Advertisement

மணியோசை  – 22

              யாரும் இல்லாமல் அரவமற்றுகிடந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த அமைதி கலைய வேகமாய் எழுந்து சென்று மகனை தூக்கிகொண்டாள் கண்மணி.

“அம்மா இங்கனதேன் இருந்தேன்ய்யா. அழுவாத…” என மகனை தோளில் போட்டு சமாதானம் செய்தவள் அவனின் அழுகை குறையவும்,

“பசிக்கிதா அருளு?…” என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள். கார்த்திக்கை பார்க்க அமர்ந்த இடத்திலேயே சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்திருந்தான். இவர்களை பார்க்கவும் இல்லை.

குழந்தைக்கு பசி எடுத்து அழவும் தான் அனைவருக்கும் செய்த உணவு அனைத்தும் அப்படியே இருப்பதை பார்த்தாள். ஒருவரும் உண்ணாமல் கிளம்பியதை நினைத்து நெஞ்சம் வலித்தது.

வரமிளகாயில் செய்யும் கார துவையலுக்கு கடாயில் ஏற்கனவே தாளித்து வைத்திருக்க சாம்பார் முதலிலேயே செய்திருந்தது. இட்லிகள் வேறு நான்கைந்து ஈடுகள் ஊற்றப்பட்டு தனியாய் ஆறிப்போய் இருந்தது.

அனைத்தையும் பார்த்தவளுக்கு கண் கலங்க அவளுக்கே எரிச்சலானது.

“நா அழுதா மட்டும் போனவக வந்து சாப்புட்டு போவாகளாக்கும்? சும்மாநாச்சுக்கும் கண்ணில தண்ணி வைக்கிது. சரியேயில்ல” என்று தன்னையே வைதுகொண்டவள்,

“அருளு அப்பாருட்ட போயா…” என்றதும் ஒரு சின்ன ஸ்பூனை வாயில் கடித்தபடி தகப்பனை நோக்கி தவழ்ந்து சென்றான் மகன்.

கார்த்திக் என்ன செய்கிறான் என்று கூட எட்டி பார்க்கவில்லை கண்மணி. பரபரவென இட்லியை மீண்டும் அந்த பாத்திரத்தினுள் வைத்து சூடு செய்தவள் கார துவையலை எடுத்து மிக்ஸியில் ஓடவிட்டாள்.

கார்த்திக்கிற்கு பேச்சி செய்யும் இந்த துவையல் அத்தனை பிடித்தம் என்பதால் தான் வரும் நேரமெல்லாம் அவனுக்கு செய்துகுடுப்பார். சங்கரியோ, கண்மணியோ அதை செய்தால் பேச்சி செய்தது போலவே இல்லை என்று கண்மணியிடம் அத்தனை வாதாடுவான்.

அரைத்ததும் அதை தாளித்தவள் ஒவ்வொன்றாய் கொண்டுவந்து கார்த்திக்கின் அருகில் வைக்க மகனை மடியில் வைத்துகொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

அவனுக்கு ஒரு தட்டை வைத்து பரிமாறிவிட்டு மகனை அழைக்க அவனோ தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு அங்கிருந்தே ஆவென வாயை திறந்தான்.

ஒரு முறைப்போடு மகனுக்கு ஊட்ட கார்த்திக் அதை தொடவே இல்லை. அவன் எடுத்து உண்பான் என பார்த்தவள் இன்னும் உட்கார்ந்தே இருக்க,

“இப்ப என்னத்துக்கு சாப்பிடாம இருக்கீரு? இந்த கெரகத்துக்குத்தேன் வாய தெறக்கப்புடாதுன்னு இருந்தேன். கேட்டீரா?…” என்று ஆரம்பிக்க நிமிர்ந்து பார்த்தவன் வாயில் ஒற்றை விரலை வைத்து காண்பித்து மகனையும் காண்பித்தான்.

“இதுக்கொண்ணும் கொறச்சலில்ல…” என தோளில் இடித்துக்கொண்டவள் மகனுக்கு ஊட்டி முடித்து அவனின் வாயை கழுவி துடைத்துவிட்டு கீழே பெட்ஷீட்டை விரித்து நான்கு புறமும் தலையணையால் அணைபோட்டு விளையாட பொருட்களை கொடுத்து தூரமாய் அமர்த்தி வந்தாள்.

வந்தவள் அவன் அமர்ந்திருந்ததை போலவே அமர்ந்துக்கொள்ள கார்த்திக்கின் முகத்தில் மின்னல் கோடாய் லேசான புன்னகை.

“வாயை திற…” என்றவனின் சத்தத்தில் திரும்பி பார்க்க இட்லியை துவையலில் துவட்டி அவளுக்கு நீட்டிக்கொண்டிருந்தான். பார்த்தவளுக்கு மளுக்கென்று கண்ணீர் வர,

“ஏய்யா என்ன கொல்லுத. ஒங்க சனங்க கோவிச்சிக்கிட்டு உண்ணாம தின்னாம கெளம்பிட்டாக என்னால. நா போட்ட சண்டையால. நீ எனக்கு ஊட்டிவிடுத…”

“ப்ச், சாப்பிடுன்னு சொல்றேன்ல. வாயை திற கிங்கினிமங்கினி…” என்றதும் உடைந்தே போனாள்.

“என்ன மனுசே நீறு? இந்த கெரகம்பிடிச்சவள கெட்டாம இருந்திருந்தீயனா ஒமக்கு நிம்மதியாச்சும் மிஞ்சிருக்குமில்லையா?…”

“இப்ப சாப்பிட போறியா இல்ல அடி வாங்க போறியா?…” மிரட்டலாய் அவன் கேட்க,

“அடிச்சுக்கய்யா, நீ அடிச்சாலும் ஒம்ம கையில வாங்கிறது சொகந்தேன். ஆனா இததேன் தாங்க முடியல…” என்றவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.

“பைத்தியம் மாதிரி பேசாத கிங்கினிமங்கினி. நீ எனக்கு எத்தனை முக்கியம்னு உனக்கு நான் சொல்லனுமா? உன்னால யாரும் கஷ்டபட மாட்டாங்க. உன்னோட மனசு எனக்கு நல்லாவே தெரியும்டா…” என்றவனை நிமிர்ந்து பார்க்க,

“கிங்கினிமங்கினி இதை என்கிட்ட முதல்லையே ஏன் சொல்லலைன்னு தான் எனக்கு கோவம். சொல்லியிருந்தா நானே கண்டிச்சிருப்பேன். இந்தளவுக்கு வளர விட்டிருக்க மாட்டேன். ஆனா நீ சொல்லலை. அந்தளவுக்கு உனக்கு நான் நம்பிக்கை தாராமலே போய்ட்டேன்ன்னு எனக்குள்ள ஒரு கில்டி கான்ஷியஸ்…”

“வீட்ல கோவமா கிளம்பிட்டாங்கன்னு நீ பீல் பண்ணாதே. அம்மா கோவம் நமக்கு தெரிஞ்சது தான். அப்பா பார்த்துப்பாங்க. ஆனா உங்க வீட்ல தான் எப்படி சமாதானம் செய்யன்னு ரொம்ப கவலையா இருக்குடி…” என்றவன் முகமே சோகம் அப்பிக்கிடந்தது.

“அதெல்லாம் அவுக கோச்சுக்க மாட்டாக. ஒமக்கு வருத்தன்னுதேன் அவுகளுக்கு வெசனம்…” தைரியம் சொல்லி அவள் சிரிக்கவும் தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது.

“ப்ச், அதை விடு சாப்பிடுவோம் வா…” என்றவன் அவளுக்கும் ஊட்டி தானும் சாப்பிட்டு முடித்தான். அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு வர அருள் கீழே விரித்திருந்த பெட்ஷீட்டிலேயே அவனாகவே உறங்கியிருந்தான்.

 “நாமளும் ஹால்லையே தூங்குவோம். நீ போய் பாய் எடுத்துட்டு வா…” என்றதும் உள்ளே சென்று எடுத்துவந்தவள் இருவருக்குமாய் விரித்துவைத்து படுக்க தயாராக கண்மணியின் மொபைலுடன் வந்தான் கார்த்திக்.

“உன் அண்ணன் தான் கால் பண்ணியிருக்கான். என்னன்னு கூப்பிடு…” என சொல்லிவிட்டு கதவுகளை பூட்டியுள்ளதா என சரிபார்த்துவிட்டு கிட்சனில் கேஸை ஆஃப் செய்துவிட்டு லைட்டை ஆஃப் செய்து இரவு விளக்கை போட்டுவிட்டு வந்து படுக்க இன்னும் கையில் வைத்தபடி இருந்தாள் கண்மணி.

“பேசு கிங்கினிமங்கினி. வச்சு வெறிக்க வெறிக்க பார்த்துட்டே இருக்க?…” என கேட்டவன் மொபைலை வாங்கி தானே அழைத்துவிட்டான். கிருஷ்ணன் லைனில் வந்ததும்,

“சொல்லுங்க கிருஷ்ணன், சாப்பிட்டீங்களா எல்லாரும்?…” என கேட்க கணவனை பெருமையாக பார்த்தாள் கண்மணி.

கார்த்திக் எடுப்பான் என்று கிருஷ்ணன் எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் தங்கள் மீது வருத்தத்திலாவது இருக்க கூடும் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் அவனாகவே பேசவும் தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்டதை போல பேச்சற்று இருந்தான்.

“ஹலோ, கிருஷ்ணன் லைன்ல இருக்கீங்க தானே?…”

“வந்துங்க மாப்புள்ள, இருக்கேன். நாங்க ஊருக்கு வந்துட்டோம். வீட்டுக்கே வந்தாச்சுங்க. அதேன் மணிக்கிட்ட சொல்லிடலாமின்னு…” என்றதும் தான் நேரத்தையே பார்த்தான் கார்த்திக்.  நடுசாமம் கடந்திருந்தது.

“சரிங்க மாப்புள்ள, நா காலேயில பேசுதேன். மணிக்கிட்ட சொல்லிடுங்க….” என்று வைத்துவிட,

“என்னன்னுய்யா பகுமானோ காட்டாம பேசுநீறு? இதுக்கே ஒங்கம்மாவுக்கு காலமுச்சுடும் கால பிடிப்பே…”

“ப்ச், இதை விடவே மாட்டியா நீ? யாரா இருந்தாலும் அன்புக்கு கட்டுபடலாம். அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு தன்மானத்தை இழக்க கூடாது. இன்னொருக்க இந்த மாதிரி பேசின பார்த்துக்கோ…” உண்மையில் கோபமாக அவன் சொல்ல கண்மணிக்கு சிரிப்பாக இருந்தது.

“கோவத்துல கூட ஒ அக்கற சும்மா கருவாடாட்டம் மணக்குதுய்யா…” அவனின் கன்னம் கிள்ளி வாசம் பிடிக்க,

“சாப்பாட்டை விடமாட்டியே. சரி நாளைக்கு பச்சைமாங்காய், பால்நெத்திலி போட்டு கருவாட்டு ரசம் வைய்யேன். ஆசையை கிளப்பி விட்டுட்ட…” அவர்களின் பேச்சு இலகு நிலைக்கு திரும்பி இருந்தது.

இருவருமாய் நடந்ததை மறந்து வேறுவேறு கதைகள் பேசிக்கொண்டிருக்க ஏனோ நேரம் விடியலை ஓடிக்கொண்டே இருந்தது. விடியும் வேளை உறங்க ஆரம்பித்தனர். இருவருக்குமே மனதில் உள்ள சஞ்சலங்கள் மிதமாய் குறைந்திருந்தது.

வெளியில் பால்காரன் பெல் அடிக்கும் சத்தத்தில் கண் திறக்கமுடியாமல் கார்த்திக் திரும்பி படுக்க கண்மணிக்கு சொல்லிவைத்தார் போன்று விழிப்பு வந்துவிட்டது.

பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கதவை திறந்து வெளியில் வந்தவள் பால்காரனை பிடிபிடியென பிடித்தாள்.

“எண்ணே நாந்தேன் ஒத்த சத்தத்துல வந்துருவேனுள்ள. ஒம்ம யாரு சும்மா நா வாரவரைக்கி மணியாட்ட சொன்னது. அவுக ஒறங்குதாகல. இன்னொருக்க இதே கேட்டேன் ஒம்ம பாலும் வேணா ஒன்னும் வேணான்னு கணக்க முடிச்சிப்புடுவேன்…” என மிரட்டலாய் சொல்ல பால்க்காரன் கப்சிப்.

பால் கணக்கை முடித்துவிடுவேன் என்று சொன்னது அவனுக்கு தன் கணக்கையே முடித்துவிடுவதை போல தெரிய தலையை ஆட்டிக்கொண்டு வேகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

மறுநாள் காலை மணிகண்டன் அழைத்து வந்துவிட்ட விபரத்தை சொல்லி இன்னும் பதினைந்து நாட்களில் தாங்கள் கிளம்புவதாக கார்த்திக்கிடமும் கண்மநியிடமும் சொன்னார்.

அவர் மட்டுமல்லாது தவம், சந்திரா என அவர்களும் பேச மகாதேவிக்கு தான் பிடிக்கவே இல்லை. கண்மணி தான் பேசவில்லை என்றாலும் கார்த்திக்கை பேச தான் சொன்னாள். அவனும் பேச முயல சந்திராவிடம் மகாதேவி கார்த்திக் லைனில் இருக்கும் போதே முகத்திலடித்ததை பதில் கூற இங்கே கண்மணியிடமும், மணிகண்டனிடமும் ஆடித்தீர்த்துவிட்டான்.

“போதுமா? இதுக்குதான் மாட்டேன்னு சொன்னேன். அவங்க என்னைக்கும் மாறவே மாட்டாங்க. இனி நீ என்னை பேச சொன்ன? பார்த்துக்கோ…” என்று கத்திவிட்டு செல்ல கண்மணிக்கு பொடுபொடுவென்று வந்தது.

“கூறுன்றது மவனுக்கும் இல்ல, அவர பெத்ததுக்கும் இல்ல…” என்று சலித்துக்கொண்டாள்.

அடுத்த ஒரு வாரத்தில் கார்த்திக்கின் பெரியப்பாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது கார்த்திக்கிற்கு. அவரின் சின்ன மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடிப்பதாக இருப்பதால் அண்ணனாய் கண்டிப்பாய் வரவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

பெரிதாய் அனைவரையும் அழைத்து செய்யவில்லை. குடும்பத்தினருக்கு மட்டுமென்பதால் கார்த்திக்கால் இதை தவிர்க்க முடியவில்லை. அதையும் மீறி கண்மணியின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் கிளம்பிவிட்டான்.

கிளம்பும் முன்னே ஆயிரம் சண்டைகள், வாக்குவாதங்கள்  இருவரிடமும். தன் வீட்டிற்கு போகாமல் நேராக பெரியப்பா வீட்டிற்கு செல்லவேண்டும். விசேஷம் முடிந்ததும் அங்கிருந்தே கிளம்பி வந்துவிட வேண்டும் என்று கார்த்திக் சொல்ல கண்மணியின் பேச்சின் முன்னே கார்த்திக்கின் பேச்சு எடுபடுமா என்ன?

முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு காரை எடுத்தான் கார்த்திக். மணிகண்டனிடம் வீட்டிற்கு வரமாட்டோம் என்று ஜம்பமாக சொல்லிவேறு விட்டான்.

அவனுக்கு தெரியாதது மணிகண்டன் கண்மணியிடம் பேசியதும் கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்துவந்துவிடவேண்டும் என்றும். அவர் சொல்லவில்லை என்றாலும் அவள் சென்றிருப்பாள் தான். ஆனால் சொன்ன பிறகு பின் வாங்குவாளா என்ன?

முதல் நாளே வேறு கிளம்ப செய்துவிட்டாள்.

“இந்த கவர்மென்டையே நீ நடத்தற மாதிரி நினைச்சா லீவ் போடுன்ற. நினைச்சா வீட்டுக்கு வான்ற. உன்னை என்னதான்டி செய்ய?…” என தலையை வேறு பிடித்துக்கொண்டான்.

அதை எதையும் கண்டுகொள்ளாமல் முதல் நாள் காலையே கிளம்பி பேக்கிங் அனைத்தையும் முடித்து அனைத்தையும் காரில் வைத்துவிட்டு அவளும் குழந்தையும் காரில் அமர்ந்துகொண்டனர்.

தலையில் அடித்துக்கொண்டவன் அதன் பின்னர் கிளம்பி கதவை பூட்டிவிட்டு வந்தான்.

“ரொம்ப பன்றடி…” என்றபடி காரை கிளப்பியவன்,

“ரோஷம்னு ஒன்னு இல்லவே இல்லையா கிங்கினிமங்கினி?…” என வேறு கேட்க,

“இருந்தா ஒம்ம கெட்டிருப்பேனா?…”

“நான் என்னடி பண்ணேன்?…” அதிர்வாய் திரும்பி பார்க்க,

“நீரும்தேன் சண்டைக்கார ஆளு. நீறு இழுக்காத ஓரண்டையா?பாக்கறப்ப எல்லா என்னைய கோவபடுத்துவீறு…”

“இதுவும் அதுவும் ஒன்னாடி? ரொம்ப நியாயமா பேசாதடி கிங்கினிமங்கினி…”  என்றவன் வாயே திறக்கவில்லை.

“எதுக்கும் எதுக்கும் சம்பந்தம் பன்றா பாரேன். இன்னும் வீட்டுக்கு போய் என்னலாம் நடக்குமோ?” என மனதினுள் நினைத்தான்.

மதிய உணவை வெளியிலேயே முடித்தவன் மெதுவாகவே காரை ஓட்டினான். என்ன தான் மெதுவாய் சென்றாலும் வீடு வந்தேவிட்டது.

வாசலில் வந்து நின்றனர் கார்த்திக்கின் குடும்பத்தினர். மணிகண்டனுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது அவருக்கு. தவமும், சந்திராவும் கார்த்திக்கை கை பிடித்து அழைத்தவர்கள் கண்மணியும் சந்தோஷமாய் அழைத்து சென்றனர்.

மெதுவாய் வெளியில் வந்த மகாதேவி மகனை பார்த்ததும் பழையவற்றை மறந்து வேகமாய் வந்து அவனருகே நின்றார்.

“கார்த்திக் வாடா….” என்று மனதார அழைத்தவர் அவனின் பின்னால் வந்த கண்மணியை பார்த்ததும் முகம் மாறினார்.

சந்திரா குழந்தையோடு உள்ளே வர இருவரும் மகாதேவியை தாண்டி செல்ல கண்மணியின் முன்னால் கோபம் தலைக்கேற வந்து நின்றவர்,

“இது என் வீடு. இங்க உனக்கு இடமில்லை.  என் பேரனும், மகனும் மட்டும் தான். நீ வரக்கூடாது. வெளில போடி…” என சொல்ல மணிகண்டன் வேகமாய் வந்து கையை ஒங்க,

“இதுக்குதான் சொன்னேன் வரவேண்டாம்னு. கேட்டியாடி நீ? இந்த அவமானத்தை வாங்கத்தான் கிளம்பி வரனும்னு ஒத்தை கால்ல நின்னையோ?…” கார்த்திக் அவளின் கை பிடித்து வெளியில் அழைத்து செல்ல,

“அட நில்லுக. நாம எதுக்கி போவனும்? என்னமோ ஒங்கம்மா சீதனமா கொண்டுவந்ததுல நா மஞ்சகுளிக்க வந்ததாட்டம் பேசுதாக. ஒடனே கெளம்பனுமோ?…” கண்மணி வெகு நிதானமாக பேச,

“அம்மா என்னதான் பிரச்சனை உங்களுக்கு. சும்மாவே இருக்க மாட்டீங்களா?…” சந்திரா சத்தம் போட,

“இவ மட்டும் அன்னைக்கு இவ வீட்ல இருக்கேன்னு தான எகத்தாளமா பேசினா. அதுக்கு பதிலுக்கு குடுக்க வேண்டாமா? நான் எத்தனை அவமானப்பட்டிருப்பேன்?…”

மகாதேவி ஆவேசமாய் பேச அவரை கண்டுகொள்ளாமல் தன் மகனை சந்திராவிடமிருந்து வாங்கி தோளில் போட்டவள் கார்த்திக்கின் கையை பிடித்துக்கொண்டு விடுவிடுவென  வீட்டினுள் சென்றாள்.

மகாதேவியை தாண்டிக்கொண்டு செல்லும் போது வேண்டுமென்றே அவரை இடித்துவிட்டு வேறு செல்ல அவளின் பின்னாலேயே வந்தார் மகாதேவி.

வேண்டுமென்று தான் இடித்தாள் கண்மணி. கார்த்திக்கை எத்தனை எத்தனை சிரமப்பட்டு இங்கே அழைத்து வந்திருக்கிறாள். இவர் என்னடாவென்றால் மொத்தமாய் பானையை உடைத்த கதையாக உறவை உடைத்துவிடுவார் போலவே என்று அத்தனை கோபம் கொண்டாள்.

“ஏய் எத்தனை துணிச்சல்டி உனக்கு? சொல்லிட்டே இருக்கேன். உள்ள போற. என் பிள்ளை கையை விடுடி…”

“இப்ப என்ன? ஊர கூட்டியாந்து பஞ்சாயம் பண்ணனுமா? சொல்லுங்க…” என்றவள்,

“ஹ்ம்ம் என்னவோ சொன்னீகள? ஒம்ம வீடு. இது என்ன ஒங்க வீடா?…”

“இது என் வீடில்லாம வேற யார் வீடுடி? எவளாச்சும் உரிமை கொண்டாடிருவாளுங்களா?…”  என்று மிதப்பாய் பார்க்க,

“ஆனா நா கொண்டாடுவேனுள. இது எனக்கும் உரிமப்பட்ட, ஒடமப்பட்ட வீடுதேன். நீக மருமவளா வந்த மாதிரித்தேன் நானும் மருமவளா வந்திருக்கேன். இன்னைக்கி நீக எனக்கு மாமியாரு. நாளைக்கி நா எம்பிள்ளைய கெட்டிட்டு வரவளுக்கு மாமியாவா ஆயிடுவேன்…”

“பார்த்தீங்களா இவ பேச்சை. நம்ம சொத்துமேல தான இவளுக்கு கண்ணா இருக்கு. இப்பவாச்சும் இவ புத்தி தெரியுதா உங்களுக்கு?…”

“சந்திரா நான் வெளில கிளம்பறேன். என்னால இதையெல்லாம் பார்க்க முடியாது…” என தவம் கிளம்ப பார்க்க,

“அண்ணே எனக்கொரு பிரச்சனன்னா கூடவே இருப்பேன்னுட்டு கெளம்பினா எப்புடி?…” என கண்மணி கேட்டதும் அவளின் பார்வை எதையோ உணர்த்த சட்டமாய் அமர்ந்துவிட்டான் தவம்.

“அப்பா நாங்க கிளம்பறோம். இதுக்குதான் வா வான்னு சொன்னீங்களா? என் பொண்டாட்டிக்கு இல்லாத உரிமை எனக்கும் வேண்டாம். இந்த வீட்டை நீங்களே வச்சுக்கோங்க. எங்களை நிம்மதியா விட்டா போதும்…” என்று சொல்ல,

“எதுக்கு போவனுனு சொல்லுதீக. இது நம்ம சம்பந்தபட்டதில்ல. எம்புள்ள சம்பந்தப்பட்டது. பேசாம ஒக்காருங்க…” என்று அவனை அதட்ட,

“தலையெழுத்து, எதுல ஒத்துமை இருக்கோ இல்லையோ. புருஷன் பேச்சை கேட்க கூடாதுன்றதுல மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏக ஒற்றுமை இருக்குப்பா…” என்று எரிச்சலாய் சொல்ல,

“இவளை என்னோட கூட்டு சேர்க்கிறையா கார்த்திக்? இவ எங்கே?, நான் எங்கே?…”

“கண்டிப்பா சேர்த்திருக்க கூடாதும்மா. கண்மணி எல்லாரையும் விட உசத்தி தான்…” கார்த்திக்கும் கடுப்பாய் சொல்ல,

“உன்னை அந்தளவுக்கு மயக்கி வச்சிருக்கா கார்த்திக் இவ…”

“அம்மா பேசனும்னு வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. இது எனக்கு பிடிக்கலை. ஆனாலும் பதில் சொல்லனும் பாருங்க. மனைவிட்ட கணவன் மயங்கறது தப்புன்னு யாருமே சொல்லமாட்டாங்க. மயங்காம இருந்தா தான் தப்பு…” என்றவன் மகனை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.

“எல்லாமே உன்னாலதான்டி. என்னைக்கு இங்க கால் வச்சியோ அன்னைக்கே இந்த குடும்பத்தோட நிம்மதி போச்சு. நீ இங்க இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை…” என்று மகாதேவி பேயாய் பார்க்க,

“எனக்கு கூடதேன் ஒம்ம பேச்சு புடிக்கல. அதுக்கென்ன பன்றதாம்?…” கண்மணி மீண்டும் பேசி கார்த்திக்கிடம் செல்ல பார்க்க,

“வெளில போன்னு சொல்லிட்டே இருக்கேன். உள்ள போற…” அதில் இன்னும் கோவமான கண்மணி,

“ப்ச், இப்ப நா எதுக்காவ வெளிய போவனும்? அப்ப நீகளும் வெளில போவனும்…”

“என் வீட்ல இருந்துட்டு என்னையே போன்னு சொல்லுவியா நீ?…”

“இது பரம்பர சொத்து. நீக  சம்பாதனை பாத்து கெட்டுனதா? பாட்டன்பூட்டன் சொத்து பேத்தி, பேரனுக்குத்தேன் சேரும்…”

“சட்டம் பேசறியாடி நீ?…”

“பேசுதேனே,சும்மா போ போன்னு சொன்னீக சொத்த பிரிக்க சொல்லி ஒங்க புள்ளைய கேஸு போட சொல்லிப்புடுவேன் பாத்துக்கக…” என்றவள் மணிகண்டனை பார்த்து லேசாய் கண்சிமிட்ட அவருக்கு சிரிப்புதான்.

“கண்மணி நீ சொல்றது நல்லது தான்ம்மா. நான் உனக்கு இதுல புல் சப்போர்ட் பன்றேன்…” தவமும் ஒத்துபாட ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றார் மகாதேவி.

“இந்த பட்டிக்காட்டுக்கு இத்தனை விவரம் தெரியுதா? எல்லாம் நான் பெத்ததும், கட்டினதும் பன்ற வேலை”  என உள்ளுக்குள் பொருமியவர்,

“இந்த பூச்சாண்டி காட்டறது எல்லாம் உன் வீட்ல வச்சுக்கோ. நீ சொன்னா பயந்துடுவோமாக்கும்? என் புள்ளைக்காக போனா போகுதுன்னு விடறேன்….”

“போனா போகுதுன்னு தங்க இது பொறம்போக்கு எடமா அத்தே. எம்புருசன் வீடு. உரிமயா ஒனக்கையா நா இருப்பேன். ஒங்க தயவ வேற ஆருக்காச்சும் கொடுங்க…” என்றவள் விடுவிடுவென உள்ளே சென்றுவிட நிற்கமாட்டாமல் அப்படியே அமர்ந்துவிட்டார் மகாதேவி.

“சொத்தை பிரிச்சா கூட மருமக வீட்ல அவ கையாள காஞ்சி வாங்கி குடிச்சுட்டு நிம்மதியா காலத்த ஓட்டிடுவேன் நான்…” மணிகண்டன் சொல்லிவிட்டு வெளியே செல்ல சந்திராவை பார்த்தார் மகாதேவி.

அதை கவனித்த தவம், “வா நாம போய் அருளை பார்ப்போம்…” என மனைவியை அழைத்துக்கொண்டு கார்த்திக்கை தேடி சென்றுவிட்டான்.

தனியாக அமர்ந்திருந்தார் மகாதேவி.

Advertisement