Advertisement

மணியோசை  – 21

       “கண்மணி என்ன சொல்ற?…” சந்திரா பதறிக்கொண்டு வர கார்த்திக்கின் பார்வை மகாதேவியிடம் சென்றது.

அவரோ நடப்பதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல அமர்ந்திருந்தார். முகத்தில் அத்தனை திண்ணக்கம்.

“யார் என்னை என்ன செய்துவிட முடியும்? உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்” என முகத்தில் காண்பித்தார். அதை கண்மணியும் கவனிக்கத்தான் செய்தாள்.

“அம்மா, நீக கெளம்புங்க…” என கிருஷ்ணனை பார்க்க அவன் வாசலுக்கு நடந்தான்.

“நில்லுங்க கிருஷ்ணா, என்ன நடந்ததுன்னு எனக்கு முழுசா தெரியனும். தெரிஞ்சு தான் ஆகனும். அதுவரை இங்கிருந்து யாரும் போக முடியாது…” கார்த்திக்கின் குரலில் அத்தனை கோபம்.

இதுவரை கண்மணி வீட்டினர் அவனின் உட்சபட்ச கோபத்தை கண்டதே இல்லை. லேசாக கண்மணியிடம் முகம் காண்பித்ததற்கே பதறிப்போன குடும்பம் இன்று தங்களால் பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்னும் அச்சத்துடன் பார்த்தனர்.

“இங்கன பாருங்க தம்பி, நீக பயப்படறத மாதிரி ஏதும் நடக்கல.  நாங்க மொதல்லையே சொல்லிருந்தோம் கெளம்பனும்னு. திடுதிப்புன்னு அறுப்பு வச்சிட்டாரு அந்த மனுசே. அதேன். நீக மணிய கோவிக்காதீக…” பதட்டத்துடன் பேச்சி சொல்ல,

“அத்தை நீங்க சொல்ல வேண்டாம். இவ சொல்லட்டும். எதுவா இருந்தாலும் எனக்கு இவதான் சொல்லனும். இப்ப கொஞ்சம் முன்னாடி சொன்னால அது மாதிரி…” என்றவன்,

“சொல்லுடி, புருஷன் இல்லாதவ தான் யார்க்கிட்டயும் சொல்லாம தனக்குள்ளையே மறைச்சிப்பா. நான் உயிரோட தானே இருக்கேன். இல்லை இவன்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுதுன்னு என்னை கையாலாகாதவன்னு நினைக்கறியா?  நானே இல்லைன்னு நினைக்கிறியா?…” கோபத்தில் வார்த்தையை விட,

“என்னடா அறிவில்லாம பேசிட்டு இருக்க? பொறுமையா பேசாம என்ன பேச்சு இதெல்லாம்…” வார்த்தைகள் வரைமுறையின்றி வெளிப்பட்டுவிடுமோ என்று தவம் கார்த்திக்கை கண்டிக்க,

“அறிவா அப்படி ஒன்னு என்கிட்டே இருக்குன்னு நினைச்சிருந்தா சொல்லியிருப்பா தானே மாமா. இல்லைன்னு தானே மேடம் எதையும் சொல்லாம மறைக்கிறாங்க…” அவன் பேச பேச கண்மணியின் கண்ணீர் அதிகமானது.

ஏன் எதற்கு இப்படி பேசுகிறாய் என்று கூட அவனை திட்டவில்லை. வாயை திறப்பேனா என்கிற பிடிவாதத்தில் அவள் நிற்க,

“சொல்லுன்னு கேட்கறேன்ல?…” அவளை பிடித்து உலுக்கினான் கார்த்திக்.

“இப்ப என்னென்றீக? எதுவா இருந்துட்டு போவட்டும். அம்மாவும் அண்ணனும் கெளம்பட்டும். பொறவு பேசுவோம்…”

“அவங்க போகமாட்டாங்க. என் வார்த்தையை மீறி அவங்க இந்த வீட்டு படி தாண்டினா இந்த ஜென்மத்துல நான் உங்கவீட்டு படியேற மாட்டேன்…” அவன் சொன்னது வலித்தாலும்,

“பரவாயில்ல. அவக போவட்டும்…” என அப்போதும் அவள் சொல்ல கண்மணியை அடிக்கவே கை ஓங்கிவிட்டான் கார்த்திக். அதை கண்டும் அசையாமல் நின்றாள் கண்மணி.

அனைவரின் முன்னால் கணவன் தன்னை கை ஓங்கியதை அவள் பெரிதாக நினைக்கவே இல்லை. அவன் தன் கணவன். அவனுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. அடித்திருந்தால் கூட  கோவமென்று இருக்காது. ஆனால் தன் குடும்பத்தினர் இதற்கு மேலும் இங்கிருந்து இந்த அவமானங்களை சகிக்க கூடாது என்பது தான் அவளின் எண்ணம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.

“என்ன எத்தன வேணுனாலு அடிச்சுக்கோக. ஆனா எங்கம்மா கெளம்பட்டும்…”

மகள் சொல்வதை கேட்பதா மருமகனின் கோபத்திற்கு ஆளாவதா? என பயந்து பார்த்தனர் கண்மணி குடும்பத்தினர்.

“இந்தா மணி, சும்மா என்னத்துக்கு மாப்பிள்ளக்கிட்ட முறைச்சுட்டு நிக்கிறவ? மட்டுமருவாதி வேணா? கம்முன்னு இருத்தா…” என்ற கிருஷ்ணன்,

“இங்காருங்க மாப்பிள்ள, அது ஏதோ கூறுகெட்ட மாதிரி பேசுது. ஒன்னுமில்லாத வெசயத்துக்கு என்னத்துக்கு இம்புட்டு சடவு? நாங்க கெளம்புதோம். இப்ப போனாத்தேன் அறுப்புக்கு விடியக்கருக்குல ஊர் போய் சேர முடியும்ங்க…”

கிருஷ்ணன் பதமாய் சொல்ல அவனை பார்த்த கார்த்திக் நாட்டரசனுக்கு அழைத்துவிட்டான். அவர் எடுத்ததும்,

“எப்படி இருக்கீங்க மாமா?…” என ஆரம்பிக்க மற்ற அனைவருக்கும் புரிந்து போனது. கண்மணி இறைஞ்சும் பார்வை பார்த்தவள் கண்ணீரை அடக்க உதட்டை அழுத்தமாய் கடித்துக்கொண்டாள்.

“நா நல்லாருக்கேனுங்க மாப்பிள்ள. அங்கன அல்லாரும் சவுக்கியம்ங்களா? சம்பந்தி அம்மாவுக்கு காச்சல் போய்டுச்சுன்னு சொன்னா பேச்சி…”

“ஆமா மாமா. கிருஷ்ணன் கூட வந்திருக்காரு அத்தையை, பெரியத்தையை கூட்டிட்டு போக…”

“ஆமாங்க, நா கூட சொன்னே இன்னு நாளுநா இருந்துட்டு வான்னு. மதினியும் ஊருக்கு வந்து நாளாச்சுன்னு வராக போல…” ஸ்பீக்கர் போட்டு இதை அனைவரும் கேட்டிருக்க கார்த்திக்கின் பார்வை கண்மணி குடும்பத்தினரை எரித்தது.

“வந்து மாமா இங்க ஒரு…” என்று பேசும்போதே அவனிடமிருந்து போனை பறித்த கண்மணி,

“அப்பா நல்லாருக்கீகளா?…” என கேட்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை வைத்துவிட,

“சோ குடும்பத்தோட பொய் சொல்லியிருக்கீங்க. இப்ப இல்லைன்னா என்னால திரும்ப பேச முடியாதா என்ன?…”

“அவரே வயசான மனுசே. அவருட்ட போயி சண்டன்னு சொன்னா ஒடஞ்சிட மாட்டாரா? வைராக்கியம் புடிச்ச மனுசே அவரு. சுத்த கூறுகெட்ட மனுசனா நீரு?…” என்று பொங்கிவிட அத்தனை களேபரத்திலும் அவளின் பேச்சு கார்த்திக்கிற்கு புன்னகையை வரவழைக்க பார்த்தது.

அதிலும்  இதை தன் வீட்டினர் கேட்டு வாயடைத்து நிற்பதை பார்த்து அவனுக்கு சிரிப்பு வர பார்க்க கண்மணி தலையில் அடித்துக்கொண்டாள்.

“இந்தா மணி இழுத்துவச்சு நாக்க வெட்டிபுடுவேன். மொத அவருட்ட மன்னிப்ப கேளு…” என பேச்சி எகிற,

“அத்தை இப்ப இதுவா பிரச்சனை?…” என்றவன் கண்மணியை பார்த்து,

“என் வீட்டுல நடக்கற பிரச்சனையை இந்த இடத்தில இல்லாத ஒருத்தர்ட்ட கூப்பிட்டு என்னனு கேட்கவச்சு என்னை அசிங்கப்படுத்திடாத கண்மணி. இந்த வீட்ல என்ன நடந்திருந்தாலும் அது எனக்கு தான் முதல்ல தெரிஞ்சிருக்கனும். எனக்கு தெரியாம வேறொருத்தவங்க மூலமா அது என் காதுக்கு வரதை நான் விரும்பலை. அப்படி ஒரு இடத்தில நீ என்னை வச்சிடாத…”

“சொல்லும்மா கண்மணி, என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா தானே நாங்க விசாரிக்க முடியும். இதுவரை ஒரு தகப்பனை போலத்தான் நான் உன்கிட்ட நடந்திருக்கேன். இப்பவும் அதே மரியாதை இருக்குன்னு நினைச்சா சொல்லும்மா….” என்றவரை தயக்கமாய் கண்மணி பார்க்க,

“மகன் வீடுன்னு உரிமையா இருந்தது தப்போ? எதுவுமே தெரியாம இந்த வீட்ல இருக்கறதுக்கு நான் இங்க இருந்து போய்டறது மேல். சந்திரா அப்பா பேக்கை எடுத்துட்டு வாம்மா…”  என சொல்லியவர் வாசல் புறம் திரும்ப,

“ஐயோ மாமா நில்லுங்க…” என பதறி அவரை தடுத்தவள் அவரின் கை பற்றிக்கொள்ள அதை கடுகடுவென்ற முகத்துடன் பார்த்தார் மகாதேவி.

“இனியும் சொல்லுன்னு நான் கட்டாயப்படுத்த மாட்டேன்ம்மா. உனக்கும் சங்கடம் வேண்டாம் பாரு. உன்னை என் பொண்ணா நினச்சேன். உன்னோட கண்ணீரை பார்க்கத்தான் முடியலை. எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா பேசற கண்மணியை தான் நாங்க விரும்புவோம். மனசுக்குள்ள வச்சிக்கிட்டு எதுக்குமா துன்பப்படற?…” அவர் சொல்லவும்,

“மன்னிச்சிகிடுங்க மாமா. அவரும், நீகளும் கோவப்படுவீகன்னுதேன் சொல்லல. சொலு சொல்லுன்னா என்னனு சொல்ல? எத்தனய சொல்ல?…” என்றவள் கோபமாய் மகாதேவியை பார்க்க அவர் அலட்சியமாய் இவளை பார்த்துவிட்டு,

“சந்திரா நான் போய் படுக்கறேண்டி. ரொம்ப டயர்டா இருக்கு. போறவங்கள நிறுத்தாம கிளம்ப சொல்லு. சும்மா பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு. நல்லா நாடகம் போடறாளுங்க…” என்று எழுந்துகொள்ள கண்மணியின் பொறுமை சிதறியது.

“என்ன நாடகமா? நானு பேசவேணான்னு எங்க வீட்டுல எல்லா வம்ம வளமையும் செஞ்சுதானே என்னைய கட்டிகுடுத்தாக. இல்ல ஒட்டிக்கிட்டு வந்தேனா?…”

மகாதேவியின் சீண்டலான பேச்சில் கார்த்திக்கும் மணிகண்டனும் கோபத்துடன் அவரை பார்க்க கண்மணி ஆரம்பித்துவிட்டாள்.

“ஏத்தா மணி…” பேச்சி அதட்ட,

“செத்த சும்மா கெடங்க. எனக்கு பொறுமன்னு ஒன்னு கெடையவே கெடையாது. நானும் இந்த மனுசெனுக்காகவும், மாமனாருக்காகவும் பாத்தா ரொம்பத்தான் பேச்சு நீளுது…” என்று தாயையும் பெரியம்மாவையும் அடக்கியவள் பேச வந்து கிருஷ்ணனை ஒன்றை விரல் நீட்டி எங்கே நில் என்பதை போல பார்த்துவிட்டு மாமியாரிடம் திரும்பியவள்,

“ஊரறிய மதிப்பா தாலிவாங்கிட்டுத்தானே வந்தேன். ஒட்டிக்கிட்டு வந்தேன்னு சொல்லுதீக. என்னவேனா பேசுவீகளா? இந்த கண்மணிக்கிட்ட அது நடக்காது. பொண்ண கட்டிகுடுத்தா என்ன மொத்த குடும்பத்தையும் எழுதியா குடுத்திருக்கு ஒமக்கு?…”

“மரியாதையா பேசுடி….” என்ற மகாதேவி வேகமாய் மகனிடம் திரும்பி,

“பார்த்தியாடா நீ இருக்கும் போதே இத்தனை பேர் முன்னாடி கொஞ்சம் கூட பயமே இல்லாம மரியாதை இல்லாம பேசறா. இப்ப தெரியுதா இவளோட சுயரூபம்?. இதுக்குத்தான் இந்த படிக்காத பட்டிக்காட்டான் வேண்டாம்னு சொன்னேன்…” என்று கார்த்திக்கிடம் புகார் கூற,

“கண்மணி பார்த்து பேசு. கோபத்துல என்ன பேசறோம் யாரை பேசறோம்னு தெரியாம பேசக்கூடாது…” சந்திரா சொல்லவும்,

“யார பேசறோம்னு தெரியாத சின்னப்புள்ளயா நானு மதினி? ஒங்கம்மாவ பேசினதுக்கே இம்புட்டு கோவம் வருதே? ஏ பெரிம்மாவுக்கு ஒங்கம்மாவ கால புடிச்சுவிட சொன்னா ஒங்களுக்கு எப்புடி இருக்கும்?…”

“கண்மணி…” என சந்திரா குரலை உயர்த்த,

“பெரிம்மாவ கால அமுக்கி விட சொல்றாங்களே ஒங்க அம்மா. எனக்கு எம்புட்டு கோவம் வரும்?. மருமகன்னா கோவப்பட கூடாதா? மாமியா என்ன செஞ்சாலும் பாத்துட்டு நாதியத்தவளா நிக்கனுமா? என்னால ஆகாது மதினி…”

அவள் சொல்லும் பொழுதே சங்கரி அழுதுகொண்டே அறைக்குள் சென்றுவிட பேச்சியும் அவர் பின்னோடு சென்றுவிட்டார். குழந்தையை தூக்கிக்கொண்டு கிருஷ்ணன் வெளியேறிவிட யாரையும் நிறுத்தமுடியாமல் கார்த்திக் செய்வதறியாது நின்றான்.

“பாத்துக்கங்க எங்க மனுசக மனச. இப்பகூட அவுக முன்னால ஒங்களுக்கு தலைகுனிவா போகப்புடாதுன்னுதேன் நின்ன எடத்த விட்டு போயிட்டாக. அவுகள பேச நாக்கு கூச வேணா…”

“நானு ரொம்பவே பொறுத்து போயாச்சு. இந்தா இந்த மனுஷனுக்காக. இவருக்காகத்தேன் கம்முன்னு கெடந்தேன். இப்புடி ஒரு புள்ளைய பெத்துட்டாகளேன்னு…”

கண்மணி சொல்லிய விதத்தில் இந்த கலவரத்தில் கார்த்திக்கிற்கு ஒரு சந்தேகம் வேறு எழுந்தது. இவள் தன்னை குறை சொல்கிறாளா இல்லை பாராட்டுகிறாளா என்று?  

“இவர இந்த மாதிரி ஒருத்தர பெத்ததுக்காக ஒங்கம்மாவுக்கு காலமுழுக்க கோவில் கட்டி கும்பிட்டிருப்பேன். எம்புட்டு சேவ செய்யனுமோ செஞ்சிருப்பேன். ஆனா இவுக பண்ணினது சென்மத்துக்கும் மறக்கமுடியாது. எங்கம்மா சொல்லுச்சென்னுதேன் கம்முன்னு அவுகள ஊருக்கு அனுப்ப பாத்தேன்…” என்றவள்,

“அவுக மட்டும் குறுக்க வராட்டி நீக பேசின பேச்சிக்கு இந்த கண்மணிய வேற மாதிரி பாத்திருப்பீக. மாமியான்ற ஒத்த சொந்தந்தேன் என்னோட கைய, வாய கட்டிவச்சிருக்கு. பாத்துக்கிடுங்க…” என நேரடியாக மகாதேவியிடம் வர அவள் வேகமாய் தன்னை நோக்கி திரும்பியதில் அரண்டே போனார்.

அதிலும் புடவை தலைப்பை உதறி சேலையை தூக்கி சொருகிக்கொண்டு தலையை வாரி கொண்டை போட்டு தன்னை பார்த்த பார்வை அப்பப்பா என்றிருந்தது மகாதேவிக்கு.

சந்திராவை தவம் ஒற்றை பார்வையில் அடக்கி அவளின் வாயை திறக்கக்கூடாது என கோபமாய் பார்க்க கார்த்திக்கும், மணிகண்டனும் கண்மணி பேசி முடிக்கட்டும் என அமைதி காத்தனர்.

“ஒங்க மவன கட்டின என்ன நீக என்ன வேணா ஏசுக. எனக்கு அதப்பத்தி என்ன? ஆனா அவுகள பேச ஒங்களுக்கு என்ன உரிம இருக்குன்றேன். சோறு கொண்டாந்தா வேணுமின்னு அத கீழ தட்டிவிடறதும் நித்தம் போட்டுருக்க உடுப்புல என்னைத்தையாச்சும் ஊத்திக்கறதும் கொஞ்சநஞ்சமா செஞ்சிக?…”

“எத்தனதிருப்பு வீட்ட தொடைக்க வக்கிறதும், துணி அலச வக்கிறதும் அந்த வயசான ரெண்டுபேத்தையும் ஆற அமர ஒக்காரவிட்டீகளா?. எத்தன குத்தல் பேச்சு. எம்புட்டு எளக்காரம்?…”

“இல்ல தெரியாம்மத்தேன் கேக்கதேன். அவுக என்ன ஒங்களுக்கு பண்ணையம் பண்ணவா வந்திருக்காக? எங்க ஊருல பாதிபேரு வீட்டுல அடுப்பெரிய காரணமே அவுகதேன். என்னமோ சம்பளத்துக்கு வச்சிருக்க மாதிரி திண்ண சோத்துக்கு வேலைய பாருன்னு சொல்லுதீக. ஒங்கள காலத்துக்கும் வச்சு காஞ்சி ஊத்தற அளவுக்கு வக்கிருக்கு அவுகளுக்கு. அவுகள பேசினா வாய் அவுஞ்சிடும் பார்த்துகிடுங்க…”

“ஒண்ணுமில்லாம சோத்துக்கு வந்தவக மாதிரி பேசறத இன்னொருக்க கேட்டேன் பேச வாய்…” சொல்லவந்தவள் மணிகண்டனை பார்த்துவிட்டு உதட்டை கடித்துகொண்டாள். மூச்சு வாங்க அத்தனை ஆக்ரோஷமாய் பேசியவள்,

“என்ன அசிங்கபடுத்தறதா ஒட்டிக்கிட்டு வந்தான்னு எங்கம்மாட்ட சொல்லுதீகளே பொண்ண குடுத்த அவுக மனசு என்ன பாடுபடும்? ஒங்களுக்கும் ஒரு பொம்பளப்புள்ள இருக்குல. கட்டிகுடுத்திருக்கீகள…” என்று சந்திராவை பார்க்க கண்மணியை அவளுக்கு புரிந்தது. கண்கலங்க அவளை பார்த்தாள் சந்திரா.

“எல்லாத்தையும் தாங்கிட்டு என்னத்துக்கு அவுக இருந்தாகன்னு தெரியுமா? இதோ இந்த மனுசனுக்காகவும், இந்த பெரிய மனுசனுக்காக்கவும்ந்தேன். இல்லாட்டி ஒங்கள சீந்த நாதி இல்ல…”

அவளின் பேச்சில் தெறித்த நியாய ஜுவாலையில் மணிகண்டனுக்கு அத்தனை அவமானமாக இருந்தது. எதிர்த்து ஒரு கேள்வி கேட்கமுடியாமல் அதற்கு எந்தவித நியாயமும் தன் பக்கம் இல்லயே.  மகாதேவியின் மேல் அத்தனை ஆத்திரம் எழுந்தது அவருக்கு.

“எல்லாத்துக்கும் மேல இன்னைக்கு பண்ணுனீகளே அம்மாடி ஆத்தா முத்துக்கருப்பி…” என்று கும்பிட்டவள்,

“காசு, பணம், படிப்பு இருந்தா பெரிய இவுகளா? படிச்ச உங்க கோராமைதேன் தெரியுதே. படிக்காத எங்கம்மாதேன் படிச்ச அறிவாளியான ஒங்கள காப்பாதிருக்காக. மொத தடவையே நீக பண்ணினதுக்கு நா பதிலுக்கு கொடுத்திருந்தா இன்னைக்கு எம்பெரிம்மாவ கால அமுக்க சொல்லுவீகளா? அவுக வயசென்ன? ஒங்க வயசென்ன? கூறுகெட்ட தனமா அவுகளும் ஒங்களுக்கு கால புடிச்சு விடுதாக. எதுக்காவ? நா இந்த வீட்டுல நல்லா வாழனும்னுதேன்…”

“இதுக்கு மேலயும் அவுக இங்க இருக்க வேணா. என்னனாலும் நா பாத்துக்கிடுதேன். அவுக கெளம்பித்தான் ஆவனும்…” என்றவள் கார்த்திக்கை பார்த்து,

“இப்ப சொல்லுங்க, கேட்டீகள. சொல்லிட்டேன். இப்ப அவுகள கெளம்ப சொல்லவா? இல்ல இங்கயே இருந்து ஒங்கம்மாவுக்கு…” என்றவளின் வாயை தன் விரல் கொண்டு அடைத்தவன் பரிதவிப்பாய் பார்த்தான். அவனின் தவிப்பு அவளை தீயாய் பொசுக்க அவனின் கண்களை துடைத்தவள்,

“அட என்ன இது சின்னப்புள்ளயாட்டம். கண்ணெல்லாம் கலங்கிட்டு? கம்முன்னு இரும். வீடுன்னா இப்பிடித்தேன் கெடக்கும். என்ன அது என்னோட போவட்டும். எங்கம்மா பெரிம்மா. என்னால பாக்கமுடியலைங்க…”

அதுவரை தைரியமாக பெசிக்கொண்டிருந்தவளின் கேவல் பெரிதாய் வெடிக்க சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள் கண்மணி. கார்த்திக் அவளை தோளோடு அணைத்துக்கொள்ள மணிகண்டனுக்கு அக்காட்சியை காணவே முடியவில்லை. மெதுவாய் கண்மணியை நெருங்கியவர்,

“கொஞ்சம் உள்ள வாம்மா…” என அழைத்துவிட்டு சங்கரி இருந்த அறைக்கு செல்ல அவர் பின்னே மற்றவர்களும் சென்றனர். மணிகண்டனை பார்த்ததும் சங்கரியும் பேச்சியும் எழுந்து நிற்க அவர்களை நோக்கி கை கூப்பிய மணிகண்டன்,

“மன்னிச்சிடுங்கம்மா. இது எனக்கு தெரியாம நடந்திருந்தாலும் தவறு என் மனைவி பண்ணினது. அதுவும் என்னை சேர்ந்தது தான்….” என்றதும் பதறிப்போய் நின்றனர் சங்கரியும் பேச்சியும். கண்மணி கூட ஆடிப்போனாள்.

“என்ன காரியம் பன்றீக மாமா? என்னதேன் இருந்தாலும் நீக மன்னிப்புன்னு பெரிய வார்த்த சொல்லிட்டீகளே?…” என அவரின் கையை பிடித்து இறக்க,

“யாரு யார்க்கிட்ட மன்னிப்பு கேட்கறது? இவளுங்க ஒரு ஆளுன்னு…”  என வந்த மகாதேவியை ஒரே அறை விட தூரமாய் போய் விழுந்தார் அவர்.

மருமகன் முன்னால் பெண் எடுத்தவர்கள் முன்னால் அவர் அடித்துவிட்டதில் கூனிக்குறுகியவர்,

“இதுங்களுக்காக என்னை அடிச்சுட்டீங்கள்ள…” என மீண்டும் ஆரம்பிக்க,

“மூச், வாய திறந்த நான் மனுஷனா இருக்க மாட்டன்…” என்றவர் சங்கரியிடம் திரும்பினார்.

“அவ இந்தளவுக்கு தரமிறங்கி போவான்னு நாங்க யாருமே நினைக்கலைம்மா. ஏற்கனவே கோவத்துல இருக்கறவ நீங்க பாசமா பார்த்துப்பதை பார்த்து உங்களை புரிஞ்சு நல்லவிதமா மாறிடுவான்னு தான் நாங்க நினைச்சோம். ஆனா இவ திருந்தாத ஜென்மனு இப்போதான் புரியுது…”

“எங்களை, என் மகனோட எதிர்காலத்தை யோசிச்சாவது அவ உங்களை மதிச்சிருக்கனும். ஆனா அவளுக்கு அவளோட வீம்பும், வறட்டு கௌரவமும் தான் பெருசா போச்சு…”

“அய்யோ விடுங்கய்யா, இதெல்லா வேணாமின்னுதேன் மணி எங்கள பேசாம கெளம்ப சொல்லுச்சு. மணியும் ஒன்னும் சொல்லாம இருந்துச்சு…”

“இதெல்லாம்  சொல்லனும்மா. இதையே கண்மணி கார்த்திக்கிட்ட சொல்லியிருந்தா அவன் கேட்டிருப்பான். நீங்க வளரவிட்டுட்டீங்க….” என பல்லை கடித்துக்கொண்டே மணிகண்டன் சொல்ல கார்த்திக்கின் கோபம் மொத்தமும் கண்மணியிடம் தான் திரும்பியது.

“மாமா கிளம்புவோமா?…” என தவம் கேட்க கண்மணிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

“என்னண்ணே எங்க கெளம்புதீக?…”

“இல்லம்மா கண்மணி, நாங்க கிளம்பனும். நீ தப்பா எடுத்துக்காதம்மா. ஆனா ஒண்ணு உனக்கு கிருஷ்ணன் மட்டும் அண்ணன் இல்லைம்மா. நானும் இருக்கேன். உனக்கொண்ணுன்னா இனி பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். புரியறவங்களுக்கு புரியட்டும்…” என்றவன் கார்த்திக்கை பார்த்து,

“பார்த்துக்கடா. தங்கமாட்டம் குடும்பம் அமைஞ்சிருக்கு. தவற விட்டுடாத. இவங்க கண்ணீர் நம்மளை சும்மா விடாது. அவ்வளவு தான்…” என்றவன்,

“சந்திரா பேக் பண்ணு. இன்னும் நாலு நாள்ல பாரின் கிளம்பறேன். அங்க போய்ட்டு நீ, நான், மாமா மூணுபேருமா தங்க ஒரு பெரிய வீடா பார்த்துட்டு உனக்கு டிக்கெட் அனுப்பறேன். சீக்கிரம் வந்து சேரனும். புரியுதா?…”

மகாதேவி கேட்கட்டும் என்றுதான் அழுத்தமாய் தவம் சொல்ல மணிகண்டனுக்கும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

“மாப்பிள்ளை சந்திரா எதுக்கு இப்ப? தனியா அங்க இருந்து கஷ்டபடுவா. இப்ப ட்ரீட்மென்ட் வேற எடுத்துட்டு இருக்கா…” என்று வர,

“இங்க பாருங்க அத்தை, இதை நான் முதல்லையே செஞ்சிருக்கனும். இப்பவாச்சும் செய்யனும்னு நினைச்சேன்னு சந்தோஷப்படுங்க. புருஷனோட பொண்டாட்டி வாழறதுல என்ன கஷ்டம்? அவ என்னோட வரா. அவ்வளவு தான். ட்ரீட்மென்ட் எல்லாம் அங்க பார்த்துப்போம்…”

“மாப்பிள்ளை…” மகாதேவி திரும்பவும் பேச வர தவம் சந்திராவை பார்த்த பார்வையில் அவள்,

“அம்மா நான் அவர் கூடவே போறேன். நீங்க அவரை கோவப்படுத்தாம இருங்க…” என்று சொல்லவும் பேசமுடியாமல் மகாதேவி பார்க்க இதையெல்லாம் பார்க்க சங்கடப்பட்டுக்கொண்டே,

“நாங்க பொறப்படறோம் மாப்பிள்ள…” என்றபடி கிருஷ்ணன் வந்து நிற்க கார்த்திக் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களை இருக்க சொல்லுவான். யாரும் எதுவும் பேசவில்லை.

கிருஷ்ணனின் தோளில் அருள் உறங்கியிருக்க அவனை அறைக்குள் இருந்த படுக்கையில் படுக்கவைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்தவன் பேச்சியையும் சங்கரியையும் அழைத்துக்கொண்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவர்கள் கிளம்பிய பத்து நிமிடத்தில் தங்களது அனைத்து உடமைகளையும் எடுத்துவைத்துக்கொண்ட மணிகண்டன் தனது காரில் வைத்துவிட்டு வந்து மகாதேவியின்  முன்னால் நின்றார்.

“கிளம்பு…” என சொல்ல,

“எதுக்கு நான் எதுக்கு கிளம்பனும்? இது என் மகன் வீடு. நான் இங்க தான் இருப்பேன். அதுங்க போனா நாமளும் போகனுமா?…” என சட்டமாய் அமர்ந்துகொள்ள,

“இது உங்க மகன் வீடு இல்லைம்மா என் மாமனார் வீடு. ஐ மீன் அவரோட பொண்ணுக்காக அவர் என்பேர்ல வாங்கித்தந்த வீடு. உங்களால உரிமை கொண்டாட முடியாது…” கார்த்திக் இறுக்கமான குரலில் கூறவும் அதிர்ந்துபோய் பார்த்தார் மகாதேவி.

“என்ன சொல்ற கார்த்திக்?…”

“இதுதான் உண்மை. அப்பாவுக்கும், மாமாவுக்கும் தெரியும்…”

“இன்னும் எத்தனை உண்மையை என்கிட்டே இருந்து மறைச்சிருக்கீங்க? எத்தனை நாளைக்குன்னு நானும் பார்த்துடறேன்…” என்கிற கோவத்துடன் மகாதேவி கண்மணியை பார்க்க அவளும் முறைப்பாய் பார்த்தாள்.

“பார்த்தீங்களா? கொஞ்சமும் பயமில்லாம என்னை முறைச்சு பார்க்கா. எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கனும் அவளுக்கு…”

“நா என்ன தப்பா பண்ணேன்? என்னத்துக்கு பயப்படனும்? என்ன நீக எப்புடி பாக்குதீகளோ அப்படித்தேன் நானும் பாப்பேன்…” சவடாலாய் கண்மணியும் சொல்ல,

“மகா கிளம்புன்னு சொல்றேன்ல. இன்னொரு அறை வேணுமா?…” என்றதும் கோபத்துடன் வேகமாய் வெளியேறினார் மகாதேவி.

மற்றவர்கள் கார்திக்கிடமும், கண்மணியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப வீடே வெறித்துகிடந்தது.

நின்ற இடத்திலேயே கண்மணி தரையில் அமர்ந்துவிட கார்த்திக்கும் அவளுக்கு பக்கவாட்டில் அமர்ந்தான்.

இருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

Advertisement