Advertisement

நட்சத்திர விழிகள் – 27 (1)

நந்தினியின் தாக்குதலில் இருந்து அழகாக தப்பித்தனர் உதயாவும், பிரசாத்தும். நந்தினியை பார்க்கவென்று சற்று முன் அறைக்குள் நுழைந்தவர்களுக்கு இந்த செல்ல சண்டை எதற்காகவென புரியவில்லை என்றாலும் இதுவரை தங்களுக்கு வந்த சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் இனி தங்கள் வாழ்வில் இடமில்லை, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும் என்பதும் தெளிவாக புரிந்தது.

“அம்மாடி கண்ணு, நந்தினிம்மா. ஏண்டா இப்போதான் எழுந்திருக்க? உடம்பை அலட்டிக்காதடா. என் கிட்ட சொன்னா நானே இந்த பயலுகளை உண்டில்லைன்னு ஆக்கிருப்பேனே?…” என்று நாச்சி நந்தினியின் சார்பாக பேச,

“ம்ம். எங்களை நீ உண்டில்லைன்னு ஆக்கிருவயாக்கும்? முடிஞ்சா ஒருபடி சோறு ஆக்கி வை. அதுக்கப்பறம் இந்த வாய்ச்சவடால் விடலாம். கிழவி என்னை பார்த்தும் உனக்கு துளிர் விட்டு போச்சு. சும்மாவே உன் பேத்தி குதிப்பா. இதுல நீ வேற ட்ரெயினிங். ரெண்டுக்கும் ஓவர் பேச்சால இருக்கு?…” என்று கூறிய பிரசாத் நாச்சியின் காதில் தொங்கிய தண்டட்டியை பிடித்து ஆட்ட அவனின் முகம் வழித்து உச்சிமுகர்ந்தார் நாச்சி.

“இப்போதான்யா நான் கும்பிட்ட சாமி கண்ணை திறந்திருக்கு. என்னோட வேண்டுதலை வீண் போகவிடாம நீ வந்து சேர்ந்துட்ட…” என கூறியவரின் கண்களை கண்ணீர் நிறைக்க அவரை அணைத்துகொண்ட பிரசாத் கண்களும் கலங்கியது.

உணர்ச்சிமயமான அந்த நொடிகளை அனைவருமே அமைதியாக ரசித்தனர். நந்தினி மட்டுமே கொஞ்சம் சுணங்கினாள். அருவியூரில் பார்த்த பிரசாத்தின் பிம்பத்தை முழுவதுமாக மனதிலிருந்து அழிக்க முடியாமல் தடுமாறினாள். தன் வாழ்க்கைக்காக, தன்னோட உயிரின் பாதுகாப்புக்காக, தன் குடும்பத்தின் நலனுக்காக பாடுபட்ட இந்த பிரசாத்தை ஏற்றுக்கொள்ள அந்த தவிப்பே தடையாக இருந்தது.

அவளின் முகம் அதை பிரதிபலித்ததோ என்னவோ பிரசாத்தே அதை உணர்ந்தது போல மெல்லிய முறுவலோடு அவளை நெருங்கினான். தன் அருகில் வந்தவனை பார்த்து நந்தினி முறைக்க,

“என்ன பூலான்தேவி? ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க போல? இல்லாத மூளையை தேடிப்பிடிச்சு வச்சு நீ என்ன யோசிச்சாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. நடந்ததையே யோசிச்சுட்டு இப்போ இந்த நிமிஷ நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழந்திடாத. அதெல்லாம் அவ்வளோ ஈஸியா மறக்கக்கூடியது இல்லைதான். ஆனா சின்ன முயற்சி பண்ணேன். இதுக்கு மேல என்ன சொல்லன்னு எனக்கு தெரியலை…” என அமைதியாக கூறியவனை பார்த்தவள்,

“ம்ம் பார்க்கலாம். பார்க்கலாம். மவனே என்னை பூலான்தேவி, பூலோகதேவின்னு சொல்லிட்டு திரிஞ்ச, கொன்னுடுவேன். ஜாக்கிரதை…” என அந்த அறையில் இருந்தவர்களை கருத்தில் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக முணுமுணுக்க அந்த பதிலே தனக்கு போதும் என்று நிம்மதிகொண்டான்.

மற்றவர்கள் நந்தினியை சூழ்ந்துகொள்ள உதயா மட்டும் தனத்தை தனியே அழைத்தான். “சித்தி, பிரசாத்…” என ஆரம்பிக்க அவனை கையமர்த்தி தடுத்தவர்,

“எந்த விளக்கமும் வேண்டாம் பிரபா. நான் என் பிள்ளையை சரியாதான் வளர்த்திருக்கேன். அவனை பெத்த வயிறும், மனசும் நிறைச்சிருக்கு. நந்தினியை காப்பாத்த என்னவெல்லாம் யோசிச்சிருக்கான்?…” என தூரத்தில் நந்தினியோடு வம்பு வளர்த்துகொண்டு அவளை சீண்டி விளையாடிக்கொண்டிருந்த பிரசாத்தை பார்த்துக்கொண்டே பேசினார்.

“என் பையனை பத்தி நான் தான் சரியா புரிஞ்சிக்காம இருந்துட்டேன் பிரபா. அவன் சொன்னது போல என்னோட வைராக்கியத்தை விட்டுட்டு ஊரோட ஒண்ணா இருந்திருந்தா இது போன்ற மூர்க்கத்தனமும் முரட்டு குணமும் அவனுக்கு வந்திருக்காதுன்னு நினைக்கேன்.என்ன செய்ய எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரனுமே?…” என பெருமூச்சு விட,

“சித்தி. பிரசாத் எங்களுக்காக என்னவெல்லாம் செய்திருக்கான் தெரியுமா?… கேட்டீங்கன்னா நீங்க ஆச்சரியப்படுவீங்க…” என கூற ஆரம்பித்தவனை தடுத்து,

“இல்லைப்பா, என் பையன் எனக்கு கிடைச்சுட்டான். நீ சொல்வதை கேட்டு நான் என் மகனை தெரிஞ்சுக்க விரும்பலை. இது நான் நம்ம வீட்டிலையே புரிஞ்சுக்கிட்டேன். அவன் ஏதாவது தப்பு செய்திருந்தாலும் நிச்சயமா தெரியாம தான் செய்திருக்கனும். இனிமே அப்படி ஒரு தவறு நடக்காம பார்த்துப்பான். இது போதும் எனக்கு. இனி அவனோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என கண்ணீரை துடைத்து கொண்டே சொல்லியவர் புன்னகையோடு நந்தினியின் அருகில் சென்று அவளோடு பேச ஆரம்பித்தார்.

அனைத்தும் சரியானது போன்ற அளப்பறியா ஆனந்தம் உதயாவை ஆட்டிப்படைத்தது. விஷ்ணுவை அழைத்து பிரசாத்தை பற்றி சந்தோஷமாக பகிர்ந்துகொண்டான்.

விஷ்ணுவால் நடந்ததையெல்லாம் நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. வேணியின் சுயரூபத்தை மொத்தாமாக வெளிக்கொண்டு வந்தவன் ஆகிற்றே. இப்போது அவனின் மனதில் பிரசாத்தின் மேல் மரியாதை சிறிது சிறிதாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்தவன் போல விஷ்ணுவை பார்த்து சிரித்துக்கொண்டான் பிரசாத்.

அனைவரும் பேசி முடிக்கவுமே கொஞ்சம் ஒதுங்கியிருந்த சுதர்சனத்தை அப்போதுதான் பார்த்த நந்தினி, “அப்பா, ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? பக்கத்துல வரமாட்டீங்களா?…” என அன்போடு உரிமையாக கேட்ட நொடி அவளை பார்த்து கண்ணீரோடு கை கூப்பினார் சுதர்சனம்.

அதில் பதறிப்போயினர் நந்தினியும், உதயாவும். நந்தினி, “அச்சோ என்னப்பா இது? நீங்க போய் எனக்கிட்ட? அப்போ நான் உங்க பொண்ணு இல்லையா?…” என கவலையோடு அவரை பார்த்து கேட்டாள்.

“ஐயோ, இல்லடாம்மா, நீ என் பொண்ணுதான். என்னோட பொண்ணே தான். ஆனா உனக்கு தகப்பனா இருக்கிற தகுதியை நான் இழந்துட்டேன். கட்டின பொண்டாட்டியோட எண்ணத்தை, மாற்றத்தை கூட கணிக்கமுடியாத நான் ஒரு மனுஷனா இருக்ககூட தகுதி இல்லாதவன்…” என நந்தினியின் கையை பிடித்துகொண்டு கதற உதயாவும். விஷ்ணுவும் தான் அமைதிப்படுத்தினார்கள்.

கெளரி கூட பழையபடி கலகலப்பாக பேசாமல் குற்ற உணர்வோடுதான் நந்தினியிடம் உரையாடினாள். சுதர்சனம் நந்தினியிடம் மன்னிப்பை யாசிக்கவும் அவளாலும் தாங்கமுடியவில்லை. தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் தாயை நினைத்து வெட்கினாள்.

இருவரையும் சமாதானம் செய்வதற்குள் அனைவருக்கும் போதும் போதுமென ஆகியது. ஓரளவிற்கு இயல்புநிலைக்கு திரும்பவும் தான் அனைவருமே ஆசுவாசமடைந்தனர். அடுத்து அவர்களை கலகலப்பாக்குகிறேன் பேர்வழி என அந்த அறையே அதிரும்படி கலாட்டா செய்து ரகளையை கூட்டினார்கள் உதயா, பிரசாத், விஷ்ணுவின் மூவர் கூட்டணி.

சிறிதுநேரத்தில் நந்தினியை செக்கப்பிற்கு என அழைத்து சென்றவர்கள் அவளை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு எல்லோரையும் வெளியேற்றிவிட்டனர்.

பிரசாத்தின் மொபைலில் வள்ளியின் அழைப்பு வர அதை எடுத்து பேசியவனின் முகம் மாறியது. வேணி தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்த நிலையில் மயங்கிக்கிடப்பதாக கூறவுமே அங்கே இருந்த யாரது கவனத்தையும் கவராமல் சுதர்சனத்தை ஏதோ சாக்கு சொல்லி அழைத்தவன் கைய்யோடு டாக்டர் பெருமாள் கூட்டிக்கொண்டு உதயாவின் வீட்டிற்கு சென்றான்.

அங்கே முன்னால் இருந்த தோட்டத்தில் ரத்தத்தில் மிதந்த வேணியின் உடலை பார்த்ததுமே ஒரு நொடி பதறிய சுதர்சனம் உடனே தன் உணர்வுகளை துடைத்தெறிந்தார். அவரது முகம் கல்போல இறுகிவிட்டது. முன்பின் தெரியாதவர்களை ஆபத்தில் பார்க்கும் போது அனைவருக்குமே எழும் சாதாரண மதிதாபிமான உணர்வு கூட அவருக்கு வராமல் போனதுதான் விந்தை.

ஹாஸ்பிட்டலில் இருப்பவர்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெளியே வந்த வள்ளியின் கண்களில் விழுந்தது இந்த காட்சிதான். பிரசாத் வந்ததுமே அதை கூறியவளின் உடல் அச்சத்தில் வெடவெடத்தது. வேணியின் கைகளில் இருந்த இரும்புக்கம்பியை பார்த்ததுமே என்ன நடந்திருக்குமென சுலபமாக யூகிக்க முடிந்தது. 

வேணியை வேகமாக பரிசோதித்த டாக்டர் பெருமாள் இன்னும் உயிர் இருப்பதாகவும் இங்கே காப்பாற்ற முடியாதென்றும், உடனடியாக வெளியூர் சென்றால் காப்பாற்ற முடியுமென்றும் கூறிவிட்டு ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்து முதலுதவி அளித்து கூடவே ஒரு நர்ஸையும் அனுப்பிவைத்தார். அவர்களோடு சுதர்சனத்தை அனுப்ப நினைக்க அவர் ஒரேடியாக மறுத்தேவிட்டார். வேறு வழியில்லாமல் பிரசாத் தான் வள்ளியை உடன் செல்லுமாறு அனுப்பிவைத்தான்.

டாக்டர் பெருமாளும் வீட்டிற்கு போய்விட்டு ஹாஸ்பிட்டலுக்கு வருவதாக சொல்ல இங்கே நடந்ததை இப்போதைக்கு யாருக்கும் சொல்லவேண்டாம் என கேட்டு கொண்டு அவரை அனுப்பிவைத்தான்.

அனைத்தும் முடியவும் தன் மனதிலிருந்த மொத்த தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் வடிந்தவராக தொய்ந்துபோய் வாசலில் அமர்ந்தவர் ஓ வென கதறி அழத்துவங்கினார். வேணிக்காக இல்லாமல் தன் மீது உண்டான சுயபச்சாதாபத்தால்.

பிரசாத் அவரை தேற்றமுடியாமல் தோற்றவன் சிறிது நேரம் அவரின் துக்கங்கள் கரையட்டுமென அழவிட்டுவிட்டான். ஆனால் அவரை விட்டு நகராமல் ஆறுதலாக கையை பிடித்துக்கொண்டே அமைதிகாத்தான். நேரம் செல்ல செல்ல கொஞ்சமாக தன்னை மீட்டவர் ஒரு சிறு பையனின் முன்னால் இப்படி தான் ஒரு பெண் போல அழ நேர்ந்துவிட்டதே என தலை கவிழ அதை புரிந்தவன்,

“மாமா இங்க நடந்ததை ஹாஸ்பிட்டல்ல யார்க்கிட்டையும் சொல்லாதீங்க. ஏற்கனவே லக்ஷ்மிம்மா முடியாம படுத்திருக்காங்க. ஒரு அண்ணனா நீங்க அவங்களுக்கு தைரியம் சொல்லனும். அவங்களோட இழப்பில் இருந்து நாம தான் மீட்டு கொண்டுவரனும். ஆகவேண்டியதை பார்ப்போம். அதை விட்டுட்டு இப்படி நீங்களே உடைஞ்சு போனா எப்படி?…” என பெரியமனிதன் போல பேசியவனை பிரமிப்பாக பார்த்தவர் கொஞ்சம் தெளிவு பெற்றார்.

பிரசாத்தின் மென்மையான பேச்சில் தன்னை சமாளித்துக்கொண்டு அவனோடு தன் தங்கையை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தார். இனி தன் தங்கையையும் அவர்களின் குடும்பத்தையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை தனக்கிருக்கிறது என தனக்குத்தானே முடிவெடுத்துக்கொண்டார்.

ஹாஸ்பிட்டலுக்கு வந்தவர் அனைவரிடமும் கொஞ்சம் தெளிவாகவே பேசினார். எங்கே சென்றீர்கள்? என கேட்டதற்கு அது இது என சமாளித்துவிட்டார் பிரசாத்தின் உதவியோடு. பெருமாளும் பாக்கியம், நந்தினி இருவரின் தற்போதைய உடல்நிலையால் இதை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

பாக்கியம் கண்விழித்ததுமே நந்தினியை காணத்தான் விரும்பினார். அவருக்கு நந்தினி எப்படி இருக்கிறாள்? என அறிந்தே ஆகவேண்டி இருந்தது. நந்தினிக்கு ஒன்றும் ஆகியிறாது என்றும், கண்டிப்பாக தன் பெண் கெளரி தான் நந்தினியை காப்பாற்றியிருப்பாள் என ஆணித்தரமாக நம்பினார்.

வெகுநேரம் கழித்து மாலை மங்கிகொண்டிருந்த பொழுதில் தான் பாக்கியத்தை பார்க்க நந்தினி அனுமதிக்கபட்டாள். அவரை நந்தினி பார்க்கும் போது தன் குடும்பத்தினர் அனைவரும் தன்னோடு இருக்கவேண்டுமென்ற அவளது அன்பு கட்டளையின் படி டாக்டர் பெருமாள் எல்லோரையும் உள்ளே அனுமதித்தார்.

நந்தினியை அருகில் அழைத்து அவளது கையையும், முகத்தையுமாக வருடிக்கொண்டே இருந்தார். அவரை பார்த்த நந்தினி, “எனக்கொண்ணுமில்லை லக்ஷ்மிம்மா. நான் நல்லா இருக்கேன். நீங்க சீக்கிரமா குணமாகிவாங்க. உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…” என பூடகமாக பேச அனைவரும் அதை கேட்டு என்னவாக இருக்குமென யோசிக்க,

“கெளரி!!! என் பொண்ணு கெளரி தான் உன்னை காப்பாத்தியிருக்கா. எனக்கு தெரியும், என்னோட குழந்தைதான் என் வீட்டு குலவிளக்கை அணையாம காப்பாத்தியிருக்கா…” என கண்ணீரோடு கூற அதை பார்த்து நந்தினி புன்னகைக்க அந்த சிரிப்பில் பாக்கியம் தன் பெண் கௌரியே சிரித்தது போல உணர்ந்தார். அவரது உள்ளுணர்வு அப்படித்தான் அவருக்கு சொல்லி நம்பவைத்தது.

“ஆமாம் லக்ஷ்மிம்மா, அதுல என்ன சந்தேகம்? நம்ம கெளரி நம்மை விட்டு எங்கயுமே போகலை. போகவும் மாட்டாங்க. நிச்சயம் அவங்கதான் என்னை காப்பாத்தியிருக்காங்க. நானும் நம்பறேன்…” என பாக்கியத்தின் பேச்சை ஆமோதித்தாள்.

இதை பார்த்த மற்றவர்கள் பாக்கியத்தின் இது போன்ற பேச்சில் முதலில் கவலை கொண்டாலும் அவரின் உறுதியான பேச்சை, நம்பிக்கையை மறுத்து கூற மனம் வரவில்லை. அவரது நம்பிக்கை அப்படியே இருக்கட்டும் என மனம் கலங்கியபடி அமைதியாக இருந்தனர்.

சிறிதுநேரத்தில் உள்ளே வந்த ஒரு பெண் மருத்துவர் அனைவரையும் பார்த்துவிட்டு, “பாக்கியலக்ஷ்மிம்மா உங்க மருமக உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லனுமாம். உங்ககிட்டதான் முதல்ல சொல்லனுமாம். அதுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க…” என கூறிவிட்டு நந்தினியை பார்க்க அவளும் அவரை பார்த்து சிரித்துவிட்டு,

“அது வந்து லக்ஷ்மிம்மா, அது… நம்ம கௌரிக்கு மறுபடியும் உங்ககிட்ட வளரனும்னு கொள்ளை ஆசை போல. லக்ஷ்மிம்மா கூட விளையாடி, உங்க கையால சாப்பிட்டு, உங்க கூடவே தூங்கி, உங்க பார்வை மூலமா உலகத்தை புரிஞ்சுக்கனும்னு விருப்பப்படறாங்க…” என கூற மற்றவர்களுக்கு புரியும் முன்பே தன்னவளின் முகத்தை பார்த்தே உதயாவின் மண்டையில் டொய்ங் என இந்த முறை பல்ப் வேகமாகவே எரிந்தது.

மார்பிற்கு குறுக்காக இரண்டு கைகளையும் கட்டியபடி கண்களில் வழியும் குறும்போடு தன்னையே குறுகுறுப்பாக பார்த்து கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்தவள், “நம்ம கெளரி,… நம்ம கெளரி மறுபடியும் நம்மக்கிட்டே வரப்போறாங்க. அதுவும் லக்ஷ்மிம்மாவோட சமத்து மருமகளுக்கு மகளா…” என சிவந்த முகத்தோடு மெல்லிய குரலில் கூறவுமே அனைவரின் “ஹோ..”வென்ற சந்தோஷக்குரலில் அந்த அறையே ஆர்ப்பரித்தது.

“ஐயோ சத்தம் போடாதீங்க, இது ஹாஸ்பிட்டல். ஞாபகம் இருக்கட்டும். பேசிட்டு சீக்கிரமா கிளம்புங்க…” என கண்டிப்பான குரலில் கூறிய அந்த பெண் மருத்துவர் அனைவரும் அமைதியாகவும் பாக்கியத்திடம் திரும்பி,

“உங்க மருமகளை காலையில அட்மிட் பண்ணும்போதே நாங்க செக் பண்ணி பார்த்ததுல தெரிஞ்சது. இருந்தாலும் உறுதி பண்ணிடலாமேன்னு தான் நாங்க எல்லா டெஸ்டும் எடுத்தோம். அவங்க கிட்ட சொன்னதுமே யாருக்கும் சொல்லவேண்டாம். நானே எங்க லக்ஷ்மிம்மாக்கிட்ட சொல்லிடறேன்னு சொல்லிட்டாங்க. நல்ல மருமக உங்களுக்கு. குடுத்துவச்சவங்க நீங்க. ஒண்ணும் கவலை வேண்டாம். அந்த அறையில மூச்சு விட சிரமப்பட்டதாலயும், பயத்திலயும் மயங்கி விழுந்திருக்காங்க. மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை…” என கூறிவிட்டு,

உதயாவையும், நந்தினியையும் பார்த்து “நீங்க கொஞ்சம் நேரம் கழிச்சு என்னை வந்து பாருங்க, கொஞ்சம் விட்டமின் டேப்லெட்ஸ், சிரப்ஸ் எல்லாம் எழுதித்தரேன்…” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.

அனைவருக்குமே சந்தோஷம் அலைமோதியது. உடனே ஸ்வீட் வாங்கி வந்த பிரசாத் அனைவருக்கும் கொடுத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

உதயாவிடம், “உங்களுக்கொன்னும் கோவமில்லையே நான் உங்ககிட்ட முதல்ல சொல்லைன்னு…” என நந்தினி கேட்டதுமே அவளை இறுக அணைத்து கொண்டான்.

அவனது நெஞ்சமெல்லாம் காலையில் தானும், பிரசாத்தும் நேரத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் நந்தினியை காப்பாற்றாமல் விட்டிருந்தால் என்ற பயமே வியாப்பித்திருந்தது. அதை அவனது உடல் நடுக்கம் அவளுக்கு உணர்த்தியது.

“யோவ் மாமா, அதான் ஒண்ணும் ஆகலையே. பின்ன எதுக்காக இந்த பயம். இனிமேலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. ஏனா நீங்கதான் இனி கருப்பு பூனைப்படைக்கு தலைவர் போல் கண்ணுல விளக்கெண்ணையை ஊத்தி பார்த்துக்கறது போல பத்தரமா என்னை பார்த்துப்பீங்களே?. ஹ்ம் இனி இதுவரை இருந்த சுதந்திரமும் போச்சு…” என தன்னவனை வாரிக்கொண்டே பெருமூச்சு விட அதை பார்த்து அனைவருக்குமே குளிர்ந்தது.

மூர்த்தி தன் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்த என தெரியாமல் மகிழ்ச்சியில் நெஞ்சம் விம்ம பாக்கியத்தையும், நந்தினியையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார். நாச்சி, சுதர்சனம், பாக்கியம், விஷ்ணுவின் பெற்றோர்கள் என அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள் நந்தினியும், உதயாவும்.

வேணியை அனுப்பிவைத்த பின் வள்ளியிடம் தொடர்புகொண்டு விசாரித்த பிரசாத் அங்கிருந்த டாக்டர் மூலம் அறிந்த செய்தி, வேணி தன் தலையில் தானே மூர்க்கமாக தாக்கிகொண்டதால் அவர் தன் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், இனி நினைவு வர வாய்ப்பே இல்லையென்பதும் தான்.

இன்னும் சிலநாட்கள் கழித்து தலையில் உள்ள காயம் ஆறவும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூற கேட்டுக்கொண்டான். தான் அறிந்ததை சுதர்சனத்திடம் கூற அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. சரி பிறகு சரிபண்ணலாம் என எண்ணி அவனும் விட்டு விட்டான். வள்ளியை மட்டும் அங்கேயே இருந்து பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டிருந்தான்.

ஒருவாரம் சென்றபிறகு பாக்கியம் ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தவறியும் யாருமே வேணி என்னவானார்? என கேட்கவோ, தெரிந்துகொள்ளவோ முயலவில்லை. ஆனால் வள்ளியை காணாது அனைவரும் எங்கே? என கேட்கவும் அதற்கு மேல் மறைக்கமுடியாது என பிரசாத் நினைத்தான்.

வேணியின் நிலையையும், இப்போது வள்ளிதான் அவரை பார்த்துகொள்வதாகவும் கூற சட்டென அங்கே மௌனம் குடியமர்ந்தது. சில நிமிடங்களில் தன்னை மீட்டுக்கொண்ட நாச்சி நந்தினி, பாக்கியத்தின் முகத்தை பார்த்து இயல்பாக அடுத்து ஆகவேண்டிய காரியங்களை பேச ஆரம்பித்தார்.

பிரசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க தனம் தங்களின் பூர்வீக வீட்டிற்கே குடி வந்துவிட்டார். முதலில் வாய் பிளந்த ஊர்க்காரர்கள் பின் தனத்தின் இளகியமனதை தங்களின் புகழ்ச்சியால் குளிரவைத்து வேண்டிய காரியத்தை சாதிக்கவும், பழையதை பேசி காயப்படுத்தவும் நினைக்க அவர்களது நினைப்பை பிரசாத் தவிடு பொடியாக்கினான்.

தனத்தை யாராவது நெருங்க நினைத்தால் கூட அவனது கருத்துக்கு சென்றுவிடும் அளவிற்கு அவரை பார்த்துக்கொண்டான். இப்போது தனமும் பச்சோந்தித்தனமான மனிதர்களை தன்னை அண்ட விடாமல் பார்வையிலேயே எட்டிவைத்துவிடும் துணிவோடு செயல்பட்டார்.

ஏழுமலை குடும்பத்தார் வந்து நந்தினியையும், பாக்கியத்தையும் பார்த்துவிட்டு தங்கள் வீட்டு பெண் குழந்தை உண்டாகி இருக்கும் சந்தோஷத்தில் பிறந்தவீட்டு சீர் சிறப்பாக செய்துவிட்டுதான் சென்றனர். அவர்களுக்கு இங்கே நடந்த பிரச்சனைகள் எதையுமே தெரியப்படுத்த நந்தினி விரும்பவில்லை. வேணியை பற்றி கேட்டதற்கு கூட ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டாள்.

ஒரு மாதம் கழித்து பிரசாத்தும், தனமும் சேர்ந்து சுதர்சனத்திடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி கரைத்து இன்னமும் கோமாவிலேயே இருந்த வேணியை சுதர்சனத்தின் வீட்டிற்கு கொண்டுவர படாதபாடு பட்டனர். ஒருவழியாக சம்மதித்தவர் வேணியின் முகத்தில் கூட விழிக்காமல் தன் வீட்டில் ஒரு அறையில் வேணியை இருக்க அனுமதித்தவர் கூடவே ஒரு நர்ஸையும் பிரசாத் கேட்டு கொண்டதன் பேரில் வேணியை பார்த்துக்கொள்ள நியமித்தார்.

இதனால் கௌரிக்கு கூட சுதர்சனத்தின் மீது கோவமே. அதையும் தனமும், பிரசாத்தும் தான் சமாளித்தனர். வேணி வந்ததிலிருந்து யாருமே சுதர்சனத்தின் வீட்டிற்கு செல்வதில்லை. அவரும் பாதி நாட்கள் உதயாவின் வீட்டில் தான் தங்கினார். வள்ளி தான் அங்கேயும் இங்கேயுமாக மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தாள்.

பேத்தி வரப்போகிறாள், தன் மகளே தன் மகனுக்கு மகளாக வரப்போகிறாள், மீண்டும் தன் கைகளில் தவழப்போகிறாள் என்ற சந்தோஷமே பாக்கியத்தை விரைவில் குணமாக்கியது. அதன் பின் நந்தினியை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தார்.

நந்தினியும் உதயாவும் இனி எப்படி இருக்கவேண்டும் என்றும் நடந்துகொள்ள வேண்டியதையும், நந்தினியை எப்படியெல்லாம் கவனித்து கொள்ளவேண்டியது என்பதையும் இருவரையும் வைத்து விளக்கமாக கூற உதயாவிற்கு நன்கு புரிந்தது.

நான்காம் மாதம் வரை நந்தினியை மனமே இல்லாமல் வீட்டில் விட்டுவிட்டு பேக்டரி, ஆபிஸ், தோப்பு என விஷ்ணுவோடு அலைந்தவன் அதற்குமேல் பொறுக்காமல் அவளையும் தன்னோடு அழைத்துக்கொண்டே சுற்ற ஆரம்பித்தான். நந்தினியை விட்டு பிரியாமல் பழையபடி தன்னோடே வைத்துகொண்டான் உதயா.

வீட்டில் நாச்சியும், பாக்கியமும் மூர்த்தியும் தாங்கினால், போகும் இடமெல்லாம் அவளை உதயா பார்த்துக்கொண்டான். போதாதற்கு தனமும், விஷ்ணுவின் அம்மா தேவகியும் நந்தினிக்கு வாய்க்கு ருசியாக சமைத்துத்தருகிறேன் என்று மாற்றி மாற்றி சமைத்து எடுத்து வந்து கொடுத்து அவளை திக்குமுக்காட வைத்தனர்.

அனைவரின் அன்புமழையில் நந்தினியும், உதயாவும் தான் திணறிப்போனார்கள். நந்தினிக்கு மாற்றி மாற்றி யாராவது அதை சாப்பிடு இதை குடி என அவர்கள் கொடுப்பதை சாப்பிட முடியாமல் திணறினாள். உதயாவிற்கு நந்தினியை பகலில் தான் நினைத்த நேரத்தில் நெருங்க கூட முடியாமல் நாச்சியின் கண்காணிப்பின் கீழே தான் இருப்பதை நினைத்து மனம் குமைந்தான்.

இரவில் மட்டுமே அவர்களுக்கான தனிமை கிடைக்கும். அந்த பொன்னான நேரத்தை இருவரும் இழக்க விரும்பாமல் ரசனையோடு கழிப்பார்கள். தங்களின் குழந்தையை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்றும் எப்படி சீராட்டவேண்டுமென்றும் கனவுகளை கண்டனர்.

உதயா பார்த்து பார்த்து உருவாக்கிய ரெயின்போ கார்மெண்ட்ஸ் நந்தினியின் விழிகளின் அசைவிற்கேற்ப அவளின் உதயாவால் பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்ட அவளின் நிர்வாக திறமையால் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.

எப்போதாவது வீட்டில் சிறுநேர தனிமை கிடைத்தாலும் கழுகுக்கு மூக்குவேர்த்தது போல நாச்சி முன்னால் வந்து நின்று உதயாவை முறைப்பார். அப்படி ஆப் ஆகி அமைதியாக பரிதாபமாக நிற்கும் உதயாவை பார்க்கும் போது நந்தினிக்கு தான் பாவமாக இருக்கும்.

இதற்க்கிடையில் பிரசாத்தை அழைத்துகொண்டு மீனாட்சிபுரத்தில் ஏழுமலையின் வீட்டிற்கு உதயா செல்ல முதலில் அவனை பார்த்ததுமே முறைத்த விஜி உதயாவை கவனத்தில் கொண்டு கோவத்தை கட்டுப்படுத்தினான்.

அனைவரிடத்திலும் மன்னிப்பை கேட்டான் பிரசாத்.

Advertisement