Advertisement

தீண்டல் – 1 (2)

விடுதலையான உணர்வுடன் பார்கவியை பார்த்து சிரித்தவர் தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டார். டீயை குடித்து முடித்தவர்,

“நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். நைட் சேர்ந்தே சாப்பிடுவோம்…” என்றவர் கிளம்பிய பின்னர் தான் மூச்சே வந்தது அனைவருக்கும்.

“ஹப்பா என்னன்னு தான் சமாளிக்கிறீங்களோ அக்கா…” என ராதா சொல்ல பார்கவிக்கு அதற்கும் புன்னகை தான்.

“விடுங்க சித்தி வாங்க நாம ரூம்க்கு போகலாம். சித்தப்பா நீங்களும்…”

“என்னை விடுங்கம்மா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன். நீங்க பேசுங்க…” என கம்பன் கழன்று கொள்ள பெண்கள் நால்வரும் ஒரு அறைக்குள் சென்று குவிந்தனர்.

அதன் பின்னால் காற்றுக்கென்ன வேலி பாடல் தான். கேட்கத்தான் முனீஸ்வரன் இல்லையே. இரவு முனீஸ்வரன் வரும் வரை அவர்களின் சந்தோஷ கூச்சல் வீட்டை நிறைத்தது.

—————————————————

விடியற்காலைக்கே உரிய இதமான குளுமையோடு அவ்வீட்டின் தலைவி கோமதி வீட்டு வாசலில் கோலமிட்டு விட்டு உள்ளே வந்து அனைவருக்கும் காலை நேர காபியை தயாரிக்க ஆரம்பித்தார்.

கணவர் நீதிமாணிக்கம் எழுந்துவந்து வெளியே நடைபயிற்சிக்கு சென்றிருக்க மகன்கள் புவனேஷ்வரன், புகழேந்தி இருவரும் அப்பொழுது தான் எழுந்து வந்திருந்தனர்.

“ஈஷ்வர் அபிராமி எழுந்தாச்சா? இப்ப அவளுக்கு தலைவலி பரவாயில்லையா?…” என கேட்டுக்கொண்டே மகனுக்கான காபியை கொடுத்துவிட்டு புகழுக்கும் தர வாங்கிக்கொண்ட இளையவன் அண்ணனை இகழ்ச்சியாக பார்த்தான்.

தம்பியின் இந்த பார்வையில் கோபத்தையும் தாண்டிய ஒரு அவமான உணர்வு அவனை சூழ்ந்துகொள்ள குற்றவுணர்வோடு,

“கொஞ்சம் பெட்டர்ன்னு சொன்னாம்மா. இப்ப வந்திருவா…” மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசவேண்டிய சூழ்நிலை.

இன்னும் இரண்டொரு நாளைக்கு இப்படித்தான் அபிராமியின் செயல்கள் இருக்கும். அதன்பின் கொஞ்சம் வளைந்து வருவாள். தாய்வீட்டிற்கு சென்று திரும்பும் போதெல்லாம் அவள் நடவடிக்கைகள் இப்படித்தான். முதலில் இதை புரியாமல் இருந்தவர்களுக்கு அதன்பின் வழமையாகிபோனது.

“எதுக்கு இப்ப கசப்ப முழுங்கின மாதிரி முழிக்கிற ஈஷ்? பெட்டர்ன்ற வரை ஓகே. வந்திருவாங்கன்னு எல்லாம் நீயா முடிவு பண்ண கூடாது…” புகழ் கிண்டல் பேச,

“ப்ச், சின்னு பேசாம இரு…” என மகனை அதட்டிய கோமதி,

“ஈஷ்வரா நீ போய் அப்பா வந்துட்டாங்கன்னு சொல்லு. இப்பவே சொன்னா தான் வரதுக்குள்ள எழுந்து குளிச்சுட்டு வருவா…”

மருமகளை வழிக்கு கொண்டுவரும் சூத்திரம் அறிந்தவர் மகனுக்கு ஞாபகப்படுத்த அவனும் எழுந்து உள்ளே செல்ல,

“நானும் போய் ரெடி ஆகறேன்மா. நியாயம் தர்மம் வரதுக்குள்ள குளிச்சுட்டு வந்தா தான் இன்னைக்கு தட்டில சோறு. இல்லைனா வீட்டை விட்டு தள்ளி வச்சாலும் வச்சிடுவார்…” என சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவனும் சென்றுவிட அடுத்த வேலைகளுக்காக கோமதியும் பரபரப்பானார்.

கால்மணி நேரத்தில் அபிராமியும் குளித்துவிட்டு வேகமாய் மாமியாருடன் வந்து வேலைகளில் பங்கெடுத்து கொண்டாள். இவ்வளவு நேரம் ஏன் வரவில்லை என்றும் கேட்கவில்லை. இப்போது மட்டும் என்ன என்றும் சொல்லவில்லை.

வந்தவளிடம் என்ன செய்யவேண்டும் என்ற பேச்சுடன் வேலைகளில் ஆழ்ந்துவிட்டார். நீதிமாணிக்கமும் வரும் முன்னர் இரு மகன்களும் தயாராகி வந்துவிட காலை உணவுகள் உணவு மேஜையில் இடம்பிடித்தன.

“ஈஷ்வரா…” என்றபடி தந்தை உள்ளே வர ஹாலில் இருந்தவன் வேகமாய் முன்னே சென்று நின்றான்.

“அப்பா…” என்ற சொல்லுக்கு மறு பேச்சு பேசாமல் நிற்கும் அவனை பார்க்கும் போது அபிராமிக்கு பற்றிக்கொண்டு வந்தது.

இந்த அன்பும் பணிவும் பக்தியும் தானே தன்னை அலட்சியபடுத்த செய்கிறது என வெதும்பினாள். ஆனால் அதை வாய்விட்டு அவனிடம் கூட சொல்லமுடியாது. அவளின் செயல்கள் எல்லாம் மௌனமாகவே நடக்கும்.

ஒதுக்கம். அவள் தன் கோபத்தை காட்ட கையிலெடுக்கும் ஆயுதம். முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அவள் ஒதுங்கி போக அவன் அதட்டி கொண்டுவந்து நிறுத்துவான்.

“இன்னைக்கு……. ஹ்ம்ம்… இரு நான் குளிச்சுட்டு வந்து பேசறேன்…” என சொல்லி உள்ளே சென்றுவிட புகழுடன் அமர்ந்து தங்கள் வியாபாரம் விஷயம் பேச ஆரம்பித்துவிட்டான்.

கோமதியும் அன்றாட நிகழ்வென்று கண்டுகொள்ளவில்லை. அபிராமிக்கு தான் பிடிக்கவில்லை. அவமதித்ததாக எண்ணி குமைந்தவளுக்கு வெளிக்காட்ட தைரியமில்லை. விழிகள் கலங்கின.

நீதிமாணிக்கம் குளித்து வர அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்த ஆரம்பித்தனர்.

“கோமதி கம்பன் பேசினான்…” என்றதுமே கோமதியின் பார்வையில் ஒரு பரபரப்பு. மகன்கள் இருவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தந்தையை பார்க்க,

“அங்க அழைப்பு வச்சுட்டாங்களாம். வழக்கம் போல தான் நடந்திருக்கு. ஆனாலும் ராதா இழுத்து பிடிச்சுட்டா. கெட்டிக்கார பொண்ணு…” என சொல்லி சாப்பிட போக மனைவியின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பில் புன்னகைத்தவர்,

“ஹ்ம்ம் உன் தங்கச்சியும் உன்னை கேட்டாளாம். நிறைஞ்சிடுச்சா?…” அதில் கிண்டல் இல்லை. வேதனையே விஞ்சி இருந்தது. கோமதியின் கண்கள் கலங்கிவிட,

“விடு கோமதி. புதுசா பேசற மாதிரி வருத்தப்பட்டுட்டு…” என மனைவியை சமாதானம் செய்தவர் மகன்களை பார்த்தார்.

“நீங்க என்னப்பா சாப்பிடாம…” அவரின் பேச்சில் பிள்ளைகளுக்கு உடன்பாடில்லை என்பது தெரிந்து போக,

“ஆரம்பத்துல எனக்கும் கோபம் இருக்கத்தான் செஞ்சது. வயசாக ஆக இப்ப நிதானம் தான். அதையே நினைச்சுட்டு இருந்தா நாளைப்பின்ன நமக்கு நாலு மனுஷமக்க மிஞ்ச மாட்டாங்க. என்ன ஆகியிருந்தாலும் அவன் என் தம்பி இல்லைன்னு ஆகிடாதுல…”

புரிகிறது தந்தையின் பேச்சும் அதில் உள்ள பொருளும். ஆனாலும் ஏற்கத்தான் மனது இடம் தரவில்லை பிள்ளைகளுக்கு. எதிர்த்து பேசும் துணிவில்லை. அதை பயமென்று அபிராமி நினைத்தாள். அதன் இன்னொரு பெயர் மரியாதை என்று என்று புரியுமோ?

காஞ்சிபுரத்தின் மிகப்பெரிய தறி ஆலை நடத்திவந்த குடும்பம். பெரும் புகழும் பெற்ற ஒன்று அவர்களின் உமையாள் தறி. மனைவியின் பெயரின் அகத்தியன்  ஆரம்பித்திருக்க பிள்ளைகளான நீதிமாணிக்கமும், முனீஸ்வரனும் திறம்பட நடத்தினார்கள்.

ஆரம்பத்தில் மருத்துவமனைக்கான பஞ்சுகள் மட்டுமே தரமாக தயாரித்து கொடுக்கப்பட்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக அதை முன்னேற்ற ஆரம்பித்தனர்.

நீதிமாணிக்கத்திற்கு கோமதியை மனம் முடித்தவர்கள் சிலவருடங்களில் கோமதியின் உடன்பிறந்த தங்கையையே முனீஸ்வரனுக்கும் எடுத்துக்கொண்டனர். முனீஸ்வரன் கொஞ்சம் முரட்டு குணம். பார்கவியின் அமைதியான குணத்திற்கு கொஞ்சம் கட்டுப்பட்டு இருந்தார்.

ஒரே குடும்பமாக சந்தியா சந்நிதி பிறக்கும் வரைக்கும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்கள் அந்த பெரும் பிரச்சனையின் பின்பு தறி ஆலையையே மூடும் அளவிற்கு கொண்டுவந்துவிட்டனர். ஆத்திரம் கண்ணை மறைத்தது. சொந்தத்தை மறக்கடித்தது.

அந்த ஆலை எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம். யாருக்கும் இல்லை என்னும் விதமாய் வீணடிக்க பட்டு இருவரும் சொந்தமாக தொழில் தொடங்கினார்கள்.

உமையாள் காட்டன் வேஷ்டி, ஷர்ட் என நீதிமாணிக்கமும், உமையாள் பட்டு தறி என முனீஸ்வரனும் ஆரம்பிக்க பெயரை இருவருமே விட்டுகொடுக்க மறுக்க பெரும் விவாதத்தின் பின்னர் நீதிமாணிக்கம் தான் நீதிஉமையாள் என பெயரை மாற்றிகொண்டார்.

இன்றுவரை குடும்பப்பகை அவர்களின் ஒன்றுதொட்ட குடும்பத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலும் நீதிமாணிக்கத்தை கூட சமாளித்துவிடலாம்.

முனீஸ்வரன் தான் பிடித்த முயலுக்கு முப்பது கால்கள் தான் என்னும் ரகம். அதற்கு ஆமாம் சாமி போடும் குடும்பம். மரியாதையினால் அல்ல. அதையும் தாண்டிய அளப்பறியா பயம்.

இத்தனை கோபதாபங்கள் இருந்தாலும் ஒருவர் தொழிலில் ஒருவர் மூக்கை நுழைப்பதில்லை. அவரவர் வழியில் அவரவர் முன்னேற குடைச்சல் எதுவும் கொடுக்காமல் வளர்ந்து வந்துவிட்டனர்.

எங்காவது எதிர்பட்டால் ஒதுங்கிச்செல்லும் ரகம் நீதிமாணிக்கம் என்றால், நிழலை கண்டால் கூட அந்த நேரத்தில் எவர் சிக்கினாலும் கடித்து துப்பிவிடும் அளவிற்கு ஆவேசப்படும் ரகம் முனீஸ்வரன். பார்கவி என்றால் பரம திருப்தி. சொல்லால் கொன்றுவிடுவார்.

“ஆனாலும் உங்க தங்கச்சி புருஷன் வியாபாரத்துல நேர்மையா இருந்தாலும் மனசளவுல குடைச்சல் குடுக்கத்தான் செய்யறாரும்மா…” புகழ் அவ்வப்போது தந்தையின் சோர்வில் தாயிடம் பொங்குவான்.

“இவருக்கு குடைச்சல் குடுக்க ஒருத்தன் வராமலா போவான்…” என்னும் அவனின் வயிற்றெரிச்சலுக்கு கண்திறந்தார் கடவுள்.

—————————————————

“இந்த வசீகரன்கிட்டையே உன் வேலையை காட்டுறியா? தெரியாம எனக்கெதிரா நீ வேலையை பார்த்திருந்தா கூட உன்னை விட்டுவச்சு செய்வேன். எனக்கு தெரியும்னு தெரிஞ்சும் பயமில்லாம செஞ்சா செஞ்சுட்டு தான் விடுவேன்…” போனில் தாறுமாறாய் திட்ட ஒன்றும் புரியாமல் மகனை பார்த்துக்கொண்டு நின்றார் குகன்.

“எதுவும் பிரச்சனையா வசீ?…” என கேட்க தன் ஷூவை மாட்டிக்கொண்டே,

“எஸ் ப்பா, என்னோட புது க்ளைண்ட் கிட்ட போய் என்னால முடியாதுன்னு சொல்லி ப்ராஜெக்டை அவன் பக்கம் திருப்ப பார்க்கறான். நானே பெருசா இருக்கு, டேட்டும் இல்லைன்னு தான் நினைச்சேன். யோசிச்சேன். பட். இதுல இனி யோசிக்க எதுவும் இல்லை…”

“வசீ…”

“என்னால முடியும்னு அவனுக்கு காட்டுவேன். இது எனக்கே நான் விட்டுக்கற சேலஞ்ச். சொன்ன அவனை நான் இல்லாம பன்றேன்…”

“தப்பு வசீ. உன்னை நீ ப்ரூ பண்ணனும்னு நினைக்கிறது சந்தோஷம். ஆனா மத்தவங்களை அழிக்க நினைக்கிறது தப்பு…” தந்தையாய் மகனுக்கு எடுத்து சொல்ல,

“நோ ப்பா. நான் டிஸைட் பண்ணிட்டேன். என் வழில அவன் வராத வரைக்கும் நான் எதுவும் நினைக்கலை. இப்பவும் அழிக்க நினைக்கலை. என்னால முடியாதுன்னு அவன் நினைச்சிருக்க கூடாது. சொல்லியிருக்கவும் கூடாது. அது தப்புன்னு அவனை நான் உணர வைக்கனும்…”

“….”

“காய்ச்சல் வந்தா ஊசி போட்டுக்கறது இல்லையா? வலிக்காம எதுவுமே சரியாகாது. இன்னொருத்தனை சாய்ச்சிட்டு அந்த இடத்தில அவன் உட்காரனும்னு நினைக்க கூடாது. அதுவும் இந்த வசீகரனை சாய்ச்சிட்டு. இங்க தான் அவன் தப்பு செஞ்சுட்டான்…”

குகனிடம் சொல்லியவன் கிளம்பிவிட கவலையாய் அமர்ந்துவிட்டார் தந்தை.

Advertisement