி கிங்கினிமங்கினி இத்தனை வேகம்? வாவ். ஐ லவ் இட் கிங்கினிமங்கினி. டெய்லி பேசாம இருந்தா இந்த மாதிரி ஒரு ஹக் கிடைக்கும்ல…” என்று உல்லாசமாய் கேட்க,
“நெனப்புத்தேன்…” என அவனைவிட்டு விலகி மகனருகில் சென்று படுத்தாள் கண்மணி. மறுபுறம் அவனும் வந்து படுத்துக்கொள்ள இருவரும் கைகோர்த்து கொண்டனர்.
“ரொம்ப பயந்துட்டாங்களோ அத்தே? நா என்ன அப்பிடியா இருக்குதேன்?. பேய்ன்னா அவுகளுக்கு பயமோ?..” சந்தேகமாய் அவள் கேட்க அதற்கும் புன்னகை அரும்பியது அவனிதழ்களில்.
“எந்த ஒரு விஷயமும் நம்மை பாதிக்காத வரை அது இல்லைன்னு தான் சொல்லுவோம். ஒருவேளை இருக்குமோன்னு நினைச்சு பாதிப்புக்கு ஆளாகிட்டோம்னா அடுத்த நிகழ்வுகள் எல்லாமே அதனை கொண்டே முடிச்சுப்போட்டு பார்க்க தோணும். இதுவும் அப்படித்தான். விடு சரியாகிடும்…”
அவளை சமாதானம் செய்து இன்னொரு கையால் அவளின் தலையை வருட சுகமாய் உறங்கிபோனாள் கண்மணி. 

Advertisement